வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–70

பகுதி பத்து : பெருங்கொடை – 9

bl-e1513402911361களைத்து படுத்து துயின்று மிக விரைவிலேயே ஏதோ ஓசை கேட்டு சுப்ரியை எழுந்துகொண்டாள். அந்த ஓசை என்ன என்று அறிந்தாள், விசைகொண்ட ஒரு தென்றல்கீற்று அறைக்குள் சுழன்று சென்றிருந்தது. பித்தளைத்தாழ் எவரோ வந்துசென்றதன் தடயம் என அசைந்துகொண்டிருந்தது. சொல்லி முடித்த உதடுபோல மெல்ல அமைந்தது சாளரத்திரை. அவள் பெருமூச்சுடன் எழுந்து சென்று உப்பரிகையை அடைந்து இருண்ட தோட்டத்தை நோக்கிக்கொண்டு நின்றிருந்தாள். இருளுக்குள் இலைகள் அசைவிழந்திருந்தன. பின்னர் மீண்டுமொரு காற்றில் இருள் கலைவடைந்தது.

தூணைப் பற்றியபடி உப்பரிகை விளிம்பில் அமர்ந்தாள். விண்மீன்கள் சில இலைகளினூடாக தெரிந்தன. இலைகளிலிருந்து இளவெம்மைகொண்ட ஆவிக்காற்று எழுந்தது. எங்கோ பசுவின் புதுச்சாணியின் மணம். மிகத் தொலைவில் யானை உறுமியது. ஒரு வண்டி சகடம் குலுங்க விரைந்துசென்றது. மிகத் தொலைவில் புரவி ஒன்றின் கனைப்பு நகைப்போசை என கேட்டது. காவல்பொழுது மாற்றத்தை அறிவிக்கும் கொம்போசையை கேட்டாள். அத்தனை நேரம் கடந்துவிட்டதா என வியந்தாள். அதுவரை என்ன எண்ணிக்கொண்டிருந்தோம்? எதுவுமே எண்ணவில்லை. ஆனால் எதுவும் எண்ணாமல் ஒருவர் அமர்ந்திருக்க முடியுமா?

பெருமூச்சுவிட்டபடி அசைந்து அமர்ந்தாள். அறைக்குள் சென்று மண்குடுவையிலிருந்து குளிர்நீர் அருந்தவேண்டுமென நெஞ்சு தவித்தது. ஆனால் அங்கிருந்து எழமுடியுமென தோன்றவில்லை. எழுந்து எழுந்து சலித்து பின் உடலிலேயே அமைந்தது அவள் உள்ளம். நெடுநேரம் அசைவில்லாது அமர்ந்திருந்தமையால் தோள்கள் கடுத்தன. சோம்பல்முறித்த பின்னர் திரும்பி அமர்ந்தாள். அமர்ந்திருக்கையில்கூட உடல் களைப்பு கொள்கிறது. ஏனென்றால் உடற்தசைகள் ஓய்வில் இல்லை. திமிறி விலகும் தசைகளை பிற தசைகள் பற்றி இழுத்து நிறுத்தியிருக்கின்றன. அவற்றின் நிகர்நிலையையே உடல் என்கிறோம்.

சபரி உடனிருந்தால் நன்று என ஓர் எண்ணம் எழுந்தது. அவளுடைய சொற்களில் அறிவும் கூர்மையும் அமைவதேயில்லை. எளிய அடுமனைப்பெண் போன்றவள். அணுக்கச் சேடியர் வழக்கமாகக் கற்றிருக்கும் நெறிநூல்களையும் காவியங்களையும்கூட அவள் அறிந்திருக்கவில்லை. ஆனால் அவளுடைய அண்மை எப்போதும் தேவைப்பட்டது. சேடியர் கட்டுத்தறிகள்போல. அவர்களில்லையேல் களமும் நெறியும் நிலைகொள்வதில்லை. ஒவ்வொரு கணமும் அவள் கைவிட்டுச் செல்லும் உலகை நினைவுறுத்துபவள் சபரி.

முந்தையநாள் அந்தியில் திரும்பும்போது அவள் சொன்ன ஒரு வரி அவளை திடுக்கிட்டு நோக்கச் செய்தது. “உடன்பிறந்தவரும் நீங்களும் ஒன்றே, அரசி. அவர் கொண்ட பெருவிருப்பும் நீங்கள் கொண்ட கொடுவஞ்சமும் நிகர்.” அவள் “ஏன்?” என்றாள். “தெரியவில்லை, தோன்றியது” என்றாள் சபரி. “அவர் எண்ணியதை ஆழம் எண்ணவில்லை. உங்களுக்கும் அவ்வாறுதானா?” சிலகணங்களுக்குப் பின்னர் சுப்ரியை சூள்கொட்டி தன்னை தெருவை நோக்கி திருப்பிக்கொண்டாள்.

