அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு
சமீபத்தில் கர்நாடகாவில் லிங்காயத்துகளை தனி மதமாக அறிவித்துள்ளார்கள். வீர சைவம் என்ற ஜாதிக்குள் தானே அவர்கள் இதுவரை இருந்துவந்துள்ளார்கள். பசவர் என்ற சமூக சீர்திருத்த ஞானி இந்து மதத்திற்குள் தானே இந்த அமைப்பை உருவாக்கினார். இவர்களை தனி மதமாக அறிவித்ததால் என்ன மாற்றம் நடந்து விட போகிறது. ஒரு அரசுக்கு ஒரு ஜாதியை அல்லது ஒரு அமைப்பை மதமாக அறிவிக்க உரிமை உள்ளதா ? தற்போதுள்ள இதே சித்தராமையா அரசு தான், கர்நாடக மாநிலத்திற்கு தனி கொடியை அறிவித்தார்கள். இனி இதையே முன் மாதிரியாக வைத்து ஈழவர்கள் கேரளாவில் நாராயண குருவை முன் வைத்து தனி மதம் கேட்கலாம் தானே ?
இதில் தங்களின் கருத்தை அறிய ஆவலாக உள்ளேன்.
அன்புடன்
பா .சரவணகுமார்
நாகர்கோயில்
***
அன்புள்ள சரவணக்குமார்,
இந்த இணையதளத்திலேயே கன்னட பசவ –வீரசைவ மதக்குழுவினரைப்பற்றி எப்போதும் எதிர்மறையாகவே எழுதிவந்திருக்கிறேன். ஏனென்றால் இந்திய அளவில் மத அடிப்படைவாதம், குறுங்குழுவாதம், சுதந்திர சிந்தனைக்கு எதிரான தாக்குதல்கள் என்பவற்றில் முன்னணியில் நின்றிருக்கும் ஒரு மதக்குழு அது
இந்தியாவில் வீரசைவம் காஷ்மீரில் தொடங்கி தமிழகம் வரை பரவியிருக்கிறது. அதற்குள் பல பிரிவுகள் உள்ளன.கன்னட நிலத்தில் வீரசைவம் கிமு இரண்டாம்நூற்றாண்டில் சாதவாகனப் பேரரசின் காலத்திலேயே இருந்திருக்கிறது. ஹொய்ச்சாள அரசர்களின் காலகட்டம் சைவத்தின் பொற்காலம். கர்நாடகத்தின் கலைச்செல்வங்கள் எனப்படும் ஏராளமான சைவக்கோயில்கள் கட்டப்பட்டன. இணையான மதமாக சமணமும் இருந்தது. வீரசைவம், ஆகமசைவம் என இருபிரிவுகளாக சைவம் இயங்கியது. வீரசைவம் ஒரு சிறிய தரப்பாகவே இருந்தது, ஆகம சைவமே மேலோங்கியிருந்தது. வீரசைவ மரபு நம் சித்தர்களைப்போன்ற அலையும்துறவிகளின் மதமாக, ஆறுவகை சைவப்பிரிவினரின் மதமாக செயல்பட்டது.
கன்னட வீரசைவ மரபுக்குள் பசவரால் உருவாக்கப்பட்ட ஒரு சீர்திருத்த அமைப்பு லிங்காயத்துக்கள். அவர்கள் வீரசைவர்கள், அதேசமயம் தனித்த ஆசாரங்கள் கொண்ட மதக்குழு. பன்னிரண்டாம்நூற்றாண்டில் காலச்சூரி அரசமரபைச் சேர்ந்த பிஜ்ஜளர் என்னும் அரசரின் அமைச்சராக இருந்த அன்றிருந்த சமூகச்சீரழிவுகளை , மதச்சீரழிவுகளை அகற்ற முயன்றவர். அதன்பொருட்டு அவர் உருவாக்கிய சீர்திருத்த அமைப்பே பின்னாளில் பசவ மதக்குழுவாக உருவாகியது.
