வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-9

wild-west-clipart-rodeo-31தன்னிலை அறிந்து மீண்டபோது கர்ணன் தரையில் அந்த வளைகோட்டுக்கு  மேலேயே கிடந்தான். அவன் கொண்ட அரைமயக்கில் அவன் மேலிருந்து எடைமிக்க உடற்சுருட்களை மெல்ல அகற்றியபடி கார்க்கோடகன் ஒழிந்துசெல்வது தெரிந்தது. இடமுணர்ந்ததும் திடுக்கிட்டு கையூன்றி எழுந்து அமர்ந்தான். “யாதவரே, என்ன ஆயிற்று?” என்றான். அப்போதுதான் தன் உடல் இடைக்குக் கீழே அந்த மண்தரைக்குள் இருப்பதை அறிந்தான். அடியறியா நீருக்குள் என அவன் கால்கள் தவித்துத் துழாவின. எழ முயலுந்தோறும் மூழ்கினான். கைகளை நீட்டி “யாதவரே, என்னை மீட்டெடுங்கள்” என்றான்.

“நீர் முழுமையாக மீளவில்லை, அங்கரே. இன்னுமொரு வாய்ப்புள்ளது தெரிவுக்கு. எழுவதையோ மீள்வதையோ எண்ணி முடிவெடுங்கள்” என்று இளைய யாதவர் சொன்னார். “நான் மீள்கிறேன், பிறிதொன்றில்லை. மீள்கிறேன்” என்றான் கர்ணன். “மீண்டெழுந்தால் நிகழ்வதென்ன என்று அறிவீரா?” என்றார் இளைய யாதவர். “எதுவாயினும்… எதுவாயினும் மீள்கிறேன்” என்று கர்ணன் கூவினான். “ஒரு கணம் இதை நோக்குக!” என்று இளைய யாதவர் எதிர்ச்சுவரை காட்டினார். அங்கே ஒளி விரிய கர்ணன் அதிலெழுந்த காட்சிகளை மெய்யெனக் கண்டான். உளம்சென்றதும் உடலும் செல்ல அதற்குள் புகுந்து அதை வாழலானான்.

பெரும்போர்க்களத்தை அவன் கண்டான். அதில் தன் மைந்தர்கள் தலையற்று விழுந்து கிடந்து உடல் துள்ளுவதை, வெட்டுப்பரப்பிலிருந்து செங்குருதி நுரைக்குமிழி வெடிக்க எழுவதை, உருண்ட தலையில் விழிகளின் வெறிப்பை, பல்தெரிய நகைப்போ எனக் காட்டிய வாயை கண்டு உடல்விதிர்க்க நின்றான். செயலற்றதென இடக்கால் அதிர்ந்துகொண்டிருக்க இழுத்தபடி நடந்தான். அறிந்த அனைவரும் வெட்டுண்டும் தலையுடைந்தும் இறந்துகிடப்பதை கண்டான்.

பின் மிக அருகிலென அர்ஜுனனின் உடலை கண்டான். அம்பு துளைத்த காயங்களிலிருந்து குருதி வழிய இடக்கால் இழுபட்டு அதிர்ந்துகொண்டிருக்க கைகள் மண்ணை அள்ளி அதிர அவன் தேரிலிருந்து விழுந்துகிடந்தான். “இளையோனே…” என்று அலறியபடி அவன் அருகே சென்றான். இறந்துகிடந்த அர்ஜுனனின் உதடுகள் அசைந்தன. விழிகள் நிலைத்திருக்க “மூத்தவரே, நீங்கள் என்னை கொன்றீர்கள்” என்றான். “நான் எண்ணவில்லை இளையோனே, நீ நான்… நான் என்னை கொன்றேன்” என்றான்.

நாகவாளி தொட்ட நஞ்சு அர்ஜுனன் உடலை கருகவைத்துக்கொண்டிருந்தது. இமைக்கதுப்புகள் எரிந்த கரியென்றாயின. உதடுகள் கருகின. உடல் அனலில் இலை என உலர்ந்து வற்றத்தொடங்கியது. “இளையோனே, நான் எண்ணவில்லை… இளையோனே, நான் என்றும் உன்னையே நான் என்று உணர்ந்தவன். இளையோனே…” என்று கர்ணன் நெஞ்சிலறைந்து கூவினான்.

