ஈரோடு சந்திப்பு- விஷால் ராஜா

a

அன்புள்ள ஜெ,

 

பொதுவாக அனைத்து சந்திப்புகளிலுமே சமூகம், வரலாறு, நுண்கலை, இலக்கியம் என வெவ்வேறு விஷயங்களை தொட்டும் விரித்துமே நீங்கள் உரையாடுவீர்கள். சென்ற ஆண்டு ,2017, புது வாசகர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட நண்பர்களில் பலரும் சமயம் சார்ந்தும் வரலாறு சார்ந்துமே நிறைய கேள்விகள் கேட்டதால் அவைக் குறித்தே நீங்கள் அதிகம் விளக்கம் அளிக்க வேண்டியிருந்தது. ஆனால் இம்முறை இலக்கியமே பிரதான பேசுபொருளாக இருந்தது தனிப்பட்ட வகையில் எனக்கு கூடுதல் நெருக்கம் அளித்தது. இந்த ஆண்டு கலந்துகொண்டவர்களில் பலரும் எழுத்தாளராவதை இலக்காகக் கொண்டிருந்ததும் முக்கியக் காரணம் என நினைக்கிறேன்.

 

இலக்கியத்தை அடிப்படையாகக் கொண்டு நிகழ்ந்த உரையாடல்களை இரண்டு விதங்களில் பிரிக்கலாம் – வாசிப்பு சார்ந்து பேசப்பட்டவை, எழுத்துச் செயல்பாட்டை முன்வைத்து பேசப்பட்டவை. உங்களைத் தொடர்ந்து வாசித்து வருகிற யாருக்குமே உங்களுடைய இலக்கிய அபிப்ராயங்கள் பற்றியும் உங்களது மதிப்பீடு முறைப் பற்றியும் ஓரளவிற்கேனும் தெரிந்திருக்கும். எனவே சில கேள்விகளுக்கு நீங்கள் என்ன பதில் அளிக்கப் போகிறீர்கள் என்பதை சரியாக யூகிக்க முடிந்தது எனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் பதில்களின் உள்ளடக்கம் அளவுக்கே முக்கியமான இன்னொரு விஷயம், அதன் வடிவம். நேர்ப்பேச்சில்கூட நீங்கள் பின்பற்றுகிற தர்க்க ஒழுங்கு உன்னிப்பாக கவனித்து உள்வாங்கவேண்டியக் கூறு என புரிந்துகொண்டேன். அவ்வொழுங்கில்லாததனாலேயே பல உரையாடல்கள் தெளிவுறுத்தல்களிலும் இடைவெட்டுகளிலுமே அலைவுற்று நேர விரயங்களாகின்றன.

 

 1. வாசிப்பு சார்ந்து பேசப்பட்டவை :

 

யதார்த்தவாதமும் இயல்புவாதமும் :

 

ஒரு நண்பர் “யதார்த்தவாதத்திற்கும் (Realism) இயல்புவாதத்திற்குமான (Naturalism) வேறுபாடு என்ன?” என்று வினவினார். (இவ்விரண்டு கலைச் சொற்களையும் முதல்முறை அறிய நேர்ந்ததும் எனக்கும் இதே கேள்வி எழுந்தது. சொற்களிலேயே இருக்கும் தோற்றத் தொடர்பு காரணமாக இருக்கலாம்). அக்கேள்விக்கு நீங்கள் அளித்த பதில் – யதார்த்தவாதம், இயல்புவாதம் இரண்டுமே ‘உள்ளதை உள்ளபடியே’ பதிவு செய்யும் எழுத்துமுறை. யதார்த்தவாதத்தில் எழுத்தாளனின் இருப்பு என்பது ஸ்தூலமானதாக (personal) இருக்கும். ஆனால் இயல்புவாத எழுத்து என்பது புகைப்பட கதைப் போல் எழுத்தாளனின் தடயமே இல்லாமல் (impersonal) இருக்கும்.