இந்தியாவின் மதப்பரிணாமத்தின் பொதுச்சித்திரத்தில் வைத்தே பசவரை புரிந்துகொள்ள முடியும். அது பக்தி இயக்கம் உச்சத்தை அடைந்த காலகட்டம். பலநூற்றாண்டுகளாக சமண- பௌத்த இயக்கங்களின் ஆதிக்கத்தால் தேக்கமடைந்து வெறும் சடங்குகளாகவும், பல்வேறு இனக்குழு வழிபாட்டுமுறைகளாகவும், ஒன்றோடொன்று போரிட்ட துணைமதங்களாகவும் பிரிந்துகிடந்தது இந்து மரபு. அதன் மையமான தத்துவங்கள் அழிந்தன. அதன் நாட்டார் அம்சமும் வேதமரபும் ஒன்றோடொன்று தொடர்பின்றி செயல்பட்டன.
கிபி ஏழாம் நூற்றாண்டில் தமிழகத்தில் தொடங்கிய பக்தி இயக்கம் [ஆழ்வார், நாயன்மார்களின் மரபு] சைவம், வைணவம் என்னும் இருமதங்களையும் பெருமதங்களாக வளர்த்தது. அதன் செயல்முறையின் மூன்று அம்சங்கள்
1. நாட்டார் வழிபாட்டுமரபுகளை வேதமரபுடன் இணைத்தல்
2. வேள்விச்சடங்குகளை ஆலய வழிபாட்டுச் சடங்குகளாக உருமாற்றம் செய்தல்
3. குறுமதங்களை இணைத்து சைவ வைணவத்தை மைய மதங்களாக வளர்த்தல்
4. இசை, கலைகள் வழியாக சைவத்தையும் வைணவத்தையும் மக்கள்மதங்களாக்குதல்
இந்தப்போக்கு வடக்கே சென்று மேலும் மேலும் பெரும்பக்தர்களான ஞானிகளையும், மதச்சீர்திருத்தவாதிகளையும், தத்துவஞானிகளையும் உருவாக்கியது. ராமானுஜர் [11 ஆம் நூற்றாண்டு] நிம்பார்க்கர் [12 ஆம் நூற்றாண்டு] வல்லபர் [12 ஆம் நூற்றாண்டு] நாமதேவர் [12 ஆம் நூற்றாண்டு] சாயனர், மாதவர் [14 ஆம் நூற்றாண்டு] ராமானந்தர் [14 ஆம் நூற்றாண்டு] கபீர் [15 ஆம் நூற்றாண்டு] குருநானக் [15 ஆம் நூற்றாண்டு] சைதன்யர் [15 ஆம் நூற்றாண்டு] தாது தயால் [ 15 ஆம் நூற்றாண்டு] மீராபாய் [15 ஆம்நூற்றாண்டு ] துளசிதாஸ் [15 ஆம் நூற்றாண்டு ] சூர்தாஸ் [ 15 ஆம் நூற்றாண்டு] சுந்தர்தாஸ் [ 16ஆம் நூற்றாண்டு] சமர்த்த ராம்தாஸ் [17 ஆம்நூற்றாண்டு] என நீளும் வரிசை அது அவ்வரிசை சென்ற நூற்றாண்டுவரை நீண்டது. தயானந்தசரஸ்வதி. ராமகிருஷ்ண பரமஹம்சர் நாராயணகுரு ,வள்ளலார், வரை அதைக்கொண்டுவந்து சேர்க்கமுடியும்.
இந்த நிரையில் வருபவர் பசவர். இவர்கள் அனைவருக்கும் உரிய பொது அம்சங்கள்
அ. இந்துமதத்தின் சாதிய அடிப்படைக்கு எதிராக பக்தியால் மேன்மை என்பதை நிலைநிறுத்துவது
ஆ. தனிமனித மீட்பை முன்வைப்பது, ஆலயம்போன்ற பேரமைப்புகளை நிராகரிப்பது
இ. வேள்விமரபை நிராகரிப்பது. தூய பக்தியை, ஆலய வழிபாட்டை, நோன்புகளை முன்வைப்பது.
ஈ. கலைகளை, இலக்கியத்தை பக்திக்கான வழியாகக் கொள்வது.
