நல்லிடையன் நகர்-2

t1
தாராசுரத்தில்

 

நல்லிடையன் நகர் -1

 

காலையில் எழுந்ததுமே கும்பகோணம் சென்று அங்கிருந்து தாராசுரம் சென்றுவரலாம் என்று திட்டம். கிருஷ்ணனும் நண்பர்களும் அங்கிருந்து அப்படியே ஈரோடு திரும்ப எண்ணியிருந்தனர். அந்தியூர் மணியும், கோவை தாமரைக்கண்ணனும் பேருந்தில் வந்து கும்பகோணத்தில் இறங்கியிருந்தார்கள். நாங்கள் காரில் கும்பகோணம் சென்றோம். ராமசாமி கோயில் முகப்புச் சிற்பங்களைப் பார்த்துவிட்டு தாராசுரம் செல்லலாம் என்பது திட்டம்

 

ராமசாமிகோயில் முகப்புச் சிற்பங்கள் தமிழ்சிற்பக்கலையின் மிகச்சிறந்த மாதிரிகள். அங்குள்ள தலைக்கோலி சிலை, ராமர்சிலை இரண்டும் அவற்றின் உச்சம். அழகிய ரதிமன்மதன் சிலைகள் உள்ளன. இரண்டுமணிநேரம் அங்கு சிற்பங்களை நோக்கிக் கொண்டு நின்றோம். அங்கு நின்றாலே வந்து சூழ்ந்துகொண்டு செல்போனில் புகைப்படம் எடுப்பதாக இருந்தால் நூறுரூபாய் கட்டணம் என்று தொந்தரவுசெய்தனர். புகைப்படமே எடுக்கவில்லை என்று சொல்லி துரத்திவிட்டோம்.

t2
தாராசுரத்தில்

 

ஓர் இடத்தில் சிற்பங்கள்மேல் தகரத்தாலான கதவுகளை கொண்டுவந்து சாத்தி வைத்திருந்தனர். “ஏன்யா சிற்பம் என்றாலே நூறுரூபாய்க்கான பொருள் மட்டும்தானா? அறிவு வேண்டாம்?” என்று சத்தம்போட்டேன். ஓர் அலுவலர் வந்து “திருவிழா நடக்கிறது அதனால்தான்” என்றார். இவர்களுக்கு சிற்பம் என்பது கல்மட்டும்தான். ஆச்சரியமான ஒரு விஷயம் இது. மத்தியத் தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் இல்லாத அத்தனை ஆலயங்களும் ஒவ்வொருநாளும் அழிவிலிருக்கின்றன என்பதே நடைமுறை உண்மை.

ராமசாமி கோயில் நகரின் நடுவே, ஒரு சந்தைக்கடைவீதியின் அண்மையில் இருக்கிறதென்பதே இங்குள்ள முதன்மைச்சிக்கல். உள்ளே என்னென்னவோ பொருட்கள். பொதுவாக அரிய சிற்பங்கள் கொண்ட இடங்களில் எடைமிக்க பொருட்களை புழங்க தொல்லியல்துறை அனுமதிப்பதில்லை. மிகச்சிறிய அளவில் தட்டுபட்டால்கூட சிற்பங்கள் உடைந்துவிடும். ஆனால் ராமசாமிகோயில் முழுக்க எடைமிக்க சப்பரங்கள் மட்டுமல்ல இரும்புத்தள்ளிவண்டிகள் குழாய்கள் என சிற்பங்கள்நடுவே கொண்டுசென்று வைத்திருந்தனர்.

