பகுதி பத்து : பெருங்கொடை – 14
இளைய யாதவர் மேலும் சொல்லெடுப்பதற்குள் அவையிலிருந்த மெலிந்த உருக்கொண்ட மிக இளைய வைதிகன் ஒருவன் எழுந்து உளவிசையால் உடல் விதிர்க்க, உதடுகள் துடிக்க “அவையினரே, வேதியரே” என்றான். சொல்லுக்கென எழுந்த அவன் கை காற்றில் நின்று நடுங்கியது. அவையினர் அவனை நோக்கி திரும்பினர். “அந்தணரே, அனலோம்புவதென்றால் அடுப்பூதும் குழல் சிறந்த அந்தணன், வேதமோதுவதென்றால் தவளையே முதன்மை வைதிகன் என்கிறார்கள் சார்வாகர்கள். இந்த அவையில் மூத்த வைதிகரும் முனிவரும் சொல்வது பிறிதொன்றல்ல” என்று அவன் உரத்தகுரலில் சொன்னான்.
“பன்னிரு ஆண்டுகளாக நான் வசிட்டமரபின் குருநிலையில் வேதம் பயில்கிறேன். நசுங்கிய குழலும், உயிரோய்ந்த தவளையும் என என்னை நான் ஆக்கிக்கொண்டேன். இந்த அவையில் அதை மெய்மையின் வழி என்று சொல்கிறீர்கள். சொல்லுங்கள், அந்த வழி உங்களுக்கு அளித்தது என்ன?” அந்தணர்அவை கலைவோசை எழுப்பியது. அவன் “நான் எதையும் அடையவில்லை. ஒழிந்தகலம் நான். எய்யப்படாது இறுகி நின்றிருக்கும் அம்பு. சொல்க, நான் அடைந்தது என்ன?”
“நீ எதுவாக ஆனாயோ அதை” என்று சினத்துடன் வசிட்ட குந்ததந்தர் சொன்னார். “சொல், உன் பெயர் என்ன? உன் ஆசிரியர் யார்?” அவன் “வசிட்ட குருமரபின் வைதிகர் பிரதர்தனரின் மாணவனாகிய என் பெயர் த்வன்யன். நான் இந்த அவையிலிருக்கும் வைதிகர் அனைவரிடமும் கேட்கவிழைவது இதுவே. அறியாது சொல்லும் வேதத்தால் ஆவதென்ன? இங்குள்ள எவருடைய வாழ்க்கை சற்றேனும் மேம்பட்டுள்ளது? அருவி ஓடித் தேயும் மலைப்பாறை என அன்றாடச் செயலால் நாம் வடிவம் கொண்டிருக்கிறோம் என்பதன்றி நமக்கு அது அளித்தது என்ன?”
வசிட்ட குந்ததந்தர் திகைப்புடன் தன்னைச் சுற்றி நோக்க அவை அமைதியாக இருப்பதை கண்டார். த்வன்யன் மேலும் உரத்த குரலில் கூவியபடி அவையின் மையம் நோக்கி வந்தான். “வேதத்தைக் கண்டடைந்தவர்கள் எண்ணியது இதுவா? எனில் ஏன் வேதம் பொருள்கொண்ட சொல்லாலால் அமைந்தது? ஓதுவதற்கு மட்டுமே என்றால் வெற்றொலிகள் போதுமே? உணராச்சொல் வெற்றொலி அல்ல தோழர்களே, அது கைவிடப்பட்ட தெய்வம். நாம் வேதத்திலிருந்து இந்த வீண்செயல்களால் விலக்கப்பட்டிருக்கிறோம். இதைக் கடக்காமல் நாம் அடைவது ஏதுமில்லை…” அழுகையும் மூச்சுத்திணறலுமாக உடைந்த குரலில் அவன் கூவினான். “எழுக, நம் தோள்மீது ஏற்றப்பட்டுள்ள இந்தப் பாறைகளை வீசிவிட்டு எழுக! நாம் சென்றடையவேண்டிய பாதை நெடுந்தொலைவு. நாம் அடையக்கூடுவது வானளவு.”
