பகுதி பத்து : பெருங்கொடை – 16
காசியப கிருசர் அவை நோக்கி கைதூக்கி “இந்த அவையில் ஷத்ரியர் தங்கள் தரப்பை சொல்லலாம்” என அறிவித்தார். “வேள்வியவையில் ஷத்ரியர் பேசுவதற்கு வகுக்கப்பட்டுள்ள முறைமைகளை அறிந்திருப்பீர்கள், அரசர்களே. ஷத்ரியர் வேதங்களைக் குறித்தோ, வேள்விநெறிகளைக் குறித்தோ ஐயமோ மாற்றுரையோ முன்வைக்கலாகாது. அந்தணர்மீது கருத்துரைக்கலாகாது. அந்தணர்சொல்லை மறுத்துரைத்தலும் ஏற்கப்படுவதில்லை. அவர்கள் முனிவர்களின் சொல்லை மறுத்துரைக்கவேண்டுமென்றால் பிறிதொரு முனிவரின் மாணவராக இருக்கவேண்டும், அம்முனிவரின் ஒப்புதல்பெற்றிருக்கவேண்டும்.”
“அரசுசூழ்தல் களத்தில் எக்கருத்தையும் எவரும் சொல்லலாம், ஒருவர் சொன்னதை பிறர் மீண்டும் சொல்லக் கூடாது. ஒருவர் கருத்தை பிறர் மறுக்கலாம், ஆனால் அக்கருத்துக்கள் அனைத்தும் வேள்வித்தலைவரை நோக்கியே சொல்லப்படவேண்டும். இளிவரலோ வசைச்சொல்லோ தவறியும் எழலாகாது. எழுந்தால் வேள்விச்சாலையை தூய்மைப்படுத்தி மாற்றமைத்து மீண்டும் முதலில் இருந்தே வேள்வியை தொடங்கவேண்டும் என்பது நெறி. அச்செலவுடன் பிழைச்செல்வத்தையும் அவ்வரசர் அளிக்கவேண்டும். அவர் ஏழு நாட்கள் உணவும் நீரும் நீத்து நோன்புகொண்டு தன்னை தூய்மை செய்து ஆப்பொருள் ஐந்து அருந்தி நிறைவுசெய்த பின்னரே வேள்வியவைக்குள் வந்தமர முடியும்.”
“வேள்வித்தலைவரிடம் அவிமிச்சம் பெற்ற பின்னரே அவர் தன் செங்கோலையும் அரியணையையும் தொடமுடியும். வேள்விக்காவலர் விழைந்தால் அவச்சொல் உரைத்தவரை வேள்வியைத் தடுத்தவர் என அக்கணமே கொல்ல ஆணையிடமுடியும். வேள்வியில் அவச்சொல் உரைத்தவரின் முதல் மைந்தருக்கு தந்தையை முடிநீக்கம் செய்து தான் அரசுகொள்ளும் உரிமையையும் வேள்விநெறி வழங்குகிறது. வேள்வித்தலைவரின் விருப்பமே அதில் முதன்மையாக கருத்தில் கொள்ளப்படும்” என்றார் காசியப கிருசர். “வேள்விச்சாலையின் உள்ளே திகழும் காற்றுவெளி வேதமொழியால் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. அதில் தேவர்கள் நிறைந்துள்ளனர். அவர்கள் அவைவிலகும் ஒரு சொல்லும் இங்கு உரைக்கப்படலாகாது. ஆணை தலைக்கொள்க அவை!”
அரசர்கள் தலைவணங்கி “ஆம்! ஆம்! ஆம்!” என்றனர். காசியப கிருசர் அவையை நோக்கியபடி காத்து நின்றார். அமைதி நிலவிய அவையில் விழியறியாமலேயே சொல்திரள்வதை நுண்ணுள்ளத்தால் உணரமுடிந்தது. சுப்ரியை ஒவ்வொரு முகமாக நோக்கிச் சென்றாள். பீஷ்மர் துயிலில் என தொய்ந்திருந்தார். சகுனி தொலைவில் விழிநட்டு அமர்ந்திருந்தார். ஜயத்ரதனும் ருக்மியும் உடலை தளரவிட்டு கால்நீட்டி அமர்ந்திருந்தனர். துரோணர் கிருபரிடம் ஏதோ மெல்லிய குரலில் சொல்லிக்கொண்டிருக்க கணிகர் மின்னும் சிறுகண்களுடன் தென்னெரியின் தழலை நோக்கிக்கொண்டிருந்தார். அரசர்களிடமிருந்து மெல்லிய முழக்கமொன்று கேட்கத்தொடங்கியது, குகைக்குள் தேனீ ஓசை என.
சல்யர் எழுந்து வணங்கி “நான் வேள்வி குறித்து இங்கே ஒன்றும் சொல்ல விழையவில்லை. இதிலுள்ள அரசுசூழ்தல் நுட்பத்தை மட்டும் அவையினருக்கு சொல்ல விரும்புகிறேன். இளைய யாதவர் மிகச் சிறப்பாக சொல்நகர்த்தி சரியான புள்ளிக்கு கொண்டுவந்துள்ளார். இன்று இந்த அவைக்கு இரண்டு வாய்ப்புகளே உள்ளன. நாம் அங்கநாட்டரசரை வேள்வியவையிலிருந்து வெளியேற்றுவது. அதனூடாக நாம் நம் தரப்பில் வில்லேந்தவிருந்த மாபெரும் வீரர் ஒருவரை இழக்கிறோம்” என்றார்.
