
சென்ற 2016-ல், பிரித்தானிய எழுத்தாளரான ராய் மாக்ஸம் என் இல்லத்திற்கு விருந்தினராக வந்திருந்தார். பிரித்தானியர் இந்தியாவை ஆட்சிசெய்த தொடக்கக் காலகட்டத்தில், உப்பு வணிகத்திற்குச் சுங்கம் வசூலிக்கும் பொருட்டு இந்தியாவுக்குக் குறுக்கே அவர்கள் எழுப்பிய மாபெரும் வேலி குறித்தும், அவர்கள் இங்கே உருவாக்கிய செயற்கைப் பஞ்சங்களைப் பற்றியும் விரிவாகப் பேசும் புகழ்பெற்ற நூலாகிய ‘The Great Hedge of India’ எனும் நூலை எழுதியவர் ராய் மாக்ஸம். [‘உப்புவேலி’ என்ற பெயரில் சிறில் அலெக்ஸால் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய வேலி ].
ராய், மூன்று நாள்கள் என்னுடன் தங்கினார். இங்கே சில இடங்களைச் சுற்றிப் பார்த்தோம். இந்தியா மீதும் இந்தியப் பண்பாடு மீதும் ஆழமான ஈடுபாடு கொண்டவர், ராய். பேச்சினூடாக எங்கள் இலக்கிய ரசனை குறித்த முரண்பாடு எழுந்துவந்தது. ராய், ஆங்கில இலக்கியத்தில் அவருக்குப் பிடித்தமான படைப்பாளிகளாகச் சொன்னார்… சார்ல்ஸ் டிக்கன்ஸ், ஜார்ஜ் ஆர்வல், டி.எச்.லாரன்ஸ், விளாடிமிர் நபக்கோவ், ஜோசப் கான்ராட் போன்றவர்கள். கவிஞர்களில் ஷேக்ஸ்பியர் அவருக்கு உச்சம்.
“எனக்கு அவர்கள் அந்த அளவுக்கு முக்கியமானவர்களாக இல்லை” என்றேன். டிக்கன்ஸ், எனக்கு எளிய மனிதநேயத்துக்கு அப்பால் செல்லாத மெல்லுணர்ச்சிக் கலைஞர் மட்டுமே. ஜார்ஜ் ஆர்வல், எதிர்மறைப் பண்புகொண்ட அங்கத எழுத்தாளர். அவரின் அங்கதம், தத்துவம் கண்டடையும் மானுட முடிச்சு ஒன்றை முன்வைக்கும் உயர்தர அங்கதம் அல்ல. அரசியல் நம்பிக்கையால் ஆன ஒருவகை விமர்சனம் மட்டுமே. ஆகவே, இலக்கிய அழகியல் நோக்கில் முதன்மையானது அல்ல.

டி.எச்.லாரன்ஸ், நபக்கோவ் ஆகிய இருவருக்குமே பாலியல் விடுதலைதான் பேசுபொருள். என் பார்வையில் மானுடப் பண்பாட்டின் விரிவில் மிகச் சிறிய ஒரு கூறுதான் பாலுறவுச் சிடுக்கு. அது காலத்திற்கும் இடத்திற்கும் ஏற்ப மாறுவது. ஃப்லாபெர்ட் முதலிய பிரெஞ்சு பாலியல் விடுதலை எழுத்தாளர்களின் வழிவந்தவர்கள் இவர்கள். ஐரோப்பாவின் பாலுறவு நாவல்களை நாம் ஒரு விந்தைக்காக வாய்பிளந்து வாசிக்க முடியும், அவ்வளவுதான். என்ன சிக்கல் என்றால், நான் ஹெரால்டு ராபின்ஸில் மூழ்கி விடுபட்டுத்தான் நபக்கோவின் ‘லோலிதா’வை வாசிக்கப் புகுந்தேன். ஊறுகாய் சாப்பிட்ட பின் சிப்ஸ் சாப்பிட்டது போலிருந்தது.
