சில பொதுப்புத்திக் கேள்விகள்
மாவோயிஸ்டுகளின் செயல்பாடுகளை நியாயப்படுத்தும்பொருட்டு தினம் ஒரு காரணம் முன்வைக்கப்படுகிறது. அந்த மக்களின் பிற்பட்ட நிலை, அங்குள்ள பண்ணையார்களின் சுரண்டல், அந்த மக்களின் நிலங்களை வேதாந்தா போன்ற நிறுவனங்களால் கையகப்படுத்தப்படுவது. …இன்ன பிற காரணங்கள். அக்காரணங்கள் அனைத்துமே உண்மையானவை என்ற நிலையில் இருந்தே நான் பேச ஆரம்பிக்கிறேன். அக்காரணங்களுக்கு எதிராக அம்மக்கள் போராடுவதன் அவசியத்தை ஏற்கிறேன். ஆனால் இந்தக் காரணங்கள் எல்லாம் அந்த மக்கள் வன்முறை அரசியலுக்கு தள்ளப்படுவதை நியாயப்படுத்துகின்றனவா என்பதே என் வினா. இந்த வன்முறை அரசியல் மூலம் அவர்களை அடிமைப்படுத்தியிருக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு வந்துவிடுமா என்றே கேட்கிறேன்
சாதாரணப் பொதுப்புத்தி சார்ந்தே இந்த வினாக்களை எவரும் கேட்டுக்கொள்ள முடியும். இந்த ஜனநாயக யுகத்தில் பொருளியல் ஆதிக்கத்துக்கு எதிராக ஆயுதமெடுத்து போராடுவது மட்டும்தான் தீர்வா? தங்கள் பொருளியல் சிக்கலைத் தீர்க்க மேலும் பலமடங்கு பொருளியல்சுமையையும், பற்பல ஆண்டுகள் அமைதியின்மையையும், அழிவையும் உருவாக்கும் போர் மட்டுமே வழியா? வேறு பாதைகள் இல்லையா?
ஓர் உதாரணம். வேதாந்தா நிறுவன ஆதிக்கத்துக்குச் சமானமாக தமிழகத்திலும் தென்கிழக்கு கடலோர நிலங்களை டாட்டா நிறுவனம் கையகப்படுத்துவதற்கு எதிராக ஒரு முயற்சி நிகழ்ந்ததே. அது வெற்றிகரமாக தோற்கடிக்கப்பட்ட வரலாறு நம் முன் உள்ளது. எவ்வாறு அது நிகழ்ந்தது?
தென்தமிழகத்தில் அவ்வாறு பாதிக்கப்பட்ட மக்கள் ஒன்றுசேர்ந்து தங்கள் எதிர்ப்பை பதிவுசெய்தார்கள். திட்டவட்டமாக அதை ஆளும்தரப்புக்கு உணர்த்தினார்கள். அந்த ஒற்றுமையும் உறுதியும் ஜனநாயகத்தில் மிகவும் விசை கொண்டது. அது இந்தியச்சூழலில் பலமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது. பற்பல உதாரணங்களைச் சொல்லலாம். அந்த வழியை ஏன் சட்டிஸ்கர்பகுதி மக்கள் கைகொள்ளவில்லை?
ஏனென்றால் அவர்களிடம் அந்த அரசியல் விழிப்புணர்ச்சி இல்லை. தங்கள் வாழ்வாதாரங்களுக்காக ஒற்றைத் திரளாக ஆகிப் போராடும் மனநிலை இல்லை. ஆகவே அவர்களால் ஜனநாயகம் அளிக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள முடியவில்லை. அந்த விழிப்புணர்ச்சியும் ஒற்றுமையும் இல்லாத காரணத்தால்தான் அந்த மக்கள் அரைநூற்றாண்டுக்காலம் இந்திய முதலாளித்துவ ஜனநாயகத்தில் பிறபகுதி மக்கள் அடைந்த வளர்ச்சியை பெற முடியவில்லை. ஆம், அவர்களிடம் நவீன முதலாளித்துவத்தை நோக்கிச் செல்லும் மனநிலையே இன்னமும் உருவாகவில்லை.
ஒரு எளிய ஜனநாயகச்சூழலில் சாதாரணமாக ஒன்று திரண்டு வலுவான கோரிக்கை விடுக்கவேகூட விழிப்புணர்ச்சியோ ஒற்றுமையோ இல்லாத அந்த மக்கள் எப்படி திடீரென்று ராணுவமயப்படுத்தப்பட்டார்கள்? ஒரு ஜனநாயகப்போராட்டத்துக்குத் தேவைப்படுவதைவிட பற்பல மடங்கு உக்கிரமான அரசியல்நம்பிக்கையும், ஒற்றுமையும், திரளுணர்வும் ராணுவமயமாதலுக்குத் தேவை என்பதை எவரும் சொல்ல முடியும். அந்த உணர்வுகளில் கால்வாசிப்பங்கை அவர்கள் ஜனநாயகமுறையில் பயன்படுத்தியிருந்தால்கூட இந்தியாவின் வளர்ச்சியுற்ற பகுதிகளில் உள்ள மக்கள் அடைந்த அனைத்தையுமே அடைந்திருக்கலாமே?
ஜனநாயக வழிமுறைகள் தோற்பது மக்களின் ஒற்றுமையின்மையாலும் உறுதிப்பாடின்மையாலும்தான். முன்னரே இந்த அரசியலையும் ஒற்றுமையையும் அடைந்திருந்தார்கள் என்றால் அம்மக்கள் தங்களின் உரிமைகளுக்காக ஓர் எளிய போராட்டத்தைக்கூட ஏன் இதுவரை நிகழ்த்தவில்லை?
எளிமையாகவே கேட்கலாமே. ஒரு தேர்தலில் ஒட்டுமொத்தமாக வாக்களித்து தங்களுக்கு உகந்த ஒர் அரசை, உள்ளூர் நிர்வாகத்தைக்கூட தேர்ந்தெடுக்க முடியாத மக்கள் எப்படி ஒற்றை உடலாக மாறி ராணுவமாக ஆனார்கள்? ஒரு தர்ணாவோ கடையடைப்போ நடத்த முடியாத பிற்பட்ட மக்கள் எப்படி ஆயுதம்தாங்கிய போர்களை நடத்துகிறார்கள்?
மிக எளிமையாக ஊகிக்கக் கூடியதே விடை. அம்மக்களுக்கு ஜனநாயகம் குறித்த புரிதல் அளிக்கப்படவில்லை. ஒரு ஜனநாயக அரசியல் சூழல் அளிக்கும் வாய்ப்புகள் கற்பிக்கப்படவே இல்லை. அவர்கள் இன்னமும் அவர்களுடைய இயல்பான பழங்குடி மனநிலையிலேயே வைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களின் வேட்டைச்சமூக வாழ்க்கை சார்ந்த உள்ளுணர்ச்சிகள் செயற்கையாகத் தூண்டப்பட்டிருக்கின்றன அவ்வளவுதான்.