“இளையோனே, இவ்வெண்ணம் வந்ததுமே நீ அளவைநெறியிலிருந்து விலகிவிட்டாய். இனி நீ செல்லுமிடம் வேதமுடிபுநெறியே” என்றார் வசிட்ட குந்ததந்தர். “ஆனால் அறிக, அங்கு சென்று வேறுவகை சுமைகளைத் தூக்கி தோளில் வைத்துக்கொள்வாய். சொல்கற்பாய், ஒவ்வொரு சொல்லும் பிறிதொன்றுடன் முரண்படுவதைக் காணும் எல்லைவரை செல்வாய். உன்னுள் இருந்து சொல்லுக்குப் பொருள்கொள்வது உள்ளமல்ல, சித்தமல்ல, ஆணவமே என்று உணர்வாயானால் அமர்ந்திருக்கும் கிளையொடிந்து மண்ணுக்கு வருவாய். மீண்டும் இங்கேயே திரும்பி அணைவாய்.”
“கேட்டுப்பார், இங்கிருப்பவர்களிடம்! வேதமுடிபிலிருந்து திரும்பி வந்தவர்கள் இங்கே எத்தனைபேர் என்று…” என்றார் வசிட்ட குந்ததந்தர். த்வன்யன் திரும்பி நோக்க ஏராளமானவர்கள் “நாங்கள்! நாங்கள்!” என கைதூக்கினர். “நீ இன்னமும் சிறுவன். பன்னிரு ஆண்டுகளில் நீ வேதக்கல்வியின் பொருளின்மையை உணர்ந்தாய். நன்று, முப்பத்தாறாண்டுகளாகும் நீ வேதச்சொல்லுசாவலின் பொருளின்மையை உணர. உன் குருதி வற்றவேண்டும். நான் நான் என உன்னை எண்ணவைக்கும் இளமை அவியவேண்டும். உலகைவெல்ல எழும் காமமும் ஆணவமும் உன்னை கைவிடவேண்டும். அது நிகழ்க!” என்றார் வசிட்ட குந்ததந்தர்.
“அறிக, அங்குசெல்பவர்களில் பெரும்பாலானவர்கள் முதிரா இளையோர். இங்கு மீள்பவர்களில் பெரும்பாலானவர்கள் அறிந்தவிந்த முதியோர். அதுவே எது நிலையான மெய் என்பதற்கான சான்று” என்றார் கௌதம சிரகாரி. முதிய வைதிகர்கள் பலர் உரக்க நகைத்தனர். அவர்கள் ஒருவரோடொருவர் உதிரி வரிகளைச் சொல்லி நகையாடிய ஓசையெழ கிருசர் கைகாட்டி அவர்களை அமைதிப்படுத்தினார். கௌதம சிரகாரி “எதையும் பெறாதவன் எங்கும் பெறுவதில்லை, இளையோனே” என்றார். “இங்கு ஐயத்துடன் செயலாற்றினாய். எதையும் ஈட்டாமல் அங்கு செல்கிறாய். அங்கு ஐயத்துடன் சொல்லுசாவினால் எதையும் ஈட்டாமல் எஞ்சுவாய். அது நிகழாதொழிக!” வைதிகர் உரக்க நகைத்தனர்.
த்வன்யன் “ஆம், என் இளமையின் விசையால் நான் இதை கேட்கலாம். என் பிழையே இவையென்றுமிருக்கலாம். ஆனால் ஒன்றையே ஆற்றி, ஒன்றில் அமைந்து, ஓடைக்கரைப் பாறையென பாசிபற்றுவதற்கா மானுட உள்ளம் படைக்கப்பட்டது? இங்கு எனைச் சூழ்ந்திருக்கும் வைதிகர்களை பார்க்கிறேன். பழகுந்தோறும் ஆட்டுக்கல் ஓசையற்ற மென்மை கொள்கிறது. மேலும் பழகும்போது தேய்ந்து ஓசையிடத் தொடங்குகிறது. இவர்களின் நெடுங்கால வேதச்செயல் கற்றசொல் தேய்ந்து வெற்றொலி என்றாவதற்கே உதவியுள்ளது. பொருளின்மை என்று அன்றி அதை எவ்வகையிலும் எவரும் உரைக்கவியலாது” என்றான்.