ஜோசப் கான்ராடுடைய ‘நாஸ்ட்ரோமா’ பற்றி அவ்வப்போது நான் குறிப்பிட்டிருப்பேன் ஒர் அயல்நிலத்தின் கடல் வாழ்வின் ஒரு சித்திரம் அவர் எழுத்தில் உண்டு. ஆனால், அது ஹெர்மன் மெல்விலின் ‘மோபி டிக்’ போல மாபெரும் படிமமாக மாறி, ஒட்டுமொத்த வாழ்க்கையையும் பேசவில்லை. அவருடைய கடல் பொருண்மையான கடல் மட்டுமே. அவருடைய கச்சிதமான வர்ணனைகளை ரசிக்கலாமென்றால், நான் ஹெமிங்வேயை வாசித்துவிட்டு கான்ராடை வாசிக்கச் சென்றிருந்தேன்.
ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் என்னை மிகவும் கவர்ந்தவை. ‘மாக்பெத்’, ‘ஒதெல்லோ’ இரண்டும் அவற்றில் முதன்மையானவை. அவற்றைப் பற்றி எழுதியிருக்கிறேன். ஆனால், எனக்கு மில்டன் மேலும் பெரிய கவிஞர். நான் இன்னமும்கூட வாசித்துக் கடக்காதவர். அவ்வப்போது திரும்பிச் சென்றுகொண்டே இருக்கவைப்பதே பெருங்காவியம், மலைகளைப்போல அடர்கானகங்களைப்போல.
ஷேக்ஸ்பியரின் மொத்த நாடகங்களையும் ஒற்றைக் காவியமாக எடுத்துக்கொண்டு, அவரை ஒரு காவியகர்த்தராகக் கருதலாம் என்று டி.எஸ்.எலியட் எழுதியதை ஆதரித்து ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன். அந்தக் காவியத்தின் உச்சம் டெம்பஸ்டின் பிராஸ்பரோ தன் மாயசக்திகளைக் கடலில் வீசிவிடுவது. அது ஷேக்ஸ்பியர் தன் நாடகங்கள் முழுக்க முன்வைக்கும் மானுட மறுப்பின் இறுதிநிலை. ஒரு பண்பாட்டின் சாரமென அமையும் பெருங்காவியம், எதிர்மறைத்தன்மை கொண்டதாக, அப்பண்பாடு மீதான விமர்சனமாக இருக்காது. நேர்நிலைத்தன்மை கொண்டதாக, அப்பண்பாட்டின் சாரத்தை வரையறை செய்து அளிப்பதாகவே இருக்கும். மில்டன் அத்தகையவர்.

ராய் கொஞ்சம் குழம்பிப் போனார். “சரி, உங்களுக்குப் பிடித்த பிரித்தானிய எழுத்தாளர்கள் யார், யார்?” என்று கேட்டார். நாங்கள் பிஷப் கால்டுவெல்லின் இடையான்குளத்திற்கு காரில் சென்று
கொண்டிருந்தோம். நான் சொன்ன பிரித்தானிய எழுத்தாளர்களை ராய் பொதுவாகக் கேள்விப்பட்டிருந்ததோடு சரி. எனக்கு பிரித்தானிய எழுத்தாளர்களில் முதன்மையானவர் ஜார்ஜ் எலியட். படிமங்களினூடாகக் கவித்துவத்தை அடையும் படைப்புலகு அவருடையது. என் பிரியத்திற்குரிய பிரிட்டிஷ் அங்கத எழுத்தாளர்கள் பலர். ஆனால், சக்கி முதன்மையானவர், சில கதைகளை நான் மொழியாக்கம் செய்திருக்கிறேன். நான் சொன்ன மேரி கெரெல்லி பற்றி ராய் கேள்விப்பட்டதே இல்லை. நான் பிரிட்டிஷ் நாடக ஆசிரியர் பீட்டர் ஷாஃபரை விரும்புபவன். அவருடைய ஈக்கஸ் நாடகம் பற்றி ஓரு மதிப்புரை எழுதியிருக்கிறேன். ராய் அவர் பெயரைத் தன் நினைவில் தோண்டி எடுக்க வேண்டியிருந்தது. நான் கற்பனாவாதக் காலகட்டத்து ஆங்கிலக் கவிஞர்களில் ஷெல்லியையும் பைரனையும் வழிபடுபவன். ஒருவர் மானுடம் மீதான நம்பிக்கைகொண்ட இளைஞர். இன்னொருவர் மானுடத்தின் எல்லையை உணர்ந்த தனித்த முதியவர். இரு எல்லைகள். ஒரே ஒளியை இரு கோணங்களில் பெற்றுக்கொண்ட இரு மலைமுடிகள்.
