இமையத் தனிமை – 3

jjjj

 

இமையத் தனிமை – 2

இமையத் தனிமை -1

தர்மசாலாவில் சிலநாட்கள் தங்கலாமென்றுதான் நினைத்திருந்தேன்.. ஆனால் அங்கே பலவகையிலும் பதிவுசெய்யப்பட்டிருந்த திபெத் விடுதலைப்போராட்டச் செய்திகள் என் உள்ளத்தை உலுக்கின. நெடுங்காலம் மலையுச்சியின் தனித்த நிலமாக, தனிப்பண்பாட்டுடன், தனிமொழியுடன் திகழ்ந்த திபெத் ஆங்கிலேய ஆட்சியிலும் தனித்தியங்க அனுமதிக்கப்பட்டது. அதை சீனா தனக்குச் சொந்தம் கொண்டாடியது. இந்தியா திபெத் ஸ்விட்சர்லாந்து போல ஒரு பொது நிலமாக, இன்று பூட்டான் இருப்பதுபோல ராணுவப் பாதுகாப்புக்கு உட்பட்ட தனிநாடாக, திகழலாம் என கருதியது. நேரு சீனாவுக்காக ஐநா சபையில் ஆவேசமாக குரல்கொடுத்த காலகட்டம் அது. ஆகவே சீனா தன் பேச்சை கேட்கும் என அவர் நம்பினார்

ஆனால் அந்நம்பிக்கையை தகர்த்தபடி 1950- ல் சீனா திபெத்தை ஆக்ரமித்தது.சாங் குவோகுவா [Zhang Guohua] தலைமையில் திபெத்தில் புகுந்த சீன ராணுவம் ஏறத்தாழ ஆறாயிரம்பேரை கொன்று திபெத்தைக் கைப்பற்றியது.தலாய்லாமா தப்பியோடி இந்தியாவுக்குள் வந்தார். ஜவகர்லால் நேருவின் முயற்சியால் அவர்களுக்கு இந்தியக்குடியுரிமை அளிக்கப்பட்டது . நாடெங்கும் திபெத் குடியிருப்புகள் அமைக்கப்பட்டன. மெக்லியோட்கஞ் தலாய்லாமாவின் தலைமையிடமாக ஆகியது. இன்று அங்கே அவருடைய தலைமை மடம் அமைந்துள்ளது. இந்தியாவில் சிக்கிம், ஸ்பிடிசமவெளி,லடாக் பகுதிகளிலும் பூட்டானிலும் நேபாளத்திலும் உள்ள திபெத்திய பௌத்த மடங்கள் அந்த அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்தியாவெங்கும் திபெத்திய அகதிக் குடியிருப்புகள் உள்ளன.அவர்கள் இந்தியக்குடிமக்களாக அங்கீகரிக்கப்பட்டு ஒரு தலைமுறை கடந்துவிட்டது.

அன்றுமுதல் திபெத்தியர் தொடர்ச்சியாகச் சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். உலகமெங்கும் இடதுசாரிகள் அனைத்து தேசியவிடுதலைப்போராட்டத்தையும் ஆதரிப்பார்கள், திபெத் பற்றிப் பேசவே மாட்டார்கள். திபெத் போராட்டம் குறித்த செய்திகளை நம் நாளிதழ்களில் காணவே முடியாது – வலதுசாரி நாளிதழ்களில்கூட. சீனாவின் செல்வாக்கு அத்தகையது

சீனாவின் இரும்புத்திரைக்கும், உலகளாவிய இடதுசாரிப் பிரச்சாரத்திற்கும் தப்பி எழுந்து உலகின் கவனத்தை ஈர்க்க திபெத்திய கண்டடைந்த போராட்ட வழிமுறை தீக்குளிப்பது. பொது இடங்களில் திபெத் விடுதலைக்கோரிக்கையுடன் வரும் பிட்சுக்கள் தன்னைத்தானே கொளுத்திக்கொண்டு எரிந்து சாவார்கள். ஆயிரம் பிட்சுக்கள் வரை தீக்குளித்திருக்கிறார்கள். சென்ற பத்தாண்டுகளில் 120 பேர்.

bronze-sculpture-memorial-at-dalai-lama-temple-to-tibetans-who-have-KMYCW0
திபெத் எரிபலி நி னைவுச்சிலை. தர்மசாலா. இணையத்திலிருந்து புகைப்படம்

 

அவர்களுக்காக நிறுவப்பட்ட ஒரு கற்சிலை திபெத்திய அருங்காட்சியகத்திற்கு வெளியே நின்றிருக்கிறது. உள்ளே நூற்றுக்கணக்கான படங்களில் திபெத்தியப் போராட்டம். . அடக்குமுறைகள், தீக்குளிப்புகள், சிறைசெல்லல்கள். நூற்றுக்கணக்கான திபெத்திய முகங்கள் வெவ்வேறு உணர்வுகளில் உறைந்து காலப்பதிவுகளாக உள்ளன அங்கே

