இரு யதார்த்தக் களங்கள்.
இன்றைய மாவோயிசக் கிளர்ச்சி குறித்துப் பேசமுற்படுவதற்கு முன்னர் வன்முறையின் லாப நஷ்டங்களைப்பற்றிய என் நேரடி அனுபவப்பதிவுகள் சிலவற்றைச் சொல்ல வேண்டும். நான் 1981ல், 1982ல் ஆந்திரத்தில் மக்கள் யுத்தக்குழுவின் கட்டுப்பாட்டில் இருந்த கோதாவரி, தெலுங்கானா, ராயலசீமா பகுதிகளில் அலைந்திருக்கிறேன். 1986ல் பஞ்சாப் பிரச்சினையால் எரிந்துகொண்டிருந்த பஞ்சாபில் பயணம் செய்திருக்கிறேன்.
ஆந்திரத்தின் நக்சலிசப் பிரச்சினையும் சரி, பஞ்சாபின் பிரிவினைவாதப் பிரச்சினையும் சரி, முழுக்கமுழுக்கப் பொருளியல் கோரிக்கைகளை முன்னிறுத்தி உருவானவை. அதனால்தான் அவை மக்களுக்கு ஆரம்பத்தில் ஏற்புடையவையாக இருந்தன. ஆனால் அவை உச்சம்கொண்ட பின் அந்த கோரிக்கைகளை எந்நிலைக்குக் கொண்டு சென்றன? அந்த மக்களுக்கு பொருளியல் ரீதியாக எதை அளித்தன?
ஆந்திரத்தின் இடதுசாரிக் கிளர்ச்சிக்கு சுதந்திரப்போராட்ட காலம் முதலே வரலாறுண்டு. நிலப்பிரபுத்துவ அமைப்பு நெடுங்காலம் மாற்றமில்லாமல் அப்படியே நீடித்த பகுதி இது. நிலங்கள் பெருநிலக்கிழார்களுக்கு சொந்தமானதாக இருந்தன. விவசாயிகள், அனேகமாக அனைவருமே, அவர்களின் அடிமைகள். கடுமையான சுரண்டல். நேரடி வன்முறை. பலபடிகளாக அமைந்த சாதிய வன்முறை.
கிட்டத்தட்ட இந்தியா முழுக்க அந்தநிலைதான் சுதந்திரத்துக்கு முன்பு இருந்தது. அந்த அமைப்பை அப்படியே கட்டிக்காத்து, அந்நிலக்கிழார்களிடம் வரிவசூல் செய்தது பிரிட்டிஷ் அரசு. ஆகவே சுதந்திரப் போராட்டம் என்பது நடைமுறையில் இந்த நிலக்கிழார்களுக்கு எதிரானதாகவும் இருந்தது. பெரும்பாலான இடங்களில் நிலக்கிழார்களுக்கும் காங்கிரஸுக்கும்தான் மோதல்கள் நிகழ்ந்தன.
ஆனால் காங்கிரஸின் நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு போலியானது என்று சொன்ன இடதுசாரிகள் நேரடியான, வன்முறை சார்ந்த நிலப்பிரபுத்துவ எதிர்ப்பை இப்பகுதிகளில் உருவாக்கினார்கள். இந்த நிலப்பிரபுத்துவ எதிர்ப்பை முன்வைத்த அதே நேரத்தில் அந்நிலப்பிரபுத்துவம் மீது அமர்ந்திருந்த பிரிட்டிஷ் அரசை சர்வதேச காரணங்களைச் சொல்லி ஆதரிக்கவும் இடதுசாரிகளால் முடிந்தது என்பது வேடிக்கைதான்.
இந்த நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு எழுச்சி 1951ல் தெலுங்கானாக் கிளர்ச்சியாக உச்சம் கொண்டது. [என் சங்கரய்யாவின் வீரத்தெலுங்கானா என்ற நூலில் விரிவான சித்திரத்தை காணலாம்] சிலகாலம் கழித்து அரசியல் கட்சியாக ஆன இடதுசாரிகளிடம் ஏமாற்றமுற்ற ஒரு பிரிவினர் 1967ல் வங்காள நக்சலைட் இயக்கத்தை அங்கே கொண்டு வந்தனர். அது 1980ல் மக்கள் யுத்தக் குழுவாக ஆகியது. அவர்களின் கோரிக்கை என்பது நிலமானியமுறை ஒழிப்பு. பாசனவசதிகளைப் பெருக்குவது. அதனூடாக வறுமை நீக்கம். மக்கள் அவர்களை நம்பியது அதற்காகவே.
ஆனால் அங்கே இடதுசாரிக் கிளர்ச்சியும் , தீவிரவாதமும் தொடங்கப்பட்டு முப்பதாண்டுக்காலப் போராட்டம் நடந்த பின்னர் கிட்டத்தட்ட அவர்களின் ஆளுமையில் இருந்த பகுதிகளில் நான் பயணம் செய்தபோது கண்டது இந்தியாவில் பெரும்பாலான பகுதிகளில் அப்போது அழிந்துவிட்டிருந்த அதே நிலப்பிரபுத்துவ முறையைத்தான். புதிய நிலக்கிழார்கள் உருவாகி இருந்தார்கள். அவர்கள் நக்ஸலைட்டுகளுக்கு கப்பம் கட்டினார்கள். பலர் நக்சலைட்டுகளை ஆதரித்தார்கள்.
