எழுத்தாளனின் ரயிலடி

writer-dharman

ஜெ,

இந்தக்கடிதம் உங்கள் பார்வைக்கு,

இந்த ரயிலடி விவகாரம் பற்றி உங்கள் கருத்து என்ன? விமலாதித்த மாமல்லன் மின்நூல்களுக்கான உரிமையை ஆசிரியர் விட்டுக்கொடுக்கவேகூடாது என்று போராடிக்கொண்டிருக்கிறார்

ஜெயராம்

***

DWppYZKU0AAUZnu

அன்புள்ள ஜெயராம்,

ஓர் ஆண்டுக்கு முன் என நினைக்கிறேன், சோ.தருமன் அழைத்திருந்தார். கண்ணீரும் குமுறலுமாகப் பேசினார். காலச்சுவடு அவருடைய கூகை நாவலை வெளியிட்டிருக்கிறது. ஒப்பந்தம் ஆங்கிலத்தில். அதில் என்ன பெரிதாக இருக்கப்போகிறது என அவரும் எவரையும் வைத்துப் படித்துப் பார்க்கவில்லை. எவரேனும் நல்லபடியாக வெளியிட்டால் சரி என்றுதான் அவருக்குத் தோன்றியிருக்கிறது.

ஆனால் நாவல் பரவலான வரவேற்பைப் பெற்றது. ஆங்கிலத்திலும் மலையாளத்திலும் மொழியாக்கம் செய்யப்பட்டது. மொழியாக்கத்தில் கிடைக்கும் ஆசிரியர் உரிமைத்தொகை [ராயல்டி]யில் பாதி காலச்சுவடுக்கு என ஒப்பந்தத்தில் இருந்திருக்கிறது. இவ்வளவுக்கும் மொழியாக்கம் கொண்டுவர காலச்சுவடு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. மலையாள மொழியாக்கம் முழுக்க முழுக்க சோ.தருமன் முயற்சியில் நடந்தது.

ஆனால் காலச்சுவடு அப்பதிப்பகங்களுக்கு எழுதி நூலின் உரிமை தன்னிடம் என்று சொல்லி மொத்த உரிமைத்தொகையையும் வாங்கி அதில் அறுபது சதவீதத்தை எடுத்துக்கொண்டு எஞ்சியதைக் கொடுப்பதாக அறிவித்தது. அதையும் உடனே கொடுக்கமுடியாது பின்னர் கணக்குதீர்ப்பதாகச் சொன்னது.

ஆங்கிலமொழியாக்கத்தின் உரிமைத்தொகை சற்றுப் பெரிது. சோ.தருமன் ஆலைத்தொழிலாளராக இருந்து வேலை இழந்தவர். விவசாயவேலை நிரந்தரமல்ல. அந்தப்பணம் மிகமிக தேவைப்படும்நிலையில், அதாவது சாப்பாட்டுக்கே தேவையான நிலையில் இருந்தார். என்ன செய்யலாம் என என்னிடம் கேட்டார்.

ஒரு பதிப்பகம் நூலை அச்சுக்கோத்து, பிழைதிருத்தி, பிரதிமேம்படுத்தி, அச்சிட்டு, சேமிப்பில் வைத்து, வினியோகித்து, கணக்கு வைத்துக்கொள்வதன் கூலியாகவே லாபத்தை எடுத்துக்கொள்கிறது. அந்நூலின் பிறமொழி மொழியாக்கங்களில் அதற்குச் சம்பந்தமே இல்லை. அத்தனை உரிமைகளையும் எழுதி வாங்கிக்கொண்டு வெளியிடுவதிலுள்ள அறம் என்ன?

இலக்கியத்தில் இப்படி ஓர் ஒப்பந்தம் பற்றி நான் கேள்விப்பட்டதே இல்லை. என்ன சுரண்டல் இது என கொந்தளித்தேன். இது சட்டபூர்வமாக நிற்காது என நினைத்தேன். உடனே ஹரன் பிரசன்னாவுக்கு போன்போட்டு கேட்டேன்.காலச்சுவடு போட்டது எழுத்துபூர்வமான முறையான ஒப்பந்தம், ஆகவே சட்டபூர்வமாகச் செல்லுபடியாகும் என்றார். சோ.தருமன் மீண்டும் அழைத்தபோது ‘ஒன்றும் செய்யமுடியாது என்கிறார்கள், நீங்கள் கையெழுத்துபோட்டுவிட்டீர்களே’ என்றேன். அவரும் சோர்ந்துவிட்டார். பிறகு என்ன ஆகியது என தெரியாது.

விமலாதித்த மாமல்லன் இணையப்பதிப்புரிமை சம்பந்தமாகப் போடும் பூசல் எழுத்தாளர்கள் அனைவருக்குமாகத்தான் என நினைக்கிறேன். இது இருபதாண்டுகளுக்கு முன் சினிமாவில் நிகழ்ந்தது. மின்னணு உரிமையும் சேர்த்து என்னும் வரியைப் படிக்காமல் ஏராளமான சினிமாக்களை அடிமாட்டுவிலைக்கு விற்றிருக்கிறார்கள். பின்னர் அவை தொலைக்காட்சியில் கோடிகோடியாக பணம் ஈட்டின. இன்று இணையத் தரவிறக்கநிலையங்கள் வந்தபின் மேலும் பெரிய சொத்துக்களாக ஆகிவிட்டன. என்னிடம் சென்ற ஆண்டு ஒரு தயாரிப்பாளர் கதறி அழுதார். அவர் திரும்பிப்போக பஸ்கட்டணத்தை நான் அளிக்கவேண்டிய நிலை.

சட்டபூர்வமான ஒப்பந்தங்களில் மிகக்கவனமாக இருந்தாகவேண்டியிருக்கிறது. எழுத்தாளர்கள் இனிமேல் பதிப்பாளர்களைப் பெரிதாக நம்பவேண்டியதில்லை. பதிப்பாளர் இன்று அச்சிட்டு சேமிப்பு வைப்பதில்லை, தமிழகமெங்கும் கொண்டுசெல்வதுமில்லை. 300 பிரதிகளே பெரும்பாலும் அச்சிடப்படுகின்றன. அவை வலை வழியாகவே விற்கின்றன. அவற்றை ‘பிரமோட்’ செய்வது எழுத்தாளன்தான்.

இதையெல்லாம் நானும் செய்யலாம். ஆனால் என் இயல்புக்கு ஒரு ரயில் டிக்கெட்டையே ஒழுங்காகப் போடமுடிவதில்லை. என் மனமும் அந்த நிலையில் இருப்பதல்ல. என் பெரும்பாலான நூல்கள் பதிப்புரிமைத் தொகை ஏதும் பெறாமல்தான் வெளியாகின்றன. என் நூல்களின் எண்ணிக்கை, விற்பனைக்கும் நான் ஈட்டும் பணத்துக்கும் சம்பந்தமே இல்லை. ஆனால் எழுத்தாளர்கள் சுதாரித்துக்கொள்வது நல்லது

ஜெ

சூல் –ஒருபார்வை

சோ தருமன்

 

 

முந்தைய கட்டுரைவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–74
அடுத்த கட்டுரைஅமேசானில் ‘தெய்வங்கள் பேய்கள் தேவர்கள்’