அணிவகுக்கும் சீன ராணுவத்திற்கு எதிராக தீரமாக கை தூக்கி நின்றிருக்கும் இளம் பிட்சுக்கள். நிரைநிரையாக கைதுசெய்யப்பட்டு அழைத்துச்செல்லப்படுபவர்கள். முச்சந்திகளில் கிடக்கும் சுட்டுத்தள்ளப்பட்ட உடல்கள். எரிந்த கரிக்கட்டைகள் போன்ற எரிபலியினரின் உடல்கள். ஆவேசத்தில் உறைந்த முகங்கள். காணாமலானவர்களைப் பற்றிய மிகமிக நீளமான பட்டியல். நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான முகங்கள்.

ஆனால் இன்றைய திபெத்தியர்களின் ’செல்போன்தலைமுறை’ அக்கறையே இல்லாமல் அந்த சித்திரங்களைப் பார்த்துச்செல்கிறது. அவர்கள் வாழும் உலகம் வேறு. கறுப்புவெள்ளைப் புகைப்படங்கள் கல்வெட்டுகள் போல பழைமையான வேறேதோ காலத்தைச் சேர்ந்தவை. சிரிக்கிறார்கள், ஏதேதோ சாப்பிடுகிறார்கள், செல்பேசியில் சிணுங்கிக்கொண்டே இருக்கிறார்கள்.

download

ஒரு பெண் என்னிடம் “இவை உண்மையாகவே தீக்குளிக்கும் படங்களா? இல்லை திரைப்படக் காட்சிகளா?” என்றாள். உருண்ட சீன முகம். பெரிய கருப்புப் பட்டைக் கண்ணாடி. நான் “உண்மையானவை” என்றேன். “ஏன்?” என்றாள். “திபெத்தின் விடுதலைக்காக” என்றேன். முகத்தில்சரிந்த குழலை தள்ளிவிட்டுவிட்டு “திபெத்திற்கு விடுதலைகொடுத்தார்களா?” என்றாள். “இல்லை” என்றேன். “ஓ” என்றாள். உதடு ஒரு சிறு செவ்வட்டமாக ஆகும் ‘ஓ’. கலையாத லிப்ஸ்டிக் அவள் எவ்வளவு கவனமானவள் என்று காட்டியது. அவள் கையிலிருக்கும் அந்த ஆப்பிள் செல்பேசியின் பெரும்பகுதி சீனாவில் தயாரானது.

நான் ”நீ எந்த ஊர்?” என்றேன். “பூனா. மும்பையில் கணிப்பொறித்துறையில் வேலைபார்க்கிறேன். நண்பர்களுடன் வந்தேன். என் அம்மா அப்பா இருவரும் இங்கே வந்திருக்கிறார்கள். மடாலயத்தில் இருக்கிறார்கள்” என்றாள். நான் “நீ பௌத்தமதத்தவளா?” என்றேன். “ஆம், என் தாத்தா திபெத்தில் இருந்து புனாவுக்கு குடியேறியவர்” என்றாள்

அதுவரை இருந்த அனைத்து சமநிலையும் குலைந்து போய்விட்டது. அந்த உடல்களில் எரியும் அனலுக்கு இவளைப்பொறுத்தவரை ஒரு பொருளும் இல்லை. அப்படி வரலாறு முழுக்க எத்தனை சிதைகள். எத்தனை அழிவுகள்! அவையும் வெறும் காலநுரைச்சிதறல்கள் மட்டுமே. மண்நோக்கி உழல்வதே இங்கே இயல்பான வாழ்க்கை. விண்நோக்கி அலைவது இங்குள்ள வாழ்க்கைச்சூழலில் எந்தப் பொருளும் இல்லாதது. ஆனால் அதுவே ஊழ் என்றால் அதைத்தான் செய்தாகவேண்டும். அங்கே நின்றிருக்கவே முடியவில்லை

3333

திபெத்தின் வழி தோற்றுப்போய்விட்டது என்று தலாய் லாமா ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார். இனிமேல் உயிர்ப்பலிகள் வேண்டாம் என்றார். ஆனால் அதைக்கொண்டு திபெத்தின் அகிம்சைப்போராட்டத்தை நிராகரிக்கமுடியுமா என்ன? ஆயுதப்போராட்டத்தால் இஸ்ரேல் வென்றதே என்று சிலர் சொல்லலாம். அதற்குப் பதில் ஐரிஷ் போராட்டம் உச்சகட்ட உயிரிழப்பு கொண்ட வன்முறைப் போராட்டம். அது என்ன ஆயிற்று என்பதுதான். அகிம்சைவழியில்தானே தென்னாப்ரிக்கா வென்றது?