பெனுகொண்டா , அனந்தபூர் போன்ற பல ஊர்களில் நக்ஸலைட் ஆதரவு நிலக்கிழார் நக்சலைட் எதிர்ப்பு நிலக்கிழார் எனப் பிரிந்து வன்முறைகள் அன்றாடம் நடந்துகொண்டிருந்தன. இருசாராருக்குமே மக்கள் வெறும் பிணைக்கைதிகளும் சேவகர்களும்தான். கிராமங்களில் பள்ளிகளை உருவாக்கவோ சாலைகள் அமையவோ நக்ஸலைட்டுகளும் அனுமதிக்கவில்லை பண்ணையார்களும் அனுமதிக்கவில்லை. சட்ட ஒழுங்கு நிர்வாகம் அனேகமாக இல்லை. தகவல் தொடர்பு வசதிகள் இல்லை. பாசனத்திட்டங்கள் இல்லை. சமூகநலத்திட்டங்கள் ஏதுமில்லை.
முக்கியமாக பல நூற்றாண்டுகளாக உருவாகி வந்த சந்தைகள் இந்த வன்முறைகளின் விளைவாக படிப்படியாக அழிந்தன. கிராமப்பொருளியல் அழிந்து மக்களின் வாழ்க்கை தேங்கி நின்றது. எங்கும் நினைத்துக்கூட பார்க்கமுடியாத வறுமை. பட்டினியில் வயிறு ஒட்டிய அன்னைகள். கிழிந்த படங்கள் போலப் பிள்ளைகள். ஒருபக்கம் நக்ஸலைட்டுகள் மக்களிடம் கொள்ளையடித்தார்கள். மறுபக்கம் காவல்துறை அவர்களைக் கொடுமைப்படுத்தியது. தினமும் போலீஸ் என்கவுன்டர் கொலைகள். நக்ஸலைட் தாக்குதல்கள். போலீஸின் பழிவாங்குதல்கள். என்னையே போலீஸ் ஒருமுறை கைது செய்து ஒருநாள் முழுக்கக் கடுமையாகத் தாக்கிக் கொடுமைப்படுத்தியது.
அன்றைய ஊடகங்களில் இதழாளர்கள் ’மனிதாபிமான’த்துடன் எழுதினார்கள் , அங்கே நக்சலிசம் இருப்பதற்கான காரணம் அந்தக் கொடூரமான வறுமையே என்று. உண்மையில் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த ஒரு நிருபர் ஒருநாள் அப்பகுதியில் பயணம்செய்து பார்த்தான் என்றால் அவன் நக்ஸலிசத்துக்கு ஆதரவாளன் ஆகிவிடுவான். போலீஸின் ஒடுக்குமுறையை அவன் சந்தித்தால் தீவிரவாதியே ஆகக்கூடும்.
ஆனால் தெலுங்கானாவும் கோதாவரியும் வளம் மிக்க நிலங்கள். அதைவிட மோசமான நிலப்பிரபுத்துவ ஆதிக்கத்தில் இருந்த, அதைவிட மோசமான வறுமை நிலவிய பல இந்தியப்பகுதிகள் சுதந்திரத்துக்குப் பின்னர் சட்டென்று கண்விழித்து வறுமையில் இருந்து மேலே வந்தமை எவரும் அறிந்ததே.
நானே என் இளமையில் என் கிராமத்தில் கடுமையான வறுமையை கண்டவன்தான். என் சக மாணவர்கள் நாட்கணக்காக மரவள்ளிக்கிழங்கையே உண்டு வந்ததைக் கண்டிருக்கிறேன். ஆனால் எழுபதுகள் தாண்டியபோது உணவில்லாத நிலை என்பதே படிப்படியாக இல்லாமலாவதையும் கண்டேன்.
சுதந்திரத்துக்குப் பின்னால் வந்த அரசுகள் மிக எளிய சில வசதிகளையே மக்களுக்கு அளித்தன. கிராமங்களுக்கு சாலைகள் வந்தன. பள்ளிகள் வந்தன. சில இடங்களில் அணைக்கட்டுகள் வந்து பாசன வசதி உருவாகியது. இந்த கொடிநுனியைப் பற்றிக்கொண்டே நம் மக்கள் சட்டென்று அவர்களின் நூற்றாண்டு வறுமையில் இருந்து மேலே வந்தார்கள். கல்வி ஒரு சமூகத்தை எப்படி மாற்றமுடியும் என்பதைத் தமிழகத்தில் காமராஜ் நிரூபித்துக்காட்டினார்.
ஆனால் நீர்வளமும் நிலவளமும் மிக்க தெலுங்கானாவும் கோதாவரியும் முப்பதாண்டுக்காலம் பஞ்சத்தில் மூழ்கிகிடந்தன. ஏன்? கொஞ்சம் யோசிக்கும் எவரும் அத்தகைய வாய்ப்பு ஏன் இப்பகுதிகளுக்கு கிடைக்கவில்லை என்றுதானே யோசிக்க வேண்டும்? அந்த வாய்ப்பை இப்பகுதிகளுக்கு அளிப்பதைப்பற்றி மட்டும்தானே திட்டமிடவேண்டும்?