அரசர்களிடமிருந்து எழுந்த சொல்லிலா முழக்கத்தை நோக்கி புன்னகையுடன் தலையசைத்துவிட்டு சல்யர் சொன்னார் “அல்லது அவரை அவையமரச் செய்யலாம். அதனூடாக நாம் வேள்விக்காவலுக்கென முன்னோரால் அமைக்கப்பட்ட தொல்குடி ஷத்ரியர்களின் உரிமைக்காக எழுந்துள்ளோம், வேதநெறி மாறாது காக்க உறுதிகொண்டுள்ளோம் என்பதை நாமே மறுக்கிறோம். அதன்பின் ஷத்ரியப் படைக்கூட்டே பொருளில்லாமலாகும். இரண்டில் எதை தெரிவு செய்தாலும் நாம் தோற்றவர்கள், அவர் வென்றவர்.”
அரசர்களிடமிருந்து சினம் வெளிப்படும் மென்முழக்கம் எழுந்தது. சல்யர் “இதில் அங்கர் வெளியேற்றப்பட்டால் நாம் இழப்பது சிறிது. போரில் எந்தத் தனிமனிதனும் இன்றியமையாதவன் அல்ல. பீஷ்மர், துரோணர், அஸ்வத்தாமர், ஜயத்ரதர், துரியோதனர் என்னும் பெருவீரர்கள் நமக்கிருக்கிறார்கள். ஷத்ரியப் பெருவீரர் உடனிருக்கிறார்கள். கரையிலாப் பெரும்படை உள்ளது. நாம் வெல்வோம் என்பதில் ஐயமில்லை. ஆனால் அவரை வேள்விக்கு அமர்த்தினோமென்றால் நம் படை மெல்ல மெல்ல சிதறுவதை நம்மால் தடுக்கவே முடியாது” என்று தொடர்ந்தார்.
“ஏனென்றால் தென்றிசை அரசர்கள் இப்போதே சைந்தவ, சாரஸ்வத, காங்கேய நிலத்தின் தொல்குடி ஷத்ரியர்கள் படைமுதன்மை கொள்வதை எண்ணி கசப்பும் அச்சமும் கொண்டிருக்கிறார்கள். அவர்களிடம் இது வேத உரிமைகொண்ட ஷத்ரியர்களின் படைக்கூட்டு என்னும் சொல்லே நாம் சொல்லும் மறுமொழியாக உள்ளது. அதை மறுத்தால் இக்கூட்டை கட்டியமைத்திருக்கும் சரடு அறுபடுகிறது. பாண்டவர் தரப்பின் மிகப் பெரிய படைக்கலம் இளைய யாதவரின் நாக்கே என்பதில் ஐயம் தேவையில்லை.”
கைகூப்பி தலைவணங்கி சல்யர் அமர்ந்ததும் அரசர்களின் அவையிலிருந்து “ஆம்! மெய்!” என்று குரல்கள் எழுந்தன. “நம் படைக்கூட்டுதான் நம் வல்லமை” என்று தமகோஷர் உரத்த குரலில் சொன்னார். சுபலர் “நாம் நம் ஒற்றுமையை இழந்தோமென்றால் அழிவோம்!” என்றார். “சூதனை வேள்விக்காவலனாக அமரச்செய்தால் பின்னர் ஷத்ரியப் படைக்கூட்டு எதற்கு?” என்றார் சோமதத்தர். காசியப கிருசர் கையமர்த்தி “வெற்றுசொல் வேண்டியதில்லை. சல்யர் தன் தரப்பை சொல்லிவிட்டார்” என்றார்.
அஸ்வத்தாமன் எழுந்து “இளைய யாதவரிடமே நான் கேட்க விழைகிறேன். வேதமுடிபின் மையநிலை குறித்து இங்கே சொல்லெடுத்தீர்கள். அசுரவேதமும் அரக்கவேதமும் நாகவேதமும் பயிலும் குலங்களைத் திரட்டி நீங்கள் அமைத்துள்ள பாண்டவப் படைக்கூட்டும் வேதமுடிபுக் கொள்கையை நிலைநாட்டுவதற்குத்தானா?” என்றான். பல அரசர்கள் அவர்களின் சொற்களே அவ்வாறு ஒலித்தன என உணர்ந்து உள்ளெழுச்சியால் எழுந்துவிட்டனர். பூரிசிரவஸ் “ஆம், நான் கேட்க விழைவது அதுவே” என்றான். ஜயத்ரதன் “முதலில் அதற்கு மறுமொழி சொல்லட்டும் யாதவர். அவரிடம் சொல்லில்லை என்றால் இக்கணமே அவை நீங்கட்டும்” என்றான்.