அகிம்சைப்போராட்டம் மட்டுமல்ல எந்தப்போராட்டமும் வென்றேயாகவேண்டும் என்றில்லை. வெல்லவழியிருந்தால்தான் வெல்லமுடியும். வரலாற்றின் போக்கில் சிலதருணங்களில் விடுதலை வாய்ப்பு மிகக்குறுகிப் போகலாம். சில தலைமுறைகள் காத்திருக்க நேரலாம். ஆயுதப்போராட்டம் கடும் பின்விளைவுகள் கொண்டது. வரலாற்றின் வழி அடைபடும் தருணத்தில் மூர்க்கமாக மோதி அது தன் குடிகளையே அழிவுக்குக் கொண்டுசெல்லும். அகிம்சைப்போராட்டம் அல்லது ஜனநாயகப் போராட்டம் என்பது உரிய தருணத்தில் பின்வாங்கவும், தேவையானபோது சமரசங்களுக்கும் பேச்சுவார்த்தைக்கும் சித்தமாக இருப்பதற்கான முறைதான். அகிம்சையே அந்த வாய்ப்புகளுக்காகத்தான்.

திபெத்தின் போராட்டம் இன்று குறியீட்டளவிலேயே. உலகம் அதை கைவிட்டுவிட்டது. சீனா மூர்க்கமான வணிக ஆதிக்கமாக எழுந்துவந்துள்ளது. இன்று உலகுக்கு அது தேவையாக உள்ளது. இந்திய அரசே இந்திராகாந்தியின் இறப்புக்குப்பின் திபெத் விஷயத்தில் ஆர்வம் காட்டுவதில்லை. தலாய்லாமா பெரும்பாலும் இந்தியாவில் இல்லாமலிருப்பதும் அதனால்தான். ஆனால் அவர்களின் கோரிக்கை இன்றியமையாதது என்றால், அதற்கு வரலாற்றில் நிரந்தர மதிப்பு இருந்தால், அது அழியாது. என்றேனும் வாய்ப்புவருகையில் பேருருக்கொண்டு தன் இலக்கை அடையும்.

 

yya
ஃபாங்சு அருவி

 

அங்கிருந்து நடந்தே ஃபாங்-ஸு ஆலயத்திற்குச் சென்றேன். ஐந்து கிமீ தொலைவில் இன்னும் சற்று உயரமான குன்றில் உள்ளது இந்த ஆலயம். ஒரு சுனைக்கரைத்தெய்வம் இது. மலையூற்றில் உருவான சுனை. இப்போது கான்கிரீட் எல்லை கட்டி குளமாக ஆக்கியிருக்கிறார்கள். அதற்கப்பால் இருக்கும் ஃபாங்-ஸு அருவி சென்றமுறை நாங்கள் வந்தபோது நீர்நுரைத்து வழிந்துகொண்டிருந்தது. இம்முறை நீர் மிகக்குறைவு.

மலையுச்சியில் இருந்து பல படிகளாக அந்த அருவி விழுந்து கீழே செல்கிறது. அருவியின் வலப்பக்க விளிம்பு வழியாக மேலே உச்சிவரைச் செல்ல ஒற்றையடிப்பாதை உண்டு. அதன் வழியாக ஏறிச்சென்று வெவ்வேறு இடங்களில் அமர்ந்து நீரை பார்க்கலாம். அங்கே மலை சாம்பல்நீல நிறமான அடுக்குப்பாறைக் கற்களால் ஆனது. அது உடைந்து சில்லுகளாக பரவி பல இடங்களில் அருவி போல வழிந்து நிற்கிறது.

இமையமலையின் அடிவாரத்தின் அழகுகளில் ஒன்று இப்படி மணலும் சிறுபாறைகளும் பொழிந்து நிற்கும் கூம்புக்குவைகள். லடாக்கில் சில இடங்களில் செந்நிறத்திலும் பொன்மஞ்சள்நிறத்திலும் அரிதாகப் பச்சைநிறத்திலும் பாறைத்துண்டுகளால் ஆன கூம்புகளைக் காணமுடியும். அழகிய கோபுரங்கள் அல்லது காளான்கள் .  ஆனால் அபாயகரமானவை இந்தக் கல்லருவிகள். சாலையை திடீரென்று மறைக்கக்கூடும். அரிதாக கார்மேலேயே பொழியவும்கூடும்.

 

dsc_0223-3

பகல் முழுக்க அங்கேயே தனித்து அமர்ந்திருந்தேன். சுற்றுலாப்பயணிகள் குறைவு. ஓரிரு காதலிணைகள் ஆங்காங்கே. இளவெயில், குளிர், விழிநிறைக்கும் மலைச்சரிவு. பேச்சே இல்லாமல் உதடுகள் உலர்ந்து ஒன்றோடொன்று ஒட்டிக்கொண்டிருப்பதை திரும்பி வருகையில் ஒரு பழச்சாறு வாங்கும்போதுதான் உணர்ந்தேன். அதுவரை ஒன்றும் சாப்பிடவுமில்லை.

