பகுதி பத்து : பெருங்கொடை – 13
கர்ணன் இளைய யாதவரையே நோக்கிக்கொண்டிருப்பதை சுப்ரியை கண்டாள். அவை அவருடைய சொல்லுக்காகவே முதற்கணம் முதல் காத்திருந்தது எனத் தெரிந்தது. காசியப கிருசர் “அவையின் ஆணை அவ்வாறென்றால் அங்கநாட்டரசர் வெளியேறுவார்” என்று சொல்லி காத்திருந்தார். சுப்ரியை துரியோதனனை நோக்கினாள். மாறா கல்தன்மையுடன் அவன் அமர்ந்திருந்தான். காசியப கிருசர் “அவை முடிவை வேள்வித்தலைவர் அறிவிக்கவேண்டும்” என்றார். வேள்வித்தலைவரான அமூர்த்தர் “நெறிகளின்படியும் இந்த அவைகொண்ட முடிவின்படியும் அங்கநாட்டரசர் சூதர் என்றே கொள்ளப்படவேண்டும். வேள்விக்காவலராக அமர சூதருக்கு உரிமையில்லை” என்றார்.
கர்ணன் “நன்று! வேதம் தன் வழியை தானே தேர்க!” என்று சொல்லி தொழுது திரும்பும்போது இளைய யாதவர் எழுந்தார். கர்ணன் அவரை நோக்கியபடி தயங்கி நிற்க “காசியப கிருசரே, நான் சில சொற்கள் உரைக்கலாமா?” என்றார் இளைய யாதவர். “ஆம், தங்கள் சொற்களுக்காக காத்திருக்கிறோம்” என்றார் காசியப கிருசர். இளைய யாதவர் வேள்வித்தலைவரையும் அவையையும் நோக்கி கைகூப்பி “வேள்வித்தலைவருக்கும், முதன்மை வைதிகருக்கும் என் பணிதல். அவையமர்ந்துள்ள முனிவர்களுக்கும் வேதியருக்கும் என் மெய்வழியின் வணக்கம். அரசர்களுக்கு என் வாழ்த்துக்கள். என் ஆசிரிய நிரையை இத்தருணத்தில் உளம்கொள்கிறேன். அவர்களின் சொல் அழியாது வாழ்க!” என்றார்.
“இந்த அவையில் சாந்தீபனி குருநிலையின் ஆசிரியன் என்ற நிலையில் நான் உசாவ விரும்பும் வினா ஒன்றே. நான்கு வேதங்களும், சிக்ஷா, கல்பம், சந்தஸ், வியாகரணம், நிருக்தம், ஜியோதிஷம் என்னும் ஆறு வேதக்கூறுகளும், கந்தர்வவேதம், தனுர்வேதம், ஸ்தாபத்யவேதம், ஆயுர்வேதம் என்னும் நான்கு துணைவேதங்களும் நிகரா? வேதங்களுக்குள் வேறுபாடுண்டா? அனைத்தும் ஒன்றே எனில் வில்வேதம் தேர்ந்த வீரனுக்கும் மூவேதம் கற்றறிந்த வைதிகனுக்கும் ஏன் அவையில் வேறுபாடு காட்டப்படுகிறது? இசை தேர்ந்தோனும் நிமித்த நூல் துறை போகியவரும் இலக்கணம் அறிந்தவரும் சொல்நூல் நவின்றவரும் நால்வேதம் உரைத்தவர்களுக்கு கீழே என வேள்வி அவைகளில் ஏன் அமைக்கப்படுகிறார்கள்?” என்றார்.
வேள்வித்தலைவர் அமூர்த்தர் புருவங்கள் சுருங்க இளைய யாதவரை பார்த்தார். அந்த வினாவிலிருந்து இளைய யாதவர் எங்கு செல்லப்போகிறார் என்பதை அவரால் உய்த்தறிய இயலவில்லை எனத் தெரிந்தது. அவர் விழி சரித்து நோக்க அவர் அருகே அமர்ந்திருந்த முதன்மை மாணவரும் வேள்விச்சாலைப் பொறுப்பாளருமான உக்ரர் “சாந்தீபனியின் ஆசிரியரே, மிக எளிய இவ்வினாவிற்கு முன்னரே யாககல்பம் எனும் நூலில் அழகிய ஒப்புமையினூடாக கௌதம முனிவர் மறுமொழி பகன்றிருக்கிறார். உடல் மகிழ நீராடும் வெந்நீரிலும், அடுமனையில் வெந்தமையும் உணவிலும் அனல் உறைந்திருக்கிறது. கொல்லனின் உலையில் ஒளிகொண்டு நெகிழ்ந்து இரும்பு அனலென்றாகிறது. விறகோ தன்னை எரித்து கனல் என உருக்கொள்கிறது. ஆயினும் பொன்னொளியுடன் எழுந்தாடும் தழல் ஒன்றே தூயது. வணங்கத்தக்கது. அனைத்திலும் குடிகொள்ளும் அனலை வணங்கும் வேதியர் அவியளிப்பது வேள்விக்குளத்தில் எழும் அனலுக்கு மட்டுமே” என்றார்.
