அன்புள்ள ஜெ
காலையில் எழுந்தவுடன் Youtube –ல் உங்க்கள் மலையாள பேச்சை கேட்டுகொண்டிருந்தேன் வெண்முரசிற்காக நீங்கள் மாத்ரூபூமிக்கு கொடுத்திருந்த பேட்டி….. .காலையில் நாகையிலிருந்து புறப்படும்போதே சிறிய தயக்கம் இருந்தது.இது வரை உங்களை இலக்கிய சந்திப்புக்களிலியே சந்தித்திருக்கிறேன். இது முதன் முறையாக ஒரு பயணச்சந்திப்பில் சந்திக்க வருகிறேன் உங்களோடு பயணம் செய்ய வேண்டும் என்பது என் இலட்சிய கனவுகளில் ஒன்று.கிளம்புவதற்கு முன் கிருஸ்ணன் (ஈரோடு) போன் செய்த போது கிடைத்த மறுமொழி தயக்கத்தை போக்கி உற்சாகத்தை கொடுத்தது..மன்னார்குடியில் டோக்கியோ செந்தில் வீட்டின் வாசலில் உங்களை பார்த்ததும் மனம் குதுகலித்தது.நீங்க்கள் அடையாளம் கண்டு கொண்டதில் இரட்டிப்பு மகிழ்ச்சி. வழக்கமாக அணியும் நீல நிற ஜீன்ஸ் டீ சர்ட் தவிர்த்து வெள்ளை வேட்டி அணிந்திருந்தீர்கள்.நேரில் வேஸ்டி அணிந்ததை முதன் முதலாக பார்க்கிறேன் (காணொளியில் இதற்கு முன் குறள் இனிது உறையின் போது வேஸ்டி அணிந்திருந்ததை பார்த்திருக்கிறேன்).
திண்ணையில் அமர்ந்திருந்தபோது தான் யோசித்தேன் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக உங்களோடு தினமும் உறையாடிகொண்டிருக்கிறேன்.தொடர்ந்து உங்களின் புத்தகங்களை தேடிபிடித்து வாசிக்கிறேன். உன்மையில் .வலைதளத்தில் வாசிக்கும்போதும்.புத்தகங்களில் வாசிக்கும் போதும் .காணொளி கேட்கும்போதும் நீங்கள் என் அருகில் இருப்பதாகவே உணர்கிறேன் குறல் இனிது உறையில் சொன்னது போல அது கரு வடிவில் தினமும் நிகழ்கிறது பரு வடிவில் உங்களை கானும்போது மட்டும்!.மாலை சமணக்கோயிலுக்குச் செல்லும்போது உங்கள் அருகில் அமர்ந்திருந்த போது தனிப்பட்ட முறையில் உரையாடியது மறக்க இயலாதது.இரவில் கள்ளர் மண்டகப்படி திருவிழா காணச்செல்லும்போது எதற்கும் அடங்காத பெருஞ்ஜனக்காட்டில் யானை கூட கொஞ்சம் பவ்யமாக நடந்து போனது போல் இருந்தது! கூட்டத்தை லாவகமாக எங்களுக்கு முன்னால் நடந்து போனீர்கள்.இரவுணவு முடித்தபின் தான் பையின் ஞாபகம் வந்தது.அது பாலகுரு அவர்களின் காரில்சென்று விட்டது என்ற போது ஒரு சின்ன அதிர்ச்சியாகத்தான் இருந்தது ஏற்கனவே அப்படி நடக்கும் என ஊகித்திருந்தேன்.அறைக்கு வந்து கிருஸ்ணன்,மனவாளன்,பாரி,ராஜமாணிக்கம், செந்தில் இவர்களோடு பேசிக்கொண்டிருந்தேன் இலக்கிய கூட்டத்தைவிட இந்த சந்திப்பில் நிறைய நேரம் கிடைத்ததால் அனைவரையும் நிறைய அறிந்து கொள்ள முடிந்தது பை இல்லாததால் காலையில் குளிக்க துண்டு இல்லை விரித்திருந்த பெட்சீட்டை எடுத்து துவட்டிக்கொண்டேன்.
