பகுதி பத்து : பெருங்கொடை – 6
புலரியில் சுப்ரியை ஒரு கனவு கண்டாள். மிகச் சிறிய படிகள். அவை சதுர வடிவான கிணறு ஒன்றுக்குள் மடிந்து மடிந்து இறங்கிச் செல்ல மங்கலான ஒளியில் அப்படிகளின் மேற்பரப்பை மட்டுமே நோக்கியபடி அவள் காலெடுத்து வைத்து இறங்கிச் சென்றுகொண்டே இருந்தாள். மேலும் மேலுமென படிகள் இருளிலிருந்து எழுந்து வந்துகொண்டிருந்தன, ஏடு புரளும் முடிவற்ற நூல் என. தலைக்குமேல் மெல்லிய ஒளியுடன் தெரிந்த அச்சதுரத் திறப்பு சிறிதாகியபடியே சென்றது.
இருமுறை கால் தடுமாறி சுவரைப் பற்றிக்கொண்டு உடல் நடுங்கி நின்றபோதுதான் காலடிக்குக்கீழ் எத்தனை ஆழம் என்று தெரிந்தது. அங்கிருந்து குளிர்ந்த காற்றில் மட்கும் தோலும் மயிரும் எழுப்பும் கெடுமணம் வந்துகொண்டிருந்தது. திரும்பி மேலே சென்றுவிடலாமா என்று தயங்கி ஆனால் தவிர்க்க இயலாத ஓர் அழைப்பிற்கு உளம்கொடுத்தவள்போல அவள் சென்றுகொண்டிருந்தாள். பலமுறை நின்று மூச்சுகொண்டு மேலும் சென்று அண்ணாந்து பார்த்தபோது அச்சதுரம் மிகச் சிறிய ஒரு வட்டம்போல கரிய வானில் அசைவற்று நின்றிருந்தது.
இருளுக்குப் பழகிய விழிகளுக்கு பிறிதொரு இருள் வடிவென படிகள் புலப்பட்டன. ஆழத்தில் மூச்சொலியும் முனகலோசையும் கேட்டன. அவள் நன்கறிந்திருந்த ஒரு குரல் “அரசி” என்றது. மேலும் பல படிகள் இறங்கி கீழே நோக்கியபோது முடிவிலாது சென்றுகொண்டிருந்த படிகளை பார்த்தாள். இதை யார் கட்டினார்கள்? எதன் பொருட்டு? இது கனவிலன்றி பிறிதெங்கும் இருக்க இயலாது. இது கனவுதான். ஆனால் இங்கு பலமுறை வந்திருக்கிறேன். இப்படிகளை கால்கள் நன்கு அறிந்திருக்கின்றன. இது எந்த இடம்? கலிங்கமா? அங்கமா? இல்லை, நான் அறிந்த எந்நிலமும் அல்ல.
மீண்டும் கீழிறங்கத் தொடங்குகையில் நெடுந்தொலைவு வந்துவிட்டோம், இத்தனை படிகளையும் திரும்பி மேலேறிச்செல்வது இயல்வதே அல்ல, எப்போதைக்குமென இதற்குள் சிக்கிக்கொண்டுவிட்டோம் என்று ஆழம் பதறிக்கொண்டிருந்தது. கீழே மீண்டுமொருமுறை அக்குரல் “அரசி” என்றது. மறுமுறை மிகத் தெளிவாக குரல் கேட்கவும் அவள் விழித்துக்கொண்டு “யார்?” என்றாள். எழுந்து அமர்ந்து அறையை நோக்கினாள். அகல்சுடர் கரிகொண்டு எரிய சுவர்கள் செந்நிறமாக அசைந்தன.