பசவர் சைவப்பெருமதத்தைச் சார்ந்த , பக்தி இயக்க ஞானிகளில் ஒருவர். அனைத்து தத்துவங்களையும் வழிபாட்டுமுறைகளையும் சைவத்தின்பெயரால் இணைக்கமுற்பட்டவர். அனைத்து மக்களையும் சிவலிங்கம் அணிந்து நோன்புகள் நோற்று சைவர்களாக ஆக்கமுற்பட்டவர்.
இவர்கள் உருவாக்கிய அமைப்புக்கள் பல இன்றும் தொடர்கின்றன. பசவர் ஒர் அமைச்சராக,நிர்வாகியாக இருந்தமையால், அரச ஆதரவு இருந்தமையால் வலுவான அமைப்புக்களை உருவாக்கினார்.அவையே இன்றுள்ள பசவ-வீரசைவ மடங்கள். பசவர் தன் மக்களுக்கு கறாரான சில நெறிகளை வகுத்தளித்தார். அவற்றைக் கண்காணிக்கும் அதிகாரம் இந்த மடங்களுக்கு அளிக்கப்பட்டது. அவற்றுக்கு நிலமும் செல்வமும் சேர்ந்தது. பல கன்னட அரசுகள் பசவ மடங்களின் கட்டுப்பாட்டில் இருந்தன. நூற்றுக்கணக்கான ஆலயங்கள், கல்விநிலையங்கள் இன்று அவற்றின் ஆட்சியில் உள்ளன. இக்காரணத்தால் கர்நாடக சமூகவரலாற்றில் அவை ஆதிக்கம் செலுத்துகின்றன. செல்வம் காரணமாக இவை பலவாறாக உடைந்து ஏராளமான மடங்களாக ஆகியிருக்கின்றன. அவற்றுக்கிடையே பூசல்கள் நிகழ்கின்றன. அடிதடிகள் வரை. அவற்றில் நிகழும் ஊழல்கள், முறைகேடுகள் அன்றாடமென வெளிவந்துகொண்டிருக்கின்றன.
இவர்கள் நெடுநாட்களாக சிறுபான்மையினர் தகுதி கோருகிறார்கள். காரணம் அது அவர்களின் சொத்துக்களுக்கு சட்டபூர்வமான பாதுகாப்பு அளிக்கும். அவர்கள் நடத்தும் பலநூறு கல்விநிலையங்களை எந்த மையக்கட்டுப்பாடும் இல்லாமல் பணம்பண்ணும் நிறுவனங்களாக ஆக்கும். முன்னரே ராமகிருஷ்ண மடம் தங்களை தனிமதமாக அங்கீகரிக்கவேண்டும் என்று கோரியிருக்கிறது. சத்யநாராயணா மடம் அவ்வாறு கோரியிருக்கிறது. இது இந்தியாவின் புதிய அரசியல்போக்குகளில் ஒன்று. பசவமடங்களின் இக்கோரிக்கைவென்றால் இனி மேலும் பலகோரிக்கைகள் எழும்.
சிறுபான்மை தகுதி அளிக்கப்பட்டால் வீரசைவ மடங்களின் அதிகாரம் பெருகும். இன்று அரசியல்கூட்டு, பணம் காரணமாக அவை எதிர்க்கமுடியாத மாஃபியாக்களாக உள்ளன. மேலும் அவை வலுப்பெறவே இது வழிவகுக்கும். அவற்றை இப்படி வளர்த்துவிட்டது பாரதிய ஜனதா. இன்று காங்கிரஸ் கையிலெடுத்துள்ளது.