தொலைவிலிருந்து குந்தி கைவீசி கதறியபடி மேலாடை அவிழ்ந்து விழ வறுமுலைகள் தொங்கியாட ஓடிவருவதை கண்டான். அவள் தன்னை கொல்லப்போகிறாள் என்று அஞ்சி நடுங்கிய உடலுடன் எழுந்து நின்றான். அவள் அவனைக் கடந்து ஓடி தரையில் கிடந்த பேருடலை அள்ளி நெஞ்சோடணைத்துக்கொண்டு தலையை அறைந்து “மைந்தா! என் இறையே! இனி எனக்கு தெய்வங்களும் இல்லையே!” என்று கதறியழுதாள்.

பீமனின் பெருங்கரங்கள் துணிக்கப்பட்டு இரு அடிமரங்கள் என அருகே கிடந்தன. அப்பால் அவன் கதை குருதியில் மூடி உருண்டு கிடந்தது. அவன் முகத்தை முத்தமிட்டபடி குந்தி விலங்குபோல் ஒலியெழுப்பி கதறினாள். அவன் கால்கள் உயிரிழந்திருந்தன. உடல் எடைமிக்க கற்சிலை நிலையழிந்ததுபோல் தள்ளாடியது.

அப்பால் நகுலனையும் சகதேவனையும் கண்டான். அருகருகே நிழலும் உருவும் என அவர்கள் தலையறுந்து கிடந்தனர். அவன் விழுந்தும் எழுந்தும் நடந்தான். நான்கு நரிகள் ஒரு தலையை கடித்து இழுத்துச்செல்லக்கண்டு கைதூக்கி விரட்டினான். அவற்றிலொன்று அத்தலையை விட்டுவிட்டு அவனை நோக்கி பல்காட்டிச் சீறியது. அந்தத் தலை அணிந்த குண்டலங்களில் இருந்து அது யுதிஷ்டிரன் என்று உணர்ந்தான்.

அலறியபடி மயங்கி விழுந்து மீண்டும் உணர்வடைந்தபோது அவன் தலைக்குமேல் துரியோதனன் குனிந்து நின்றிருந்தான். “வென்றோம், அங்கரே… நாம் வென்றோம்.” கர்ணன் “ஆம்” என்றான். “உங்கள் வில்திறனால் வென்றோம்… என் கொடிவழியில் ஒரு மைந்தன் அரசாள்வான்.” கர்ணன் “ஏன்?” என்றான். “என்னை தொடையறைந்து கொன்றான் பீமன். என் இளையோனை நெஞ்சுபிளந்து குருதியுண்டான். என் நூற்றுவர்தம்பியரையும் தலையுடைத்து சிதறடித்தான்.”

கர்ணன் கையூன்றி எழுந்தான். “அதோ, அங்கே” என்று துரியோதனன் சுட்டிக்காட்டினான். துச்சாதனனின் உடல் திறந்து விரிந்திருக்க நாய்கள் குடலை கடித்திழுத்தன. அப்பகுதியெங்கும் கௌரவர்களின் உடைந்த தலைகள் மூளைநெய் சிதற பரவிக்கிடந்தன. “வருக, என் சுனையருகே வருக!” என்றான் துரியோதனன். “இல்லை… இல்லை” என்று கர்ணன் தள்ளாடினான்.

அப்பால் உடைந்த தேர் அருகே கிடந்த உடலை உடனே அடையாளம் கண்டான். “ஆ!” என அவன் அலற துரியோதனன் “ஆம், அது நீங்கள். உங்களை அவன் கொன்றான்…” என்றான். “எஞ்சியதென்ன? இளையோனே, எஞ்சியதென்ன?” என்று கர்ணன் கேட்டான். “வெற்றி…” என்று துரியோதனன் புன்னகைத்தான். “ஆம், ஆனால் தோல்வியும் நமதல்லவா?” என்றான் கர்ணன். துரியோதனன் “ஆம், அனைத்தும் நமதே…” என்றான்.