மாளிகை முகப்பை அடைந்தபோது சபரி “அரசர் இன்னும் வந்துசேரவில்லை” என்றாள். சுப்ரியை அதை கேட்டதாகவே காட்டிக்கொள்ளவில்லை. சபரி “அவர் அங்கே களியிலிருந்து விழித்து மீண்டும் குடிக்கத் தொடங்கியிருப்பார்” என்றாள். சுப்ரியை களைப்பு கால்களை தளரச்செய்ய மேலே சென்றாள். ஆடைகளைக் களைந்து நீராடி மாற்றாடை அணிந்து தன் அறைக்குள் சென்றபோது கதவுகளை மூடி உள்ளே பதுங்கிக் கொள்ளவேண்டும் என்று தோன்றியது. சபரி வந்து “இரவுணவு கொண்டுவரவா, அரசி?” என்றபோது “வேண்டாம்” என்றாள். “பால் மட்டுமாவது கொண்டுவருகிறேன்” என்றாள் சபரி. அவள் தலையசைத்தாள்.

களைப்பில் கைகளைத் தூக்கி பால்குவளையை வாங்கவும் இயலவில்லை. கண்ணிமைகள் சரிந்தபடியே இருந்தன. எழுந்து சென்று மஞ்சத்தில் படுத்தபோது அதில் புதைந்து கரைந்தழிந்துவிடுவோம் என்று தோன்றியது. சேற்றுமண்ணில் விழுந்த வாழை என மறுநாள் தன் உடல் மட்கி அதன்மேல் கிடக்கும். கண்களை மூடிக்கொண்டபோது சுதர்சனையின் முகத்தை அருகே கண்டாள். அவள் விழிகளை நோக்கியபடி உள்ளத்தில் அசைவிலாது இருந்தபோது தான் கலிங்கத்தில் இருப்பதாக நினைத்தாள்.

மெல்லிய புன்னகையுடன் சுதர்சனை “கலிங்கம் சிந்துவிலிருந்து நெடுந்தொலைவில் உள்ளது” என்றாள். “ஆம், ஆனால் ஒரு சிறுவெண்புறா பறந்துசெல்லும் தொலைவுதான்” என்றாள் சுப்ரியை. “சென்றுவிட்டதா?” என்று சுதர்சனை கேட்டாள். “இன்னும் கிளம்பவில்லை” என்று அவள் சிரித்தபடி விழிதிருப்பிக்கொண்டாள். மென்மையான தசையில் பூமுள் குத்தியிருப்பதுபோல, விரலால் அதை மெதுவாக வருடிக்கொண்டிருப்பதுபோல உள்ளம் குறுகுறுத்தது. “ஏன்?” என்றாள் சுதர்சனை. அவள் “அறியேன்” என்றாள்.

அருகிலிருந்த விறலி சமீரை “அது முட்டைக்குள் இருக்கிறது. இப்போது இரு முதற்துளிகளாக கடுகுபோன்ற கண்கள் மட்டுமே எழுந்துள்ளன. அக்கண்களின் நோக்கு வெளியே நீளவில்லை. தன் அகம்நோக்கி நான் என்கிறது. இனி அது நான் வளர்க என்று சொல்லும். நின்றிருக்க மரமல்லி மலர்போல சிறிய கால்கள் எழும். அதன்பின் பஞ்சுப்பிசிறுபோல சிறகுகள். சிறகுவிரிக்க இடம்தேடி உள்ளே சுற்றிவரும். நெல்மணி போன்ற சிறிய அலகு என அவ்விழைவு கூர்கொள்ளும். தன்னைச் சூழ்ந்திருக்கும் மிகச் சிறிய வெண்ணிற வானை அது குத்திக் கிழிக்கும். மிகப் பெரிய வானை நோக்கியபடி எழுந்து நின்று சிறகடித்து ஈரம் களையும்” என்றாள்.

“பின்னர் அது வானை எண்ணியே கணம்தோறும் வாழும். மரக்கிளையில் நின்று வான் வான் என ஏங்கும். பொய்ச்சிறகடிப்பில் உள்ளத்தால் பறக்கும். காற்றை சிறகும் சிறகை காற்றும் அறிந்த பின்னர் வானில் எழும். கீழே அமிழும் இம்மாளிகையை, இச்சிறுநகரை, இந்த நாட்டை நோக்கி புன்னகைத்தபடி மேற்குவெளியில் மறையும்” என்றாள் சமீரை. சுதர்சனை  சிரித்து “எங்கிருந்தடி இக்கவிதை?” என்றாள். “நானே புனைந்தது, இப்போது” என்றாள் அவள். “இவளைப்போன்ற சேடியர் சொல்வதைக் கேட்டு அவரைப்பற்றி எண்ணம் கொண்டிருக்கிறாய். அவர் எவரென்று நாம் அறியவே முடியாது” என்றாள் சுதர்சனை. “அரசுசூழ் அவையிலமர்ந்து சைந்தவர் எனக் கேட்டால் முற்றிலும் பிறிதொருவரை அளிப்பர் அமைச்சர்.”