வைதிகர்கள் பலர் கைநீட்டி கூச்சலிட்டபடி எழ கிருசர் “அமைதி… இந்த அவையில் சொல்லிட அனைவருக்கும் முற்றுரிமை உண்டு. அமர்க, அந்தணரே! அமர்க, வைதிகர்களே!” என்றார். அவர்கள் மூச்சிரைக்க சினச்சொல் எஞ்சியிருக்கும் இதழ்களும் விழிகளுமாக அமர்ந்தனர். கௌதம சிரகாரி ‘இளையோனே, வேள்வி என்பது நாவைப் பழக்குதல் அல்ல, நெஞ்சைப் பழக்குதல் என்று அறிக! சொல்திருந்துவதல்ல அதன் நோக்கம். கனவுகள் திருந்துவதே. ஒருநாளில் அது அமைவதில்லை. முட்டை உடைத்தெழுந்த வாத்துக்குஞ்சுகள் அன்னையைத் தொடர்வதுபோல, அகிடிருக்கும் இடம் பிறந்ததுமே கன்றுக்குத் தெரிவதுபோல குருதியில் ஊறிப் படியவேண்டும் வேதம். அதன்பொருட்டே வேதமோதல் நிகழ்கிறது” என்றார்.
“வேதமுடிபு தனியொருவரின் மீட்பை நோக்கி பேசுகிறது. ஒருவர் அடைந்த மீட்பை அவர் பகிர முடியாது, விட்டுச்செல்ல இயலாது. பிறர் அறியாமல் அவரில் எழுந்து அவரில் மறையும் முழுமை அது. ஊமையன் கண்ட கனவு என அதை அளவைநெறியர் சிலர் சொல்வதுண்டு, நான் அதை ஏற்பதில்லை. அது நாம் அறியாத பிறிதொன்று. அளவைநெறியினர் அறிந்து வகுத்த வேதமுடிபு என்ன என்று கொண்டுதான் நான் இங்கு மறுப்பு உரைக்கிறேன். இந்த அவைக்காக, இத்தருணத்திற்காக” என்று கௌதம சிரகாரி தொடர்ந்தார்.
“அளவைநெறி இரண்டு அறிதல்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது. மெய்மை என்பது ஒரு தனிமானுடனின் உள்ளத்தால் அள்ளப்படக்கூடியது அல்ல. ஏனென்றால் உள்ளமென்பது மொழியால் ஆனது. மொழி என்பது எல்லைகொண்டது. எந்த அறிதலும் மொழியென்றானதுமே சிறுத்து ஒரு கருத்தென்று மட்டுமே ஆகிவிடுகிறது. கருத்தென அமைவது எதுவும் மறுகருத்தும் எதிர்கருத்தும் கொண்டது. ஆனால் மாற்றும் நீட்சியும் இல்லாததே மெய்மையென்றாக முடியும். ஆகவே தனியொருவரின் உள்மொழியில் முழுமைநிகழ்வது இயல்வதல்ல என்பது அளவைநூல்களின் முதல்அறிதல்.”
“இரண்டாவது அறிதல் உள்ளமும் எண்ணமும் உடலின் ஓர் உறுப்பே என்பது. அவையோரே, கருக்கொண்டு உருவுசமைத்து ஈன்றெடுக்க உடல் அறிந்திருக்கின்றது. அன்னைப்பறவை குஞ்சுகளை என கட்டைவிரல் பிற விரல்களை அறிகிறது. உணவை எரித்து உயிரென்று ஆக்கும் மெய்மையை உடல் பயிலாமல் அறிந்திருக்கிறது. ஆக்கலும் புரத்தலும் அழித்தலும் நிகழ்கின்றன உடலில். நம் உள்ளமும் சித்தமும் அறிந்த அனைத்தையும்விட எண்ணிறந்த மடங்கு நம் உடலுக்குத்தெரியும்.”
“உடலால் கற்பதே அளவைநெறியின் செயல்களால் நிகழ்கிறது என்கின்றன நூல்கள். ஐம்புலன்களாலும் உள்ளத்தாலும் சித்தத்தாலும் ஆற்றப்படவேண்டியவை வேள்வி முதற்றாய செயல்கள். அவை நம்மை பயிற்றுகின்றன” என கௌதம சிரகாரி தொடர்ந்தார். “செயல்கள் கல்வியென்றாகவேண்டும் என்றால் அவை நம்மை பயிற்றவேண்டும், நாம் அவற்றை பயிற்றலாகாது. செயல் முடிவிலா நிகழ்வுப்பெருக்கு. நாம் ஆற்றும் எளியசெயலைக்கூட நாம் அறியவியலாது. உண்பவர் அறிவாரா உணவு என்ன ஆகின்றதென்று? புணர்பவர் அறிவாரா அம்மைந்தனின் ஊழ் என்ன என்று? செயலை சித்தத்தால் அறியமுயன்றால் முடிவிலாக்கோடி தகவுகளில் ஒன்றைத் தொட்டு எடுக்கிறோம். அதைக்கொண்டு செயலை வகுத்தால் நம் அறிவின்மையை விதைக்கிறோம். அறிவின்மையை அறுவடை செய்வோம்.”