காலையில் மன்னார்குடியிலிருந்து கும்பகோணம் செல்லும் வரை மாபெறும் அறவிவாதம் ஒன்று காரில் நடைபெற்றது.செந்தில் அண்ணன் தான் ஆரம்பித்தார் மாநிலங்களின் பன்மைத்துவம் அடிபட்டு போவதை பற்றி….குறிப்பாக கல்விப்புலம் சார்ந்த விசயங்க்களில்…முழு பழமும் தின்னாமல் மரத்திற்கு மரம் தாவும் அணிலைப்போல விவாதமும் தாவிக்கொண்டிருந்தது. சிறிது நேரம் விவாதத்தை கவனித்தவன் பின்பு விஸ்ணுபுரத்தில் தத்துவ விவாதங்களை புரிந்து கொள்ள முயலாத புத்திசாலித்தனத்தை இங்கேயும் கடைபிடித்து வெளியில் வேடிக்கை பார்க்கத்துவங்கிவிட்டேன்.கடைசியில் விவாதம் டீ கடையில் உங்க்களுடைய உரையோடு முடிந்தது ( விவாதம் கடைசியில் டீ க்கடை விவாதமாக முடிந்திருக்கிறது.உண்மையில் கடைக்காரர் இதற்கு முன் அங்கு அப்படி ஒரு (டீக்கடை) விவாதம் நடந்ததை கண்டிருக்கமாட்டார்).கோயிலின் உள்ளே சென்றதும் சூழல் மாறியது ராமன் சிலை என நினக்கிறேன் தமிழகத்தன் மிக தத்ரூபமான சிலைகளில் ஒன்று என ராஜமாணிக்கம் சொன்னார் அப்படி என்ன இருக்கிறது என பார்க்க ஆரம்பித்தவன் அச்சிலையின் மோனப்புன்னகையில் ஆழ்ந்து சில நிமிடங்கள் அதன் கீழே அமர்ந்து விட்டேன் உன்மையில் அத்தனை கூர்மையாக இதற்கு முன் நான் எந்த சிலைகளையும் பார்த்ததில்லை நன்றி ராஜமாணிக்கம் அண்ணனுக்கு உரித்தாகுக.
மூன்று வாரங்க்களுக்கு முன்பு தான் முதன் முறையாக தாரசுரம் கோயில் தனியாக சென்று வந்தேன் புல்வெளியில் படுத்து கிடந்ததும்.ரொட்டி சாப்பிட்டதும் உடைந்த கோபுர வாசலில் சாரப்பாம்பை சட்டை பார்த்ததும் தவிர எதுவும் ஞாபகம் இல்லை ஆனல் இம்முறை ராஜமாணிக்கம்,தாமரைக்கண்ணன் புன்னியத்தால் நிறைய சிற்பங்கள் கடவுள்களின் பெயர்களை தெரிந்து கொண்டேன். வராற்றை தெரிந்து கொள்வதின் அவசியத்தை தொடர்ந்து உங்கள் எழுத்துக்களில் காண்கிறேன். வரலாறு சம்பந்தமான புத்தகங்கள் படிக்கலாம் என்று இருக்கிறேன். உங்களின் இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்.இந்து ஞானம் கேள்வி பதில்கள் ஆகிய இரு புத்தகங்களும் எனக்கு மிகப்பெரிய திறப்பு (அதைப்பற்றி இனியொரு கடிதம் எழுதலாம் என்று இருக்கிறேன்).இந்த முறை உரையாடல்களின் உச்சம் என்பது தராசுரம் கோயிலில் வைத்து சிறுகதை எழுதும் முறை பற்றி சொன்னதும்.ஒருவரின் நிஜ வாழ்க்கையை படமாக எடுக்கப்போவதாக சொன்ன கதைதான். சூடானமதியவேளையில் ஐஸ்கீரிம் சாப்பிட்ட கையோடு விடை பெறல். பர்சும் பேக்கோடு சென்று விட்டதால் இரு நூறு ரூபாய் கடன். உபயம் கடையேழு வள்ளல்களில் ஒருவர்.பின் கும்பகோணம் பேருந்து நிலையத்தில் என்னை இறக்கிவிட்டு விடைபெற்றுகொண்டீர்கள். நான் நேராக .திருவாருர் வந்து இனியோரு பேருந்தில் ஏறி சேந்தமங்கலம் வந்து பையை வாங்கியபின்பு தான் பயணம் உன்மையாக நிறைவடைந்தது போல் இருந்தது.