கர்ணன் “இவையெல்லாம் என்ன? எவரிடம் கேட்பது? இதற்கெல்லாம் என்ன பொருள்?” என்று தளர்ந்த குரலில் கூவியபடி களத்தில் அமர்ந்தான். அருகே கிடந்த உடல் ஒன்று விழிதிறந்து “அவர் மட்டுமே அறிவார்” என்றது. துரியோதனன் “ஆம், அவர் மட்டுமே அறிவார்” என்றான். கர்ணன் “யாதவரே! யாதவரே!” என்று கூவினான். “எங்கிருக்கிறீர்? யாதவரே!” மிக அப்பாலென அவர் குரல் கேட்டது “மிக அருகில்… இங்குதான்.” அவன் தன்னை உந்தி எழுப்பிக்கொண்டு தொலைவை நோக்கினான். “அருகேதான், அங்கரே” என்றார் இளைய யாதவர்.

கர்ணன் தன்னை மீண்டும் உணர்ந்து “ஆம், இதையே நான் தெரிவுசெய்கிறேன்” என்றான். “ஐயமின்றி என்றால் உங்கள் உடல் மீண்டு இங்கு வந்திருக்கும்” என்றார் இளைய யாதவர். கர்ணன் தன் கால்களை நோக்க அவை தரைமேல் கிடந்தன. எழுந்து அமர்ந்து “இதென்ன உளமயக்காடல்? என்ன செய்கிறீர்?” என்றான். “வாழ்ந்தறிவதே உலகமெய்மை எனப்படும்” என்றார் இளைய யாதவர். “ஆம் நான் வாழ்ந்தேன். விழியிமைக்கணம். ஆனால் காலப்பெருக்கு” என்றான் கர்ணன். “பெருவிசைகொண்ட பெருக்குகள் சுழிகளே” என்றார் இளைய யாதவர்.

கர்ணன் கால்மடித்து அமர்ந்துகொண்டு தலையை தாழ்த்தினான். பெருமூச்சுகள் அவன் நெஞ்சை உலைத்தபடி எழுந்தன. இளைய யாதவர் அவன் முகத்தை நோக்கியபடி புன்னகை மாறா முகத்துடன் சொல்லலானார். மிக அண்மையில் செவிக்குள் என அவர் சொற்கள் ஒலிக்க அவன் கைகளைக் கோத்தபடி கேட்டிருந்தான்.

wild-west-clipart-rodeo-31அங்கரே, எளியோருக்கும் பெரியோருக்கும் இல்லை இந்த அகக்குழப்பம். நீங்கள் எளியோர் என துயர் கொள்கிறீர்கள். அறிந்தோர் போல் பேசுகிறீர்கள். அறிக, துயரின்மையே மெய்மை எனப்படும். இறந்தவர்க்கோ இருப்பவர்க்கோ துயர்கொள்ளார் அறிவர்.

ஒருநோக்கில் ஒருதருணத்தில் ஒருவருக்கென நிகழ்வது மெய்யல்ல என்று உணர்க. அனைத்துநோக்கில் காலப்பெருக்கில் எவருக்குமென நிகழ்வதே மெய்மை. ஒருவர் அதை அறிந்துணர வழி ஒன்றே. அறிந்தவற்றை தொகுத்தல். முரண்கொள்வனவற்றை இணைத்தல். ஒன்றென்றாக்கி மேலேறிச்செல்லுதல். இணைப்பறிவே யோகம் எனப்படும்.

தனக்கென ஒருவர் அறிவதும் அனைவருக்கென அனைவரும் அறிவதும் ஒன்றென்று அமையும் நிலையே யோகம். இணைத்தறிக! தனித்திருந்தறிக! யோகம் எதிரெதிர் நிற்கும் இருமுனையிலும் ஒன்றே நிலைகொள்வது.

யோகமென்று அறிந்தவை மட்டுமே மெய்யென்று அமையும். ஆகவே அங்கரே, யோகம் புரிக. யோகத்தமைக. யோகமில்லாதவருக்கு மெய்மையும் உளமேன்மையும் இல்லை. அமைதியும் மகிழ்வும் அவரிடம் அமைவதில்லை.

