ஏழு ஆழங்களுக்கு அடியில் தன் இருண்ட மாளிகையில் இருள்வடிவ அரியணையில் அமர்ந்து அறம்புரந்த மறலியின் முன்னால் வந்து வணங்கி நின்ற ஏவலனாகிய வேளன் பணிந்து “அரசே, தங்கள் ஆணையின்படி திரேதாயுகத்திலிருந்து நைமிஷாரண்யத்தில் காத்துநின்றிருந்தேன். இன்று காலைமுதல் அங்கே இளைய யாதவன் ஒருவன் வந்து குடில்கட்டி குடியிருப்பதைக் கண்டேன். கருமுகில்நிற மேனியன். விளையாட்டுப்பிள்ளையின் விழிகள் கொண்டவன். பீலிசூடிய குழலன். தனித்து தனக்குள் சொல்திரட்டி அங்கிருந்தான்.”
“அரசே, அவன் சென்றவழியெங்கும் பின்தொடர்ந்து சென்று நோக்கினேன். அவன் கடந்துசென்றபோது அனைத்து தாமரைகளும் அவனை நோக்கி திரும்பின. அவன் அருகணைந்ததுமே மூங்கில்கள் இசையெழுப்பின” என்று வேளன் சொன்னான். “யார் அவன் என்று வியந்து சென்று நோக்கினேன். அவன் சாலமரத்தடியில் தனித்து அமர்ந்திருந்தபோது இருபக்கமும் நுண்வடிவில் இரண்டு பேருவத் தேவர்கள் நின்றிருப்பதை கண்டேன். எவர் என்று அவர்களை அணுகி கேட்டேன். தாங்கள் ஜயனும் விஜயனும் என்றனர். விண்ணளந்த பெருமான் மண்ணில் மானுடனாக உருவெடுத்திருப்பதனால் மானுடவிழிகளறியாமல் காவலுக்கு நின்றிருப்பதாக சொன்னார்கள்.”
“இவனா முன்பு ரகுவின் குலத்தில் அயோத்தி நகரில் தசரதன் மைந்தனாகப் பிறந்தவன் என்று அவர்களிடம் கேட்டேன். ஆம், அன்றும் நாங்களே அவனுக்கு இருபுறமும் நின்றிருந்தோம் என்றனர். அக்கணமே அங்கிருந்து கிளம்பி இங்குவந்தேன். எனக்களிக்கப்பட்ட பணிமுடிந்தது என்று எண்ணுகிறேன்” என்றான் வேளன். “தாங்கள் காத்திருந்தவன் அவனே என்பதில் ஐயமில்லை. பெருமாளின் பிறவியுரு அன்றி பிறிதொருவன் அவ்வண்ணம் அனைத்தும் முழுமைகொண்டு அமையவியலாது.”
யமன் தன் அவையமர்ந்த காகபுசுண்டரை அழைத்து வேளனின் செய்தியை கேட்கச்சொன்னார். அவன் சொல்லி முடித்ததுமே “ஐயமேயில்லை, இது அவனே” என்றார். “அரசே, ஒரு யுகம் முழுக்க நீங்கள் காத்திருந்தது இதன்பொருட்டே. நைமிஷாரண்யமே நீங்கள் உசாவும் வினாக்களுக்கு விடையென அழியாச்சொல் எழவேண்டிய இடம்” என்றார் காகபுசுண்டர். யமன் தன் கதையை தன் உருவம் கொள்ளச்செய்து அரியணையில் அமர்த்தி தன்பணியை இயற்றும்படி ஆணையிட்டுவிட்டு காரான் ஊர்தியில் ஏறி மண்ணுக்கு வந்தான். முகிலின்நிழல் என எதையும் கலைக்காமல் மண்ணில் ஊர்ந்து நைமிஷாரண்யத்தின் விளிம்பை அடைந்தான்.
தனக்குரிய தென்றிசையில் அமைந்த சிற்றாலயத்தின் முன்சென்று நின்றான். தன் வினாக்களை ஒருங்குதிரட்டி சொல்லென்றாக்க முயல்கையில் எதுவும் எஞ்சாமை கண்டு திகைத்தான். நிலைகொள்ளாமல் அங்கே நின்று தவித்தான். மீண்டும் மீண்டும் தன்னுள்ளத்தை முட்டிப்பெயர்க்க முயன்றான். பின்னர் சோர்ந்து மெல்ல கால்தளர்ந்து அமர்ந்தான். பிறிதொன்றும் எண்ணத் தோன்றவில்லை. எண்ணியபோது எழும் நாரதரை நினைவுகூர்ந்து “இசைமுனிவரே, வருக! எனக்கு உதவுக!” என வேண்டினான். சிறுகருவண்டின் மூளல் ஓசை எழுந்தது. யாழிசை என நெறிகொண்டது. நாரதர் அவன் முன் தோன்றினான்.