எந்த நூற்றாண்டானாலும் போர்நிகழும் சூழலில் எந்த வளர்ச்சியும் இருக்க முடியாது. தங்கள் நிலப்பகுதியை வெளியுலகம் அணுகமுடியாதபடி துண்டித்து வைத்திருந்தார்கள் நக்ஸலைட்டுகள். இன்னும் சொல்லப்போனால் வறுமை இருந்தால்தான் நக்சலிசம் நீடிக்கும் என்பதே அவர்களின் கொள்கை. வறுமையில் இருந்து நக்சலிசம், நக்சலிசம் காரணமாக மேலும் வறுமை என்ற விஷச்சுழற்சி.
அந்நிலையை மாற்றியவர் என்.டி.ராமராவ். முப்பதாண்டுக்காலம் காங்கிரஸின் ஆட்சியில் நக்சலைட்டுகளை ஒடுக்கும் உறுதிப்பாடு இருக்கவில்லை. இசைநாற்காலி போல மாறிக்கொண்டே இருந்த முதல்வர்கள் அந்த வகையான நீண்டகால திட்டங்கள் எதையும் கொண்டிருக்கவில்லை. ஆனால் ராமராவ் அந்த உறுதி கொண்டிருந்தார்.
ராமராவ் எப்படி நக்ஸலைட் போராட்டத்தை ஒடுக்கினார்? என் தெலுங்கு எழுத்தாள நண்பர் ஒருவர்சொன்னார், ’ஊழல் மூலம்’. அது எனக்கு ஆச்சரியத்தை அளிக்கவில்லை. சொல்லப்போனால் அவர் வேறு என்ன சொல்லியிருந்தாலும் நான் அதையே எடுத்துக்கொண்டிருப்பேன். என் புரிதலில் முதலாளித்துவமும் ஊழலும் வேறு வேறாக இருக்க முடியாது.
ஒருபக்கம் கடுமையான போலீஸ் நடவடிக்கைகள் . மறுபக்கம் மக்களுக்கு எல்லாரும் ஏதாவதொன்றைப் பெறும் ஊழல் அரசியலை தெலுங்கு தேசம் அறிமுகம் செய்தது. வழக்கமாக உள்ளூர் முதலாளிகளும் நிலக்கிழார்களும் பொறுப்பில் இருந்த காங்கிரஸ் மட்டுமே மாறாமல் ஆட்சியை கையாண்ட காலம் மறைந்தது. தெலுங்குதேசத்தில் பல்வேறு அடித்தள மக்களுக்கு பொதுப்பணத்தில் கைவைக்க வாய்ப்பு கிடைத்தது. பல ஊர்களில் நக்சலைட்டுகளே தெலுங்குதேசமாக ஆகி அதிகாரத்தை பிடித்தார்கள்.
சிறுகச்சிறுக தீவிரவாதம் இல்லாமல் ஆகியது. காங்கிரஸ்- தெலுகுதேச அரசியல் சூடுபிடித்தது. நூற்றாண்டுகளாக அரசியலதிகாரம் பற்றிய கனவே இல்லாமல் இருந்த சாதிகளுக்கு அந்த கனவை அளித்ததே ராமராவின் சாதனை. வழக்கம்போல உள்ளாட்சி தேர்தல்கள், கூட்டுறவு தேர்தல்கள். எங்கும் ஊழல். விளைவாக உருவான ’முன்னேறும் வெறி’ . அதாவது எழுபதுகளில் தமிழகத்தில் என்ன நடந்ததோ அது அங்கே ஆந்திரத்தில் நடந்தது. மக்கள் சம்பாதிக்கும் வேகம் கொண்டார்கள். கல்விப்பசி கொண்டார்கள். கிராமியப் பொருளியலின் தேக்கம் இல்லாமல் ஆகியது. வணிகம் பெருகியது. பணப்புழக்கம் உருவாகியது.
1993ல் நான் மீண்டும் அதே பகுதிகளுக்குச் சென்றபோது கிராமங்கள் பளீரென கண்திறந்திருப்பதைக் கண்டேன். புதிய வீடுகள். நுகர்பொருட்கள் நிறைந்த கடைகள். நெரிசலிடும் சந்தைகள். சிற்றூர்களுக்குக் கூட சாலைகள். ஆட்டோரிக்ஷாக்களில் பிதுங்கி வழிந்து செல்லும் மக்கள் கூட்டம். 2009ல் மீண்டும் அதே பகுதி வழியாகச் செல்லும்போது ஆந்திரா முற்றிலும் மாறிவிட்டிருப்பதை காணமுடிந்தது.
முன்பெல்லாம் ஒரு நடுத்தர நகரில் கூட அழுக்கில்லாத சட்டை அணிந்த ஒருவரை பார்ப்பது அவ்வப்போதுதான் சாத்தியம். ஆனால் இன்றைய ஆந்திரா அப்படி அல்ல. சிற்றூர்களில்கூட கணிப்பொறிக் கல்வி. உலகின் மிக அதிகமான கணிப்பொறி ஊழியர்களை உருவாக்குவது ஆந்திராதான் என்கிறார்கள். சிற்றூர்களில் கூடச் சீருடை அணிந்து ஆங்கிலக் கல்விக்குச் செல்லும் பிள்ளைகள். இந்தியாவில் மிக அதிகமாக ஆங்கிலக் கல்வி பெறும் மக்கள் அங்கேதான். ஏன், ஐஐடிகளில் அதிகமாக பங்குபெறும் மாணவர்களும் அவர்களே என்று சமீபத்தில் ஒரு நண்பர் சொன்னார்
முன்பு ஆந்திராவின் நகரம் என்றால் அது ஒருசில சாலைகள் மட்டுமே. ஒரு புதிய கட்டிடத்தை காண்பதே அரிது. இன்று நகரங்கள் பல கிலோமீட்டர் தூரத்துக்கு பரந்து விரிந்து கிடக்கின்றன. எங்கும் புதிய வீடுகள். தெலுங்கு கங்கை திட்டம் ஆந்திராவில் வறண்டு காய்ந்து கிடந்த ராயலசீமாவை முழுக்கச் செழிப்பாக்கியிருக்கிறது. நூற்றாண்டுகளுக்கு முன்னர் வறண்டுக் கிடந்த கிராமங்களில் விவசாயத்தின் செழிப்பை கண்டேன். ஆந்திராவின் புதியபொருளியலின் சின்னம் – வேறென்ன, எண்பதுகளில் தமிழகத்தில் பெருகிய இருசக்கர வாகனங்கள்தான்- எங்கும் நிறைந்திருந்தது.
