பிழைகள்

uru

அன்பின் ஜெ,

வணக்கம். மிக நீண்ட யோசனைக்குப் பின்னே இக்கடிதம் எழுதுகிறேன். தமிழின் பெரும் எழுத்தாளர்களில் ஒருவரான எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் உறுபசி வாசித்து முடித்த நிமிடத்தில் இருந்து கலவையான சிந்தனைகள் வந்து போகின்றன. எளிமையான கதை. எளிமையான களம். மரணம் சார்ந்து பல கேள்விகளை எழுப்பக்கூடிய சம்பவக் கோர்ப்புகள் என்றாலும் நாவலோடு முழுவதுமாக ஒன்றவிடாதபடி ஏதோ ஒன்று குறுக்கிட்டுகொண்டே இருந்தது. என் மனக்கிலேசத்திற்குக் காரணமும் அதுதான். அது எஸ்.ரா அவர்களின் எழுத்துக் கோர்ப்பு. நாவல் முழுக்கவே பலவித பிழைகளால் நிரம்பி வழிகிறது மொத்தப்புதினமும்.

தமிழ்ப் புத்தகப் பதிப்புத்துறையைப் பொருத்தமட்டில் புதினங்களில் / புத்தகங்களில் எழுத்துப்பிழை என்பது இயல்பான ஒன்றாகவே இருந்துவருகிறது. அவற்றில் பெரும்பான்மையாகக் காணக்கிடைப்பது சந்திப்பிழை. ஒரு கட்டுரையை கதையை எழுதிமுடித்து ஒன்றுக்குப் பலமுறை வாசித்தாலும் எப்படியேனும் எங்கேனும் ஒரு பிழை யாரேனும் ஒருவரால் அடையாளம் காட்டப்படும். இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். இலக்கணம் தெரியாமல் எழுதுவது ஒருவகை என்றால் தெரிந்தும் அதைப் பயன்படுத்துவதன் அக்கறை இன்றி எழுதுவது மற்றோர் வகை. முதல் வகையைக் காட்டிலும் இரண்டாவது வகை அதிகரித்துக் கொண்டிருக்கிறதோ என்ற ஐயம் ஏற்படுகிறது.

தமிழில் எழுதுவதென்பதே ஃபேஷனாகிப் போன சூழலில், ‘என்ன கூறவேருகிறேன் என்பது உனக்குப் புரிகிறதா? அது போதும்’ என்றாகிப் போன நிலையில் இங்கு யாருமே மொழியின் வடிவத்தையோ அல்லது அதற்கென இருக்கும் விதிகளையோ கடைபிடிப்பதே இல்லை. மொழியாளுமைக் குறைந்து மொழியை எப்படிக் கையாளுவது என்றே தெரியாத ஒரு சூழலுக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம். மொழியின் வடிவத்தில் யாருக்கும் அக்கறையில்லை. போகிறபோக்கில் மொழியை எளிமைப்படுத்துகிறேன் பேர்வழி என்று லகரங்களின் மீதும் னகரங்களின் மீதும் கைவைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இந்நேரத்தில் தமிழ் இந்துவில் நீங்கள் எழுதிய ஆங்கில எழுத்துருவிலான தமிழின் வடிவம் பற்றிய கருத்துக்களை நினைத்துப்பார்க்கிறேன். நடக்கலாம் தான்.

இன்றைய தமிழை கிழிகிழியென கிழிப்பதில் பெரும்பங்கு வகிப்பவர்கள் இயந்திர உலகத்தில் மீம் வல்லுனர்களும் இயங்கு உலகில் கட்டவுட் நிபுணர்களும். எதைப்பற்றியும் யாரைப் பற்றியும் கவலை கொள்வதில்லை. அவர்களைச் சொல்லியும் குற்றமில்லை. கருத்துப் பரிமாற்றம் பூர்த்தியாவதில் அவர்களும் திருப்தி அடைந்து போகிறார்கள். அவர்களைப் பொறுத்தவரையில் மொழி என்பது ஒரு கருவி அல்லது வேடிக்கை. அவசர உலகில் அவர்கள் மறைந்து போவார்கள். எக்கணத்திலும் அவர்களால் வெளிப்படவே முடியாது. எத்தனை சொக்கன் வந்தாலும் நல்ல தமிழில் எழுதுவதைப் பற்றி அவர்கள் யோசிக்கவேப் போவதில்லை.