ஒவ்வொன்றும் வகுக்கப்பட்டே மானுடனுக்கு அளிக்கப்பட்டுள்ளன. ஏனென்றால் அவன் உடல் வடிவம் வகுக்கப்பட்டுள்ளது. அவன் உள்ளமும் எல்லை வகுக்கப்பட்டது. அவனுக்கான களமும் வாய்ப்புகளும் மட்டும் வகுக்கப்படாதமையவேண்டும் என்று எப்படி கோரமுடியும்?

வகுக்கப்பட்ட களத்தையே சாமானியம் என்றனர். அங்கே நிகழும் எல்லைக்குட்பட்ட மெய்மையை சாமானிய ஞானம் என்றனர். அது உங்களுக்கு மட்டுமே உரியது. உங்கள் கிணற்றில் ஊறும் கடல். துளியும் கடலே.

வகுக்கப்படாத வெளியில் திகழ்வது விசேஷ ஞானம். முடிவிலியில் நீள்வது அது. இயல்வெளியும் தனிவெளியும் என இவை அறியப்படுகின்றன. இயல்வெளியில் திரள்வது தனிவெளி. தனிவெளியின் மெய்மையின் ஒரு துளித்தோற்றமே இயல்வெளியின் உண்மை.

இயல்உலகின் வினாக்களுக்கு தனிமெய்மையை விடையெனக் கொண்டு இங்கு பேசினீர்கள். அலகிலா தனிமெய்மையை உங்களுக்கான இயலுண்மை என மயங்கியதே உங்கள் முதற்பிழை. அறிக, மெய்யறிதலில் முதற்பிழை நிகழ்ந்தால் வாயில்கள் அங்கேயே மூடிவிடுகின்றன. பிறகெப்போதும் அவை திறப்பதே இல்லை.

உங்களுக்கு வகுக்கப்பட்ட களம் உங்களுக்கான வாய்ப்பென்று கொள்க. உங்களுக்கு  அளிக்கப்பட்ட ஆற்றலும் அந்த எல்லைக்குட்பட்டதே. அவ்விரண்டும் முரண்கொண்டு முடைந்துகொண்டு மட்டுமே உங்கள் வாழ்க்கையை உருவாக்க முடியும். உங்கள் எல்லைக்குட்பட்ட ஆற்றல்களுடன் எல்லையின்மை முன் எப்படி நிற்பீர்கள்? கடுவெளிமுன் நறுமணம் என கரைந்தழிவீர்கள்.

உடலால், உள்ளத்திறனால், பிறப்பால், சூழலால் வகுக்கப்படாது இங்கு வரும் மானுடர் எவருமில்லை. தனக்கு அளிக்கப்பட்ட அனைத்தையும் திரட்டி உச்சமென வெளிப்பட்டு தன் களத்தில் நின்றாடுபவன் நிறைவடைகிறான். அவனுக்கு இங்கே வெற்றியும் தோல்வியுமில்லை. ஏனென்றால் வெளிப்படுகையிலேயே அவன் வென்றவனாகிறான். அவன் அடைவன அவனுக்கு வெளியே இல்லை.

வேழங்களைத் தடுக்கும் பெருங்கிளைகளை கீரிகள் அறிவதேயில்லை. சிறுதவளைகள் சிம்மங்களுக்குமேல் ஏறிவிளையாடுகின்றன. உங்களுக்கு அமைந்த களத்தின் அனைத்து எதிர்விசைகளும் உங்கள் ஆற்றலைக் கோரியே அப்பேருருக் கொண்டன என்று உணர்க!

உங்களுக்கு எதிரான ஒவ்வொரு சொல்லும் உங்கள் பெருமையின் விளைவாக எழுந்தவைதான். உங்களை நோக்கிவரும் அத்தனை அம்புகளும் உங்கள் புகழ்ச்சொற்களாக மறுபிறப்பு கொள்ளவிருக்கின்றன. அளிக்கப்பட்டுள்ளது உங்கள் களம் என்பதன் பொருள் அனைத்தும் அளந்தமைக்கப்பட்டுள்ளன என்பதே.