ஆம், எல்லாம் சேர்த்துத்தான். நகரங்கள் குப்பைமலைகளாக உள்ளன. எந்த ஒழுங்கும் இல்லாத வாகன நெரிசலில் நகரங்கள் ஓலமிடுகின்றன. மதுக்கடைகளில் கூட்டம் கொழிக்கிறது. இந்தியாவில் ஊழல் மிக்க மாநிலங்களில் ஒன்று ஆந்திரா. ஊழல் அடிமட்ட சாதிகளுக்கு நகர்ந்துவிட்டது. இன்றும் லம்பாடிகள் போன்ற நாடோடிகள் இந்த மாற்றங்களுக்கு ஈடுகொடுக்க முடியாதவர்களாக ஒதுங்கிவிட்டார்கள். ஆனால் ஒன்றுண்டு, ஆந்திராவில் இருபது வருடம் முன்பு நான் கண்ட அந்த பட்டினிக்கோலங்களை இப்போது பார்க்கமுடியவில்லை. ஆம், பசி அகன்றுவிட்டது.
அதேகதைதான் பஞ்சாபுக்கும். பஞ்சாப் போராட்டமே சண்டிகருக்காகவும் நதிநீருக்காகவும்தான். வளார்ந்துவரும் வேளாண்மைக்கு நீரின்றி ஆகிவிடும் என்ற பதற்றமே பஞ்சாப் மக்களை தீவிரவாதத்துக்கு செவிசாய்க்கச்செய்தது. கொலைகளின் திருவிழாவாக நடந்த பஞ்சாப் பிரச்சினை இன்று அனேகமாக பழைய வரலாறு. 1984ல் நான் கண்ட பஞ்சாப் ஒரு மயானம்போல அமைதியாக இருந்தது. சண்டிகரில் இருந்து அமிர்த்சரஸ் செல்லும் பாதையில் ஒருமணிநேரத்துக்கு ஒரு வண்டி கூட எதிரே வருவதில்லை. இந்தியாவின் அதிகபட்ச வளம் மிக்க மண்ணில் எங்கும் வறுமை. கணு தோறும் போலீஸ் பரிசோதனை. கிராமங்கள் துண்டுபட்டு இருளில் மூழ்கி கிடந்தன.
1998ல் நான் கண்ட பஞ்சாபைப் பார்த்தால் அது இந்தியாதானா என்றே ஐயம் ஏற்பட்டது. சமீபத்தில் சண்டே இண்டியன் என்ற ஆங்கில நாளிதழ் பஞ்சாபின் இன்றைய நிலையை எழுதியிருந்தது. என்ன நிகழ்ந்தது? மாற்றத்தை நிகழ்த்தியது அதே ஊழல்தான் என்றார் ஒரு இதழியல் நண்பர். இம்முறை காங்கிரஸ் அதைச் செய்தது. பீந்த்சிங்கின் ஆட்சியில் அடித்தளசாதியினருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.
ஆம், புரட்சிகர வன்முறை அரசியல் மக்களை மிருகங்களை விடகீழானவர்களாக வைத்திருந்தது. எந்த பொருளியல் காரணங்களுக்காக அது ஆரம்பித்ததோ அந்தக் காரணங்களை விட இன்னும் மோசமான சிக்கல்களை உருவாக்கி மக்களை இன்னும் பாதாளத்தில் தள்ளியது. அந்த அரசியலை அகற்றிய ஊழல் அரசியல் அந்த மக்களின் பொருளியல் பிரச்சினைகளை அவர்களே தீர்க்க வழியமைத்தது. சீரழிந்த கட்சி அரசியல் அவர்களுக்கு உணவும் உறைவிடமும் கல்வியும் அளித்தது. முன்னேற்றத்தை நோக்கி கொண்டுசென்றது — இது இந்தியா காட்டும் யதார்த்தம்
புரிந்துகொள்ள முடியவில்லை. தார்மீகமான ஓர் இடத்தில் அடி விழுகிறது. ஆனால் இதுதான் உண்மையில் இங்கே நடக்கிறது. மக்கள் மீது நெடுங்கால வன்முறைச்சூழல் சுமத்தப்பட்டால் அது அவர்களை அழிக்கும். அது எந்த காரணத்துக்காக உருவான வன்முறையாக இருந்தாலும் அதனால் மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை. பேரழிவே எஞ்சும். அந்த அழிவை விட ஊழலே மேல் என்ற முடிவை நோக்கியே என் மனம் செல்கிறது.