இளைய யாதவர் இயல்பு மாறா குரலில் “அஸ்வத்தாமரே, நான் அசுரவேதத்தையும் அரக்கவேதத்தையும் நாகவேதத்தையும் பிற நிஷாதவேதங்களையும் அணைத்துக்கொள்வதும் வேதமுடிபை நிறுவுவதன்பொருட்டே” என்றார். ஒருகணம் அச்சொற்கள் புரிபடாமல் அவை திகைத்து அமர்ந்திருந்தது. எங்கோ ஏளனமும் சினமும் கலந்த ஒரு எக்காளச் சிரிப்பு எழுந்ததும் நெய்யனல் என பற்றிக்கொண்டு அவையினர் கொந்தளித்தெழுந்தனர். “அறிவின்மை! ஆணவம்!” என்று அந்தணர் கூச்சலிட்டனர். குண்டர் எழுந்து கைநீட்டி இளைய யாதவரை நோக்கி ஓடிவந்தார். “அவைச்சிறுமை! அவைச்சிறுமை! வேதத்தை இழிவு செய்த இவரை இன்னுமா தாங்கிக்கொண்டிருக்கிறோம்? துணைவரே, வேதியரே, இதைவிட வேதமறுப்பென்று ஒன்று உண்டா என்ன?” என்று கூவினார். குண்டஜடரர் “வேதமறுப்பே வேதமுடிபின் வழி… வேறேது சான்று தேவை?” என்று கூவினார்.
அலையென்றான கைகளுக்குமேல் ததும்பி தத்தளித்தன முகங்கள். வெறுப்பில் ஏளனத்தில் சுளித்தவை, இழுபட்டவை, இளித்தவை. நடுவே இளைய யாதவர் முகம் எவ்வுணர்ச்சியும் இல்லாத புன்னகையுடன் அசைவிலாது நின்றிருந்தது. காசியப கிருசர் கைவீசி “அமர்க, அவர் சொல்வதை சொல்லி முடிக்கட்டும்! அமர்க!” என்று கூச்சலிட்டார். அமூர்த்தரே எழுந்து கைதூக்கி “அமர்க!” என ஓங்கிய குரலில் சொன்னார். களிற்றுப்பிளிறலென ஒலித்த அதர்வம் பயின்ற குரல் அனைவரையும் அக்கணமே வாய்நிலைக்கச் செய்தது. கைகள் தொய்ந்திறங்கின. “அமர்க!” என்றார் அமூர்த்தர். அவர்கள் அமரும் ஓசைகள் நுரைப்படலம் குமிழிகளுடைந்து அழிவதுபோல ஒலித்தது.
காசியப கிருசர் “சொல்லுங்கள், இளைய யாதவரே” என்றார். “அவையோரே, இமயத்திலிருந்து எழுந்ததே கைலை மலைமுடி. ஆனால் புலரிப்பொன்னொளியில் வான்விரிவு அதை தான் எடுத்து மடியில் வைத்திருக்கிறது. வேதமுடிபு வேதமே. ஆனால் முழுமையின் மெய்யொளியில் அது வேதங்களுக்கும் மேல் விண்ணில் எழுந்து நிற்கிறது. வேதங்களை, வேதக்கூறுகளை, துணைவேதங்களை மதிப்பிடும் துலாவின் நடுமுள் அது. அறிவனைத்தும் வேதத்தின் ஒளியால் துலங்குபவை என்கின்றனர் முன்னோர். எனவே மானுட மெய்மை அனைத்தையும் அளவென்றாகி மதிப்பிட்டு, மையமென்றமைந்து தொகுத்து, ஒளியென்றாகி துலக்கி, வானின் ஒலியென்றாகி வழிகாட்டிச் செல்லும் தகைமை கொண்டது வேதமுடிபு” என்றார் இளைய யாதவர்.
“எவ்வண்ணம் வேதமுடிபை அளவையாகக்கொண்டு வேதங்களையும் வேதக்கூறுகளையும் துணைவேதங்களையும் மதிப்பிடுகிறோமோ அவ்வண்ணமே வேதத்தால் ஒளிகொள்ளும் மானுட அறிவனைத்தையும் மதிப்பிடவேண்டும் என்று ஆணையிடுகிறது வேதம். இது வேதத்திற்கு உகந்ததல்ல என்று விலக்கலாமென்றால் அந்நெறிப்படியே இது வேதத்திற்கு உகந்ததே என்று ஏற்கவும் செய்யலாம். ஆசுரம், அரக்கம், நிஷாதம் என்னும் புறக்குடியினரின் வேதங்களிலிருந்தும் யவனம், சோனகம், காப்பிரி என்னும் அயல்குடியினரின் வேதங்களிலிருந்தும் உகந்த அனைத்தையும் அறிந்து, அளந்து, முகந்து தன்னுள் இணைத்து வளர்ந்தெழுவதே வேதமுடிபுக்கொள்கை. அவ்வண்ணமே அது உலகாளமுடியும்.”
