ஒருமுறை அசோகமித்திரனிடம் கேட்ட கேள்வி : உங்கள் கதைகளிலே எதில் பெண்ணை பற்றி சிறப்பாக எழுதியுள்ளதாக நினைக்கிறீர்கள் ?
பதில் – இனி வேண்டியதில்லை என்ற சிறுகதை.
பிறகு லைப்ரரியில் தேடி இந்த சிறுகதையை வாசித்தேன். எப்படி இந்த கதையை பற்றி யாரும் இதுவரை எழுதவே இல்லை என்று நொந்துக்கொண்டேன். மிக அருமையான கதை. வழக்கமான அசோகமித்திரன் ஸ்டைல் இதிலும் இருக்கிறது. ஒரு கதையுனூடகவே நிகழும் நிகழ்வுகளை சொல்லும் போது பிறிதொன்று மேலெழும்பி நிற்கும் கதை தான். இதில் பெண்ணின் ஆதியியல்பை பற்றி நறுக்கு தெரித்த மாதிரி விளக்குகிறார்.
பனிக்குடம் போல பெண்ணின் நம்பிக்கைகள் உடையும் புள்ளியை கொண்டு வந்து சேர்க்கும் விதம் அற்புதம். பெண் என்பவளின் பொறுமை எவ்வளவு ஆழமானது என்பதையும் அதன் உச்சத்தில் ஒரு breaking point வரும் என்பதையும் எந்தவித பிசிறும் இல்லாமல் தெளிந்த நீரோடையாக எழுதியுள்ளார். வாழ்க்கையை எவ்வளவு நுட்பமாக அதிலும் ஆண் பெண் உறவுகளை எவ்வளவு நுட்பமாக கவனித்திருந்தால் இதை எழுத முடிந்திருக்கும்.
அசோகமித்திரனின் இந்த கதையை சுருக்கமாக சொல்ல முயற்சிக்கிறேன். கதாபாத்திரங்களின் பெயர்கள் நினைவில்லை. ஆண், பெண். இருவரும் சினிமா சம்பந்தப்பட்ட படிப்பு முடிந்ததும் சினிமாவில் வாய்ப்பு தேடி அலையும் வர்க்கத்தினர். இதில் ஆணை விட பெண் நன்றாக நடிக்க தெரிந்தவர். ஆணும் குறைச்சல் இல்லை. அவனுக்காக எதையும் செய்யும் பேரன்புக்காரி. வீடு, சுற்றம் என்ற எல்லாவற்றையும் அவனுக்காக புறந்தள்ளக்கூடியவள். அவளிடம் காசு இல்லை என்றாலும் எப்போதுமே அவனுக்கு சாப்பாடு, துணி எல்லாம் வாங்கித் தருவாள். அவனுக்கு அதைப்பற்றி எதிலும் ஈடுபாடு கிடையாது. அவனுக்கு சினிமா மட்டும் குறி. ஒருநாளும் செலவு செய்ததும் கிடையாது. அவள் அதற்காக எவ்வளவு தியாகம் செய்கிறாள் என்ற பிரக்ஞை கூட இல்லை அவனுக்கு. ஒரு புதிய இயக்குநரிடம் கால்சீட் கேட்டு அவள் அவனை அங்கு கூட்டி செல்வாள். அந்த இயக்குநருக்கு அவனை விட அவளையே பிடித்திருந்தது. அவளையே நடிக்க வேண்டும் என்று வற்புறுத்தினார். ஆனால் அவள்,” நான் நடிக்க விரும்பவில்லை. இவருக்கு வாய்ப்பு கேட்டுத் தான் வந்தேன்”என்று சொல்லுவாள். அந்த இயக்குனர் அவளை நடிக்க வைக்க வேண்டும் என்றே குறியாக இருந்து விடுவார். பின்னர் அங்கிருந்து இருவரும் கிளம்பி விடுவார்கள்.
அவனுக்கு பெருத்த ஏமாற்றம். கோவம். அவளை திட்டி தீர்த்து விடுகிறான். அவளும் நாய்க் குட்டி போல பின்னாலயே போகிறாள். பின்னர் நடக்கும் நிகழ்வுகளை படித்து தெரிந்து கொள்ளுங்கள். இறுதியில் அவளது நம்பிக்கை எனும் பனிக்குடம் எப்படி உடைகிறதென்று வரும்.