எரிச்சலுடன் “பிறகெப்படி நமக்குரிய ஆணை தெரிவு செய்வது?” என்றாள் சுப்ரியை. “இப்புவியை, இக்குலத்தை, இவ்வுறவுகளை நீயா தெரிவு செய்தாய்? தெய்வங்களுக்கு அதை விட்டுவிடுக! நான் செய்யவிருப்பது அதுவே” என்றாள் சுதர்சனை. சுப்ரியை உதட்டைச் சுழித்தாள். “என் சொற்களைக் கேள். அவரை நீ உளம்கொண்டிருப்பது அவருக்குத் தெரிந்தாலும் உன்னை அவர் வெல்வது நிகழுமென்று உறுதியில்லை. நம் தந்தையின் அரசியல் கணக்குகள், சூழ்ந்திருக்கும் அரசர்களின் ஆற்றலின் நிகராடல்கள். அனைத்துக்கும் அப்பால் அவருடைய அரசியலுக்கு இது தேவையென்று தோன்றவும் வேண்டும். பாரதவர்ஷத்தின் அரசியலோ ஒவ்வொருநாளுமென மாறிக்கொண்டிருக்கிறது.”

“அங்கம் நம் அண்டைநாடென்பதனாலேயே எதிரிநாடு. அங்கத்தின் நட்புநாடு சிந்து” என்று சுதர்சனை  தொடர்ந்தாள். “இதையெல்லாம் எண்ண எனக்கு ஆற்றல் இல்லை, நான் உளம்கொண்டுவிட்டேன். அதுவன்றி எதையும் நான் அறியவேண்டியதில்லை” என்றாள் சுப்ரியை. “நீ கதைகளில் வாழ்கிறாய். வாளின் நிழலைக் கண்டு உளம்கொண்டு பின் தவமிருந்து அத்தலைவனை அடைந்த இளவரசியின் கதைகள் முதிரா இளமையில் கேட்க இனிதானவை. அவ்வண்ணம் சில நடந்துமிருக்கும், அவையே சூதர்பாடலாகின்றன. உளம்கொண்டவனை அடையமுடியாது ஏங்கி அழிந்த அரசியரை சூதரும் கவிஞரும் சொல்வதேயில்லை.”

சுப்ரியை அவளுடன் மேலும் பேசப் பிடிக்காமல் அமைதியாக இருந்தாள். “நான் அவரைப்பற்றி உசாவினேன். அவருடைய இயல்புகள் வேறு. ஆணவமும் தனிமையும் கொண்டவர். நற்பண்புள்ள தந்தையால் வளர்க்கப்பட்டவர் அல்ல. குடிப்பழி ஒன்று அவர் தந்தையை தொடர்கிறது. அது அவரையும் உருத்துவந்து ஊட்டும்” என்றாள் சுதர்சனை. சுப்ரியை எழமுயன்றாள். “என்னடி, உண்மை உறுத்துகிறதா? எண்ணிப்பார்” என்றாள் சுதர்சனை.  “நான் அவரைப்பற்றி எண்ணுவதை விட நீதான் எண்ணிக்கொண்டிருக்கிறாய்” என்றபடி சுப்ரியை எழுந்தாள். முகம் சிறுக்க “என்னடி சொல்கிறாய்?” என்றாள் சுதர்சனை.

“ஆம், எண்ணிப்பார். சென்ற ஓராண்டாக இதைத் தவிர எதையேனும் என்னிடம் நீ பேசியிருக்கிறாயா?” சுதர்சனை  “நீ என்னை சிறுமைசெய்கிறாய்” என்றாள். “இல்லை, இப்போதுதான் உன்னை புரிந்துகொள்கிறேன்” என்றாள் சுப்ரியை. “நன்று, சிறுமைசெய்து என்னை விலக்கி உன் கனவை காத்துக்கொள்வாய் என்றால் அவ்வாறே ஆகுக. ஆனால் ஒன்று நினைவுகொள். நீ எண்ணியது நிகழ எவ்வகையிலும் வாய்ப்பில்லை. ஜயத்ரதருக்கும் தொலைநிலமாகிய கலிங்கத்தால் ஆவதொன்றில்லை. அஸ்தினபுரியின் கரும்பனையைத்தான் அவர் விழைவார். அதுவே அவருக்கு துவாரகையை எதிர்கொள்ளும் படைவல்லமையை அளிக்கும். கலிங்கம் மகதத்திற்கும் அஸ்தினபுரிக்கும்தான் இன்று தேவை. அவர்களில் ஒருவரால் வேட்டைவிலங்கென நீ துரத்தி வெல்லப்படுவாய். கூண்டில் சிறகொடுக்கி வாழ்வாய். அதுதான் உன் ஊழ்” என்றபடி சுதர்சனை  எழுந்து சென்றாள்.

