பேசத்தொடங்கும் பெண்ணுக்கு…

GIOVANNI BOLDINI # 14130 STUDY OF YOUNG WOMAN WRITING
GIOVANNI BOLDINI
STUDY OF YOUNG WOMAN WRITING

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

வெண்கடல் சில நாள்களுக்கு முன் படித்துமுடித்தேன். ஆனால் அதைப் பற்றி எதுவும் எழுதி பதிவு செய்துகொள்ளவில்லை. இன்று தாள்களுடன் மட்டும் விடப்பட்டேன். பேச்சுவழக்கில் எழுதியிருந்தேன். அதை மாற்றி எழுதியிருக்கிறேன்.

கைதிகள்

கைதிகள் வாசித்துமுடிக்கையில் காந்தியினுடைய ரகுபதி ராகவ பாடல் கேட்க வேண்டும் என்று தோன்றியது. அந்தப் பாடல் கேட்கும்பொழுது இன்னும் அந்த உணர்வுகளுக்குள் செல்லலாம் என எண்ணினேன். இருட்டில் உட்கார்ந்துகொண்டு கேட்டுக் கொண்டிருந்தேன். வேறு வேறு குரல்களில். அது மேலும் அதிகமாக அவ்வுணர்வை ஏற்படுத்தியது. எந்த உணர்வை என்றால் ஒரு அகிம்சை நேர்மை அறம் அன்பு சகோதரத்துவம் மனித உணர்வுகளின் மீதான நம்பிக்கை பற்று எல்லாம் சோதிக்கும் கிண்டும் ஒரு நிலை.

சம்பவங்கள் நடக்கும் இடம் ஒரு வறண்ட பூமி. ஆனால் அதனருகேதான் ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி இருக்கிறது. சூழலில் நம் அருகிலேயே இத்தனை வன்முறை நடந்துகொண்டே இருக்கிறது. நம் அண்மையிலும் அநீதிகள். நமக்குள்ளும். எப்பொழுதுமே அன்புடன் அலட்சியமும் வருவதை உணர்ந்திருக்கிறேன். இந்தக் கருத்து ஏனோ இப்பொழுது வந்துவிட்டது.

பறவை அந்த கொடூரத்தைக் கவனிக்கிறது. இவ்வெளியில் எல்லாவற்றையும் ஏதோ ஒன்று கவனிக்கும் என்று தோன்றியது. அந்தப் பறவையை அப்புவோட சம்பந்தப்படுத்தி யோசிக்கணும் என்றேத் தோன்றவில்லை. நான் இதைப் போலப் பார்த்திருக்கிறேன். எங்கள் வீட்டில் பக்கத்து வீட்டு்க் கோழி ஒன்று நுழைந்துவிட்டது. அது பயத்தில் வீட்டின் அனைத்து பகுதிகளையும் சேர்த்து ஐந்து முறை சுற்றி வந்திருக்கும். வெகுநேரப் போராட்டத்தில் அப்பா அதை இறுதியாக கிணற்றிடிக்கில் மாட்டியவுடன் மூன்று அடி கம்பால் வைத்துவிட்டார். அதை எங்கள் வீட்டின் குட்டி அழிசிப் பார்த்துக் கொண்டே இருந்தது. (நாய்). நான்கூட. இதன் வழியாக எனக்கு அதைத் தூக்கிப் பக்கத்து வீட்டில் போடும் தைரியம் வந்தது. அந்த டிஸ்பிகூட பெருமாள் மாதிரிதான் ஒரு நிலைமையில் உள் இருந்திருப்பாரோ என்று தோன்றியது.

தீபம்

தீபம் கதையில் என் ஊரில் இருக்கும் இருவரைத் தொடர்புபடுத்தியது. எங்கள் ஊர் ஒரு கிராமம்தான். அப்படியே அந்தக் கதை இங்கு நடந்ததுபோல கற்பனை வந்தது. மோகமுள்ளில் வரும் அகல்விளக்கு போல அழகு என்று.

