நல்லிடையன் நகர் -1
நல்லிடையன் நகர்-2
*
இமையத் தனிமை – 3
இமையத் தனிமை – 2
இமையத் தனிமை -1
சார் வணக்கம்
உங்களின் இணையதளம் மீண்டும் இயங்குவதிலும் ’’இமைக்கணம் ’’ துவங்கியதிலும் மிக்க மகிழ்ச்சி. வருடங்களாக , நாள் தவறாமல் வாசித்தும் அலுப்போ சலிப்போ ஏற்படாமல் சிறிய இடைவெளிக்கே பித்துப்பிடித்தது போலாகும் வாசகர்கள் நாங்கள். இடைவெளி குறித்து வந்திருக்கும்க டிதங்கள் அனைத்தும் பிரதி எடுத்து பெயர் மட்டும் மாற்றி எழுதினது போலிருக்கின்றது. இப்போது மீண்டும் வாசிக்கத் துவங்கியபின்னர் முன்பைவிட இன்னும்மகிழ்ச்சியாக இருக்கின்றது. அரியதையும் மிகப்பிரியமானதையும் தொலைத்து, வருந்தி, பின் மீண்டும் அது திரும்பக்கிடைக்கையில் ஏற்படும் சந்தோஷம் இது.
இமயத்தனிமை மற்றும் நல்லிடையன் நகர் வாசித்து முடித்தேன். இமயத்தனிமை முடிந்ததும் உங்களுக்கு எழுதனும்னு நினைத்திருந்தேன் தனிப்பட்ட துயர்களின் நினைவு இமயத்தனிமை வாசிக்கையில் மட்டும் குறுக்கிடவேயில்லை என்பதை வாசித்து முடிந்தபின்னரே அறிந்தேன் ஆழ்ந்து வாசித்தேன். இப்போது இந்த பதிவையும் வாசித்ததால் சேர்த்தே எழுதுகிறேன்.
மிக மிகத்தனிமையான ஒரு பயணமும், நெரிசலாக இரைச்சலாக திரளாக கொண்டாட்ட மனநிலையில் இருக்கும் மக்களுடன் மனைவி மற்றும் நண்பர்களுடன் இன்னொரு பயணமுமாக முற்றிலும் எதிர் எதிரானவை இவையிரண்டும் ஆனால் எத்தனை மாறுபட்ட அனுபவங்கள்?
உங்களின் பயண அனுபவப்பதிவுகள் தவறாமல் ஏற்படுத்தும் பொறாமை உணர்வு இப்போதும் இருக்கிறது எனினும், இமயப்பயணம் பொறாமையுடன் எனக்கு என் இயலாமை குறித்து கழிவிரக்கத்தையும் உண்டுபண்ணியது. அப்படி ஒரு தனிமைப்பயணம் எனக்கெல்லாம் சாத்தியமே இல்லாததால் வழக்கம் போல உங்களுடன் எழுதுக்கள் வழியே அதே இடங்களுக்கு சென்று வரும் உணர்வை இமயத்தனிமை ஏற்படுத்தவில்லை
அப்படி தன்னத்தனியே குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் கூட சொல்லிக்கொள்ளாமல் வெரும் குறுஞ்செய்தி மட்டும் அனுப்பிவிட்டு மிக அத்யாவசியமான குளிராடைகள் கூட எடுத்துக்கொள்ளாமல் நினைத்தது நினைத்தபடியும், போட்டது போட்டபடியும் கிளம்பும் ஒரு பாக்கியம் உங்களுக்கு இருப்பது அதிசயமாக இருக்கின்றது.