வெல்க, வெல்லும்பொருட்டு களம்நின்று பொருதுக! இழப்பதனால், வீழ்வதனால் எவரும் தோற்பதில்லை, முற்றாக வெளிப்படாமையால் மட்டுமே தோற்கிறார்கள் என்று உணர்க!

கொல்லாதொழியும் எவரும் வெல்லாதொழிவர். உயிர்க்கொலை ஒன்றே கொலையல்ல. உணர்வுக்கொலை, ஆணவக்கொலை, கருத்துக்கொலையென கொலைநிகழா கணமே இங்கில்லை. அங்கரே, உங்கள் உறவுகளைக் கொல்வதை எண்ணி கலங்குகிறீர்களா? அன்புடையோனுக்கு இவ்வுலகே உறவு அல்லவா? அறத்தோனுக்கு அனைத்துயிரும் நிகரல்லவா?

நீங்கள் காப்பவருக்காக எதிர்ப்பவரை கொல்கிறீர்கள் என்றால் கடமையை செய்தவராகிறீர். நீங்களும் கொல்லப்படக்கூடும் களம் என்றால் அறத்தையே இழைத்தவராகிறீர். ஒருகணமும் திரும்பி எண்ணி வருந்தமாட்டீர் என்றால் நற்செயலையே இயற்றுகிறீர்கள்.

இங்கு நிகழும் நன்றுக்கு நீங்களே பொறுப்பென்று எண்ணுவது ஆணவம். தீதுக்கு நீங்களே பொறுப்பென்று எண்ணுவது மேலும் ஆணவம். இங்கு உங்களை எதிர்த்து நின்றிருப்போரின் வாழ்வை நீங்கள் அமைத்தீர்களா என்ன? இங்குவரை அவர்கள் தெரிந்து வந்தமைந்த வழியை வகுத்தீர்களா? முடிவுக்கு மட்டும் நீங்கள் எவ்வண்ணம் பொறுப்பேற்கிறீர்கள்?

இங்கனைத்திலும் நிறைந்திருக்கும் அழிவற்ற ஒன்றின் அலைகளே இவையென்று உணர்ந்தவன் துயரோ களிப்போ கொள்வதில்லை. எழுவதே அமையும். எரிவதே அணையும். எனவே இருமைகளற்று துலாமுள் என நிலைகொள்பவனுக்கு சோர்வென்பதில்லை.

அங்கரே, உணர்வுகளில் உயர்ந்தது அஞ்சாமை. மானுடரில் சிறந்தவன் வீரன். தன் செயல்களில் ஐயமற்று, முழுவிசையுடன் வெளிப்படுவதே வீரம் எனப்படுகிறது. இருத்தலில் முழுமைகொள்பவன் என்பதனால் வீரனுக்கு சாவுமில்லை.

வில்லவர் அனைவரும் அறிந்த ஒன்றுண்டு. அம்பில்தான் அவர்களின் திறன் செல்கிறது. இலக்குகளை தெய்வங்கள் ஆள்கின்றன. ஆனால் அதை எண்ணி வில் தாழ்த்துவோர் கோழைகள் என்றோ அறிவிலிகள் என்றோ அழைக்கப்படுவர். இயற்றும் பொறுப்பே மானுடருக்கு, எய்துவது முடிவிலியை ஆளும் வல்லமையின் ஆணையால்.

விழைவினால் அல்ல, வெறுப்பினால் அல்ல, செயலாற்றும் பொருட்டு இங்கு வந்திருக்கிறீர்கள் என்பதனால் செயலாற்றுக! தசைகளில் உள்ளது தோளின் செயல். கால்களில் உள்ளது நடத்தல். பிறிதொன்றுக்காக அவை இங்கு எழவில்லை. அவற்றுக்குரிய விசையை அளிப்பதே நம் உள்ளத்தின் அறம்.

