அன்புள்ள ஜெ, அவர்களுக்கு வணக்கம். நலமா?
மொழி ஆளுமை குறித்து எனக்கு எப்பொழுதுமே ஒரு சந்தேகம் உண்டு. சில நூல் ஆசிரியர்கள் 50, 60 புத்தகங்கள் எழுதியிருப்பதாகக் கூறி படிக்கச் சொல்வார்கள். படித்தால் வெறும் குப்பையாக இருக்கும். வார்த்தை செறிவோ, கருத்து நுட்பமோ இல்லாமல், ’தினத்தந்தி’யின் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொன்ற மனைவியின் செய்தியை படிக்கும் தரத்திலேயே இருக்கும். சில நூல்கள் நல்ல கருத்துக்களையும் நுட்பமான விவரங்களையும் கொண்டிருக்கும். ஆனால் சொல் வளம் இருக்காது. வேறு சில புத்தகங்கள், ‘வீழ்ந்தால் விதையைப்போலவும் – எழுந்தால் மலையைப் போலவும்’ பாணியில், முரண்களையே அரண்களாக (?) மாற்றி எழுதும் கட்டுரைகளாகவே இருக்கும்.
அப்படியானால், ஒரு ஆசிரியரின் நூலில் விஞ்சி நிற்கவேண்டியது கருத்து வளமா? மொழி ஆளுமையா? நல்ல கருத்துக்கள் கூட வசவச எழுத்துக்களால் வீழ்ந்து விடுகிறது. நேர்த்தியான எழுத்து நடையும், உட்பொருளின் அடர்வின்மையால் மதிக்கப்படுவதில்லை. இந்த இரண்டும் என்ன அளவீடுகளில் கலக்க வேண்டும். ஏதாவது சதவிகிதக் கணக்குகள் உண்டா?
எம்.எஸ்.ராஜேந்திரன்,
திருவண்ணாமலை.
அன்புள்ள ராஜேந்திரன்,
மிக எளிமையான கேள்வி என முதலில் தோன்றியது. ஆனால் எண்ணிப்பார்க்கையில் மேலும் மேலும் சிக்கலாகிக் கொண்டே செல்கிறது. இதற்கு விதிகளையோ கோட்பாடுகளையோ சொல்லமுடியுமா என்று தெரியவில்லை. நம் வாசிப்பை வைத்துச் சில புரிதல்களை நமக்கென வகுக்கமுடியும் என்று மட்டுமே தோன்றுகிறது
என் வாசிப்பின்படி மொழி என்பதும் சிந்தனை என்பதும் வேறுவேறல்ல. சிந்தனை மொழியை கூர்மையாக்குகிறது. மொழியில் பயில்தல் சிந்தனையை தெளிவாக்குகிறது. கூரிய சுயசிந்தனையும் வளவளப்பான மொழியும் கொண்ட எந்த எழுத்தாளரையும் நான் இன்றுவரை வாசித்ததில்லை. திறனற்ற மொழியில் ஆழ்ந்த கருத்துக்கள் இருக்குமென்றால் அவை அவருடையன அல்ல. வேறெங்கிருந்தோ எடுத்துக்கொண்டவை, அவற்றை அங்குசென்று வாசிப்பதே மேலும் நம்பகமானது
பயனுள்ள எழுத்து ஆனால் திறனற்ற நடை என்பது ஒரே ஒரு தளத்தில்தான் ஏற்றுக்கொள்ளத் தக்கது. சிந்தனை சாராத தளங்களில் செயல்பட்டவர்களின் அனுபவக்குறிப்புகள். உதாரணமாக ஒரு மாலுமியின் உலகப்பயண அனுபவங்கள். அவை திறனற்ற மொழியில் எழுதப்பட்டிருக்கலாம், அவ்வனுபவங்களுக்காக நாம் அவற்றை வாசிக்கலாம்.
அதேபோல உள்ளீடற்ற அழகிய மொழிநடை என எதுவும் என் வாசிப்புக்குப் பட்டதில்லை. அப்படிச் சொல்லப்படுவன வெறும் அணிகளாகவே இருக்கும். அவற்றில் எனக்கு ஆர்வமில்லை. மொழி என்பது அதன் உள்ளீடின் வழியாகவே செயல்படுவது என்பதனால் வெறும் அணி என்பது பெரும்பாலும் தேய்வழக்குகளைக் கோத்துவைக்கும் பயனற்ற முயற்சியாகவே இருக்கும்.
எழுதுவதற்குப் பயிற்சி தேவை. ஆனால் எழுதுவதே அப்பயிற்சி. எழுதிப் பயிற்சியில்லாதவர்கள் எனக்கு அனுப்பும் கடிதங்கள் ஒவ்வொருநாளும் வருகின்றன. அவற்றை சிறிதளவு செம்மைசெய்து வெளியிடுகிறேன்ஆனால் ஒருசில கடிதங்களுக்குள் அவர்களின் மொழி சீரடைந்துவிடுவதைக் காண்கிறேன். உள்ளீடற்ற அழகிய நடையோ அல்லது செறிவான உள்ளீடுடன் மோசமான நடையோ கொண்ட எவையேனும் அவற்றில் உள்ளனவா? சொல்வதற்கேதேனும் இருந்தால் அதற்கேற்ற மொழி அமைந்துவருவதையே காண்கிறோம். அந்த இசைவையே அழகு என்றும் கொள்கிறோம்.