 

00b8d203-29c0-4382-a0a9-c18c0be50fdb-1.jpg
மன்னார்குடி ஆலயத்தில் கோபுரம் அருகே

 

ஓர் இரும்புத்தள்ளுவண்டி மழையில் நனையக்கூடாது என நினைக்கிறார்கள். ஏனென்றால் அது பயனுள்ளது. ஆனால் ஆயிரமாண்டுக்காலக் கலைச்செல்வம் உடைந்தாலும் பிரச்சினையில்லை. ஜோசஃப் பிராட்ஸ்கியின் கவிதை ஒன்றில் ஸ்டாலினால் இடிக்கப்பட்ட தொன்மையான கலைநிலைகள் மேல் நாய்கள் ஒன்றுக்கடிக்க கால்தூக்குவதைப்பற்றிய ஒருவரி வரும்.

 

திரும்பத்திரும்ப இதைப்பற்றிச் சொல்லிக்கொண்டிருக்கிறேன். மிகக்குறைவானவர்களுக்கே இதெல்லாம் உறைக்கிறது. ஏனென்றால் கோயில்களை ஒருவகை பயன்பாட்டிடங்கள் என்றே நம்மவர் பார்க்கிறார்கள். இரண்டுவகையான பார்வைகள் இருக்கலாம். ஒன்று அதன் தாந்த்ரீக – சிற்ப அமைப்புமீதான மரபான நம்பிக்கை. அப்படி இருந்தால் சிற்பங்கள் வெறும் கல் அல்ல. அவை நுண்ணிய ஆற்றலின் உறைவிடங்கள்.  இரண்டு அவற்றை கலைப்பொருட்களாகப் பார்க்கும் பார்வை. இரண்டுமே இன்று நம்மிடம் இல்லை என்பதே சிக்கல்

ராமசாமிகோயில் கும்பகோணம்
ராமசாமிகோயில் கும்பகோணம்

குடந்தை ராமசாமி கோயில் தஞ்சைநாயக்கர் அரசில் சேவப்பநாயக்கருக்கும் அவர்மகன் அச்சுதப்பநாயக்கருக்கும் அவர் மகன் ரகுநாத நாயக்கருக்கும் அமைச்சராக இருந்த கோவிந்த தீட்சிதர்   (1515-1634) என்னும் பேரறிஞரால் 1620 கட்டப்பட்டது.பட்டீஸ்வரத்தில் அவர் வாழ்ந்த மாளிகையின் அடித்தளம் உள்ளது என்கிறார்கள். தமிழ் வரலாற்றில் முக்கியமான இடம்வகிக்கும் இவரைப்பற்றி பிற்கால வரலாற்றில் அதிகம்பேசப்பட்டதில்லை. ஒரு நல்ல நாவலில் கதாநாயகனாகும் தகுதிகொண்ட ஆளுமை. தமிழ்த்தொன்மங்களை மட்டும் வைத்து இவரைப்பற்றி எழுதிவிடமுடியாது. கன்னட தெலுங்கு ஆவணங்களிலிருந்தும் தரவுகள் சேகரிக்கவேண்டும். என்றேனும் எவரேனும் எழுதலாம்.

 

இன்றைய கர்நாடகத்தில் ஹளபீடு அருகே எளிய குடியில் பிறந்தவர் கோவிந்த தீட்சிதர். கன்னடத்தை தாய்மொழியாகக் கொண்டவர். விஜயநகர ஆட்சியில் அனந்தபூரிலும் சந்திரகிரியிலும் சிற்றமைமைச்சராக பணியாற்றியவர். தஞ்சையை ஆண்ட சேவப்ப நாயக்கரால் தஞ்சைக்கு அழைத்துவரப்பட்டார். இருபது கிராமங்கள் அவருக்கு இறையிலி நிலங்களாக அளிக்கப்பட்டன என்று கூறப்படுகிறது. அவருக்கு ரகுநாத நாயக்கர் எடைக்கு எடை தங்கம் அளித்தார் என்று ஒரு தொன்மம் உள்ளது. இவருடைய சிலை மனைவியுடன் வழிபடும் கோலத்தில் பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரம் ஆலயத்தில் உள்ளது.