ஆம், அவர்கள் இன்னும் ராணுவப்படுத்தப்படவில்லை என்று உறுதியாகவே சொல்வேன். தெலுங்கானா பகுதிகளில் முப்பதாண்டுகளுக்கும் மேலாக பழங்குடிகள் மக்கள் யுத்தக்குழுவின் போராளிகள் என்று சொல்லப்பட்டது. ஆனால் மக்கள் யுத்தக்குழு பிளவுண்டு அழிந்தபின் தெரிய வந்த உண்மை, அந்த பழங்குடிகள் கருத்துநிலையிலும், வாழ்நிலையிலும் அப்படியே வைக்கப்பட்டிருந்தார்கள் என்பது. அவர்களுக்கு எந்த அரசியலும் போதிக்கப்படவில்லை. அவர்களின் வறுமையும் அதன் விளைவான கோபமும் அளித்த இடம் வழியாக அவர்களால் புரிந்துகொள்ளமுடியாத ஓர் அன்னிய ராணுவம் அவர்கள் மேல் வந்தமர்ந்தது. அதுவே இன்று மாவோயிசம் பாதித்த பகுதிகளிலும் நிகழ்கிறது.
மாவோயிஸ்டுகள் பழங்குடிகளை முன்னால் நிறுத்துகிறார்கள். காரணம் காட்டுகிறார்கள். அவர்களைப் பிணைக்கைதிகளாக வைத்திருக்கிறார்கள். இன்னும் அரைநூற்றாண்டுக்காலம்கூட மாவோயிஸ்டுகளுக்கும் அரசுக்கும் இடையேயான இந்த போர் நிகழலாம். அத்தனை காலமும் அவர்கள் அப்படியே வைக்கப்பட்டிருப்பார்கள். கொடிய வறுமையில் உலகத்தொடர்பே இல்லாத பிற்பட்ட நிலையில்.
ஆக, மாவோயிசத்தை ஆதரிப்பவர்கள் அதைப் பழங்குடியினர் பொருட்டு செய்கிறோம் என்று சொல்வார்களேயானால் அது ஒன்று மூடத்தனம் அல்லது அயோக்கியத்தனம் மட்டுமே. மிக எளிமையான பொதுப்புத்திக்கேள்விதான் இது, அந்த மக்களுக்கு இன்றிருக்கும் கொடிய வறுமைக்கும் நேரடிஒடுக்குமுறைக்கும் தீர்வு என்பது அவர்களைக்கொண்டு இந்திய அரசுக்கு எதிராக ஒரு முடிவில்லாத போரை நிகழ்த்தச்செய்வதுதானா? அந்தப்போரில் அவர்கள் இந்திய ராணுவத்தை வென்று டெல்லியை கைப்பற்றி அரசமைத்து சட்டங்கள் இயற்றி தங்கள் நிலங்களை மீட்டுக்கொண்டபின் அவர்கள் பிரச்சினைகள் தீரும் இல்லையா?
இதை உண்மையிலேயே நம் அறிவுஜீவிகள் நம்புகிறார்களா? கண்டிப்பாக இல்லை. தங்கள் சொந்த பிள்ளைகளை உயர்தரக் கல்விச்சாலைகளுக்கு அனுப்பிவிட்டு, நகர்மையத்தில் குளிர்சாதன வீடுகளில் வாழ்ந்துகொண்டு, நவீன முதலாளித்துவத்தின் அத்தனை நலன்களையும் நுகர்ந்தபடி இவர்கள் பேசும் மாவோயிச ஆதரவென்பது நடைமுறையில் அந்த பழங்குடிகள் இன்னும் இரு தலைமுறைக்காலம் இந்திய அரசுடன் போரிட்டு அழிந்து தங்களுக்குச் சூடான செய்திகளை அளிக்கவேண்டும் என்பதற்காக மட்டுமே. தங்களை அவர்களின் குருதியின் ஈரத்தில் முற்போக்காகக் காட்டவேண்டும் என்று மட்டுமே.
அந்த எளிய மக்களிடம் இவர்களுக்குக் கொஞ்சமாவது கருணை இருக்கும் என்றால், தாங்கள் மூன்றுவேளை உண்ணும் உணவில் பாதியையாவது அவர்கள் உண்ண வேண்டுமென்ற ஆசை இருக்கும் என்றால், இந்த சர்வதேச அரசியல் மோதல்களில் இருந்து அந்த மக்களை விடுவிக்கவேண்டும் என்றே அவர்கள் கோர முடியும். எந்த முதலாளித்துவ ஜனநாயக அமைப்பினால் தானும் தன் பிள்ளைகளும் உணவும் கல்வியும் பெறுகிறோமோ அந்த அமைப்பின் வாய்ப்புகளை அம்மக்களும் பெறட்டுமே என்ற எண்ணமே அவர்களிடம் எழும்.
சில அரசியல் கேள்விகள்
இன்று நமக்குச் சொல்லப்படுகிறது ஒரிசாவிலும் சட்டிஸ்கரிலும் நடப்பது ஒரு மக்கள் எழுச்சி என்று. அதாவது இந்திய அரசின் கொள்கைகளால் புறக்கணிக்கப்பட்டு வறுமையின் விளிம்புக்கு தள்ளப்பட்ட எளிய மக்கள் வேறு வழியில்லாமல் ஆயுதம் எடுத்து இந்திய அரசின் ஏகாதிபத்தியத்துக்கு எதிராக போராடிக்கொண்டிருக்கிறார்கள் என்று. நம் ஜனநாயகத்தின் அதிவிளைச்சல்களான நம் இதழாளர்கள் அதை நம்மில் கணிசமானவர்களின் மூளைக்குள் ஏற்றி விட்டிருக்கிறார்கள்.
நான் ஆச்சரியப்படுவது ஒன்றே. கடந்த முக்கால்நூற்றாண்டாக இங்கே மார்க்ஸியம் பேசப்படுகிறது. மார்க்ஸியத்தின் மிக எளிய பாடங்களைக்கூட நம் அறிவுஜீவிகள் கற்றுக்கொள்ளவில்லையா? போகிற போக்கில் இந்த சமூகசித்திரத்தை விளங்கிக்கொள்ள அவற்றைப் பயன்படுத்தினால்கூட எத்தனை பெரிய கேள்விகள் எழுகின்றன. இங்கே மார்க்ஸியம் சார்ந்த கோட்பாட்டு மயிர்பிளப்புகளே அதிகம். ஆனால் இந்தவகையான ஒரு சூழலில் எப்படி முற்போக்கு பிம்பத்தைக் கட்டி எழுப்புவதென்பதிலேயே நம்முடைய அறிவுஜீவிகளின் கவனம் செலவாகிவிடுகிறது.
