பகுதி பத்து : பெருங்கொடை – 8
கர்ணன் எழாதிருத்தல் கண்டு அவர்கள் அனைவரும் தயங்கி நின்றனர். சுபாகு “மூத்தவரே…” என மெல்லிய குரலில் அழைக்க கர்ணன் அவனை ஏறிட்டு நோக்கிவிட்டு பதற்றம்கொண்டவன்போல தன் குழலை நீவி தோளுக்குப் பின்னால் இட்டான். அவன் எழப்போகிறான் என சுப்ரியை எண்ணினாள். வெடித்துக் கூச்சலிட்டபடி வாளை உருவக்கூடும். அல்லது வெளியே செல்லக்கூடும். ஆனால் அந்த மெல்லிய அசைவுத்தோற்றம் மட்டும் அவனுடலில் ததும்பியதே ஒழிய அவன் எழவில்லை. துரியோதனன் மீண்டும் அமர்ந்தான். சகுனியும் அமர்ந்தார்.
சகுனி “இதை மறந்துவிடலாம், அங்கரே. எழுக!” என்றார். “நம் அன்னையரையும் துணைவியரையும் குறித்து நமக்கு பெருமிதமிருக்குமென்றால் பிறர்நெறி குறித்து உசாவுவதில் எந்தத் தடையுமில்லை. அங்கரே, நீங்கள் பாஞ்சாலத்தரசியிடம் கேட்ட வினா அவ்வகையில் உகந்ததே. ஏனென்றால் நீங்கள் உங்கள் அன்னையை நம்பி மைந்தன் என இங்கு அமர்ந்திருக்கிறீர்கள்” என்றார். “காந்தாரத்து அரசியின் மைந்தர் யாதவ அரசியை நோக்கி கேட்ட வினா அதே போன்று முறையானதே.” “ஆம், பிறிதொரு ஆண்மகனை நோக்கா விழிகொண்டவள் என தன் அன்னையை உணரும் ஒருவன் அவ்வினாவைக் கேட்பதில் என்ன பிழை?” என்றார் கணிகர்.
கர்ணன் எழப்போகிறவன்போல் நெஞ்சு முன்னகர்ந்தான். பின்னர் தலையை அசைத்து “இது வீண் பேச்சு… நாம் மேலும் கீழ்மையில் இறங்குகிறோம்” என்று கையைத் தூக்கி ஏதோ சொல்ல நாவெடுத்தான். விசைகொண்ட காற்றில் ஆடும் கிளைபோல அவன் கை நடுங்குவதை சுப்ரியை கண்டாள். சகுனி “தாங்கள் தங்கள் இயல்புநிலையில் இல்லை” என்றார். “தங்கள் கை நடுங்குகிறது. அம்பொன்றை எடுத்து நாணில் பொருத்த தங்களால் இன்று இயலுமென்று எனக்குத் தோன்றவில்லை. மது தங்கள் உடலாற்றலை மட்டுமல்ல உள்ள நிலையையும் அழித்துவிட்டது.”
“ஆம், நான் களிமகனாகிவிட்டேன்” என்று உரத்த குரலில் கூவியபடி கர்ணன் எழுந்தான். “சென்ற பதினான்கு ஆண்டுகளாக ஒவ்வொரு நாளும் மதுவருந்துகிறேன். விழித்தெழுந்தது முதல் இரவு வரை என் நெஞ்சுக்குள் மதுவை ஊற்றிக்கொண்டே இருக்கிறேன். ஒருகணம்கூட என்னை மறந்து இருந்ததுமில்லை. ஏனெனில் அஸ்தினபுரியின் அவையில் பாஞ்சாலத்து அரசியை சிறுமை செய்த கீழ்மை பார்ப்புப்பழியென என்னை துரத்துகிறது. தன் மலத்தை தான் தின்றவனைப்போல உணர்கிறேன்” என்று பற்களைக் கடித்தபடி சொன்னான். “நான் என்னை இழிவுசெய்துகொள்கிறேன். என்னை அழிக்கிறேன். என் பிணம் இது… அரசே, நான் இறந்துவிட்டேன்.” அவன் குரல் இடறியது.
துரியோதனன் புன்னகையுடன் “நான் அவ்வாறு உணரவில்லை. எது நெறியோ அதை மட்டுமே உரைத்தேன். மும்முடிசூடி அரசமைய பெண்ணென்பது அவளுக்குத் தடையாக இல்லையென்றால் அவை நடுவே நின்றிருக்கவும், அடிமையென ஆடை களையவும் அது தடையல்ல” என்றான். கர்ணன் அழுகை கலந்த குரலில் “வேண்டாம், நாம் இச்சொல் எடுக்க வேண்டியதில்லை. இவையனைத்தையும் நானும் நூறுமுறை எண்ணிவிட்டேன். ஒவ்வொரு மறுமொழியையும் நெய்யென ஏற்று பெருகுகிறது அந்த அனல். ஒரு கீழ்மையை எத்தனை சொற்களாலும் எவரும் விலக்கிவிட முடியாது. கூவி அலறி பாறையைக் கரைக்க முயல்வதுபோல…” என்றான்.