“அந்தணரே, முனிவரே அறிக! முடிவின்மையின் உயிர்விளக்கமே துரியம். துரியத்தின் துளியே ஆழுளம். அதன் அலையே கனவு. கனவின் நுனியே நனவு. நனவைப்பழக்கி கனவை அடைந்து ஆழத்தில் படிந்து துரியத்திற்குச் செல்லவேண்டும். . நம் கல்வி என்பது கைகளில் இருந்து கனவினூடாக ஆழ்நிலைகளைக் கடந்து துரியத்தை அடைவது. அவையோரே, நம் கைகளே ஆழுள்ளமும் கனவும் துரியமும் ஆகுக! எண்ணுவதை இயற்றவில்லை மூச்சுக்குலை. எண்ணித் துடிக்கவில்லை இதயம். இங்கே இப்போதென்று ஆன துரியத்தின் பகுதியென அமைந்துள்ளன அவை. எண்ணாமல் செயலியற்றும் கைகளும் அவ்வண்ணமே ஆகுக!”
“எது இப்புடவியாகி நின்றுள்ளதோ அதுவே இவ்வுடலும் என்பதனால் புடவியின் சாறென அமைந்திருப்பது இவ்வுடலிலும் அமைவது இயல்வதே. இங்கு அதை அமையச்செய்வதே அளவைநெறி கூறும் சடங்குகளால் ஆவது. அதை வகுத்தறிந்த மெய்யர் வாழ்க!” என்றார் கௌதம சிரகாரி. அவையிலிருந்த அந்தணர் கைகளைத் தூக்கி “ஆம்! ஆம்! ஆம்!” என வாழ்த்தொலி எழுப்பினர். “நம் கைகள் கனவென்றாகாமல் தடுப்பது நாம் என்னும் உணர்வு. அந்த ஆணவத்தை வெல்லாமல் அமைவதில்லை எதுவும். வேதமுடிபு ஆணவத்தினூடாக அறிதல். நாம் ஆணவத்தை அகற்றி அறிகிறோம்.”
“எந்த வழியும் செல்லுமிடம் ஒன்றே என்று நூல்கள் சொல்கின்றன. ஆனால் இந்த வழி எளியோருக்கும் வலியோருக்கும் உரியது. வேதமுடிபின் வழி முனிவருக்கே பயனளிப்பது. முனிவர் இமயமலைமுகடில் எண்புறமும் சூழ்ந்த வெறுமையில் அமர்ந்திருப்போர். நான் என அவர்கள் எண்ணுகையில் நீ நீ என முடிவின்மையென்றான பாழ் அவர்களை சூழ்கிறது. பிரம்மம் என அது பொருள்கொள்கிறது. இங்கு பல்லாயிரம்கோடி முகங்களுடன் உயிர்க்குலமும் பொருள்தொகையும் சூழ்ந்திருக்கும் உலகில் நின்று நான் என ஒருவன் எண்ணும்போதே நானே நானே என கோடிமுகம் எழுப்பி பெருகிச்சூழ்கின்றது அவன் ஆணவம்.”
“ஆணவத்தை அழிக்கும் கலையறிந்தவனே அளவைநெறியன் என்று உணர்க! தன் முற்றத்தில் ஒரு தென்னையை நட்டு நீரூற்றும் முதியவன் ஆணவத்தை கடக்கிறான். அதன் காய்களை அவன் காணப்போவதில்லை என்று அறிவான். தான் என்பது தன்னைச் சூழ்ந்தவர்களெனப் பெருகி இடம்நிறைக்கிறது என்றும் தன் கொடிவழி என நீண்டு காலத்தை நிறைக்கிறது என்றும் உணர்ந்தவன் தானெனத் தருக்குவதில்லை. நாம் வேரில் நீரூற்றுகிறோம். பல்லாண்டுகாலம் அதை செய்தபின்னரே கனியின் சுவைபெறுகிறோம். தனக்கு இச்செயலின் பயன் என்ன என்று ஒருகணம் எண்ணிவிட்டவனால் பிறகு இது இயலாது.”