Govinda_dikshitar
கோவிந்த தீட்சிதர் மனைவி நாகம்மையுடன்

 

தமிழகவரலாற்றில் ஆழ்ந்த செல்வாக்கு செலுத்திய இரு அந்தண அறிஞர்கள் என்று கோவிந்த தீட்சிதரையும் ராஜராஜசோழனின் அமைச்சரான அனிருத்த பிரம்மராயரையும் சொல்லலாம். அனிருத்த பிரம்மராயர் கல்கியின் பொன்னியின் செல்வன் வழியாகவும் பாலகுமாரனின் உடையார் வழியாகவும் இன்று பொதுவாசகர் உள்ளத்தில் நிறுவப்பட்டிருக்கிறார்.

 

கோவிந்த தீட்சிதரே தஞ்சைநாயக்கர்கள் செய்த ஆலயத்திருப்பணிகள், திருவிழா ஒழுங்குகள் ஆகியவற்றுக்கும் அவர்கள் வெட்டிய ஏரிகள் மற்றும் பாசன கட்டமைப்புக்கும் காரணமானவர். அவர் அரசகுருவாக நெடுங்காலம் நீடித்தார். தமிழ் சம்ஸ்கிருதம் ஆகியவற்றில் நூல்களை இயற்றியிருக்கிறார்.சங்கீதசுதா என்னும் இசைநூலையும் இயற்றியிருக்கிறார். குடந்தை மகாமகக் குளம் அவரால் அமைக்கப்பட்டது. இசைவாணர் முத்துசாமி தீட்சிதர் கோவிந்த தீட்சிதரின் குருமரபைச் சேர்ந்தவர் என்பார்கள்.

t4

தாராசுரத்திற்கு நான் முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு முதன்முறையாக வந்தேன்.அப்போது இப்பகுதியெங்கும் உடைந்த கற்சிற்பங்கள் சிதறிக்கிடந்தன. சுற்றிலும் குடிசைகள். மண்ணை அகழ்ந்து ஆலயத்தை வெளியே எடுத்துக்கொண்டிருந்தனர். அப்போதுதான் இந்த ஆலயம் யுனெஸ்கோவால் எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது. உடைந்த கற்கள் பொறுக்கப்பட்டு அடையாளம் காணப்பட்டு எண்ணிடப்பட்டு அடுக்கப்பட்டு கோபுரமும் மண்டபங்களும் மீண்டும் எழுப்பப்பட்டுக் கொண்டிருந்தன. எங்கும் புழுதி நிறைந்திருந்தது.

 

அதன்பின் எட்டுமுறைக்குமேல் இங்கே வந்திருக்கிறேன். எப்போதுமே இரும்புச்சாரங்கள் நிறைந்திருக்க கட்டுமானப்பணி நடந்துகொண்டேதான் இருக்கும். இப்போது பணிகள் முடிந்துவிட்டன என நினைக்கிறேன். இன்றிருக்கும் வடிவைவிட பலமடங்கு பெரிய ஆலயமாக இருந்துள்ளது இது. ஒரு மாபெரும் ஆலயவளாகம் இது. ஏழு சுற்றுவீதிகளும் அங்கெல்லாம் துணைத்தெய்வ ஆலயங்களும் இருந்தன. இன்று மைய ஆலயம் மட்டுமே மீட்கப்பட்டுள்ளது.

33d885d7-3c5f-4bfe-b881-bb3619e69852.jpg
மல்லிநாதர் ஆலயம்

 

தஞ்சை பெரிய கோயில், கங்கைகொண்ட சோழபுரம், தாராசுரம் ஆகிய மூன்று கோயில்களும் தஞ்சைச் சிற்பக்கலையின் மூன்று காலகட்டங்கள், மூன்று மாபெரும் உதாரணங்கள். தந்தை, மகன், பேரனால் கட்டப்பட்டவை.  இரண்டாம் ராஜராஜன் [1146 -1172]  இவ்வாலயத்தைக் கட்டினான். இதனருகே பெரும் ஏரி ஒன்றையும் அமைத்தான். அந்த ஏரி இந்திரனின் வெள்ளையானையான ஐராவதம் பெயரால் ஐராவதகங்கை என்றழைக்கப்பட்டது. இந்நகர் ஐராவதீஸ்வரம் என்றும்.