கூர்மையான கீறல் போல் பதிலை துல்லியமாக வரையறுத்த பின், மேற்கொண்டு அக்கேள்வியின் மேலேயே வேறு கேள்விகளை அடுக்கியதன் மூலமாக நீங்கள் அவ்வுரையாடலை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்துச் சென்றீர்கள். “எதற்காக நாம் உள்ளதை உள்ளபடி சொல்ல வேண்டும்? யதார்த்தவாதத்திற்கோ இயல்புவாதத்திற்கோ இலக்கியத்தில் என்ன தேவை? அவற்றின் எல்லைகள் என்ன? யதார்த்தவாதம் செத்துவிட்டதா?”. இவற்றுக்கு நீங்கள் அளித்த பதில்களை ஒரே சரடாக இப்படித் தொகுக்கிறேன். (ஏற்கனவே பூமணியின் படைப்புலகம் பற்றிய கட்டுரையில் இதை நீங்கள் எழுதியிருக்கிறீர்கள்.)

 

“சாகசக் கதைகள், கதாநாயக வழிபாட்டு கதைகள் முதலியவை விலகி இலக்கியத்தில் அன்றாட மனிதர்களின் கதைகள் சொல்லப்படத் துவங்கும்போதே யதார்த்தவாதம் பிறக்கிறது. புதுமைப்பித்தனே தமிழில் யதார்த்தவாதத்தை தொடங்கி வைக்கிறார். ஆனால் இந்த யதார்த்தமும் நிஜ யதார்த்தம் அல்ல. இது எழுத்தாளன் சொல்கிற யதார்த்தம். அந்த யதார்த்தம் வழியே அவன் தன் கண்டடைதலை முன்வைக்கிறான். அதற்கு மிகச் சிறந்த உதாரணம் ஜெயகாந்தன். இயல்புவாதத்திற்காக உதாரணங்கள் என்று பூமணியையும் இமையத்தையும் சொல்லலாம். அவர்கள் எதையும் முன்வைப்பதில்லை. அவர்கள் காண்பிக்க மட்டுமே செய்கிறார்கள். படைப்புகளில் ஏன் அவர்கள் தங்களை அடையாளமின்றி கரைத்துக் கொள்கிறார்கள் என்றால் ‘நம்பகத்தன்மை’ என்பதே இயல்புவாதத்தின் முதன்மை பலம். அவர்கள் காண்பிக்கும் வாழ்க்கை எந்த அளவுக்கு உண்மைக்கு பக்கமாக இருக்கிறதோ, அந்த அளவுக்கே நம்மில் பதைப்புக் கூடுகிறது. இன்று இலங்கை எழுத்துக்களில் வெளிப்படும் சிக்கலும் இதுவே. புலி ஆதரவு அல்லது எதிர்ப்பு என்று அவர்களுக்கு எதையாவது “சொல்ல” வேண்டியிருப்பதால் அவ்வெழுத்துக்கள் அசல் தாக்கத்தை ஏற்படுத்த தவறுகின்றன. இயல்புவாதம் என்பது எழுத்தாளனின் உருவாக்கத்தால் அல்ல; அவனது தேர்வினாலேயே இயங்குகிறது. இலக்கியத்தின் முக்கிய போக்குகளாக இருப்பினும் யதார்த்தவாதம் மற்றும் இயல்புவாதத்தில் ஒரு முக்கியத் தடை உள்ளது. இவற்றால் மீபொருண்மைத் தளத்திற்கு செல்ல முடியாது. அதனால்தான் தொண்ணூறுகளில் வேறு மாதிரியான – யதார்த்தை மீறுகிற, அற்புதங்களையும் மாயங்களையும் பேசுகிற- கதைசொல்முறை தமிழில் கையாளப்பட்டது. அப்போதும்கூட தமிழ் பின்நவீனத்துவவாதிகள் கூறியது மாதிரி யதார்த்தவாதம் மற்றும் இயல்புவாதத்தின் தேவை முற்றிலுமாக ஓய்ந்துவிட்டது என சொல்லமுடியாது. புலனால் அறிய முடிகிற ஒரு பொருள்முதல் உலகமும் அதன் சுகத் துயரங்களும், அழகு மற்றும் கொடூரங்களும் இருக்கிறவரையில் அவையும் இருக்கும்”

