பீட்டரும் காடும்

peter

சிம்லாவில் இருந்து ஊருக்குத்திரும்பும்போதுதான் குரங்கணி விபத்து குறித்த செய்திகளை வாசித்தேன். அதை ஒட்டிய விவாதங்களையும். அதில் மிக எரிச்சலூட்டியது முன்னாள் காட்டிலாகா அதிகாரிகளின் ‘பையத்தூக்கிட்டு வந்திடறானுங்க….’ பாணியில் அமைந்த பேட்டிகள். காடென்றால் என்னவென்றே தெரியாதவர்களின் நல்லுபதேசங்கள். உண்மையில் காட்டிலாகாவின் பொறுப்பின்மை, ஊழல் அனைத்தையும் மறைப்பதற்காக முன்வைக்கப்படும் பிலாக்காணங்கள் இவை.

தமிழகக் காட்டிலாகா சென்ற ஐம்பதாண்டுகளாக தமிழகக் காடுகள் மொட்டையாக்கப்பட்டதற்கான கூட்டுப்பொறுப்பை ஏற்கவேண்டும். அவர்கள் முன்பு காட்டுகொள்ளையர்களை தடுக்கவில்லை. பலசமயம் உடந்தையாகவும் இருந்தார்கள். தமிழகக் காட்டுக்கொள்ளை ஓரளவேனும் நின்றது சென்ற இருபதாண்டுகளாகவே. மத்திய அரசின் கடுமையான சட்டங்கள் ஒரு காரணம். சென்ற இருபதாண்டுகளில் சூழியல்பிரக்ஞை கொண்ட இளைஞர்கள் பலர் அதிகாரிகளாக பணிக்கு வந்தது இரண்டாவது காரணம். ஆனால் அனைத்தையும் விட முக்கியமானது சூழியல்பிரக்ஞை கொண்ட ஒரு தலைமுறை உருவானது. அவர்கள் காடுகளுக்குச் செல்லத் தொடங்கியது. அவர்கள் காடுகளைப்பற்றி தொடர்ந்து எழுதியது அவர்கள் காடுகளின் கண்காணிப்பாளர்கள்.

அவர்களைத்தான் இவர்கள் ‘பொறுப்பற்றவர்கள்’ என்று முத்திரை குத்துகிறார்கள்.. நான் விசாரித்தவரை அந்த கானுலாக் குழு முறையான பயிற்சி பெற்றது. சூழியல் உணர்வு கொண்டது. பலமுறை காட்டுக்குள் சென்ற அனுபவம் கொண்டது.இந்த விபத்தைக் காரணம் காட்டி அவர்களைப்போன்றவர்களை தடுத்துவிட்டால் காடு மீண்டும் காட்டுகொள்ளையர்களின் ஆட்சிக்கே செல்லும். இந்த இளைய தலைமுறை மேல் காட்டுக்கொள்ளையருக்கு இருக்கும் காழ்ப்பே இப்போது பலவகையிலும் வெளிப்படுகிறது என நினைக்கிறேன்.

எத்தனை பயிற்சிபெற்றிருந்தாலும் என்னதான் கவனமாக இருந்தாலும் காட்டில் முழுமையாக ஆபத்தை தவிர்க்கமுடியாது. யானைகள், காட்டெருதுக்கள், பாம்புகள் என பல அபாயங்கள் உண்டு. அபாயத்தைத் தேடிச்செல்லும் பயணம்தான் அது. ஆகவே முழுமையான பாதுகாப்புடன் கானுலா என்ற பேச்சே இல்லை. ஆபத்து அந்த பயணத்தின் ஒருபகுதி. இமையமலை ஏற்றத்திற்கும், கடல்விளையாட்டுகளுக்கும் இதெல்லாம் பொருந்தும்.