“நன்று! நானும் அந்நூலை பயின்றுள்ளேன். அதையே தாங்களும் கூறுகிறீர்களா என்பதை இவ்வவையில் உறுதி செய்ய விரும்பினேன்” என்றார் இளைய யாதவர். “அதிலிருந்தெழும் அடுத்த வினா இது. அனலென நின்றிருப்பது எது? ஒளியும் வெம்மையும் அதில் நாமறியும் சிறப்பியல்புகள் மட்டுமே. அவையோரே, எவருமே அறியவில்லையெனினும் அனலை அனலென்று ஆக்குவது எது? அதுவே மரம் எரிகொள்ளும்போதும், இரும்பு பழுத்துருகுகையிலும், அன்னம் அமுதாகுகையிலும், குளிர்நீர் இன்னீர் ஆகுகையிலும் நிகழ்கிறது. அவையனைத்தும் கொள்ளும் அனலின் அனல்மை என்ன?” என்றார்.
அவர் எங்கு சென்றுகொண்டிருக்கிறார் என்பதை வைதிகர் எவரும் உணர்ந்ததுபோல தெரியவில்லை. அவை வேதச்சொல்லுசாவல்களில் தொடக்கநிலையினர் பேசுபவை என அவர்கள் அறிந்திருந்தனர். ஒருவரை ஒருவர் விழிகளால் நோக்கிக்கொண்டும் உடல்களை அறியாமல் அசைத்துக்கொண்டும் அவர்கள் அச்சொற்களை செவிகொண்டனர். அவையிலிருந்த கௌதம சிரகாரி “அதற்கும் தொல்நூல்களில் மறுமொழியுள்ளது, சாந்தீபனி ஆசிரியரே. மகாகௌதமரின் பிருங்க சூத்திரத்தில் அனல் எந்நெறிகளின்படி அனைத்தையும் நிகழ்த்துகிறதோ அந்நெறியே அனல் என்று சொல்லப்பட்டுள்ளது” என்றார்.
“பருப்பொருளென இங்கு வெளிப்படும் ஒவ்வொன்றும் நம் புலன்களும் சித்தமும் சென்றுதொடா பெருவெளியில் தங்களுக்குரிய தனிஅறத்தை கொண்டுள்ளன. இங்கு இவ்வாறும் பிறிதெங்கோ பிறவாறும் அவ்வண்ணம் பலநூறாயிரம் கோடி வகைகளிலும் அனல் தன்னை வெளிப்படுத்த இயலும். அறிக, அந்நெறியே அனலெனப்படும்!” என்றார் கௌதம சிரகாரி. “மாறாத் தன்னியல்பின் ஒரு பகுதியையே பொருள் தன் சிறப்பியல்பென்றும் காட்டுகிறது. அவையிரண்டும் வேறல்ல என்று கௌதமம் உரைக்கிறது. குணாகுணிபேதபங்கம் என அந்த முழுதறிதலை கௌதம மரபு குறிப்பிடுகிறது என்பது தாங்கள் அறியாதது அல்ல.”