கைகளை வீசி “இங்கு வருவது வரை நான் பிறிதொருவன். ஆனால் நேரில் கண்டபின் தெரிகிறது, என்னால் உங்களை எதிர்க்க முடியாது. உங்கள் முன் உளம்கனியாது நிற்கமுடியாது. அரசே, ஆயினும் நெஞ்சைத்தொட்டு இதை கேட்கிறேன். உங்கள் அன்னையோ துணைவியோ அன்று நிகழ்ந்ததை ஒரு கணமேனும் ஏற்றுக்கொண்டிருக்கிறார்களா? அவர்களின் சொல் பெற்று உங்களால் பாண்டவர்களுக்கெதிராக படைகொண்டு செல்ல இயலுமா?” என்றான் கர்ணன். துரியோதனன் “எவர் சொல்லுக்கும் காத்துநிற்கும் இடத்தில் நான் இன்றில்லை, அங்கரே” என்றான். “இனி என் தெய்வமொன்றே என்னை ஆளும்… பிறிதொன்றுமல்ல.”
கர்ணனிடமிருந்து எழுந்த மெல்லிய விசும்பல் ஓசை சுப்ரியையை உடல்சிலிர்க்கச் செய்தது. அவள் நடுங்கும் கைகளைக் கோத்தபடி கர்ணனை நோக்கிக்கொண்டிருந்தாள். கண்ணீர் வழிய அவன் தன் முகத்தை கைகளால் தாங்கிக்கொண்டான். தலையை அசைத்தபடி விம்மி அழுதான். அந்த ஓசை உண்மையில் எழுகிறதா அன்றி தன் செவிமயக்கா என அவள் ஐயுற்றாள். ஓசையின்றி ஒருவர் அழக்காண்பதைப்போல நெஞ்சுருக்குவது பிறிதில்லை. ஓசை பிறருக்கான அழைப்பு, பகிர்வு. ஓசையின்றி அழுபவர் தன்னைச் சூழ்ந்திருக்கும் காற்றுவெளியை திரையென்றாக்கி ஒளிந்துகொள்பவர். அனல் எரிய உருகும் அரக்குப்பாவை எனத் தோன்றினான் கர்ணன்.
சகுனி விழிகாட்ட துச்சாதனன் எழுந்து சென்று மதுக்குடுவையுடன் வந்தான். “அருந்துக, மூத்தவரே!” என அதை அவன் நீட்ட கர்ணன் பசித்த குழவி என பாய்ந்து கிண்ணத்தை பற்றிக்கொண்டான். ஒரே வாயில் அதை குடித்து மீண்டும் நீட்டினான். மீண்டும் மீண்டும் துச்சாதனன் ஊற்றிக்கொண்டே இருந்தான். ஏழு கோப்பைகளுக்குப் பின் அவன் போதுமா என திரும்பி சகுனியை நோக்க அவர் மேலும் ஊற்ற விழிகாட்டினார். மேலும் நான்கு கோப்பைகளுக்குப் பின் சுப்ரியைக்கே அச்சமாக இருந்தது. ஆனால் அவள் வெறுமனே நோக்கி அமர்ந்திருந்தாள். மேலும் இரு கோப்பைகள் அருந்தியதும் கர்ணன் விக்கி மூச்சுத்திணறினான். இருமுறை எதிர்க்களித்தபின் கோப்பையை அருகே வைத்தான். கண்களை மூடி தலைகுனிந்து அமர்ந்திருந்தான்.
துரியோதனன் “நான் எதையும் விளக்க விரும்பவில்லை, அங்கரே. நீங்கள் வஞ்சம் மறக்கலாம், நான் மறக்கப்போவதில்லை. யாதவப் பேரரசி மீது என் முதல் கசப்பு அவர் பாண்டவர்களின் அன்னை, நிலவிழைவை அவர்களில் நிலைநிறுத்துபவர் என்பதனால் அல்ல. நீங்கள் என் தோழர் என்பதனால் என்றும் என் நஞ்சு அவ்வண்ணமே என்னுள் இருக்கும்” என்றான். கர்ணன் தலை முன்னால் தொங்கித் தழைந்திருக்க மெல்ல அசைந்தபடி அமர்ந்திருந்தான்.