 

கற்பனாவாதம் முடிந்து நவீனத்துவத்தின் தொடக்கம் மற்றும் அதன் முடிவு வரையிலான வரலாற்றின் ஒரு குறிப்பிட்டக் காலக்கட்டத்தையே ஒரு எளிய கேள்விக்கான பதிலில் நீங்கள் கச்சிதமாக வெட்டி எடுத்து கையில் கொடுத்தது ஆச்சர்யமூட்டியது. இதில் இரண்டு விஷயங்கள் பிடிபடுகின்றன. முதலாவதாக அவ்வாசக நண்பரின் கேள்விக்கு முன்னும் பிண்ணும் நீங்கள் இணைத்த கூடுதல் கேள்விகள். ஆக, எதுவாக இருந்தாலும் சரியான பதில்களைப் பெற சரியான கேள்விகளை கேட்டாலே போதும். இரண்டாவதாக ஸ்டாலின் ராஜாங்கத்தின் “எழுதாக்கிளவி” நூல் பற்றிய  “நம் நாயகர்களின் கதைகள்”  கட்டுரையில் நீங்கள் சொல்வதைப் போலவே, மொழியின் தெளிவு என்பது சிந்தனையின் தெளிவு மட்டுமே.

b

சில குறிப்புகள் :

 

கீழுள்ளவை நீங்கள் இவ்விரண்டு நாட்களில் குறிப்பிட்டவை. இவ்வுதிரிக் குறிப்புகள் அனைத்தும் தனித்தனியாகவே பொருள் தந்தாலும்கூட மொத்த உரையாடல் பரப்பில் அவை எங்கு எப்போது முளைத்தன என்பதை ஞாபகத்தில் சிரமத்துடனே தேட வேண்டியிருக்கிறது. இன்னும் கவனப் பயிற்சி தேவை என சொல்லிக்கொள்கிறேன்.

 

 • வெண்முரசில் எல்லா கதாபாத்திரங்களும் புத்திசாலிகளாக இருப்பதையும் நீண்ட உரைகள் என அவர்கள் வசனங்கள் பேசுவதையும் குற்றச்சாட்டுகளாக முன்வைப்பவர்களுக்கான பதில், “ஒரு செவ்வியல் படைப்பில் எல்லோருமே புத்திசாலிகளாகத்தான் இருப்பார்கள். ஏனெனில் யாருக்கு சொல்ல ஏதாவது இருக்கிறதோ, அவர்களே படைப்பில் பேச அனுமதிக்கப்படுகிறார்கள். இத்தகைய குற்றச்சாட்டுகளே செவ்வியல் வாசிப்பு நமக்கு பழக்கம் இல்லாததால்தான் எழுகின்றன. தஸ்தாவெய்ஸ்கியின் நாவல்களில் மிக நீளமான உரைகள் உண்டு. செவ்வியல் இலக்கியங்களோடு அறிமுகம் உள்ள யாரும் இத்தகைய கேள்விகளை கேட்க மாட்டார்கள்”

 

 • செவ்வியல் படைப்புகளில் வடிவ சீர்மை மிக அவசியமானது. எல்லா செவ்வியல் கட்டிடங்களிலும் இதை பார்க்கலாம். ஒரு செவ்வியல் கட்டிடம் வலதுபுறத்தில் என்ன வடிவத்தைக் கொண்டிருக்கிறதோ அதுவே இடதுபுறத்திலும் கண்ணாடி பிம்பம் என இருக்கும்.