எந்த எளிய மார்க்ஸியரும் கேட்க்கக்கூடிய கேள்வி இதுதான். மாவோயிச குழு என்பது நவீன ஆயுதங்கள் ஏந்திய ஒரு ராணுவம். ஒரு ராணுவத்தை உருவாக்க, நிலைநிறுத்த, அதை தொடர்ந்து போரில் ஈடுபடுத்த தேவையான நிதி என்பது எவ்வளவு என்பதை எளிதாக எவரும் கணக்குபோட முடியும். ஒரு சாதாரண துப்பாக்கியின் விலை இந்திய ரூபாயில் இரண்டு லட்சத்துக்கும் மேல். ஒரு தனித் துப்பாக்கிக் குண்டின் விலை கிட்டத்தட்ட எண்பது ரூபாய். அந்த பிரம்மாண்டமான நிதி எங்கே, எந்த உபரியில் இருந்து திரட்டப்பட்டது?
ஒருவேளைச் சோறு கூட இல்லாமல் வெறித்துக்கிடக்கும் நிலத்தில் கருகிய உடல்களுடன் அலையும் சட்டிஸ்கரின் எளிய பழங்குடியினரிடமிருந்து அந்த உபரி வசூல் செய்யப்படுகிறது என்று சொன்னால் உபரிக் கோட்பாட்டைச் சொன்ன மார்க்ஸை உயிருடன் கொளுத்துவது போல. இன்று சட்டீஸ்கரின் அப்பகுதியின் பொருளியலே முடங்கிக்கிடக்கும் நிலையில் அங்குள்ள சில்லறை முதலாளிகளிடமும் நிலக்கிழார்களிடமும் இருந்து அந்த பெரும் பணம் திரட்டப்படுகிறது என்று சொன்னால் அதை நம்பி விழுங்க சாதாரண சிந்தனை கொண்டவர்களால் முடியாது.
அந்த நிதியை யார் அளிக்கிறார்களோ அவர்கள்தான் அந்த போரை நடத்துபவர்கள். அவர்களே அந்த ராணுவத்தின் உண்மையான எஜமானர்கள். அந்தப்போர் அடிப்படையில் அந்த நிதியளிக்கும் சக்தியின் நலன்களை மட்டுமே பேணமுடியும். இல்லையேல் அவர்கள் நிதியளிக்கப்போவதில்லை. மாவோயிச போர்க்குழுக்களுக்கு நிதி அளிப்பது யார் என்பது எந்த ரகசியமும் இல்லாதது. அவர்களே அதை சொல்லிக்கொள்வதும் உண்டு. சீனா.
ஆம், இந்தியாவில் சீனாவின் நலன்களைக் காக்க மட்டுமே இந்த ஆயுதப்போர் நிகழ்கிறது என்பது வெளிப்படை. சீனா ஏன் இதைச் செய்கிறது? இந்திய தேசத்தின் ஏழை மக்கள் மேல் கொண்ட அளவில்லாத கருணையால் அவர்களை மீட்கும் பொருட்டு என்று சொல்லும் சிலர் தவிர பிறர் கொஞ்சம் சிந்தனைசெய்து பார்க்கலாம்.
அருணாச்சலப்பிரதேசம் முதல் மணிப்பூர் வரை சீனா நூற்றுக்கும் மேற்பட்ட ஆயுதக்குழுக்களை நிதியுதவியும் ஆயுத உதவியும் செய்து வளர்த்து வருகிறது. அந்தக்குழுக்களில் பல அப்பட்டமான இனக்குழுவாதத்தை முன்வைப்பவை. எவ்விதமான முற்போக்கு அரசியலும் அற்றவை. அக்குழுக்களுக்கும் இந்திய அரசுக்கும், அக்குழுக்களுக்கும் சக குழுக்களுக்கும் இடையே ஆயுதப்போர்கள் நிகழ்கின்றன.
அந்த போர்கள் பல அரைநூற்றாண்டுக்கும் மேலாக நிகழ்ந்துவருகின்றன. அப்பகுதியின் பொருளியல் வளார்ச்சியும் சமூகவளர்ச்சியும் முழுமையாகவே உறைந்து நின்றுவிட்டிருக்கின்றன. அப்படி பொருளியல் உறைந்து நின்றமைக்கான பொறுப்பையும் இந்திய அரசுமேல் சுமத்தி அந்த உறைநிலையே அந்தக் கிளர்ச்சிகளுக்குக் காரணம் என்று சொல்லும் ’ஸ்பான்ஸர்ட்’ இதழாளர் குழுக்களும் நமக்கு உள்ளன. அவர்களைப்பொறுத்தவரை வறுமை, இனப்புரிதல் இன்மை, இந்திய மேட்டிமை எல்லாமே காரணம்– சீனா தவிர!
அந்த ஆயுதக்குழுக்களை எப்படி ஊட்டி வளர்க்கிறதோ அப்படித்தான் இந்த மாவோயிச குழுக்களையும் சீனா ஊட்டி வளர்க்கிறது. அவை முழுக்க முழுக்க சீனாவின் வளர்ப்பு மிருகங்கள். ஆகவே சீனாவின் நலன்களை மட்டுமே காக்கத் தலைப்பட்டவை. சீனாவின் நோக்கம் என்பது இந்தியாவின் ஜனநாயக அமைப்பு செயலிழப்பதுதான். அதன் மூலம் இந்தியா சர்வதேச அளவில் சீனாவுக்கான போட்டியாக உருவாகாமல் தடுப்பது மட்டுமே.
உலகவல்லரசாக ஆகத் திட்டமிடும் சீனாவுக்கு தன் அண்டைநாடாக இணையான மக்கள்பலம் கொண்ட ஒரு தேசம் இருப்பது அளிக்கும் தொந்தரவு புரிந்துகொள்ளக்கூடியதே. அந்த தேசம் ஜனநாயகம் கொண்டதாக இருப்பது அங்குள்ள ஆட்சியாளர்களுக்கு அச்சமூட்டுவதும் இயல்பு. சர்வாதிகார அரசுகள் அசைக்க முடியாத பலத்துடன் இருப்பது போல தோன்றினாலும் அது ஒரு மாயை மட்டும்தான். எல்லா சர்வாதிகார அரசுகளையும்போல சீனாவும் ஒவ்வொரு கணமும் தன்னால் ஒடுக்கப்பட்டுள்ள கோடானுகோடி மக்களைப்பற்றிய அச்சத்துடன் உள்ளது. அம்மக்களுக்கு எவ்வகையிலும் முன்னுதாரணமாக இந்தியா அமையலாகாது என அது எண்ணுகிறது.