இளைய யாதவர் ஓங்கிய குரலில் “அவ்வண்ணமெனில், கூறுக! வேதமெனும் அனலின் நெறியென்ன?” என்றார். அவையில் எழுந்த உடலசைவு இளைய யாதவர் செல்லுமிடத்தை வைதிகர் உணர்ந்துவிட்டதை காட்டியது. கௌதமர் “வேதமுடிபினரே, ஒரு பொருளின் இயல்பைக் குறிக்கும் சொல்லே அவ்வியல்புக்கும் நிகரீடு என நிற்கும் என்பதே அளவைநெறியினரின் நிலைபாடு. சொல்தொட்டு அவ்வியல்பை அறிதல், அவ்வியல்பே அதன் நெறியென்று உணர்தல், அந்நெறியே அது என்று தெளிதல், அதுவே அனைத்துமென்றாதல் அளவைநூலோரின் வழி. கடுவெளி மழையெனக் கனிந்து மண்மேல் இறங்குவதுபோல பிரம்மம் சொல்லென்றாகியது. சொல்லே அது. அதை குணசப்தார்த்தபரீக்ஷை என்று கௌதமம் வகுக்கிறது. ஒலியை வணங்குக, ஒலியே மெய்மை என்றாகும்” என்றார்.
“அந்த மெய்மையை கொண்டுள்ள வேதமுடிபினர் ஆயிரம் பல்லாயிரம் மறுப்புகளினூடாக மட்டுமே குறிப்பிடுகிறீர்கள். அளவைநோக்கினனான நான் இச்சூழலில் இந்த மொழியில் இக்காலஇடத்தில் அதை முன்னோர் சொன்ன பிரம்மம் எனும் சொல்லால் சுட்டுவேன். வேதமெனும் அனலின் அனல்மை என்பது பிரம்மமே” என்றார் வசிட்ட குந்ததந்தர். இளைய யாதவர் “நான் மேற்சென்று உசாவ எண்ணுகிறேன், அந்தண முனிவரே. அனைத்திலும் உறைவது அனலே என்றால் அனல்களுக்குள் வேறுபாடுண்டா? எதனால் வேதங்களுக்குள் வேறுபாடு அமைகிறது?” என்றார்.
கௌதம சிரகாரி “ஆம், அனலுக்குள்ளும் வேறுபாடுகள் உண்டு. எங்கு எதையுண்டு எழுகிறது என்பதிலிருந்து அது அமைகிறது. அதர்வம் அழுக்கிலும் ஊனிலும் எரியும் தழல். யஜூர் விறகிலெரிவது. சாமம் அன்னத்தில் எரிவது. ரிக்வேதமோ தூய நெய்யில் எரிந்து எழுவது. பசுநெய் அனல்கொண்ட பின்னர் நெய்யும் எஞ்சுவதில்லை. நீலநிற பீடத்தில் நின்றிருக்கும் வெறுமையின் மேல் தழல் எழுந்து ஆடக் காண்கிறோம். அனலுடன் அது உண்டவற்றில் எரிந்து அனலென்றாகாது எஞ்சியவையும் வெளிப்படுகின்றன. புகையென மணமென. உண்ட அனைத்தும் முற்றிலும் அனலென்றான தழலே ரிக் என்க!” என்றார். “அனலின் தூய்மை அதன் தனிமையால் அளக்கப்படும்.”
இளைய யாதவர் தலையசைத்து “வேதத்தின் தூய்மை எதனால் ஆகிறது என்று எனக்கும் இந்த அவைக்கும் உரைக்கவேண்டும்” என்றார். “சொல்லின் தூய்மை அச்சொல் சுட்டுபொருள் பிறிதொன்றிலாதாகும்போது எழுகிறது. சாந்தீபனியின் ஆசிரியரே, வேதம் அதன் மெய்மையாலேயே விசையும் எழிலும் கொள்கிறது. பிரம்மத்தை கூறும்போது அது பிரம்மம் என்றே ஆகிறது.” அவைநோக்கி திரும்பி வணங்கி “நற்சொற்கள், கௌதமரே. நான் கூற வருவது அனைத்தையும் தங்கள் சொல்லிலிருந்தே இந்த அவை அறியக்கடவதாக!” என்று இளைய யாதவர் சொன்னார். அவையினர் அந்த சொல்லுசாவல் மேல் ஆர்வமற்றவர்கள்போல வெற்றுவிழிகளுடன் அமர்ந்திருந்தனர். அவர்கள் பிறிதொன்றை நோக்கி அது செல்வதற்காக காத்திருந்தனர்.
