மாவோயிச வன்முறை 3

மாவோயிசம் என்ற புதிய பூதம்

’ஐரோப்பாவை கம்யூனிசம் என்ற புதியபூதம் ஆட்டிப்படைக்கிறது’ என மார்க்ஸ் புளகாங்கிதம் கொண்டார். உலகை அது ஒரு நூற்றாண்டுக்காலம் ஆட்டிப்படைத்தது. கம்யூனிசத்தின் பாதிப்பு இரு வகையில் மனித சமூகத்தை அழித்தது. ஒன்று ஸ்டாலின், மாவோ, போல்பாட் போன்ற மாபெரும் மானுடஎதிரிகளை உருவாக்கி தேசங்களைச் சூறையாடியது , கோடிக்கணக்கான எளிய மக்களை கொன்றழித்தது. இன்றும் அந்த பேரழிவுகளின் விளைவுகள் தொடர்கின்றன.

இரண்டு, மார்க்ஸியத்தின் அடிப்படையாக உள்ள சமூகத்தை முழுமையாக மாற்றிக்கட்டி எழுப்புவது’ என்ற கனவு உலகநாடுகளின் சர்வாதிகாரிகளிடம் பலவாறாக உருவம் மாறிச்  சென்றுசேர்ந்தது. அவர்கள் தங்கள் இச்சைப்படி சமூகத்தை மாற்ற உத்தேசித்து தங்கள் நாடுகளின் சமூக அமைப்பைச் சிதைத்தார்கள். அவர்களில் பலர் வெறும் காட்டுமிராண்டிகள். ஆனால் அவர்களுக்கு முன்னுதாரணமாக இருந்தது மார்க்ஸிய வாய்ப்பாடுகளும், மார்க்ஸிய நாடுகளில் இருந்து கிளப்பப்பட்ட பிரச்சாரங்களும்தான்.

இன்று இந்தியாவை மாவோயிசம் என்ற பூதம் பீடித்துள்ளது. இந்தியா என்ற அமைப்பை அது ஒன்றும் செய்துவிட முடியாது என்றே நான் நினைக்கிறேன். காரணம் எனக்கு இந்திய விவசாயியின் அடிப்படைத் தார்மிகம் மீது அழுத்தமான நம்பிக்கை உண்டு. அத்தனை எளிதாக இந்திய விவசாயியை ராணுவப்படுத்த முடியாது. ருஷ்யாவிலும் சீனாவிலும் போர்வெறி கொண்ட மன்னராட்சிகள் விவசாயிகளை ஏற்கனவே ராணுவப்படுத்தியிருந்தன. ஆகவேதான் லெனினும் மாவோவும் அவர்களைக் கொலைகாரர்களாக ஆக்க முடிந்தது.

இந்தியாவில் இன்று வரை எல்லா வகையான தீவிரவாதங்களும் வேட்டைச்சமூகங்களாக நீடிக்கும் பழங்குடிகளை நம்பியே ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன. 1967ன் நக்சலைட் புரட்சி முதல் இன்றைய மாவோயிசக் கிளர்ச்சி வரை. இம்மக்கள் வெகுசில மலைப்பிராந்தியங்களில் வாழும் சிறுகுழுக்களே. இவர்களை முன்னிறுத்தி, இவர்களைக் காரணம் காட்டி, இங்கே ஒரு தற்காலிக வன்முறையை உருவாக்க முடியும். அவ்வளவுதான்.

இந்தியா வேளாண்மைநாடு. விவசாயிகளின் மண். விவசாயிகளால் நடத்தப்படாத வரை இந்த வன்முறைகள் எந்த ஒட்டுமொத்த விளைவும் உருவாகப்போவதில்லை. இந்திய விவசாயிகளை வன்முறைக்குக் கொண்டுவரச் செய்யப்பட்ட கடைசி முயற்சி என பஞ்சாப் பிரிவினைக் கிளர்ச்சியைச் சொல்வேன். அவர்கள் மனதில் ஆழமாகப் பதிந்த மதநம்பிக்கை அதற்கு பயன்படுத்தப்பட்டது.