“அறிக, ஒரு நாள் வரும். அன்று வேதமுடிபு உலகெலாம் காண எழுந்து நிற்கும். அனலென்றாகி உலகமெய்மைகள் அனைத்தையும் உருக்கி மாசகற்றி ஒளியூட்டி ஒன்றென்றாக்கும். அந்தணரே, பிரித்தகற்றுவதல்ல அதன் நெறி, ஒருங்கிணைப்பதே. வெல்வதல்ல, தழுவுவதே. ஆள்வதல்ல, அனைத்துமாவதே. வேதமுடிபால் தனதல்ல என்று ஒதுக்கப்படும் ஒன்றும் இங்கு இல்லை. நன்றுதீதுக்கு அப்பால் நின்றிருப்பது அது. தானேயாம் என்று தழுவி அமர்ந்து முழுமைகொள்வது. அந்நெறியை யோகம் என்றது என் குருமரபு. அச்சொல்லை இங்கு முன்வைக்கவே அவையெழுந்தேன். யோகத்திலமர்ந்து நான் என்று ஒற்றைச்சொல்லில் உலகே தன்னை உணரும் ஒருநாள். அன்றுதான் முழுதும் வென்றது வேதமுடிபென்று முந்தை முனிவரிடம் சொல்லவியலும் மானுடம்.”
“அதன் தொடக்கத்தை இங்கு நிகழ்த்தவே வந்தேன். முதலில் நாற்றங்காலில் இருந்து அதை பிடுங்கி நடுவோம். கழனிகள் விரிந்துள்ளன பாரதவர்ஷத்தில். கரட்டுநிலங்களும் காடும் விரிந்துள்ளன உலகமெங்கும். இனி இந்நிலத்தில் வேதங்கள் தங்களுக்குள் போரிடா. இனி இங்கு நிகழ்வது முரண்களின் யோகம் மட்டுமே. பல்லாயிரம் கிளைப்பிரிவுகளுக்கு அடியில் தழுவி ஒன்றாகுக வேர்கள்! உங்கள் சொற்கள் ஒன்றாகுக என்று ஆணையிட்ட வேதத்திற்கு ஆமென்று மறுமொழியுரைக்கும் தருணம் எழுந்துள்ளது இன்று” என்றார் இளைய யாதவர்.
பின்னர் சற்று மாறுபட்ட குரலில் “ஆம், இனி வேதப் போரில்லை, அரசர்களே. உண்டென்றால் அதுவே இறுதிப்போர். அதில் வேதமுடிபே வெல்லும். ஏனென்றால் மெய்மை வென்றாகவேண்டும் என்னும் நெறியை முதற்கண்ணியென்று கொண்டே இப்புடவியை முடைந்திருக்கிறான் பிரம்மன். அப்போர் நிகழுமென்றால் எதிர்த்தரப்பை முற்றழித்து அது நின்றிருந்த இடமொன்றே எஞ்ச கடந்துசெல்லும் வேதமுடிபு. அவ்வழிவை விழிமுன் காண்கிறேன். அறிக, ஆக்கத்திற்கு முந்தைய அழிவே கொடியது. உழுகையில் அழிபவை வேட்டையில் இறப்பவற்றைவிட பலமடங்கு. இதற்கப்பால் அரசரிடம் நான் சொல்ல பிறிதொன்றுமில்லை” என்றார்.
மறுசொல் நாடி அனைவரும் கௌதம சிரகாரியை நோக்க அவர் “யாதவரே, அவ்வண்ணம் உலக வேதங்கள் அனைத்தையும் ஒருங்கிணைக்கும் வேதமுடிபு தன் முதல் வேதமென்று நால்வேதத்தை கொள்ளுமா?” என்றார். “தன் வேதம் இதுமட்டுமே என்று கொள்ளுகையில் குடியில், நிலத்தில், மொழியில் தன்னை நிறுத்திக்கொள்கிறது வேதமுடிபு. ஏனென்றால் வேதம் குடியில், நிலத்தில், மொழியில் மட்டுமே அமையமுடியும். அது செவிக்கும் செயலுக்கும் சிக்குவது. வேதமுடிபோ சித்தத்திலிருந்து முடிவின்மை நோக்கி எழும் நுண்மை. அது நிலம் கடந்து குலம் கடந்து சொல் கடந்து மட்டுமே நின்றிருக்கவியலும்” என்றார் இளைய யாதவர்.
கௌதம சிரகாரி “அவ்வண்ணமென்றால் நீங்கள் மானுட குலத்திற்குமேல் நால்வேதத்தின் முதன்மையை மறுக்கிறீர்களா?” என்றார். “ஆம்” என்றார் இளைய யாதவர். “தொல்முனிவர் யாத்து வியாசர் தொகுத்த நால்வேதம் இந்நிலத்திற்கும் இம்மொழிக்கும் இங்குள குலங்களுக்குமானது. விரிந்துளது உலகு. ஒருநாள் துவாரகையின் கடல்முகத்தில் நின்று நோக்குக! மனிதமுகங்களின் முடிவிலா வடிவுகளில் எழுகின்றன நிலவிரிவுகள், குலத்தொகைகள். வேதமெனக் கனிந்து இங்கு இறங்கியது அங்கும் வந்தமைந்திருக்கும். அந்தணரே, அங்கு மாரி பெய்கிறது என்பதே வேதமும் பொழிந்திருக்கும் என்பதற்கான சான்று. அவை வேதங்கள் என்றால் இவ்வேதம் கொண்ட மெய்மையே அவற்றிலும் அமைந்திருக்கும். இவையனைத்தும் வேதங்கள் என்றால் ஒன்றையே உரைத்து நின்றிருக்கும்.”