எங்கள் இருவருக்குமே ஜேம்ஸ் ஜாய்ஸ் அவ்வளவாகப் பிடிக்கவில்லை. ‘டப்ளினர்ஸ்’, ‘எ போர்ட்ரெய்ட் ஆப் ஆர்டிஸ்ட் தெ ஆஸ் எ யங்மேன்’ (A Portrait of the Artist as a Young Man) போன்றவை எனக்குப் பிடித்திருந்தாலும்கூட ஜாய்ஸ் மிக மிக ஐரோப்பியத்தனமானவர். ஓர் இந்தியன் அவரை வாசிக்க அளிக்கும் உழைப்பு மிக அதிகம். அதற்கான பயன்மதிப்பு குறைவு என்பது என் எண்ணம். ‘மிகவும் ஐரிஷ்தன்மை கொண்டவர்’ என ராய் ஜாய்ஸை கைவீசி நிராகரித்தார். ஒட்டுமொத்தமாக என் ஆதர்ச எழுத்தாளர்களைப் பற்றி ராய் கேட்டார். நான் ருஷ்யப் பேரிலக்கியவாதிகளான நிகோலய் கோகல், டால்ஸ்டாய், தஸ்தயேவ்ஸ்கி, செக்காவ், ஷோலக்கோவ், பாஸ்டர்நாக் ஆகியோரைத்தான் முதலில் சொல்வேன் என்றேன். அதற்கு அப்பால் எனக்கு முக்கியமான மூவர் தாமஸ் மன், ஹெர்மன் ஹெஸ்ஸெ, நிகாஸ் கஸண்ட்ஸகிஸ். அமெரிக்க எழுத்தாளர்களில் இவர்களைப் பற்றித் தொடர்ந்து எழுதியிருக்கிறேன் எவரையுமே ராய் அவ்வளவாகக் கவனித்ததில்லை.
ஏன் இந்த ரசனை வேறுபாடு? அதைப் பற்றி அன்று விரிவாக விவாதித்தோம். இவ்வேறுபாட்டின் அடிப்படை நான் மிகத் தொலைவில், வேறு ஒரு மொழிச்சூழலில், வேறு ஒரு பண்பாட்டு மரபில் வாழ்கிறேன் என்பதுதான். ஒரு பிரித்தானிய வாசகர், அங்குள்ள ஆக்கங்களை வாசிக்கையில் அளிக்கும் சில முன்னுரிமைகள் எனக்கு இல்லை. முதன்மையானது மொழிவளம். ஆங்கிலம் எனது முதன்மை மொழி அல்ல. தன் உள்ளம் தோய்ந்திருக்கும் முதன்மை மொழியிலேயே ஒருவர் மொழியழகை, மொழிநுட்பங்களை, மொழி விளையாட்டுகளை முழுமையாக ரசிக்க முடியும். இல்லையேல் சும்மா பாவலா செய்யலாம்; அவ்வளவுதான்.