ஆனால் அந்த முயற்சி எந்த சிறு சலனத்தையும் உருவாக்கவில்லை. மனத்திரிபு செய்யப்பட்டு , நாட்டுக்கு வெளியே கொண்டுசென்று பயிற்சி தரப்பட்ட சிறிய ஆயுதக்குழுக்களைக் கொண்டு பரவலான வன்முறை நிகழ்ச்சிகளையும் அச்சத்தையும் உருவாக்குவதை மட்டுமே பஞ்சாப்கிளர்ச்சியாளர்களால் சாதிக்க முடிந்தது. பலகாலம் சீக்கிய விவசாயி அஞ்சிப் பேசாமலிருந்தான். பொறுமை இழந்தபோது மொத்த தீவிரவாத இயக்கத்தையும் அழிக்க அவனும் துணைநின்றான்.

ஆக, மாவோயிசக் கிளர்ச்சி என இன்று சொல்லப்படும் இந்த வன்முறை ஒரு கிண்ணத்துக்குள் நிகழும் சுழல் மட்டுமே. இது ஒருபோதும் காடுகளை விட்டு வெளியே மக்களிடம் வரமுடியாது. உண்மையில் இவ்வியக்கத்தின் நோக்கமும் அது அல்ல என்றே நான் நினைக்கிறேன். இந்தியா என்ற அமைப்பின் இன்றைய வளர்ச்சிப்போக்கை கொஞ்சம் பலவீனப்படுத்துவதற்கு அப்பால் எதையும் சாதிக்கத் தங்களால் இயலாதென இவர்களின் தலைவர்களுக்கும் தெரியும். அந்த வேலை இவர்களுக்கு இடப்பட்டிருக்கிறது, அவ்வளவுதான்

அதேபோல இதை இத்தனைநாட்களாக இந்திய அரசு தடவித்தடவி விட்டு வைப்பதற்கு இருகாரணங்கள் இருக்கும். ஒன்று இன்று பலவீனமான நிலையில் இருக்கும் இந்தியா கையாளமுடியாத பெரிய அரசியல் சக்தி இதற்குள் இருக்கிறது, ஆம் சீனா. அல்லது காங்கிரஸுக்கு அதன் அரசியல் சார்ந்த ஏதேனும் உள்நோக்கம் இருக்கலாம்.


அந்த மக்களுக்கு மாவோயிசம் தான் ஒரே வழியா?

எழுபதுகளில் ஆந்திர நக்சலிசமும் எண்பதுகளில் பஞ்சாப் தீவிரவாதமும் ஓங்கியிருந்த காலகட்டத்தில் நம் ஊடகங்களும், இடதுசாரிகளும் அதை விளக்க அல்லது நியாயப்படுத்த என்னென்ன சொன்னார்களோ அவற்றையே இப்போதும் இந்த மாவோயிச சூழல் பற்றியும் நாம் கேட்கிறோம். ஒரு சொல் வேறுபாடில்லை. அன்று அவர்களின் குரல்களாக சில உதிரி அறிவுஜீவிகள் ஆங்கில ஊடகங்களில் கிளர்ந்தெழுந்ததைப்போலவே இன்றும் நிகழ்கிறது. பிரச்சினையைச் சமாளிக்க அவர்கள் அளித்த வழிகளில் ஒன்று பஞ்சபை பிரித்துக்கொடுத்துவிடுவது! நாம் நேற்றை மறந்து விட்டோம். இன்று அதே பழைய நாடகத்தை புதியதாக காண்கிறோம்.

முதலில், இந்த மாவோயிச ஆதிக்கத்துக்குக் காரணமாக சொல்லப்படுவது இந்த நிலப்பகுதிகளில் உள்ள கடுமையான வறுமை. அது உண்மை. ஒரிசாவில் கந்தமால் பகுதியில் தொண்ணூறுகளில் பட்டினிச்சாவு செய்தியானபோது நான் அப்பகுதிகளுக்குச் சென்றிருக்கிறேன். மத்தியபிரதேசத்துக்கு எண்பதுகளில் சென்றிருக்கிறேன். பொருளியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் மிகப்பிற்பட்ட, மிக வறுமையான மக்கள் வாழும் இடங்கள் அவை.