 

 • ஒரு ஓவியத்தை ரசிக்க அவ்வோவியம் எந்த சிந்தனைப் பள்ளியை சேர்ந்தது என்பதையும் அச்சிந்தனைப் பள்ளியின் அடிப்படைகள் என்ன என்பதையும் அறிந்திருக்கவேண்டும். அதேப் போல் அடிப்படைகளை அறியாமல் எந்த செவ்வியல் படைப்பையும் – அது எந்த கலை வடிவமாக இருப்பினும் – ரசிக்க முடியாது.

 

 • கோட்பாடு வாசிப்பு மீது தமிழ்ச் சூழலில் நிலவும் அவநம்பிக்கை காரணமற்றது அல்ல. அவை இங்கு சரியாக அறிமுகம் செய்யப்படவில்லை. கோட்பாடுகள் இலக்கியத்தை சூத்திரம் போல் குறுக்கக்கூடாது. எனவே நீங்கள் கோட்பாடுகளை பயிலும்போது உங்களைக் கேட்டுக் கொள்ள வேண்டிய அவசியக் கேள்வி. “நீங்கள் எந்த தரப்பில் இருக்கிறீர்கள்? உங்கள் நோக்கம் என்ன?”. எடுத்துக்காட்டாக, பார்த்தின் “எழுத்தாளன் மரணித்துவிட்டான்” என்கிற சொற்றொடரை முதல்முறை கேட்டதும் ஒரு படைப்பாளியாக உங்களுக்கு என்ன தோன்றுகிறது? வெறும் கொண்டாட்ட மனநிலை என்றாலே அங்கே பரிசீலணை அவசியம்.

 

(உங்கள் தளத்தில் வெளியான “அருகமர்தல்” கட்டுரையில் ஏ.வி.மணிகண்டன் “கலையால் தன்னை அறிந்தவர்கள் தன் எல்லைகளைத் தாண்டி விரிந்து செல்லவே முனைந்திருக்கின்றனர். கலையையே உணராமல், அறிஞர்களாக மட்டுமே இருப்பவர்கள் தங்களுக்கு இல்லாத அடையாளங்களை அடைய அனைத்தையும் குறுக்குகின்றனர்.” என மேலுள்ள கருத்தையே குறிப்பிடுவதாக புரிந்துகொள்கிறேன்.)

 

 1. எழுத்து சார்ந்து பேசப்பட்டவை :

 

இந்த சந்திப்பை எழுத்து பட்டறை என்றே தயங்காமல் சொல்லலாம். முதல் நாள் இரவு உணவுக்கு பிற்பாடு மாடியில் நிகழ்ந்த உரையாடல் இச்சந்திப்பின் மகுடத் தருணம். நடுவே மின்சாரம் தடைப்பட்டுவிட்டது. பளிச்சிட்டு எழுந்து, கண்களை உறுத்திய கைபேசி வெளிச்சங்கள் உடனேயே அணைகின்றன. இருட்டில் துலாவும் பார்வையில் உருவங்கள் மெல்ல தெளிந்து வர, அனுகி விலகுகிறது தென்னங்கீற்றுகளின் காற்றசைவு. சுற்றி அத்தனை நபர்கள் இருக்கும்போதும் மிக அந்தரங்கமான ஒரு உரையாடலில் பங்கெடுத்துக் கொண்டிருக்கும் உணர்வு எனக்கு. பலரும் அப்படிதான் உணர்ந்திருப்பார்கள் என கருதுகிறேன்.