 

பெரும்பாலும் மென்மணல்பாறையால் கட்டப்பட்டது ஐராவதீஸ்வரர் ஆலயம். தஞ்சைக் கோயிலில் இருக்கும் ஒருவகையான மொத்தையான தன்மை இல்லாமல் கல்கட்டுமானக்கலை பெருமளவுக்கு வளர்ந்திருப்பதைக் காணலாம். சிற்பங்களின் செறிவு இல்லை. ஆனால் கட்டிட அமைப்பு கஜுராகோவின் கட்டிட அமைப்புக்கிணையாகவே அழகுகொண்டது. ஒருவகை மலர்வு என்று அதைச் சொல்வேன். கல்மலர்தல்.

ra3
ராமசாமி ஆலயம்

 

இவ்வாலயம் 13 ஆம் நூற்றாண்டில் மூன்றாம் ராஜேந்திரனை வென்று தஞ்சையின் சோழராட்சியை அழித்த பாண்டியர்களால் அழிக்கப்பட்டிருக்கலாம் என்று ஓர் ஊகம் உண்டு. ஆனால் அதற்கு ஆதாரமேதுமில்லை. இப்பகுதியிலுள்ள பிற ஆலயங்கள் அவ்வாறு அழிக்கப்படவில்லை. சூறையாடப்பட்ட இந்நகர் கைவிடப்பட்டிருக்கலாம், காலப்போக்கில் ஆலயம் பாழடைந்து அழிந்திருக்கலாம்.

 

பின்னர் டெல்லி படையெடுப்பாளர்களான மாலிக் காபூர், குஸ்ருகான், முகமதுபின் துக்ளக் ஆகியோரால் இவ்வாலயம் தாக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் நாயக்கர்களால் சில திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளன. ஆனால் பிற ஆலயங்களைப்போல இது மீட்டுக் கட்டப்படவில்லை.

ra4
ராமசாமி ஆலயம் ரகுநாத நாயக்கர்

 

மாபெரும் ரதம் போன்ற அமைப்பு கொண்டது ஐராவதீஸ்வரர் ஆலயம். நுட்பமான சிற்பத்தூண்கள். இவ்வாலயத்தின் சிறப்புச்சிற்பங்கள் மிகச்சிறிய வடிவில் அமைந்த நடனநிலைகள். அவை விரிவாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. சிற்பங்களை ஓய்வாகப் பார்ப்பதற்கு உகக்காத மொட்டைவெயில். கால் சுடுவதனால் விரைந்து சுற்றிவந்துவிட்டோம். மண்டபத்தில் ஓர் இடத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம்

 

முன்பு இங்கே வந்தபோதுதான் முதல்முறையாக அறம் சிறுகதையின் மூலநிகழ்வைச் சொன்னேன் என்று கிருஷ்ணன் சொன்னார். அதேபோன்று இம்முறையும் சில உண்மைநிகழ்வுகளைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். அவை கலையாக ஆகலாம், அவற்றில் மேலதிகமாக ஒன்று திறக்கவேண்டும்.

ra5
ராமசாமி ஆலயம் ரதி

 

பொதுவாக கலையில் ‘சாதாரணம்’  ‘அன்றாடம்’ என்பதற்கு இடமில்லை. அது அசாதாரணங்களையே தேடிச்செல்கிறது. தரப்படுத்தப்பட்ட கருத்துக்கள், அனைவரும் அறிந்த நிகழ்வுகளை அல்ல. மானுடத்தின் உச்சமோ கீழ்மையோ தனித்தன்மையோ வெளிப்படும் நிகழ்வுகளில் இருந்தே ஊக்கம் கொள்கிறது. அதையே ’அனன்யத’ என்று சம்ஸ்கிருத விமர்சனம் சொல்கிறது