“வேதியரே, முனிவரே, அந்த ஒன்றெனத் திரள்வதே வேதமுடிபு. இங்கு இவ்வேதத்தில் திரண்டெழுந்தது அது என்பதனாலேயே அனைத்திலும் அதுவே உறைகிறது என்று உறுதிகொண்டிருக்கிறேன். மொழிகற்று நூலாய்ந்து நான் கண்டடைந்தது இது. இங்கிருக்கும் எவருக்கும் மீதாக எழுந்து நின்று காலநெடுந்தொலைவை நோக்கி கண்செலுத்தி இதை சொல்கிறேன், ஒன்றே மெய்!” என்றார் இளைய யாதவர். “ஒன்றே யாம்! அவ்வொன்றே இவையனைத்தும்.” வலக்கையைத் தூக்கி ஓங்கிய குரலில் அவர் சொன்னார் “எவர் அதை எவ்வண்ணம் வேண்டுகிறார்களோ அவர்களை அது அவ்வண்ணம் சார்கிறது. அந்தணரே, மானுடர் எங்கும் அதன் வழியை மட்டுமே தொடர்கிறார்கள்.”
சுப்ரியை மீண்டும் மெய்ப்புகொண்டாள். அவள் கால்கள் உதறித்துடித்தன. முதல்முறையாக மகப்பேற்றின் வலியின்போதுதான் அத்தகைய உடல்துடிப்பை அவள் அடைந்தாள். தன்னுடலில் பிறிதொரு உயிர் எழுந்து துடிப்பதை. விடுபட்டெழ வெம்புவதை. கூடவே அங்கிருந்து எழுந்து சென்றுவிடவேண்டும் என்ற துடிப்பும் எழுந்தது ஏன் என அவள் ஆழம் வியந்தது.
“அவையோரே, இங்கு நின்று என் நெஞ்சைத்தொட்டு ஐயமின்றி சொல்கிறேன், அறிக, நானேயிறை!” என்றார் இளைய யாதவர். “காலந்தோறும் நான் பிறந்தெழுவேன். களந்தோறும் முகம் கொள்வேன். நிலந்தோறும் சொல்சூடுவேன். இங்குள மெய்மையெல்லாம் ஒன்றே என்றும் ஒன்றென்றானதே நான் என்றும் எங்கும் நின்றுரைப்பேன். அறுபடா மாலையின் முடிவிலா மணிகள் என காலந்தோறும் நான் எழுந்துகொண்டே இருப்பேன். வாளேந்துவேன். சொல்சூழ்வேன். ஊழ்கத்திலமர்வேன். ஒருபோதும் ஒழியமாட்டேன். உலகெங்கும் என் சொல் நிலைகொள்ளும். இக்கணம் அதை சான்றுரைக்கட்டும். ஆம், அவ்வாறே ஆகுக!”
சுப்ரியை அவையினர் முகங்களை மாறிமாறி நோக்கினாள். அவர்களில் முழு மூடர்களெனத் தெரிந்தவர்கள்கூட தங்கள் விழிகளைக் கடந்த ஒன்றைக் கண்டவர்கள்போல திகைப்பு கொண்டிருந்தனர். கௌதம சிரகாரி அந்த அமைதியில் மெல்ல கைகூப்பியபடி எழுந்தார். “யாதவரே, தாங்கள் எவர் என்று என் உள்ளம் ஒருகணம் திகைத்தது. பிறிதெங்கோ இருந்து இங்கு மீண்டுவந்தேன். என்னை மீண்டும் சொல் சொல்லென தொகுத்துக்கொண்டேன். என் ஆசிரியமரபு எனக்களித்த ஆணையை அவையுரைப்பது என் கடன் என உணர்ந்தேன். பிறிதெதுவாகவும் என்னை வகுத்துக்கொள்ள இப்பிறவியில் எனக்கு உரிமையில்லை. ஆகவே இதை மீண்டும் இந்த அவையில் முன்வைக்கிறேன்.”
“முன்பு பிரம்மன் வேதச்சொல்லுடன் உயிர்க்குலத்தை ஒருமிக்கப் படைத்து இட்ட ஆணை என்ன என்று தொல்நூல் சொல்கிறதென்று அறிந்திருப்பீர்கள். இச்சொல்லால் பல்குவீர்கள், நீங்கள் விரும்புவன அனைத்தையும் இது உங்களுக்கு அருளும் என்றது அது” என்றார் கௌதம சிரகாரி. “உளமொன்றி இயற்றப்படும் அனைத்துச் செயல்களும் வேள்விகளே. வேள்வி பிரம்மத்திலிருந்து பிறந்தது. பிரம்மம் அமுதத்திலிருந்து. ஆகவே அனைத்துமான அது வேள்வியில் நிலைகொள்கிறது. யாதவரே, வேள்விகளுக்காவது புவியெங்கும் ஒருமையென ஒன்றுண்டு என்று ஏற்கிறீர்களா?”
