துளிச்சொட்டு சாஸ்தா -கடிதங்கள்

IMG_20180216_092040

ஆனைக்கல் துளிச்சொட்டு சாஸ்தா

ஜெ

 

 

நான் ஒருபோதும் சலிப்பூட்டும் உரையாடல்காரனாக இருக்க விரும்புவதில்லை. –  கீழ்ப்படிதல், முரண்படுதல் பற்றி…

 

உண்மைதான் சுவாரஸ்யமான அபாரமான உரையாடல்காரர் நீங்கள். வேளிர் மலைப் பயணத்தில் அனுபவப் பூர்வமாய் உணர்ந்து கொண்டேன். அதிகாலை அரைகுறை வெளிச்சத்தில் உங்களைப் பார்த்ததிலிருந்து மலையேறும் வரை நீங்கள் அதிகமும் எங்களோடு பேசவில்லையெனினும், கொஞ்ச நேரத்திலேயே ஓர் ஒத்திசைவு ஏற்பட்டது நம் அனைவருக்கும். வராலாற்றுத் தகவல்களால் மூளையை நிறைத்துக் கொண்டேயிருந்தீர்கள். நாகர்கோவில் மங்களாத் தெருவில் கிறுத்துவம் நிகழ்த்திய கலாச்சார மற்றும் பொருளியல் மாற்றம் முதல் ராணி மங்கம்மாளின் நிருவாகத்திறன் உட்பட பல விசயங்கள் தொடர்பாய் விரிவாக உரையாடினீர்கள். குகைகள் உருவாவது  முதல் காடுகள் உருவாக்கம் தொடர்பான தகவல்கள் அபாரம். The house of blue Mangoes மின்புத்தகமாய் தேடிக் கொண்டிருக்கிறேன். இன்னும் கிடைத்தபாடில்லை. அச்சுப் புத்தகமாகத்தான் வாங்க வேண்டும் போலும். கட்டுரையில் சறுக்கி விழுந்ததைப் பற்றிக் குறிப்பிட்ட நீங்கள் சில இடங்களில் சோர்வையும் மீறி எங்களுக்கு முன்னர் மலையில் ஏறியதைக் குறிப்பிடவில்லை. மலைச் சரிவில் சிறு மலை வெடிப்பில் சுக்குநாறிக் கூட்டத்திற்கும் மலைக்கும் இடையேயான உயரமான பாறைக்கு அவ்வளவு சோர்விலும் முதலில் சென்றது நீங்கள்தான். அதன் பின்னரே நானும் அஜிதனும் வந்தோம்.  The house of blue Mangoes  போல குமரி மாவட்டத்தினைப் பின்புலமாகக் கொண்ட ஆங்கில நாவல்கள் இருந்தால் பரிந்துரைக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

 

 

நன்றி.

இரா. பாலா

நாகர்கோவில்

t6

ஜெ

 

சாதாரணமான ஒரு கட்டுரையில்கூட இயல்பாக ஓர் உச்சம் நிகழ்வதை உங்கள் கட்டுரைகளில் நான் படித்துக்கொண்டிருக்கிறேன். துளிச்சொட்டு சாஸ்தா கோயில் ஒரு அன்றாட டைரிக்குறிப்பு போல சுருக்கமான செய்திகளாக ஆரம்பமாகியது. ஆனால் அது பாறைகளைப்பற்றிச் சொல்லுமிடத்தில் ஒரு தேர்ந்த புனைவுபோல தோன்றியது

 

 

அது எனக்கும் தோன்றிய உணர்ச்சி. அதை இம்மாதிரியாக சொற்களால் என்னால் சொல்லமுடியாது. அதை இப்படிச் சொல்கிறேனே. மரங்கள் வீடுகள் விலங்குகள் எல்லாமே நம்முடன் உரையாடுகின்றன என்றும் பாறைகளுக்கும் நமக்கும் சம்பந்தமே இல்லை என்றும் தோன்றும். பாறைகள் ஊமைகள். அவை நம்மை அறிவதே இல்லை. நாம் அவற்றுடன் ஒருவகையிலும் அணுகமுடியாது. ஒருவகையான மன அழுத்தத்தையே எனக்கு அளிக்கும். பாறையை பார்த்தால் ஓ என்று கத்தவேண்டும் என்றும் எதையாவது எடுத்து அதில் அடிக்கவேண்டும் என்ரும் தோன்றும். சிலசமயம் அதன்மேல் படுக்கவேண்டும் என்றும் தோன்றும். அந்த உணர்ச்சிகளை அக்கட்டுரையிலே கண்டது ஆச்சரியமாக இருந்தது

 

 

மா.ராஜவேல்

 

துளிச்சொட்டு சாஸ்தா -கடிதங்கள்

 

முந்தைய கட்டுரைவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–72
அடுத்த கட்டுரைஅடிப்படைவாதம் பற்றி…