வேறெந்த நாட்டிலாவது அந்நாட்டை சிதிலப்படுத்த அனைத்து வகையிலும் முயலும் முழுமுதல் எதிரிக்கு ஆதரவாக இத்தனை வலுவான , வெளிப்படையான அறிவுஜீவிப்புலம், அரசியல் புலம் இருக்குமா என்றே வியப்பாக இருக்கிறது. உலக வரலாற்றில் இதற்கு இணையான சூழல் எங்காவது நிலவியதுண்டா? இந்திய ஆங்கில நாளிதழ்களும் சுதந்திர அறிவுஜீவிகளில் பலரும் கம்யூனிஸ்டுகளும் சீனாவை இந்தியாவின் மீது ஆதிக்கம் செலுத்த இயல்பான அதிகாரம் கொண்ட நாடாகச் சித்தரித்து எழுதும் கட்டுரைகளை நாம் அன்றாடம் வாசித்துக்கொண்டிருக்கிறோம்! இந்திய வரலாற்றில் இப்போது போல இந்தியா பலவீனமாக,செயலற்றதாக ஒருபோதும் இருந்ததில்லை.
’சட்டீஸ்கரின் ஏழை மக்களின் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராக போராடும்’ மாவோயிச போராளிகளை வைத்து நடத்தும் சீனா அந்நாட்டின் மக்களில் ஐம்பது சதவீதம் பேரை ஆலையடிமைகளாக வைத்திருக்கிறது என்பது உலகம் அறிந்தது. ஆப்ரிக்கா முதலிய மூன்றாமுலக நாடுகளில் போலி அரசுகளை உருவாக்கி கனிவளங்களை வளைத்துப்போட்டு சுரண்டிக்கொண்டிருக்கிறது அதன் வல்லரசுப்பசி. ஆம் சீனா பல்லாயிரம் வேதாந்தாக்களுக்குச் சமம்!
உண்மை இதுவே. இந்தியா மீது சீனா தொடுத்திருக்கும் மறைமுகப் போரின் ஒரு சிறு பகுதிமட்டும்தான் மாவோயிசக் கிளர்ச்சி. அவர்களின் நோக்கம் முழுக்கமுழுக்க சீனாவால் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. அந்தப்போரில் பழங்குடிகள் கருவிகளாக்கப்பட்டிருக்கிறார்கள். பல ஆண்டுக்காலம் நீளக்கூடிய இந்த போரில் அவர்கள் தங்கள் கடைசி வாழ்க்கைத்துளியையும் இழப்பார்கள். மௌனமாக அழிவார்கள். நம் வண்ணத்தொலைக்காட்சிகளில் அவர்களின் அவலத்தை பார்த்து நாம் அனுதாபம் தெரிவிப்போம், முற்போக்கு அரசியல் பேசுவோம்.
மாவோயிச தீவிரவாதிகள் மீண்டும் மீண்டும் மார்க்ஸையும் மார்க்ஸியத்தையும் சுட்டிக்காட்டுவதனால் மார்க்ஸிய அடிப்படைப் பாடங்களில் பல நினைவில் வந்து முட்டிக்கொண்டிருக்கின்றன. ஒன்று, ஒரு பழங்குடிச் சமூகம் நிலப்பிரபுத்துவத்தையும் அதன் வழியாக முதலாளித்துவத்தையும்தான் அடையமுடியும் . முதலாளித்துவத்தின் கல்வியை, பண்பாட்டை, உற்பத்தி முறைகளை அடைந்தபின் அதில் நிறைவுறாது அவர்கள் உற்பத்திச் சக்திகளை கைப்பற்றிக்கொண்டு கம்யூனிசம் நோக்கிச் செல்லவேண்டும். அதுவே மார்க்ஸ் கண்ட சமூகப்பரிணாமம்.
பழங்குடி மனநிலையில் இன்னமும் வாழும் மக்கள் அவர்களுக்கு இந்த முதலாளித்துவம் அளிக்கும் வாய்ப்புகளை அறியாமல், அதன் பண்பாடுகளுக்குள் வராமல், நவீனத்தொழில்நுட்பத்தையோ நவீன உற்பத்திமுறைகளையோ, நவீன அரசமைப்பையோ அறிமுகம் செய்துகொள்ளாமல் யாரோ கொடுத்த துப்பாக்கிகளின் வழியாக நேராக கம்யூனிசம் நோக்கி நகர முடியும் என்பது என்னவகையான அரசியல் என்றே புரியவில்லை. அந்தக் கம்யூனிசம்தான் உண்மையில் என்ன?
அது மார்க்ஸியம் என்பதை விட போல்பாட்டிசம் என்றுதான் சொல்லவேண்டும். கம்போடியாவில் போல்பாட் அப்படித்தான் பழங்குடிகளை நேரடியாக கம்யூனிஸ்டுகளாக ஆக்கும் சித்தாந்தத்தை முன்வைத்தார். நாட்டில் நேர்பாதி மக்களைக் கொன்று குவித்தார். இங்கும் வாய்ப்புகிடைத்தால் சிலகோடித் தலைகளை உருட்டுமளவுக்கு அறியாமையின் ஆற்றல் இந்தக் கோட்பாட்டுக்கு உண்டு.
மார்க்ஸிய கோட்பாட்டாளர்கள் ஆயுதப்புரட்சியைப்பற்றி மிக மிக விரிவாக சிந்தனை செய்திருக்கிறார்கள். ஒவ்வொரு ஆயுதப்புரட்சியும் அழிவை நோக்கிச் செல்லும்போது மேலும் பல தெளிவுகளை மானுடகுலம் அடைகிறது. அடிப்படைப்பாடங்களை அண்டோனியோ கிராம்ஷியில் இருந்தே ஆரம்பிக்கலாம். ஒரு தேசத்தின் குடிமைச்சமூகத்தில் உள்ளுறைந்திருக்கும் கருத்தியலே அதன் அரசியல் சமூகத்தை உருவாக்குகிறது. அந்த அரசியல் சமூகமே அரசாங்கத்தை உருவாக்குகிறது. அதாவது ஓர் அரசு அந்த சமூகத்தின் கருத்தியலால் கட்டமைக்கப்பட்ட ஒன்றே.
ஆனால் குடிமைச்சமூகத்தின் கருத்தியலில் இருந்து ஓர் அரசு விலகிச் செல்லக்கூடும். அரசியல்சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அதை வெறும் ராணுவ வன்முறையால் மட்டுமே நிலைநிறுத்தக்கூடும். அதாவது மக்கள் மீது அந்த அரசு சுமத்தப்பட்டிருக்கிறது. அப்போதுதான் மக்கள் ஆயுதமெடுத்து புரட்சியில் ஈடுபடவேண்டிய தேவை எழுகிறது என்பதே கிராம்ஷியின் கோட்பாடு. அதுவரை அந்த குடிமைச்சமூகத்தின் கருத்தியலை மாற்றியமைப்பதே புரட்சியாளரின் பணியாக இருக்கமுடியும்.