அவள் சொற்கள் சுப்ரியையை உளம் நடுங்கச் செய்தன. அவள் அத்தனை கூர்மையாக அவளை தாக்கவேண்டும் என விரும்பவில்லை. உண்மையிலேயே அவள் சொற்கள் தன் கனவை கலைத்துவிடலாகாதென்று அஞ்சியே அவ்வாறு சொன்னாள். அவள் சென்று மறையும் சிலம்பொலியைக் கேட்டபடி அமர்ந்திருந்தாள். விறலி “நீங்கள் நேரடியாகப் பேசியிருக்கக் கூடாது, இளவரசி” என்றாள். “ஏன்?” என்று அவள் கேட்டாள். “எப்போதும் வண்ணம் மயங்கி ஆடும் இந்தக் களத்தில் நேர்ச்சொற்கள் அனைத்தும் நஞ்சும் கூர்மையும் மிகுந்தவை. இத்தனை அணிச்சொற்களும் கவிதைகளும் அதனால்தான் தேவையாகின்றன” என்றாள் விறலி.

சுப்ரியை எழுந்து மேலாடையை தலைக்குமேல் போட்டுக்கொண்டு நடந்தாள். சபரி எங்கிருக்கிறாள் எனத் தெரியவில்லை. அறைக்காவலாக நின்றிருந்த ஆணிலி தலைவணங்கினான். அப்பால் நீண்டுசென்று படியிலிறங்கிய இடைநாழியில் விளக்கொளி நீர்போல பரவிக்கிடந்தது. அவள் படியிறங்கி கூடத்திற்குச் சென்று அங்கிருந்த காவலர்களின் வணக்கத்தை விழிகொள்ளாமல் மறுபக்கம் படியேறி அங்கிருந்த இடைநாழியினூடாகச் சென்று கர்ணனின் மஞ்சத்தறையை அடைந்தாள். அறைக்காவலன் தலைவணங்கி விலகினான். கதவைத் திறந்து உள்ளே சென்றாள்.

கர்ணன் படுக்கையில் மேலிருந்து விழுந்தவன் போல கிடந்தான். கைகால்கள் மஞ்சத்திற்கு வெளியே என நீண்டிருந்தன. மூச்சு மெல்ல ஏறியிறங்கிக்கொண்டிருந்தது. அவள் அவனை நோக்கியபடி அங்கே சற்றுநேரம் நின்றிருந்தாள். அவன் தோள்களும் புயங்களும் நெஞ்சும் மெலிந்திருந்தாலும்கூட பெரிய எலும்புக்கட்டமைவால் அவன் பேருருவனாகவே எஞ்சினான். அவன் உதடுகளை ஒருகணம் நோக்கிவிட்டு விழிதாழ்த்திக்கொண்டாள். தொடர்பற்ற ஓவியங்களாக நினைவுகள் உள்ளத்தை நிறைத்தன. ஒன்று பிறிதொன்றை மறைக்க எதிலும் நிலைகொள்ளாமல் அவள் அகம் தவித்தது.

பின்னர் பெருமூச்சுவிட்டுக்கொண்டு மெல்ல பின்னடைந்தாள். கதவில் முட்டிக்கொள்ள அது சுவருடன் அறைந்து ஓசையெழுப்பியது. கர்ணன் “யார்?” என துயிலில் குழறியபடி அசைந்து படுத்தான். அவள் நெஞ்சதிர நோக்கிக்கொண்டு நின்றாள். அவன் விழித்துக்கொண்டால் என்ன சொல்வது என எண்ணியதுமே மேலும் ஓர் அடி வைத்து பின்னால் சென்றாள். அவன் விழித்துக்கொள்ளவேண்டும் என்ற விழைவு தன்னுள் இருப்பதை அதன்பின் உணர்ந்தாள். சில கணங்கள் நின்றபின் தன் வளையல்களில் ஒன்றைக் கழற்றி மெல்ல தூக்கி அவன் மஞ்சத்தின் மேல் எறிந்தாள். அவன் “யார்?” என மீண்டும் குழறினான். வாயை சப்புகொட்டியபடி புரண்டு படுத்தான். அவள் சற்றுநேரம் நின்றிருந்தபின் மெல்ல பின்னால் சென்று கதவை மூடிக்கொண்டாள்.

bl-e1513402911361சபரி அவள் அறைக்குள் வந்தபோது சுப்ரியை மீண்டும் உப்பரிகையில் அமர்ந்திருந்தாள். “துயில் விழித்தீர்களா, அரசி?” என்று அவள் கேட்டாள். “இல்லை, சற்றுமுன் விழித்துக்கொண்டேன்” என்று அவள் சொன்னாள். “முகம் வீங்கியிருக்கிறது, அதனால் கேட்டேன்” என்று சபரி இயல்பாகச் சொல்லி “நாம் இன்று அரசவையில் நிகழும் விருந்து ஒன்றுக்கு அழைக்கப்பட்டுள்ளோம்” என்றாள். “என்ன விருந்து?” என்றாள் சுப்ரியை. “ஏழு அரசியரை விருந்துக்கு அழைத்திருக்கிறார் பட்டத்தரசி. அதில் நாமும் உண்டு. பிறர் அனைவருமே தொல்குடி ஷத்ரிய அரசரின் துணைவியர்.”