“அவையினரே, வேதங்கள், வேதக்கூறுகள், துணைவேதங்கள் அனைத்தும் வேதமெய்மை என்றே அறியப்படுகின்றன. ஒவ்வொன்றிலும் வேதம் என இங்கு தன்னை வெளிப்படுத்தியுள்ள பிரம்மத்தின் இருப்புள்ளது. சொல்லில் என வில்லிலும் யாழிலும் கல்லிலும் கலுவத்திலும் அது வெளிப்படுகிறது. மலரும் கனியும் சூடுதலே வேர்முதல் இலைவரை செடியின் இலக்கு. பிரம்மத்தை வேட்பதனால்தான் அதர்வம் வேதமாகிறது. பிரம்மத்தை நிகழ்த்துவதனால்தான் யஜூர் வேதமென்றாகிறது. பிரம்மத்தை இசைப்பதனால்தான் சாமம். பிரம்மத்தைச் சுட்டுவதனால் ரிக் முதல்வேதம்” என்றார் இளைய யாதவர்.
“விழைவே அதர்வம். அளித்தல் யஜுர். உணர்தல் சாமம். அதுவாதல் ரிக் என அறிக!” என இளைய யாதவர் தொடர்ந்தார். “இங்குள்ளவை அனைத்து பிரம்மமே என்று உணர்ந்து இவற்றை விழைந்து எழுவதனால் அதர்வம் பிரம்மஜிஞ்ஞாசை எனப்படுகிறது. இங்குள்ள அனைத்தும் அதுவே என அறிந்து அனைத்தையும் அதற்களிக்கும் சடங்குகளினூடாக யஜுர் ஒருபடி மேம்பட்டதாகிறது. இங்குள்ள ஒவ்வொன்றுக்கும் ஓசையே சாறு என உணர்ந்து அதை கைக்கொள்வதனால் சாமம் அதைவிட மேலானதாகிறது. இங்குள்ள ஒவ்வொன்றாகக் கூறி, மறுத்து மறுத்துச் சென்று, அதுவொன்றே என உணர்ந்து, அதுவே ஆகி நின்றிருப்பதனால் ரிக் வேதங்களில் உச்சமாகிறது.”
“நன்று சொன்னீர், யாதவரே” என்றார் வசிஷ்ட மரபினரான ஊர்ஜர். தலைவணங்கி “உங்கள் பெருமரபால் வாழ்த்தப்பட்டேன், ஆசிரியரே” என்ற இளைய யாதவர் “அவையினரே, ரிக்வேதமே வேதங்களின் மகுடம். அதன் உச்சம் என எழுந்து வருவது அதன் இறுதிப்பகுதி. அவ்விறுதியின் கூர் ஓமெனும் சொல்” என தொடர்ந்தார். “வேதமல்ல, வேதமுடிவே மெய்மை என்று உணர்க! வேதங்களனைத்தும் வேதமுடிவு நோக்கி குவியவேண்டியவை. வேதத்திற்கு வேதமுடிவே மையம். வேதமரத்தின் கனி அது. வேதமெனும் ஆலயத்தின் இறை” என இளைய யாதவர் தொடர்ந்தார்.
“நாம் அறிந்திருப்போம் இப்புவியின் அனைத்து அறிதல்களும் பயனுள்ளவை என. எனவே அனைத்து அறிவும் வேதமே என்று சொல்லப்படுகின்றது. ஆனால் ஓர் அறிதல் மேம்பட்ட அறிதலுடன் முரண்படும் என்றால் மேம்பட்டதே ஏற்கப்படவேண்டும். அவையோரே, துணைவேதங்கள் ஒன்றுடன் ஒன்று முரண்படுமென்றால் எது வேதத்திற்கு அணுக்கமானதோ அது ஏற்கப்படவேண்டும். வேதங்கள் ஒன்றுடன் ஒன்று முரண்படுமென்றால் எது ரிக்வேதத்திற்கு அணுக்கமானதோ அது ஏற்கப்படவேண்டும். கூறுக, ரிக்வேத பாடல்கள் ஒன்றுடன் ஒன்று முரண்படுமென்றால் எது ஏற்கப்படவேண்டும்?”