இந்திய அரசு ’தரகுமுதலாளித்துவ- பிற்போக்கு-பாசிச’ [இன்னும் மிச்ச எல்லாம்தான்] அரசாகவே இருக்கட்டுமே. அது இந்தியாவின் குடிமைச்சமூகத்தின் கருத்தியலால் உருவாக்கப்பட்டதாகவே இன்று இருக்கிறது. இன்றும் இந்த ’முற்போக்கு’ சக்திகள் மிகமிகச்சிறுபான்மையினரின் ஆதரவைக்கூட பெறாதவைதான். அந்நிலையில் பெரும்பான்மையினரின் கருத்தியலால் ஆன ஓர் அரசின் மீது வன்முறைத்தாக்குதலை நிகழ்த்துவது என்பது எப்படி புரட்சி ஆகும்? அது வெறும் வன்முறை மட்டுமே.
எந்த அரசும் ராணுவ வன்முறையால் நிலைநிறுத்தப்படுவதே. அந்த அரசை உருவாக்கும் குடிமைச்சமூகத்தின் கருத்தியல் வட்டத்துக்குள் செயல்படும்போது மட்டுமே அந்த வன்முறையில் இருந்து பாதுகாப்பு கிடைக்கிறது . ஜனநாயகப்போராட்டம் என்பது அந்த வட்டத்திற்குள் நின்றுகொண்டு செய்யப்படுவது. டாட்டாவுக்கு எதிராக தென்கிழக்குகடலோர மக்கள் நிகழ்த்திய போராட்டம் அத்தகையது. குஜ்ஜார் பழங்குடிகளின் போராட்டம் அத்தகையது. அது வன்முறையை நேரடியாகச் சந்திக்க நேர்வதில்லை. ஆகவே அது அழிவுகளை உருவாக்குவதில்லை.
ஆனால் பெரும்பான்மை ஆதரவுள்ள ஒர் அரசுக்கு எதிரான வன்முறைப்போராட்டம் அப்படி அல்ல. அது உரிமைப்போராக அல்ல, அந்த அரசின் அதிகாரத்துக்கு எதிரான கலகமாகவே கொள்ளப்படும். அரசின் முழு வன்முறையும் அதன்மேல் பாயும். அதை அவ்வரசு அனைத்து வன்முறைச்சக்தியையும் கொண்டு நசுக்கி அழிக்கும். இதில் எந்த அரசும் விதிவிலக்கல்ல. ஜனநாயக அரசு கொஞ்சம் தயங்கும், சீனா போன்ற சர்வாதிகார அரசுகள் ஆரம்பத்தில்யே சம்மட்டியை தூக்கிவிடும். கலகத்தில் ஈடுபட்ட தன் குடிமக்களை ஆயிரக்கணக்கில் கொன்றழிக்காத அரசு ஏதும் இன்று பூமி மீது இல்லை.
இந்த வன்முறைக்குழுக்கள் எப்போதும் செய்யும் ஒரு வித்தை உண்டு. போர்க்குணம் கொண்ட எளியமக்களை திரட்டி அவர்களை அரசதிகாரத்துக்கு எதிராக கிளப்பி விடுவார்கள். அரசின் வன்முறை முழுக்க அம்மக்கள் மீதே பாயும். உடனே அரசாங்க அடக்குமுறை என்றும், மனித உரிமை மீறல் என்றும் குரல்கள் எழும். அந்த அடக்குமுறையே மேலும் வன்முறைக்கான காரணமாக முன்வைக்கப்படும். ஆந்திர நக்சலைட்டுகள் அதைத்தான் செய்தனர். தங்கள் காலகட்டம் முடிந்ததும் பழங்குடிகளை கைவிட்டுச் சென்றனர். அவர்களுக்கு கால்நூற்றாண்டுக்காலம் அரசு அளித்த அடக்குமுறைவடுக்கள் மட்டும் மிஞ்சின. இப்போது மாவோயிஸ்டுகளும் அதையே செய்கிறார்கள்.
வடகிழக்குப் பழங்குடிகளின் போராட்டம். மாவோயிஸ்டுகளின் போராட்டம் அனைத்தையும் சீனாவை நீக்கிவிட்டு விவாதிப்பதென்பது பச்சை அயோக்கியத்தனம். அந்த அயோக்கியத்தனத்தைச் செய்ய உரிய ஊதியம் வாங்கியவர்களால் ஊடகங்களில் அது நிகழ்த்தப்படுகிறது. சாமானிய புத்தியுடன் சிந்திக்கும் எவரும் இதை இந்தியா- சீன அரசியலை பின்புலமாக வைத்தே யோசிக்க முடியும்.
நம் நாட்டுக்கு அருகேயே உலகின் ஆகக்கீழ்ப்பட்ட ஒரு சர்வாதிகார அரசை மியான்மரில் சீனா நிலைநிறுத்தி வருகிறது. தன் வணிக நலன்களுக்காக, ராணுவநலன்களுக்காக அந்நாட்டின் பலகோடி மக்களை பத்தொன்பதாம்நூற்றாண்டின் இருட்டுக்குள் வைத்திருக்கிறது. அங்கே மாவோயிசம் ஏதும் கொழுந்துவிட்டெரியவில்லை. சீனாவின் இலக்கு முழுமையாக வென்றால் நாமும் மியான்மார் போல ஆவோம். சீனாவின் குப்பைக்கூடையாக, படிக்கட்டாக நிலைநிற்போம். இந்த மாவோயிசத்தின் சாத்தியமான இறுதி விளைவு இதுவே.
சீனா என்ற அமைப்பின் யதார்த்தம் என்ன என்றறிந்தவர்கள் இந்தபிரச்சினையை மிக விரிவான ஓரு தளத்தில் அணுக முடியும். இன்றைய சீனாவில்தான் உலகின் மாபெரும் புதுமுதலாளிகள் உள்ளனர். வேதாந்தா நிறுவனம் போல,டாட்டா நிறுவனம் போல பற்பலமடங்கு பெரியவர்கள். பலமடங்கு சுரண்டல் செய்பவர்கள். அவர்களின் நிதியால்தான் இங்கே மாவோயிஸ்டுகள் போராடுகிறார்கள் என்பதை நாம் நினைத்துக்கொள்ளவேண்டும்.