ஆனால் எஸ்.ரா போன்ற எழுத்தாளர்கள் அப்படியில்லையே. அவருக்கில்லாத மொழியாளுமையா இல்லை சொல்வளமா? உறுபசி புதினம் முழுக்க தொடர்ச்சியாக வந்து கொண்டிருந்த பிழைகளுக்கு மத்தியில் நாவலுக்கும் எனக்குமான தொடர்பு ஏதோ ஒரு கண்ணியில் அறுந்து போயிருந்தது. புதினம் என்பது வெறும் சம்பவங்களாக மாறி, சம்பவங்களின் கோர்வையைத் தான் வாசித்துக் கொண்டிருந்தேன். ஒரு கட்டத்தில் வாசிப்பை நிறுத்திவிடலாமா என்றால் அதுவும் முடியவில்லை. நாம் மதிக்கும் ஆதர்ச எழுத்தாளர் ஒருவரே மொழியை இத்தனை பிழைகளுடன் கையாண்டுள்ளார் என்ற அசூயையுடன் வாசித்துக் கொண்டிருந்தேன்.  எதை எழுதினாலும் வாசகன் படிப்பான் என்ற எண்ணம் தான் இவற்றிற்குக் காரணமோ என்ற சிந்தனை மேலோங்குகிறது.

புனைவானது அழகரின் பார்வையில் கூறப்படுவதைப் போன்று ஆரம்பித்து ஒரு கட்டத்தில் ஆசிரியரின் பார்வையில் கூறப்படுவதைப் போல் உருமாறுகிறது. அடுத்த வரியிலேயே அழகர் மீண்டும் கதை சொல்லும் பொறுப்பை எடுத்துக்கொள்கிறான். இதுபோன்ற தடுமாற்றங்கள் பல தருணங்களில் நிகழ்கிறது. எனக்கென்னவோ எஸ்.ரா இதனை ஏதோ ஒரு மனநிலையில் எழுத ஆரம்பித்து பின் அதனை வேறொரு நிலைக்கு மாற்றி பாதியில் விட்டுவிட்டாரா அல்லது தொடர்ச்சியாக எழுதாமல் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு சம்பவங்களாக எழுதி, ஒன்றன்பின் ஒன்றாக கோர்க்கும் தருணத்தில் தவறவிட்டாரா என்று தெரியவில்லை. குறில் நெடில் குழப்பங்கள் பல இடங்களில் இருக்கின்றன. நான் வாசித்தது கிண்டிலில். அச்சுப்பிரதியில் என்ன இருக்குமோ அதுவே தான் கிண்டிலிலும் இருக்கும் என்று நம்புகிறேன். இப்புத்தகத்தை மிக சமீபத்தில் தான் வாங்கினேன் என்றாலும் அதில் பதிப்பு குறித்த விபரங்கள் இல்லை என்பதால் நான் வாசித்து எத்தனையாவது பதிப்பு என்று அறுதியிட்டுக்கூற முடியவில்லை. புதினம் வெளிவந்து பத்தாண்டுகளுக்கும் மேல் ஆவதால் நிச்சயமாக இது சமீபத்திய பதிப்பாகத்தான் இருக்க வேண்டும். அதில் கூட பிழைகளைக் களையவில்லை என்பது தான் கூடுதல் வருத்தம்.

மிகக்குழம்பிய நிலையில் எழுதபட்ட வரிகளாகக் கீழ் இருப்பவை இருக்க வேண்டும். இவை வெகுசிலவே.

அப்போது தான் நான் சம்பத்தின் மனைவியை முதன் முறையாகப் பார்த்தான். அவள் கையிலும் நிறையப் பிளாஸ்டிக் சாமான்களிருந்தன.