அவையை நோக்கியபின் கைகளைத் தூக்கி உரத்த குரலில் “எவருக்கும் மாற்றுச் சொல்லிருக்க இயலாது. எது ரிக்வேத முடிபோ அது ஏற்கப்படவேண்டும்” என்றார் இளைய யாதவர். “வேதங்கள் அனைத்திலும் வெளிப்படுவது வேதமுடிபு கண்டடைந்த மெய்மை மட்டுமே. இதை இந்த அவையில் எவர் மறுக்கிறார்கள் என்று அறிய விழைகிறேன்.” கௌதம சிரகாரி “இந்தச் சொல்லாடலை எங்கு இட்டுச் செல்கிறீர்கள் என்று இப்போது மேலும் தெளிவடைந்தேன், இளைய யாதவரே. இவ்வினாக்கள் அனைத்தும் முன்னோர்களால் மீண்டும் மீண்டும் அவைகளில் பேசப்பட்டவை. வேதமுடிபு என்பது மெய்வேதம் உசாவி கண்டடைந்து மறுத்து மேலும் கண்டடைந்து முனிவர் சென்றடைந்தது என்பதை வேதம் அறிந்தோன் மறுக்க மாட்டான். வேதத்தினூடாக சென்றடையும் இடமும் அதுவே என்பதிலும் ஐயமில்லை” என்றார்.
“ஆயினும் ஒன்றுண்டு. இமயத்தின் உச்சியில் ஆமுகம் எனும் ஊற்றில் இருந்து பெருகி வரும் கங்கையே தூயது. விண்ணிற்கு அருகிலுள்ளது. தெய்வங்கள் அங்கிருந்தே அதை கொள்ள முடியும். மாமுனிவர் இங்கிருந்து மலையேறிச் சென்று அதில் நீராடி தங்களை தூய்மை செய்து கொள்ளவும் இயலும். ஆயினும் விரிசடை அண்ணல் அது நிலம் நோக்கி சரிய வேண்டுமென்று விழைந்தார். செல்க பெருகுக என ஆணையிட்டார், சரிந்திறங்கி நிகர்நிலத்திற்கு வந்தது. நூறு நூறு ஓடைகளை இழுத்து தன்னுள் சேர்த்துக்கொண்டது. பல்லாயிரம் கிளைகளாகப் பரவி பாரதவர்ஷமெங்கும் விரிந்து இந்நிலத்தின் குருதி ஓட்டமாக மாறியது. உங்கள் இல்லத்தில் வந்தணையும் வண்ணம் நீங்கள் அருந்தும் குடிநீர் கங்கையே. உங்கள் அழுக்குகளுடன் உங்கள் மூதாதையர் நினைவுகளை கழுவி விடும் நீரும் அதுவே.”
“யாதவரே, தூய வேதமுடிபை முன்னிறுத்தி வேதமெனும் பெருக்கை வகுத்துவிட முடியாது. ஒவ்வொரு படித்துறையிலும் அது என்ன, ஒவ்வொரு வயலிலும் அதன் பயன் எது என்பதைக்கொண்டே முடிவு செய்ய வேண்டும். ஆற்றில் மாசுசேர்க்கலாகாது. ஆனால் வயலில் மாசு உரமென்றாகும். கடல்சேரும்தோறும் கங்கை மாசுடையது, மலைநோக்கும்தோறும் தூய்மைகொள்கிறது. ஆனால் பனிமலைத் தவக்கன்னியை அல்ல கைவிரித்து முலைபெருகிய அன்னையையே மக்கள் தெய்வமெனத் தொழுகிறார்கள்” என்று வசிஷ்ட குந்ததந்தர் தொடர்ந்தார்.
“வேதமுடிபே மெய்மையென்றால் அது வில்லில் எழ வேண்டியதில்லை. மருத்துவர் கலங்களிலும் இசைவாணர் கருவிகளிலும் நிமித்திகர் களங்களிலும் நிகழவேண்டுமென்பதில்லை. எங்களுக்கும் உங்களுக்கும் பெரும் வேறுபாடுள்ளது. நீங்கள் கங்கையை மீண்டும் மலையூற்றுக்கு கொண்டுசெல்ல முயல்பவர்கள்.” அந்தணர் அவையிலிருந்து “ஆம், ஆம்” என ஓசைகள் எழுந்தன. அதிலிருந்த மறுப்பின் விசையை சுப்ரியை திரும்பி நோக்கினாள். பல விழிகளில் வஞ்சத்தையே கண்டாள்.