 

ஒரு நிகழ்விலிருந்து மானுடத்தை முழுமையாகச் சென்றடைய முடியுமென்றால்தான் அது கலை.ஒரு மாறுதலுக்காக எளிய, அன்றாடநிகழ்வுகளை எழுதிப்பார்த்ததுண்டு கலை. ஆனால் அந்தத் தளத்தில்கூட நுட்பமாக அச்சித்தரிப்பை அசாதாரணமானவையாக, உள்ளாழம் மிக்கவையாக ஆக்கும் படைப்புக்களே கலையாக வெற்றிபெறுகின்றன.

800px-Airavateshwarar_Darasuram
தாராசுரம்

 

அசோகமித்திரனின் நல்ல கதைகளை உதாரணமாகச் சொல்லலாம். அவரே அவ்வாறு மேலெழாத ஏராளமான கதைகளையும் எழுதியிருக்கிறார். அவரை முன்னுதாரணமாகக் கொண்டு எழுதியவர்கள் பெரும்பாலும் எளிய அன்றாடச்சித்தரிப்புகளை உருவாக்கியவர்கள் மட்டுமே.

 

இந்தவகையான பயணங்களிலும் எப்படியோ இலக்கியம், கலை சார்ந்த தொடர்ச்சியான உரையாடல்கள் அமைந்துவிடுகின்றன. நம் உள்ளம் அதைச்சார்ந்தே இயங்குவது ஒரு காரணம். நண்பர்களும் அதைச்சார்ந்தவர்கள் என்பது இன்னொரு காரணம். அதைவிட முக்கியமானது என் உள்ளத்தில் இலக்கியம் ஆலயம், சிலைகள், திருவிழா போன்றவை அளிக்கும் அதே உச்சநிலையுடன் தொடர்புகொண்டுள்ளது என்பது

316a92f2-1d09-4c41-8d78-f17c3847c6ac.jpg

 

உதாரணமாக இந்த மனநிலையின் ஒருபகுதியாக உணவைப்பற்றி, கேளிக்கைகளைப்பற்றிப் பேசினால் ஐந்தாறு நிமிடங்களுக்குள்ளாகவே கீழிறங்கும் உணர்வு ஏற்படுகிறது. அரசியல் சினிமா என்றால் மீண்டும் கீழே செல்கிறோம். இங்கு வருவதே அந்தத் தீவிரத்தை தக்கவைத்தபடியே ஒரு உளமாற்றுக்காகத்தான். எளியகேலிகள்கூட ஒரு சிறிய இளைப்பாறல்தான். உடனே மீண்டாகவேண்டும்.

 

அதேபோல இத்தகைய பயணங்களில் நிகழும் உரையாடல்களும் இயல்பாகவே ஒரு தீவிரத்தை அடைந்துவிடுகின்றன என தோன்றுகிறது. நான் அவதானித்தவரை எதிர்மறைத்தன்மைகொண்ட, இருண்மையான இலக்கியவிவாதம் அமைவதில்லை. இயல்பாக இலக்கியமும் தத்துவமும் நேர்நிலை உச்சம் நோக்கியே செல்கின்றன

43bd84cb-cff0-4154-bc3e-4779f905a869.jpg

அதற்குக் காரணம் இங்குள்ள இச்சிற்பங்களில், கற்கட்டுமானத்தில் வாழும் காலம். அழிவற்றதென உளமயக்கு கூட்டும் அதன்பெருக்கு. அதன் முன் சிறியவற்றுக்கு இடமில்லை என நம் ஆழம் எண்ணிக்கொள்கிறதென்று தோன்றுகிறது