இதே கருவில் ஒரு மலையாள படத்தினை பார்த்து அதிர்ந்து போயிருந்தேன். அது ஷியமாப் பிரசாத் இயக்கத்தில் வெளிவந்த Artist (2013) மலையாள திரைப்படம். இது மேலோட்டமாக பார்த்தால் ஒரு ஓவியரின் கதையைப் போல தெரியும். ஆனால் அதன் சாரம் அது அல்ல. அசோகமித்திரன் “ இனி வேண்டியதில்லை” என்ற சிறுகதையின் நீட்சி தான் இந்த படம். அந்தச் சிறுகதையில் சினிமா வாய்ப்பு தேடி அலைபவர்கள் இங்கு ஓவியர்களாக சுற்றுவார்கள். முதலில் இந்த படமே ஒரு நாவலின் தழுவல். அந்த நாவலின் பெயர் Dreams in Prussian Blue. இதை Paritosh Uttam எழுதியிருக்கிறார். எனக்கு பெருத்த சந்தேகம் எழுந்துள்ளது. நிச்சயமாக இது அசோகமித்திரன் கதையைப் போலவேதான் இருக்கிறது. கரு மட்டுமல்ல அதன் முடிவும் அதை வெளிப்படுத்திய விதமும் ஒன்றாக தெரிகிறது எனக்கு.
ஏற்கனவே நண்பர்களிடத்திலும் பேஸ்புக்கிலும் சொன்னது தான். யாரும் இதை பெரிதாக கண்டுக் கொள்ளாதது வருத்தமாகவே இருந்தது. அசோகமித்திரன் எனும் மாபெரும் கலைஞனை இந்த மானிட சமூகத்திற்கு கிடைத்த அற்புதம் என்பதை உலகிற்கு காட்சிப்படுத்துவதை விடவா நமக்கு பெரிய வேலைகள் இருந்துவிடப் போகிறது.
தினேஷ் ராஜேஸ்வரி
அன்புள்ள தினேஷ்,
இனிவேண்டியதில்லை அசோகமித்திரன் அவர் கதைகளில் இருக்கவேண்டும் என விரும்பிய அன்றாட யதார்த்தமும், அமைதியும் கொண்ட நல்லகதை. ஆனால் என் நோக்கில் அவருடைய மிகச்சிறந்த கதைகளில் ஒன்றல்ல. அக்கதையில் ஒர் யதார்த்தச் சூழலும் நம்பகமான கதைமாந்தர்களும் உள்ளனர். ஆனால் கலை என்பது அன்றாடம் அல்ல. அதற்கப்பால் செல்லும் ஒன்று அதில் நிகழவில்லை.
அத்துடன் அந்தக்கரு புதியதுமல்ல. அதற்கு முன்னரே ஐரோப்பிய இலக்கியத்தில் பலவாறாக எழுதப்பட்டது அது. ஜார்ஜ் பெர்னாட் ஷாவின் புகழ்பெற்ற பிக்மேலியன் நாடகத்தின் கருவும் தோராயமாக இதுவே. அசோகமித்திரனே இதேபோன்ற கருவுடன் இன்னொரு கதை எழுதியிருக்கிறார், ’இன்றைக்கு மட்டும்’ என்று தலைப்பு என நினைக்கிறேன்.அதில் கலைஞனாகிய ஆணின் அந்தரங்கமான ஆக்ரமிப்புத்தன்மை வெளிப்பட்டிருக்கும். அந்தக்கதையின் இன்னொருவடிவமே இது.