இளைய யாதவர் “முனிவரே, இந்த அவையில் நீங்கள் உரைத்தீர்கள், திரளென அமைந்து காலப்பெருக்கினூடாக மெய்மையைச் சென்றடைய உன்னுகிறீர்கள் என்று. அத்திரளென்பது உங்கள் குலமென்றும் நாடென்றும் ஏன் அமையவேண்டும்? பாரதவர்ஷமென்று ஏன் வகுத்துக்கொள்ளவேண்டும்? இப்புவியென்று ஏன் ஆகக்கூடாது? புவியொரு பெருந்திரள் எனச் சென்றடையும் முழுநிலை ஒன்று இருக்கலாகாதா என்ன? வேள்விச்செயல் அங்கு சென்றடையலாகாதா?” என்றார். “குலமெங்கும் வேள்விகள் நிகழ்கின்றன. நிலம்தோறும் வேள்விகளின் இயல்பு மாறுகிறது. மெய்யறிதல்கள் ஒன்றென்று ஆகலாமென்றால் ஏன் வேள்விகள் திரண்டு பொதுமை கொள்ளலாகாது?”
“அது இயல்வதே என்று வேள்வியின் மையமென்ன என்று அறிந்தவர் கூறக்கூடும், அந்தணரே. எது வேள்வி எது அல்ல என்று வகுக்கும் மையமென வேதமெய்மை நிலைகொள்ளுமென்றால் அவ்வளவையுடன் உலகுநோக்கி உங்கள் விழி விரியக்கூடும். எது வேள்வியல்ல என்ற நோக்குடன் இன்று அனைத்தையும் அணுகுகிறீர்கள். எது வேள்வி என்ற நோக்குடன் அணுகுக! உலகு உங்களைச் சூழ்வதை காண்பீர்கள்.” கௌதம சிரகாரி உறுதியான குரலில் “மீண்டும் இந்த அவையில் நான் சொல்வது ஒன்றே. யாதவரே, மாறாததே சடங்கு எனப்படும்” என்றார்.
இளைய யாதவர் “அல்ல, மாறாச் சடங்கென்று இப்புவியில் ஏதுமில்லை. சடங்கு என எழுந்த மெய்மையே மாறாமலிருக்கவேண்டும். சடங்கு அம்மெய்மையை தன்னில் கொள்ளவும் உலகுக்கு அளிக்கவும் மாறிக்கொண்டே இருந்தாகவேண்டும்” என்றார். “அந்தணரே, இவ்வண்ணம் கொள்க! சடங்கு ஆய்ச்சி, மெய்மை அவள் தலையிலமர்ந்த நெய்க்குடம். அதை நிலைநிறுத்தி கொண்டுசெல்லும்பொருட்டே அவள் உடலில் எழுகின்றன அனைத்து அசைவுகளும். உடல் உலைந்தாடுகையிலும் அசையாமலிருக்கிறது அவள் தலைச்சுமை. அசைவன அனைத்தும் அசைவின்மை பொருட்டே நிகழ்கின்றன அவளில். செயலில் செயலின்மையும் செயலின்மையில் செயலையும் காண்பவரே மெய்யறிந்தோர் என்க!”
“ஆகவேதான் வேள்வியைவிட ஞானம் சிறந்தது எனப்படுகிறது. ஏனென்றால் அனைத்துச் செயலும் ஞானத்தின்பொருட்டே. அனைத்துச் செயல்களையும் தன் ஊர்திகளெனக் கொண்டு காலத்தில் முன்செல்லும் மெய்மையே முதற்பொருள். இன்று இந்த அவையில் எல்லைகட்டி சடங்குகளை நிறுத்த விரும்பும் அளவைநெறியினருக்கு ஒன்று உரைப்பேன். வருங்காலத்தில் உங்கள் வேள்விகள் உருமாறும். நீங்கள் அருகணையும் குலங்களின் வேள்விகளும் வழிபாடுகளும் உங்களால் கொள்ளப்படும். உங்கள் சடங்குநூல்கள் காலந்தோறும் உருகி உருவழிந்து புதுவடிவு கொள்ளும். உங்கள் உள்ளத்தில் இறுகி நின்றிருக்கும் நம்பிக்கைகளின் நெடுங்கோட்டையை உடைத்தே அது நிகழவேண்டுமென்பது ஊழ் என்றால் அவ்வாறே ஆகுக!” என்றார் இளைய யாதவர்.
“அந்தணரே, அன்று செய்வதை இன்றே மேலெழுந்து காணுங்கள். இன்றின் எல்லையை கடந்தீர்கள் என்றால் இன்றெனச் சூழ்ந்திருக்கும் இம்மக்கள்திரளை, இப்புரங்களை, செல்வங்களை நாளை என எழுவது நொறுக்கியழிக்கும் பேரழிவை தடுத்தவர்களாவீர்கள். உங்களுக்கு முன் அளிக்கப்படும் பெருவாய்ப்பு இது என்று கொள்க! நீங்கள் இயற்றவேண்டியது மிக எளிது. உங்கள் கால் பழகிய பாதையிலிருந்து விலகி ஓர் அடி எடுத்து வையுங்கள். ஆசைகொண்டோ அஞ்சிப்பதறியோ விழிமயங்கி வழிபிறழ்ந்தோ வைக்கும் பிழையடி அல்ல இது. உங்கள் உள்ளத்திலுள்ள இலக்கை நோக்கி எண்ணி முடிவெடுத்து வைக்கும் நல்லடி.”