“நாங்கள் உங்களைப்போல் அருந்தவத்தோருக்காகவோ அறிவில் அமர்ந்தோருக்காகவோ அல்ல வேதமோதுவது. இப்புவியும் உயிர்க்குலமும் மானுடரும் நலம் கொள்ளும்பொருட்டே” என்றார் கௌதம ஏகதர். “எளிய மானுடர் என்று நின்றே நாங்கள் வேதமுணர்கிறோம். புலரி கண்டதும் சென்று கங்கையிலிறங்கி நீரள்ளி ஒளிநோக்கி விடுத்து மூதாதையரை எண்ணி நீராடி அனலோம்பி தெய்வங்களை வாழ்த்துபவர்கள். அன்னமென்றும் நீரென்றும் கங்கையின் மடியில் வாழ்பவர்கள். வேள்விகள் அனைத்தும் வேள்வியின்றி வேதத்தை உணரமுடியாதவர்களுக்காக அமைந்தவையே என்றுணர்க! யாதவரே, நாடும், அரசும், குலமும், குடியும்கூட அவர்களுக்காகவே. ஆமுகத்தில் அமர்பவர்களுக்கு அவையும் தேவையில்லை.”
இளைய யாதவர் “தங்கள் கூற்று தெளிவு அளிக்கிறது, அந்தணரே” என்றார். “கங்கை நிலத்திறங்கும்போது அங்கு நீர்விழைவோனும் நிலம்உழுவோனும் சென்று நின்றிருக்கவில்லை. அதன் விசை அவர்களை அழித்திருக்கும். மண்ணில் எதையும் விழையாத யோகியின் வறண்ட விரிசடையே அதை ஏந்தியது. அது உண்டதுபோக எஞ்சியதே உலகுக்கு அளிக்கப்பட்ட கங்கை. கட்டற்ற கங்கை அழிவென்று அறிக! கட்டுறுத்தும் ஆற்றல்கொண்ட முனிவர் முறை சொல்க என்றே இந்த அவையில் கோருகிறேன்” என்றார்.
“நீரில் எண்வகைக் கழிவுகள், ஆறுவகை செயல்கள் முன்னோரால் தடை செய்யப்பட்டுள்ளன. அதை எவ்வகையிலும் பயன்படுத்தலாம் என மூதாதையர் ஏன் வகுக்கவில்லை? ஏனென்றால் நீர் எங்கு எவ்வுருக்கொள்ளினும் அது கங்கையென்றே இருக்கவேண்டும். முற்றிலும் பிறிதுணர்த்தி நின்றால் கங்கையென்று மண்ணுக்கு தெய்வங்கள் அளித்த ஒன்று மானுடரால் இழக்கப்படும். இசைவாணர் யாழிலோ நிமித்திகர் பன்னிருகளத்திலோ மருத்துவர் மூலிகைக் கலுவத்திலோ வேதத்தை உணர்ந்தாக வேண்டும். வேதமென்பது அதன் மெய்மையே. எனவேதான் வேதமுடிவு எழாத எச்செயலும் வேதத்தால் ஏற்கப்பட்டதல்ல. ஆற்றுபவனை அனைத்திலிருந்தும் விடுவிக்கும் செயலே யோகம். யோகமென இயற்றப்படும் எதுவும் வேள்வியே” என்றார் இளைய யாதவர்.
கௌதம சிரகாரி “ஆம், ஆகவேதான் வேதம் எங்கும் ஒவ்வொரு கணமும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது எனப்படுகிறது” என்றார். “அவ்வண்ணமென்றால் வேள்வி என ஒன்று எதற்கு?” என்றார் இளைய யாதவர். “எங்குமுள்ளது தெய்வம் என்பதனால் எக்கல்லும் தெய்வச்சிலையே. எனினும் கல் ஒன்றைச் செதுக்கி கருவறையில் பீடத்தில் அமர்த்துகிறோம்” என்றார் கௌதம சிரகாரி. இளைய யாதவர் “அவ்வண்ணமெனில் கூறுக, ஒரு செயலை வேள்வி என்றாக்குவது எது? அச்செயலின் நெறிகளா? அச்செயலில் திரளும் உள்ளமா? கூரும் உணர்வா? அன்றி, அச்செயலில் திரளும் மெய்மையா?” என்றார்.
கௌதமர் “அப்பிரிவினை முற்றிலும் அறிவுத்தள உசாவலுக்கானது. முழுமையாக இயற்றப்படும் செயல் தன்னளவிலேயே மெய்மையை உள்ளடக்கியது. மெய்மையே செயலுக்கு ஒழுங்கையும் அழகையும் அளிக்கிறது. அதன் இலக்கை எய்தச் செய்கிறது. இலக்கும் அழகும் ஒழுங்கும் இல்லாத செயல் எவராலும் தொடர்ந்து பயிலப்பட இயலாது. ஆகவே தொடர்ந்து பயிலப்படும் எதுவும் அவை மூன்றையும் அடைந்து மெய்மையென்றாகி நிற்கும் தகைமைகொண்டது. அது எச்செயலாயினும். ஊனறுத்து விற்று மெய்மையை அடைந்தவரின் கதையை நாம் வேதத்தில் காண்கிறோம்” என்றார்.