என் உள்ளம் தமிழில் இயங்குவது. தமிழ்ச் சொல் அளிக்கும் பொருள் மட்டும் அல்ல, ஒலியும்கூட எனக்கு முக்கியமானது. அதன் வட்டார வேறுபாடுகள், உச்சரிப்பு முறைமைகள் எனப் பல்லாயிரம் உளத்தொடர்புகள்கொண்டது. பிறமொழிகளில் வாசிக்கையில் நான் அதை தமிழில் என்னை அறியாமலேயே மொழியாக்கம் செய்துகொள்கிறேன். ஆங்கிலத்திலோ என் தாய்மொழியாகிய மலையாளத்திலோ வாசித்த ஒரு வரியைச் சட்டென்று நினைவுகூர்ந்தால் அது தமிழ்ச் சொற்றொடராகவே எழுந்து வருவதைக் கவனித்திருக்கிறேன். ஆகவே அயல்மொழியில் நடையழகு, சொல்நுட்பம் ஆகியவை எனக்குப் பொருட்டு அல்ல. நான் தேடுவது உள்ளடக்கத்தையும் புனைவுத் திறனையும்தான். ஆகவே, ஆங்கில முதன்மையாக்கம், மொழியாக்கம் இரண்டுக்கும் என்னளவில் வேறுபாடே இல்லை.
இரண்டாவது, ஒரு படைப்பு பிரித்தானியப் பண்பாட்டுச் சூழலுக்கு அளித்த பங்களிப்போ, எதிர்வினையோ அங்குள்ளவர்களுக்கு முக்கியமானதாகப் படலாம். எனக்கு அது முக்கியமே அல்ல. அப்படைப்பு என்னுடன் என்ன பேசுகிறது என்பதே எனக்கு முக்கியம். நான் உணரும் அறம் சார்ந்த, மெய்மை சார்ந்த, உணர்வுகள் சார்ந்த சிக்கல்களை அப்படைப்பு தொட்டு விரித்து என்னை மேலெழுப்புகிறதா என்பது மட்டுமே நான் அதில் ஈடுபடுவதற்கான வழி.
நாம் ஏன் வாசிக்கிறோம் என்பதைப் பற்றிய ஒரு தெளிவு நமக்குத் தேவை. நல்ல இலக்கிய வாசகன் இன்னொரு பண்பாட்டை தெரிந்துகொள்ளவோ, வேறுவகை வாழ்க்கையை அறிந்துகொள்ளவோ வாசிப்பதில்லை. தன்னுடைய அறிவார்ந்த, ஆன்மிகமான பிரச்னைகளைப் புரிந்துகொள்ள, கடந்து செல்லத்தான் வாசிக்கிறான். வாசிப்பினூடாக தான் எங்கு நகர்கிறோம் என்பதைக்கொண்டே அவன் இலக்கியப் படைப்புகளை மதிப்பிடுகிறான். அத்தெளிவை அளிக்கும் ஒரு படைப்பை உள்வாங்கும் பொருட்டு மட்டுமே இன்னொரு பண்பாட்டையோ, வாழ்க்கைச் சூழலையோ அவன் அறிந்துகொள்ள முயல்வான்.