திரும்பி திருவாரூர் பேருந்து நிலையம் வந்து நாகை பேருந்துக்காக காத்திருந்த போதுதான் என் கல்லூரித்தோழியைப்பார்த்தேன் இரண்டு வருடங்களில் மிகவும் மாறியிருந்தாள் காரணம் ஐந்து நிமிடங்க்கள் உரையாடபின்புதான் தெரிந்தது.கடந்த அக்டோபர் 20 தேதி.பொறையாரில் போக்குவரத்து தொழிலார்கள் எட்டு பேர் இறந்து போனவர்களுள் அவளின் தந்தையும் ஒருவர்.அவர்கள் வீட்டில் மொத்தம் மூன்று பெண்கள் அக்கா ஓருவருக்கு திருமணம் முடிந்திருக்கிறது.இவளும் தங்க்கயும் அம்மாவும் மட்டும் தான் .கல்லூரியில் கேண்டீன் கூட தனியாக செல்லபயப்படுபவள். போலிஸ்டேசன். மருத்துவமனை என சாதரண அலுவல்களுக்காக நாட்கணக்காக காத்திருந்திருக்கிறாள்! கணவனை நினைத்து மனைவி (அவளுடைய அம்மா) நோய்வாய் பட்டு போய்விட்டதால் குடும்ப பொறுப்புகள் எல்லாம் தற்போது இவள் தலையில்.அம்மா பிரமை பிடித்தவள் போல இருக்கிறாள் என்றாள்.கோயில்கள் ,வெளியூர் சொந்த காரர்களின் வீடுகளுக்கு அழைத்து சென்று வருமாரு கூறினேன்.அப்பா இறந்தவுடன் யாரும்(உறவினர்கள்) முன்பைப்போல கண்டுகொள்வதில்லை என்றாள்..சிறு மௌனத்திற்கு பின் விடை சொல்லிவிட்டு வண்டி ஏறினேன்.
உண்மையில் கதைகளிலும் திரைப்படங்க்களிலும் கானும் வாழ்க்கை கண் முன் நடக்கிறது .நம்மால் ஒரு பார்வையாளானாக மட்டும்தான் இருக்க முடிகிறது ..வாழ்வின் இருத்தலின் அர்த்தத்தை இது போன்ற நிகழ்வுகள் கேள்விக்குள்ளாக்குகின்றன.எனக்கு ஏனோ வைக்கம் முகமது பசிரின் பால்ய கால சகி ஞாபகம் வந்தது ,ஒரு செய்தியாக மட்டும் கடந்து போன எனக்கு இந்த சம்பவம்.இன்று பேரதிர்ச்சியை தருகிறது உண்மையில் இப்படி எவ்வளவு சம்பவங்க்களை வெறும் செய்திகளாக தினம் கடந்துபோயிருப்பேன்.ஒரு வேளை இவளை சந்திக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த முழுப்பயணமோ?