“உளம் படியாமல் வெறும் கைகளால் ஆற்றப்படும் செயலில் மெய்மை எழுமா?” என்றார் இளைய யாதவர். “உளமென்பது உடலுக்குள் தனித்து இருப்பதில்லை. கையில் நிகழ்வதும் உள்ளமே. நாவிலும் கண்ணிலும் வெளிப்படுவதும் அதுவே” என்றார் கௌதம சிரகாரி. “ஒருவேளை செயல் ஒருவனை மெய்மை நோக்கி கொண்டுசெல்லவில்லை என்றால் அதை செயல்யோகமென்று உரைக்கலாகுமா?” என்றார் இளைய யாதவர். “அவ்வாறு ஒன்று நிகழ வாய்ப்பே இல்லை. எச்செயலுக்கும் அதற்குரிய தெய்வங்கள் உண்டு. செயலை ஆள்பவை, அதன் முழுமையில் வெளிப்படுபவை. அவை அச்செயலுக்கான பயன்களை அளிக்கும் என்பதே அளவைநெறியின் முடிபு” என்றார் கௌதமர்.
இளைய யாதவர் “அந்தணரே, ஆசிரியர்களே, ஒரு செயலின் முழுமையை எவ்வண்ணம் வகுப்பது? அதன் இலக்காலா, வெற்றியாலா? எண்ணத்தாலா செயலாலா?” என்றார். “யாதவரே, செயலின் விளைவு எதிர்காலத்தில், முடிவின்மையில் உள்ளது. அதை எண்ணி எவரும் செயலாற்ற இயலாது. கொள்ளும் இலக்கு என்பதுகூட அறியமுடியாமையிலேயே அமைந்துள்ளது. நாம் அறிவது நம் கையும் நெஞ்சும் ஆற்றும் செயலை மட்டுமே. செயலை நாம் உருவாக்குகிறோம், செயல் நம்மையும் உருவாக்குகிறது. புரவியை நாம் பழக்குகிறோம், புரவி நம்மை இட்டுச்செல்கிறது. நிறைசெயல் ஆற்றும் வழி ஒன்றே. முழுமைநாடி, முழுதுளம்கொடுத்து, பிறழ்வின்றி அச்செயலை ஆற்றுவது. ஒவ்வொரு கணமும் அச்செயலில் இருந்து கற்றுக்கொள்வது. அச்செயலுக்கான தெய்வங்களை மகிழ்வித்து எழுப்புவதே நம் கடன். நம்மை இட்டுச்செல்லவேண்டியவை அத்தெய்வங்களே” என்றார் கௌதம ஏகதர்.
“அச்செயலின் விளைவெனத் திரண்டு நம்முள் எழும் நுண்ணறிவையா, அச்செயலென வெளியே திகழும் நெறிகளையா எவற்றை நாம் உளம்கொள்ளவேண்டும்? அந்நுண்ணறிவுக்கு முரணாக நெறிகள் அமையுமென்றால் செய்யவேண்டியது என்ன?” என்று இளைய யாதவர் கேட்டார். “செயல் என இங்கு நிகழும் அனைத்தும் தங்களுக்குரிய தனியொழுங்கையும் உட்பொருளையும் கொண்டவை என்று அளவைநெறி சொல்கிறது” என்றார் ஏகதர். “ஒவ்வொரு செயலும் இப்புடவியெனும் பெருநெசவின் ஒரு கண்ணி. ஒவ்வொரு கணமும் ஒரு செயலும்கூட” என அவர் தொடர்ந்தார்.
“ஆகவே ஒவ்வொரு செயலையும் இப்புடவிநெசவை ஆக்கும் விசைகளே ஆள்கின்றன. அவை நம் சித்தத்தின் எல்லைகளைக் கடந்தவை. எண்ணித்தேர்ந்து அவற்றை இயற்ற எண்ணுபவன் செயலின்மையிலேயே அமைவான். நற்செயல் தேர்வதும், செயலுக்கு தன்னை அளிப்பதும், செயலினூடாக வளர்வதுமே மானுடன் செய்யக்கூடுவது. சென்றடைவது செயல்படுபவன் அல்ல, செயலே என்றுணர்ந்தால் அவன் முழுமையை அடைகிறான்.” வசிட்ட குந்ததந்தர் “செயலின் நுண்மையெனத் திரள்வதை செயலாற்றுவோன் நம்பவியலாது, யாதவரே. பாற்கடலில் எழுந்தது அமுதும் நஞ்சும் என அறியாத அந்தணர் எவர்?” என்றார்.