மதிய உணவை மாலையில் ஒரு திபெத்திய விடுதியில் சாப்பிட்டேன். கூட்டமே இல்லை. ஒரு வெள்ளை இணை. ஒரு திபெத்திய முதிய இணை. ‘இங்கு செல்பேசியில் பேசியபடியோ உரக்க உரையாடியபடியோ சாப்பிட அனுமதியில்லை’ என்ற வரி கவர்ந்தது. என்ன இருக்கிறது என்று பார்த்தேன்.  எல்லாமே திபெத்தியப் பெயர்கள்.சரிதான் என்று அந்த உரிமையாளரிடம் – அவரே சமையலர், அவரே ஏவலர் –  எனக்கு உணவைப் பரிந்துரைக்கும்படிக் கேட்டேன். ‘ நீங்கள் தென்னிந்தியர் அல்லவா?’ என்றார். ஆம் என்றேன். ‘ நல்ல பசியா?’ அதற்கும் ஆம் என்றேன். ’அப்படியென்றால் இதைச் சாப்பிடுங்கள்’ என பரிந்துரைத்தார்

திபெத்திய வெண்ணிற அரிசியுடன் அரிசியளவுக்கே சிறிதாக கொத்தித் துருவிய கோழியிறைச்சி சேர்த்து வெண்ணையுடன் வேகவைக்கப்பட்ட உணவு. நெய்க்கோழிச்சோறு என்று சொல்லலாம். கொஞ்சம் பச்சைமிளகு உப்பு. வேறெந்த நறுமணமும் இல்லை. அந்த அரிசியே மணமானதுதான். “நீங்களெல்லாம் மென்றுவிழுங்குகிறீர்கள். விரைந்து சாப்பிடுபவர்களுக்குச் சுவை இல்லை. மிகமெல்ல உண்ணுங்கள். வாயின் அனைத்துப் பற்களாலும் மெல்லுங்கள். நாக்கு பத்துமுறையாவது ஒருவாய் உணவை துழாவவேண்டும்” என்றார் உரிமையாளர். “ஒருமணிநேரம் எடுத்துக்கொள்ளுங்கள்” உணவுக்கு அடியில் ஒரு சிறிய கனல்தட்டு. ஆகவே ஆறுவதில்லை

திபெத்திய அமைதியில் இப்படி அமர்ந்து உணவுத்தியானம் செய்ய வாழ்க்கை இருக்கிறது. வாழ்ந்து வாழ்ந்து தீர்வதுமில்லை. அங்கே முதுமை என்பது நூறுவயதுக்குமேலேதான். நான் மெல்லமெல்ல உண்ணத் தொடங்கினேன். சரியாக ஒருமணிநேரம் இருபத்தைந்து நிமிடம் எடுத்துக்கொண்டேன். உண்மையிலேயே உடலைப் பரவசப்படுத்திய உணவு அது. உண்டுகொண்டிருந்தபோது அந்த திபெத்திய முதியவரைப் பார்த்தேன். கண்கள் இடுங்கச் சிரித்தபடி தலைவணங்கினார். சைகையால் “நல்ல உணவு…” என்றார்

l

திபெத்திய பௌத்தம் ஒரு முழுமையான வாழ்வுமுறை. அது வாழ்க்கையை அந்தந்த கணங்களில் முழுமையாக நிறுத்தும் கலை. அதன் தத்துவமே கணங்களே மெய் என்பதுதான். ஒவ்வொரு மதமும் நாளை நாளை என்று கூவுகின்றன. சாவுக்குப்பின் என அச்சுறுத்துகின்றன. திபெத்தியபௌத்தத்தில் நரகமும் சொற்கமும் இல்லை. தலாய்லாமா சொன்னதுபோல ‘மறுசுழற்சி’தான். உலகிலுள்ள அனைத்தும் மட்காக்குப்பை மட்கும்குப்பை என இருவகைதான். அலட்டிக்கொள்ளாதே, அதுவே நிகழவிடு, அறிந்துகொண்டிரு என ஆணையிடும் ஒரு தத்துவநிலைபாடு மட்டும்தான் அது.

உலகின் அரிய பண்பாடுகளில் ஒன்று திபெத். உலகம் அடைந்த தத்துவ -ஆன்மிக உச்சங்களில் ஒன்று. வெறும் ஐம்பதாண்டுகளில் அசட்டுத்தனத்தின் உச்சம் என வரலாற்றில் நிரூபிக்கப்பட்ட அரசுமார்க்ஸியம் என்னும் கொள்கையால் அது அழிக்கப்படுவது போல சமகால வரலாற்றுத் துயரம் வேறில்லை. அதிலும் உலகு கண்ட மூன்று மாபெரும் கொலைகாரக் கிறுக்கர்களில் ஒருவரான மாவோ சே துங் திபெத்தைச் சூறையாடினார். திபெத்திய ஞானகுருக்கள் கொல்லப்பட்டனர். காணாமலாயினர். மடாலயங்கள் அழிக்கப்பட்டன. சிறுவர்கள் சீனாவுக்கு கடத்தப்பட்டு கட்டாய ‘மார்க்ஸியக் கல்வி’ அளிக்கப்பட்டனர். திபெத்தில் சீன அதிகாரிகளும் படைவீரர்களும் நிறுத்தப்பட்டனர்.