 

இளம் எழுத்தாளர்கள் செய்ய வேண்டியை :

 

 • உங்கள் மொழியின் ஆகச் சிறந்த எழுத்தாளுமைகளை ஆதர்சங்களாக கொண்டு அவர்களை மீறிச் செல்ல ஒரு எழுத்தாளன் முயற்சிக்க வேண்டும். அதற்கு முதலில் அந்த ஆகச் சிறந்த எழுத்தாளுமைகளை முழுமையாக வாசித்து அவன் உள்வாங்கியிருக்க வேண்டும். இங்கே பிரக்ஞாபூர்வ வாசிப்பும் (conscious reading) மதிப்பிடல்களும் தேவை.

 

 • அன்றாட வாழ்க்கை என்பது எல்லைக்குட்பட்டது. எனவே அதை மட்டும் எழுதினால் மிகச் சிறிய பரப்புக்குள் மட்டுமே இயங்கவேண்டிய கட்டாயம் ஏற்படும். அக்கட்டாயத்தை தாண்டி முன்னே செல்ல வரலாறு, பண்பாடு, தத்துவம், நுண்கலை என பலவகைப்பட்ட நூல்களை வாசித்து பல்வேறு விஷயங்களை தெரிந்துகொள்ள வேண்டும். உள்ளடக்கம் என்பது மட்டும் அல்லாமல் நிலக்காட்சிகளை பார்ப்பதிலும் வாழ்க்கை பார்வையை திரட்டிக் கொள்வதிலும் கூட அவை உதவி புரியும். உதாரணத்திற்கு, நீங்கள் ஓவியங்களை தொடர்ந்து பார்த்து ஓவியம் சார்ந்த ரசனை பயிற்சியை வளர்த்துக்கொண்டால் பூக்களின், இலைகளின், வானத்து பொழுதுகளின் நிற மாற்றங்களை உங்களால் சரியாக கிரகிக்க முடியும். படைப்பிலும் வெளிப்படுத்த முடியும்

 

 • ஒரு எழுத்தாளனுக்கு அவனது கலாச்சாரம் என்பது படிமக் களஞ்சியம் ஆகும். படிமங்கள் இல்லாமல் பெரும் படைப்புகள் இல்லை. எனவே அவன் தன் கலாச்சாரத்தையும் மரபையும் அறிந்துகொள்ள வேண்டும். உடன், வரலாறுகளை தெரிந்துகொள்வதன் வழியாக ஒரு தனி மனிதனை வரலாற்றின் நெடிய சித்திரத்தில் பொருத்த முடியும்.

 

 • திரைப்படங்கள் பார்ப்பது ஒரு எழுத்தாளனுக்கு புத்தக வாசிப்பு போல் பயனளிக்கக்கூடியது அல்ல. அதிகம் கவனம் கோரும் படைப்புகளை பொறுமையோடும் அக்கறையுடனும் வாசிப்பதற்கான இயல்பை அது குலைக்கக்கூடும். அதேப் போல் டைரி எழுதுவதும்கூட எழுத்தாளனில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தலாம். ஏனெனில் டைரி எழுதும்போது சுருங்கச் சொல்வதும் மனதை மட்டும் சொல்வதுமே பெரும்பாலும் நிகழ்கின்றன. மனதை எழுதுவதற்கு இலக்கியத்தில் மிக முக்கிய இடமிருப்பினும், நிலக்காட்சிகளை எழுதுவதும் புற உலகை துல்லியமாக எதிரே கொண்டுவருவதும்கூட படைப்புச் செயல்பாட்டில் அவசியம்.

 

சிறுகதை விவாதம் :

 