“நீங்கள் ஷத்ரியர் அவையில் வந்து அமரவேண்டும் என நான் விழைந்தேன். இன்று வந்திருக்கிறீர்கள். வேள்வியவையில் என் தோழன் என அமர்க! ஷத்ரியர்களில் எவர் எழுந்து மறுசொல் உரைத்தாலும் அக்கணமே அவர் என் எதிரியென்றாகிறார். அவர் தலையை அறுப்பேன், நிலத்தை சிதைப்பேன், அவர் குடியையும் கொடிவழியையும் வேரறுப்பேன். அதை வேள்வியவையிலேயே சொல்கிறேன். ஒருவேளை அந்தணர் மாற்றுரைத்தார் என்றால் அவ்வேள்வியை அசுரப் பூசகரைக்கொண்டு நிகழ்த்துவேன். ஆசுரம் என் சொல்லென்றாகும். பாரதவர்ஷத்தில் என் கோலால் ஆசுரம் நிலைநிறுத்தப்படும் என அவர்களிடம் சொல்வேன்.”
துரியோதனன் கைநீட்டி கர்ணனின் மடித்த முழங்காலை தொட்டான். “எனக்கும் என் தம்பியருக்கும் நீங்களே முதன்மையானவர். பிறிதெவரும் அல்ல. வேதமும், நாடும், குலமும், மூதாதையரும்கூட அல்ல. இதை எனையாளும் தெய்வத்தைச் சான்றாக்கி சொல்கிறேன், அறிக இவ்வுலகு!” என்றான். கர்ணன் அதை கேட்டானா என்று சுப்ரியை ஐயம்கொண்டாள். ஆனால் அவன் கழுத்தில் மெய்ப்புகொண்டதன் புள்ளிகள் தெரிவதை பின்னர் நோக்கினாள். “அங்கரே, அவையில் உங்கள் குலம்சொல்லிக் குரலெழும் என நீங்களும் அறிவீர்கள். அங்கே உங்கள் பொருட்டு எழுவது என் வாளே அன்றி எவருடைய நாவும் அல்ல.”
துரியோதனனின் குரல் மேலும் உரத்தது. “ஐவரின் நிலையும் அதுவே என்றேன். அறமென துளியேனும் நெஞ்சிலிருந்தால் அம்முதுமகள் வந்து ஷத்ரியர் அவையில் நின்று உரைக்கட்டும். அன்றி அந்தணருக்கு சொல் அளிக்கட்டும். அனைத்தும் அக்கணமே முடிந்துவிடும்.” சில கணங்கள் தயங்கி முனகல்போல “ஆம், அனைத்தும் முடிந்துவிடும். முடிக்குரியவர் எவர் என்ற ஐயமே எவருக்குமிருக்காது” என்றான் துரியோதனன். கர்ணன் மெல்ல முனகினான். “அதை நான் சொன்னதும் மறுசொல்லின்றி அப்படியே அமர்ந்தான் இளைய யாதவன். எதை அஞ்சுகிறார்கள்? ஒவ்வொரு சொல்லிலும் எது எழாமல் தவிர்க்கிறார்கள்? ஒரு சொல். ஒற்றைச்சொல், தெய்வங்கள் அறிய அதை சொல்லட்டும் அவையில் என்றேன். என் பிழை என்ன?”
இரு கைகளாலும் இருக்கையின் விளிம்பைத் தட்டியபடி துரியோதனன் எழுந்தான். “ஆம், உங்கள் உள்ளம் இச்சொல்சூழ்கையை ஏற்காதென்று அறிவேன். ஆனால் நான் உங்களைப்போல் அனைவருக்கும்மேல் தலை எழுந்தவன் அல்ல. நான் அனைவரிலும் ஒருவன். அனைவரும் ஏற்கும் சொல்லையே என் நா எழுப்பும். ஆகவேதான் அன்று அவை எழுந்து என் சொல்லை ஏற்றுக் கொந்தளித்தது.” சகுனியை நோக்கி “மாதுலரே, நாம் அவைபுகுவோம். அங்கர் ஓய்வெடுக்கட்டும்” என்றான். “அவரை வேள்வித்துணைவராக அறிவிப்பதென்றால்…” என்று சகுனி சொல்ல “அறிவிக்கிறேன். இனி எச்சொல்லையும் நாவால் உரைக்கப்போவதில்லை, என் வாளே மொழியும்” என்றான் துரியோதனன்.
கணிகர் “அரசி வந்துள்ளார்கள், அவர்கள் அவையில் அமரட்டும்” என்றார். துரியோதனன் சுப்ரியையை நோக்கிவிட்டு “ஆம், அது முறை” என்றான். கணிகர் “அவைக்கு எழுந்தருள்க, அரசி!” என்றார். சுப்ரியை எண்ணியதைச் சொல்ல உதடசையவில்லை. அவள் தலையசைத்தாள். அசைவு எழக்கண்டு கர்ணனை திரும்பி நோக்கினாள். அவன் தன் நீண்ட கால்களை நன்றாக நீட்டி கைகள் பீடத்தின் இரு பக்கமும் சரிந்து நிலம்தொட்டு நீண்டிருக்க தலை மார்பில் படிந்து விழிமூடி வாய் கசிந்து வழிய மெல்லிய மூச்சொலியுடன் துயில்கொண்டிருந்தான். சுப்ரியை “இல்லை, நான் அவைக்கு வரவில்லை. அரசர் இன்றி நான் வருவது முறையல்ல” என்றாள். கணிகர் மேலும் சொல்ல வாயெடுக்க மறித்து “நான் என் உடன்பிறந்தவளை சந்திக்கவேண்டும்” என்றாள். துரியோதனன் “ஆம், அது முறைதான்” என்றான்.