ஒரிஸாவுக்கும், தண்டகாரண்யம் எனபடும் மத்தியப்பிரதேசப் பீடபூமிப்பகுதிகளுக்குப் பல வேறுபாடுகள். ஒரிசா ஒப்புநோக்க வளமான நிலம். அங்குள்ள சமூக அமைப்பு காரணமாகவே வறுமை நிலவுகிறது. மாறாக மத்தியபிரதேசத்தின் பல பகுதிகள் நெரிசலையே கண்டு வாழும் நமது  கண்ணுக்கு பெரும் வெறுமையை அளிக்கும். மக்கள் நடமாட்டமே இல்லாத வெற்று நிலம். வறண்ட சிறு குன்றுகள். தேம்பிய குறுங்காடுகள். இப்பகுதியின் பொருளியல் மேம்பாட்டுக்குச் சுதந்திரம் கிடைத்தபின் எதுவும் செய்யப்படவில்லை என்பது உண்மை.

ஆனால் இந்தியாவின் எப்பகுதிக்கும் அப்படித் திட்டமிட்ட முன்னேற்றம் ஏதும் வந்துவிடவில்லை. விதிவிலக்குகள் உண்டு. இன்றைய கொங்குபகுதி இருபது முப்பதுகளில் தண்டகாரண்யம் மாதிரித்தான் இருந்திருக்கும். ஆனால் டாக்டர் சுப்பராயன், அவினாசிலிங்கம், சி.சுப்ரமணியம் போன்ற தலைவர்கள் உருவானார்கள். அவர்கள் வழியாக அந்நிலத்தைச்சுற்றி அணைக்கட்டுகள் உருவாயின. பாசனநீர் வந்தது. விவசாய உபரி,  மெல்லத் தொழில்களாக மாறியது. இன்று இந்தியாவின் வளமான நிலப்பகுதிகளில் ஒன்றாக உள்ளது கொங்குமண்டலம்.

அதேபோல ஒட்டுமொத்த ராயலசீமாப் பகுதியும் இன்று தெலுங்குகங்கா திட்டத்தால் வளம்பெற்றிருக்கிறது. இன்னும் இருபது வருடங்களில் ராயலசீமா இந்தியாவின் முக்கியமானப் பொருளியல் மையமாக ஆகும். பக்ராநங்கல், நாகார்ஜுனசாகர் போன்ற பெரும் அணைக்கட்டுகளால் குஜராத் மற்றும் ராஜஸ்தானின் பல வறண்டபகுதிகள் வளம்பெற்று வாழ்க்கை சட்டென்று மலர்ச்சி கண்டிருக்கிறது என்பது வரலாறு .

ஆனால் பெரும்பாலான தருணங்களில் நவீன காலகட்டம் மூலம் இயல்பாக வந்தடையும் சாதரணமான வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டு மக்கள் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்தார்கள் என்பதுதான் உண்மை. பெரும்பாலான இடங்களில் ஊழல் நோக்குடனேயே திட்டங்கள் கொண்டுவரப்படுகிறன. சுரண்டலே தொழில் மலர்ச்சியை உருவாக்குகிறது. உள்ளூர் முதலாளிகளே பொருளியல் கட்டமைப்புகளை உருவாக்குகிறார்கள். அத்தனை மக்கள் பிரதிநிதிகளும் கைவிட்டு அள்ளிய பொதுநிதியாலேயே நலத்திட்டங்கள் நிகழ்கின்றன.

ஆனால் அத்தனை குளறுபடிகளுக்கு அப்பாலும் வளர்ச்சி என்ற ஒன்று நிகழ்கிறது. காரணம் மக்களிடம் இருக்கும் முன்னேற வேண்டும் என்ற துடிப்பு. உலகியல் பேராசை. அதற்காக அத்தனை வழிகளையும் பயன்படுத்திக்கொண்டு முட்டி மோதி உழைக்கும் இயல்பு. அவர்களின் வல்லமைகள், சிறுமைகள் அனைத்தும் சேர்ந்துதான் அந்த விசையை உருவாக்குகிறது. மக்களை ஒரு பெரும் பொருண்மைஅமைப்பாக எடுத்துக்கொண்டால் அது பொருளியல் முன்னேற்றத்தை எப்போதும் நாடுகிறது. அதற்கு ஒரு சிறிய விரிசலே போதும், அதைக் கோட்டைவாசலாகத் திறந்துகொள்ளும்.