இரு வாசல்கள்
கொஞ்சம் பயணம் செய்து பழகியவர்களுக்கு ஓர் ஊரில்சென்றிரங்கியதும் வெறும் கண்பார்வையிலேயே எவ்வளவோ விஷயங்கள் பிடிபடும். அவ்வூரின் பொருளியல்நிலைமை, சமூகநிலைமை, சட்டம் ஒழுங்கு. கட்டிடங்களை, மக்களின் உடைகளை, கடைகளின் சாமான்களை, வாகனங்களை நாம் ஒட்டுமொத்தமாக கவனிக்கிறோம். நம்மையறியாமலேயே ஒரு மனச்சித்திரம் உருவாகும். அது பெரும்பாலும் மிகச்சரியாக இருக்கும்.
நான் முதன்முதலாக வங்காளத்துக்குச் சென்றது 1983ல். கல்கத்தாவே எனக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தது. வறுமையும் அராஜகமும் நிறைந்த ஒரு நரகம். ஆனால் கிராமப்புற வங்கம் இன்னும் மோசமாக இருந்தது. எந்தவிதமான வளர்ச்சியும் இல்லாமல் சூம்பி கிடந்த கைவிடப்பட்ட கிராமங்கள். தேங்கிநாறிய நீர்நிலைகள். கால்நூற்றாண்டுக்குப்பின் 2008 ல் குறைந்த தூரம் வங்காளத்தில் பயணம்செய்தபோது வங்கம் அப்படியே அசைவற்று தேங்கிக்கிடப்பதைக் கண்டேன். பழைய உடைந்த ஓட்டுகட்டிடங்களினாலான நகரங்கள். இடிந்த பொதுமையங்கள். பாழடைந்த சாலைகள்.
ஊழலில் திளைத்த முதலாளித்துவக் கட்சிகள் அளித்த முன்னேற்றத்தில் கால்வாசியைக்கூட புரட்சி பேசிய இடதுசாரிகள் அளிக்கவில்லை. அதைப்பற்றி என் வங்க எழுத்தாள நண்பரிடம் விரிவாக உரையாடினேன். நந்திகிராமம் பிரச்சினையாக ஆன காலகட்டத்தில் வங்கம் நோக்கி ஒரு பயணம் செய்யத் திட்டமிட்டோம். முடியாமல் போய்விட்டது
வங்கத்தில் உண்மையில் நடப்பது என்ன? வங்கம் இன்று இன்னொரு வகையான நிலப்பிரபுத்துவத்தின் பிடியில் உள்ளது என்பதே உண்மை. அறுபதுகள் வாக்கில் பழைய ஜமீந்தாரர்களும் ஜாகீர்தாரர்களும் முழுமையாக இல்லாமலானார்கள். நிலங்கள் புதிய நிலப்பிரபுக்களிடம் சேர்ந்தன. அவர்கள் கிராமங்களை முழுக்க கைவசம் வைத்துக்கொண்டார்கள். கிராமங்களில் அவர்களே கம்யூனிஸ்டுகட்சி. அவர்களே காவல்நிலையம். அவர்களே வரிவசூல். அவர்களே அரசு. பிராமணகளும் காய்ஸ்தர்களும் சேர்ந்து சிறிய அதிகாரக் குழுக்களாக ஆகி மாநிலத்தை முழுமையாகக் கைப்பற்றி வைத்திருக்கிறார்கள். இந்த அதிகாரம் எப்படிப்பட்ட வன்முறையால் ஆனது என்பதற்கு மரிச்சபி போன்ற நிகழ்வுகளே சான்றாகும்.
தொடர்ந்து வங்காளத்தில் இடதுசாரிகள் தேர்தலில் வெல்லும் ரகசியமும் இதுவே. பல ஊர்களில் ஓட்டு ஒட்டுமொத்தமாகவே போடப்படும். மாற்று வழியே சாத்தியமில்லை. தேர்தல் கமிஷன் தலைவர் சேஷனே வங்காளத்தில் முழுமையாகத் தோற்றுப்போனார் என்று அவரே சொல்லியிருக்கிறார். இந்த ஆதிக்கம் காரணமாக அங்கே ஜனநாயகமே இல்லை. மக்களின் இச்சைகளுக்கும் அரசுக்கும் தொடர்பில்லை. அங்கிருப்பது ஒரு ஆதிக்க அரசு மட்டுமே. ஆகவே வேளாண்மை தொழில் எதிலும் எந்த முன்னேற்றமும் இன்றி வங்கம் தேங்கி கிடக்கிறது.
இந்த நிலையில் இருந்து வெளிவருவதற்காக கீழ்த்தளச்சாதிகள் செய்யும் போராட்டமே அங்கே இடதுசாரி தீவிரவாதமாக எழுந்தது. 1965ல் அது சந்தால் பழங்குடிகளின் கிளர்ச்சியாக எழுந்தது. நக்ஸலைட் இயக்கமாக ஆகி மாநிலத்தை மூடியது. அன்று நக்ஸலைட் இயக்கத்தை வேட்டையாடி அதன் 70000 த்துக்கும் மேலான இளைஞர்களை கொன்றொழிக்க அன்றைய அரசுடன் எல்லாவகையிலும் ஒத்துழைத்தவர்கள் இடதுசாரிக் கட்சியினர் என்பது வரலாறு
இன்றைய மாவோயிச கிளர்ச்சியும் அதே தளத்தில் இருந்து எழுவதே. அதன் மூலக்காரணம் வங்கத்தின் கிராமிய அதிகாரத்தை ஆளும் நவீனநிலப்பிரபுக்களுக்கு எதிரான கோபம். அதை மாவோயிஸ்டுகள் பயன்படுத்திக்கொள்கிறார்கள். திருணமூல் காங்கிரஸ் கட்சியும் அந்த மக்களையே தங்கள் ஓட்டுக்காக நம்பி இருக்கிறது. ஆகவே அவர்கள் நடுவே அங்கே ஒரு புரிந்துணர்வு இருக்கிறது.
