ஈரோடு சந்திப்பு -நவீன்

naveen

ஈரோடு சந்திப்பு- விஷால் ராஜா

அன்பு ஆசானுக்கு,

 

கடந்த சனி மற்றும் ஞாயிறு ஈரோட்டில் நடந்த புதிய வாசகர் சந்திப்பு திட்டத்தை முடித்துவிட்டு ஞாயிறு இரவு வீடு திரும்பும் போது உங்களுக்கு ஓர் கடிதம் எழுதலாம் என்று உத்தேசித்தின் அதன் விளைவே இந்த மின்னஞ்சல் (என்னைப் போல் மேலும் சில ஆரம்ப வாசகர்கள் பயன்பெறட்டுமே).

 

ஈரோடு இரயில் நிலையம் காலை ஆறு மணிக்கு நான் வரும்போது அருகிலுள்ள சண்டிகா தியேட்டர் பக்கம் உள்ள டீக்கடையின் முன் எல்லோரும் நின்றுக்கொண்டிருந்தீர்கள். யாவரும் முன்பின் அறியாத முகம் மற்றும் முதன்முதலில் உங்களைப் பார்க்க போகிறேன் என்ற பயமும் கலந்த வண்ணமே கூட்டத்தை அணுகினேன்.  கிருஷ்ணனிடம் நவின் என்று என்னை அறிமுகம் செய்துக் கொண்டபோது திரும்பி என்னை நோக்கி சிரித்துவிட்டு சேக்ஷ்பியர் பற்றி நண்பரின் கேள்விக்கு உங்கள் விளக்கத்தை விவாதித்துக் கொண்டிருந்தீர்கள் மிக நேர்த்தியான விளக்கம் ஓர் தவறான கருத்தை யாரும் நம்பிவிட கூடாது என்று உண்மை வரலாற்றை கூற நீங்கள் எடுத்துக் கொண்ட மெனக்கிடல் மிகவும் பிடித்திருந்தது.

 

 

காலை ஏழரை வாக்கில் காஞ்சிக்கோயில் அருகிலுள்ள செந்திலின் பண்ணை வீட்டை அடைந்தோம். காலை உணவிற்கு குஷ்பு இட்லி, மசாலா தோசை, பொங்கல் என்று  கிருஷ்ணன் அமர்க்களம் செய்துவிட்டார்.  உணவு முடிந்ததும் விவாதம் ஆரம்பமானது. ஆரம்ப அரசியல் தாண்டி இலக்கியத்திற்குள் நுழைந்தோம். யதார்த்தவாதம், இயல்புவாதம் பற்றிய வித்தியாசத்தில் தொடங்கி எங்கள் கேள்விகளுக்கு பதில் அனைத்தையும் சுவாரசியமாக சொன்னீர்கள். இதுவரை நான் வாசித்த புத்தகங்கள் மீண்டும் வாசித்தாலோ இனி வாசிக்க போகும் புத்தகங்களோ ஒரு தர்க்க ரீதியாக மேலும் புரிதலோடு தெளிந்த பார்வையுடன் வாசிக்க இவ்விவாதம் ஒரு திறப்பாக அமைந்தது.

 

 

மாலை ஒரு தேனீர் நடை காலுக்கு நல்ல பயிற்சி மட்டுமல்ல நம் வரலாற்று பின்னணி பற்றி தங்கள் பகுப்பாய்வு அதன் சமகாலத்தின் எதிர்வினைகள் என ஒவ்வொரு நிகழ்வுக்கும் ஆராயும் மனநிலைக்கு உட்பட இது ஒரு சிறந்த பயிற்சியாய் இருந்தது.

 

 

அதன் பின் இரவு விவாதம், நம் கலந்துரையாடலின் எனக்கு மிக முக்கியமான பகுதிகள் இரண்டு என்று சொல்வேன். ஒன்று சனி இரவு விவாதம் மற்றொன்று ஞாயிறு காலை விவாதம். ஒருவன் எழுத்தாளனாக என்ன செய்ய வேண்டும் அதில் அவன் சந்திக்கும் சாமானிய பிரச்சனைகள் என்னென்ன அதை எதிர் கொள்ள நாம் செய்ய வேண்டியது என்னென்ன என்று உரையாடல் 12 மணி வரை நீண்டது.

 

 

ஞாயிறு காலை எனக்கு மிக மிக தேவையான மற்றும் நெருக்கமான பகுதி. இராகேஷ் சிறுகதை மற்றும் எனது சிறுகதை என்ற பெயரில் ஒர் வடிவம். வாழ்க்கையிலே மிக முக்கியமான தருணங்கள் இதை தவறவிட்டிருந்தால் இனி வருங்காலத்திலும் இதே போல் தவறான பாதையிலே பயணித்திருப்பேன். சிறுகதையின் இலக்கணம் மற்றும் நவீன கவிதை இலக்கணம் குறித்த உங்கள் விவாதம் மிக முக்கியமானவை. இனி இதற்கான பயிற்சிகளும் முயற்சிகளும் எங்கள் வசமே உள்ளது.

 

இறுதியாக மதிய உணவு முடிந்ததும் புகைப்பட பகுதி மற்றும் கேலிப்பேச்சிக்கள். இத்தனை சீரியஸான விவாதங்களுக்கு நடுவிலும் கேளிக்கைகளுக்கு பஞ்சமே இல்லை. பெங்களூர், தகவல் தொழில்நுட்பம் என என் அன்றாட கரடுமுரடான வாழ்வின் நடுவில் இது ஒரு வித்தியாசமான, ஒரு இதமான இரு தினங்களாக அமைந்தது. மேலாக எனக்கு கிடைத்த புதிய நண்பர்கள் முணீஸ், ஜனா, விசால்.  கிருஷ்ணன், செந்தில், சந்திரன், யோகேஸ்வரன்,  சீனு, அரங்கசாமி,​, பாரி, மணவாளன்​

 

நவீன்

முந்தைய கட்டுரைகள்ளமற்ற கவிதை
அடுத்த கட்டுரைஅற்பத்தனமும் அகங்காரமும்