இந்த மடங்கள் சென்றகாலங்களில் சுதந்திர சிந்தனைக்கு எதிரான பெரும் அடிப்படைவாதச் சக்திகளாக நிலைகொண்டுள்ளன. நான் என் நண்பர் எச்.எஸ்.சிவப்பிரகாஷ் இந்த மடத்தைச்சேர்ந்தவர்களால் அடித்து தெருவில் இழுத்துச்செல்லப்பட்டு மடாதிபதி முன் மண்டியிட வைக்கப்பட்ட நிகழ்வினூடாகவே இவர்களைப்பற்றி கேள்விப்பட்டு மேலும் அறியமுற்பட்டேன். சிவப்பிரகாஷ் பசவரைப்பற்றி எழுதிய மகாசரித்ரா என்னும் நாடகம் பாடநூலாக வைக்கப்பட்டபோது இந்த பூசல் எழுந்தது. அதில் பசவரை மாபெரும் ஆன்மஞானியாக கருதும் சிவப்பிரகாஷ் மனிதராக அவர் எதிர்கொண்ட சிக்கல்களைப் பேசுகிறார். பசவரை கடவுளாக அன்றி எவர் பேசினாலும் பசவ வீரசைவர்கள் கொதித்தெழுவது வழக்கம்.
1919ல் சுபோதயா என்னும் இதழுக்கு எதிராக பசவ மடங்கள் நீதிமன்றம் சென்று தடைவாங்கின. அவ்விதழை தடைசெய்தன. அது இந்தியதேசிய இதழ். அதில் பசவமடங்கள் ஜமீன்தார்களைப்போல வரி வசூலிப்பதைப்பற்றிய ஒரு கட்டுரை வெளிவந்தது. பசவர் மற்றும் அல்லமா பிரபுவின் ஓவியங்கள் தாங்கள் சொல்லும்படி அதில் காட்டப்படவில்லை என்பதே மையமான எதிர்ப்பாக இருந்தது. 1934ல் மராத்தி இதழ் சகுலாவுக்கு எதிராக ஒரு கலவரத்தை பசவ மரபினர் உருவாக்கினர். அதே ஆண்டு கன்னடத்தின் புகழ்பெற்ற எழுத்தாளரான ஸ்ரீரங்க [இவருடைய முடிவில்லாததும் முதலில்லாததும் தமிழில் வந்துள்ளது] எழுதிய பிரபஞ்ச பானிப்பாட்டு என்னும் நாடகத்துக்காக அவர் மிரட்டப்பட்டார். நாடகம் நடைமுறையில் தடைசெய்யப்பட்டது.
சுதந்திரத்திற்குப்பின் 1952ல் பசவராஜ் கட்டிமானி எழுதிய ஜடராரி ஜகத்குரு என்னும் நாவலுக்கு எதிராக ஹூப்ளியில் உள்ள மூருசாவிரா மடத்தின் தலைவர் கிளர்ந்தெழுந்தார். அதில் வீரசைவ மடம் செய்யும் ஊழல் எழுதப்பட்டிருந்தது. நாவலின் பிரதிகள் எரிக்கப்பட்டன. ஆசிரியருக்கு கொலைமிரட்டல் விடுக்கப்பட்டது. அவர் தப்பியோடி தலைமறைவானார். 1958ல் ஞானபீடப் பரிசுபெற்ற மாஸ்தி வெங்கடேச அய்யங்காரின் சென்னபசவநாயக்கா என்னும் நாவல் [இவருடைய சிக்கவீர ராஜேந்திரன் ஒரு இந்திய பெரும்படைப்பு. தமிழில் கிடைக்கிறது. ] வீரசைவனாகிய குடகு அரசனை சரியாகச் சித்தரிக்கவில்லை என்பதனால் கடுமையாக எதிர்க்கப்பட்டது. தெருக்களில் போராட்டம் நடந்தது. அந்நாவலை மொழியாக்கம் செய்யவிருந்த இந்திய அரசு அத்திட்டத்தைக் கைவிட்டது. மாஸ்தி மன்னிப்பு கோரினார்.
சமீபத்தில் கொல்லப்ப்பட்ட எம்.எஸ்.கல்பூர்கி 1989ல் எழுதிய மார்கா என்னும் ஆய்வுநூலுக்காக பசவ- வீரசைவர்களின் கடுமையான எதிர்ப்ப்பைச் சந்தித்தார். பசவரின் சகோதரியான நாகலாம்பிகை ஒரு தாழ்ந்தசாதி இளைஞரை மணம்செய்தார் என அவர் சொன்னதே காரணம்.. ஆசிரியருக்கு கொலைமிரட்டல்கள் வந்தன. அவர் தலைமறைவானார். பின்னர் அவர் பகிரங்க மன்னிப்புகோரினார். 1984ல் எச்.எஸ்.சிவப்பிரகாஷ் எழுதிய மகாசரித்திரா பாடமாக வைக்கப்படும்வரை பெரிதாகக் கவனிக்கப்படவில்லை. 1994ல் அது பெரும் எதிர்ப்பை சந்தித்தது. சிவப்பிரகாஷ் கர்நாடகத்தில் வாழமுடியாத நிலை உருவாவனது.