மயிலாடுதுறை பிரபு, திருவாரூர் சீனிவாசன் இருவரும் மன்னார்குடி வந்திருப்பதாகச் சொன்னார்கள். காரில் கிளம்பிச்சென்றோம். கிருஷ்ணனும் குழுவும் அங்கிருந்தே ஈரோடு திரும்பினார்கள். மன்னார்குடி ஆரியபவனில் மதிய உணவு. நல்ல வெயிலில் மன்னார்குடி பெரிய குளத்தின் நீர் கண்களை நிறைத்தபடி மின்னிக்கொண்டிருந்தது.

ta

மன்னார்குடிக்குளம் தமிழகத்தின் இரண்டாவது பெரிய செயற்கைக்குளம் என்று செந்தில் சொன்னார். திருவாரூர் கமலாலயம் என்னும் குளமும் கும்பகோணம் மகாமகப்பெருங்குளமும் இதைவிடச் சிறியவை. காவேரியிலிருந்து நீர்வரும் வழிகள் இருந்தன. இன்றும் ஒன்றிரண்டு இருப்பதனால் நீர் இல்லாமலிருந்ததே இல்லை. தூய்மையாக உள்ளது குளம். கும்பகோணம் குளமும் கோ.சி, மணி அவர்களின் முயற்சியால் தூய்மைப்படுத்தப்பட்டு அவ்வாறே நீடிக்கிறது.

 

திருவாரூர் கமலாலயம் அதைச்சூழ்ந்திருக்கும் மருத்துவநிலையங்கள் மற்றும் உணவகங்களின் கழிவுகள் கொட்டப்படுவதனால் நாறிக்கிடக்கிறது. ஊர்க்காரர்கள் பலவகையிலும் முயற்சிகள்செய்தும்கூட மருத்துவக்கழிவுகளை குளத்தில் கொட்டும் திருவாரூரின் டாக்டர்களை கட்டுப்படுத்தவே முடியவில்லை என்றார்கள்.

t45

இந்தக்கோடையில், காவேரி வரண்டுகிடக்கையில் நன்னீர் நிறைந்துகிடக்கும் குளம் எவ்வளவுபெரிய சொத்து, ஊருக்கு எவ்வளவுபெரிய அழகு. அரசியல்வாதிகளையே எப்போதும் குறைசொல்கிறோம். நம் மக்கள் உளம்சீரழிந்த, பொதுநல எண்ணமே இல்லாதவர்கள், அரசியல்வாதிகள் அவர்களிடமிருந்தே வருகிறார்கள்.

 

நண்பர்களுடன் அறையில் பேசிக்கொண்டிருந்தோம். பின்னர் மாலையில் தேரோட்டம் பார்க்க மீண்டும் செந்திலின் வீட்டுக்குச் சென்றோம். தெரு அதே மக்கள்பெருக்குடன் புதுவெள்ளமெழுந்த நதிபோல கொப்பளித்துக்கொண்டிருந்தது. காலையிலேயே காளிப்பிரசாத் சென்று தேர்வடம் பிடித்து இழுத்துவிட்டு வந்திருந்தார். வெயிலில் புழுதியின் திரையில் தொலைவில் தேர் தெரிந்தது.

ta6

மிகப்பெரிய தேர்.சாலையை முழுமையாக மறித்து ஒரு மாபெரும் ஆலயம் எழுந்ததைப்போல. தஞ்சையின் பெரிய தேர்களில் ஒன்று இது. பெருங்கூட்டம் என்பதனால் எளிதாக இழுத்துக்கொண்டுவந்தனர். அவர்கள் கால்சுடாமலிருக்க லாரிகளில் நீரைக்கொட்டிக்கொண்டே சென்றனர். அதில் ஒரு சிறுவர்குழு குளித்துக் கூத்தாடியது. செவி உடையும் வெடி. முரசோசை, முழவுப்பிளிறல்.