ஆனால் இன்று மாவோயிசம் ஓங்கியிருக்கும் இப்பகுதிகளில் இது நிகழவில்லை. ஒரிசாவிலும் சத்திஸ்கரிலும் உள்ள கீழ்த்தட்டு மக்களை நான் அவதானித்திருக்கிறேன். அவர்களிடம் அந்த விசை இல்லை. அந்த விசை உண்மையில் என்ன? அது நவீன முதலாளித்துவம் உருவாக்கும் ஒரு மனநிலை மட்டுமே. அது நிலப்பிரபுத்துவத்தில் பெரும்பாலானவர்களிடம் இருப்பதில்லை. பழங்குடியினரில் எவரிடமும் இருப்பதில்லை. பழங்குடிகளின் பகுதிகள் முழுமையாக தேங்கிக்கிடக்கின்றமைக்கும் நிலப்பிரபுத்துவம் ஓங்கிய பகுதிகள் வளராமலிருப்பதற்கும் இதுவே காரணம்.

சமூகத்தை பொருளியல் ரீதியாக முன்னெடுத்துச்செல்லும் அந்த விசை ஒவ்வொரு ’நவீன’ மனிதனுக்குள்ளும் இருக்கிறது. அந்த மனநிலை மனிதனை ’முன்னேறு, அள்ளு, எடுத்துக்கொள், இன்னும் செல்’ என்று தூண்டிக்கொண்டே இருக்கிறது. பொருளியல் முன்னேற்றம் மட்டுமே அதன் முதல்குறிக்கோள். அதற்காகப் பிற அனைத்தையும் அது இழக்கும். அதன் பொருட்டு அது அனைத்துப் பண்பாட்டுக்கூறுகளையும் மாற்றி அமைக்கும். சூழல் அழிவதை, சமூகமரபுகள் சிதைவதை அது பொருட்படுத்தாது. நாம் அதை நம்மைச்சுற்றியே காண்கிறோம். குமரிமாவட்டமானாலும், கொங்குவட்டாரமானாலும் எங்கே பொருளியல் வளர்ச்சி உள்ளதோ அங்கே இந்த மனநிலையே இருக்கும்.

இந்தமனநிலையின் அடிப்படைகள் இரண்டு. நுகர்வு வெறி, எதிர்காலத்தை நோக்கிப்பாயும் வேகம். நவீன முதலாளித்துவம் மனிதனின் கட்டற்றநுகர்வு மீது தான் அமர்ந்துள்ளது. இன்னும் இன்னும் என நுகரச்செய்யும் மனநிலையை அது தன் அனைத்து ஊடகத்தொடர்புகள் மூலமும் வளர்த்துக்கொண்டே உள்ளது. நுகர்வு மட்டுமே இன்பம் என அது அதன் உறுப்பினர்களைக் கற்பிக்கிறது. உறவுகளில், சடங்குகளில் இன்பங்களை கண்டுகொண்ட பழங்குடி- நிலப்பிரபுத்துவப் பண்பாட்டுக் கூறுகளை அது முழுமையாக ரத்து செய்கிறது. உறவுகளையும் சடங்குகளையும் இயற்கையையும் ஆன்மீகத்தையும்கூட அது நுகர்பொருளாக ஆக்கி விடுகிறது.

நுகர்வுவெறி முதலாளித்துவ சமூகத்தின் எந்த தனிமனிதனையும் நிம்மதியாக எங்கும் அமர விடுவதில்லை. அவன் நுகராத பொருட்களினால் ஆனதே இவ்வுலகின் பெரும்பகுதி. ஆகவே அவன் வேலைசெய்தாக வேண்டும். மேலும் சம்பாதித்தாகவேண்டும். இன்னமும் வெற்றி, மேலும் பணம். குதிரை முன் காரட் போல. அதை மேலும் விரைவுபடுத்துகிறது முதலாளித்துவ சமூகம் அளிக்கும் சொத்து சேர்க்கும் வசதி. ஒவ்வொரு தனிமனிதனும் தனக்காக மட்டும் அல்ல தன்னுடைய வரப்போகும் தலைமுறைகளுக்காகவும் சேர்க்கலாம். சேர்த்தவற்றை அந்த வாரிசுகளுக்கு கொண்டுசேர்க்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறது இச்சமூக அமைப்பு. நம்மைச்சுற்றி அனேகமாக அனைவருமே வாரிசுகளுக்காகச் சேர்த்துக்கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு கணமும்.