“முனிவரே, எனக்கு உதவுக! ஒரு யுகம் முழுமையும் நான் வினாக்களுடன் இருந்தேன். சொல்லிச்சொல்லி திரட்டி வைத்திருந்தேன். இப்போது என் உள்ளம் ஒழிந்துகிடக்கிறது .நான் அவனை பார்க்கையில் இன்று கேட்பதற்கேதுமில்லை” என்று யமன் சொன்னான். “ஆனால் கேள்விக்குரிய நிறைவின்மையின் பதற்றம் மட்டும் அவ்வண்ணமே எஞ்சுகிறது. கேட்காமல் நான் இங்கிருந்து செல்லவும் இயலாது.” நாரதர் புன்னகைத்து “காலத்திற்கிறைவனே, நீர் இங்கு மண்ணில் மானுட உருக்கொண்டு வந்திருக்கிறீர். நீர் எண்ணுவனவும் மானுட மொழியிலேயே அமைந்துள்ளன. நீர் கேட்கவிழையும் மெய்மை இங்கு இவ்வாழ்வில் என்னவாக நிகழ்கிறதென்பதைக்கொண்டே அதை சொல்வடிவாக்க முடியும்” என்றார்.
“அறிக, வாழ்க்கையிலிருந்து மட்டுமே மெய்யுசாவலின் வினாக்கள் எழமுடியும், விறகில் எரியெழுவதுபோல. வாழ்க்கையின் மீதே மெய்மை நிலைகொள்ளமுடியும், பீடத்தில் இறையுரு போல. இங்குள்ள வாழ்விலிருந்து உம் வினாவை திரட்டுக!” யமன் திகைத்து “நான் இங்குள வாழ்க்கையை அறியேன்” என்றான். “அவ்வண்ணமென்றால் இங்குள்ள வாழ்க்கையை வாழ்ந்தறிக!” என்றார் நாரதர். உளம்சோர்ந்து யமன் தலைகுனிந்தான். நாரதர் கனிந்து புன்னகைத்து அவன் தோளைத்தொட்டு “இங்குள்ள காலத்தையே இமைக்கணமென சுருக்கி அடையமுடியும். இங்கு நீர் விழையும் ஒருவாழ்க்கையில் புகுந்து வாழ்ந்து மீள்க!” என்றார்.
புரியாமல் “அது எவ்வண்ணம்?” என்றான் யமன். “வாழ்ந்த வாழ்வை விழிப்புக்குள் நிகழ்வுகளெனத் தொகுக்கிறது மானுட உள்ளம். நிகழ்வுகளை நினைவுகளாக்குகிறது கனவு. ஆழ்நிலையில் நினைவுகள் குறிகளாகின்றன. குறிகள் செறிந்து மாத்திரைகளாகி துரியத்தில் உள்ளன. இப்புவியில் இன்று இளைய யாதவனைக் காணும் பெருவிழைவுடன் தவித்தும் தயங்கியும் இருக்கும் எவரையேனும் தெரிவுசெய்க! அவனுள் புகுந்து இமைக்கணம் வாழ்ந்து எழுக! நான்குநிலைகளில் அவனுள் அமைந்தெழுந்தால் அவனே ஆவீர். அவன் என பெயர்சூடி முகம் கொண்டு உளம்பூண்டு சென்று இளைய யாதவனைக் கண்டு சொல்லாடுக!” என்றார் நாரதர்.
“அவை அவ்வாழ்வில் அவன் திரட்டிய வினாக்களாகத்தானே அமையும்?” என்று யமன் கேட்டான். புன்னகைத்து “ஆம், ஆனால் எவ்வினாவும் இறுதியில் ஒரேவிடையை சென்றடைவதேயாகும்” என்றார் நாரதர். “இங்கு இமைக்கணக் காட்டில் சொல்லப்பட்டவை என்பதனால் அது காலமற்றது. ஒருவர் பொருட்டு நிகழினும் அது அனைவருக்குமான மெய்மையாக இங்கு திகழ்க!”
நாரதர் அகன்றபின் யமன் கண்களை மூடி ஒருகணம் எண்ண அவன்முன் நிழல்பெருகியதுபோல யமபுரியின் காலவடிவ ஏவலர் வந்து நிறைந்தனர். “செல்க எட்டுத்திக்கும். இக்கணம் எவன் இளைய யாதவனைக் கண்டேயாகவேண்டும் என்று உச்சத்தில் உளம்கொதிக்க எண்ணுகிறானோ அவனைக் கண்டுசொல்க” என்றான். மறுகணமே மீண்டுவந்த ஏவலன் ஒருவன் “அரசே, அங்கநாட்டில் சம்பாபுரியின் அரண்மனையின் மஞ்சத்தறையில் துயில்நீத்து எழுந்து நின்று இருள்நோக்கி ஏங்கும் ஒருவனை கண்டேன். அவன்பெயர் கர்ணன். அவன் இக்கணமே இளைய யாதவனை காணவில்லை என்றால் உயிர்துறந்துவிடுவேன் என்பதுபோல் உடல்விம்மி நின்றிருந்தான்” என்றான்.