“நிகழ்காலத்தைக் காணவே ஊன்விழிகளால் இயலும். அந்தணரே, கல்வியால், ஞானத்தால், நுண்ணுணர்வால் திறக்கும் அகவிழிகள் எதிர்காலத்தை காணவேண்டும். அகவிழி திறந்த முனிவர் ஒருவரேனும் இந்த அவையிலெழுக! உங்கள் மாணவர்களுக்கு மெய்வழி காட்டுக! தலைக்குமேல் பெருவெள்ளம் எழுகையில் உங்கள் தனிக் கிணறுகளால் என்ன பயன்? முனிவர்களே, காலச்சரடு இத்தருணத்திலொரு முடிச்சிட்டுக் கொண்டிருக்கிறது. நம் மெய்மையால் அதை மெல்ல அவிழ்த்தெடுப்போம். இல்லையேல் வெட்டி அறுத்தெறியும் இரக்கமில்லாத வாள் ஒன்று உள்ளது என்று உணர்க! அதற்குரிய இறுதித் தருணம் இது. இதை தவறவிடவேண்டாம்.”
இளைய யாதவரின் குரல் தணிந்தது. “கடல்பெருகி எழுந்தாலும் நிலைபெயரா மலைமுடியென என்னை நிறுத்தும் கலை பயின்றவன் நான். ஆவன அனைத்தும் அறிவேன். ஆயினும் எண்ணிநோக்குகையில் திடுக்கிட்டு எழுந்தமர்ந்து விழிநீர் உகுத்திருக்கிறேன். கணம் கோடி உயிர்கள் மாயும் இம்மாயப் பெருவெளிக்கு மக்கட்பெருந்திரள் என்பது திரண்டதுமே அழியும் சிறுகுமிழி என்றறிந்தும் உளம் பதறுகிறேன். தந்தையென்று நின்று ஆம் என்கிறேன், தாயென்று உணர்ந்து இல்லை என்கிறேன். நானே கள்வனும் காவலனும் என்று உணர்கிறேன். ஆரா அளிகொள்கிறேன், அணையாச் சினம்கொள்கிறேன். கணம் ஓயா இரு நிலை கொண்டு ஊசலாகிறேன்.”
அவர் குரல் துயர்கொண்டு உடைந்தது. “என் மைந்தரே, இங்கு உங்கள் அனைவருக்கும் முலையூட்டி மடிபரப்பிய மூதன்னை என நின்று கோருகிறேன். விரிக, சற்றே விரிக! உங்கள் கைகள் பற்றியிருப்பதை ஒருமுறை விடுக! உங்கள் கால்கள் அணுவிடையேனும் மண்ணிலிருந்து எழுக! இக்கணத்தை வெல்லுங்கள். நின்று நலம்பெருகுக! உங்கள் குலங்கள் நீடூழி வாழ்க! உங்கள் இல்லங்களில் உவகையும் களஞ்சியங்களில் அன்னமும் பெருகுக! நிரைவகுத்து காட்டெரி நோக்கிச் செல்லும் எறும்புகளே, மெய்யென்று ஒன்று மிக அருகில் நின்றிருக்கிறது. தெரிந்தவற்றிலிருந்து உளம் விடுத்து தெரியவேண்டியதை ஒருகணம் நோக்குக!”
இளைய யாதவரின் விழிகளில் இருந்து நீர் பெருகி கன்னங்களில் வழிந்தது. உதடுகள் துடிக்க கைகூப்பி தலைவணங்கி நின்றார். சுப்ரியை நம்பமுடியாமல் விழிகள் விரிந்து நிற்க உடையப்போகும் நீர்க்குமிழி என உடல் விம்ம அவரை நோக்கிக்கொண்டு அமர்ந்திருந்தாள்.
கௌதம சிரகாரி மீண்டும் எழுந்து “இனியொன்றும் எங்களுக்கும் சொல்வதற்கில்லை, யாதவரே. இது வேர்கள் விண்ணிலெழுந்ததும் கிளைகள் மண்ணில் பரந்ததுமான பெருமரம் என்கின்றன நூல்கள். வேர் எண்ணாத எதையும் கிளைகள் இயற்றவியலாது. இலைகளின் ஒவ்வொரு அசைவும் விண்ணிலிருந்து வேர்கள் கொண்ட நீரால் வகுக்கப்பட்டுள்ளன. இது எங்களுக்கு அப்பாற்பட்டது. எங்கள் அறிவு இதனால் கொளுத்தப்படும் சுடர் என்று அல்ல, இதன்மேல் படியும் மாசு என்றே நாங்கள் உணர்கிறோம். குன்றாது குறையாது கையளித்தல் அன்றி நாங்கள் இதில் இயற்றுவதற்கொன்றுமில்லை” என்றார்.
பின்னர் அவைநோக்கி திரும்பி “அந்தணரே, முனிவர்களே, வேதத்தால் அனல்கொண்டு வேதத்தை விளக்கவல்லோம் என்பவர்கள் வேதமுடிபின் கொள்கையை ஏற்று அவையெழுந்து தங்கள் சொல்லை உரையுங்கள். நம் முகங்கள் என, நம் உடல்தோற்றம் என, இது நமக்கு அளிக்கப்பட்டது, நம்மால் அளிக்கப்படுவது என எண்ணுபவர்கள் என்னுடன் சேர்ந்து சொல்லளியுங்கள். இந்த அவையின் எண்ணம் உணர்ந்தபின் வேள்வித்தலைவர் முடிவெடுக்கட்டும்” என்றார்.