சுப்ரியை எதுவும் சொல்லாததை உணர்ந்து சபரி “நேற்று அவையில் நிகழ்ந்ததன் நீட்சியாக இவ்விருந்தை பட்டத்தரசி ஒருக்கியிருக்கிறார் என நினைக்கிறேன். அரசியர் எவர் வருகிறார்கள், என்ன சொல்கிறார்கள் என்று பார்க்க விழைகிறார்கள்போலும்” என்றாள். சுப்ரியை அதற்கும் ஒன்றும் சொல்லவில்லை. “அரசி, நேற்று குடியவையில் அஸ்தினபுரியின் அரசர் வேள்வியவையில் துணைவராக அங்கரும் அவருடன் அரசியென நீங்களும் அமரவிருப்பதாக சொன்னார். அவையிலிருந்து ஒரு மறுகுரலும் எழவில்லை.” சபரி சிரித்து “அவையினருக்குத் தெரியும், அரசர் இன்று பேருருக்கொண்டு அவர்களின் தலைக்குமேல் நின்றிருக்கிறார் என” என்றாள்.

“அவையில் பிதாமகர் பீஷ்மரும் துரோணரும் இல்லையா?” என்றாள் சுப்ரியை. “இல்லை, இது குடியவை. அவர்கள் வேள்விக்கு வந்துகொண்டிருக்கும் முனிவர்களை வரவேற்று குடிலமர்த்தும் பொறுப்பிலிருக்கிறார்கள்” என்று சபரி சொன்னாள். “நன்று… நான் நீராடவேண்டும் அல்லவா?” என்றாள் சுப்ரியை எழுந்தபடி. “ஆம், அரசி. நேற்று முழுதணிக்கோலம் பூண்டீர்கள். ஆனால் பேரவையில் அமர இயலவில்லை. இன்று அரசியர் மன்றில் அவர்கள் விழியஞ்சும் அருமணிகளுடன் உங்கள் அணித்தோற்றம் திகழவேண்டும்” என்றாள் சபரி. சுப்ரியை மறுமொழி சொல்லாமல் எழுந்துகொண்டாள்.

நீராட்டறைக்குச் செல்லும் வழியில் சபரி “அஸ்தினபுரியில் எவருக்கும் மறுகருத்து இல்லை. அனைவருக்கும் தெரிந்திருக்கிறது, அங்கர் வில்லெடுக்கவில்லை என்றால் போர்வெற்றி அமையாது என்று. அர்ஜுனரை எண்ணி அஞ்சாதவர்களே இந்நகரில் இன்றில்லை. அவர் கைலைமலைக்குச் சென்று விண்ணமர்ந்த உமைமணாளனிடமிருந்தே பாசுபதம் என்னும் பேரம்பு பெற்று மீண்டிருக்கிறார் என்கிறார்கள். ஒரு கணத்தில் உலகை அழிக்கும் வல்லமை கொண்ட அம்பு அது” என்றாள். சுப்ரியை நடக்க உடன் எட்டு வைத்து “அத்தகைய அம்பை வெல்லும் அம்பு நம் அரசரிடம் உள்ள அரவம்பு என்கிறார்கள். அது வாசுகி உமிழ்ந்த நஞ்சாலானது. இது தட்சனின் நஞ்சாலானது” என்றாள்.

சுப்ரியை நீராட்டறைக்குள் சென்றாள். உள்ளே செல்லும்போதே தன் நெஞ்சு ஓசைகொள்வதை எண்ணி வியந்தாள். அணிச்சேடியர் வணங்கியபோது அதில் சூக்ஷ்மை இல்லை என்பதை உணர்ந்தாள். அது அவளுக்கு ஆறுதலை அளித்தது. தன் உடலை அவர்களிடம் அளித்துவிட்டு கண்களை மூடிக்கொண்டாள். அவள் சூக்ஷ்மையைப் பற்றி கேட்பாள் என சேடியர் எதிர்பார்த்தனர். சற்றுபொறுத்து ஒருத்தி “மூத்தவர் சூக்ஷ்மை நேற்றுமுதல் நகரில் அலைந்துகொண்டிருக்கிறார். அவர் வருவதும் செல்வதும் கணிக்க இயலாதவை. சிலநாட்களாகவே நிலைகொள்ளாமை மிகுந்துவிட்டிருக்கிறது” என்றாள். சுப்ரியை ஒன்றும் சொல்லவில்லை.