இங்குள்ள ஒவ்வொரு பொருளும் தனக்கென்று ஓர் செயல்வழியும் இலக்கும் கொண்டுள்ளது. அதுவே அதன் தன்னறம். அதிலேயே அதன் முழுவிசையும் வெளிப்படுகிறது. அதன் ஒவ்வொரு அணுவும் அப்போது மட்டுமே செயல்படுகிறது. அதை இயற்றுகையிலேயே நிறைவடைகிறது. நிறைவுக்கு மறுபெயர் மகிழ்வு.

அங்கரே, உங்கள் தன்னறம் எங்கு உங்கள் தோள்களும் விழிகளும் நெஞ்சமும் பிறிதொன்று தேராது நின்றிருக்குமோ அங்கு உள்ளது. தன்னறத்தை ஆற்றுபவர் தன்னில் மகிழ்கிறார். அறிக, மகிழ்வென்பது வெளியே எதிலிருந்தும் எழவியலாது! தன்னுள் தான் முற்றிலும் நிறைவதே மகிழ்வென்று உணரப்படுகிறது.

இல்லத்தில் தொலைத்ததை பள்ளிச்சாலையில் தேடுகிறீர்கள். இங்கு, இப்பொழுதில் உள்ளது உங்கள் இடர் என்றால் பிறிதெங்கு நோக்குகிறீர்கள்? இயல்தளத்தில் நிலைகொள்பவர் நீங்கள். உங்கள் மெய்மையும் இங்கு எழுவதாகவே அமையலாகும்.

தோற்கடிக்கப்பட்டோர், வீழ்த்தப்பட்டோர், அடக்கப்பட்டோர் அனைவருக்கும் இதுவே என் சொல். தோற்றீர்கள் எனில் வெல்க! வீழ்ந்தீர்கள் எனில் எழுக! அடக்கப்பட்டிருந்தால் ஆள்க! சிறுமைப்படுத்தப்பட்டீர்கள் என்றால் விரிக! அதற்குரிய இயலறிவே உங்களுக்குரியது. தனியறிவு அதற்கு உகந்தது அல்ல. கூரியதென்றாலும் ஒளியைக் கொண்டு காலில் தைத்த முள்ளை அகழ்ந்தெடுக்கவியலாது.

இங்குள்ளவை அனைத்தும் மீறவியலாதன என்றால் உங்கள் தோள்களுக்கு ஆற்றல் ஏன் அளிக்கப்பட்டது? உங்கள் சொற்களுக்கு ஏன் அனல் கூடுகிறது? களத்தை அமைத்த அதுவே கைகளையும் ஆக்கியது என்று உணராதவர் பேதைகளே.

பேதைகளே கட்டுண்டிருக்கிறார்கள். மெய்யுணர்ந்தோர் ஒவ்வொரு கணமும் விடுதலையை நாடுகிறார்கள். அறிவு என்பது விடுதலை என்றே பொருள்படும். எவ்வண்ணம் எவர் உரைத்தாலும் அறிவு விடுதலையை அன்றி பிறிதொன்றை அளிக்காது. அறிவினால் விடுதலை அமைவதில்லை, அறிதலே விடுதலையாகும்.

அங்கரே, அறிவில் தீயது, பயனற்றது என்றொன்றில்லை. அறியப்படாத அறிவுகளே பயனற்றவை. குறையாக அறியப்பட்டவையே தீங்கிழைப்பவை. அவை அறிவென கொள்ளப்படுவதில்லை.

விலங்கு நிலையிலிருந்து மானுடரை விடுதலை செய்தது என் முன்னோடிகளின் அறிவு. இருபாற்பிரிவு நோக்கிலிருந்து விடுதலை செய்வது என் அறிவு. நாளை எழும் அறிவோ இன்மையும் இருப்பும் ஒன்றென்று எழும் பேரறிவாகும். அதை கல்கி என்றும் மைத்ரேயர் என்றும் உரைப்பர் நூலோர்.

இங்கு திகழ்வது அறமென்பதனால்தான் இன்னும் மானுடர் எஞ்சியிருக்கிறார்கள். இன்னமும் வினாவும் விடையுமென அறம் ஆராயப்படுகிறது. அங்கரே, மீண்டும் மீண்டும் அது வெவ்வேறு இடங்களில் உருவுகளில் கண்டடையப்படுகிறது.