சபரி சலிப்புற்ற குரலில் “தாங்கள் சென்று அவையில் அமர்ந்திருக்க வேண்டும், அரசி. இது கலிங்கத்திற்கான ஏற்பு மட்டும் அல்ல, நம் அரசருக்கானதும்கூட. அவரை அரசர் தன் வேள்வித்தோழர் என அவையில் அறிவிக்கவிருக்கிறார் என்றால் அது எளிய நிகழ்வல்ல. சம்பாபுரியின்மேல் இன்றும் நின்றிருக்கும் பழி என்பது நம் அரசர் பிறப்பால் சூதர் என்பதே. வேள்வியமைவு அதை முற்றாக அழித்திருக்கும்” என்றாள். சுப்ரியை மறுமொழி சொல்லாமல் நடக்க சபரி தொடர்ந்து நடந்தபடி “அவையில் அங்கர் இல்லாதிருப்பது நன்று. நீங்கள் இருப்பது மிக நன்று. நாம் உங்கள் உடன்பிறந்தவரை பின்னர்கூட பார்த்துக்கொள்ளலாம்” என்றாள்.
அரண்மனை முகப்பில் காவலர்தலைவர் பத்ரசேனர் அவளை அணுகி வணங்கினார். சுப்ரியை “என் ஆணையை அறிவி” என்றாள். சபரி சலிப்புடன் ஒரு கணம் நின்றபின் முன்னால் சென்று அவரிடம் செய்தியைச் சொல்லி கணையாழியை காட்டினாள். பத்ரசேனர் அணுகி வந்து “அரசி, இளையஅரசி இருக்குமிடம் மேற்குவாயிலுக்கு அப்பால் குறுங்காட்டுக்குள் அமைந்த சம்வரணம் என்னும் சிறுமாளிகையில். அவர்களை நீங்கள் சந்திப்பதென்றால்…” என்றார். “சொல்க!” என்றாள் சுப்ரியை. “அவர்கள் இருக்கும் நிலையை அறிவீர்கள் என எண்ணுகிறேன்” என்றார் பத்ரசேனர். “ஒருவாறு அறிவேன்” என்றாள் சுப்ரியை. “அதன் பின்னரும் ஆணை என்றால் அவ்வாறே” என்றார் பத்ரசேனர். “நான் தேர் ஒருக்குகிறேன்…”
வெளியே தேர் வந்துநின்றதும் பத்ரசேனர் மீண்டும் உள்ளே வந்து “கிளம்புக, அரசி!” என்றார். அவள் வெளியே சென்று அங்கு நின்றிருந்த எளிய தேரில் ஏறிக்கொள்ள சபரி உடன் ஏறி அமர்ந்தாள். பத்ரசேனர் அவரே முன்னால் நின்ற புரவியில் ஏறிக்கொண்டு வழிநடத்திச் சென்றார். “அவர் இல்லையேல் அங்கு செல்ல ஒப்புதலிருக்காதென்று எண்ணுகிறேன்” என்றாள் சபரி. சுப்ரியை வெளியே நோக்கியபடி அமர்ந்திருந்தாள். தேர் அரண்மனை எல்லையை அடைந்து திரும்பி மேற்குநோக்கி செல்லத் தொடங்கியது. தொலைவில் அலையடிக்கும் ஏரியின் ஒளி தெரியலாயிற்று. கோட்டைச்சுவரின் கருமை. அதையொட்டிச் சென்று வெளியேறிய பாதை சற்று மேடேறி குறுங்காட்டினூடாக சென்றது.
தொலைவில் மரத்தாலான பெரிய சுவர் கட்டி மறைக்கப்பட்ட மாளிகை வந்தது. அதன் கூம்புமுகடு மட்டுமே மேலெழுந்து தெரிந்தது. பத்ரசேனர் சென்று காவலனிடம் பேசிவிட்டு வந்து தலைவணங்கி “அரசி, தாங்கள் உள்ளே சென்று உடன்பிறந்தவரிடம் உரையாடலாம்” என்றார். சுவர்போலவே தெரிந்த கதவு உருளைகள்மேல் ஓசையிட்டபடி விலகிச்செல்ல தேர் உள்ளே நுழைந்தது. பத்ரசேனர் நின்றுவிட அவரை மறைத்தபடி கதவு மூடிக்கொண்டது.
