பயணம்- கடிதங்கள்

dsc_0223-3

இமையத் தனிமை – 3

இமையத் தனிமை – 2

இமையத் தனிமை -1

 

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு

 

மிகுந்த மகிழ்ச்சி..’இன்னும் கொஞ்ச தூரம்’ இல்லை… நீண்ட நெடுந்தூரம் செல்ல வாழ்த்துக்கள்.. (என் போன்ற உங்கள் வாசகர்கள் அனைவரின் சுய நலமான வாழ்த்து இதுவாக தான் இருக்கும்!). ஆனால் ஆச்சரியமும், சொல்ல இயலாத உணர்வும் பதிவுகளை வாசிக்கும் போது  இன்னும் எஞ்சுகிறது.

 

விட்டு செல்லுதல், தனிமை ஆகியன ஒரு வசீகரத்தையும், தீவிர தேடல் மன நிலையையும் கொண்டு வருகின்றன.. கோனார்க் அருகில் ஹரிஹரானந்த ஆஷ்ரமம் ஒன்றில் 2 நாள் தங்கி இருந்தேன்.. மேலும் அவ்வப்போது கொல்லிமலை செல்லுவதும் உண்டு.. இந்த பிரயாணங்களில் இருந்து மீண்ட உணர்வுகளே , என் கேள்விக்கு அடிப்படையாக இருந்தது. இன்றைய பதிவு அந்த உணர்வை மேலும் கூட்டுகிறது. எவ்வளவு அதிகமாக தனிமை ஈர்க்கிறதோ அதை விட மேலே,  இப்படியான இடங்களில் தனியாக இருக்க மன தைரியம் நம்மிடம் உள்ளதா என்ற கேள்வியும் வருகிறது.

 

குருதிச்சாரல் முடிவில் கிருஷ்ணனின் மன நிலை பற்றி தான் பெரிதும் நினைத்திருந்தேன். உங்கள் பதிவை படித்ததும் இப்போது நினைத்து பார்த்தால், ஆம், கர்ணன் நிலை இன்னும் தீவிர பாதிப்பு உண்டான மனம் தான்..நண்பன் அறம் பிழைத்தலினால் ஏமாற்றம் போக, வைதியர் சபை தன்னை அவமதித்து, தனக்குரிய மரியாதையை தர மறுப்பதின் அவமானமும், அதை எதுவும் சொல்லாமல் ஏற்கும் நண்பனின் மெளனமும் மிக அழுத்தமான ஒரு மன நிலையிலேயே கொண்டு விடும்…

 

ஆனால் ‘எழுத்தாளன் எவருக்கும் வழிகாட்டி அல்ல’ என்று நீங்கள் கூறுவது யோசிக்க வைக்கிறது.. எழுத்தாளன் இல்லா விட்டால் எழுத்துக்கள் வழிகாட்டி என்று கொள்ளலாமா?  ஏப்ரல் 7 , சுசீலா madam பாராட்டு விழா பற்றி வாசித்தேன்..அன்று தங்களை சந்திக்கும் வாய்ப்பை எதிர்பார்திருக்கிறேன்…

 

வெண்ணி

 

 

அன்புமிக்க ஜெமோ அவர்களுக்கு,

 

வணக்கம். குருதிச் சாரலின் கனம் தாங்க முடியவில்லை. தளம் தற்காலிக விடுப்பிலிருந்த நிலை . தங்களின் இலக்கற்ற பயணம். இவை அனைத்தும் ஒரு கலவையான மனநிலையை, இன்னதென்று புரியாத ஒரு நிலையை உருவாக்கியது.அந் நிலையை ஒருவாறு உய்த்துணர்கிறேன். நித்யா அவர்கள் குருதிச் சாரலில் வெளிப்படுவது போல் உணர்ந்தது சரியா?  அனைத்திலிருந்தும் நீங்கள் விடுபட்டு செல்ல விரும்பியது சுப்ரியையின் மனநிலையா? தெரியவில்லை.

 

எவ்வாறு கூறுவது … மனம் நடுங்குகிறது. துரியோதனனை எப் தபாழுதும் பெருந் தந்தையாகவே சிறு வயது முதல் உணர்ந்திருக்கிறேன். தவறாக வழி நடத்தப்பட்ட சரியான மனிதனாக எனக்கு தெரிந்தார். இங்கு குருதிச் சாரலில் கொற்றவை போல பெரும் ரூபம் எடுக்க ஆரம்பிக்கிறார். மனிதன் திரிந்து தெய்வ நிலை அடைவது போலுள்ளது. தீதின் உச்சமும் தெய்வமே எனத் தோன்றுகிறது.

வேறெதுவும் எழுதத் தோன்றவில்லை. எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி வாசிப்பு இருக்க வேண்டும் எனினும் குருதிச்சாரல் என் எதிர்பார்பினை அடுத்த நிலைக்கு கொண்டு சென்றுள்ளது.

கிருஷ்ணரின் பிரம்மாண்டத்தை (நித்யா அவர்களின்) உய்த்து உணர காத்திருக்கிறேன்.

 

பல நாட்களாக உங்களுக்கு கடிதம் எழுத விரும்பி ஏதோ ஒரு தயக்கத்தினால் விட்டிருந்தது தங்களின் தள முடக்கத்தினால் மற்றும் விடுமுறையினால் என் தயக்கம் விடுபட்டது.