உங்களின் எல்லாப் பயணப்பதிவுகளயும், நானும் அங்கேயே சென்று வந்தது போல வாசிக்க முடிந்த என்னால் மானசீகமாகக்கூட இமயம் வரை வர இயலவில்லை, உள்மனதிற்கு தெரிந்திருக்கும் போல, இது அசாத்தியம் எனக்கெல்லாம் என்று எனவே அந்த 3 பகுதிகளையும் அவற்றிற்கு வெளியிலிருந்து வாசித்ததை உணர முடிந்தது என்னாலேயே. இருந்தும் அந்த வீட்டுத்தங்கல் விலாசம் குறித்து வைத்துக் கொண்டிருக்கிறேன்
வாழ்வு இதுவரை என்னை இப்படி, முடியும் முடியாதென்று எந்த முன்முடிவையும் எடுக்க விட்டதில்லை என்பதனால் எப்போதாவது ஒரு சாத்தியம் இருக்குமேயானால் அப்போது தேவைப்படலாமென்று குறித்து வைத்துக்கொண்டேன்
அந்த தனிமை , மலைமுகடுகளில் மெல்லப்படரும் பொன்னொளி, கன்ணாடிச்சுவர்களாலான அறை, ஆப்பிள் தோட்டம், ஊசியிலைக்காடுகள் பனி அடர்ந்த சாலைகள், என்று எல்லாமே கனவுலகம் போல பிரமை தந்தது வாசிக்கையில். அப்படி ஒரு கனவுச்சூழலில் குளிர்மிக்க இரவில் , கைவிடப்பட்ட உணர்வும் பச்சாதாபமும், துயருமின்றி , விடுதலை உணர்வுடன் bondless ஆக கிடைத்த ஒரு தனிமையும் சேர்ந்து உங்களுக்கு கிடைத்தது போல யாருக்கும் கிடைக்கவே கிடைக்காது.
இந்த கோவில் பயணமும் வரிவரியாக வாசித்தும் புகைப்படங்களைப் பார்த்தும் நானும் திருவிழாவில் கலந்துகொண்டு திரும்பியது போலவே உணர்ந்தேன். உங்களுடன் எப்போதுமிருக்கும் நண்பர்களையெல்லாம் பார்த்தால் பொறமையாக இருக்கிறது, மழையத் துரத்துதலாகட்டும், இந்த வெண்ணை சாத்துதலாகட்டும் பல்வேறு இடங்களுக்கு உங்களுடன் பயணிக்கும் கொடுப்பினை இருக்கு இவர்களுக்கெல்லாம் இந்த ஆண்கள் உலகில். ஒரே பொறாமையாய் ஏன் இந்த முறை எரிச்சலாக்வுமே இருந்தது. ஏற்கனவே யோகேஸ்வரனுக்கு, அவர் உங்களுடன் புதுவைக்கு வந்து இருசக்கர வாகனத்துக்கு அருகில் புகைப்படம் எடுத்துக் கொண்டதைப் பகிர்ந்துகொண்டபோது , எரிச்சலில் கொடுத்தது போல் இப்போது எல்லாருக்குமே சாபமிட்டிருகிறென்’
அடுத்த ஜென்மத்திலும் நீங்கள் இப்படியே ஜெயமோகனாகவே பிறந்து எழுத்தாளராக இருந்து நான் அப்போது ஆணாய் பிறக்காட்டியும் பரவாயில்லை இப்போது உங்களுடன் எப்பொவும் இருக்கும் எல்லா ஆண்களும் என்னைப் போலவே வாசிப்பில் ஆர்வமுள்ள வீட்டிலும் வெளியிலும் உழைத்துக்கொண்டு, கரண்டி ஒரு கையிலும் வெண்முரசு இன்னொரு கையிலுமாய் பிடித்துக் கொண்டு அல்லல்படும் பெண்ணாகவே பிறக்கட்டுமென..
