அன்புள்ள ஜெ,
நீங்கள் இணையத்தில் இல்லாதிருந்த இடைவெளியில் இங்கே பெரியார் சிலையுடைப்பு சம்பந்தமாக நடந்த கொந்தளிப்புகளை அறிந்திருப்பீர்கள் என நினைக்கிறேன். வழக்கம்போல உங்கள் வரிகளை வைத்துக்கொண்டு வசைபாடல்கள், கொந்தளிப்புகள். பொதுவாகவே தமிழர்கள் உணர்ச்சிகரமானவர்கள் என்பார்கள். உச்சகட்ட உணர்ச்சிகரத்தை வெளிப்படுத்துவதும் உணர்ச்சிகளை நக்கலும் நையாண்டியுமாக தூண்டிவிடுவதும்தான் இங்கே விரும்பப்படுகிறது. இச்சூழலில் எப்படி நீங்கள் பேசிக்கொண்டிருக்கிறீர்கள் , அதற்கு என்ன பயன் என்பது எனக்கு சந்தேகமாகத் தோன்றியது. அதை எழுதவேண்டும் என நினைத்தேன்.
எஸ்.ராஜ்மோகன்
***
அன்புள்ள ராஜ்மோகன்,
தமிழர்கள் உணர்ச்சிகரமானவர்கள் என்பது வழக்கமாகச் சொல்லப்படும் வரி. ஆனால் நான் அதை சற்று வேறுகோணத்தில் புரிந்துகொள்கிறேன். உணர்ச்சிகரம் என்பது இருவகை. நேர்நிலை உணர்ச்சிகரமே இலட்சியவாதத்தின் அடிப்படை. பெரும் தியாகங்கள், அர்ப்பணிப்புள்ள பெருவாழ்வுகள் அதன் அடிப்படையிலேயே உருவாகின்றன. அந்த வகையான நேர்நிலை உணர்வெழுச்சி தமிழகத்தில் ஓப்புநோக்க மிகவும் குறைவு.
நாமறிந்த வரலாற்றுப் பரப்பில் உச்சகட்ட இலட்சியவாதம் ஓங்கி நின்றிருந்தது காந்திய காலகட்டத்தில்தான். அன்றுகூட இந்தியநிலப்பகுதியுடன் ஒப்பிட தமிழகத்தில் அதன் செல்வாக்கு மிகக்குறைவே. பெருவாரியாக மக்கள் பங்கேற்பு நிகழவேயில்லை. அதன்பின்னரும் எந்த நேர்நிலை உணர்ச்சியும், இலட்சியவாதமும் இங்கே பெரும் சக்தியாக எழவில்லை.
நேர்நிலை உணர்ச்சியின் விளைவான இலட்சியவாதம் தன் இனம், தன் குலம் என தன்னலத்தைச் சார்ந்து இயங்காதது. பெரிய மானுடக்கனவுகளை கொண்டது. தொடர்ச்சியாகச் சீராக பல ஆண்டுக்காலம் நீடிக்கும் அர்ப்பணிப்பு, உழைப்பு, தியாகம் ஆகியவற்றைக் கோருவது. எதிரியை கட்டமைத்து அதன் அடிப்படையில் தன்னை வடிவமைத்துக்கொள்ளாதது.