நீராடி ஆடைமாற்றி அவள் கிளம்பியபோது சபரி உடன் வந்தபடி “ஆறு அரசியரே விருந்துக்கு வருகிறார்கள், அரசி. கோசலத்தின் அரசி சௌமித்ரை தலைநோவு என்று சொல்லி தங்கிவிட்டார்” என்றாள். சுப்ரியை “ம்” என்றாள். “அவர்கள் தங்கிவிட்ட செய்தியை அறிந்தபின் வேறு சிலரும் அம்முடிவை எடுக்கக் கூடும்” என்று சபரி சொன்னாள். “இது அவர்களின் ஏற்பை அறிவதற்காக அரசர் அமைத்த விருந்து அல்ல. ஏற்க மறுப்பவர்களுக்கு என்ன எஞ்சும் என்பதை பிறருக்குக் காட்டுவதற்காக அமைத்துள்ள பொறி. கோசலநாட்டு அரசி தன் அரசருக்கும் அமைச்சருக்கும் தீங்கை இழைத்துக்கொண்டிருக்கிறார்.” சுப்ரியை திரும்பி நோக்கி “எப்படி தெரியும்?” என்றாள். “சற்று முன் கீழே காவலர் பேசிக்கொண்டிருந்தனர்.” சுப்ரியை “காவலரா?” என்றாள். “அரசி, காவலர் அறியாத அரசு நிகழ்வுகள் சிலவே” என்றாள் சபரி.

அவர்களுக்கான தேர் காத்து நின்றிருந்தது. அருகே சிவதர் நின்றிருந்தார். அவர் தலைவணங்க தேரில் ஏறுவதற்கு முன் ஒருகணம் தயங்கிய சுப்ரியை “அரசர் இன்றேனும் அவைபுக வாய்ப்புண்டா?” என்றாள். “இன்று அவருக்கு நிகழ்வுகளேதும் சொல்லப்படவில்லை. நேற்று சற்று குடிமிகுந்துவிட்டது. எழுந்ததுமே தலைவலியும் நிலைகொள்ளாமையும் இருந்தது. ஓய்வெடுக்கும்படி சொன்னேன்” என்றார். சுப்ரியை தேரில் ஏறியமர சபரி அருகே அமர்ந்தாள். தேர் நகர்ந்ததும் “நேற்று நள்ளிரவில் நினைவிலா நிலையில் கொண்டுவந்தனர்” என்றாள்.

“யார்?” என்றாள் சுப்ரியை. “குண்டாசியும் சுஜாதரும் மட்டுமே உடன்வந்தார்கள். அவர்கள் இருவரும் குடித்திருக்கவில்லை.” சுப்ரியை தலையசைத்தாள். “குண்டாசி நெடுநேரம் அரசரின் அறைவாயிலில் துயரத்துடன் நின்றிருந்தார். அவரை வற்புறுத்தி அழைத்துச்சென்றார்கள்.” சுப்ரியை “நாம் இன்று ஆற்றவேண்டிய பணி என்ன? விருந்திலமர்வது மட்டும்தானா?” என்றாள். “ஆம் அரசி, இது வெறும் முறைமைவிருந்து. அணிச்சொற்கள் ஆற்றுவதொன்றே நாம் செய்யக்கூடுவது” என்றாள். “இன்று எவரேனும் என்னை தைக்கும் சொல் எடுக்கக்கூடுமா?”

சபரி அதை எதிர்பார்க்கவில்லை. பின்னர் “அஸ்தினபுரியின் அரசியின் முன் அங்கரைப்பற்றி எவரும் சொல்லெடுக்க முடியாதென்று அனைவரும் அறிந்திருப்பார்கள்” என்றாள். பின்னர் சற்று தயங்கி “தாங்களும்கூட அவ்வாறு நம் அரசரைப் பழித்து சொல்லெடுக்க பட்டத்தரசி ஒப்பமாட்டார்கள், அரசி” என்றாள். சுப்ரியை சினத்துடன் திரும்பி நோக்க “அரசரின் குறைகள் அனைவரும் அறிந்தவை. கலிங்கத்தரசிக்கு அவர் நிகரல்ல என்பதை அறியாதவரும் இல்லை. ஆயினும் அஸ்தினபுரியில் அவர் துரியோதனருக்கு நிகராகவே கருதப்படுகிறார். அவரை அவர்கள் மூத்தவர் என்றே அழைக்கிறார்கள். அதிலும் பட்டத்தரசிக்கு…” என்றாள். சுப்ரியை “போதும்” என்றாள். சபரி “நான் சொல்ல வருவது…” என தொடர உரத்த குரலில் “போதும்” என்றாள்.