“அளவைநெறியாளன் ஒருபோதும் தனியொருவன் அல்ல. அவன் ஒரு திரள். ஒரு பெருக்கு. காலந்தோறும் குலங்களின் நிரை என எழும் ஒற்றைப்பேருரு. ஒருவர் அடைந்தது மெய்மையின் ஒரு துளி என்றால் அது செயலென்று சடங்கென்று ஆகி பகிரப்படும். இங்கே என்றுமென இருந்துகொண்டிருக்கும். பல்லாயிரம் சிதலெறும்புகள் கூடி பலநூறாண்டுகளாக எழுப்பும் புற்றுக்கூடு என அவர்களில் திரண்டு எழுந்துகொண்டிருக்கிறது வேதமெய்மை. அவர்களில் ஒருவரிடம் கேட்டால் அவர் அதை அறியாமலிருக்கலாம். அவர் ஆற்றுவதென்ன என்றே உணராமலும் இருக்கலாம். அவர் உணரவேண்டுமென்பதில்லை. திரளுக்கு, பெருக்குக்கு தன்னை கொடுத்தாலே போதும்.”
“அளவைநெறியருக்கு வேள்வி என்பது கொடை. அன்றாடச் சிறுகொடைகள். பெருங்கொடைகள். முழுதளிக்கும் இறுதிக்கொடைகள். கொடையின் கொண்டாட்டமே வேள்வி என்க! இங்கு நிகழும் கொடையில் நாம் ஒவ்வொருவரும் அவியாகுவோம். இங்கு நிகழும் கொடையில் நாம் ஒவ்வொருவரும் அனலென எழுவோம். இந்த எரிகுளம் சாவின் வாய். நம்மை அது உண்க! இந்த எரிகுளம் அன்னைக் கருவழி. நம்மை அது ஈன்றெடுக்கட்டும். ஆம், அவ்வாறே ஆகுக!” என்று கௌதம சிரகாரி கைகூப்பினார். அந்தணர் “ஆம்! ஆம்! ஆம்!” என முழங்கினர்.
த்வன்யன் நிறைவற்ற முகத்துடன் தத்தளித்து இளைய யாதவரை நோக்கினான். “மறுசொல் இருந்தால் கூறுக, அந்தணரே” என்றார் கிருசர். அவன் மேலும் பதற்றம் கொண்டு அவையை சூழநோக்கியபின் “இல்லை” என்றான். சிறுமைசெய்யப்பட்டதுபோல அவன் முகம் சிவந்து கண்கள் நீரணிந்தன. உதடுகளை அழுத்திக்கடித்து கழுத்துத் தசைகள் இழுபட்டு அசைய தலைகுனிந்து மீண்டும் தன் இடம் நோக்கி செல்ல முற்பட்டான். அமர்ந்திருந்தவர்களின் நடுவே அவன் வந்தமையால் உருவான வழியில் அவன் செல்ல அவன் ஆசிரியரான பிரதர்த்தனர் கைநீட்டி தடுத்தார். அவன் திகைத்து நின்றான்.
பிரதர்த்தனர் “இளையவனே, பன்னிரண்டு ஆண்டுகள் என் சிறகின் வெம்மைக்குள் இருந்தாய். என் மைந்தரைவிட எனக்கு இனியவனாக திகழ்ந்தாய். ஐயம்கொண்டபின் நீ வேதியன் அல்ல. நீ உன் வழி தேரலாம். நீ தேடுவன அனைத்தும் உனக்கு மெய்ப்படுக! என் வாழ்த்தும் என் சொல்லில் வாழும் என் ஆசிரியநிரையின் கனிவும் உன்மேல் பொழிக!” என்றார். அவன் கைகூப்பி கண்ணீர் வழிய நின்றான். அவன் தோழர்கள் அவனை நோக்கிக்கொண்டு நின்றனர். அவன் எட்டுறுப்பும் நிலம்படிய விழுந்து அவரை வணங்கியபின் அவையிலிருந்து தலைகுனிந்து வெளியேறினான். அவன் சென்று மறைவது வரை அவை அவனை நோக்கி அமர்ந்திருந்தது.