எதிர்மறை உணர்ச்சிப்போக்கே தமிழகத்தின் பொது இயல்பு. எதிரிகளை உருவகித்துக்கொள்வது. அவ்வெதிரியை மிகைப்படுத்தி உச்சகட்ட வெறுப்பை உருவாக்கிக் கொள்வது. அத்தனை செயல்பாடுகளையும் அந்த வெறுப்பை அடிப்படையாகக் கொண்டே வடிவமைத்துக்கொள்வது. அந்த கொதிநிலையிலேயே இருப்பது
எதிர்மறை மனநிலை அலையலையாகவே வெளிப்படும். நீடித்த செயல்பாடு அதில் இருக்காது. ஒன்றில் அர்ப்பணிப்பும் , ஒன்றைக் கட்டியெழுப்பும் பொறுமையும் இருக்காது. ஏதேனும் ஒன்றின்மேல் மிகையான உணர்ச்சிபூர்வ எதிர்வினை. அதை அப்படியே விட்டுவிட்டு அடுத்தது. இவ்வாறுதான் தமிழக அரசியல்களம் நூறாண்டுகளாக இருந்துள்ளது. இந்த அலைகளில் பயணிக்கத்தெரிந்தவர்கள் அதை கட்டுப்படுத்தி அதிகாரத்தை அடைகிறார்கள்
இந்த எதிர்மறை மனநிலையை ஒட்டி அனைத்தும் இங்கே கற்பிதம் செய்யப்படுகின்றன. ‘தமிழனுக்கு’ எதிரிகள் எவர்? இங்குள்ள மொழிச்சிறுபான்மையினர் , கன்னடர், தெலுங்கர், மலையாளிகள், இந்திய தேசியம், இந்துமதம், ஆரிய இனம், அமெரிக்க ஏகாதிபத்தியம், ஐரோப்பிய கார்ப்பரேட்டுகள்…. அதாவது மொத்த உலகமே
மொத்த அறிவியலும் தொழில்நுட்பமும் தமிழனை அழிக்கும் நோக்கம் கொண்டவை. மொத்த வரலாற்றெழுத்தும் தமிழனின் பெருமையை சிறுமைப்படுத்தும்பொருட்டே உருவாக்கப்பட்டது. மொத்த உலக அரசியலும் தமிழனை தோற்கடிக்கவே நிகழ்பவை
ஏன்? தமிழன் உலகிலேயே தொன்மையான குடி. உலகிலேயே தூய குடி. உலகிலேயே அரிதான குடி.
உலக அரங்கில் பொதுஅறிவு கொண்ட எந்த நவீன மனிதனும் கேட்டதுமே வெடித்துச் சிரிக்கும் இந்தக்கருத்தை இங்கே தீவிரமாகச் சொல்லிவருகிறார்கள். உண்மையில், இங்கே அரசியல்வாதிகள், மேடைப்பேச்சாளர்கள், கட்டுரையாளர்கள் பெரும்பாலானவர்கள் இதைத்தான் வெவ்வேறு சொற்களில் சொல்லிவருகிறார்கள். தமிழர்கள் உடனடியாக கைதட்டுவது இந்தக்கருத்துக்கு மட்டுமே.
இது தாழ்வுச்சிக்கலும் அதை நிகர் செய்ய உருவாக்கும் மிகையும் கலந்த ஒரு விந்தையான உளநிலை. ஒருவகையான பழங்குடி உளப்பாங்கு இது. தன்னை தேங்கிநிற்கச்செய்ய தானே தேர்ந்துகொள்ளும் கருத்தியல்.
எதிர்நிலை உணர்வுகள் இலட்சியவாதமாக உருமாற்றம் செய்யப்பட்டு முன்வைக்கப்படுகின்றன. ஒரு தரப்பை எடுத்துக்கொண்டுவிட்டால் போதும்.. நாளெல்லாம் வெறுப்பைக் கக்கலாம், கீழ்மையில் திளைக்கலாம், கூடவே அது பெரிய கருத்துச்செயல்பாடு என்று நம்பவும் செய்யலாம். இதற்கு இங்கே இருக்கும் வரவேற்பு வேறெங்கும் உண்டா என்று தெரியவில்லை. இந்த மனநிலை விறுவிறுப்பானது. இதில் பழகியவர்களுக்கு நேர்நிலை இலட்சியவாதம் சலிப்பூட்டும். அந்த இலட்சியவாதிகளை இந்த வெறுப்பாளர்கள் கேலிக்குரியவர்கள் மந்தர்மானவர்கள் என கருதுவதைக்காணலாம்.