படைப்பாளிகளில் இரு வகையினர் உண்டு. ஏதோ ஒருவகையில் மானுடகுலம் நோக்கிப் பேசுபவர்களாக எழுந்து விடுபவர்கள். தங்கள் பண்பாட்டுக்குள்ளேயே உழல்பவர்கள். டால்ஸ்டாயும் தாமஸ் மன்னும் முதல் வகை. ஜேம்ஸ் ஜாய்ஸ் இரண்டாம் வகை. உலகமெங்கும் பொருட்படுத்தப்படுபவர்கள் முதல்வகைப் படைப்பாளிகளே. அவர்கள் காலம், இடம், பண்பாட்டுச்சூழல் ஆகியவற்றைக் கடந்தவர்கள். மானுடத்திற்கே உரியவர்கள். அவர்களிலேயே இரண்டு வகையினர் உண்டு. மானுடத்தின் ஒரு காலகட்டத்தின் குரலாக ஒலிக்கும் படைப்பாளிகள். உதாரணம், காஃப்கா. சென்ற தலைமுறை வரை உலகைப் பீடித்திருந்த தன்மைய நோக்கும் சோர்வும் அவர் ஆக்கங்களில் உள்ளன. ஆகவே, அவர் உலகமெங்கும் வாசிக்கப்பட்டார். இன்னொரு வகை எழுத்து, மானுடத்தின் என்றென்றுமான அகக்குலைவுகளை நோக்கிப் பேசுவது. அது தலைமுறைகள் கடந்தும் நின்றிருக்கும். டால்ஸ்டாயும் தஸ்தயேவ்ஸ்கியும் அவ்வரிசையில் வருபவர்கள்.
சென்ற நூறாண்டு கால வரலாற்றில் உலகமெங்கும் கேட்கும் குரல்கள் எனச் சிலவே உள்ளன. காலனியாதிக்கத்தின் மீது ஏறிக்கொண்டு ஆங்கில இலக்கியம் உலகமெங்கும் சென்றது. ஆங்கிலக் கல்வியின் ஒரு பகுதியாக இருந்தமையால் பயிலப்பட்டது. ஆனால், விரைவாக அதில் பெரும்பகுதி வாசிக்கப்படாமலாகியது. இயல்பாகவே தீவிர வாசகர்களிடம் செல்வாக்குடன் நின்றவர்கள், ஆரம்ப கால பிரெஞ்சு ஆசிரியர்களான மாப்பஸான், விக்தர் ஹ்யூகோ, ரோமெய்ன் ரோலந்த் போன்றவர்கள். ருஷ்யப் பேரிலக்கியவாதிகள், பின்னர் கப்ரியேல் மார்க்யூஸ் போன்ற லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்கள்.
இந்த செல்வாக்குக்கு, வாசிக்கும் நாடுகளின் பண்பாட்டுச் செயல்பாடுகளுடன் நேரடித் தொடர்புண்டு. பிரெஞ்சு இலக்கியம் இங்கே தனிமனித இலட்சியவாதத்தின் முகம். ருஷ்ய இலக்கியம் மதம், வரலாறு ஆகியவற்றை உள்வாங்கி தனிமனித ஆன்மிகம் ஒன்றை உருவாக்கிக்கொள்ளும் முயற்சியின் ஒரு பகுதி. லத்தீன் அமெரிக்க இலக்கியம் தன் பண்பாட்டுத் தனித்தன்மையை ஒரு போராட்டக் கருவியாகச் செதுக்கிக்கொள்ளும் முயற்சிக்கு உறுதுணையாவது.

இப்படி இருப்பதே இயல்பானது. இது ஏன் இப்படி இருக்கிறது என்பதையே ஆய்வாளர்கள் ஆராய வேண்டும். ஒருபோதும் நம் வாசிப்பு ‘இப்போது இதுதான் டிரெண்ட்’ என்றோ ‘அங்கே அவ்ளவு புகழ்றாங்க தெரியுமா’ என்றோ அமையக் கூடாது. உத்திகளால் கவரப்பட்டோ, பொதுப்போக்குகளாலும் பரபரப்புகளாலும் கவரப்பட்டோ வாசிப்பதுபோல வீண்செயல் வேறில்லை.