 

நோக்கியிருக்க தேர் சற்று நொடிக்கும்போது நெஞ்சம் திடுக்கிட்டது – ஆலயம் ஒன்று விழப்போவதாக அகம் அஞ்சியிருக்கலாம். தேரசைவை நம் மரபு மீண்டும் மீண்டும் வர்ணித்திருக்கிறது. மாபெரும் யானை போல என்றே எனக்குத் தோன்றிக்கொண்டிருந்தது. பேருருவங்களுக்கு இருந்தாகவேண்டிய மென்னடை. அழகிய அசைவுகள்.’ கஜராஜவிராஜித மந்தகதி.

0d96677a-fa7d-4e9d-a595-c7f4aee5d691.jpg
ராமசாமி கோயில்முகப்பின் சிற்பக்கூடம்

 

தேர் என்னும் உருவகம் அழகியது. பழையகாலச் சிற்பநூல்கள் ஆலயக் கருவறைகளை ரதங்கள் என்றே சொல்கின்றன. கோபுரங்களைப் பார்த்து தேர் செய்யப்படவில்லை, தேரைப்பார்த்தே கோபுரங்கள் செய்யப்பட்டன என்று தோன்றுகிறது. தொல்காலத்தில் தெய்வங்களை தேரிலேற்றிச் சென்று வழிபடும் வழக்கம் இருந்திருக்கலாம். அதிலிருந்து தேர்வடிவம் வந்திருக்கலாம்

இந்தியா முழுக்க கோயில்கள் தேர்வடிவில் உள்ளன. சூரியன் கோயில்கள் பெரும்பாலும் தேர்களே. மிகப்பெரிய உதாரணம் கொனார்க். ஐராவதீஸ்வரர் ஆலயமும் தேர்வடிவில் அமைந்ததுதான். தேர் ஒர் ஆலயம். அத்தனை எடையுடன் அது நகரும்போது மண் நீரென்றாகி அது மரக்கலமாக மாறியதுபோலத் தோன்றியது

Tamil-Daily-News-Paper_6037670373917

தேர் விழிநிறைத்துக் கடந்துசென்றது. முக்குதிரும்பும்போது அதன் பின்பக்கம் தயங்கி நின்றிருந்த காட்சி மீண்டும் யானையை நினைவுறுத்தியது. யானையின் ஐயங்களும் தயக்கங்களும் மிக அழகானவை. அந்திச்செம்மையில் சூரியன் பின்னே தெரிய தேர் எழுந்து வந்து நிறைந்து கடந்து சென்ற இக்காட்சியை நெடுங்காலம் நினைத்திருப்பேன். இதை சொல்லென்றாக்கி எனக்குரிய கனவுக்குள் கொண்டுசென்றுவிடுவேன்

 

மாலையில் மீண்டுமொருமுறை நகரைச் சுற்றி நடந்தோம். தெருக்களெங்கும் மக்கள். ஒளி. கோபுரம் விளக்குகளின் குவையாக எழுந்து நின்றது, அணிசூடிய யானை மருப்பு போல. தேர் நிலைகொண்டதும் படிகளில் ஏறிச்சென்று மீண்டும் இறைவனைவழிபட பெருங்கூட்டம். நீண்ட நிரை நெடுந்தொலைவு வரை வளைந்து கிடந்தது

2632abf9-67e2-418f-b281-af7e3f62f838.jpg

கோபுரங்கள் எப்போதுமே ஒரு வகையான உளஎழுச்சியை அளிக்கின்றன. வானத்தின் பருவடிவச் சித்தரிப்புகள் அவை. கீழே மண்ணுலகு. மேலே உம்பருலகு. மேலே உள்ள சிற்பங்களில் பூதங்கள் கீழ்நோக்க தேவர்கள் மேலும் மேலே நோக்கிக்கொண்டிருப்பார்கள். மன்னார்குடி ஆலயத்தின் கோபுரத்தின் மண்ணுலகு பகுதி சிற்பங்கள் இல்லாது அடுக்குகளாக, சிகரங்களின் தொகையாக இருந்தது. மலைகளைப்போல