மாளிகை முகப்பில் தேர் நின்றபோது சுப்ரியை அங்கு வந்திருக்கலாகாது என்னும் எண்ணத்தை அடைந்தாள். சபரி இறங்கி “வருக, அரசி” என்றாள். மாளிகை முகப்பிலிருந்த காவலர்தலைவன் அணுகி தலைவணங்கினான். “அரசிக்கு தலைவணங்குகிறேன். என் பெயர் உக்ரசேனன். என்னை அங்கநாட்டரசர் காலகன் என்று அழைப்பார்… அவருடன் நான்கு போர்களில் தோளிணை நின்றிருக்கிறேன். தங்கள் அருள்பெறும் வாய்ப்புக்கு மகிழ்கிறேன்” என்றான். சுப்ரியை முகமனோ வாழ்த்தோ கூறாமல் “என் உடன்பிறந்தாளை சந்திக்கவேண்டும். அதன்பொருட்டே வந்துள்ளேன்” என்றாள்.
காலகன் “அவரை நீங்கள் சந்திக்கலாம். அவர் இருக்கும் நிலை என்னவென்று அறிந்திருப்பீர்கள்” என்றான். “தனிமையில் இருப்பதாக அறிந்திருந்தேன். அவள் உள்ளம் நிலைகொண்டிருக்கவில்லையோ என அன்று விழிகளை நோக்கியபோது எண்ணினேன்” என்றாள். “அரசி, கலிங்கத்திலிருந்து வந்தபோதே இளைய அரசி நிலைகொள்ளாமல்தான் இருந்தார்” என்றான் காலகன். “எவர் சொன்னது?” என்று சுப்ரியை சீற்றத்துடன் திரும்ப “அவ்வாறுதான் சொல்லப்பட்டது” என்று காலகன் சொன்னான். “இதற்கப்பால் ஏதும் எனக்குத் தெரியாது. இங்கு இளைய அரசியின் செவிலி பிரவீரை இருக்கிறாள். நீங்கள் அவளிடமே பேசலாம்” என்றபின் “பேசியபின் இளைய அரசியை சந்திப்பது நன்று” என்றான்.
அவளை அழைத்துச்சென்று சிறிய கூடத்தில் அமரச்செய்தான். சுப்ரியை கைகளைக் கோத்தபடி அமர்ந்திருந்தாள். அவள் விரல்கள் பிசைந்துகொண்டே இருந்தன. அதை அவளே உணர்ந்து மார்பில் கைகளை கட்டிக்கொண்டாள். சற்று நேரத்தில் காலகன் பிரவீரையை அழைத்துவந்தான். கூன்விழுந்த மெல்லிய உடலும் பழுத்த விழிகளும் கொண்டிருந்த பிரவீரை எந்த முகமலர்வும் இன்றி கைகூப்பி “அரசிக்கு வணக்கம். இங்கே தாங்கள் வரக்கூடும் என பல்லாண்டுகளாக எதிர்பார்த்திருந்தேன்” என்றாள். சுப்ரியை அவளை சில கணங்கள் நோக்கிவிட்டு “அவளுக்கு என்ன? அவள் இங்கே அரசருடன் மகிழ்ந்திருக்கிறாள் என்றே நான் அறிந்திருந்தேன்” என்றாள்.
“ஆம், இங்கு வந்த ஓராண்டும் உளமகிழ்வுடன்தான் இருந்தார்கள். அன்றே நான்தான் கலிங்கஅரசிக்கு சேடியென்றிருந்தேன்” என்றாள் பிரவீரை. “அக்காலத்தில் ஒவ்வொரு நாளும் அரசர் இளைய அரசியைத் தேடி வந்துகொண்டிருந்தார். அரசிக்கென அஸ்தினபுரியின் புஷ்பகோஷ்டத்திற்கு அருகே அணிக்காட்டுக்கு அப்பால் மாளிகை ஒன்று ஒதுக்கப்பட்டது. ஒவ்வொரு நாளும் காலையில் இளைய அரசி புஷ்பகோஷ்டத்தின் அகத்தளத்திற்குச் சென்று பட்டத்தரசியுடன் சொல்லாடியும் அங்குள சேடியருடன் விளையாடியும் மீள்வதுண்டு. ஒவ்வொன்றும் எவ்வண்ணம் அமையவேண்டுமோ அவ்வண்ணம் அமைந்திருந்தது.”
“அதில் ஒரு பிழையைக் கண்டவள் நானே. அரசி, ஆண்மேல் பெண்கொள்ளும் காதல் அவள் தன் உடல்மேல் கொள்ளும் விருப்பமாகவே வெளிப்படும். அதுவே வழக்கம்” என்று பிரவீரை தொடர்ந்தாள். “ஆனால் இளைய அரசி தன் உடலை முற்றிலும் மறந்தவராக இருந்தார். அரசரின் தோற்றத்திலேயே மயங்கிக் கிடந்தார். சொல்லெல்லாம் அதுவே. விழிநோக்காதபோதும் உளம் நோக்கிக்கொண்டிருந்தது அவ்வுருவையே. பட்டத்தரசியே வேடிக்கையாக என்ன இது, இவளுக்கு வேறு எண்ணமே இல்லையா என்ன என்று ஒருநாள் என்னிடம் சொன்னார். மெல்ல அகத்தள மகளிர் அனைவரும் அதை சொல்லலாயினர். அதை நோக்கத் தொடங்கியதும் தெரிந்தது வேறெதையும் அரசி எண்ணுவதேயில்லை என.”