சபரி அவளருகே வணங்கி நின்றிருந்தாள். “அரசி, புலரியிலேயே தாங்கள் சித்தமாக இருக்கவேண்டும் என்று சொல்லப்பட்டது” என்றாள். “ஆம்” என்றபின் எழுந்து அமர்ந்து குழல் சுருட்டிக்கட்டி “ஒரு கனவு” என்றாள். சபரி புன்னகைத்து “நற்கனவு என்று எண்ணுகின்றேன்” என்றாள். “நெடுநாட்கள் நீங்கள் எண்ணிய அனைத்தும் நேற்று ஈடேறின. இரவில் நான் எண்ணிப்பார்க்கையில் இவை நிகழுமென்றே கருதியிருக்கவில்லை என்று உணர்ந்தேன். கோட்டை மீது தங்கள் பொருட்டு கலிங்கக் கொடி ஏறியது. முகப்பு வாயிலில் ஏழு அரசியர் தங்களை வரவேற்று அழைத்துச் சென்றனர். அஸ்தினபுரியின் குடிகள் அரசப் பெருஞ்சாலையின் இருபுறமும் கூடிநின்று தங்களை வாழ்த்தி அரிமலர் தூவினர். மங்கல இசையும் குரவை ஒலியும் பெருகிச்சூழ அரண்மனை முற்றத்தை வந்தடைந்தீர்கள்.”
சுப்ரியை அவளுக்கு விழிகொடுக்காமல் தன் மேலாடையை எடுத்துக்கொண்டாள். சபரி மேலும் ஊக்கம்கொண்டு “அரண்மனைமுற்றத்தில் அஸ்தினபுரியை ஆளும் மாமன்னர் துரியோதனரின் பட்டத்தரசி பானுமதியே தங்களை வரவேற்க நின்றிருந்தார். உடன் இளைய அரசி சுதர்சனையும் வந்திருந்தார். இளைய அரசி பட்டத்தரசியுடன் இணைந்து நிற்பது அரிதினும் அரிது என்று இங்கே சொல்லிக்கொள்கிறார்கள். நேற்றெல்லாம் சேடியர் அதைத்தான் பேசிக்கொண்டிருந்தார்கள்” என்றாள். சுப்ரியை அதை செவி கொள்ளாதவள்போல “நீராட வேண்டுமல்லவா?” என்றாள்.
சபரி ஏமாற்றத்துடன் “ஆம்” என்றாள். “நேற்று மிகவும் களைத்துவிட்டேன்” என்று சுப்ரியை சொன்னாள். “ஆம் அரசி, நானும் களைத்திருந்தேன். கோட்டை முகப்பிலிருந்து அரண்மனைக்கு வந்து சேர்வதற்கே மூன்று நாழிகை ஆகிவிட்டது. அனைத்து தெருச்சந்திகளிலும் தேர் நின்று குடிகளின் வாழ்த்துகளை பெற்றுக்கொள்ள வேண்டியிருந்தது” என்று சபரி சொன்னாள். திரும்பிப்பார்க்காமல் சுப்ரியை நடக்க அவளைத் தொடர்ந்தபடி சென்று சபரி “இன்று புலரியில் சம்பாபுரியிலிருந்து பறவைச் செய்தி ஒன்று வந்தது. இவ்வேளையில் அது பொருத்தமானதா என்று தெரியவில்லை” என்றாள்.
அதையும் சுப்ரியை செவி கொள்ளவில்லை என்று தோன்றவே சிற்றடி எடுத்து வைத்து அவளுக்கு இணையாக நடந்தபடி “தங்கள் முதுசேடி சரபை நேற்று அந்தியில் உயிர் துறந்தாள்” என்றாள். சுப்ரியை திரும்பிப்பார்த்து “நோயுற்றிருந்தாள் அல்லவா?” என்றாள். அச்செய்தியும் அவளைச் சென்று தைக்கவில்லை என்று சபரிக்கு தோன்றியது. “ஆம் அரசி, கலிங்கத்திலிருந்து தங்கள் பொருட்டு வந்து உடன் பணியாற்றியவள். அரசரின் சினத்திற்கு ஆளானதால் விலக்கப்பட்டாள். ஆயினும் தங்கள் ஆதரவில் சம்பாபுரியில் தனிஇல்லத்திற்குச் சென்ற பின்னர் அனைவராலும் மறக்கப்பட்டாள்” என்றாள். சுப்ரியையின் விழிகளில் சினம் எழுவதைக் கண்டதும் விரைந்து “ஆறுமாதம் முன்புகூட நாம் சென்று பார்த்து வந்தோம். தங்கள் கைகளைப்பற்றி கண்களில் ஒற்றியபடி விம்மியழுதாள்” என்றாள் சபரி. சுப்ரியை “ஆம், அளியள்” என்றாள்.