படைப்பு விவாதத்தின்போது சிறுகதையின் செவ்வியல் வடிவத்தை அடிப்படையாக வைத்து அதன் தோற்றம் மற்றும் முதன்மை நோக்கத்தை விளக்கிச் சொன்னீர்கள். சில தனிக் கட்டுரைகளில், அப்புறம் நாவல் கோட்பாடு நூலில் என இவை நீங்கள் முன்னரே சொன்னவைதான். சிறுகதை என்பது இறுதி திருப்பத்தில் (twist) நிகழ்வது என்று நீங்கள் குறிப்பிட்டதை வாசிப்பின் மிக ஆரம்பப் படிகளில் இருக்கும் நண்பர்கள் தவறான பொருளில் எடுத்துக் கொள்வார்களோ என்று எனக்கு சிறு சந்தேகம் எழுகிறது. (அதிலும் திருப்பம் (twist) என்கிற சொல் தமிழ் சினிமாவினோடு அதிகம் தொடர்புடையதால், ஒரு பக்கக் கதைகளை உதாரணமாக அவர்கள் கொள்ளக்கூடும்). ஆகவே அதைத் தொடர்ந்து நீங்கள் குறிப்பிட்ட விஷயங்களை மீண்டும் இங்கே சேர்க்கிறேன். இது ஜனாவின் கேள்விக்கு தனி பதிலாக மட்டுமே சொல்லப்பட்டதால் பொது கவனத்திலிருந்து தவறியிருக்கலாம்.

 

 • ஓ ஹென்றி வகை இறுதித் திருப்பம் என்பது செவ்வியல் இலக்கணம். பிற்காலத்தில் அந்த இறுதித் திருப்பம் என்பது பூடகமானதாகவும் வாசகர்களின் கற்பனைக்கான இடைவெளி உள்ளதாகவும் மாறிவிட்டது. உடனடி அதிர்ச்சியளிப்பது அல்ல அதன் பாணி. போலவே அந்த செவ்வியல் வடிவத்தை மீறிய பரிசோதனைகளையும் தாராளமாக செய்யலாம்.

 

கட்டுரை வடிவம்ஒரு கேள்வி  :

 

உங்களது கட்டுரைகள் தீவிரமும் ஆழமும் கூடியவை என்று சொல்லும் அளவுக்கே சுவாரஸ்யமும் வடிவ அழகும் மிக்கவை. அதுக் குறித்த வியப்பு எனக்கு எப்போதும் உண்டு. சமீபமாக பிற வாசிப்புகள் வழியே அறிவுப்புலம் விரியும்தோறும் உங்களது கட்டுரைகள் இன்னும் அதிகம் வியப்பளிக்கவே செய்கின்றன. உங்கள் கட்டுரைகளின் விசேஷ அமசங்கள் என இரண்டு இயல்புகளை சொல்ல வேண்டும். முதலாவதாக சம்பவத் துணுக்கு (anecdote). (அதில் பெரும்பாலும் நித்ய சைதன்ய யதியோ அல்லது ஆற்றூர் ரவி வர்மா, சுந்தர ராமசாமி போன்ற உங்கள் முன்னோடிகளோ அல்லது வேறு எழுத்தாளர்களோ இடம்பெற்றிருப்பார்கள்). மற்றது – நீங்கள் அதிகம் அயல் எழுத்தாளர்களை மேற்கோள் காட்டுவதில்லை என்பது. உங்கள் எழுத்துக்களை தொடர்ந்து வாசிக்கும்போது சில சமயம் இவ்வியல்பு தவறாகக்கூட வழிகாட்டலாம். ஏனெனில் நீங்கள் குறைவாக மேற்கோள் காட்டுவதால் “சும்மா தோன்றுவதை” எழுதுகிறீர்கள் என்று அர்த்தம் ஆகாது. உண்மையில் மேற்கோளுக்குரிய விஷயங்களை ஒரு கருத்தாக மாற்றி அந்த தரப்பை கட்டுரையில் சொல்லியபடியே நீங்கள் முன்னகர்கிறீர்கள். உங்கள் கட்டுரைகள் ஒரு சிந்தனைத் தொடர்ச்சியின் முனையிலேயே நிற்கின்றன. எனவே உங்களை பின்பற்றுவர்கள் உங்கள் மொழியை வேண்டுமானால் எளிதில் அடைந்துவிடலாம்; ஆனால் இந்த இடைவெளியை கவனிக்காதவரை நீங்கள் தொடும் ஆழங்களை எட்டமுடியாது என்பது என் கணிப்பு. எனவே நீங்கள் இதை எப்படி அடைந்தீர்கள் என்பது தெரிந்துகொள்ள “உங்கள் கட்டுரை வடிவத்தை எங்கிருந்து பெற்றீர்கள்?” என நான் உங்களை கேட்டேன்.