“அவனே” என்று சொன்ன யமன் மறுகணமே கர்ணனின் அருகே தோன்றினான். ஒரு கணம் தன்னுள் ஓர் இழப்புணர்வு ஏற்படுவதை உணர்ந்து சற்று அசைந்த கர்ணன் பெருமூச்சுவிட அதனூடாக உள்நுழைந்து வெளியேறி மீண்டும் நைமிஷாரண்யம் வந்தான் தென்றிசைத்தலைவன். அப்போது கரிய நெடிய உடலும், கூரிய விழிகளும், புரிகுழல்சுரிகளும், ஒளிரும் குண்டலங்களும், மார்பில் சூரியபடம் பொறிக்கப்பட்ட பொற்கவசமுமாக அங்கநாட்டரசனாக இருந்தான். நீண்ட காலடிகள் எடுத்துவைத்து நைமிஷாரண்யத்திற்குள் நுழைந்து இளைய யாதவன் தங்கியிருந்த குடிலை சென்றடைந்தான்.
தன் குடிலுக்குள் தரையில் விரிக்கப்பட்ட தர்ப்பைப்புல் பாயில் துயின்றுகொண்டிருந்த இளைய யாதவர் மூங்கில்தட்டியாலான கதவை எவரோ தட்டுவதை கேட்டு விழிப்புகொண்டு எழுந்தமர்ந்து “எவர்?” என்றான். “நான் அங்கநாட்டரசன், கர்ணன்” என்று குரல்கேட்டதும் எழுந்து குழலும் ஆடையும் திருத்தி கதவை திறந்தார். முகம் காட்டும்பொருட்டு நெடிய உடலைக் குனித்து நின்றிருந்த கர்ணன் “நீங்கள் இங்கிருப்பதை அறிந்து வந்தேன். தனிமையில் சந்திக்கவேண்டும் என்று நெடுநாட்களாக எண்ணியிருந்தேன். ஒவ்வொருநாளுமென அது தள்ளிப்போயிற்று. இத்தருணம் இனி அமையாதோ என்று எண்ணினேன்” என்றான்.
“உள்ளே வருக!” என்று அழைத்த இளைய யாதவர் சிக்கிமுக்கிக் கற்களை உரசி அனலெழுப்பி புன்னையெண்ணை இடப்பட்ட மண்விளக்கின் திரியை பற்றவைத்தார். தர்ப்பைப்புல் பாயை விரித்து “அமர்க!” என்றார். கர்ணன் அமர்ந்ததும் தானும் முன்னால் அமர்ந்து “இவ்விரவில் குடிநீர் அன்றி இங்கு விருந்தென அளிப்பதற்கு எதுவும் இல்லை” என்றார். “நான் விருந்துண்ண வரவில்லை” என்று கர்ணன் சொன்னான். “உங்களைச் சந்தித்து என் ஐயம் ஒன்றை கேட்டுச் செல்லவே வந்தேன்.” இளைய யாதவர் புன்னகையுடன் “சொல்க!” என்றார்.
கர்ணன் சிலகணங்கள் தன் அகச்செலவை நிறுத்தி சொற்களை தொகுத்துக்கொண்டு “என் அகம் கொந்தளித்துக்கொண்டிருக்கிறது. ஒருகணமும் முழுவிழிப்பு நிகழாதபடி அதை மதுவூற்றி அணைத்துக்கொண்டிருக்கிறேன்” என்றான். முதற்சொற்றொடர் அமைந்ததும் உள்ளம் சொல்லென்றாகி எழ, உரத்தகுரலில் “யாதவரே, உள்ளிருந்து ஊறி வளரும் நஞ்சு என்னை எரிக்கிறது. நான் கொண்ட நல்லியல்புகள், தேறியதிறன்கள், கற்றறிந்த மெய்மைகள் அனைத்தையும் அது அழித்துக்கொண்டிருக்கிறது. மீட்பென்று ஏதேனும் இருந்தால் அது உங்களிடமே என்று தோன்றியது” என்றான்.
“அங்கரே, மீட்பென்பது தன்னிடமே என சொல்கின்றன வேதமுடிபின் நூல்கள். தானென்றுணர்தலே மெய்மையிலமர்தல். அதன்பொருட்டு கணந்தோறும் வாயில்களை தட்டுவதொன்றே நாம் செய்யக்கூடுவது. திறக்கும் கணமும் வாயிலும் ஒருங்கமையும் என்றால் மீட்பு நிகழ்கிறது” என்று இளைய யாதவர் சொன்னார். “கணந்தோறும் என நிகழும் ஆயிரம்கோடி அறிதல்களில் ஒன்றில் உள்ளது நமக்கான மெய்மை. அது கல்லில் தெய்வமென எழுந்து நம்மை ஆட்கொள்வதே விடுதலை.”
“ஆம், உங்கள் கொள்கை வேதமுடிபு அல்லவா? ஒவ்வொரு உயிரும் கொள்ளும் மீட்பைப்பற்றி நீங்கள் பேசுகிறீர்கள்” என்றான் கர்ணன். அக்குரலில் இருந்த கசப்பைக் கண்டு இளைய யாதவர் புன்னகைத்தார். “சொல்லுங்கள், எனது மீட்பை எவ்வண்ணம் நான் அடையமுடியும்?” என்றான் கர்ணன். இளைய யாதவர் “அங்கரே, மீட்பு என்பது துயரிலிருந்து விடுதலையை குறிக்கும். எது உங்கள் துயரென்று நீங்களே முற்றறிந்தால் மட்டுமே அதை நோக்கிய முதல் அடிவைப்பு நிகழவியலும்” என்றார். “அதை பிறர் அறியவே முடியாது என்பதே மானுடவிளையாட்டு. ஏனென்றால் அது உணரும்போது உருக்கொள்வது. சொல்லும்போதே உருமாறுவது. வகுக்கையில் மீறிநிற்பது.”