கௌதம சிரகாரி இளைய யாதவரை நோக்கி “நீங்கள் கேட்டதற்கும் கேட்க எண்ணுவதற்கும் மறுமொழியை சொல்லிவிட்டேன், யாதவரே” என்று புன்னகைத்தார். “முழுமைநோக்கி செய்யப்படும் செயல்களெல்லாம் வேள்விகளே. வேள்வி என செய்யப்படுவன முழுமைகொண்ட செயல்களில் இருந்து முன்னோர் திரட்டி எடுத்த அடையாளச் செயல்கள். ஒவ்வொரு செயலிலும் அதன் இறையெழும் தருணத்தைக் கண்டடைந்து அவற்றை மீளநிகழ்த்துவது இது. இது வேட்டையும் அனலூட்டலும் ஆபுரத்தலும் வேளாண்மையும் தொழிலும் குடிசூழலும் அரசமைதலும் பிறப்பும் இறப்பும் களியாட்டும் துயர்கொள்ளலும் ஒற்றைப்புள்ளியில் நிகழும் ஒரு நாடகம். மலர்க்காடு புக்கு தேன்வெளி கண்டு மீண்டு கூடுவரும் தேனீ தன்னவர்க்கு அறிவிக்க ஆடிப்பாடும் நடனம்.”
“இது நாம் நினைப்பறியா காலம்தொட்டு இங்கு நிகழ்ந்துவருகிறது. தலைமுறைகளில் ஏறி ஒழுகிச்சென்றுகொண்டே இருக்கிறது. நம் முன்னோரையும் நம்மையும் நம் வழித்தோன்றல்களையும் ஒன்றென இணைத்துக் கட்டுகிறது. நம்மிடம் வந்துசேர்ந்திருப்பவை இச்செயல்கள் மட்டுமே. இவற்றுக்கு அவர்கள் கொண்ட பொருள் என்ன என்று நமக்குத் தெரியாது. இச்செயல்களின் உள்ளே அவை உறைந்திருக்கக் கூடும், பறவைச்சிறகில் காற்றும் வானமும் என. முழுமையுடன் இவற்றை ஆற்றுகையில் நம் கைகள் அவற்றை அறியலாம், நம் கனவும் ஆழமும் உணரலாம். நம் துரியம் அவற்றை வாங்கிக்கொள்ளலாம்.”
“ஆகவே இவற்றை நாம் ஒருபோதும் பொருள்கொள்ள முயலக்கூடாது. அப்பொருள் நம்முடையது. நாம் இத்தருணத்தில், இவ்விடத்தில், இங்குள்ள தேவைக்கும் உணர்வுக்கும் ஏற்ப அளிப்பது. நம் எல்லைகளுக்குள் அடங்குவது. தங்கள் பொருளை தாங்களே கொள்ளலாம் என்றால் நாம் நம் வழித்தோன்றல்களுக்கு இவற்றை கையளிப்பதில் என்ன பொருள் உள்ளது? ஒவ்வொரு தலைமுறையும் தன்னை நேற்றிலிருந்தும் நாளையிலிருந்தும் வெட்டிக்கொள்ளவேண்டுமா என்ன? அவ்வாறென்றால் ஒவ்வொருவரும் தன்னை பிறரிடமிருந்து வெட்டிக்கொள்ளவேண்டும் அல்லவா? ஒருவரே தன் நேற்றிலிருந்து தன்னை பிரித்துக்கொள்ளவேண்டும் என்பீர்களா?” என கௌதம சிரகாரி தொடர்ந்தார்.
“மெய்மையை காலஇடமற்ற திரள்பெருக்காகச் சென்றே அறியமுடியும் என்றன எங்கள் நூல்கள். அவ்வாறு திரளென எங்களைத் திரட்டும்பொருட்டு உருவானவை இச்சடங்குகள். இவற்றுக்கு இன்றுநேற்றுநாளை இல்லை. இடம்பொருளேவல் இல்லை. இவற்றில் ஒருதுளியையேனும் மாற்றும் தகுதியோ திறனோ உரிமையோ எங்கள் எவருக்குமில்லை. இங்கு திரண்டுள்ள நாங்கள் அனைவரும் மீன்கள், எங்களை கொண்டுசெல்லும் கங்கைப்பெருக்கே வேதவேள்வி. இதை நாங்கள் உண்பதனால் இதில் உமிழலாம். இதில் நாங்கள் பிறந்தமையால் இதில் இறக்கலாம். எங்கள் வானும் மண்ணும் இல்லமும் பாதையும் இதுவே. எங்கள் உள்ளும் புறமும் நிறைந்திருப்பது இதுவே. இதிலமைதல் அன்றி எங்களால் ஆவதொன்றில்லை என்று அறிக!”