காட்டுத்தீ என்பது ஏன் என்பதை ஒருமுறை காட்டுக்குள் சென்றவர்களால் உணரமுடியும். காட்டை ஒட்டிய விவசாயப் பகுதிகளில் பூச்செடி என்னும் சிறிய பூக்கள்கொண்ட ஒரு முள்ச்செடி மழைக்காலத்தில் பெருகி கோடையில் காய்ந்திருக்கும். அந்தப்புதரைக் கொளுத்திச் சாம்பலாக்கி ஜூன்மாத மழையில் விதைத்து ஆகஸ்ட் இறுதியில் அறுவடை செய்வார்கள். இப்படித் தீயிடுவதனால்தான் காட்டுத்தீ உருவாகிறது. மேய்ச்சல்மக்கள் காட்டுக்குள் புல்லைத் தீயிடுவதுண்டு, அப்போதுதான் ஜூன்மாத மழையில் புதியபுல் வரும். செயற்கையாகவே தீ உருவாக்கப்படுகிறது. அந்தப்பழியை தூக்கி காட்டுக்குள் சென்றவர்கள் மேல் போடுகிறார்களோ என ஐயம்கொள்கிறேன்

ஆனால் காடோரநிலத்தைக் கைப்பற்றி விவசாயம் செய்பவர்கள் வலிமையான குழுவினர். அவர்கள்மேல் நடவடிக்கை எடுக்க முடியாது. ஆகவே காட்டிலாகாவினருக்கு வேறுவழியில்லை. அவர்கள் காட்டோர நிலங்களை எரிப்பதை முழுமையாகத் தடைசெய்ய வேண்டும். அப்படி களைமண்டாமல் விவசாயம் செய்ய பலவகையான வழிகள் இன்றுவந்துவிட்டன. அவற்றை வலியுறுத்தவேண்டும்.

கோடையில் கானுலாவை முழுமையாக தடைசெய்யவேண்டும். கேரளக் காடுகளில் முற்றாகவே கோடையில் அனுமதி இல்லை. பல காட்டுலா மையங்கள் மூடப்பட்டுவிடும். அதை கறாராக தமிழகத்தில் அமல்படுத்தவேண்டும்

பெண்கள் வீடுகளில் இருந்து காடுகளுக்கு பயணங்கள் செல்வதென்பது நம் சூழலின் மிகப்பெரிய மாற்றம். அவர்களின் உளநிலை உலகப்பார்வை அனைத்துமே மாறிவிடுவதைக் காணலாம். இந்த விபத்தைக் காரணம் காட்டி ‘பொட்டக்கழுதகள் வீடடங்கி கெடக்கவேண்டியதுதானே?” வகை உபதேசங்களும் உலவத்தொடங்கியிருக்கின்றன.

இந்த சூழுலாவை ஏற்பாடு செய்த பீட்டர் வான் கெய்ட் பற்றி பலரும் சொன்னதைக்கொண்டு நான் புரிந்துகொண்டது அர்ப்பணிப்பும் தீவிரமும் நேர்மையும் கொண்ட சமூகப்பணியாளர் என்றுதான். அத்தகைய மனிதர் இங்கே ஊழலில் மூழ்கிய, பொறுப்பை ஏற்கமறுக்கும் லருக்கும் சங்கடம் அளிப்பவர். அவரை ஏதேனும் தருணத்தில் சிக்கவைத்து முடித்துவிடவே அதிகார வர்க்கம் முயலும். ஊடகங்களும் தீரவிசாரிக்காமல் அதற்குத் துணைபோவது வருந்தத் தக்கது. பீட்டருக்கு ஆதரவாக நம் சமூகக்குரல் எழுந்து வரவேண்டும்

வா.மணிகண்டன் எழுதிய இந்தக்கட்டுரை அவ்வகையில் முக்கியமானதென்று படுகிறது

சென்னை ட்ரெக்கிங் க்ளப்

முந்தைய கட்டுரைபயணம் கடிதங்கள்
அடுத்த கட்டுரைஇமையத் தனிமை – 3