“எனவே, மானுடர் எவ்வகையிலும் எங்கும் வெளிப்படுத்தியிருக்கும் அனைத்துத் துயர்களும் பொய்யே” என இளைய யாதவர் தொடர்ந்தார். “அன்பைநாடி, அடைக்கலம்கோரி, சினத்தைமூட்ட, பொறாமையைக் கிளப்ப, வஞ்சம் தீர்க்க, பிழையை மறைக்க, பழியை மறக்க, பொறுப்பை துறக்க என அனைத்துக்கும் மானுடர் கைக்கொள்வது துயரையே. எனவே இவ்வுலகில் பெரிதும் புனையப்பட்டது துயர்தான். புனையப்பட்ட துயருக்குள் எங்கோ ஒளிந்திருக்கிறது மெய்த்துயர், குழைத்துக்கட்டப்பட்ட மண்சுவருக்குள் விதை என.”
“துயர்கள் மூவகை. ஆதிதெய்விகம், ஆதிபௌதிகம், ஆதிமானுஷிகம் என நூல்கள் அவற்றை வகுக்கின்றன. இறைமுதல் துயரும், பொருள்முதல் துயரும் அனைத்துயிருக்கும் உள்ளவை. நோயும், முதுமையும், இறப்பும் இறைவிளையாடல்கள். இழப்பும் வலியும் பொருள்விளைவுகள். அங்கரே, விலங்குகளுக்கும் சிற்றுயிர்களுக்கும் அவைமட்டுமே உள்ளன. அவை துயர்குறித்து எண்ணுவதில்லை. எனவே துயரை பேணிவைத்திருப்பதில்லை. வளர்த்தெடுப்பதுமில்லை.”
“அவ்விரு துயர்களையும் வெல்லும் வழி ஒன்றே. அமைந்திருத்தல், முரண்கொள்ளாதிருத்தல், வழிப்படுதல். ஒவ்வொரு உயிரின் உடலிலும் அவற்றின் நெறியும் இயல்பும் வடிவமென்றும் வழக்கமென்றும் பொறிக்கப்பட்டுள்ளது. மான் தாவலாம், பசு தாவலாகாது. குரங்கு மரமேறலாம் நாய் நிலம்விட்டெழலாகாது. அவ்வியற்கையில் அமைகையில் அவை துயர்களை வெல்கின்றன. அவற்றை ஆக்கிய விசை அள்ளிக்கொண்டுசெல்லும் திசையை விரைந்து சென்றடைகின்றன. அவை செய்யக்கூடுவது அது மட்டுமே.”
“மானுடமுதல் துயர் நமக்கு மட்டும் உரியது. அனைத்துத் துயர்களையும் விதையென்று நட்டு உணர்வுபெய்து மரமாக்கி காடாக்கிக்கொள்கிறோம். நாம் சமைக்கும் அத்துயரை நாமே அள்ளிப்பூசிக்கொள்கிறோம், அணியென சூடிக்கொள்கிறோம். பெருக்கித்தேக்கி அதில் திளைக்கிறோம், அதில் மூழ்கி மடிகிறோம். அதை வெல்லவே வேதமுடிபுக்கொள்கை வழியுசாவுகிறது. அது அறியாமையின் விளைவான துயர் என்பதனால் அறிதலொன்றே அதற்கு மாற்று என்று வகுக்கிறது. கனவில் எழும் காட்டெரியில் இருந்து தப்ப கனவுக்குள் நீர்நிலை தேடுவது வீண்செயல். விழித்தெழுவதே செய்யக்கூடுவது.”
பெரும்சீற்றத்துடன் கர்ணன் கையை தூக்கினான். “அது உங்களுக்கு, சொல்கொண்டு வெறும்வெளியில் தத்துவத்தைப் புனைந்தாடும் நூல்வல்லுநர்களுக்கு. நான் எளியவன். என்முன் கல்லென மண்ணென கைக்கும் கண்ணுக்கும் சிக்குவதாக நின்றுள்ளது என் துயர்… பிறிதொன்றால் அதை மறைக்கவியலாது. உங்கள் அணிச்சொற்கள் ஆயிரம்பெய்தாலும் அதை கரைக்கவும் முடியாது.” இளைய யாதவர் “அவ்வண்ணமென்றால் கூறுக, உங்கள் துயர் என்ன?” கர்ணன் “என் சொற்களல்ல, என் உணர்வுகளால் இங்கு அதை முன்வைக்கிறேன்” என்றான். ‘என் சீற்றமும் கண்ணீரும் அதை சொல்லட்டும்.” இளைய யாதவர் “ஆம், அதையே முதன்மையென கொள்கிறேன்” என்றார்.