சபரி தன் உள்ளே எழுந்த புன்னகையை காட்டாமல் “அவைகளில் தலைநிமிர்ந்து கோல்கொண்டு நின்றிருந்த அவளுடைய உருவம் என் விழிகளில் நிற்கிறது” என்றாள். “ஆம்” என்றாள் சுப்ரியை. “ஆனால் அன்று நாம் பார்த்தவள் நைந்து பாதி மட்கி மண்ணில் பதிந்து கிடக்கும் வாழைத்தண்டு போலிருந்தாள்” என்றாள் சபரி. அந்த ஒவ்வொரு சொற்றொடரிலும் தான் கொடுத்த அழுத்தத்தை சுப்ரியை உணர்கிறாளா என்று ஓர விழியால் பார்த்தாள். சுப்ரியை பெருமூச்சுவிட்டு “நன்று, அவள் ஆத்மா நிறைவுறுக! சம்பாபுரிக்கு என் செய்தியை அனுப்புக! தன் குலத்திற்குரிய அனைத்து முறைமைகளுடனும் அவள் உடல் எரியூட்டப்படட்டும்” என்றாள்.
அப்போது சுப்ரியையின் விழிகளில் வந்து திகழ்ந்து உடனே மறைந்த துயர் சபரியை சற்று ஆறுதல்படுத்தியது. “ஆம் அரசி, நாம் மீண்டு சென்ற உடனே அவள் சிதைத்தடத்திற்குச் சென்று படையலிட்டு முறைச்சடங்கு செய்யவேண்டும். அவளுக்கென ஒரு படுக்கைக்கல் தென்புலத்தில் நாட்டப்பட வேண்டும்” என்றாள். சுப்ரியை புருவம் சுளித்து “திரும்பிச் செல்லும்போதா?” என்றாள். “ஆம், அரசி. இங்கு வேள்வி முடிந்ததும்…” என்று சொல்லெடுத்த சபரி நிலையழிந்த விழிகளுடன் சுப்ரியை வேறெங்கோ பார்ப்பதைக் கண்டு நிறுத்திக்கொண்டாள். சுப்ரியை “நீராட்டறை இங்கல்லவா?” என்றாள்.
“ஆம் அரசி, அனைத்தும் சித்தமா என்று நோக்கிவிட்டுத்தான் தங்களை அழைக்க வந்தேன். தாங்கள் நீராடி வருகையில் ஆடை அணிகள் அனைத்தையும் எடுத்து வைத்திருப்பேன்” என்றாள் சபரி. மீண்டும் அவளை அறியாமலேயே உள்ளெழுந்த மகிழ்ச்சியுடன் “இன்று அஸ்தினபுரியின் பட்டத்தரசிக்கு நிகராக நீங்கள் அவையமரவிருக்கிறீர்கள். தாங்கள் அறிந்திருப்பீர்கள், தங்கள் உடன்பிறந்தவர் சுதர்சனையும் இங்கே அரசரின் துணைவிதான். எந்த அவையிலும் அவரை அமர்த்துவதில்லை. எவ்விழாவிலும் அவர் பங்கெடுத்ததுமில்லை. அவ்வாறு ஒருவர் இருப்பதையே அனைவரும் மறந்துவிட்டனர். இன்று உங்களுக்காக அவர்கள் அளிக்கும் அவைமுறைமை பல்லாண்டுகளாக அவருக்கு மறுக்கப்பட்டது” என்றாள்.
சுப்ரியை ஒன்றும் சொல்லவில்லை. சபரி மீண்டும் “யாரிவர் என்று இங்குள்ள மூத்த குடிகளும் பெருவணிகரும் நோக்கட்டும், கலிங்கத்து அரசி என்ற சொல் இன்னும் சில நாள் இந்நகரத்தின் நாவுகளில் நிகழட்டும்” என்றாள். சுப்ரியை நீராட்டறையின் வாயிலை அடைந்து நின்று “விரைந்து நீராடவே எனக்கு விருப்பம்” என்றாள். “ஆனால் அவையமர்வதனால் மஞ்சள் சந்தன மெழுக்கும், எண்ணெய் உழிச்சலும், புகையாட்டும் நறுஞ்சுண்ணப்பூச்சும் தேவையல்லவா?” என்று சபரி சொன்னாள். சலிப்புடன் தலையசைத்துவிட்டு சுப்ரியை உள்ளே சென்றாள்.