“அது மிகச் சிறிய கோணல். ஆனால் நாளும் எனப் பெருகியது” என்று பிரவீரை தொடர்ந்தாள். “பின்னர் எப்பொழுதும் அரசருடன் இருக்க விழைந்தார். சாளரத்தருகே அமர்ந்து அவர் வருகைக்காக ஏங்கினார். பின்னர் அவ்வாறு இருப்பதாக உளம்மயங்கினார். அரண்மனைச் சுவர்களில் எல்லாம் அவர் ஓவியத்தை வரைந்து வைத்தார். அவருடைய ஆடைகளை, அணிகளை நோக்கு தொடும் இடத்தில் எல்லாம் பரப்பி வைத்தார். வெளியே செல்வது குறைந்தது. அவர் விழிகளில் இருந்து பிறர் தொட்டு எடுக்கும் உணர்ச்சிகள் மறையலாயின. தனக்குள் பேசியும் சிரித்தும் தானே துள்ளிச்சுழன்றும் களித்திருந்தார்.”
“அப்போதுதான் அரசரே அவர் உளநிலை பழுதுகொண்டுள்ளது என்பதை உணர்ந்தார். மருத்துவரும் நிமித்திகரும் வந்து அவரை நோக்கினர். மருத்துவர் அவர் உள்ளம் உவகைகொண்டிருக்கிறது என்று மட்டும் கூறினர். நிமித்திகர் அக்களிப்பு மானுடரால் அளிக்கப்படுவதல்ல, அவரை ஏதோ கந்தர்வனோ தேவனோ ஆட்கொண்டிருக்கிறான் என்றனர். அத்தெய்வம் ஏதென்று அறியும்பொருட்டு கணியர் வந்து சோழிபரப்பி நோக்கினர். பூசகரில் வெறியாட்டெழுந்த தெய்வங்கள் உசாவின. எவராலும் எதையும் கண்டறிய இயலவில்லை.”
“ஒருநாள் அரசருடன் இருந்த அரசி அலறியபடி எழுந்து ஓடி வெளியே வந்தார். ஓசைகேட்டு பதறி வந்த நான் ஆடையை எடுத்து அவருக்கு அணிவித்தேன். அணைத்துச்சென்று என்ன என்று உசாவினேன். திகைத்தவராக அரசர் வந்து நின்று என்ன ஆயிற்று என வினவினார். அரசியால் பேசமுடியவில்லை. அவர் பேரச்சத்தில் நடுக்குற்று விழிமலைத்திருந்தார். அரசர் கிளம்பிச்சென்றார். நான் இரவெல்லாம் அரசியுடன் இருந்தேன். ஒவ்வொரு நிழலசைவுக்கும் எழுந்து அஞ்சி அலறிக்கொண்டிருந்தார். அகிபீனா அளித்து துயிலச்செய்தேன். மறுநாள் காலையில்தான் அவர் உளநிலை மெல்ல அடங்கியிருந்தது. என்ன நிகழ்ந்தது என்று கேட்டேன். அச்சம்கொண்டு மீண்டும் அலறியழத் தொடங்கினார். மீண்டும் மீண்டும் கேட்டு மறுநாள்தான் என்ன நிகழ்ந்தது என்று அறிந்தேன்.”
“அரசி, அரசர் தன்னை முயங்கிக்கொண்டிருந்தபோது களிமயக்கில் விழிசரிந்திருந்த அரசி இயல்பாக நோக்கு கொண்டபோது அகலின் சிறுசுடரின் ஒளியில் அரசரின் நிழல் எழுந்து சுவரில் தெரிவதை கண்டார். அது ஒரு மாபெரும் காளையின் நிழல்.” சுப்ரியை “காளையா?” என்றாள். “ஆம், கொம்பும் காதுமாக காளைத்தலைகொண்ட மானுட உடலின் நிழல்” என்றாள் பிரவீரை. “அதை தான் நேர்விழிகளால் நோக்கியதாக சொன்னார். செவிலியரும் சேடியரும் அவரிடம் பேசிநோக்கினர். நிமித்திகர் வந்து களம்வரைந்து பார்த்தனர். பாணினியரும் நாகவிறலியரும் வந்தனர். அரசி அவர்கள் கண்டது அதையே என்று உளம்செறிந்திருந்தார்.”