சொல்லவிருப்பதை முன்சென்று தொட்டு அறிந்த அவன் உள்ளத்தின் சீற்றம் மேலும் பெருகியெழுந்தது. “இளைய யாதவரே, நீர் அறியாதவரல்ல நான் யாரென்று. எந்தையும் தாயும் எவர் எக்குடியினர் என்று” என்று கூவினான். “ஆம், அறிவேன்” என்றார் இளைய யாதவர். “சொல்க, என் பிறப்புக்கு முன்னரே என் வாழ்க்கைக்களங்கள் முற்றிலுமாக வகுக்கப்பட்டுவிட்டன அல்லவா? ஷத்ரியப்பெருங்குடியில் கருக்கொண்டேன். சூதச்சிறுமகனாக வளர்ந்தேன். அவைதோறும் இழிவுசூடினேன். எனக்குரிய இடங்கள் அனைத்திலும் புறந்தள்ளப்பட்டேன்” என்று கர்ணன் சொன்னான். உணர்வெழுச்சியுடன் இருகைகளையும் விரித்தான். நெஞ்சு ஏறியிறங்க, விழிகள் நீர்மைகொள்ள, இடறிய குரலில் கூவினான்.
“என் தகுதிகளே எனக்கு பகையாயின. என்னை இழிவுசெய்வோர் அவற்றைக் கண்டு அஞ்சி நூறுமடங்கு சிறுமைசெய்தனர். அத்தகுதிகளால் நான் கொண்ட ஆணவம் ஆயிரம் மடங்கென அச்சிறுமையை என்னுள் துயரென்றாக்கியது. நான்கொண்ட துயர்கண்டு என் எதிரிகள் அது வெல்லவியலா படைக்கலம் என்று கண்டுகொண்டனர். அவர்கள் தங்கள் வஞ்சத்தால் நான் என் துயரால் அதைப் பெருக்கி பேருருவம் கொள்ளச்செய்தோம். ஒற்றைக்கலத்தின் நஞ்சை இருபுறமும் நின்று கடைந்து நொதித்துப் பெருகச்செய்தோம்.”
“இழிவை நிகர் செய்வதே இலக்கென்று இதுவரை வாழ்ந்தேன். யாதவரே, நான் கற்ற கல்வியனைத்தும் அவ்விழிவை கடப்பதற்காகவே. நான் தேர்ந்த திறன்கள் எல்லாம் அச்சிறுமைகள் முன் தலைநிமிர்வதற்காகவே. ஒவ்வொரு கணமும் நெஞ்சு நிமிர்த்தியதெல்லாம் உளம்சுருங்கியதனால்தான். அரசும், செல்வமும், கொடையும், போரும், வெற்றியும் அது ஒன்றுக்காகவே. யாதவரே, வாழ்நாளெல்லாம் நான் எண்ணியவை அனைத்தும் என்னை நோக்கும் விழிகளை வெல்வதுகுறித்தே” என்று கர்ணன் தொடர்ந்தான். பேசப்பேச உளம் தொய்ந்து அவன் குரல் தாழ்ந்தது. முறையீடென, வேண்டுதலென ஒலிக்கலாயிற்று.
“ஒருநாள் தேரில் நகர்வலம் செல்கையில் இழிசினன் ஒருவன் மாசு அள்ளும் தன் தொழில் முடித்து அழுக்குடையும் சேற்றுக்கூடையுமாகச் செல்வதை கண்டேன். அந்தியில் மதுவுண்டு களித்து கைவீசி சிரித்தபடி அவன் நடந்தான். ‘யாரடா அவன்? வழிவிலகுக. வருபவன் எவர் தெரியுமா? நான் சாரனின் மைந்தன் கர்மன். நிகரில்லாதவன்’ என்று சிலம்பிய குரலில் கூவினான். வழியில் நின்ற அயல்மகன் ஒருவனிடம் உரக்க, ‘எளியவனே, என்ன வேண்டும் உனக்கு? பொன்னா? பொருளா? இதோ உள்ளது எட்டு வெள்ளிப்பணம். இன்று நான் ஈட்டிய ஊதியம். எடுத்துக்கொள். குடி, உண், கொண்டாடு. இது இழிசினனாகிய கர்மன் உனக்களிக்கும் கொடை!’ என்று நகைத்தான்.
“அந்த அயலவன் அருவருப்புடன் ‘விலகிச் செல்க!’ என கைவீசி முகம்சுளித்து சொன்னான். இழிசினன் மாசு தெறிக்க தன் கைகளை வீசி ‘இப்புவியையே நான் அளிப்பேன். எனக்கென்று ஒன்றுமில்லாமல் அளிப்பேன். நான் கொடைவள்ளலாகிய கர்ணன். இப்புவியாளும் அரசன்!’ என்று கூச்சலிட்டான். தன் நுனிக்காலில் எழுந்து நின்று ‘என் தலைசூடும் சூரியனைப் பார். என் கால்களை ஏந்தும் புவிமகளைப்பார். நானே பிரம்மம்!‘ என்றான். அயலவன் இளிவரல் சினமென்றாக ‘செல்க, கீழ்மகனே!’ என கையை ஓங்கிவிட்டு அகன்று செல்ல இழிமகன் ‘அஞ்சி ஓடுகிறான் பேடி!’ என நகைத்தான்..”
