காரைக்குடி புத்தக கண்காட்சியில் மூன்றாவது ஆண்டாக ஒரு அரங்கு எடுத்து புத்தகங்களை விற்பனை செய்தேன். நவீன இலக்கிய வாசிப்பும் அறிமுகமும் உள்ளவர்கள் காரைக்குடியில் எத்தனை பேர் உள்ளார்கள் என அறிந்து கொள்வதும் ஒரு நோக்கம் தான்.நவீன இலக்கியத்திற்கான வாசக பரப்பு அமைந்தால் தானே அங்கிருந்து எழுத்தாளர்கள் எழ முடியும்.
மரபிலக்கியம் வேரூன்றிய அளவுக்கு நவீன இலக்கியம் இங்கு வேர்கொள்ளவில்லை. இந்த சிந்தனைகளின் தொடர்ச்சியாக இப்பகுதியில் உள்ள இலக்கிய ஆர்வலர்களை ஒருங்கிணைத்து சிறிய கூடுகையை ஏற்பாடு செய்யலாம் என எண்ணினேன். புத்தக கண்காட்சி அரங்கில் இலக்கிய ஆர்வலர்கள் தொடர்புகொள்ள என சிறிய தட்டியை வைத்தேன். சுமார் இருபத்தி ஐந்து நபர்கள் பெயரளித்து உள்ளார்கள்.
ஞாயிறு (25/2/18) மாலை 4.30 மணிக்கு ‘மரப்பாச்சி இலக்கிய வட்டத்தின்’ முதல் கூடுகை காரைக்குடி காவேரி மருத்துவமனை வளாகத்தில் நிகழவிருக்கிறது. ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிறு அன்று கூடுகை நடத்தலாம் என்று திட்டம். எத்திசையில் கொண்டு செல்வது என்பதை எல்லாம் இனிதான் முடிவு செய்ய வேண்டும். பார்ப்போம் எப்படி போகிறது என்று. சந்தர்ப்பம் அமைந்தால் உங்களை ஒருமுறை இங்கு அழைக்க வேண்டும்.
அன்புடன்
சுனில் கிருஷ்ணன்