தேர் அரசப்பெருவீதியை அடையும் வரை சுப்ரியை உடல் பதறிக்கொண்டிருந்தாள். அதை சபரி அறிந்திருப்பாள் என உணர்வு வந்ததும் ஓரக்கண்ணால் அவளை நோக்கினாள். அவள் அனைத்தையும் மறந்து வெளியே நோக்கிக்கொண்டிருந்தாள். நுண்மைகளை உணரமுடியாத இச்சேடியை நான் வேண்டுமென்றேதான் தெரிவு செய்துகொண்டிருக்கிறேனா? அவள் ஆடையை சீரமைக்கத் தொடங்கினாள். முன்மடிப்புகளை செம்மை செய்து, முந்தானை அடுக்குகளை அமைத்து இடைக்கொசுவங்களை ஒழுங்குபடுத்தியபோது தன் அகத்தையும் நிலைகொள்ளச் செய்ததாக உணர்ந்தாள்.

புஷ்பகோஷ்டத்தின் வாயிலை தேர் அடைந்தபோது அவள் சபரியைத் தொட்டு “வந்துவிட்டோம்” என்றாள். அவள் வெளியே நோக்கி “ஆம் அரசி, எவர் வந்திருக்கிறார்கள் என்று நோக்கினேன். காசிநாட்டரசியும் வங்கநாட்டரசியும் புண்டரநாட்டரசியும் வந்திருக்கிறார்கள். அந்தக் கொடி எது என புரியவில்லை. பொற்பன்றி முத்திரை எவருடையது?” என்றாள். சுப்ரியை எட்டிப்பார்த்தபின் “அத்தேரின் சகடங்களில் கரடி முத்திரை உள்ளது. சிந்துவின் அரசருக்குரியது” என்றாள். “சிந்துநாட்டரசி துச்சளை வந்துவிட்டுச் சென்றார் என்றல்லவா அறிந்தேன். மீண்டும் வந்துள்ளாரா?” என்றாள் சபரி. “பெருவேள்வி என்பதனால் வந்திருக்கலாம்” என்றாள் சுப்ரியை.

அவர்களை அரண்மனைப் பொறுப்பிற்கு அமைக்கப்பட்டிருந்த அமைச்சர் ஸ்ரீகரர் வணங்கி வரவேற்றார். “அங்கநாட்டரசிக்கு நல்வரவு. நான் மூத்த அமைச்சர் கனகரின் மைந்தன், என்னை ஸ்ரீகரன் என்பார்கள்” என்றார். “நான் அங்கருக்கு மிக அணுக்கமானவன். என்னை தோள்வளைத்து அணைக்காமல் அவர் பேசுவதே இல்லை.” சுப்ரியை முகம் மலர்ந்து “ஆம், நேற்றுகூட ஒருவர் அவ்வாறு சொன்னார்” என்றாள். “ஆம், அவனை அங்கநாட்டரசர் காலகன் என்று அழைப்பார்… இங்கே நாங்கள் அனைவருமே அவருக்கு இளையோரும் மைந்தரும் அணுக்கர்களும்தான்… வருக, அரசி” சுப்ரியை அவருடன் நடந்தபடி “அவர் இங்கே நெடுநாட்கள் இருந்திருக்கிறார் அல்லவா?” என்றாள். அவர் கர்ணனைப்பற்றி பேசிக்கேட்க அவள் விரும்பினாள்.

“ஆம், ஆனால் சென்ற பதினான்காண்டுகளாக அவர் இந்நகருக்குள் நுழையவில்லை. இருமுறை நாட்டின் எல்லைக்குள் நுழைந்து சென்றிருக்கிறார். காலகன் அவருடன் இரு போர்களில் தோளிணைந்துள்ளான். அமைச்சர்களுக்கு அவ்வாய்ப்பு இல்லை அல்லவா?” என்றார் ஸ்ரீகரர். எதிரில் அரண்மனைக்குள்ளிருந்து ஒரு சிறு குழு வந்தது. “சைந்தவர் விடைகொள்கிறார். சற்று பொறுங்கள், அரசி” என்றார் ஸ்ரீகரர். அறிவிப்பாளன் கொம்போசை எழுப்பி “சிந்துநாட்டரசர் ஜயத்ரதர் எழுந்தருள்கை!” என அறிவித்தான். கவச உடையணிந்த நான்கு வீரர்கள் வர தொடர்ந்து ஜயத்ரதன் தோன்றினான்.