“என் உடல் விதிர்த்துக்கொண்டிருந்தது. புரவியை மெல்ல உந்தி முன்னகர்த்தவேண்டியிருந்தது. அங்கு நின்றிருந்தவன் நான். யாதவனே, அவ்விழிசினன் அக்கருவில் பிறந்தமையாலே அவன் வாழ்க்கை வகுக்கப்பட்டுவிட்டது என்றால் இங்கு அறிவரும் முனிவரும் ஆய்ந்தளிக்கும் ஆயிரமாயிரம் மீட்பின் கொள்கைகளால் என்ன பயன்? தெய்வங்களால் ஆவதுதான் என்ன? அவன் அவ்விழிவில் திளைக்கலாம். தன்னைத் திரட்டி எழுந்து தருக்கி நின்று நான் அதுவல்ல என்று அறைகூவலாம். இரண்டும் ஒன்றே. அவன் அதற்கப்பால் ஒரு மெய்மையை ஒருபோதும் தேடவியலாது. எந்நிலையிலும் அவ்விழிவை இல்லையென்றாக்கும் ஒரு தருணத்தைச் சென்றடையவும் இயலாது.”
“என் ஊழ் முற்றாக வகுக்கப்பட்டுவிட்டது. என்னை கருக்கொண்ட அன்னையால், அவளால் மறுக்கப்பட்ட தந்தையால், இல்லாமலான குலத்தால். அவர்கள் கூடநேர்ந்த அந்தக் கணத்தால் அச்சூழலால் நான் ஆவதும் எய்துவதும் முழுமையாக வரையப்பட்டுவிட்டது. எஞ்சியது இம்மாறாப்பாதையும், இங்கு கண்ட முள்ளும் நஞ்சும் புண்ணும் சீழும் கண்ணீரும் மட்டுமே. வெற்றுத் தருக்குகளின் உள்ளீடின்மைகள், தனிமையிருளின் கையறுநிலைகள், பிறர் அறியாத ஏக்கங்கள், பிறருக்குக் காட்டும் கசப்புகள். சொல்க, எனக்கு வேதமுடிபு அளிக்கும் விடைதான் என்ன?” என்று கர்ணன் கேட்டான்.
“இங்கே மாசு அள்ளும் தொழில்புரிந்து இருட்குடில்களில் வாழும் இழிசினருக்கு, ஊன்கிழித்துண்ணும் புலையருக்கு, காட்டிருள் விட்டு வெளிவர இயலாத நிஷாதருக்கு நீங்கள் அளிக்கும் மீட்பின்வழி என்ன? அவர்கள் மெய்மையைச் சென்றடையவைக்கும் கொள்கை என்ன?” அவன் விழிகள் வெறித்து நிலைத்திருந்தன “மாற்றிலாத வாழ்க்கை கொண்டவர்களுக்கு, தன் வாழ்வின் ஒருகணத்தைக்கூட தானே வகுக்க இயலாதவர்களுக்கு, நீங்கள் சொல்வது என்ன?”
அவனை விழியிமைக்காது நோக்கியபடி இளைய யாதவர் அமர்ந்திருந்தார். “நானும் அறிவேன், நானேயிறை என்னும் பெருஞ்சொல்லை. என்னிடம் முனிவர்கள் சொல்லியிருக்கின்றனர், இங்கனைத்திலும் இறையுறைகின்றது என்று. நானேயது என்று நாள்தோறும் சொன்னால் மெய்விழி திறக்கும் என்று சொன்ன முனிவர்களுக்கு அவ்வாறே என்று சொல்லி கைநிறைய பொன்னள்ளி அளித்து வணங்கியிருக்கிறேன். எத்தனை சொற்கள். தன்னுணர்வே பிரம்மம். சொல்லே பிரம்மம். இரண்டின்மையே அது. யாதவரே, ஊழிலாடும் எளியவர்களுக்கு இச்சொற்கள் இல்லாத நாடொன்றின் அரசமுத்திரைகொண்ட நாணயங்கள் என பயனற்றவை அல்லவா?”
“என்றேனும் எழுந்து சூழநோக்கியிருக்கிறார்களா இந்தத் தவமுனிவர்கள்? நீங்கள் படைநடத்துபவர், நாடுசுற்றியவர், நான்காம் குலத்தவர். நீங்களும் அறிந்ததில்லையா இந்த அணிச்சொற்களின் பயனின்மையை? அனைத்தையும் விளக்கிநின்றிருக்கையில் ஆழத்தில் அவைகொண்டிருக்கும் வெறுமையை?. யாதவரே, ஒவ்வொரு கணமும் முன்னரே வகுக்கப்பட்ட இக்களத்தில், ஒவ்வொரு தரப்பும் ஆயிரம்பல்லாயிரமாண்டுகளாக ஒருக்கி நிறுத்தப்பட்ட இந்த ஆடலில் நான் எவரென்றால் என்ன? எதை வென்றால்தான் என்ன?”
“உங்கள் துயர்தான் என்ன? இன்னும் அதை நீங்கள் சொல்லவில்லை, அங்கரே” என்றார் இளைய யாதவர். “இதற்கப்பால் நான் என்ன சொல்லவேண்டும்? பிறப்பாலேயே என் தகுதிக்குரியவை ஏன் எனக்கு மறுக்கப்படவேண்டும்? பிறர்செல்லும் தொலைவுகளை எனக்கில்லை என ஊழே வகுத்துவிட்டதென்றால் கல்வியெதற்கு? அறம்தான் எதற்கு? என் மெய்மையை இக்களத்திற்குள் நின்றுதான் நான் அடையவேண்டும் என்றால் அது எவருடைய மெய்மை?” என்றான் கர்ணன் “இலக்கு தேரும் உரிமை இல்லாத அம்புகளே மானுடர் என்றால் அவர்கள்நோக்கில் இப்பயணம்போல் பொருளற்றது எது?”