ஆக, இந்த போர் சீன முதலாளிகளுக்கும் இந்திய முதலாளிகளுக்கும் இடையே நிகழ்வது என்று சொன்னால் அது மிகையல்ல. இதில் பஞ்சைகளான பழங்குடிகள் பலியிடப்படுகிறார்கள். இதுவே நான் காணும் நிதரிசனம். இதில் எந்த முற்போக்கு அம்சமும் இல்லை. பரிதாபகரமான ஒரு வரலாற்று அவலம் மட்டுமே உள்ளது. காலந்தோறும் வரலாற்றில் நடந்து வரக்கூடியது. ரத்தமும் சதையும் கனவுகளும் கொண்ட மக்கள் வெறும் எண்ணிக்கையாக மாறி செத்து அழிந்து வரலாற்றின் இருளில் மறைவார்கள். கோட்பாட்டாளர்களும் அரசியல் நோக்கர்களும் பேசிக்கொண்டே இருப்பார்கள்.
இந்த போரில் இந்தியாவின் கோடிக்கணக்கான எளிய மக்கள் இந்திய முதலாளிகளுக்கும் சீன முதலாளிகளுக்கும் ஒரே சமயம் எதிர்தரப்பில் இருக்கிறார்கள். இந்த காலகட்டம் அளிக்கும் எல்லா வாய்ப்புகளையும் திரட்டிக்கொண்டு தங்கள் வாழ்வாதாரங்களுக்காக போராடும் நிலையில் இருக்கிறார்கள். தங்களை மேலும் மேலும் தகுதிப்படுத்திக்கொண்டு, தங்கள் நிலையை மேம்படுத்திக்கொண்டு அவர்கள் போராட வேண்டியிருக்கிறது. முதலில் பசியில் இருந்து பின் அறியாமையில் இருந்து.
அத்தகைய ஒரு போராட்டமே இன்று தேவை. சர்வதேச நோக்குடைய ஜனநாயக அடிப்படை கொண்ட, நெடுநாள் நீடிக்கக்கூடிய, ஒவ்வொரு தருணத்திலும் அம்மக்களை பொருளியல் ரீதியாகவும் பண்பாட்டுரீதியாகவும் மேலும் முன்னகர்த்தக்கூடிய , ஒரு போராட்டம்.
முடிவாக…
நடுத்தர வர்க்க குற்றவுணர்ச்சியின் விளைவாக உருவாகும் உளச்சிக்கலைக்கொண்டே நாம் இந்த விஷயங்களை பார்க்கிறோம். நம்முடைய சொந்த பிம்பம் எந்த நிலைபாட்டை எடுத்தால் துலங்கும் என்ற நோக்கிலேயே நாம் நம் கருத்துக்களை முடிவெடுக்கிறோம் .அப்பட்டமானதும் கசப்பானதுமான உண்மையை விட கற்பனாவாதத்தின் தீவிரம் நமக்கு பிடித்திருக்கிறது.
இந்திய யதார்த்ததை நோக்கினால் ஆந்திரத்திலும் பஞ்சாப்பிலும் வன்முறை அரசியல் பொருளியல்தேக்கத்தையும் சமூகத்தேக்கத்தையும்தான் உருவாக்கியது. அந்த தேக்கத்தில் இருந்து அப்பகுதிகள் வெளிவந்தது ஊழல்நிறைந்த முதலாளித்துவ ஜனநாயகம் மூலமே. அந்த அமைப்பு அதன் அனைத்து சீரழிவுகளுடனும், அத்தனை குளறுபடிகளுடனும் மக்களின் வறுமையை போக்குவதில் குறிப்பிடத்தக்க வெற்றியை அடைந்தது கண்கூடு.
என்ன காரணம் என்றால் முதலாளித்துவ ஜனநாயகம் மக்களை பிரதிநிதித்துவம் செய்கிறது. மக்களின் ஆசைகளையும் பேராசைகளையும் எல்லாம். ஆகவே அது எப்படியோ மக்களுக்கு தேவையானவற்றை செய்தாக வேண்டியிருக்கிறது. மக்களுக்கு அந்த அமைப்புமேல் ஒரு கட்டுப்பாடு இருக்கிறது. ஆகவே அத்தனை குறைபாடுகளுடன் அதுவே இன்று சாத்தியமான ஒரே வழியாக உள்ளது. இதுவே கசப்பான உண்மை
இந்த முதலாளித்துவ ஜனநாயக அமைப்பின் சீர்கேடுகளுக்கு மாற்றாக முன்வைக்கபடுவது இடதுசாரி அரசியல். அது உலகம் எங்கும் அழிவையே உருவாக்கியது என்பது வரலாறு. இந்தியாவிலும் அப்படியே நிகழ்ந்தது. இதற்குக் காரணம் அதில் உள்ள ஒரு அடிப்படை அம்சமான செயல்பாட்டாளரியம். புரட்சிக்காக ஆயுதம் எடுக்கும் சிறுபான்மையினர் அதில் அனைத்து அதிகாரங்களையும் அடைகிறார்கள். அவர்களால் அரசு தீர்மானிக்கப்படுகிறது. அந்த அரசு சர்வாதிகார அரசாக மட்டுமே இருக்கும்
சர்வாதிகார அரசு எந்நிலையிலும் மக்கள் விரோத அரசே. காரணம் மனித இயல்பு பேராசையும் அதிகார வெறியும் கொண்டது என்பதே. இலட்சியவாதம் எளிதில் காலாவதியாகும். அதன்பின் அரசை நடத்தும் நிர்வாக வர்க்கம் மற்றும் ராணுவத்தின் பேராசையும் அதிகார வெறியுமே அந்த அரசை நடத்தும். ஜனநாயக அரசில் மக்கள் சக்தி அதை கட்டுப்படுத்தும் தரப்பாக இருக்கும். சர்வாதிகார அரசில் மக்கள் சக்தி ஒடுக்கப்படுகிறது. ஆகவே அரசு முடிவிலா அதிகாரம் கொண்டதாக இருக்கிறது. மக்களின் வளர்ச்சியை அது ஒடுக்கி அழிக்கிறது.
இந்தியாவில் உருவாகியுள்ள மாவோயிசம் என்பது பழங்குடிகளை மட்டும் சார்ந்து இயங்கும் ஒரு குறுங்குழுவாதமே. இந்திய விவசாயியை எளிதில் ராணுவப்படுத்த முடியாது. அவ்வாறு இந்திய விவசாயியை வன்முறைக்குக் கொண்டு செல்லமுயன்ற கடைசி முயற்சி பஞ்சாப் கிளர்ச்சி. ஆனால் அது முழுமையான தோல்வியாக முடிந்தது. ஆகவே இந்த மாவோயிசக்கிளர்ச்சி எவ்வகையிலும் இந்தியாவைப் பாதிக்காது.