இன்று சீனா திபெத்தின் ஆன்மாவை பெருமளவு அழித்துவிட்டது. நுகர்வுக்கலாச்சாரத்திற்குள், சாரமற்ற நவீனயுகத்திற்குள் திபெத்தியப் பண்பாடு வலுக்கட்டாயமாகக் கொண்டுவந்து சேர்க்கப்பட்டது.  இதை திபெத்தை நவீனப்படுத்திவிட்டது சீனா என நம் மௌண்ட்ரோட்டுப் பேடி ஊடகம் கொண்டாடிக்கொண்டிருக்கின்றது. முழுமூடத்தனம். என்றேனும் இதையெண்ணி மானுடம் அருவருப்பும் தற்கூச்சமும் அடையும் என்று தோன்றுகிறது.

IMG_20180309_122019

அந்தி எழுந்தபின்புதான்  திரும்பி அறைக்கு வந்தேன். இந்நாட்களில் வெண்முரசு பற்றி ஒரு வரிகூட எண்ணத்தில் கோக்கவில்லை. கிளம்பியபின் அதைப்பற்றி மறந்தேவிட்டேன். எப்போதாவது அதைப்பற்றிய ஒர் எண்ணம் எழும்போதுகூட ஓர் அரிய பொருளை கைமறதியாக எங்கேயோ வைத்துவிட்டு வந்த உணர்ச்சிதான். சமநிலையிழப்பு மிக அரிதாகவே நிகழ்ந்தது.

மறுநாள்  கிளம்பி டெல்லி சென்றேன். பேருந்தில் இரவில் பனிமலைகளைப் பார்த்தபடி அமர்ந்திருந்தேன். மலையாளப்பாட்டுக்கள் கேட்டுக்கொண்டிருந்தேன். பழைய மலையாளப் பாட்டுக்களையே கேட்கமுடிகிறது . கடந்தகால ஏக்கம் மட்டும் அல்ல. அக்காலத் தமிழ்ப்பாட்டுக்களைக் கேட்கையில் தேய்வழக்குகளும் மொழிப்பிசிறுகளும் கூச்சமளிக்கின்றன. பிற்காலத் தமிழ்ப்பாட்டுக்களைப்பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. எழுபதுகளின் மலையாளப்பாட்டுக்கள் செயற்கையானதென்றாலும் உச்சகட்ட கற்பனாவாதம் கொண்டவை.

டெல்லியில் வந்திறங்கியபோது விடியற்காலை. ஓர் ஆட்டோவில் ஏறி அவர் கொண்டு விட்ட விடுதியில் இறங்கினேன். விடிகாலை நான்குமணி. நல்ல குளிர். மதியம் 12 மணிவரை ஒருநாள். 12 மணிக்குப்பின் அடுத்த நாள். இரண்டு நாட்களுக்கான வாடகை 2400 ரூபாய் என்றார். பேரம்பேசி 2000 ஆகக் குறைத்தேன். மிகச்சிறிய அறை. குளிர்சாதன வசதி இல்லை. வெந்நீர் இல்லை. நாற்றம் வேறு, மிக அருகே பொதுக்கழிப்பிடம். ஆனால் தூங்கிவிட்டேன்

images

மாலையில் சைதன்யாவை அழைத்தேன். அவள் என்னை அருகிலிருக்கும் ஆர்கே ஆஸ்ரம் மெட்ரோ ரயில்நிலையம் வரச்சொன்னாள். அங்கே சென்று காத்து நின்றிருந்தேன். அவளுடன் டெல்லி அருங்காட்சியகம் சென்று இரண்டு மணிநேரம் சிற்பங்களைப் பார்த்தேன்.நீண்ட இடைவேளை எனத் தோன்றிய ஒருவாரத்திற்குப்பின் அவளுடன் பேசும்போது ஒன்று தோன்றியது, நான் மிக அணுக்கமாக உணரும் உள்ளங்களில் ஒன்று அவளுடையது. நான் கையிலேந்திக் கொஞ்சிய குழந்தை. அதேசமயம் எந்த சிக்கலான கருத்தையும் எளிதில் புரிந்துகொள்ளும் வாசகி.