1996ல் அரசு பசவரின் பசவதீப்தி என்னும் பாடல்தொகையை வெளியிட்டபோது அவற்றில் பின்னாளில் பசவமடங்களால் செயற்கையாகச் சேர்க்கப்பட்டவை என சில குறிப்புகளை, பசவரின் தன்னைப்பற்றிய குறிப்பு வடிவில் அமைந்தவை அவை, நீக்கியது. அதற்கு எதிர்ப்புகள் எழுந்து தெருக்களில் கலவரம் வெடித்தபோது அந்நூல்கள் தடைசெய்யப்பட்டன. 1995ல் பி.வி.நாராயணா எழுதிய தர்மகாரணா என்னும் நாவல் பசவரின் தங்கை அக்கநாகம்மாவை தாசி என்று சொன்னது என்று சொல்லி கடும் எதிர்ப்பு எழுந்தது. அந்நூலுக்கு அளிக்கப்பட்ட கன்னட சாகித்ய அக்காதமி விருது திரும்பப்பெறப்பட்டது. நாவல் தடைசெய்யப்பட்டது. ஆசிரியர் மன்னிப்பு கோரினார்.
இந்த விரிவான சித்திரத்தை நான் அளிப்பதற்கான காரணம் இதுவே, அரசியலில் சமூகச்சூழலில் இவர்களுக்குக்கிருக்கும் செல்வாக்கு, இவர்களின் வெறிகொண்ட போக்கு ஆகியவற்றைச் சுட்டிக்காட்ட. அதைவிட இத்தனைநூல்கள் இவர்களைப்பற்றி எழுதப்படுவதே இவர்களின் ஏகபோக நிலவுரிமையும் சுரண்டலும் இலக்கியத்தால் சுட்டிக்காட்டப்படவேண்டியவை என்பதனால்தான். இவர்கள் எதிர்ப்பதும் கருத்துக்களை கட்டுப்படுத்துவதும் இதனால்தான். காங்கிரஸ், பாரதியஜனதா, ஜனதாதள் உட்பட அனைத்து அரசியலியக்கங்களும் அவர்களுடன் ஒத்துழைக்கும் சூழலில் இலக்கியம் தனித்து நின்று போராடுகிறது, அதன் விளைவாக அது ஒடுக்கப்படுகிறது. இவர்கள் சிறுபான்மைத் தகுதி பெற்றால் இவர்களின் சுரண்டல் மற்றும் ஆதிக்கம் மீதான இலக்கியத்தின் விமர்சனம் சிறுபான்மையினர் மீதான தாக்குதலாக, கடுமையான குற்றமாக ஆகிவிடும். இவர்கள் நாடுவது அதையே
இந்த மடங்களைப் புரிந்துகொள்ள கன்னட சமூக யதார்த்தம் நோக்கிச் செல்லவேண்டும். தமிழகத்திலும் சைவ மடங்கள் இதே அளவு செல்வாக்குடன், செல்வத்துடன் இருந்தன. ஆனால் அவை அனைத்துமே மிகச்சிறுபான்மையினரான உயர்சாதிக்குரியவை. ஆகவே அவற்றின் ஆதிக்கம் எளிதில் அழிந்தது. ஆனால் பசவ- வீரசைவ மடங்கள் பெரும்பான்மையினராக இருக்கும் சாதிக்குரியவை. ஆகவே அவற்றை சமூகமாற்றம் தீண்டவில்லை. உதாரணமாக இங்கே தேவர்களுக்கு இதைப்போன்ற மடம் இருந்தால், பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் இருநூறாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்திருந்து, அவருடைய குருபூஜை மரபு ஒரு மதக்குழுவாக, மடமாக ஆகியிருந்தால் அரசியல் எதிர்ப்ப்பு எழ முடியுமா? நிலச்சீர்திருத்தம் உட்பட்ட மாற்றங்கள் அவற்றைப் பாதிக்குமா?