நான் சம்பத்தின் கைகளைப் பார்த்துக் கொண்டேயிருந்தான்.

அந்தச் சிறுமி அருகில் போய் நின்றபடியே மாமோவ் என்றான்.

பிறகு ராமதுரை வாங்கித் தந்ததாக இரண்டு ஜிப்பாவும் வேஷ்டிகளையும் அவளிடம் கொடுத்தாள்.

சன்னாசி கிழக்கே மலை பெய்யவில்லை என்றான்.

இப்படி ஒரு நாவல் முழுக்கவே பல்வேறு விதமான பிழைகள் மலிந்து கிடக்கின்றன. இதற்கு முன் இதுபோன்ற எழுத்துப்பிழைகள் மலிந்த நாவலாக வி.முவின் ராஜீவ்காந்தி சாலையைப் படித்த ஞாபகம். அவருக்காவது அது முதல் புத்தகம். ஆனால் எஸ்.ராவுக்கு? சரி இவை எல்லாவற்றையும் ஏன் தங்களிடம் கூறுகிறேன் என நினைகிறீர்களா. உறுபசி வாசித்து முடித்ததும் தாங்கள் எழுதிய விமர்சனத்தினை வாசித்தேன் அதில் எங்குமே இதுபற்றி நீங்கள் குறிப்பிடவில்லையே என்ற ஆதங்கம் தான் இக்கடிதத்தை உங்களுக்கு எழுதத் தூண்டியது. நீங்கள் என்றில்லை இணையம் முழுக்க உறுபசிக்கு விமர்சனம் எழுதிய யாருக்குமே இவை ஒரு பொருட்டாக இல்லை. இல்லை பிழைகள் நிறைந்த புத்தகத்தினை என்னிடம் கொடுத்து என்னை ஏமாற்றி விட்டார்களா தெரியவில்லை?

நன்றி

நாடோடி சீனு

www.seenuguru.com

eSra

அன்புள்ள சீனு

தமிழ் இலக்கியச்சூழலில் சிற்றிதழ்கள் பொதுவாக நிறைய அச்சுப்பிழைகளுடனேயே வெளிவந்தன. ஆகவே அச்சுப்பிழையைப் பொருட்படுத்தாமல் வாசிக்கும் வழக்கம் இங்கே உருவாகியிருக்கலாம். வெளியே இருந்து வரும் வாசகர்களுக்கே சிக்கல்கள் உருவாகின்றன

என்ன காரணம் என்றால் முன்பு கட்டைஅச்சகங்களில் மெய்ப்புநோக்குநர் சென்று அமர்ந்து எழுத்துக்கள் கோக்கப்பட்டதும் உடனுக்குடன் மெய்ப்பு பார்க்கவேண்டும். அதற்கு தொழில்முறையாளர்களான மெய்ப்புநோக்குநர் தேவை. சிற்றிதழ்ச்சூழலில் எல்லாமே ஒருவர்தான். அவர் மெய்ப்புநோக்கும் பயிற்சியற்றவர். ஆகவே அவர் மெய்ப்புநோக்கினால் எப்படியும் பிழைகள் எஞ்சிவிடும். மேலும் அன்றெல்லாம் ஒருமெய்ப்புக்குமேல் பிழைதிருத்த கூடுதல் பணம் அளிக்கவேண்டும். சிற்றிதழ்கள் தனியொருவரின் ஊக்கத்தால் வெளியாகும் ‘தலைமறைவு’ முயற்சிகள்.

ஒருவகை தற்கொலைப்படை வேலையாகவே இங்கே சிற்றிதழ்கள் வெளிவந்தன. எந்தவகையான வணிகநேர்த்தியும் ஒருங்கிணைப்பும் அவ்ற்றுக்கு இருக்கவில்லை. அவற்றுக்கு அரசு, அரசியல், சமூகச்சூழல் எங்கிருந்தும் மிகச்சிறிய ஆதரவுகூட கிடைக்கவில்லை. முன்னோடியான சிலரின் தியாகத்தால் அவை நிகழ்ந்தன. எந்த அரசியல் இயக்கமும் எந்த அரசும் அல்ல, சிற்றிதழ் இயக்கமே இன்று நீங்கள் வாசிக்கும் விவாதிக்கும் அனைத்துக் கருத்துக்களுக்கும் தொடர்ச்சியை, வளர்ச்சியை உருவாக்கி நிலைநிறுத்தியது.