எப்போதாவ்து ஒருவேளை எனக்கும் இப்படி ஒரு தனிமைப் பயணம் அருளப்படுமேயானால் அந்தப்புறப்பாடு நிச்சயம் திரும்பி வருமொன்றாக இருக்காது அதைமட்டும் உறுதியாக என்னால் சொல்ல முடியும்
// எல்லாவற்றிலிருந்தும் காலத்திலேறி மீளமுடியும் என்ற வாய்ப்பைப் போல வாழ்க்கையின் அருள் வேறில்லை.// இந்த வரிகளை என் நாட்குறிப்பில் எழுதி வைத்துக் கொண்டிருக்கிறேன்
இடைவெளி முடிந்து இணையம் வாசிக்க கிடைத்தற்கும், இமைக்கணத்திற்கும், பயணப்பதிவுகளுக்கும், அனைத்திற்கும் நன்றியுடன்
லோகமாதேவி
அன்புள்ள லோகமாதேவி,
புறவயமான எல்லைகள் அளிக்கும் மூச்சுத்திணறலை எவரும் மறுக்கமுடியாதுதான். ஆனால் அதை எண்ணி எண்ணி மனம்புழுங்குவது ஒருவகை பொறுப்புதுறப்புதான். பழிகளை வேறெங்கோ ஏற்றுவது அது. உண்மையில் பெண்களுக்கு இங்கே ஆண்களுக்கு இருக்கும் சுதந்திரத்தில் பத்தில் ஒரு பங்குகூட இல்லை. இந்தியா பெண்களுக்கு அத்தனை பாதுகாப்பான நாடு அல்ல.
ஆனால் சென்ற தலைமுறையுடன் ஒப்பிட்டால் பெண்களுக்கு இருக்கும் வாய்ப்புகள் நூறுமடங்கு. வேலைசெய்ய, பயணம் செய்ய, தானாக முடிவெடுக்க உரிமை வந்துள்ளது. செல்வம் சார்ந்த தனியுரிமை உள்ளது. அந்த உரிமைகளை எந்த அளவுக்குப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் முக்கியமான கேள்வி. அதன் உச்ச சாத்தியம் வரைப் பயன்படுத்திவிட்டு மேலே கோருவதைத்தான் புரிந்துகொள்ளமுடியும். பெரும்பாலும் தயக்கம், எதிர்காலம் பற்றிய மிகையான அச்சம், சலிப்பு, பிறபெண்களுடன் நல்லுறவை அமைக்கமுடியாத தனிமை காரணமாகவே பெண்கள் தங்கள் வட்டத்திற்குள் ஒடுங்கிக்கொள்கிறார்கள்.
ஒரு கட்டத்திலேனும் எழுந்து பயணம்செய்யத் தொடங்கலாம். அது அளிக்கும் உளவிடுதலை எல்லையற்றது. திடீரென்று இல்லமும் உறவுகளும் அல்ல உலகம் எனத் தெரியத்தொடங்கும்.
அதேபோல ஆண்களும் கட்டற்ற சுதந்திரம் உடையவர்களல்ல. எண்ணிப்பாருங்கள், தமிழ் எழுத்தாளர்களில் என்னைப்போல பயணம்செய்பவர் வேறு எத்தனைபேர்? என்னைவிடச் செல்வமும் பின்னணியும் உடையவர்கள் உண்டு. தங்கள் வட்டங்களை விட்டு வெளியே செல்ல இயலவில்லை. சூழல் அவர்களை கவ்விக்கொண்டிருப்பதாக எண்ணுகிறார்க, உண்மையில் சூழலை அவர்கள் கவ்விக்கொண்டிருக்கிறார்கள்.
அதைத்தவிர மெய்யாகவே பொறுப்புகளால் கட்டப்பட்டவர்கள் பெரும்பாலான ஆண்கள். பொருளியல் எல்லைகள், உறவுகளின் கட்டாயங்கள். அதைக்கடந்து செல்வது எளிதல்ல. எல்லாருக்கும் வெளி அளந்தே அளிக்கப்பட்டிருக்கிறது. முடிந்தவரைப் பெரிய உலகை அமைப்பது அவரவர் பொறுப்பு
ஜெ