திராவிட இயக்கங்களின் மறுபிறப்பு
ஜெ,
திராவிட இயக்கங்களின் மறுபிறப்பு கட்டுரையை வாசித்தேன். அடிப்படையில் திராவிட இயக்கங்களின் பிறப்பு சாதிக்காழ்ப்பிலிருந்து. பரப்பியல் அரசியலில் இருந்து. ஆனால் அதிலிருந்து ஜனநாயக அரசியல் நோக்கிய ஒரு நகர்வை அண்ணா செய்தார். அதனால்தான் அவர்கள் ஆட்சியைப்பிடிக்கமுடிந்தது. அதாவது முதல்முறை மறுபிறப்பு அடைந்தபின்னர்தான் அவர்கள் வளர்ந்து இன்றிருக்கும் நிலையை அடைந்தனர். பெரியாரை நிராகரித்திருக்காவிட்டால் திராவிட இயக்கம் அன்றே இன்றிருக்கும் நாம்தமிழர் கட்சி மாதிரித்தான் இருந்திருக்கும்.
இன்று இன்னும் ஒருபடி மேலே சென்று எதிர்மறையரசியலை, காழ்ப்பரசரியலை அது கைவிட்டு மாநிலை உரிமைகளைப்பற்றி மட்டுமே பேசும் ஒரு வளரச்சியரசியலைக் கையிலே எடுக்கவேண்டும் என்பதுதான் என்னைப்போன்றவர்களின் எண்ணமும்கூட
தங்க செல்வராசன்
அன்புள்ள ஜெ
பெரியாரிடமிருந்து பிரிந்து வந்தபோது அண்ணா சொன்னதே பெரியாரின் அர்த்தமில்லாத கோபங்களை கைவிடுவதைப்பற்றித்தான். அண்ணா எங்கெல்லாம் பெரியாரை நிராகரித்தார் என்று பார்ப்பது இன்றைய சூழலுக்கு மிக முக்கியமானது
*அண்ணா பெரியாரின் இந்தியதேசிய எதிர்ப்பை ஏற்றுக்கொள்ளவில்லை. சுதந்திரநாளை துக்கநாளாகக் கொண்டாட மறுத்தார்.
*அண்ணா பெரியார் தமிழ்ப்பண்பாடு பற்றியும் தமிழ்மொழி பற்றியும் சொன்னவற்றை ஏற்றுக்கொள்ள மறுத்தார்
*அண்ணா மூர்க்கமான நாத்திகவாதத்தை வெறுத்து ஒதுக்கி ஒன்றேகுலம் ஒருவனே தேவன் என்ற திருமூலரின் வரியை முன்னிறுத்தினார்.
*அண்ணா பெரியாரின் தலித் வெறுப்பை மறுத்தார். பெரியார் அம்பேத்கருக்கு எதிராக கொட்டிய காழ்ப்பை ஏற்றுக்கொள்ளவில்லை
இந்த நாலு அம்சங்கள்தான் அண்ணாவின் அரசியல். பெரியாரிடமிருந்து அவர் மாறுபட்டது. அதற்காகவே பெரியார்தரப்பினர் அண்ணாவை தாசிமகன் என்ற அளவிலேகூட எழுதினர். அண்ணா ஜெயித்துவிடக்கூடாது என பெரியார் பாடுபட்டார்
ஆனால் தனிப்பட்டமுறையில் பெரியாரை அண்ணா நிந்திக்கவில்லை. ஆட்சியமைக்க வாய்ப்பு கிடைத்தபோதும் அண்ணா பெரியாரையே தன் குரு என்று சொன்னார்
எழுபதுகள் வரை அண்ணா அரசியல்தான். பெரியார் ஒரு ஊறுகாய் மாதிரி பெயரளவிலேதான்
எழுபதுகளுக்குப் பின்னர், சொல்லப்போனால் எம்ஜிஆர் அமோக வளர்ச்சி அடைந்தபிறகு. திமுகவுக்குக் கொள்கைச்சிக்கல் வந்தது. அண்ணாவின்பெயரை அதிமுக எடுத்துக்கொண்டது. திமுகவுக்கு இன்னும் ‘தீவிரமான’ கொள்கை அடையாளம் தேவைப்பட்டது.
அன்றைக்கு எம்ஜியாரின் கடுமையான பிரச்சாரத்தால் ஊழல் கட்சி என்ற முத்திரையுடன் இருந்த திமுகவுக்கு ஒரு கடுமையான கொள்கைமுகமும் தேவையாகியது.
ஆகவே அதுவரை பெரிதாகக் கண்டுகொள்ளப்படாத பெரியாரை எடுத்து பேச ஆரம்பித்தார்கள்.
அதோடு அன்று வீரமணி வேறு எம்ஜியாரோடு குலவிக்கொண்டிருந்தார். அவருக்கு ஆப்பு வைக்கவும் பெரியாரை திமுக எடுத்துப்பேச ஆரம்பித்தது. பெரியார் பற்றி எழுதும் அறிவுஜீவிகள் உருவாகி வந்தார்கள்
அதோடு எழுபதுகளில் தமிழகமெங்கும் தலித் இயக்கங்கள் உருவாகி வந்தன. அவை அம்பேத்கரை முன்னிறுத்தியபோது எதிரில் அதைவிடப்பெரிய ஐகான் ஆக பெரியாரை நிறுத்தவேண்டியிருந்தது.இவ்வாறுதான் பெரியாரை தமிழகம் மீண்டும் கட்டி உருவாக்கி நிறுத்திக்கொண்டிருக்கிறது
அண்ணாவின்பாதையே மக்கள்பாதை. ஜனநாயகப்பாதை. திமுக அதற்கு திரும்பினாலோ அதிலிருந்து மேலே சென்றாலோ மட்டுமே மக்களியக்கமாக ஆகமுடியும்
துரை மாணிக்கம்.
அன்புள்ள ஜெ
திராவிட இயக்கங்களின் மறுபிறப்பு கட்டுரை கண்டேன். பி.ஏ.கிருஷ்ணன் பெரியார் பற்றி எழுதிய இந்தக்கட்டுரையை உங்கள் கவனத்துக்குக் கொண்டுவரவிரும்புகிறேன்
அர்விந்த்