அன்புடன்
இரா.கதிரேசன்
அன்புள்ள ஜெயமோகன்
இது நான் முகநூலில் எழுதியது
22-3-2018 வியாழனன்று மன்னார்குடியில் என்ன விசேஷம் என்றால் வெண்ணெய்த் தாழி என்பீர்கள். பலருக்குத் தெரியாத இன்னொரு விசேஷம் அன்று தமிழின் முதன்மை எழுத்தாளர் ஜெயமோகன் மன்னார்குடி வந்திருந்தார்.சென்ற வாரம் வரை இமைய மலைப் பயணத்தில்இருந்தார் .அவர் பாதங்கள் படாத பகுதிகள் இந்தியாவில் இல்லை. உலக நாடுகளிலும் பெரும்பாலும் இல்லை.
காலை எழுந்ததும் ஜெயமோகன் இணைய தள தரிசனம் என்ற எ ன் மூன்றாண்டுகால வழக்கப் படி காலையிலேயே அவர் வருகை பற்றி அறிந்து,இளம் எழுத்தாளர் சுரேஷ் பிரதீப்பை தொடர்பு கொண்டேன்.டோக்கியோ செந்தில் வீடு வடக்குத் தெருவில் இருப்பதாக அவர் சொன்னார். தெருவும்,வீதியும் ஒன்றா,வேறா?
வெண்ணைத் தாழி முடிந்த பின் கிளம்பினேன்.வடக்கு வீதி என் அடுத்த தெரு.முகவரி காண திணறுவதில் மன்னை ஒரு சிட்டிதான்.ஒரு ஓட்டு தாழ்வாரத்தில் பத்து பேர் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்ததும் இதுதான் என்று நினைத்தேன். என் ஆதர்ச இலக்கியப் படைப்பாளரை நேரில் முதன்முறை யாகப் பார்த்தேன். அருகில் அவர் மனைவி அருண்மொழி. சுற்றிலும் நண்பர்கள்.ஏற்கனவே கேள்விப்பட்ட, போட்டோக் களில் பார்த்த முகங்கள்.பெயர் சொன்னதும் ஜெ.யும் சில நண்பர்களும் என்னை அடையாளம் கண்டு கொண்டது எனக்கு வியப்பாக இருந்தது.
திருமணத்திற்குப் பிறகு அமெரிக்கா சென்று நான்கு ஆண்டுகளுக்குப் பின் ஊருக்கு வந்திருக்கும் மாப்பிள்ளை, இன்னும் நாலைந்து நாட்களுக்குப் பின் அவருடன் திரும்ப செல்லவிருக்கும் செல்லப் பேத்தி. இது போதுமான,நியாயமான காரணங்கள். என்றாலும் சென்ற முறை பக்கத்து ஊரில் (தஞ்சையில்) நடந்த வாசகர் சந்திப்புக்கு வர முடியவில்லையே என்ற குற்ற உணர்ச்சி குறையாமல் இருக்கும் என்னால் பக்கத்து தெருவில் ஜெயமோகன் இருக்கும் போது எப்படிஒதுங்கியிருக்க முடியும்? நல்ல வேளை, என் உறவினர்கள் என்னை புரிந்து கொள்கிறார்கள் அல்லது சகித்துக் கொள்கிறார்கள் அல்லது தண்ணீர் தெளித்து விடுகிறார்கள்.