எல்லாவகையான முற்போக்கு –ஜனநாயகச் சிந்தனைகளுக்கும் எதிரானவை இந்த மடங்கள். இவற்றின் ஆதிக்கம் ஒழியாதவரை கன்னடச் சூழலில் இனி சமூக வளர்ச்சி சாத்தியமில்லை. ஆனால் இந்தப் பழைமைவாத அமைப்புகள் தங்களை அரசியலுக்குள் புகுத்திக்கொண்டு வெல்லமுடியாதவையாக ஆக்கிக்கொண்டிருக்கின்றன.
குறுமதம் பெருமதத்தை விட தன் மக்கள்மேல் நேரடியான ஆதிக்கம் செலுத்துவதாகவும், மாற்றுக்களை அனுமதிக்காததாகவும் இருக்கும். கூடவே அதற்குள் மேலும் குழுக்கள் உருவாகி கடுமையான அதிகாரப்போட்டி நிகழும். வன்முறை ஓயாது. சீக்கிய மதமே சிறந்த உதாரணம். பசவமடங்களின் ஆதிக்கம் எவரும் அறிந்தது. அவர்களுக்குள் பூசல்களும் மோதல்களும் ஓய்ந்த நாளே இல்லை. குரங்கு கையில் கொள்ளிக்கட்டை கொடுத்ததுபோல் அரசியல்வாதிகள் சிறுபான்மைத் தகுதியையும் அளிக்கநினைக்கிறார்கள்
எந்த முற்போக்கு சக்தியும் இதை எதிர்க்கவேண்டும். ஆனால் நேர்மாறாக அவர்கள் இதை ஆதரிக்கிறார்கள். இரண்டு காரணங்கள், ஒன்று இது இந்துமதத்தைப் பலவீனப்படுத்தும், காலப்போக்கில் இவர்கள் இந்துக்களுக்கு எதிராகத் திரும்புவார்கள் என நினைக்கிறார்கள். அது உண்மை, ஏனென்றால் சீக்கியமதம் இப்படித்தான் நூறாண்டுகளுக்கு முன் இந்துமதத்தில் இருந்து பிரிந்தது. தன் தனியடையாளத்தை தக்கவைத்துக்கொள்வதற்காக இந்துமதத்தை எதிர்த்தது. காலப்போக்கில் கடுமையான நேரடிப் போரும் பேரழிவும் உருவாகியது. இந்துமதத்தைவிட பழைமைவாதம் எழுந்து இந்துமதத்தை எதிர்த்தால் அந்தப்பழைமைவாதத்தை ஆதரிப்பவர்கள் நம்மூர் ‘முற்போக்காளர்கள்’
இன்னொன்று, இந்த நடவடிக்கையால் பாரதிய ஜனதா கட்சி கர்நாடகத்தில் வெல்லமுடியாது என்னும் எண்ணம். என்ன நடந்தாலும் அவர்கள் தோற்றால்போதும் என்னும் கட்சிகட்டல். பாரதியஜனதாவின் இயல்பான கூட்டாளிகளாக இதுவரை இருந்தவர்கள் பசவமடங்கள் என்பதை இவர்கள் மறந்துவிடுகிறார்கள். நாளையும் அவர்கள் ஒரே தரப்பாகவே செயல்படுவார்கள் என்பதையும். வேறுசிலவற்றைக்கோடுத்து எளிதில் அவர்களை இவர்கள் கையகப்படுத்திவிடமுடியும்.
யார் வென்றாலும் தோற்றாலும் நெடுங்காலநோக்கில் இது பிழையானது. அரசியலில் செல்வாக்கு செலுத்தி லாபம் அடைய மதநிறுவனங்கள் அனுமதிக்கப்படுவது ஜனநாயகப்படுகொலை மட்டுமே.தாலிபானியத்தை நோக்கிச் செல்லும் வழி அது.
ஜெ