வங்க யதார்த்தம் பல கேள்விகளை எழுப்புகிறது.சாதாரண நடிகர்களான எம்.ஜி.ஆரும், என்.டி.ஆரும் உருவாக்கிய வளர்ச்சியைக்கூட ஏன் இந்த புரட்சியாளர்களால் உருவாக்க முடியவில்லை? பட்டினியை ஒழிக்க இவர்களால் ஏன் முடியவில்லை? அதற்கான விடை இடதுசாரி அரசியலின் அடிப்படை அமைப்பை ஆராய்ந்தால் மட்டுமே நமக்குக் கிடைக்கும்
உண்மையில் நிலப்பிரபுத்துவத்தில் இருந்து வெளியேற இரு வாசல்களே இன்றுள்ளன. ஒன்று முதலாளித்துவ ஜனநாயகம். அது ஊழல் மிக்கது. ஆனால் ஒவ்வொருவரும் முட்டிமோதி மேலே செல்ல அது ஏதோ ஒரு வாய்ப்பை அளிக்கிறது. ஒட்டுமொத்தமாக மக்களின் ஆசைகள், நோக்கங்களை முதலாளித்துவ ஜனநாயக அமைப்பு பிரதிபலித்தாகவேண்டியிருக்கிறது. பெரும்பாலும் மக்களின் சிறுமைகளையும் பேராசையையுமே அது பிரதிபலிக்கிறதென்றாலும் வேறு எந்த அரசை விடவும் அது மக்களைப் பிரதிநிதித்துவம் செய்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை நடைமுறையில் அதன் பலன்கள் நிரூபிக்கப்பட்டுள்ளன. எம்.ஜி.ஆரும் என்.டி.ஆரும் அதன் முகங்கள்தான்.
முதலாளித்துவ ஜனநாயகத்தில் உள்ள குறைகளான ஊழல், நிர்வாகக்குளறுபடிகள், பெரும்பான்மையினரின் சிறுமைகளே சமூக நெறியாக ஆகும் தன்மை ஆகியவற்றுக்கு எதிராக எப்போதும் இங்கே முன்வைக்கப்படுவது இடதுசாரி வன்முறை அரசியல். ஜனநாயகத்தில் பொறுமையின்மை கொண்ட ஒருவர் போதிய வரலாற்றுப்புரிதல் இல்லாதவர் என்றால் போகும் இடம் அதுவே . வன்முறையும் சர்வாதிகாரமும் உள்ளுறைகளாக அமைந்ததுதான் இடதுசாரி கிளர்ச்சி. அது அழிவை மட்டும்தான் உருவாக்கும் எந்த நோக்கத்துக்காக அது எழுந்தாலும் கடைசியில் மக்கள்மீதான அடக்குமுறையாக மட்டுமே விளையும்
ஆகவே இன்று முதலாளித்துவஜனநாயகத்தை நோக்கி செல்வதே இயல்பானது சரியானது. மக்கள் தங்கள் திரள் ஆற்றல் மூலம் ஜனநாயகத்தின் பிழைகளைச் சரிசெய்யலாம். குறைகளை நிரப்பிக்கொள்ளலாம். ஆன்ம வல்லமை இருந்தால், பண்பாட்டுச் செறிவு இருந்தால் இன்னும் மேலான அமைப்புகளை நோக்கிச் செல்லவும் செய்யலாம். ஆனால் இப்போது இந்த முதலாளித்துவ ஜனநாயகம் அன்றி வேறு வழி இல்லை.
இடதுசாரி அரசின் எல்லைகள்
இடதுசாரி வன்முறைப்போக்கு பேரழிவை மட்டுமே இன்றுவரை அளித்திருக்கிறது. உலகில் எங்கும் இன்று வரை காணும் உண்மை அதுவே. இந்தியாவிலும் இதே நிலைதான். அதைச் சுட்டிக்காட்டினால் இடதுசாரி கோட்பாடுகள் சரியானவை, ஆனால் அவை உலகில் அமல்படுத்தப்பட்ட அத்தனை இடங்களிலும் அவ்வமைப்பு தவறாகவே நடைமுறைக்கு வந்தது என்று இடதுசாரிகள் பதில் சொல்வார்கள். இவர்கள் கொண்டு வரப்போகும் இடதுசாரி அரசு மட்டும் கோட்பாட்டுக்கு விசுவாசமான, மக்கள்நல அமைப்பாக இருக்கும் என நம்புப்படி கோருவார்கள்.
என் நோக்கில் இடதுசாரி அரசமைப்பின் பரிசோதனைக்காலம் முடிந்துவிட்டது. கிட்டத்த நூறு வருடங்களில் இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளில் செய்யப்பட்ட அந்த பரிசோதனை முழுமையாகவே தோல்வி அடைந்துவிட்டது. மானுட அழிவை அன்றி வேறெதையுமே அது சாதிக்கமுடியாது என்று வரலாறு காட்டிவிட்டிருக்கிறது. இடதுசாரி அரசியலின் உள்ளுறையாக உள்ள ஒன்று, அதை நான் செயல்பாட்டாளரியம் [கம்மிஸாரிசம்] என்பேன், அதை சமூக அழிவுக்கு இட்டுச்செல்கிறது என்பதே வரலாறு.