“அவரைத் தாங்கள் அறிவீர்கள் எனில் ஒரு சொல் முகமனுரைக்கலாம், அரசி” என்றார் ஸ்ரீகரர். “ஆம், அது முறையல்லவா?” என்றபடி சுப்ரியை நடந்தாள். ஜயத்ரதன் அவளை நோக்கியதும் புன்னகையுடன் நின்றான். அவள் அருகணைந்து “சைந்தவரை சந்திக்க நேர்ந்ததில் மகிழ்வுகொள்கிறேன். இந்நாள் இனிது” என முகமன் உரைத்தாள். அவன் முகமெங்கும் புன்னகை விரிய “நெடுநாள் விழைந்திருந்த சந்திப்பு” என்றபின் திரும்பி நோக்காமலேயே ஸ்ரீகரரிடம் விலகிச்செல்ல கையசைத்தான். அவர் தலைவணங்கி அகன்றார். சபரியும் பின்னடைந்தாள். அவள் திரும்பி நோக்க அவர்களைச் சூழ்ந்திருந்தவர்கள் விலகி அந்த முற்றத்தில் தனிமையின் வட்டம் ஒன்று அவர்களைச் சுற்றி அமைந்திருந்தது.

ஜயத்ரதன் “நான் நேரில் சந்தித்ததில்லை. ஆனால் உங்கள் ஓலை கிடைத்ததும் விறலியர் வழியாக ஓவியங்களைச் சேர்த்து நோக்கினேன். அவற்றில் தெரிந்த அதே உருவம் நடந்துவருவதைக் கண்டு என் விழிகள் மலைத்துவிட்டன” என்றான். சுப்ரியை கொதிக்கும் நெய் என சினம் நுரைத்தெழுவதை உணர்ந்தாள். அதை அடக்கியபடி “அஸ்தினபுரியின் இளவரசி இங்கே வந்துசென்றார்கள் என அறிந்தேன். அவர்களை சந்திக்க விழைந்திருந்தேன்” என்றாள். ஜயத்ரதன் “அவள் சென்றுவிட்டாள். அவள் உருவத்திற்கு இந்த அரண்மனையை தொழுவத்தை யானை என உணர்கிறாள்” என்று சொல்லி உரக்க நகைத்து “நான் அவளை சந்திப்பதே அரிது” என்றான்.

“மைந்தருக்கும் சிந்துநாட்டிற்கும் நன்னலம் சூழ்க!” என்றபின் கைகூப்பி தலைவணங்கினாள். ஜயத்ரதன் விழிகளில் திகைப்பும் பின் சினமும் எழ “நான் பலமுறை அங்கத்தின்மீது படைகொண்டெழ எண்ணியதுண்டு. மண்ணுக்காக மட்டுமல்ல பெண்ணுக்காகவும் படையெழலாம் என்பது சிந்துவின் நெறி. அஸ்தினபுரியின் நட்பு அங்கத்தை காத்தது” என்றான். அவள் நிமிர்ந்து அவன் முகத்தை நோக்கி புன்னகைத்து “சிந்துவைக் காத்தது என்று சொல்லுங்கள்” என்றபின் “விடைகொள்கிறேன், அரசே” என்று முன்னால் சென்றாள். அவன் சினத்துடன் அவளிடம் மறுமொழிசொல்ல எழுந்த வாயுடன் நிற்பதை உளவிழியால் கண்டாள்.

சபரி வந்து அவளுடன் சேர்ந்துகொண்டு “பேச்சை முறித்துக்கொண்டு வந்ததுபோல் தோன்றியது, அரசி… சைந்தவர் சினம் கொள்ளக்கூடும். அவையில் நம் அரசர் அரசத்துணைவராக அமரவேண்டும் என்றால் சைந்தவரின் ஒப்புதல் தேவை. இயல்பாக அங்கே அமரவேண்டியவர் அவர்தான்” என்றாள். சுப்ரியை “எவ்வழி?” என்றாள். சபரி “நம்மை வரவேற்க பட்டத்தரசியின் அவைச்சேடி சம்புகை வந்திருக்கிறாள்” என்றாள். திரும்பி நோக்கி “சைந்தவர் சினம்கொண்டிருக்கிறார். அமைச்சர் ஸ்ரீகரரை கடிந்துகொள்கிறார்” என்றாள். சுப்ரியை “மிகச் சிறியவர்” என்றாள். சபரி “ஆம் அரசி, இங்கே அந்தண அமைச்சர்களை எவரும் இப்படி கடிந்துகொள்வதில்லை” என்றாள்.

ஸ்ரீகரர் அருகே வந்து “வருக அரசி, சம்புகை நம்மைத்தான் எதிர்நோக்கி நின்றிருக்கிறாள்” என்றார். சம்புகையை நோக்கி அவர் கைகாட்ட அவள் மங்கலத்தாலங்கள் ஏந்தி நின்றிருந்த மூன்று அணிச்சேடியருடன் அருகே வந்தாள். “அஸ்தினபுரியின் பட்டத்தரசியின் அகத்தளத்திற்கு நல்வரவு அரசி. இந்நாளில் மங்கலங்கள் பொலிக!” என்றாள். “நலம் சூழ்க…” என்று சுப்ரியை சொன்னாள்.

முந்தைய கட்டுரைஅந்தக்குயில்
அடுத்த கட்டுரைகனேரி குகைகள்