எதிர்மறை உளநிலை விதவிதமான பாவனைகள் வழியாக உடனடியான எதிர்ப்பை உச்சகட்ட உணர்ச்சியுடன் முன்வைத்து தாவிச்சென்றுகொண்டே இருக்கும். எதையும் உருவாக்குவது, நிகழ்த்துவது, உண்மையான மாற்றத்தை உருவாக்குவது கூட அதன் நோக்கம் அல்ல. தன்னை ஒரு எதிர்விசையுடன் நிறுத்திக்கொள்வதும் , வசைபாடுவது எள்ளிநகையாடுவது வழியாக எதிர்மறைக்கொண்டாட்டத்தில் திளைப்பதும்தான். எண்ணிப்பாருங்கள், சிலகாலம் முன்பு இங்கே கருவேல மரங்களை அழிக்க சிலர் புறப்பட்டார்களே அவர்கள் என்ன சாதித்தனர்? இப்படியே எத்தனை எதிர்ப்புப் போராட்டங்கள்! என்னவாயின அவை?
ஏதேனும் தளங்களில் சாதித்தவர்கள் இப்படி எம்பிக்குதித்தவர்கள் அல்ல. அவர்கள் தாங்கள் நம்புவதை நீடித்த கால அளவில் செய்துகொண்டே இருப்பவர்கள். அவ்வப்போது உருவாகும் உளச்சோர்வு, நம்பிக்கையிழப்புகளைக் கடந்து பணியாற்றுபவர்கள்.
தமிழ்நிலத்தில் நிகழ்ந்த பிற இலட்சியவாதங்கள் வள்ளலாரின் இயக்கமும் கம்யூனிஸ்டு இயக்கமும்தான். அவை பெருவாரியான ஆதரவைப் பெறவில்லை. கம்யூனிஸ்டு இயக்கம் எங்கே உடனடியான நலன்களை நாடும் எதிர்ப்பியக்கமாக இருந்ததோ அங்கு மட்டுமே ஆதரவு பெற்றது. மற்றதருணங்களில் அதை மக்கள் பொருட்படுத்தவில்லை.
இந்தக் கருத்தை என்னிடம் சொன்னவர் மூத்த கம்யூனிஸ்டுத் தலைவர் ஒருவர். இடதுசாரி இயக்கங்கள் தமிழகத்தில் ஏன் வேர்விடுவதில்லை என்ற என் கேள்விக்குப் பதிலாக.
கம்யூனிஸ்டு இயக்கமும் எதிர்ப்புத்தன்மை கொண்டதே. ஆனால் அதைவிட அதில் மேலோங்கியிருந்தது புதிய உலகுக்கான கனவு. மானுடசமத்துவம், அனைவருக்கும் வாழ்வுரிமை என்னும் இலட்சியங்கள். அதை தமிழகம் புரிந்துகொள்ளவில்லை. அது கம்யூனிஸ்டு இயக்கத்தையும் ஓர் எதிர்நிலை இயக்கமாகவே காணவிரும்பியது. அவ்வாறன்றி நிலையான இலட்சியங்களை அது முன்வைத்தபோது சலிப்புற்று விலகிக் கொண்டது.
இன்றுகூட இதையே நாம் பார்க்கிறோம். இந்தியாவில் நிகழும் எந்த ஒரு நேர்நிலை அரசியலியக்கத்தையும் நையாண்டி செய்பவர்கள் தமிழர்களே எந்த நேர்நிலை கருத்தின்மீதும் அவர்களுக்கு நம்பிக்கை வருவதில்லை. அவர்களுக்குப் பொதுவாக உவப்பாக இருப்பவர்கள் எதிர்மறை உணர்ச்சிகளைத் தூண்டிவிடும் ஈவேரா முதல் சீமான், பாரிசாலன் வரையிலானவர்களே. ஆகவேதான் மிகவிரைவிலேயே இந்துத்துவ வெறுப்பரசியலுக்கும் தமிழகம் வேர்நிலமாக ஆகும் என்று நான் அஞ்சுகிறேன்
நேர்நிலை உணர்வுகள் கொண்ட மிகச்சிறிய ஒரு வட்டம் மெல்லமெல்ல நான் அறிய அமைந்துள்ளது. நான் பேசுவது அவர்களிடம் மட்டுமே.
ஜெ