மாவோயிசப் பகுதிகளில் உள்ள கடுமையான வறுமையும் பிற்பட்ட நிலையும் வன்முறை அரசியலுக்கான காரணமாகச் சொல்லப்படுகின்றன. அந்த நிலையில் இருந்து மீள வன்முறையே ஒரே வழி என்று விளக்கப்படுகிறது. அது பொய்யான பிரச்சாரம் மட்டுமே. இந்தியாவின் பல பகுதிகள் இருபது முப்பது வருடங்களுக்கு முன்பு கூட சட்டிஸ்கரின் அதே பொருளியல் நிலையில் இருந்துள்ளன. அவை இந்தியாவின் முதலாளித்துவ ஜனநாயகம் வழங்கும் வாய்ப்புகளைக் கொண்டே வறுமையை களைந்துள்ளன. தமிழகத்தின் தர்மபுரியே மிகச்சிறந்த உதாரணம்.
அவ்வாறு மக்கள் வறுமையில் இருந்து வெளிவர காரணமாக அமைவது முதலாளித்துவம் அளிக்கும் இரு மனநிலை. ஒன்று நுகர்வு வெறி. இன்னொன்று எதிர்காலத்துக்கான சேமிப்பு. அது மக்களை உழைக்கவும் சேர்க்கவும் தூண்டுகிறது. முதலாளித்துவம் அளிக்கும் எல்லா எளிய வாய்ப்புகளையும் பயன்படுத்திக்கொள்ளச் செய்கிறது. அவ்வாறு பயன்படுத்தித்தான் பல இந்திய பகுதிகளில் வளர்ச்சி உருவானது. அதற்கு கல்வி உதவுகிறது.
அந்த வழிகள் சட்டிஸ்கர் பகுதிகளில் கையாளப்படவில்லை. ஏனென்றால் அந்த மக்களுக்கு அத்தகைய மனநிலை இல்லை. அதை அவர்களிடம் உருவாக்கி அவர்களுக்கு உரிமைகளைப்பற்றிய விழிப்புணர்ச்சியும் போராட்ட உணர்வும் ஒற்றுமையும் உருவாக்கப்பட்டிருக்கலாம். அது நிகழவில்லை. மாறாக அவர்களின் பிற்பட்ட நிலையை பயன்படுத்திக்கொண்டு ஒரு அன்னிய சக்தியாக மாவோயிஸ்டுகள் அவர்கள்மேல் ஆதிக்கம் செலுத்துகிறார்கள்.
எளிய பொதுப்புத்தியால் பார்த்தால் எழும் கேள்வி இது. இந்திய முதலாளித்துவ ஜனநாயகத்தால் அளிக்கப்பட்ட வாய்ப்புகளைக்கூட அறியாத அளவுக்கு விழிப்புணர்ச்சியும் ஒற்றுமையும் இல்லாத பழங்குடி மக்கள் எப்படி ஒற்றை ராணுவமாகத் திரண்டார்கள்? இப்படி ராணுவமாக திரள்வதற்குத் தேவையான அரசியல் உணர்ச்சியும் ஓற்றுமையும் ஓரளவுக்கு இருந்தாலே அவர்கள் இந்தியச்சூழலில் பெரும்பாலான பிரச்சினைகளை தீர்த்துக்கொண்டிருக்க முடியுமே?
உண்மையில் பழங்குடிகள் ராணுவப்படுத்தப்படவில்லை. அவர்களுக்கு அரசியல் விழிப்போ ஒற்றுமையோ உருவாக்கப்பட்வில்லை. அவர்கள் மாவோயிஸ்டுகளால் முன்னிறுத்தப்படுகிறார்கள், அவ்வளவுதான். ஆந்திராவில் இப்படித்தான் பழங்குடிகள் முன்னிறுத்தப்பட்டார்கள். ஆனால் முப்பதாண்டுகளுக்குப் பின்னர் மக்கள் யுத்தக்குழு அகன்றபோது அவர்கள் அப்படியே இருப்பதையே நாம் கண்டோம்
கோட்பாட்டு ரீதியாகப் பார்த்தால் மாவோயிச ராணுவத்தை உருவாக்கி நிலைநிறுத்தும் நிதி எந்த உபரியால் உருவாக்கப்பட்டது என்ற வினா எழுகிறது. அந்த நிதி அந்த எளிய மக்களிடமிருந்து கிடைத்திருக்க வாய்ப்பில்லை. அந்த நிதியை யார் அளிக்கிறார்களோ அவர்களே உண்மையில் அந்த ராணுவத்தின் உரிமையாளர். அது சீனாதான்
சீனா இந்தியாவின் வடகிழக்கில் பல மறைமுகப்போர்களை நிகழ்த்துகிறது. மோசமான இனவெறியை வளர்க்கிரது. அரைநூற்றாண்டுக்கும் மேலாக அப்பகுதியை இருளில் ஆழ்த்தி வைத்திருக்கிறது. அந்த மனநிலையிலேயே அது இந்த மாவோயிஸ்டுகளையும் ஆதரிக்கிறது. அவர்களின் நோக்கம் இந்தியாவை பலவீனப்படுத்தி சர்வதேசத்தளத்தில் ஒரு போட்டியாளரை இல்லாமலாக்குவதே.
மார்க்ஸியக் கோட்பாட்டு ரீதியாக பார்த்தால் ஓர் அரசு அந்த மக்களின் கருத்தியலின் பிரதிநிதியாக இருப்பது வரை அதன்மேல் போர்தொடுப்பது தற்கொலை. ஆனால் பழங்குடிகளை மாவோயிஸ்டுகள் அதற்குத் தூண்டி விடுகிறார்கள். பழங்குடிகளின் வறுமைக்கும் பின்தங்கிய நிலைக்கும் தீர்வு என்பது இந்திய ராணுவத்துடன் அவர்களை போரிடச்செய்வது என்று சொல்வது மாபெரும் அபத்தம்.
பல்லாண்டுக்காலம் நீளும் இத்தகைய போர்கள் சர்வதேச அரசியல் சூதாட்டங்களுக்குரியவை. அவற்றில் சிக்கி எளிய பழங்குடிகள் அழியவே இவை வழி வகுக்கும். அடிப்படையான மனிதாபிமானமும் யதார்த்தபிரக்ஞையும் உள்ள ஒருவர் பழங்குடிகளும் எளிய மனிதர்களும் இந்த அரசியல் ஆட்டங்களில் இருந்து விடுவிக்கப்பட்டு இந்த நூற்றாண்டு அவர்களுக்கு அளிக்கும் குறைந்தபட்ச உலகியல் நலன்களையாவது அவர்கள் அடைய வேண்டுமென்றே விரும்புவார்கள்.
நாளை…
இத்தகையதோர் நீண்ட விவாதத்தின் ஒட்டுமொத்தமாக திரண்டு வரும் கடைசி வினா ஒன்று உண்டு. அப்படியானால் இன்றுள்ள ஊழல் மிக்க அமைப்பை நான் குறைகாணவில்லையா? இதை நான் நியாயப்படுத்துகிறேனா?