நிலப்பிரபுத்துவ மனநிலையும் பழங்குடி மனநிலையும் அகலாத பகுதிகளில் இந்த நவீன முதலாளித்துவ மனப்போக்கு ஒரு சமூகசக்தியாக ஆகியிருக்காது. ஆகவே அச்சமூகம் எல்லா வாய்ப்புகளையும் பயன்படுத்திக்கொண்டு முன்னேறும் விசை கொண்டிருக்காது. நான் தொண்ணூறுகளில் தர்மபுரி மாவட்டத்துக்குச் சென்றபோது இந்த வேறுபாட்டைச் சட்டென்று உணர்ந்தேன். குமரிமாவட்டத்தின் வேகத்துக்கு நேர்மாறாக இருந்தது தர்மபுரியின் மந்தத்தனம். காரணம் அதன் பாதிப்பங்கு பழங்குடிகளால் ஆனதாகவும் மிச்சம் நிலப்பிரபுத்துவ முறை எஞ்சியதாகவும் இருந்தது.

ஆகவே தொண்ணூறுகளில்கூட தர்மபுரி மாவட்டத்தின் பெரும்பாலான நிலங்கள் முறையான வேளாண்மை இல்லாமல் கிடப்பதையே கண்டேன். கண்ணெட்டும் தூரம் வரை நிலங்கள் ஒருபோக வேளாண்மைக்குப்பின் சும்மா கிடக்கும். தர்மபுரியை ‘களி- புளி- கம்பிளி’ என்பார்கள் வெளியே இருந்து வருபவர்கள். கேப்பைக்களியை தின்றுகொள்வார்கள். மேல்செலவுக்கு வருடம் ஒருமுறை கிடைக்கும் புளி போதும். ஒரு கம்பிளியைப்போர்த்திக்கொண்டு குந்தி அமர்ந்திருப்பார்கள் – வாழ்க்கை முழுமையாகிவிடும்.

இந்தத்  தேக்கமனநிலை, இதன் விளைவான வறுமையே அறுபது எழுபதுகளில் இடதுசாரி தீவிரவாதத்துக்கான விளைநிலமாகத் தர்மபுரியை ஆக்கியது. அந்த இடதுசாரிக்கிளர்ச்சி காரணமாக அரசின் அடக்குமுறை மக்கள்மேல் வலுப்பெற்றது. ஆகவே தேக்கம் இன்னமும் அதிகரித்தது. அதாவது இன்று சட்டிஸ்கர் இருக்கும் நிலையில்தான் அன்றைய தர்மபுரி இருந்தது.

அறுபதுகள் முதல் கொங்குமண்டலத்து மக்கள் தர்மபுரியில் குடியேறி நிலங்களை வாங்கி நவீன விவசாயம் செய்து சட்டென்று பொருளியல் வல்லமையாக உருவெடுக்க ஆரம்பித்தார்கள். அவர்களே தர்மபுரியில் ஒரு சலனத்தை உருவாக்கியவர்கள். அதன்பின் பாட்டாளி மக்கள் கட்சி. அதன் அரசியல் என்னவாக இருந்தாலும் அது அப்பகுதியின் பெரும்பாலான மக்களை சமானமான பிற சாதியினருடன் தங்களை ஒப்பிட்டுக்கொள்ள வைத்தது. தொண்ணூறுகளில் பாட்டாளி மக்கள் கட்சியின் வேகத்தால் கிராமங்கள் முழுக்க ஒரு சமூக அலை உருவாவதை கண்டேன்.

இருபதாண்டுகளுக்குப் பின் இன்று தர்மபுரிக்குச் செல்லும்போது காணும் வளர்ச்சி ஆச்சரியம் அளிக்கிறது. தொண்ணூறுகளில் கெலமங்கலம் , மாரண்டஹள்ளி என நான் சுற்றிய பகுதிகளில் மக்களில் பெரும்பாலானவர்களுக்கு ஒருவேளை கேப்பைக்களிதான் உணவு. வேலையற்ற மக்களையே எங்கும் பார்க்க முடியும். தமிழகத்தில் எங்கும் காணமுடியாத அளவுக்கு ஒரு கடைகூட இல்லாத பிற்பட்ட கிராமங்கள். இன்று கிராமங்களின் வீடுகளையும் கடைகளையும் பார்த்தாலே தெரியும் என்ன மாற்றம் நிகழ்ந்திருக்கிறதென. மாம்பழம் ஒரு முக்கியமான வணிகப்பொருளாக ஆகி கிராமங்களை மாற்றியது என்கிறார்கள்.