 

ஒருமுறை ஆற்றூர் ரவிவர்மா பஞ்சவாத்திய தாளத்தைப் பற்றிச் சொல்லும்போது அது தாளம் மட்டும்தான், ராகம் அதில் இல்லை என்றார். வெறும் கணக்குதான். ஒன்று குறைந்தும் ஒன்றுகூடியும் பின்னிச்சென்று ஒர் உச்சத்தில் முடிகிறது, கோபுரங்களைப்போல என்றார். கல்லில் எழுந்த தாளம் என கீழ் அடுக்கைச் சொல்லலாம். கீழே உருவங்களும் அசைவுகளும் ததும்பினாலும் இவை வெறும்தாளம் மட்டும்தான் போலும்

ab3ef0b6-bf54-4554-bc67-28dfb89a8976.jpg
ராமசாமி கோயில்

 

மன்னார்குடிக்கு முன்பிருந்த பெயர் பௌண்டரீக புரம். தாயார் செங்கமலம் என்று அழைக்கப்படுவது அதனால்தான்போலும். பௌண்டரீகவாசுதேவன் என்று இக்கோயில் தெய்வம் குறிப்பிடப்படுகிறது என்றார் நண்பர். பௌண்டரீக வாசுதேவன் மகாபாரதத்தில் வரும் கதாபாத்திரம். புண்டர நாட்டை ஆண்டவன் தன்னை வாசுதேவன், கிருஷ்ணன் என்று சொல்லிக்கொண்டான். அவனை கிருஷ்ணன் கொன்றான்.  அந்தப்பெயர் எப்படி இங்கே வந்தது?

 

கிருஷ்ணனிடம் முன்னரே சொல்லிக்கொண்டிருக்கும் ஒர் எண்ணம் இது. தமிழகத்திலுள்ள முக்கியமான எல்லா திருவிழாக்களையும் சென்று பார்த்துவிடவேண்டும். காஞ்சி கருடசேவை, அழகர் ஆற்றிலிறங்குவது போல. அவை பண்பாட்டுநிகழ்வுகள், கொண்டாட்டங்கள். அனைத்துக்கும் மேலாக ஒரு வேறுவாழ்க்கைக்குள் சென்று திளைத்து மீளும் மறுபிறப்புகள்.

sengamalathayar-rajagopalan1
செங்கமலத்தாயார் ராஜகோபாலசாமி

 

எங்களுக்கு மாலை எட்டரை மணிக்கு நாகர்கோயில் பேருந்து. செந்தில் வந்து பேருந்தில் ஏற்றிவிட்டார். ஒருதிருவிழாவின் வருத்தமான விஷயம் விழாவுக்கு மறுநாளின் வெறுமை. ஆனால் உடனே கிளம்புவதனால் அதனால் பாதிக்கப்படவில்லை. ஆனால் அங்கிருந்து அதையும் அனுபவிக்கும்போதுதான் முழுமை அமைந்திருக்குமோ என்றுதோன்றியது.

 

பேருந்தில் ஏறிப் படுத்துக்கொண்டதுமே தூக்கம் வந்தது. அரைமயக்கில் என் உடலில் தேரின் அசைவுகள் கூடின.

 

[முழுமை]

f46ba630-f884-4019-8400-2bece2b91999.jpg
தாராசுரம்

 

 http://divyadarisanams.blogspot.in/2010/04/purana-sthalams-rajagopalaswamy-temple.html

http://tamilnadu-favtourism.blogspot.in/2016/01/ramaswamy-temple-kumbakonam.html 

 

முந்தைய கட்டுரைஎம்.வி.வியும் கோயாவும்
அடுத்த கட்டுரைவெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-3