 

நீங்கள் இதை நித்ய சைதன்ய யதியிடமிருந்து பெற்றுக் கொண்டதாக கூறுனீர்கள். என் கேள்வியின் முழுமையின்மையையும் நீங்களே உணர்ந்து சம்பவத் துணுக்குப் பற்றியும் விளக்கியது உள்ளபடியே உதவியாக இருந்தது. நித்ய சைதன்ய யதியிடமிருந்து அது உங்களை வந்தடைத்திருப்பதே மிக பொருத்தமானது என அப்போதே உணர்ந்தேன். ஏனெனில் நான் அறிந்தவரை தமிழ் இலக்கியச் சூழலில் முறையான கற்றலின் (Systematic or Academic learning) பேரில் ஒரு அதிருப்தியும் ஒதுக்கலும் இருக்கின்றன. அது புரிந்துகொள்ளக்கூடியதே. பெரும்பாலான முன்னோடி படைப்பாளிகள் கல்விபுலத்தில் இருந்து வந்தவர்கள் அல்ல. அதனாலேயே முறையான கற்றல் படைப்புக்கு உதவாது என்கிற மோஸ்தர் இங்கு நிலைபெற்று விட்டிருக்கலாம். மேலும் முறையான கற்றலுக்கு இங்கு மார்க்கமும் கிடையாது. இப்போது இக்கடிதமேக் கூட வகுப்பறைக் குறிப்புகள் போலதான் இருக்கிறது. ஆனால் வேறு வழி இல்லை. உலகம் முழுக்க பெரும் பல்கலைகழகங்களில் கலையும் இலக்கியமும் கற்பிக்கப்படுகின்றன. சபரி எழுவதுப் போல் நாங்களோ பஞ்சப்பிள்ளைகள். எங்களால் அங்கு செல்ல முடியாது; ஆசிரியரைத் தேடி வருகிறோம்.

 

ஜனநாயகம் என்கிற பாவனையில் அறியாமையின் சோம்பலிலும் திமிரிலும் திளைக்கும் போக்கு அதிகரித்திருப்பது பற்றியும் இலக்கிய ஆசிரியர்கள் மற்றும் வழிகாட்டிகளின் முன்னிலையில் பணிவுடன் இருப்பதன் அவசியம் பற்றியும் எப்போதும் போலவே இச்சந்திப்பிலும் நீங்கள் பேசினீர்கள். அதை பின்னர் நினைவுக்கூரும்போது முதல் நாள் காலை, குன்றிடுக்குகளில் மாட்டிக் கொண்டு உயிர் இழக்கும் மான்கள் பற்றி நீங்கள் சொன்னது அந்நினைப்பில் வந்து அனிச்சையாக இணைந்துக் கொண்டது. இணையத்தில் போய் தேடி பார்த்தேன். அப்படி மாட்டிக் கொண்டு உடல் சதை உளுத்து உதிர்ந்து வெறும்பு எலும்புக்கூடாக மட்டும் எஞ்சியிருக்கும் ஒரு மானின் புகைப்படம் காணக் கிடைத்தது. இடுக்கின் கீழே அதிகம் ஆழம் இருப்பதுப் போல் தெரியவில்லை. தலைக்கு மேல் கொம்புகள் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் அது ஒருவேளை பிழைத்திருந்திருக்கலாம்.