இன்றைய தர்மபுரியில் இடதுசாரி தீவிரவாதத்துக்கு இடமில்லை. இன்று அவர்களால் வேகமான பொருளியல் போட்டியில் ஈடுபட்டிருக்கும் மக்களைக் கவர முடியாது. தொண்ணூறுகளின் இறுதியில் நான் அங்கிருக்கும்போதே சிபிஎம்எல் நண்பர்களிடம் இதைப்பற்றி விரிவாக விவாதித்திருக்கிறேன். இன்று தர்மபுரியின் அரசியல் முதலாளித்துவ ஜனநாயகத்தின் அதே ஊழல் போட்டிதான். அதில் இன்று அடித்தளமக்களுக்கும் பங்கு உண்டு என்றாகியிருக்கிறது

ஆகவே இடது தீவிரவாத அரசியல் தன்னை தலித் அரசியலாக தொண்ணூறுகளின் இறுதியில் உருவம் மாற்றிக்கொண்டது. பிற்படுத்தப்பட்ட மக்களால் நேரடியாக ஒடுக்கப்பட்டு வாய்ப்புகள் அற்றிருந்த தலித் மக்களை அது குறிவைத்தது. ஆனால் இரண்டாயிரத்தில் தலித் அரசியல் கட்சியான விடுதலைச் சிறுத்தைகள் வலுப்பெற்றபோது அந்த வாய்ப்பும் இல்லாமல் ஆகியது. இன்று அவர்கள் அங்கே நிரப்ப எந்த அரசியல் வெற்றிடமும் இல்லை என்பதே உண்மை.

இங்கே முக்கியமாகச் சுட்டப்படவேண்டியது இந்த பொருளியல் மாற்றத்தில் கல்வி ஆற்றும் பங்கு. இன்றைய கல்வி என்பது உண்மையில் முதலாளித்துவக் கல்விதான். அது முதலாளித்துவ மனநிலைகளை மட்டுமே உருவாக்குகிறது. ஆகவே பழங்குடி மனநிலைகளை நிலப்பிரபுத்துவ மனநிலைகளைக் களைகிறது. மக்களை நுகர்வு வேகமும் எதிர்காலக்கனவுகளும் கொண்டவர்களாக ஆக்குகிறது. தமிழகத்தில் ஐம்பதுகளில் காமராஜர் பரவலாக்கிய கல்வியே இன்றைய மாற்றங்களுக்கெல்லாம் அடிப்படை என்றால் அது மிகையல்ல.

ஒரிசா கந்தமால் முதல் சத்தீஸ்கர் மையநிலம் வரையிலான மக்களின் பொருளியல் தேங்கியிருப்பதற்கான முழுமுதல் காரணம் அந்த மக்கள் தங்கள் நிலப்பிரபுத்துவகால, பழங்குடிக்கால மனநிலையில் இருந்து வெளிவராததே என அங்கே சாதாரணமாகச் சுற்றினாலே தெரியும். நவீன முதலாளித்துவ ஜனநாயகம் அளிக்கும் வாய்ப்புகளை அவர்கள் அறியவில்லை. அதை நோக்கிச்செல்லும் சவால்களும் அவர்களிடம் இல்லை. அதற்காக போராடும் ஒற்றுமையோ வேகமோ அவர்களிடம் இல்லை. நான் கண்டவரை அவர்கள் வறுமையால் மனம் மழுங்கிப்போன எளிய மக்களாகவே இருந்தார்கள்.