இங்கு திகழ்வது அறமென்பதனால்தான் இங்கு ஒவ்வொன்றும் நிலைகொள்கின்றன. மானுடர் இணையாமல் எதுவும் எழுந்து வளர்ந்து நீடிக்காதென்று அறிக! அறத்தின்பொருட்டன்றி எதன்பொருட்டும் மானுடர் இன்றுவரை ஒருங்குதிரண்டதில்லை. அறமென்பது அவர்கள் ஒருங்குதிரட்டுவதே. அவர்கள் ஒவ்வொருவரிலும் வாழ்வது அது.

அழிக்கப்படுகையில், கைவிடப்படுகையில், சிறுமைகொள்கையில் பிறிதொன்றை நோக்கி உதவிகோருபவன் தன்னை அறியாதவன். அழைக்கப்படாத தெய்வமொன்று இருண்ட ஆலயத்தில் துயருடன் அவனுக்காக காத்திருக்கிறது.

இவ்வறம் அவ்வறம் என்று நோக்குவோர் அறத்தை காண்பதில்லை. முழுதும் காணப்படாத அறம் மறமென்று தோன்றலாகும். முழுதறத்தை உணர்ந்தவர் மறமும் அறத்தின் கருவியென்றே உணர்வர். எங்கும் திகழும் ஒன்றின் ஆடலை எதிலும் நோக்குபவரே யோகத்தமர்ந்து அறிந்தவர்.

முன்பொருமுறை இனிய புலரியில் குடில்விட்டு வெளியே வந்த தொல்வியாசர் குருவியின் மென்குஞ்சை தன் கூரலகால் கிழித்து உண்டுகொண்டிருந்த கழுகொன்றை கண்டார். புவிபேணும் பசியெனும் தெய்வத்தின் பேருருவைக் கண்டவராக மகிழ்ந்து கைகூப்பினார்.

பிறிதொருநாள் காட்டில் செல்கையில் கௌதமர் என்னும் முனிவர் தன் குருளையைக் கொன்று தின்றுகொண்டிருந்த அன்னைப் பெரும்பன்றியை கண்டார். அதன் முலைகளை முட்டிக்குடித்துக்கொண்டிருந்தன பிற குட்டிகள். அன்னையே, எத்தனை கனிந்திருந்தால் தன்னையே உண்டு உருக்கி உணவாக்குவாய் நீ என்று அவர் உவகையில் கண்ணீர் விட்டார்.

பறவைச் சிறகெரித்து புழுக்குலம் அழித்து மரங்களில் நாசுழற்றி மூண்டு எரிந்தெழும் காட்டுத்தீயைக் கண்டு தொல்முனிவராகிய காசியபர் கூறியதை அறிக! அனலவனே, மென்மையான புதிய பசுந்தளிர் புற்களின் காவலனே, உன் அருளுக்கு வணக்கம் என்றார் அவர்.

பற்றுகொண்டோன் நோக்குகையில் அனைத்தும் பற்றினாலேயே பொருள்கொள்ளப்படும். இருள்விழைவோன் இருளை அடைகிறான். மருள்விழைவோனை அதுவே அணைகிறது. ஒளிநாடும் புட்கள் மட்டுமே புலரியை அறிகின்றன. வணங்கும் வடிவில் வந்தணைகிறது தெய்வம்.

முற்றிலும் பற்றறுத்த முனிவருக்கே முழுமை புலனாகும். குந்தியின் மைந்தரே, முனிவரிலும் முழுதமைந்த தவம்கொண்டோர் சிலரே. முழுமையறிவு உலகவாழ்வுக்கு எவ்வகையிலும் பயனற்றது என்பதனால் முழுதறிந்த பின்னரும் அதை சிறிதாக்கிக்கொள்பவரும் முனிவருள் உண்டு.

இப்புவியில், விழைவுகளுடன் நிற்பவர்களுக்கு அக்களத்திற்குள் அமையும் உண்மையே உகந்ததாகும். அது பசிக்கையில் உணவென்றும், அஞ்சுகையில் அரண் என்றும், போரில் படைக்கலமென்றும், தனிமையில் துணையென்றும், துயரில் உறவென்றும் வந்தமையவேண்டும். அதை நாடுக!