 

O

 

கற்றல் இனிது என்பதும் ஒரு முன்னோடியே நேரடி ஆசிரியராக அமையும்போது கற்றல் கொண்டாட்டமானதும்கூட என்று ஏற்கனவே தெரியும். ஆனால் இம்முறை உங்களை தோளோடு அணைத்து விடைபெறும்போது தோன்றியது, கற்றல் என்பது ஆசீர்வாதமும்கூட என்று.

 

அன்புடன்,

விஷால் ராஜா.

 

பி.கு : இக்கடிதத்திலுள்ள அனைத்து கருத்துக்களையும் நீங்கள் வெவ்வேறு கட்டுரைகளில் ஏற்கனவே எழுதிவிட்டிருக்கிறீர்கள். என்றாலும் அடிப்படைகள் மீண்டும் மீண்டும் கேட்பதன் வழியாகவும் அவற்றில் பயிற்சியாகி தெளிவுறுவதன் வழியாகவும் உண்டாகும் தன்னம்பிக்கை இதை எழுதும்போது எனக்கு கிடைத்தது.

 

* ஆசான்களே

மீண்டும் வாய்ப்பளியுங்கள்

மீண்டும்

மீண்டும்

வாய்ப்பளியுங்கள்

தேர்வறையில் உதவி செய்யுங்கள்

வழியிருந்தால் எமக்கு பதிலாக எழுதுங்கள்

தாமதமாக வந்திடினும் அனுமதியுங்கள்

யாரும் வராவிடினும்

தாங்கள் வாருங்கள்

பள்ளிகளை மூடிவிடாதீர்கள்

நாங்கள் பஞ்சப்பிள்ளைகள் எமக்கு

உணவு தேவை

மேல்சட்டை தேவை

சொற்கள் தேவை

கற்பனையெண்கள் தேவை
– சபரிநாதன் (ஆசிரியப் பெருமக்களுக்கு.. கவிதையிலிருந்து )

 

 

அன்புள்ள விஷால் ராஜா

 

சென்ற சிலநாட்களாக சமீபத்திய புனைகதைகள் சிலவற்றை வாசித்துக்கொண்டிருக்கிறேன். அப்போது பொதுவாகத் தோன்றிய ஒன்றுண்டு, தமிழ் இலக்கிய வாசகர்களின் எல்லைதான் இலக்கியப் படைப்பாளிகளுக்கு மிகப்பெரிய அறைகூவல் என்று. நிறைய வாசிப்பவர்கள், நிறைய இலக்கிய விவாதங்கள் செய்பவர்கள் கூட தமிழ்,இந்திய இலக்கியமரபு, கலைமரபு, தத்துவப்பின்புலம், வரலாற்றுச்சூழல் குறித்த எந்த அறிதலுமில்லாதவர்களாக இருக்கிறார்கள். அவை தேவையில்லை என்ற எண்ணமும் கொண்டிருக்கிறார்கள். ஆகவே அன்றாடத் தனிவாழ்வின் சில தருணங்களை மட்டுமே அவர்களால் உள்வாங்க முடிகிறது. அவற்றை நேரடியாக வாசித்துச் சலிக்கையில் பூடகமாக்கியும் சிடுக்காக்கியும் சொல்லும் படைப்புகளைத் தேடிச்செல்கிறார்கள். உலகமெங்கும் புனைவிலக்கியத்தின் பீடங்களாக, வேர்நிலமாக உள்ளவை தத்துவமும் வரலாறும். இங்கு இலக்கியப்புலத்தில் அவற்றுக்கு இடமே இல்லாமலிருக்கிறது. ஆகவே படிமக்களஞ்சியம் இல்லை. வாசகனின் இந்த எல்லையை பொருட்படுத்தாமல்தான் எழுத்தாளன் எழுதவேண்டியிருக்கிறது என நினைக்கிறேன்.

 

ஜெ

 

முந்தைய கட்டுரைஇந்தியக்கலை – ஏ .வி. மணிகண்டன் கடிதம்
அடுத்த கட்டுரைவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–76