31.03.18 15:00

அப்பறம் இன்னொரு விஷயம். சொற்களையெல்லாம் தேடித்தேடி மூளையிலிருந்து அகராதிவரை சென்றுகொண்டேதான் எழுத வேண்டியிருக்கிறது. நீங்கள் பெரிய எழுத்தாளர். உங்களுக்கென்றில்லை. நான் எப்போதும் இப்படியே யோசித்து எழுத ஆரம்பித்துவிட்டேன். நன்றி. இன்னும் எழுதுவேன் இதை அனுப்பமாட்டேனோ என பயம் வந்துவிட்டது.

லக்ஷ்மி

***

அன்புள்ள லக்ஷ்மி,

உங்கள் கடிதம் மகிழ்ச்சியளித்தது. தொடர்ந்து வாசிக்கிறீர்கள் என்பது நல்ல விஷயம். ஒருநாளில் படைப்பூக்கத்துடன் எதையாவது வாசிக்காமலோ எழுதாமலோ இருந்தால் அந்நாள் வீண் எனக் கொள்வது என் வழக்கம்.

உங்கள் கடிதம் பற்றி. அது உங்கள் கடிதம் பற்றி மட்டுமல்ல, இப்படி எனக்கு எழுதும் எல்லா தொடக்கநிலையாளர்களுக்குமாக.

அ. தயங்கி எழுதாதீர்கள். இது பிரம்மாண்டமான கருத்துச்செயல்பாடு. ஒரு பெருக்கு. இதில் எல்லா துளிகளுக்கும் இடமுண்டு. அதேசமயம் எத்தனை பெரிய கருத்தும் ஒரு துளிதான். உண்மையாக, தேவையான கவனமும் உழைப்பும் அளிக்கப்பட்டு எழுதப்படும் எக்கருத்தும் முறையானதே. உங்கள் கடிதத்தில் தயக்கமும் ஐயமும் இருந்துகொண்டே இருக்கிறது

மன்னிப்புகோரும் தொனி, தன் கருத்தை தானே சிறிதாக்கிக்கொள்ளும் பாவனை நம்மிடம் வரவேகூடாது. அது நாமே புதியன சிந்திப்பதற்கான தடையாக ஆகிவிடும். அந்தத் தயக்கம் நம் சிந்தனைக்குள்ளும் வர ஆரம்பித்தால் நாமே நம்முடைய சிந்தனைகளை தொடக்கத்திலேயே கடிவாளம் பிடித்து நிறுத்த ஆரம்பித்துவிடுவோம்.

அது பெரிய இடர். ஒரு கட்டத்துக்குமேல் நம்மால் அதை மீறமுடியாது. சிறு எல்லைக்குள் குறுகிவிடுவோம். காலப்போக்கில் அது ஒரு வீம்பாக, தாழ்வுணர்ச்சியாக மாறும். துணிந்து முன்செல்லும் எல்லா சிந்தனைகளையும் ஐயத்துடன் விலக்குடன் நோக்கும் சூனித்தனம் வந்தமையும்.

தொடக்கத்தில் நாம் மிகையான தருக்குடன் கருத்தை முன்வைக்கக் கூடாது.என்ன ஏதென்று தெரியாமல் பூசலிட இறங்கக் கூடாது. நம் எல்லையை உணர்ந்திருக்கவேண்டும். ஆகவே அறுதியாக எதையும் சொல்லக்கூடாது. ஆனால் தெளிவாக, துணிவாக, இது நான், இது என் கருத்து என முன்வைக்கப் பழகவேண்டும்.