மார்க்ஸியத்தின் கோட்பாடுகளின்படி புரலட்டேரியன் எனப்படும் உழைக்கும்வர்க்கம் வரலாற்றுணர்ச்சி அடைந்து புரட்சியை நடத்த வேண்டும். ஆனால் அவர்கள் அனைவரும் புரட்சியை நடத்த வரமாட்டார்கள் என்பது யதார்த்தம். அவர்களில் ஒருசாராரே கட்சியால் ஒருங்கிணைக்கப்பட்டு புரட்சிக்காக ஆயுதம் எடுப்பார்கள். அவர்கள்தான் புரட்சி செய்து அதிகாரத்தை அடைவார்கள். அரசு அவர்களுடையது. ஆகவே நாடே அவர்களுடையது. இந்த அம்சமே இன்றுவரை இடதுசாரி அரசியலின் அனைத்து அழிவுகளுக்கும் ஊற்றுக்கண்.
உண்மையில் இது மார்க்ஸ் சொன்னது அல்ல. இது லெனினியம். மார்க்ஸுக்கு லெனின் அளித்த அரசியல் விளக்கம். மார்க்ஸியத்தின் நடைமுறைச்சீரழிவு ஆரம்பிக்கும் இடம் இது என நாற்பதுகளிலேயே மார்க்ஸிய சிந்தனையாளரான அண்டோனியோ கிராம்ஷி சொன்னார்.
லெனினியக் கோட்பாடுகளின்படி இந்த செயல்பாட்டாளர்கள் மக்களுக்காக பேசும் பிரதிநிதிகள். மக்களை வழிநடத்துபவர்கள். மக்களை ஆள்பவர்கள். ஏனென்றால் இவர்களுக்கு மட்டுமே வரலாற்றுணர்வும் கோட்பாட்டுப்புரிதலும் உண்டு. மக்களுக்கு நல்லது கெட்டது தெரியாது. அவர்களின் கருத்துக்களுக்கு எந்த மதிப்பும் இல்லை. அவர்கள் இந்த செயல்பாட்டாளர்களை நம்பி இவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கவேண்டியதுதான். அதுவே அவர்களுக்கு நன்மை அளிக்கும். ருஷ்யாவில் லெனின் உருவாக்கி ஸ்டாலின் கையில் கொடுத்துப்போன அமைப்பு இதுதான்
உலகமெங்கும் எல்லா மார்க்ஸிய அமைப்புகளிலும் உள்ளது செயல்பாட்டாளரியம்தான். இந்த செயல்பாட்டாளர்களை ஒருங்கிணைத்து வழிநடத்த ஓர் அமைப்பு தேவை. அந்த அமைப்பின் நிர்வாகிகள் அவர்கள் மேல் அதிகாரம் கொண்டவர்கள். அவர்களும் அரசும் வேறு வேறல்ல. ஆக அந்த அரசியல்செயல்பாட்டாளர்களின் மேல் செல்வாக்கு கொண்ட ஒருவர் நாட்டை ஆள முடியும். எதையும் செய்ய முடியும். அவர் அவர்களைப்பற்றி மட்டும் கவலைப்பட்டால் போதும். மொத்த நாடே அவரை நிராகரித்தாலும் அவர் அதிகாரம் இழக்க மாட்டார். காலப்போக்கில் அந்த செயல்பாட்டாளர்களையே ராணுவம் மூலம் அரசு கட்டுப்படுத்தலாம். அதன் பின் வரம்பில்லா அதிகாரம். அந்த அதிகாரத்தை கையாளும் சிலருடைய கருணையால் மக்கள் வாழ்ந்தால் உண்டு.
ஒரு சர்வாதிகார அரசு எந்தக் கோட்பாட்டின்படி அமைந்தாலும் சரி அது சர்வாதிகார அரசே. முற்போக்கு சர்வாதிகாரம் பிற்போக்கு சர்வாதிகாரம் என்ற பேதமெல்லாம் தற்காலிகமானது என்றுதான் உலக வரலாறு காட்டுகிறது. என் நோக்கில் அரசும் மக்களும் இரு எதிர் எதிர் சக்திகளாகவே இயங்க முடியும். அதுவே இயல்பானது. மக்களால் உருவாக்கப்பட்ட அரசாக இருந்தாலும் சரி இதுவே விதி. மக்களின் கூட்டான அதிகாரமும் கட்டுப்பாடும் தொடர்ந்து அரசின் மீது இருக்கவேண்டும். மக்களால் அரசு ஒவ்வொருமுறையும் நெறிப்படுத்தப்படவேண்டும். ஆனால் சர்வாதிகார அரசில் மக்களின் அதிகாரம் முழுமையாக ரத்துசெய்யப்படுகிறது. அது ஓர் ஒற்றைப்படை அதிகாரமாக ஆகிவிடுகிறது.