“யாதவரே, நீங்களும் உங்கள் அறிவர்கணமும் சொல்லும் மெய்மை ஒளிரும் சொற்களால் இரக்கமற்று விரிந்துகிடக்கும் மண்ணில் ஊன்றிய கால்களுக்கு என்ன வழிகாட்டமுடியும்? உம்மிடம் நான் கேட்கவிழைவது இதுவே. சொல்க, உமக்கு முன்னர் இங்கு மெய்ஞானிகள் வந்ததில்லையா? இனி மெய்ஞானிகள் வரப்போவதுமில்லையா? வந்துள்ளனர் எனில் அவர்களின் சொற்களால் இங்கு ஆனதுதான் என்ன? இன்றுவரை ஒருவருக்கேனும் அன்றாட வாழ்க்கையில் பொருளைக் காட்டி நிறைவுறச்செய்துள்ளதா உங்கள் மெய்மை? நாளை ஒருவரேனும் அதை நம்பி வாழ்க்கைப்பெருக்கில் குதிக்கக்கூடுமா? பசிக்கையில் சோறென்றும் துயர்கொள்கையில் துணையென்றும் சிறுமைக்குத் தாங்கென்றும் நெறியழிவில் சினமென்றும் எப்போதேனும் அது எழுந்ததுண்டா?”
“இங்கு வாழ்வெனத் திகழ்வது என்ன? நெறியற்ற முட்டிமோதல். ஒன்றை ஒன்று தின்று செல்லும் வெறி. நெறியென்று எதையேனும் நம்பியிருப்போர் வீழ்ந்து மிதிபட்டு அழிய தன்னை எண்ணி தானொன்றே ஆக முன்செல்வோர் வெல்கிறார்கள். யாதவரே, என்றும் வெல்வது நாணமற்ற, தற்குழப்பங்களற்ற, இரக்கமற்ற, வெல்லும்விழைவின் விசை மட்டுமே. விழிகொண்ட எவரும் காண்பது ஒன்றே, இங்கே என்றும் நிகழ்வது அறமறியா ஆற்றலின் வெற்றி. எப்போதுமுள்ளது வெதும்பி அழியும் எளியோரின் இயலாமைக் கண்ணீர்” என்றான் கர்ணன்.
“இதோ அறமும் மறமும் முயங்கித்திரிந்திருக்கின்றன. நல்லோரும் நல்லோருக்கு எதிராக வில்லெடுத்து நின்றிருக்கிறார்கள். தன்னை மிஞ்சிய ஆற்றலால் எதிர்க்கப்பட்டால் புல்லோர் போலவே நல்லோரும் குருதிசிந்திச் செத்துவிழுவார்கள். வெல்வது அறமோ மறமோ அல்ல, ஆற்றல் மட்டுமே. ஆற்றல்கொண்டதை அண்டிவாழ்வதையன்றி வேதம் இன்றுவரை எதை இயற்றியிருக்கிறது? வென்றதை அறமென்றும் நெறியென்றும். வழிபடுவதையன்றி நூலோர் இன்றுவரை செய்தது என்ன? வந்தவர் அளித்தது ஒன்றுமில்லை என்று அறியும் எவர் வருபவர் சொற்களை நம்பக்கூடும்?”
கர்ணன் எழுந்து நின்றான். உணர்வெழுச்சியில் முகத்தசைகள் நெளிய கீழே கைகட்டி அமர்ந்திருந்த இளைய யாதவரை நோக்கி “யாதவனே சொல்க, இப்புவியில் என்றேனும் அறம் நின்ற வாழ்க்கை நிகழ்ந்துள்ளதா? இங்கு நீர் சொல்லும் மெய்மைக்கு இங்குள்ள எளியோன் அடையும் நடைமுறைப்பயன் ஏதேனும் உள்ளதா?” என்றான். “பிறகு எதற்காக அதை திரும்பத்திரும்ப சொல்கிறீர்கள் உங்களைப் போன்றவர்கள்?” கடுஞ்சினமும் கசப்பும் ஏளனமாக விரிய பல் ஒளிரச் சிரித்து “வேறெதற்குமில்லை, இறுதிக்கணம் வரை அவன் அஞ்சாமல் ஐயுறாமல் அடிபணிந்திருக்கவேண்டும் என்பதற்காக மட்டுமே. தனக்கு அளிக்கப்பட்ட நுகங்களை விரும்பி இழுக்கவேண்டும் என்பதற்காக மட்டுமே.”
