எழுத்தாளர் அநுத்தமா சென்ற டிசம்பர் மூன்றாம் தேதி மறைந்தார்; எண்பது வயதில். தமிழ் இலக்கிய உலகில் கலைமகள் பெண் எழுத்தாளர்களின் ஒரு வரிசை உண்டு. சூடாமணி, ராஜம் கிருஷ்ணன், எம்.ஆர்.ராஜம்மா போன்றவர்களின் வரிசையில் வரக்கூடியவர். அதிகமும் பிராமணப் பெண்களின் சமையற்கட்டு மூலை சார்ந்த கதைகள். உறவுச் சிக்கல்களை அலசுபவை. எளிய அன்பையும், தியாகத்தையும் தீர்வாக முன்வைப்பவை.
அநுத்தமாவின் கேட்டவரம் என்ற நாவலை க.நா.சு தன் பட்டியலில் சிபாரிசு செய்திருக்கிறார். அதை சுந்தர ராமசாமி மறுத்திருக்கிறார். அந்நாவலை மட்டும் நான் வாசித்திருக்கிறேன். கேட்டவரம் பாளையம் என்ற சிற்றூருக்கு வரும் ஒருவன் அங்கே ஒரு காதலில் சிக்குவதைப் பற்றிய கதை. வாசித்த காலகட்டத்தில் அந்த காதல் மென்மையாகச் சொல்லப் பட்ட விதமும், பெண்மன உணர்வுகள் நுனிவிரலால் தொட்டுக் கொள்வதைப்போல குறைவாக அளிக்கப் பட்டமையும் மனதைக் கவர்ந்தன. ஆனால் ஆழமான ஆக்கமாக தோன்றவில்லை.
அதேசமயம் வழக்கமான கலைமகள் நாவல்களை விட நுட்பமான யதார்த்த சித்திரம் கொண்ட நாவல் இது. இதில் ஒரு பள்ளிக்கூடம் வரும். பையன்கள் பெரும்பாலான நேரம் புளியங்காய் நறுக்கிக் கொண்டிருப்பார்கள். அதுதான் பள்ளியின் மூலதனம். ‘இப்படி புளியங்காய் நறுக்கி ரொம்பபேர் பீஏ பாஸாகியிருக்கிறார்கள்’ என்பார் ஆசிரியர். சற்றே நகைச்சுவை கலந்து சொல்லப் பட்ட ஒரு டம்பாச்சாரி கதாபாத்திரமும் ஆசிரியையின் திறனைக் காட்டும். ‘நெய்யில் பொரித்த அரிசி அப்பளம் ஒண்ணே ஒண்ணு தான் சாப்பிடுவேன்’ என்கிறார். அவரது பாவனைகளை வாசிக்கையில் ஒவ்வொரு காலகட்டத்திலும் இத்தகைய டம்பாச்சாரிகள் வழியாக கிராமத்தில் புதியகால கட்டம் நுழைகிறது என்ற எண்ணம் ஏற்பட்டது.
க.நா.சு இந்நாவலை ஏன் சிபாரிசு செய்தார் என அவரிடம் சுந்தர ராமசாமி கேட்டபோது ’பெண்களுக்கு ஓர் அந்தரங்க உலகம் உள்ளது, அது இலக்கியத்துக்கு வரவேண்டும்’ என்றாராம் க.நா.சு. ’இப்போதைக்கு வந்திருப்பதில் இது நம்பகத் தன்மையுடன் அதிக மிகையுணர்ச்சிகள் இல்லாமல், உபதேசங்கள் இல்லாமல் இருக்கிறது ஆகவே சொன்னேன்’ என்றாராம்.
அது சரியான பார்வைதான் என நினைக்கிறேன். இன்றும் பெண்களின் எழுத்து இந்த எல்லையைத் தாண்டி ஒன்றும் போகவில்லை. பிராமணச் சமையலறை வேறு சாதிகளின் சமையலறையாக மாறிவிட்டிருக்கிறது, கொஞ்சம் அரசியல் சேர்ந்து கொண்டிருக்கிறது, அவ்வளவே!
திருப்பூர் கிருஷ்ணன் அநுத்தமாவுக்கு எழுதிய அஞ்சலியை சமீபத்தில் வாசித்தேன்.