“எனவே பிழையின்றி இதை ஆற்றி நிறைவுறுத்துவது அன்றி எங்களுக்குக் கடமை ஏதுமில்லை. அதையே இந்த அவையில் உங்கள் வினாக்கள் அனைத்திற்கும் விடையென சொல்ல விழைகிறேன், யாதவரே” என்று கௌதம சிரகாரி கைகூப்பினார். அவையிலிருந்த அவருடைய மாணவர்கள் கைகூப்பி “வேதமென எழுந்ததற்கு வணக்கம். வேள்வியென நிகழ்வதற்கு வணக்கம். வகுத்துரைத்த முனிவருக்கு வணக்கம். கற்பித்த ஆசிரியர்களுக்கு வணக்கம். வேட்டுநிற்கும் அந்தணர்க்கு வணக்கம். ஐந்துமென நின்றிருக்கும் அனலோனுக்கு வணக்கம்” என்று பாடினர்.
இளைய யாதவரை நோக்கி அவையின் விழிகள் திரும்பின. அவர் மறுமொழி சொல்வதற்குள் குண்டஜடரர் உரத்த குரலில் “உங்கள் நெறியே வேறு. வேள்விகள் தேவையில்லை, வேதமொன்றே போதும். வேதங்கள் முழுதும் தேவையில்லை, ரிக் ஒன்றே போதும். ரிக் முழுதும் தேவையில்லை அதன் முடிவுமட்டும் போதும். அதன் முடிவும் தேவையில்லை அதன் முதற்சொல்லே போதும். ஓங்காரமும் தேவையில்லை, அதன் தொடக்கமென அமைந்த அமைதியே போதும். ஆம், அதுவும் வழியே. ஆனால் இங்கல்ல. மலையுச்சியின் வெறுமைசூழ்ந்த பீடத்தில். அங்கு செல்க!” என்றார். குந்ததந்தர் “ஆம் யாதவரே, செல்க அங்கு! ஆனால் ஒன்று மட்டும் அறிக! பல்லாயிரம் ஊர்களை தன் மடியெங்கும் விரித்துக்கொண்ட மலையின் உச்சியில் ஒற்றைக்காலூன்றவே இடமிருக்கும்” என்றார்.
“ஆம், ஆகவேதான் உங்கள் குலம் உங்களை துரத்தியது. உங்கள் குருதிமைந்தராலும் புறக்கணிக்கப்பட்டிருக்கிறீர்கள். நன்று, வேதமுடிபு தேரும் முனிவருக்கு உகந்த முழுத்தனிமையை அடைந்துள்ளீர்கள்” என்று வைதிகமுனிவரான வேதமித்ரர் சொன்னார். அந்தணர்நிரையில் ஏளனச்சிரிப்போசை எழுந்து பெருகி அலையென அணுகி வந்தது. வசிட்ட மரபினரான காத்ரர் “ஆனால் நீங்கள் அந்த நல்வாய்ப்பை தவறவிட்டிருக்கிறீர்கள். திருதெய்வத்துடன் சினந்து அவள் அக்கையை சென்றடைந்ததுபோல வேதத்தால் துறக்கப்பட்டதும் அசுரவேதத்தையும் அரக்கவேதத்தையும் சுமந்து நின்றிருக்கிறீர்கள்” என்றார்.
அது ஒரு தொடக்கம் என பலரும் கைகளை நீட்டியபடி எழுந்தனர். “சொல்லுங்கள் இளைய யாதவரே, அசுரவேதத்தை நீங்கள் எவ்வண்ணம் ஏற்கிறீர்கள்? இங்கு வேதவேள்வியை இகழ்ந்தீர்கள். தலைவெட்டி தணலில் இடும் ஆசுரவேள்விகளில் என்ன செய்வீர்கள்?” என்றார் ஒரு முதியவர். “என்ன செய்வார்? நடுத்துண்டு கேட்டுவாங்கி அவிமிச்சம் உண்பார்” என்று ஒருவர் இகழ்ச்சியால் வலித்திழுத்த முகத்துடன் கூவினார். “அவர் என்றும் வேதஎதிரி. பூதனை என்னும் வல்லரக்கியிடம் அவர் உண்ட பால் ஊறியுள்ளது உடலில்” என்றார் இன்னொருவர்.