முதல் முதலாக ஜெயமோகனைப் பார்த்ததும் சிறு பையனைப் போல் பதற்றமும், சிறு பெண்ணைப்போல் கூச்சமும் வந்தது. வாசகர் முகாம் என்றாலும்,திண்ணைப் பேச்சு என்றாலும் ஆசிரியர் ஆசிரியர்தானே? பொலபொலவென்று கொட்டிக் கொண்டேஇருந்தார்.தன்னை திறந்து வைப்பதும் வாங்கிக் கொள்வதும்தான். மாணவன் செய்ய வேண்டுவது. அதை செய்தேன். நான்பேசு வதைத் தவிர்த்து நிறையக்கேட்டேன். கோயில்கள், சிற்பங்கள்,ஓவியம் பற்றி பொதுவாக பேசினார்.. மாலை நேர உரையாடலில் தமிழகத்தில் இருந்த இலக்கிய மையங்கள் பற்றி பேச்சு அமைந்தது .கும்பகோணம் ஒரு இலக்கிய படைப்பு மற்றும் வாசக மையமாக இருந்தது. திருநெல்வேலியும், கோவில்பட்டியும், சென்னையும், டெல்லியும் இதரமையங்கள். சென்னையில் இரு மையங்கள். ஒவ்வொரு மையத்திலும் யாரெல்லாம் இருந்தார்கள். சில இலக்கிய அக்கப்போர்கள், விந்தையானதகவல்கள். புதுமைப் பித்தனின் அப்பா எழுதியபயனற்ற வால்யூம்கள். அவை பற்றிய பு.பி.யின்பகீர் கருத்து .ரகுநாதனின் புதுமைப் பித்தனின் வரலாறு சமீபத்தில் படித்திருந்தேன். அவ்வப்போதுகாளி பிரசாத், ஈரோடு கிருஷ்ணன்,விஜயராகவன்,செந்தில் போன்ற நண்பர்கள் தம் கருத்தைபகிர்ந்தனர். எங்கள் மகள் அருண்மொழி பிறந்தமண்ணை விட்டுக் கொடுக்காமல் பேசினார்.
இரண்டாம் நாள் அவர்கள் தாராசுரம் சென்று வந்தார்கள். ஒரு கோவிலை, அதன் சிற்பங்களை கண்டு ரசிக்கும்செய்முறைக் கல்வி எனக்கு வாய்க்கவில்லை. மாலைதேர் பார்த்து முடித்ததும் ஒரு முறை டோக்கியோ செந்தில்வீட்டை எட்டிப் பார்த்து விட்டு வீட்டுக்கு போகலா என்று சென்றோம். அங்கே ஜெ.யை பார்த்ததும் மோகனை அட்வியை அழைத்து வரச் சொன்னேன். அட்விக்கு காலையிலிருந்தே ஜெயமோகனை சந்திக்கும் ஆர்வம் .பார்ப்பவரை எல்லாம் இதான் ஜெயமோகனா என்ற கேள்வி.
அட்வி வந்ததும் ஜெ.யைக் காட்டி இது யார் என்று கேட்டேன்.அட்வி “ஜெயமோகன்” என்றதும் எல்லோருக்கும் ஆச்சர்யம். நான் “ஜெயமோகன்,என்ன எழுதியிருக்கார்?” என்று கேட்டதும் “ஏனை டாக்டர், வெம்முரசு, விஷ்ணுபுரம்.” என்ற அட்வியின்பதில் நான் நினைத்த விளைவை ஏற்படுத்தியது. ஒரு மூன்றுவயது குழந்தையை எப்படி வேண்டுமானாலும் தயார்செய்யலாம். நல்ல விஷயங்களை செய்வோம். அட்வி மூன்று வயதான என் மூன்றாவது பேத்தி.அட்விக்கு ஜெயமோகனை மட்டுமல்ல; காந்தி, ஆயிஷா நடராஜன், துக்ளக் குருமூர்த்தி, மோடி, ஜெயலலிதா போன்றோரின் பெயர்களும், அவர்களின் போட்டோ அடையாளமும் தெரியும். இது அறிவு அல்ல. வெறும்பயிற்சி. ரைம்ஸ் சொல்வது போல. அறிவு வேறு விஷயம். அதற்கு உடனுறைபவர் நிறைய உழைக்க வேண்டும்.பிறகு ஊழ்!