“அதன்பின் அவர்களுக்கிடையே உறவே அமையவில்லை” என்று பிரவீரை சொன்னாள். “பின்னர் எப்போதெல்லாம் அரசரைக் கண்டாரோ அப்போதெல்லாம் அரசி அந்தக் காளைநிழலை கண்டார். ஒவ்வொருமுறை கண்டபின்னரும் நடுக்குற்று காய்ச்சல்கண்டு நெடுநாட்கள் கழித்து மீண்டார். நாளடைவில் எப்போதும் அதை எண்ணி அஞ்சி அழத்தொடங்கினார். அவரை இங்கே கான்மாளிகைக்கு கொண்டுவந்தோம். அரசரைப்பற்றிய செய்தியே அவர் செவிகளில் விழாதபடி காத்தோம். இங்கே எங்கும் காளையோ பசுவோ அவற்றின் வடிவங்களோகூட அவர் விழிகளில் படுவதில்லை. ஆனால் அவர் அச்சம் நாளும் வளர்ந்தது. முதற்சில ஆண்டுகாலம் எப்போதும் நடுங்கிக்கொண்டும் மூலைகளில் பதுங்கி அமர்ந்து விம்மியழுதபடியும் இருந்தார். பின்னர் நடுக்கும் அழுகையும் நின்றன. விலகி விலகி வேறெங்கோ சென்றுவிட்டார். இன்று அவர் இருக்கும் உலகுக்கும் எங்களுக்கும்கூட எந்தத் தொடர்பும் இல்லை.”
சுப்ரியை எழுந்தாள். “நான் கிளம்புகிறேன்” என்றபின் மீண்டும் அமர்ந்து “அவளை அழைத்து வருக…” என்றாள். பிரவீரை “அஞ்சுவதற்கேதுமில்லை, அரசி. அவர் மானுடர் எவரையும் அடையாளம் கண்டுகொள்வதில்லை. அவரை ஒரு பொருளென்றோ விலங்கென்றோ நம் அகம் உணரும்” என்றபின் உள்ளே சென்றாள். சபரி “அரசி, நீங்கள் கிளம்பிவிடுவதே மேல் என நினைக்கிறேன். அவரைச் சந்திப்பது உங்கள் உள்ளத்தின் ஆழத்தை கலக்கிவிடக்கூடும். அதன்பின் எண்ணி வருந்த நேரும்” என்றாள். சுப்ரியை அவளைத் தவிர்த்து நோக்கை விலக்கிக்கொண்டாள்.
பிரவீரை சுதர்சனையின் தோளைப்பற்றி அழைத்துவந்தாள். சுதர்சனை தன்னைப்போன்ற தோற்றத்துடன் ஆனால் மேலும் சற்று பருத்த கைகளும் இடையும் கொண்டிருப்பதாக சுப்ரியை எண்ணினாள். வெளிறிய முகத்தில் கன்னங்கள் துயிலெழுந்தவைபோல உப்பி சற்று தொய்ந்திருந்தன. கண்களுக்குக் கீழே கருமை இறங்கியிருக்க விழிகள் சற்று கலங்கி அலைபாய்ந்துகொண்டிருந்தன. “அமர்க, அரசி!” என்றாள் பிரவீரை. சுதர்சனை அவள் சொற்களுக்குப் பணிந்து பீடத்தில் அமர்ந்து தன் மேலாடையை எடுத்து கைகளில் சுற்றிக்கொண்டாள்.
“அரசி, இது தங்கள் உடன்பிறந்தவர்… கலிங்க இளவரசி சுப்ரியை” என்றாள் பிரவீரை. சுதர்சனை அவளை அடையாளம்கண்டதுபோலத் தெரியவில்லை. கண்கள் அங்குமிங்கும் அலைய அவள் தனக்குள் ஏதோ சொல்லிக்கொண்டிருந்தாள். கைவிரல்களும் நிலையழிந்து ஆடையை சுழற்றிக்கொண்டிருந்தன. “அக்கையே, என்னைத் தெரிகிறதா? இது நான், சுப்ரியை. அக்கையே” என சுப்ரியை அழைத்தாள். முணுமுணுவென்று எதையோ சொன்னபடி சுதர்சனை பக்கவாட்டில் நோக்கினாள். “நம் சொற்கள் செவிகளில் விழுவதேயில்லை. ஓயாது அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் எதுவும் நாம் அறிந்தவை அல்ல” என்றாள் பிரவீரை.
“என்ன பேசுகிறார்கள்?” என்றாள் சுப்ரியை. “பெரும்பாலும் உதிரிச்சொற்கள். ஏதேனும் ஒரு சொல்லோ சொற்றொடரோ அமைந்தால் ஓரிரு நாட்கள் அவையே சென்றுகொண்டிருக்கும்.” சுப்ரியை திடுக்கிட்டு திரும்பி நோக்கி “மாளவம் என்கிறார்” என்றாள். “ஆம், அதைத்தான் காலைமுதல் சொல்லிக்கொண்டிருக்கிறார்.” சுப்ரியை “ஏன்?” என்றாள். பிரவீரை “அதை நாம் உணரவேமுடியாது, அரசி. இப்புவியில் நாம் இணைக்கப்பட்டிருக்கும் வலைக்கண்ணிகளுக்கு முற்றிலும் அப்பாற்பட்ட ஏதோ சரடு அது” என்றாள்.