ஒரு பெண்ணை கலைஞராக ஆக்கும் ஆண்,கலையினூடாக அவர்களின் உறவு, சந்தர்ப்பங்கள் வழியாக அவள் அவனைக் கடந்துசெல்வது, அவர்களுக்குள்ளான உறவின் சிக்கல் என பொதுவாகச் சொல்லலாம். தொடர்ந்து திரும்பத்திரும்ப வெவ்வேறு முடிவுகளுடன் வெவ்வேறு சூழல்களில் இந்தக்கதை ஐரோப்பிய இலக்கியத்தில் எழுதப்பட்டுள்ளது. பெண்ணின் பார்வையில், கலைஞனின் பார்வையில். பெண்ணை கலைஞராக ஆணை காதலனாகக் காட்டுவது. ஆணைக் கலைஞனாக பெண்ணை வெறும்பெண்ணாகக் காட்டுவது, இப்படி.
பொதுவாக கலைஞனும் பெண்ணும் என்னும் கருவில் எழுதப்பட்ட படைப்புகளின் பெருந்தொகை மேற்கே உள்ளது. அதன் எல்லா சாத்தியங்களும் ஆராயப்பட்டுவிட்டன. என் பார்வையில் அவற்றில் ஆகப்பழையதான ஆஸ்கார் வைல்டின் The Picture of Dorian Gray தான் ஆகச்சிறந்தது.
சில கருக்கள் உலகளாவியவை. தன் படைப்புமேல் தானே காதல்கொள்ளும் பிக்மேலியன் என்னும் தொன்மம் கிரேக்க மரபில் உள்ளது. சிற்பத்தின்மேல் காதல்கொள்ளும் சிற்பி, பொற்கொல்லன், நெசவாளி ஆகியோருடைய கதை நம் மரபிலும் உள்ளது. [ சிற்பத்தைப் படைத்த சிற்பி அதன் தந்தை, நகை செய்து அளித்த பொற்கொல்லன் சகோதரன், புடவைகொடுத்தவனாகிய நெசவாளியே அச்சிற்பத்தின் கணவன் என்பது கதையின் முடிவு]
இப்படி ஒரு ஆழ்படிமம் சமூகமனதில் கிடக்கும்போது அது நவீன இலக்கியமாக எழுந்தபடியேதான் இருக்கும். வெவ்வேறு வடிவில், வெவ்வேறு நிலைகளில். அதில் ஆசிரியர் அளிக்கும் மேலதிகப் பங்களிப்பு என்ன என்பதே முக்கியம். அந்தக்கரு இன்னொருவரால் எடுத்தாளப்படுவதை திருட்டு,நகல் என்று சொல்லக்கூடாது. அப்படிச் சொல்லப்போனால் அசோகமித்திரனுக்கு முன்னால் இதேகருவை ஏறத்தாழ இப்படியே எழுதிய இருபத்தைந்து பேரையாவது நான் சுட்டிக்காட்டமுடியும். அவர்களிடமிருந்து அசோகமித்திரன் திருடியதாக கொள்ளவேண்டியிருக்கும்.
இதைப்போன்ற ஆச்சரியமூட்டும் ஒற்றுமைகள் பொதுவாக இலக்கியப்படைப்புகளுக்கு உண்டு ஜேம்ஸ் தர்பரின் The secret life of Walter Mitty புதுமைப்பித்தனின் சுப்பையா பிள்ளையின் காதல்கள்’ கதையை நினைவூட்டும். தலைப்பே கூட. ஜேம்ஸ் தர்பரின் கதை 1939ல் வெளிவந்தது. புதுமைப்பித்தனின் கதை 1937 என நினைக்கிறேன். பொதுவான அம்சம் ஒரே ஒரு புள்ளிதான். அது வாழ்க்கையில் இருந்து நேரடியாக இருவருக்கும் கிடைத்தது.
அசோகமித்திரனின் பங்களிப்பு என்பது இக்கதையில் அந்தப்பெண் அவனுடைய ஆணவம் புண்பட்டதை உணர்ந்து பின்னால் வந்து கெஞ்சுவதுதான். அவளுடைய ஆணவம் எதுவரை தழைந்துவரும், எங்கு அவள் விட்டுச்செல்வாள் என்னும் வினாவுடன் அக்கதை முடிந்திருப்பதுதான். அவளை உருவாக்கிய அவன் எங்கே அவளை முற்றாகக் கைவிடுவான் என்பது மேலும் செல்லும்போது சிக்கும் வினா.
ஜெ