“வேட்டையில் விழுந்து சிம்மத்திற்கு உடலளிக்கும் மானுக்கு துயரில்லை. இப்புவியை ஆளும் இரக்கமற்ற நெறிக்கு தன்னை அளிக்கிறது அது. மானுடனுக்கு நீங்கள் அறம் என்ற ஒன்றை கற்பித்துவிட்டீர்கள். அது இறைவடிவென்று நம்பவைத்தீர்கள். அது தன்னைக் காக்க பேருருக்கொண்டு எழும் என்று அவன் இறுதிக்கணம் வரை எண்ணச்செய்தீர்கள்” என்று கர்ணன் முழங்கும் குரலில் சொன்னான். “அது உங்கள் சொல் அல்ல. காலந்தோறும் வென்றெழுவதன் சொல்லேவலர் நீங்கள். சவுக்கின்மேல் பூசப்படும் நறுமணத்தைலமன்றி வேறல்ல உங்கள் பெருஞ்சொற்கள்.”
“ஆனால் மக்கள் அவற்றை நம்புகிறார்கள். தன்னைச்சூழ்ந்துள்ள வாழ்க்கையில் ஒரு தருணத்தில்கூட அவை பொருள்கொள்ளவில்லை என்றாலும் அவர்களால் அதை நம்பாமலிருக்க இயலாது. நாகபடத்தின் நிழலில் வாழும் சிதல்கூடு. நம்பினாலன்றி அன்றாடக் களியாட்டுகள் இல்லை, உறவுகளும் கனவுகளும் இல்லை. யாதவரே, எளியவன் மானுடன். அளியன், சிறியன், அறிவிலான். காலந்தோறும் அவன் கைவிடப்படுகிறான். மீண்டும் மீண்டும் கொன்றுகுவிக்கப்படுகிறான். நசுக்கி அழிக்கப்படுகிறான். மண்ணோடு மண்ணென ஆகி மறக்கப்படுகிறான். அவன் விடுத்த விழிநீர் அவன் அழிவதற்குள் காய்ந்து எட்டுபுறமும் திறந்து விரிந்த இருண்ட கடுவெளியில் மறைகிறது”
“அதை எந்தப் பேரறமும் இதுவரை கண்டதில்லை. அதன்பொருட்டு எந்தத் தெய்வமும் இறங்கி வந்ததுமில்லை. ஆம், இது ஒன்றே உண்மை .இதை அல்ல அல்ல என்று விளக்கவே பல்லாயிரம் சொற்கள், நூல்கள், கொள்கைகள், கவிதைகள், மெய்மைகள். வென்றவருக்கு தாலத்தில் அன்னம், தோற்றவனுக்கு கனவில் அன்னம். அக்கனவை வனைபவர் நீங்கள், உங்கள் ஆசிரியர்கள், உங்களைப்போன்ற சொல்வலர்கள்.” மேலும் எதுவும் சொல்வதற்கில்லாமல் கர்ணன் உளம் அமைந்தான். தலையை இல்லை இல்லை என அசைத்துக்கொண்டு நிலம் நோக்கி அமர்ந்திருந்தான். இளைய யாதவரும் ஒன்றும் சொல்லவில்லை.
நெடுநேரம் கழித்து கர்ணன் தலைதூக்கி “சொன்னபின் தெரிகிறது இது வினாவே அல்ல, விடை. உம்மிடமிருந்து நான் தெரிந்துகொள்ள ஏதுமில்லை. நான் எண்ணுவதை கூர்தீட்டி சொல்லிச்செல்லவே வந்தேன். என் உள்ளம் தெளிந்துவிட்டது. இங்கிருப்பது இரண்டே. ஊழ்வகுத்த பெருங்களம். அதில் நாம் திரட்டிக்கொள்ளும் தடையற்ற ஆற்றல். இங்குள்ள வாழ்வென்பது அக்களத்தில் அவ்வாற்றல் நிகழ்த்தும் கோலம் மட்டுமே. அறமென்றும் நெறியென்றும் மெய்மையென்றும் பெருகிச்சூழும் சொற்களை நம்பாமல் தன் விழைவை மட்டுமே நம்புபவர்கள் வெல்கிறார்கள். அச்சொற்களையே படைக்கலமாகக் கொள்கிறார்கள்.”
இளைய யாதவர் “அத்தனை தெளிவிருந்தால் நான் மேலும் ஏதும் சொல்வதற்கில்லை, அங்கரே. உமக்குரிய மெய்மையை நீர் கண்டடைந்துவிட்டீர் என்றே பொருள். செல்க, உமக்கமைந்த களத்தில் உமது ஆற்றலைப் பெருக்கி நிலைநாட்டி வென்று அனைத்தையும் அடைக! நிறைவுகொள்க! ஆம், அவ்வாறே ஆகுக!” என்றார்.
கர்ணன் இதழ்கோட கசப்புடன் புன்னகைத்து “ஆம், தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றியுடையேன். நான் வந்ததன் பயன் இவ்வண்ணம் என்னை தொகுத்துக்கொள்வதற்கே போலும். எவற்றின் முன்நின்று சினம்கொள்ள விழைகிறேனோ, எவற்றை சிறுமைசெய்து தருக்க எண்ணுகிறேனோ அவற்றின் முகம் நீங்கள்” என்றான். மேலாடையைச் சீரமைத்து “நன்று, கிளம்புகிறேன், யாதவரே” என்று திரும்பி வெளியே சென்றான். இருண்ட வெளியை நோக்கியபடி படிவாயிலில் ஒருகணம் நின்றபின் இறங்கி மூழ்கினான்.