கௌதம சிரகாரி “யாதவரே, வேதமுடிபினருக்கும் அளவைநெறியினருக்குமான வேறுபாடு ஒன்றே. ஏந்தும் கலம் இயல்பிலேயே தூயது என்று கொள்ளாமல் வேதமுடிபை எவரும் ஏற்கவியலாது. தன் மெய்மையை முழு மெய்மை என முற்றுணரும் நிலையையே வேதமுடிபினர் உச்சமெனக் கொள்கிறார்கள். நானேயிறை என்னும் உங்கள் ஊழ்க நுண்சொல்லில் நான் என்றும் உள்ளது என உணர்ந்தவரே அளவைநெறிக்கு வருகின்றனர்” என்றார். அவையிலிருந்த அந்தணர்கள் “ஆம்! மெய்ச்சொல்!” என்றனர். சிலர் உணர்வெழுச்சியுடன் எழுந்தனர். கிருசர் கையசைத்து அவர்களை அமரச்செய்தார். கைதொழுது கௌதம சிரகாரியிடம் பேசும்படி கோரினார்.
“வாங்கும் கலம் மாசு முற்றிலும் அகல ஒண்ணாதது என்று அறிவதே அளவைநெறியின் தொடக்கம்” என கௌதம சிரகாரி தொடர்ந்தார். “ஆணவமும் தன்னலமும் அச்சமும் குழப்பமும் சற்றேனும் கொண்டவர்களாகவே நாம் செயலில் இருந்து நம் அறிதலை திரட்டிக்கொள்கிறோம். செயல் மாசிலா நுண்ணறிவை அளிப்பதில்லை. அந்த மாசை அகற்றுவது மேலும் மேலும் செயல்தான். அச்செயலை எய்திய நுண்ணறிவைக்கொண்டு திசை வகுத்தோமென்றால் படிந்த மாசை பெருக்குவதே விளைவென்று ஆகும். ஆகவே செயலுக்கு முற்றளிப்பதொன்றே மெய்மைக்கான வழி.”
“ஆம், மெய்! வேதநெறி அதுவே. வேதம் உரைப்பது அதுவே!” என அவையினர் முழக்கமிட்டனர். சுப்ரியை அங்கு எழுந்தெழுந்து அமைந்த முகங்களை ஒவ்வொன்றாக நோக்கியபடி அமர்ந்திருந்தாள். அங்கு பேசப்படும் ஒரு சொல்லும் தன்னுள் பொருளெனத் திரளவில்லை என்று உணர்ந்தாள். அவை முன்னரே அவர்களால் பேசப்பட்டவற்றின் நீட்சி என்றும், எப்போதும் அப்பூசல் சூழலில் இருந்துகொண்டிருந்தது என்றும் தோன்றியது. அத்தனை காலம் நீடித்தது என்பதனாலேயே அது இறுதிவிடையற்ற வினா. ஆகவே அச்சொற்பூசலில் வெற்றியென்றும் தோல்வியென்றும் ஏதும் இருக்கவியலாது. எங்கு எவர் எப்போது என்பதே முடிவென்றாகிறது.
இந்த அவையில் எது வெல்லும் என அவள் எண்ணினாள். இது நாற்களமாடல். கண்ணுக்குத் தெரியும் களமும் கருக்களும் கருத்தால் அறியப்படத்தக்க வேறு சிலவற்றின் பருவடிவங்கள் மட்டுமே. வெல்வதும் வீழ்வதும் அங்கே நுண்ணுருக்கொண்டு வலுதிரட்டி முரண்பட்டு நின்றிருக்கின்றன. இதை நோக்கி அறிவதைவிட அதை உய்த்தறிவது மேலும் எளிதுபோலும். அவள் பெருமூச்சுவிட்டு பீடத்தில் சாய்ந்து அமர்ந்து விழிகளை மூடிக்கொண்டு அக்குரல்களை கேட்டாள்.