இதற்கும் அப்பால் ஒரு தனித்தன்மை உண்டு. அது என் சொந்த ரசனை. மறுநாள் இணையத்தில் நான் சொன்ன எழுத்தாளர்களை நோக்கிவிட்டு ராய் சொன்னார், “இவர்கள் அனைவரிலும் ஒரு பொதுத்தன்மை உள்ளது. பெரும்பாலும் அனைவருமே மதத்தை வெவ்வேறு வகையில் எதிர்கொண்டவர்கள்”. நான் சொன்னேன், “ஆம், மெய்தான். மதம் என்னும் வடிவிலேயே மரபு நமக்குக் கிடைக்கிறது. அதில்தான் அறம் வரையறுக்கப்பட்டுள்ளது. இன்றைய காலகட்டத்தில் நின்று அவற்றை எப்படி எதிர்கொள்வது என்பது எனக்கு எப்போதுமே ஒரு பிரச்னைதான். என் தேடல் அது சார்ந்ததே”.
அயலக இலக்கியங்கள் இங்கு வர வேண்டும், அவையே நாம் உலகுடன் உரையாடும் களம். ஆனால், நம் வாசிப்பும் சுவையும் நம்மால் தீர்மானிக்கப்பட வேண்டும். அதை வெளியே இருந்து எவரும் உருவாக்கக் கூடாது. அத்தகைய செல்வாக்குக்கு நம்மை அளித்தோமென்றால், நம் தனித்தன்மையை விரைவிலேயே இழந்தவர்களாவோம். ஒவ்வொரு பண்பாட்டுக்கும் தனித்தன்மைகள் உண்டு. ஒவ்வொரு வாசகனுக்கும் தனித்தன்மை உண்டு.
அதிலும், இன்று உலகமே ஊடகங்களால் இணைக்கப்பட்டுள்ளது. உலகமெங்கும் ஒரே சுவையும் பார்வையும் வணிகச் சக்திகளால் திட்டமிட்டு உருவாக்கப்படுகின்றன. இன்று தனிச்சுவை என்பது ஒரு பெரிய எதிர்ப்புநிலையும்கூட.
பறம்பிக்குளம் காட்டில் சிறுகுருவிகள் மேய்வதை இயற்கையியல் ஆய்வாளரான நண்பருடன் பார்த்துக்கொண்டிருந்தேன். அவற்றின் சுவையின் அடிப்படையிலேயே உயிர்கள் மேய்கின்றன. “முதலில் புரதம் மிக்க புழுக்கள், கொட்டைகள் பின்னர் மாவுச்சத்துகொண்ட தானியமணிகள், இறுதியாகவே பழங்கள்” என்றார் நண்பர். “ஆனால், அந்தக் குருவி சிறு பழங்களை மட்டுமே மேய்கிறது. ஏனென்றால், அது முட்டையிட்டு அடைகாக்கிறது. அதிகம் பறப்பதில்லை. ஆகவே, குறைந்த அளவு ஆற்றல் அதற்குப் போதும். மிகையாக உண்டால், உடல் பருத்து பறக்க முடியாமலாகும். ஆகவே, அதன் நாவுக்கு இப்போது புரதச்சுவை முக்கியமானதாகப் படவில்லை. ஆனால், சென்ற 15 நாட்களுக்கு முன்பு வரை அது புரதமாகத் தேடித் தேடித் தின்றுகொண்டிருந்திருக்கும். அதன் நாக்கு, அச்சுவையைத் தேடியிருக்கும். சிறிய சுண்ணாம்புக் கற்களைத் தேடி எடுத்து விழுங்கியிருக்கும். முட்டைக்கு ஓடு உருவாக வேண்டும் என்பதற்காக” என்று நண்பர் சொன்னார். ‘அதன் நாக்குக்குத் தெரியும் அதன் உடலின் தேவை’.
சுவை என்பது எளிய ஒன்று அல்ல. அது நாம் அறியாத பல்வேறு தேவைகளின் நுண்ணிய வெளிப்பாடு. ஆணவத்தாலோ, அப்பாவித்தனத்தாலோ திசைதிருப்பப்படாமல் நம் சுவையைப் பின்தொடர்ந்தாலே போதும்; நமக்கானதை அடைந்துவிடமுடியும்.
[விகடன் தடம் தொடர், நத்தையின் பாதை ஏப்ரல்]