இந்தியாகேட் செல்லலாம் என கிளம்பினோம். ஆனால் வழியில் மோடியோ எவரோ செல்லும் கெடுபிடி. மொத்த வண்டிகளையும் நிறுத்திவிட்டனர். வழிநடையர்களை ஆட்டுமந்தைகள் போல அருகிருக்கும் ஏதேனும் பகுதிக்குள் ஒதுக்கி காவலில் நிறுத்தினர். இப்படி நான்குமுறை. மன்னராட்சிக்காலத்தில்கூட மக்கள் இப்படி நடத்தப்பட்டிருக்கமாட்டார்கள் என தோன்றியது

ஒரு கட்டத்திற்குமேல் சலித்துப்போய் திரும்பிவிட்டோம். சரவணபவனுக்குச் சென்று தோசை சாப்பிட்டுவிட்டு அவளை அனுப்பிவிட்டு அறைக்கு வந்தேன்.

IMG_3485
தர்மசாலா, பௌத்த ஆலயம்

 

மறுநாள் டெல்லியின் அருகே கர்முக்தேஸ்வர் என்னும் ஊரில் உள்ள கங்கைக்கரைக்குச் செல்ல திட்டமிட்டோம். காலை ஏழு மணிக்கு வாடகைக்காரில் மீரட் சாலையில் சென்றோம். சாலைப்பணிகள் நிகழ்கின்றன. நூறு கிலோமீட்டர் சென்று சேர நான்கு மணிநேரம் ஆகியது.

அந்த கங்கைப்படித்துறைதான் பழைய அஸ்தினபுரியின் படகுத்துறை என்பது தொன்மம். அங்கிருந்து ஒரு பகல் தொலைவில் உள்ளது அஸ்தினபுரி. வெண்முரசில் புருஷமேத வேள்வி அதன் கரையில்தான் நிகழ்கிறது. ஆனால் இதெல்லாமே இன்றைய கணிப்புகள். ஆறு எப்படி திசைமாறியது, அஸ்தினபுரி சரியாக எங்கே இருந்தது என்று இன்று எவரும் சொல்லிவிடமுடியாது

முப்பதாண்டுகளுக்கு முன்பு கர்முக்தெஸ்வர் சென்றபோது சரிந்த சேற்றுக்கரையில் பெரிய துணிக்குடைகளுடன் பண்டாக்கள் அமர்ந்திருக்க நீர்ப்பரப்பில் வெண்ணிற காடாத்துணிப் பாய் விரித்த படகுகள் சோம்பலாக ஒழுகிச்செல்லும் ஆற்றை கண்ட நினைவு. இப்போது கரை சிமிண்ட் படிகளாக மாறியிருந்தது. பண்டாக்கள் இருந்தனர் . இயந்திரப்படகுகள் நீர்ப்பரப்பின் மேல் ஓடின. நல்ல கூட்டம். நீர் நாலில் ஒன்றாகக் குறைந்திருந்தது.

கர்முக்தேஸ்வர்
கர்முக்தேஸ்வர்

இன்றிருக்கும் கங்கையில் சிறிதும்பெரிதுமான ஐம்பதுக்கும் மேற்பட்ட அணைகளால் தேக்கப்பட்டு எஞ்சிய நீர் தான் செல்கிறது. ஒவ்வொரு பத்தாண்டிலும் புதிய அணைகள் எழுகின்றன. இருந்தும் இவ்வளவுநீர். மகாபாரதக் காலகட்டத்தில் இந்த படுகையை நிறைத்தபடி கங்கைநீர் சென்றிருக்கக் கூடும். பெருங்கலங்கள் செல்லும்படி.

குளிர்காலம் முடிந்து டெல்லியிலேயே வெயில் சுடத்தொடங்கியிருந்தது.கங்கைக்கரை முழுக்க பழைய துணிகள் , மழிக்கப்பட்ட தலைமுடிகள் மட்கிக்கொண்டிருந்தன. சேறு உலர்ந்த புழுதி . கடும் நிறங்களில் பாலிஸ்டர் சேலை அணிந்த உத்தரப்பிரதேசத்துப் பெண்கள். அவர்கள் துணிமூட்டைகள். நடுவே சிறுவேள்விகள். அதில் இந்தியில் மந்திரம் சொல்லப்படுவதைக் கேட்டேன்

படிகளில் அமர்ந்து வெறுமே கங்கையைப் பார்த்துக்கொண்டிருந்தோம். பின்னர் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் இருந்த கங்கையன்னையின் ஆலயத்திற்குச் சென்றோம். அது பூட்டியிருந்தது. செங்கல்லால் ஆன நூறுபடிகள் ஏறி சிறு குன்றின்மேல் அமைந்த அந்த ஆலயத்திற்குச் செல்லவேண்டும். அருகிலிருந்த ராமர் ஆலயத்தில் அந்த ஆலயத்தைப் பராமரிக்கும் பெண்மணியே பூசையும் செய்தார். கற்கண்டு பிரசாதம் தந்தார். பழைய ஆலயம் புதிய சிமிட்டிக் கட்டிடத்திற்குள் இருந்தது. அந்தச் செங்கல்படிகள் அன்றி ஆர்வமூட்டுவன வேறேதும் அங்கில்லை