ஆ.உதிரிக்குறிப்புகளாக எழுதாதீர்கள். முழுமையான சொற்றொடர்களாகவே எதையும் எழுதுங்கள். தனக்கே என வைத்துக்கொள்ளும் குறிப்புகளைக்கூட. ஒரு கருத்து முழுமையான சொற்றொடர்களில் சொல்லப்பட்டு, அதன் தொடர்ச்சி மேலும் சொற்றொடர்களால் முழுமையாக்கப்பட்டிருக்கவேண்டும். ஏனென்றால் முழுமையான சொற்றொடர் என்பது முழுமையான சிந்தனை. குறிப்பு என்பது உடைந்த சிந்தனை

குறிப்புகள் எழுதுபவர்கள் காலப்போக்கில் நீளமான சொற்றொடர்களை எழுதவே முடியாமலாவார்கள். பத்திகளாகக்கூட அவர்களால் எழுதமுடியாது போகும். முழுமையான சிந்தனைகளை, தொடர்ச்சியான உரைநடையாகவே எழுதிக்கொள்ள பழகவேண்டும். சிந்திப்பதற்கான அடிப்படை அது

இ. அபிப்பிராயத்தை எழுதாதீர்கள், கருத்தை எழுதுங்கள். அபிப்பிராயங்களுக்கு கருத்துலகில் மதிப்பில்லை. உங்கள் கருத்தை எழுதுங்கள்.என்ன கருத்தாக இருந்தாலும். கருத்துக்கும் அபிப்பிராயத்துக்கும் என்ன வேறுபாடு? அபிப்பிராயம் ‘நான் இப்படி நினைக்கிறேன்’ என்பது மட்டும்தான். ஏன் அப்படி நினைக்கிறேன் என்பதும் சேர்ந்தால்தான் அது கருத்து.

ஒவ்வொன்றையும் சொல்வதற்கு முன் அந்நிலைபாட்டுக்கு நீங்கள் ஏன் வந்தீர்கள் என எண்ணிப்பாருங்கள். அதற்கான படிநிலைகளை வகுத்துக்கொண்டு அந்த தர்க்கங்களுடன் சேர்த்து அந்நிலைபாட்டை முன்வையுங்கள்

ஈ. பெண் என உணர்ந்து எழுதாதீர்கள். நீங்கள் சிந்திப்பவர். ஒர் ஆளுமை. ஆகவே உலகமானுட சிந்தனையின் ஒரு துளி. பெண், ஆண், இந்தியன், இந்து, பிராமணன், பிராமணல்லாதவன் என பல அடையாளங்கள் இருக்கலாம். ஆனால் அதையொட்டி நம்மை வகுத்துக்கொண்டால் நாம் அதற்குள் நின்றுவிடுவோம்.

இயல்பாகவே கருத்துச் சொல்வதற்கு பெண்களுக்கு ஒரு தயக்கம் நம் சூழலில் உள்ளது. விளைவாக பெண்களுக்கு இரு பாவனைகள் வந்தமைகின்றன இங்கு. ‘எனக்கு ஒன்றுமே தெரியாது, நான் உற்சாகமான அப்பாவி’ என்னும் பாவனை. இன்னொன்று ‘நான் ஒடுக்கப்படும் பெண். ஒட்டு மொத்தப்பெண்குலத்துக்குமாக நின்று பற்றி எரிந்துகொண்டிருக்கிறேன்’ என்னும் பாவனை. இருபத்துநான்கு மணிநேரமும் கசப்பும் கடுப்புமாக விடைப்புத் தோரணை கொள்வது. முதற்பாவனை அசட்டுத்தனம், இரண்டாவது மேலும் பெரிய அசட்டுத்தனம். இரண்டும் பெரிய முகமூடிகள்.

துணிந்து நேர்மையுடன் திட்டவட்டமாகக் கருத்துக்களைச் சொல்லப் பழகுங்கள். அந்தக்கருத்து சமநிலையுடன் உள்ளதா, நல்லெண்ணம் கொண்டுள்ளதா, கேட்பவருக்கு பயனுள்ளதா, நேர்மையானதா அனைத்துக்கும் மேலாக இயல்பான தொனியில் உள்ளதா என்று மட்டும் பாருங்கள். உங்கள் கருத்துக்களுக்கான இடம் இங்கே காத்து இருக்கிறது

ஜெ

***

முந்தைய கட்டுரைஏழாமுலகின் காமம்
அடுத்த கட்டுரைகாவேரி