என் பதில் இதுதான். இந்த அமைப்பின் ஒவ்வொரு ஊழலும் எந்த இந்திய சாமானியனையும்போல என்னையும் கொந்தளிக்கச் செய்கின்றன. இதன் பொறுப்பின்மையும் சோம்பலும் என்னை பலசமயம் அராஜக மனநிலை வரை கொண்டு செல்கின்றன. இந்த தேசம் ஒட்டுமொத்தமாக அழிந்தாலும் சரி என்ற வெறி சில சமயம் உருவாகிறது. ஒரு மாபெரும் வன்முறை இங்கே வெடிக்கவேண்டும் என்றுகூட நான் நினைத்ததுண்டு.
ஆனால் யதார்த்த உணர்ச்சி எப்போதும் என் கருத்துக்களை ஆள்கிறது. அலைவரிசை ஊழல் செய்தி கேட்டு நானும்தான் கொந்தளிக்கிறேன். ஆனால் அந்த ஊழலுக்கு மூலமாக இருப்பது நம்முடைய சாமானியனின் லௌகீக வெறி என்ற யதார்த்தம் என் கண்முன் இருக்கிறது. அலைவரிசை ஊழலைக் கேள்விப்பட்டால் அவன் அந்தப்பணத்தில் இருந்து தேர்தல் சமயம் தனக்கு எவ்வளவு வரும் என்று மட்டுமே சிந்திப்பான்.
இந்த மக்கள் இவர்களுக்கான அரசையும் அரசியலையும் உருவாக்கியிருக்கிறார்கள் என்பதல்லவா உண்மை. இந்த மக்கள் இப்படி இருக்கையில் இதை விட மாறான ஓர் அரசு எப்படி உருவாக முடியும்? இந்த லௌகீக வெறி, இதன் அனைத்து தார்மீக வீழ்ச்சிகளுடன் சேர்த்து, இவர்களைப் பொருளியல் ரீதியாக முன்னேற்றிக்கொண்டிருக்கிறது, பசியை அகற்றியிருக்கிறது என்பதையும் காண்கிறேன்.
இந்த அரசுக்கு இருக்கும் எல்லா சிக்கல்களும் இந்த மக்களின் சிக்கல்களே. இந்த பொருளியல் அமைப்பின் சிக்கல்களே. இதில் இருந்து விடுதலை என்பது இந்த மக்களின் மாற்றத்தாலேயே நிகழமுடியும். ஆம், இதற்கு மாற்று என்பது இன்றிருப்பதை விட மேலான ஒன்றாகவே இருக்கமுடியும். இன்றிருக்கும் ஜனநாயக உரிமைகள் இன்னும் அதிகரிக்கவேண்டும். இன்னும் சமத்துவமும் உலகியல் வசதிகளும் உருவாக வேண்டும். அது இதைவிடக் கீழானதும் அழிவை உருவாக்குவதுமான ஒன்றாகக், காலாவதியாகிப்போன ஒன்றாக இருக்க முடியாது.
சரி, அது என்ன? அதைச்சொல்ல என்னால் இயலாது. எனக்குப் பலசமயம் திகைப்பாக இருக்கிறது. பல சமயம் சோர்வாகவும் அவநம்பிக்கையாகவும் இருக்கிறது. இந்த ஊழலும் ஏற்றத்தாழ்வும் மிக்க முதலாளித்துவ அமைப்பை விட்டு மானுட குலம் உண்மையிலேயே மேலே செல்ல முடியுமா? தெரியவில்லை. எதிர்காலத்தைப் பார்க்க என்னால் இயலவில்லை. அது எவராலும் இயலாதது என்றே நான் நினைக்கிறேன்.
அவநம்பிக்கையில் இருந்து மீளும் பொருட்டு, ஓர் எழுத்தாளனாக நான் எனக்கான ஓர் இலட்சியவாதத்தை உருவாக்கிக் கொள்கிறேன். மானுடகுலத்தின் கூட்டுமனம் பிரம்மாண்டமான ஆற்றல் கொண்டது. நான்குகரைகளையும் பல்லாயிரம் டன் எடையுடன் அழுத்தும் ஏரி போல அது காலவெளியை மோதிக்கொண்டிருக்கிறது. புதிய சாத்தியங்களை தேடிக்கொண்டிருக்கிறது. அது அழியாது. தனக்கான வழிகளை அது கண்டுபிடிக்கும். முன்னால் செல்லும்.
கடந்த காலத்தைப் பார்க்கையில் மானுடகுலம் முன்னால் செல்லும் என்ற எண்ணமே எழுகிறது. வரலாறு முழுக்க அது தன்னை மேலும் மேலும் தார்மீகமாக ஆக்கிக்கொண்டுதான் வந்திருக்கிறது. இன்னமும் பண்பட்டதாக இன்னமும் அமைதியானதாகவே மாறியிருக்கிறது. அவ்வாறே மேலும் நிகழும்.
ஆனால் நடைமுறையில் யோசிக்கையில் ஒரே சாத்தியம்தான் தெரிகிறது. இந்த முதலாளித்துவ அமைப்பு இதன் உள்ளார்ந்த சிக்கல்களால் அழியும். எந்த அமைப்புக்கும் உள்ள விதிதான் அது. அமைப்புகள் வளர்ந்தாகவேண்டும். ஒரு கட்டத்துக்குமேல் அந்த வளர்ச்சியை அந்த அமைப்பால் தாங்க முடியாது. அது நெருக்கடியை சந்திக்கும். அழியும்.
முதலாளித்துவ அமைப்பின் அடிப்படை இயல்பே மூலதனம் மையம் நோக்கிக் குவிவதுதான். அந்த இயல்பே அது மாபெரும் கட்டுமானங்களை உருவாக்க காரணமாக அமைந்தது. ஆனால் அந்த மூலதனக்குவிப்பு மூலமே அது செயல்படமுடியாமல் ஆகலாம்.
என்றாவது அந்த உச்சகட்ட சிக்கல் நிகழ்ந்து உலகப்பொருளியல் உறைந்து நின்றால் அந்நிலையை நாளைய நவீனத் தொழில்நுட்பம் சந்திக்கும்போது புதிய வழிகள் திறக்கலாம். புதிய சிந்தனைகள் உருவாகலாம்.
மனிதனை இதுவரை கொண்டுவந்து சேர்த்த மேலே செல்வதற்கான துடிப்பையும் அளப்பரிய அக ஆற்றலையும் மார்க்ஸ் நம்பினார். அதுவே வரலாற்றின் உட்கிடக்கை என்று எண்ணினார். நானும் அதையே நம்ப ஆசைப்படுகிறேன். ஆத்மார்த்தமாக முயல்கிறேன்.
ஜெ