u

சுற்றிலும் உத்தரப்பிரதேசச் சிற்றூர்கள். சிறிய குட்டைகளின் நீர் கருமையாக சாக்கடைநாற்றத்துடன் இருந்தது. சாலை முழுக்க எருமைகளும் பசுக்களும் கட்டப்பட்டிருந்தன. வரட்டி உலரவைக்கப்பட்டு அடுக்கடுக்காக சேமிக்கப்பட்டிருந்தது. கோதுமைவயல்கள் அறுவடைக்குக் காத்திருந்தன. சில இடங்களில் அறுவடை செய்து வைக்கோலை பெரிய உருளைகளாகச் சுருட்டிக் கொண்டிருந்தார்கள்.

கோரைகளை வெட்டி பாய்முடையும் வேலை நடந்துகொண்டிருந்தது. லாரிகளில் பாய்களை பெரிய உருளைச்சுருள்களாக ஏற்றிக்கொண்டுசென்றனர். அத்தனை பாய்களை என்ன செய்வார்கள் என்ற வினாவுக்கு திரும்பிவரும்போது விடைகிடைத்தது. ஏராளமான வீடுகளின் சுவர்களே அந்தபாய்களால் ஆனவை

டெல்லிக்குத்திரும்பியபோது இருட்டிவிட்டிருந்தது. மறுநாளும் டெல்லியில்தான் இருந்தேன். சைதன்யா ஒரு நல்ல விடுதியில் அறை ஏற்பாடு செய்து தந்தாள். எங்கும் செல்லாமல் அறையிலேயே இருந்தேன். அங்கே ஆயுர்வேத உழிச்சில் வசதி உண்டு என்றார்கள். விலை 4000 ரூ. அவ்வளவுக்கு நம் உடல் மதிப்புள்ளதா என்று சந்தேகம் வந்தது. பெரும்பாலும் தூக்கம், எஞ்சியநேரம் அரைத்தூக்கம்.

டெல்லியின் இடுங்கலான தெருக்களில் அலைந்தேன். நெரிசல் . எங்கும் குப்பை. சிறு இடுக்குகளில் சாலையின் குப்பைகளை கூட்டி அள்ளி செருகி வைக்கிறார்கள். அங்கே நாய்களும் பசுக்களும் மொய்த்தன. சாலையெங்கும் பசுக்களின் சாணி. அது வெயிலில் காயும் வாடைதான் டெல்லியின் மணம்

ja

ஒரே சமயம் எரிசசலையும் மறைந்திருக்கும் இதமான உணர்வையும் அளித்தது. அந்தியில் சைதன்யா அவளுடன் படிக்கும் மாணவர் அருண் பிரகாஷுடன் என்னைப்பார்க்க வந்தாள். நல்ல வாசகர். வரலாற்றில் முதுகலை பயில்பவர். இரவு வரை வரலாறு, அரசியல் என பேசிக்கொண்டிருந்தோம்.

ஊர்திரும்புவதற்கு ரயிலில் சீட்டு போடச் சொல்லியிருந்தேன். விமானப்பயணம் சலித்துவிட்டது. துரந்தோ எக்ஸ்பிரஸில் சென்னை. மாலை மூன்றரை மணிக்கு கிளம்பி மறுநாள் இரவு எட்டரை மணிக்குச் சென்னை. வழியில் நாலைந்து இடங்களில்தான் நின்றது. நாலாயிரம் ரூபாய் டிக்கெட். நாளெல்லாம் சாப்பிடுவதாற்கு டீ, சூப், சாப்பாடு என தந்தபடியே இருந்தனர். அவ்வகையில் பார்த்தால் மலிவுதான்.

ganga-mandir-stairs
கங்கை அன்னை ஆலயப்படிக்கட்டுகள். இணையத்திலிருந்து

 

அவசர வேலை இல்லை என்றால் ரயில்பயணமே உகந்தது என்ற எண்ணம் ஏற்பட்டது. விமானப்பயணம் பொருளற்ற ஒரு அமர்வு மட்டுமே. ரயில் நிலம்சூழ்ந்தது. விரிந்த கண்ணாடிப்பரப்பினூடாக ஓடிச்செல்லும் இந்தியப்பெருநிலத்தைப் பார்த்துக்கொண்டே நாளெல்லாம் அமர்ந்திருந்தேன். காலையிலும் மாலையிலும் கதவோரம் நின்று பார்த்தேன். ரயிலில் நின்று நிலக்காட்சியைப்பார்ப்பது போல சிறந்த கோணம் ஏதுமில்லை. ஒரு மாபெரும் ‘டிராலி ஷாட்’ .மெல்ல திரும்பிக்கொண்டிருந்தது நிலம்.