எழுதும் பயிற்சி என்பது தன் அகமொழியுடன் புறமொழியை கூடுமானவரை இணைப்பதே. அது தொடர்ச்சியாகச் செய்து அடையப்படவேண்டியது. அதுவே அந்த ஆசிரியரின் தனிநடை. ஐம்பது நூல் எழுதியும் ஒருவர் அதை அடையவில்லை என்றால் பிரச்சினை அவருடைய மொழியில் இல்லை. அவர் உளம் அளித்து எழுதவில்லை, எழுத்தினூடாக தான் வளரவில்லை.
எழுத்து எழுதுவதனூடாக மேம்பட்டபடியே இருப்பது. தேய்வழக்குகளைத் தவிர்ப்பது, வீண்விரிவைச் செதுக்குவது, குறைபடக்கூறலை முழுமையாக்குவது என எழுத்தாளன் தன் மொழியில் பயின்றபடியே இருக்கிறான். ஆகவே சொல்வதற்கு உள்ளடக்கம் உடைய ஒருவனிடம் திறனற்ற நடை அமைய வாய்ப்பே இல்லை
ஆனால் பலவகையான நடைகள் உண்டு. அனைத்துக்கும் பொதுவான அளவுகோல் ஏதுமில்லை. நல்ல நடை என்பது அதற்குரிய அளவுகோல்களின்படியே மதிப்பிடப்படவேண்டும். ஏனென்றால் பலசமயம் இங்குள்ள பொதுவாசகர்கள், கேளிக்கை எழுத்துக்களில் பழகியவர்கள் அவர்களுக்குப் பிடிகிடைக்கும், அவர்கள் பழகிய நடையிலேயே அனைத்தும் இருக்கவேண்டுமென எதிர்பார்க்கிறார்கள். இல்லையென்றால் நடையைக் குறைசொல்கிறார்கள்
‘அனைவருக்குமான’ நூல்களை எழுதுபவர்கள் சூழலில் புழங்கும் பொதுநடையை நோக்கித் தங்களை கொண்டுசெல்வார்கள். அது வெளிநோக்கிய நகர்வு. இலக்கியப் படைப்பாளிகள் தங்கள் அகத்தே புழங்கும் தனிமொழி நோக்கி நடையைக் கொண்டுசெல்வார்கள். அகம்நோக்கிய நகர்வு அது. அந்த நடை சிக்கலாக ஆகலாம். பூடகமானதாக வெளிப்படலாம். அவருக்கே உரிய பிழைகள் அதில் திகழலாம். அவர் தேடும் ஒலியும் உட்குறிப்பும் கொண்டிருக்கலாம். ஆனால் அது அவ்வெழுத்தாளரின் கைரேகை போல முற்றிலும் அவருடையது.
கருத்துக்களைச் சொல்லும் நடைக்கும் இப்பிரிவினை உண்டு. பொதுவாசகனுக்காக எழுதப்படுபவை சூழலில் புழங்கும் பொதுவான நடையில் இருக்கும். செய்திநடை, ஊடகநடை, பேச்சுநடை அது. வரையறுக்கப்பட்ட அறிவுத்தளங்களுக்காக எழுதப்படும் கட்டுரைகள் அதற்கென தனிநடை கொண்டிருக்கும். அவற்றை வாசிப்பவன் அதற்கான பயிற்சியைக் கொண்டிருக்கவேண்டும். அவ்வாறு சட்டத்திற்கான நடை, பொறியியலுக்கான நடை என தனித்தனியே உள்ளன. அதைப்போன்றே இலக்கியத்திறனாய்வுக்கும், தத்துவச் சொல்லாடலுக்கும் அதற்குரிய நடைகள் உள்ளன
அத்தளத்தின் கலைச்சொற்களை அறிந்திருத்தல், அங்கே அதுவரை நிகழ்ந்தவற்றின் தொடர்ச்சியை அறிந்திருத்தல், அங்கு நிகழும் சொல்லாடல்களனை அறிந்திருத்தல் என மூன்று தளம் கொண்டது அப்பயிற்சி. அதை அடையாமல் பொதுவாசகன் ஒருவன் அந்த நடையை வாசிக்கப்புகுந்து சிக்கலான நடை என்று குறைகூறுவதில் பொருளில்லை.
எது நல்ல நடை என அந்த எழுத்தின் வகைமை, அது செயல்படும் தளம் சார்ந்தே வரையறுக்கமுடியும். உதாரணமாக சுஜாதாவின் நடையில் ஒர் இலக்கியவிமர்சனக் கட்டுரை எழுதப்பட்டிருந்தால் நான் அதை வளவளநடை, திறனற்றது என்றே சொல்வேன். அதே நடையில் ஒரு வார இதழின் பொதுவான பத்தி எழுதப்பட்டிருந்தால் ரசிப்பேன். ஓவியத்தை திறனாய்வு செய்யும் நடையில் அரசியல் கட்டுரை அமைய முடியாது. சில தளங்களில் செறிவே அளவுகோல். சில தளங்களில் ஒழுக்கு. பேசுபொருளே அதை வகுக்கிறது.
நல்ல நடை வேறு நல்ல உள்ளடக்கம் வேறு அல்ல. மீண்டும் மீண்டும் அதுவே எனக்குத் தோன்றுகிறது. மாறான ஓர் எடுத்துக்காட்டுகூட தோன்றவில்லை
ஜெ
***