காசியப கிருசர் “அவை தன் எண்ணத்தை அறிவிக்க வேண்டும்” என்றார். “இங்கே அவையிலெழுந்து மாற்றுச்சொல் உரைத்தவர் இளைய யாதவர் என்பதனால் அவருடன் உடன்படுவோர் எழுந்து தங்கள் சொல்லை அளிக்கலாம்.” அவர் அவையை சூழ நோக்க அந்தணரும் முனிவரும் அசைவில்லாது அமர்ந்திருந்தனர். மீண்டும் மீண்டும் அவர் விழிகள் அவையில் உலவுவதை ஒலியென்றே உணரமுடியுமென்று தோன்றியது. “எவருமில்லையா?” என்றார் காசியப கிருசர். “அவையினரே, இங்கு எவருமில்லையா?” இளைய யாதவர் எவரையும் நோக்காமல் நிலத்தில் விழிநிலைத்து நின்றிருந்தார். காசியப கிருசர் “மூன்றாம் முறை இது, எவருமில்லையா?” என்றார். மீண்டுமொருமுறை அவையை சூழ நோக்கிவிட்டு அமூர்த்தரிடம் “அவையெழுந்த எதிர்ச்சொல்லை ஆதரிக்க எவருமில்லை, வேள்வித்தலைவரே” என்றார்.
குண்டஜடரர் உரக்க “நன்று, தன்னை வேதரிஷி என எண்ணும் எவரும் நம்மிடையே இல்லை என்று ஆறுதல்கொள்வோம்” என்றார். குண்டர் உரக்க நகைக்க அவையில் எவரும் அவருடன் இணைந்துகொள்ளவில்லை. “அவையினரே, கௌதம சிரகாரி முன்வைத்த சொற்களை ஆதரிப்போர் எவர்?” என்றார் காசியப கிருசர். அதற்கும் அவையிலிருந்து எக்குரலும் எழவில்லை. “சொல்க, அதை ஆதரிப்போர் எவர்?” என்றார் காசியப கிருசர். அவையிலிருந்து சங்குக்கார்வை கேட்டுக்கொண்டிருந்தது. காசியப கிருசர் “கௌதம சிரகாரி சொல்லை இந்த அவை ஏற்கிறதென்றால் இணைந்து ஓங்காரம் எழுப்புக” என்றார்.
மிகத் தொலைவில் இருந்து காற்று அணுகிவருவதுபோல எவரோ சொன்ன ஓங்காரம் கேட்டது. பெருகிப்பெருகி அது அவையை மூடி எழுந்து வேள்விச்சாலையின் வெளியை நிறைத்தது. செவிபுகுந்து உடலுக்குள் நிறைந்து விம்மச்செய்தது. உடல் ஒரு சங்கென ஆனதுபோல. போதும் போதும் என அகத்துளி தவித்தது. கௌதம சிரகாரி கைகூப்பி தலைவணங்கினார். காசியப கிருசர் கை தூக்கியதும் அலைசுருண்டு தன் அடியிலேயே தான் மடிவதுபோல அவ்வொலி அமைந்தது. காசியப கிருசர் “வேள்வித்தலைவரே, இந்த அவையின் முடிவை அறிந்துகொள்க!” என்றார்.
அமூர்த்தர் “வேள்வியவை கூடி எடுத்த முடிவை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். இந்த அவையில் வேள்விக்காவலருக்குத் துணைவராக அமரும் தகுதி அங்கருக்கில்லை. ஏழு தலைமுறைக் குருதிநிரை சொல்லத்தக்கவரும், ஐவகைப் பெருவேள்விகளை இயற்றி ஷத்ரியர் என அறிவித்துக்கொண்டவரும், பிற ஷத்ரியர்களால் அவையில் ஏற்றுக்கொள்ளப்பட்டவரும் மட்டுமே வேள்வியில் காவலர் என வாள்கொண்டு அமர முடியும். இதை வேள்வித்தலைவர் என அறிவிக்கிறேன்” என்றார்.
கர்ணன் தலைவணங்கி திரும்பிச் சென்றான். அவன் செல்வதை அவையினர் அனைவரும் சொல்லின்றி நோக்கி அமர்ந்திருந்தனர். எங்கோ ஓர் இளிவரல் ஒலிக்க, எவரோ மெல்ல சிரித்தனர். கர்ணன் வேள்விச்சாலையில் இருந்து வெளியே சென்று விழிக்கு மறைந்ததும் அவையெங்கும் உடல்கள் இயல்புநிலை மீளும் அசைவுகள் பரவின. சுப்ரியையின் அருகே வந்த சேடி தணிந்து “தாங்கள் அவையொழிகிறீர்களல்லவா, அரசி?” என்றாள். அவள் திரும்பி இளைய யாதவரை நோக்கினாள். சந்தையை நோக்கும் இளமைந்தனின் நோக்கு என விழி மலர்ந்து அவர் அமர்ந்திருந்தார். “இல்லை, நான் இருக்கிறேன்” என்று சுப்ரியை சொன்னாள்.