டெல்லியை விட்டு கிளம்பிய சிலமணிநேரத்திலேயே சம்பலின் சதுப்புமணல் அலைகளால் ஆன நிலம் வந்துவிடும். பின்னர் விளைநிலங்கள், நதிக்கரைகள் , சிற்றூர்கள். இந்தியாவின் மையநிலத்தில் எவ்வளவு குறைவாக மக்கள் வாழ்கிறார்கள் என்பது மிக விந்தையானது. நகரங்கள் மக்கள்திரளால் செறிவடையும்தோறும் சிற்றூர்கள் ஆளொழிந்து வருகின்றன.

la
தர்மசாலா அந்தியில் கனலும் பனி

வட இந்தியச் சிற்றூர்களில் நல்ல வீடுகள் அரிது. பெரும்பாலானவை சுட்ட செங்கற்களை அடுக்கிக் கட்டிய பூச்சில்லாத சுவர்கொண்ட தாழ்வான ஓட்டு வீடுகள். அல்லது புற்கூரையிடப்பட்ட கூடைபோன்ற குடிசைகள். அவற்றுக்குமேல் ஜியோ செல்பேசியின் மாபெரும் விளம்பரங்கள். அதைவிடப் பெரிதாக மோடியின் படம்கொண்ட தட்டிகள். ஜார்ஜ் ஆர்வெல்லை நினைத்துக்கொண்டேன்

வேளாண்நிலங்களில் பயிர்கள் மாறிக்கொண்டே இருந்தன. கோதுமை வயல்களில் அறுவடை முடிந்த வைக்கோல்குன்றுகள். சோளம் இளங்கதிர் எழுந்து பச்சைக்கடலாகக் கிடந்தது. முட்புதர் மண்டிய சிறு குன்றுகள். தொலைவில் சில குன்றுகளுக்குமேல் கைவிடப்பட்ட கோட்டைகள். பழைய மன்னராட்சிக்காலத்தின் நினைவெச்சங்கள். இந்த நிலம் ஏதோ இழந்த காலத்தை கனவுகண்டு அரைதுயிலில் கிடப்பது. டாட்டா வண்டிகளும் ரிலையன்ஸ் செல்பேசியும் மோடியின் புன்னகையும் இதை இன்னமும் எழுப்பவில்லை.

முழுநாளும் ஒரு சொல் இல்லாமல் நோக்கிக்கொண்டே இருந்தேன். திரும்பிச் செல்கிறேன் என்று தோன்றவில்லை. அறியாத புதுநிலம் ஒன்றுக்குச் சென்றுகொண்டிருக்கிறேன் என்னும் உணர்வே ஏற்பட்டது.

ஆந்திரநிலத்தில் அரிய விளைவயல்கள் முழுக்க சவுக்குக் காடுகள் வளர்க்கப்பட்டிருந்தன. முன்னர் பிரம்மாவரில் தங்கியிருந்தபோதே அதைச் சொன்னார்கள். உணவுப்பொருள் விளையவைத்தால் இடைத்தரகரும் வணிகர்களும் அடித்துப்பிடுங்கி எதுவுமே எஞ்சாது. உணவுப்பொருள் அழுகும், ஆகவே விற்றாகவேண்டும். சவுக்கு என்றால் விலைகிடைக்கும் வரை பேரம்பேசலாம். இந்திய வேளாண்மையின் அவலச்சித்திரம்

ttttt
தர்மசாலாவிலிருந்து திரும்பி…

வார்தா, கோதாவரி, கிருஷ்ணை என நதிகளின் மேல் பறந்ததுபோல் கடந்தேன். சென்னை அணுகிக்கொண்டிருந்தது. சென்னையிலிருந்து நாகர்கோயில். 16 அன்று வந்துசேர்ந்தேன். எவரிடமும் பேசவில்லை. எந்தச்செய்தியும் செவிக்கு வரவில்லை. சென்னையில்தான் நாளிதழ்களை செல்பேசியில் வாசித்தேன். அதிர்ச்சியும் வருத்தமும் அளிக்கும் செய்திகள். ஆனால் மிகச்சில நிமிடங்கள் கூட அவற்றில் உளம்பதியவில்லை.

கிளம்பிச்சென்றபோதிருந்த உளநிலை பெரும்பாலும் மாறிவிட்டது. ஒன்றும் எழுதத் தோன்றவில்லை. எந்தக் கருத்தும் வடிவமும் எழவில்லை. அது இனிமேல் வந்தால்தான் உண்டு. ஆனால் வேறெங்கோ சென்று மீண்டிருந்தேன். செயல்படுவதன் பொருள், பொருளின்மைக்கு அப்பால் வேறு ஒருவகையான நிறைவு

 

 

[முடிவு]

 

என் பனிநிலத்திற்கு என்ன ஆயிற்று?

 

 

எரிதலின் வரலாறு

 

முந்தைய கட்டுரைபீட்டரும் காடும்
அடுத்த கட்டுரைவெண்முரசு–நூல் பதினேழு- இமைக்கணம்