 

அந்தரங்கமாக என் காதில் பேசிக் கொண்டிருந்தவர் தீடீரென காணாமல் போனது போன்ற நிலையில் நிலையில்லாமல் இருந்தேன். தங்களின் தளம் மீண்டவுடன் அக்குரல் மீண்டும் பேச்சை ஆரம்பித்துள்ளது போன்ற மகிழ்வை , நிறைவைத் தந்துள்ளது.

நன்றி.

 

அன்புடன்

குமரன்

 

 

அன்பிற்கினிய திரு ஜெ சார்

 

எழுத்தாளனின் உளநிலை குறித்த தங்களின் எழுத்துக்கள் என்றென்றைக்குமான மாறாத உண்மைகள். ஒற்றைப்படையான உளவிசை புனைவிலக்கியத்திற்குரியது அல்லவேதான். ஆனால் ஒரு காமுகன் தன் உடல் கொண்டு நடத்தும் பாவத்திற்கும், ஒரு எழுத்தாளன் சொல் கொண்டு நடத்தும் பாவத்திற்கும் வித்தியாசம் இல்லையா? சக உயிரின் மனம் அறியாததால் முன்னது பாவம். சகலமும் அறிந்து, அந்த அறிவிற்குள் உயிர்களின் ஆதார சக்தியான அன்பிருப்பதால் பின்னது பாவமல்ல.    புனைவின் பாவம் புனைவிலக்கியவாதிக்கு வருமானால், புனைவின் இன்பத்திற்கு வாசகன் எப்படி உரிமை கோர முடியும்?

 

எல்லா உயிர்களின் ஒட்டுமொத்த அழுக்கை வாங்கி கொண்டாலும் கடல் குப்பை கூடை ஆகிவிடாது. அதில் தன் சிற்றுடல் நனைத்து கரை வரும் மனிதன், கடலின் அழுக்கை சுமந்து வருவதில்லை. மாறாக தன் அழுக்கைதான் அதனில் விட்டு வருகிறான். இலக்கியம் ஒரு பெருங்கடலல்லவா? அந்த பெருங்கடலுக்கு நீரிறைத்த எழுத்தாளர்கள் எவ்வகையில் பாவிகள்?

 

தங்களின் அரூப பாவங்களை தாங்கள் ஒப்பு கொள்வதால் அடையும் நேர்மையின், அன்பின் தளம் அசாத்தியமானதல்லவா?

 

உலகின் பாவங்களை சுமந்து, வதைபட்டவனை தேவமைந்தன் என்றுதானே உலகம் சொல்கிறது. அவன் சுமந்தவற்றுள் எந்த பாவத்தை அவன் செய்தான்?

 

‘தன்னிலிருந்து பெற்று அகற்றுபவள் தாய்’ என்று நெடுநாட்களுக்கு முன் ஒரு மலையாள கவிதை படித்தேன். இறக்கி வைத்த பிள்ளையை மீண்டும் கருவேற்ற தேவை இல்லை.

 

திருக்குறளை கவிதையாகவே அணுகும் ஒரு உரையின் தேவை இங்கிருப்பதாகவும், அதை செய்யும் எண்ணம் தங்களுக்கு இருப்பதாகவும்  வெண்முரசு ஆரம்பித்த காலத்தில் தாங்கள் சொன்னதாக எனக்கு நினைவிருக்கிறது.

 

தாங்கள் ஓய்ந்துவிடலாகாது சார்.

 

அன்பன்

அ மலைச்சாமி

 

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு

 

என்ன காரணத்தினாலோ  நேற்றே உங்கள்  பதிவு வருமென  எதிர்பார்த்தேன்.  இன்று வந்தது.   முதல் தன்புகைப்படத்தில்  தெரிந்த  உளக்கொந்தளிப்பை அகற்றிப்பார்த்தால்,  நீங்கள் வெறுமே  அமர்ந்திருப்பதன்  இனிமையைச் சற்றேனும் உணர முடிந்தது.

 

காரணம் தெரியாமல்  அல்லது அறிய விருப்பமில்லாமலும், இளையராஜாவின்  ” ஆயிரம் மலர்களே”  பாடலும்,ஏதோ நினைவுகள்” பாடலும் அதன்  இசைக்கோர்வைகளும்  எந்த சூழ்நிலையிலும்  சட்டென்றுஎன்னைத்தூக்கி  வேறு தளத்தில்  வைக்கக்கூடியவை.  பலமுறை கேட்டிருந்தாலும்….  அதேபோல்  உங்கள்  பயணக்கட்டுரைகளைப் படிக்கும்போதும்  நேர்வது கூடுதல்  மகிழ்ச்சி.   அதன்  விரிவான வர்ணனைகளை  வரிவிடாமல் மனதில்  விரித்துச் செல்லும் போதுகிட்டத்தட்ட சூழலை  மறந்த ஒரு  நிகழ்வுக்குள்  நான்மட்டும் இருப்பதுபோல்.  அப்படி ஒரு  உணர்வை,  அலுவலக வேலைகளுக்கிடையே  உணவுஇடைவேளையில்  உங்கள்  பதிவைப்  படித்தபோது  அடைந்தேன்.

 

ஒரு  பனிமலையின் சூரிய உதயத்தினூடாக  அழைத்துச் சென்றபதிவிற்கு நன்றியும்  இனிமையான  பயண நிகழ்வுகளுக்கு  வாழ்த்துகளும்…

 

அன்புடன்,

நா. சந்திரசேகரன்

முந்தைய கட்டுரைகேரளக் காலனி
அடுத்த கட்டுரைஎழுத்துச் சீர்திருத்தம்