“அமைதி… நாம் சொல்லுசாவலின் எல்லைகளை மீறுகிறோம்!” என்று கிருசர் கூவினார். அவர்கள் அதை கேட்கவில்லை. மேலும் மேலும் என எழுந்து கூச்சலிட்டனர். வெளிப்படத் தொடங்கிய பின்னர் காட்டெரி என சினமும் வெறுப்பும் பெருகுவதை சுப்ரியை கண்டாள். “இந்திரனுக்கு யாதவர் அளித்துவந்த வேள்விக்கொடையை நிறுத்தியவர் இவர். இங்கு எப்படி அவையமர்ந்து வேள்விமிச்சம் கொள்கிறார்?” என்று ஒருவர் கூவினார். “கேளுங்கள்! அதை முதலில் கேளுங்கள்!” என்று பலகுரல்கள் எழுந்தன. “சிசுபாலன் கேட்ட வினா அவ்வண்ணமே நின்றுள்ளது. கழுத்தறுத்து சொல்லை நிறுத்த இயலாது” என ஒருவர் இரு கைகளையும் விரித்து கூச்சலிட்டார்.
அமூர்த்தர் கைகாட்ட அவருடைய மாணவரான உக்ரர் எழுந்து வலம்புரிச்சங்கை எடுத்து மும்முறை ஊதினார். அதர்வ வைதிக மரபுக்குரிய அத்தனியொலி சிம்மக்குரல் பிற விலங்குகளை என அந்தணரை அஞ்சி உறையச்செய்தது. “அமர்க அந்தணரே, அமர்க!” என கிருசர் கூவினார். “அமர்க, இங்கு எவர் அமரவேண்டுமென வகுப்பது தொல்வேத குருநிலைகளே ஒழிய வேதியர் அல்ல. அமர்க!” என்றார். மெல்ல அனைவரும் அமர்ந்ததும் “அவைச்சொல் தொடர்க!” என்றார்.
கண்வமரபினரான திரிசோகர் எழுந்து “இந்த அவையில் இறுதிச்சொல் கௌதமரால் உரைக்கப்பட்டுவிட்டது. வேதவேள்விகளில் ஒரு சொல்லுக்கு பொருளுரைத்து வகுக்கவோ ஒரு நெறியை மாற்றுநோக்கி அமைக்கவோ எவருக்கும் உரிமை இல்லை” என்றார். “வேதத்தைச் சொல்லுசாவினால் வேதமே வேதத்தை மறுக்கும். அரவின் தலை வாலை விழுங்கும். அச்சுழியில் முடிவிலாது உழல்வதே வேதமுடிபினரின் வழி என்றால் அவ்வாறே ஆகுக! நாம் வேதத்தை நம் தொழுவில் கட்டிக் கறந்து அமுதுண்பவர்கள்.”
“ஆகவே இந்த அவையில் இளைய யாதவர் சொன்ன முதல் கேள்வியை முற்றாக மறுக்கிறோம். வேதத்தின் ஒருபகுதி பிறிதொன்றை மறுக்காது. வேதமையம் வேதச்செயல்களை துறக்காது. வேதத்தில் இருந்து வேதத்தைக் கடந்துசெல்லும் எதையும் கண்டடைய இயலாது. வேதமென தன் ஆணவத்தை வகுப்பவர்களின் வீண்பாதை அது. அதை இந்த அவை முழுமையாக மறுக்கிறது.”
காசியப கிருசர் தலைவணங்கி “ஆம், அவ்வாறே ஆகுக!” என்றார். பின் இளைய யாதவரிடம் திரும்பி “சாந்தீபனியின் ஆசிரியரே, இந்த அவையில் நீங்கள் சொல்லும் மறுப்பென மேலும் ஏதேனும் உள்ளதா?” என்றார். இளைய யாதவரின் முகத்தை சுப்ரியை நோக்கினாள். அங்கு நிகழ்ந்த அனைத்துக்கும் அப்பால் என அவர் முகத்தில் ஒரு கனவுநிலை இருந்தது. என்றும் மாறாததோ என புன்னகையும் நின்றிருந்தது. அவள் கர்ணனை நோக்கியபோது அவனும் அவரையே பார்த்துக்கொண்டிருப்பதை கண்டாள்.