அந்த மனஎல்லைகளை அவர்கள் தாண்டினாலேபோதும், அவர்களுக்கான வழிகளை அவர்கள் கண்டுகொள்ள முடியும். அவர்களை விடக் கீழான நிலையில் இருந்த மக்கள் அந்த வழிகளைக் கண்டுகொண்டிருக்கிறார்கள். இந்திய ஜனநாயகம் இன்று அளிக்கும் எல்லைக்குட்பட்ட சாத்தியங்களைப் பயன்படுத்தியே அவர்கள் பல தளங்களில் மேலே செல்ல முடியும். தங்கள் பட்டினியையும் சமூகத்தேக்கத்தையும் வென்றுசெல்ல முடியும். அது இந்திய யதார்த்தத்தால் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

அதை அங்கே நிகழ்த்துவதே அம்மக்களின் இன்றைய வறுமைக்கான உடனடித் தீர்வாக இருக்க முடியும். அதற்கு அங்கே கல்வியைக் கொண்டு செல்ல வேண்டும். வணிக வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். அதற்குத் தடைகளாக இருக்கும் நிலப்பிரபுத்துவ கால அமைப்புகளை நீக்க வேண்டும். அப்படி நீக்குவதற்கு தேவையான ஒற்றுமையையும் போராட்ட வலிமையையும் அம்மக்கள் அடையவேண்டும். அதற்கான மனநிலைகளை உருவாக்கவேண்டும்.அதற்கு அவர்களால் முடியாமல் இருந்தால் அதற்காகவே அங்கே வெளியாட்களின் பங்களிப்பு நிகழவேண்டும்.

ஆம், பாட்டாளி மக்கள் கட்சி போன்ற ஒரு சாதாரணமான முதலாளித்துவக் கட்சியே அங்கே பெரும் மாற்றங்களை உருவாக்க முடியும். அந்த வாய்ப்பை இந்த முதலாளித்துவ ஜனநாயகம் அவர்களுக்கு வழங்குகிறது. அந்த வாய்ப்பு பயன்படுத்தப்பட்டதா என்ன? இந்தியாவில் பிற பகுதிகளில் நிகழ்ந்த அந்த மாற்றம் அங்கே நிகழ வழி திறக்கப்பட்டதா? இல்லை என்பதே உண்மை.

அந்த இடைவெளியை பயன்படுத்திக்கொண்டு அங்கே இடதுசாரி அரசியல் ஊடுருவியது. இன்று அப்பகுதிகள் அவர்களால் கையகப்படுத்தப்பட்டுள்ளன. இன்று அங்கே நிகழ்வதென்ன? அங்குள்ள மக்களின் வறுமையும் பிற்பட்டநிலைமையும் மாறுவதற்கான வழிகள்தான் அங்கே செய்யப்படுகின்றனவா? அவர்களுக்கிருந்த மையவழி இந்தியா முழுக்க இருந்த வழி. தெலுங்கானாவிலும் ராயலசீமாவிலும் தர்மபுரியிலும் திறந்த வழி. அதை இடதுசாரிகள் மூடினார்கள். மாற்று வழி எனத் தங்கள் பாதையை அவர்கள் மேல் சுமத்தினார்கள்.

அங்கே மக்களுக்கு கல்வி வசதியும் வணிக வசதியும் எவ்வகையிலாவது உருவாக்கப்படுகின்றனவா? மாறாக, அம்மக்களின் வறுமையையும் அதன் விளைவான ஆத்திரத்தையும் பயன்படுத்திக்கொண்டு அவர்களுக்குச் சம்பந்தமே இல்லாத ஓர் அரசியல் சக்தி அங்கே புகுந்து அவர்கள் மேல் ஆதிக்கம் செலுத்துகிறது எனபதல்லவா உண்மை? அது அவர்களைக் கருவிகளாக்கித் தங்கள் அரசியல் இலக்குகளை நிறைவேற்றுகிறது. அதற்காக அந்த மக்களின் கல்வி, வணிகம் சார்ந்த எல்லாச் சாத்தியங்களையும் முழுமையாகவே முடக்குகிறது. இதுதான் உண்மையில் நடந்துகொண்டிருக்கிறது. இதை ஊகிக்கப் பெரிய கோட்பாட்டு வாசிப்போ அரசியல் ஞானமோ ஒன்றும் தேவையில்லை. கொஞ்சம் பொதுப்புத்தி இருந்தாலே போதும்.


[மேலும்]

ஐஸ்வரியா ராயும் அருந்ததிராயும்

எனது இந்தியா

மார்க்ஸ் கண்ட இந்தியா

ஊடகங்கள், அரசியல், விவாதங்கள்

எனது அரசியல்

முந்தைய கட்டுரைதிலீப்குமாருக்கு விளக்கு விருது
அடுத்த கட்டுரைஆ.மாதவன் கடிதங்கள்