உணவில் பகிர்தலாக, இடரில் நட்பாக, எளியோர் முன் அளியாக, அவையில் நெறியாக, போரில் சினமாக, நோக்கில் நடுநிலையாக, குடிகளுக்குமேல் ஆணையாக, குலங்களுக்குமேல் நம்பிக்கையாக, விண்ணவருக்கு முன் அறமாக அது வந்தமைக! அதை அடைபவர் வெல்வர்.

ஒவ்வொருவருக்கும் அது தன் முகம் காட்டுகிறது. எதன்பொருட்டு வந்தீர்களோ அதை முழுதியற்றுக! கைவிரல்களைக் கண்டவன் அவற்றின் செயலென்ன என்று அறிந்துகொள்வான். தன்னை நோக்குபவன் தன் இலக்கென்ன என்று தெளிவுகொள்வான்.

அவ்வறிதலை செயலென்றாக்குக! செயல்கள் ஒவ்வொன்றும் மறுசெயல்களால் ஆனவை. செயலாற்றுக, விளைவை கொள்க! அறிக, செயல் விடுதலையென்றாகவேண்டும்! கட்டுறுத்தும் செயல் அரைச்செயலே. முழுமை நம்மை அதை கடந்துசெல்ல வைக்கும்.

வெல்லுங்கள், ஆனால் வென்றவருக்கு அருள்கையிலேயே கடந்துசெல்கிறீர்கள். கொள்க, எனில் கொடுக்கையில்தான் நிறைவுறுகிறீர்கள்! சினம் கொள்க, ஆயின் கனியும்போது மட்டுமே முழுமை அமைகிறது!

அங்கரே, மானுடர் அடைந்த எதையும் இழப்பதில்லை. அறியாமையை, ஐயத்தை, சினத்தை, துயரைக்கூட அவர்கள் உடைமையென்றே கொள்கிறார்கள். கைவிட மறுக்கிறார்கள். இழக்க அஞ்சுகிறார்கள். கைவிடப்படாத எதுவும் சுமையே. இழக்கப்படாத எதுவும் தளையே.

நிகர்கொண்ட வேலே இலக்கடைகிறது. உணர்வுகளால், ஐயத்தால், மிகைவிழைவால் நிலையழியாது இயற்றும் செயல் வெல்கிறது. தோள்விசையை முழுதும் பெற்ற அம்புகளே நெடுந்தொலைவை கடக்கின்றன.

எழுக! உங்கள் தோள்களில் வெல்லும்விழைவு நிறைக! உங்கள் ஆற்றல் முழுமையும் களத்தில் நிகழ்க! வெற்றியால் இவ்வுலகனைத்தையும் அடைவீர்கள். சிறுமைகளை அத்திருவால் நிரப்புவீர்கள். வீழ்ந்தால் அச்சிறுமைகளை பெரும்புகழ் எழுந்து அழிக்கும்.

இறுதிமூச்சையும் இசையாக்கிய பின்னரே குயில் வானில் முழுதெழுகிறது . எச்சமின்றி விட்டுச்செல்வதன் விடுதலை உங்களுக்கு அமைக! ஆம், அவ்வாறே ஆகுக!

wild-west-clipart-rodeo-31இளைய யாதவர் சொல்லி முடித்த பின்னரும் கைகட்டி அமர்ந்திருந்த கர்ணன் நெடுநேரம் உளம் மீளாமல் தலை குனிந்திருந்தான். பின்னர் நீள்மூச்சுடன் எழுந்து கைகூப்பினான். “ஒரு வினாவும் எஞ்சாது நிறைவுற்றேன், யாதவரே. விடுதலை நோக்கிய நேர்ப்பாதையை என்முன் காண்கிறேன்” என்றபின் திரும்பி முதற்புலரி எழுந்துவிட்டிருந்த முற்றத்தில் இறங்கி நடந்தகன்றான்.

வெண்முரசு விவாதங்கள்

முந்தைய கட்டுரைஇரண்டு முகம்
அடுத்த கட்டுரைஸ்டெர்லைட் – விளக்கங்கள்