அன்று பதிப்பகங்களிலிருந்து நூல்கள் வெளியாகும்போதுகூட எழுத்தாளரிடமே மெய்ப்புநோக்கித் தரும்படி சொல்லிவிடும் வழக்கம் இருந்தது. ஆசிரியர் மெய்ப்புநோக்கினால் பிழைகள் களையப்படுவது அரிது. ஏனென்றால் அவர் உள்ளத்தில் அந்த படைப்பு ஓடிக்கொண்டிருப்பதனால் இயல்பாக பிழைகளை கடந்து வாசித்துச்செல்வார். மெய்ப்பு நோக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு தெரியும் படைப்பை நோக்கினால் மெய்ப்பு நோக்கமுடியாது. எழுத்தாளர் மெய்ப்பு நோக்கையில் மீண்டும்மீண்டும் நடை, வடிவம் ஆகியவற்றிலேயே அவர் உள்ளம் செல்லும். அதைச் சீரமைக்கவே முயல்வார். படைப்பை எழுத்துக்களாகப் பார்க்க அவரால் இயலாது. அப்படிப்பார்க்க ஒரு விலக்கம் தேவை

[முன்பு ஆயிரக்கணக்கான நூல்களுக்கு மெய்ப்பு நோக்கிய முதியவர்களை கண்டிருக்கிறேன். ஆனால் ஒரு வாசகருக்குரிய அடிப்படைப் புரிதல்கூட இருக்காது. அவர்கள் நூல்களை அல்ல, எழுத்துக்களையும் சொற்களையும் மட்டும்தான் வாசித்தார்கள் .விபூதி பட்டையுடன் அமர்ந்து சாணித்தாள் காமக்கதைக்கு மெய்ப்பு பார்க்கும் பாட்டாவை கண்டு வெடித்துச் சிரித்த நினைவும் உள்ளது]

இன்றுகூட மிகச்சில பதிப்பகங்களிலேயே மெய்ப்புநோக்க ஊழியர்கள் உள்ளனர். ஆசிரியரே மெய்ப்புநோக்குவதே இங்கே மிகுதி. அல்லது நண்பர்கள். இன்றும் அதில் நிபுணர்கள் இல்லை. அதற்கான மென்பொருட்களும் உருவாகவில்லை. நம் பதிப்புலகம் அதில் இன்னமும் முதலீடு செய்யவில்லை. ஆகவே    பிழைகள் நிறைய வருகின்றன.இணையதளத்திலிருந்து அப்படியே நகல் எடுத்து கீழே தேதியும் இணைப்புகளும் அப்படியே இருக்க என் நூல் அச்சான வரலாறும் உண்டு. பெரும்பாலான பதிப்பகங்களில் எழுத்தாளர்களே தட்டச்சு செய்து பிழைதிருத்தி பிரதிகளை அளிக்கிறார்கள். பக்கவடிவமைப்பு மட்டும்தான் பதிப்பாளரின் பணி. அதற்குத்தான் மின்னூல் பதிப்புரிமை, மொழியாக்க உரிமை உட்பட அனைத்திலும் பாதியையும் பிடுங்கிக்கொள்கிறார்கள்.

எஸ்.ராமகிருஷ்ணன் இப்போது பதிப்பகம் தொடங்கியிருக்கிறார். பிழைகளைந்த பதிப்பைக் கொண்டுவருவார் என நம்பலாம்.

ஜெ

***

முந்தைய கட்டுரைஇமையத் தனிமை -1
அடுத்த கட்டுரைசோ.தர்மன், காலச்சுவடு