இதற்கு முன் எனக்கு ஜெயகாந்தனுடன் நட்பு இருந்தது.சென்னை செல்லும் போதெல்லாம் அவரை சந்திப்பதும் பக்கத்து ஊர்களிலோ மாவட்டங்களிலோ அவர் கூட்டங்களுக்கு வரும் போது அவரை சந்தித்து அவரோடு தங்குவதும் உண்டு. அவரைமெல்ல சீண்டி விட்டு,என் செவிகளைக் கூர் தீட்டிக் கொண்டு அள்ளிக் கொள்ள தயாராகி விடுவேன். ஜெயகாந்தனின்உரையாடல் அப்போதுதான் பிரசவமான குழந்தை மாதிரி . ரத்தம் போன்ற அசுத்தங்கள் இருக்கும்.(ரத்தம் அசுத்தமா? உடலுக்குவெளியில் இருக்கும் போது) எழுத்து குளிப்பாட்டி அணி செய்யப் பட்ட குழந்தை.
காந்தனுக்குப் பிறகு மோகன். இருவருக்கும் நிறைய ஒற்றுமைகள் உண்டு .இருவரும் சிறு வயதிலேயே மாறுபட்ட வாழ்க்கை அனுபவங்களைப் பெற்றவர்கள்.அப்போதே எழுதத் தொடங்கியவர்கள். இளமையில் இடது சாரி இயக்க பாசறையில் பயின்றவர் கள். காற்றை யார் கட்டிப் போடுவது?தம் கூட்டை உடைத்துக்கொண்டு வண்ணத்துப் பூச்சிகளாய் வெளி வந்தவர்கள். “அற்பத்தனத்தை ஆணவத்தால் வெல்பவர்கள் .”சண்டைக் காரர்கள், திமிர் பிடித்தவர்கள் என்றெல்லாம் பெயரெடுத்தவர்கள். உண்மை என்று தோன்றுவதை மக்கள் ஆதரவு எப்படிஇருக்கும் என்று கணக்கு பார்க்காமல் அச்சமின்றி எடுத்துரைக்கும் நேர்மைத்திறம் இருவருக்கும் உண்டு.
இருவருக்கும் வேறுபாடுகளும் உண்டு. ஜேகே தொடக்கக் கல்வியை தாண்டாதவர். நான் கல்லூரியில் படித்திருந்தால் பலர் என் படைப்புகளை ஆய்வு செய்து PhD டாக்டர் பட்டம் பெற்றிருப்பார்களா என்று வேடிக்கையாகக் கூறுவார். ஜேகே என்றதும் என் மனதில் ஒரு சிங்கம் அல்லது ஒரு மகாராஜா அல்லது கம்பீரம் என்ற சொல் நினைவில் தோன்றும். ஜேஎம் கல்லூரிப் படிப்பு முடித்தவர். பின் இந்தியா முழுக்க பயணங்கள் செய்து கற்றவர். நிறைய புத்தகங்கள் படிப்பதில் ஜேகே.வுக்கு ஆர்வமில்லை. ஜேஎம் படிக்காத புத்தகங்களே இல்லை. ஜேகே ஒரு கட்டத்தில் எழுதுவதை நிறுத்திக்கொண்டார் .ஜேஎம்.மின் கங் கை வற்றுவதில்லை .ஜுனியருக்குள்ள சில வசதிகள் இவருக்கு உண்டு. வீச்சும், ஆழமும் அதிகம். ஜெயமோகன் என்றதும் நினைவில் எழுவது இமைய மலையின் அழகும், பிரமாண்டமும்.
உண்மையில் இவர்கள்தான் ஆசிரியர்கள். பள்ளி, கல்லூரி ஆசிரியர்களின் பணிகளையும் சேர்த்து செய்பவவர்கள். ஒரு நூலை எழுதியவரை ஆசிரியர் என்று சொல்வது தற்செயலல்ல. ஒரு சின்ன குருகுல வாழ்க்கையை அனுபவித்தது போல் உணர்ந்தேன் .இரண்டு நாள் வாசகர் சந்திப்புக்கு மனம் ஏங்குகிறது.
சாந்தமூர்த்தி