எம்.வி.வியும் கோயாவும்

goya

வணக்கம் திரு ஜெயமோகன்

இடைவெளிக்குப்பின் மீண்டும் எழுத ஆரம்பித்ததில் மகிழ்ச்சி. எம் வி வெங்கட்ராம் அவர்களை பற்றி நீங்கள் எழுதியதை படிக்கையில் எனக்கு பிரான்சிஸ்கோ டே கோயா என்ற ஸ்பெயின் ஓவியர் பற்றி ஞாபகம் வந்தது.

பிரான்சிஸ்கோ டே கோயா ரொமாண்டிசிசம் ஓவியங்களை வரைவதிலும் போர்ட்ரைட் ஓவியங்களை வரைவதிலும் புகழ் பெற்றவர். ஸ்பெயினின் முக்கியமான ஓவியர்களின் முதன்மையானவராக கருதப்பட்டவர். நெப்போலியன் ஸ்பெயின் மீது படை எடுத்து வந்தபோது நடந்த போர் கொடூரங்களை தன்னுடைய ஓவியங்களில் வரைந்தார்.

தன்னுடைய இறுதி நாட்களில் எம் வி வெங்கட்ராம் போலவே காது கேளாமல் ஆகி தன்னுடைய மன நலம் பற்றி கவலை கொண்டு(  ஸ்கிஸோபிர்னியாவாக இருக்க கூடும்)’Quinta del sordo’- காது கேளாதவனின் இல்லம் என தன் வீட்டிற்கு பெயர் இட்டு அங்கேயே தன் இறுதி வரை வாழ்ந்தார். இக்காலகட்டத்தில் அவர் வரைந்த ஓவியங்கள் அவருடைய முந்தைய ஓவியங்களை போல் வண்ணங்கள் மிகுதியாக இல்லாமல் முற்றிலும் இருட்டிலேயே நடப்பது போன்று வரைந்திருந்தார்.

இவ்வோவியங்கள் கருப்பு ஓவியங்கள் என பின்னர் அறியப்பட்டன அவற்றை அவர் கேன்வாஸில் வரையாமல் நேரடியாக அவர் வீட்டில் சுவர்களில் பெயிண்டை கொண்டு தீட்டினார். அவர் இறந்து கிட்டத்தட்ட  50 வருடங்கள் கழித்தே இந்த ஓவியங்கள் வெளி உலகத்திற்கு தெரிந்தன.

அந்த ஓவியங்களை பார்க்கையில் கட்டற்ற ஒரு விடுதலையுடன் வரையப்பட்டவை என எனக்கு தோன்றுகின்றது. குறிப்பாக saturn devouring his son என்ற ஓவியம். இந்த ஓவியங்களை பற்றி அவர் எங்கும் எழுதவில்லை யாரும் அதை பார்க்கவும் எந்த வாய்ப்பும் இல்லை. எனவே முழு சுதந்திரத்தோடு தன் மனம் விரும்பியதை அவர் வரைதிருக்கிறார். அந்த மனம் அறிவியலின் படி நலமுடன் இருந்ததா என்ற கேள்வி அவர் உருவாக்கிய கலையின் முன் அர்த்தமற்று போகின்றது.

ஒவ்வொரு கலைஞனும் தன் கலையை படைக்கையில் ஒரு வித உச்ச தன்மைக்கு சென்று பிறகு மீள்கிறான். இயற்பியலில் ஒரு எலக்ட்ரான் தன் கீழ் நிலையில் இருந்து  உச்சத்திற்கு செல்கிறது. அங்கு அது அதனுடைய ஆற்றலை ஒளியாக மாற்றி அளித்து விட்டு மீண்டும் தன கீழ் நிலைக்கு திரும்புகிறது. கலைஞன் இந்த எலக்ட்ரான் போல உச்ச நிலைக்கு சென்று அவன் ஆற்றலை கலையெனும்  ஒளியாக மாற்றி விட்டு மீண்டும் கீழ் நிலைக்கு வருகிறான்.

மீண்டவுடன் அவன் உச்சத்தில் இருந்த போது படைத்த கலை அவன் படைத்தது தானா என்ற கேள்வி அவனுக்கே வரக்கூடும். அவன் அதை ஒரு அந்நிய தன்மையுடன் நோக்க கூடும். வேறொருவனென அவனே அவன் கலையை அறிய கூடும்.

சிலர் மீண்டு வராமலும் இருக்ககூடும்.

காலத்திற்கு ஏற்ப அறிவியல் சிந்தனைகள் மாறிக்கொண்டே வருகிறது. ஃராய்டின் கூற்றுக்களை ஆதர்சனமான அறிவியல் என ஒப்பு கொள்ள இன்று பலரும் தயங்குவர். இன்று அறிவியல் என கருதப்படுவது நாளை இதே நிலைமைக்கு தள்ளப்படும்.

ஆனால் கலையும் கலைஞனும் என்றும் மாறாதவை. அதற்கு சான்று இவ்விருவரும். வெவ்வேறு காலகட்டத்தில் வேறு துறைகளில் இருந்தாலும் இவர்கள் இருவரையும் இணைக்கும் கலை என்றும் மாறாததாக வந்து கொண்டிருக்கிறது. நீங்கள் சொன்னது போல அறிவியல் கலைக்கு அளவுகோல் அல்ல. மேலே எலெக்ட்ரோனையும் கலைஞனையும் ஒப்பிட்டது போல குறியீட்டிற்கும் உவமைக்கும் மட்டுமே அறிவியல் பயன்படலாம். அதை கொண்டு அவனை ஒரு குறிப்பிட்ட அளவிற்குள் தைப்பது சரியில்லை.அவனுடைய ஆற்றல் என்றும் அறிவியலால் விளக்க முடியாமல் வெளியே தான் நிற்கும்.

தங்கள் கட்டுரையை படித்தவுடனுன் எனக்கு தோன்றியதை அப்படியே எழுதி அனுப்புகிறேன். ஆகவே இந்த ஒழுங்கற்ற தன்மை. நினைப்பதை முழுமையாக வார்த்தைகளில் கொண்டு வர இன்னும் கற்று தேறவில்லை. ஓரளவு வெளி கொண்டு வந்திருக்கிறேன் என நினைக்கிறேன்.

ஸ்ரீராம்

முந்தைய கட்டுரைமகாபாரதம் அரிய உண்மைகள்
அடுத்த கட்டுரைநல்லிடையன் நகர்-2