“நான்கு, நான்கு, ஆனால் அவ்வாறல்ல, நான்கில் அல்ல” என்று சுதர்சனை தலையாட்டினாள் மறுப்பவள்போல. “ஆனால் மூன்றிலிருந்து நான்குக்கு நான்கல்ல… ஆமாம்.” பிரவீரை “இவ்வாறுதான் இருக்கும் எல்லா பேச்சுக்களும்” என்றாள். “எவ்வகையிலும் நம் சித்தத்தால் தொடுக்கவோ இணைக்கவோ இயலாது.” சுப்ரியை சுதர்சனையின் தொடையைப் பற்றி உலுக்கி “அக்கையே, அக்கையே, கேட்கிறீர்களா? இது நான். அக்கையே” என்றாள். அவள் விழிகள் சுப்ரியையை நேருக்குநேர் நோக்கின. ஆனால் கண்களில் அறிதல் நிகழவில்லை. “ஆனால் ஒன்றிலிருந்துதான். மாளவத்தில் அது வேறு. ஒன்று எப்படி இரண்டு? ஆனால்…” என்றாள்.
சுப்ரியை பெருமூச்சுடன் எழுந்துகொண்டு “நான் கிளம்புகிறேன். அக்கையை நோக்கிக்கொள்க!” என்றாள். “அஸ்தினபுரி இளைய அரசியை முழுமையாகவே மறந்துவிட்டது, அரசி” என்றாள் பிரவீரை. “இவர்கள் இங்கிருப்பதை இருபதாண்டுகளுக்குப் பின்னர் நேற்றுதான் நினைவுகூர்ந்தனர். அதுவும் கனகரின் மைந்தர் ஸ்ரீகரர் இப்போது அரண்மனை வரவேற்புத்தொழில் சிற்றமைச்சராக இருக்கிறார். தாங்கள் வருவதனால் இளைய அரசியும் வந்து வரவேற்புக்கு நிற்கலாம் என அவருக்குத்தான் தோன்றியது.” சுப்ரியை “சித்தம் கலங்கியவர்கள் இறந்தவர்கள்போலத்தான். அவர்களை மறக்காமல் வாழ்க்கை இல்லை” என்றாள்.
சபரி “நாம் செல்வோம், அரசி…” என்றாள். “ஒருவேளை அரசப் பேரவை முடியவில்லை என்றால் நாம் அங்கே செல்லமுடியும்.” அவளை சினத்துடன் நோக்கிவிட்டு “நான் கிளம்புகிறேன், அக்கை” என்று சுதர்சனையிடம் சொன்னாள். சுதர்சனையின் விழிகள் நோக்கிலாது அலைய உதடுகளில் சொற்கள் அசைந்தன. “கருகுமணிக் காதணி… துளையிட்ட கருகுமணி.” சுப்ரியை திகைத்து, கைகள் நடுங்க “என்ன சொல்கிறார்?” என்றாள். “அவர் மாளவத்தில் இருக்கிறார். அங்குள்ள ஏதேனும் வழக்கமாக இருக்கும்” என்றாள் பிரவீரை. “நாம் செல்வோம் அரசி, இங்கிருப்பது உங்களை நிலையழியச் செய்கிறது” என்றாள் சபரி.
அவர்கள் எழுந்து வெளியே செல்ல பிரவீரை உடன்வந்தபடி “இதை ஜீவபாலாயனம் என்று நிமித்திகர்கள் சொல்கிறார்கள். உடல் உயிரையும் உள்ளத்தையும் தன்னிடம் பிடித்து வைத்திருக்கும் ஆற்றல்கொண்டிருக்கிறது, பாறை உப்பையும் அனலையும் உள்ளே கொண்டிருப்பதுபோல. அத்திறனை உடல் கைவிடுகையில் உயிரும் உள்ளமும் எழுந்து அலையத் தொடங்குகின்றன. அவற்றுக்கு காலமும் இடமும் இல்லை. எங்கும் எப்போதும் இருக்க அவற்றால் இயலும். கால இடத்தில் அவற்றை நிறுத்துவது உடலே” என்றாள்.
சுப்ரியை ஒன்றும் சொல்லாமல் தேரை நோக்கி சென்றாள். சபரி “நாம் பேரவைக்குச் சென்று பார்ப்போம், அரசி” என்றாள். “வேண்டாம், நம் மாளிகைக்கே செல்வோம்” என்றாள் சுப்ரியை.