எந்த ஒரு அரசும் நிர்வாக வர்க்கம் என்ற ஒன்றால்தான் இயக்கப்படுகிறது. அதிகாரிகள், சின்ன அதிகாரிகள், குட்டி அதிகாரிகள், ஊழியர்கள்… நெடுங்காலம் இந்த அமைப்பு எப்படி இயங்குகிறது என்பதை அவதானித்தவன் என்றவகையில் எந்த நாட்டிலும் எச்சூழலிலும் நிர்வாக வர்க்கம் சமூகநலம்நாடுவதாக, மனிதாபிமானம் கொண்டதாக, ஊழலற்றதாக இருக்கும் என்பதை நான் நம்பவில்லை. அது எப்போதும் விதிகளின் அடிப்படையில் செய்து வந்ததை அப்படியே செய்யும். மேலிருந்து கீழே நோக்கிசெயல்பாடுகளை தள்ளிவிட்டு அதிகாரத்தை மட்டும் மேலே குவித்து வைக்கும்.
அதேபோல அரசின் பின்புல வல்லமையாக உள்ள ராணுவம் எந்நிலையிலும் ஒரு ஆக்கபூர்வ சக்தியாக இருக்காது. எந்த ராணுவமும் ஒன்றே. ஆதிக்க ராணுவம் புரட்சிராணுவம் என வேறுபாடே இல்லை. வன்முறைக்கு அனுமதி அளிக்கப்பட்டால் மனிதமனம் அதன் ஆதிநிலைக்குச் செல்கிறது. எதையும் செய்வதாக அது ஆகிறது. அங்கே மனிதநிலை இல்லை.
ஓரு ஜனநாயக அரசில் மக்கள் வல்லமையே அரசு சார்ந்த இவ்விரு எதிர்மறை அமைப்புகளையும் கட்டுப்படுத்துகிறது. மக்களின் அதிகாரம் இல்லாமலாக்கப்பட்ட சர்வாதிகார அரசு என்பது நிர்வாகவர்க்கமும் ராணுவமும் போடும் வெறியாட்டமே. சோவியத் ருஷ்யாவாக இருந்தாலும் சரி , போல்பாட்டின் கம்போடியாவாக இருந்தாலும் சரி, சீனாவாக இருந்தாலும் சரி, சதாம் உசேனின் அரசாக இருந்தாலும் சரி.
செயல்பாட்டாளர்களின் முற்றதிகாரம் என்ற நிலையே உலகமெங்கும் எல்லா இடதுசாரி அரசுகளிலும் நடந்தது. கிட்டத்தட்ட வங்கத்தில் நிகழ்கிறது. இப்படியேதான் இடதுதீவிரவாதிகள் ஆண்ட ஆந்திரத்திலும் நடந்தது. மக்களின் துயரை நீக்குவதாக அறைகூவி ஆரம்பிக்கப்பட்ட இவ்வியக்கங்கள் மக்களை அடிமைகளாக்கின. அவர்களின் துயர்களை தங்கள் மூலதனமாக ஆக்கின. அதிகாரம் முழுக்க முழுக்க துப்பாக்கி ஏந்தியவர்களிடம் இருந்தது. அவர்கள் மேல் மக்களுக்கு எந்த கட்டுப்பாடும் இருக்கவில்லை. மக்கள் அவர்களின் கருணையில் வாழ விதிக்கப்பட்டிருந்தார்கள்.
நான் ஏன் இந்த மார்க்ஸியத்தை நம்பவில்லை என்றால் நான் மனிதனை நம்பவில்லை. மனிதனின் நல்லியல்பை மட்டுமே நம்பி அவனிடம் முற்றதிகாரத்தை ஒப்படைக்கும் எதையும் நான் ஏற்க முடியாது. இலட்சியவாதம் மனிதாபிமானம் எல்லாவற்றுக்கும் அடியில் கிடப்பது மனிதனின் ஆதி இயல்புகளான உடைமைமோகம், அதிகார மோகம், வெறுப்பிலும் வன்முறையிலும் இன்பம் காணும் அடிப்படை தினவு ஆகியவையே. அவை புரட்சி அரசின் புரட்சி ராணுவத்தின் புரட்சி சிப்பாயிடமும் அதே அளவில் இருக்கும். அவர்களுக்கும் பிற அரசமைப்புகளில் உள்ள மனிதர்களுக்கும் எந்த வேறுபாடும் இல்லை.
ஆகவே எந்த அதிகாரமும் இன்னொன்றால் சமன்படுத்தப்பட்டிருக்க வேண்டும். இயற்கையின் எல்லா அமைப்புகளும் அப்படித்தான் உள்ளன. ருஷ்ய,சீன புரட்சிகளின் வரலாற்றை சாதாரணமாக பார்த்தால்கூட தெரிவது ஒன்றுதான். இலட்சியவாதத்தின் வேகம் சில நாட்களுக்கே. தேனிலவு முடிந்ததுமே மனிதர்களின் ஆதி இயல்புகள் வெளிவருகின்றன. ஒருவரோடோருவர் போட்டியிட்டார்கள். ஒருவரை ஒருவர் அழித்தார்கள். அனைத்தையும் தனக்கென அடைய முயன்றார்கள். அனைத்தையும் தன்கீழே வைக்க ஆசைப்பட்டார்கள். அவர்களை நம்பிய சமூகங்களை அடிவேர் வரை கெல்லி அழித்தார்கள்.
இந்த இடதுசாரி அரசியல் ஒருபோதும் இன்றைய முதலாளித்துவ ஜனநாயகத்தின் சிக்கல்களுக்கான தீர்வாக அமைய முடியாது என நான் உறுதியாக நினைக்கிறேன்.
[மேலும்]