நீராட்டறைக்குள் அவளைக் காத்து நின்றிருந்த சேடியர் தலைவணங்கினர். தலைமை நீராட்டுச் சேடி “கலிங்க அரசிக்கு நல்வரவு. அரச முறைப்படி முழு நீராட்டுக்கு என்று அனைத்தையும் ஒருக்கியுள்ளோம்” என்றாள். அவள் மறுமொழி சொல்லாமல் சென்று சிறிய பித்தளைப் பீடத்தில் அமர அவர்கள் அவள் ஆடைகளை களைந்தனர். தலைமை நீராட்டறைச் சேடி “என் பெயர் சூக்ஷ்மை. நான் இங்கு பட்டத்தரசிக்கும் பேரரசிக்கும் மூத்த அரசியருக்கும் மட்டுமே நீராட்டுப்பணி செய்வது வழக்கம். நானே வரவேண்டுமென்று பட்டத்தரசி ஆணையிட்டதனால் வந்தேன்” என்றாள். அவள் ஒன்றும் சொல்லாமல் தரை நோக்கி அமர்ந்திருந்தாள்.
சூக்ஷ்மை அவள் குழல்கற்றைகளைப் பிரித்து பின்பக்கம் விரித்திட்டாள். இரு நீராட்டுச் சேடியர் அவள் கால்களை நீட்டி நகங்களை ஒழுங்குபடுத்தத் தொடங்கினர். மஞ்சள் சந்தனக் கலவையை சுட்டுவிரலால் குழைத்தபடி சூக்ஷ்மை “தங்கள் வருகை இரு நாட்களாகவே இங்கு உவகையுடன் பேசப்படுகிறது, அரசி. தங்களை சந்திப்பதற்கு பேரரசியும் பட்டத்தரசியும் மிகுந்த ஆவலுடன் இருந்தனர். அங்கநாட்டரசருக்கு அரசியாகி வந்தபின் இத்தனை ஆண்டுகளில் முதன்முறையாக அஸ்தினபுரிக்கு வருகிறீர்கள் அல்லவா?” என்றாள். சுப்ரியை தலையசைத்தாள்.
“நேற்று தங்களை பேரரசி காந்தாரி சந்தித்ததைப்பற்றி அரண்மனையில் இன்று சேடியர் வியந்து பேசிக்கொண்டனர். தங்களை இடைவளைத்து அருகமர்த்தி தோளையும் கன்னங்களையும் இடையையும் தடவி நோக்கி பேரரசி மகிழ்ந்தார்கள் என்றார்கள். தன் மருகியரையும் பெயர் மைந்தர் மனைவியரையும் மட்டுமே அவ்வண்ணம் பேரரசி தோளுடன் அணைத்துக் கொள்வார்” என்றாள் சூக்ஷ்மை. சுப்ரியை அவையனைத்தையும் தான் மகிழும்பொருட்டு அவள் சொல்கிறாள் என்று உணர்ந்தாள். அவள் பேசுவதை தான் விரும்பவில்லையென்று எப்படி தெரியப்படுத்துவது என்று எண்ணி பின்னர் அவ்வெண்ணத்தை அகற்றினாள்.
சேடியரின் கைகள் அவள் உடலில் அலைந்துகொண்டிருந்தன. நாய்மூக்கின் முத்தங்கள்போல என தோன்றியதுமே சரபையின் முகம் நினைவிலெழுந்தது. அருகில் அவள் நிற்பதைப்போல மெல்லிய திடுக்கிடலுடன் அவள் திரும்பிப்பார்த்தாள். பின்னர் பெருமூச்சுடன் கண்களை மூடி பீடத்தில் சாய்ந்து அமர்ந்தாள். சரபை அவளிடம் எதையோ சொல்ல நாவெடுப்பதுபோல் தோன்றியது. “என்ன?” என்று அவள் கேட்டாள். சூக்ஷ்மை “அரசி?” என்றாள். “அல்ல, உன்னிடம் அல்ல” என்றபின் மீண்டும் அவள் விழிமூடினாள். கலைக்க முடியாததாக சரபை முகமே நின்றது. “என்னடி?” என்று அவள் மீண்டும் கேட்டாள். உதடு அசைய ஒலியின்றி மீண்டும் சரபை எதையோ சொன்னாள். “என்ன சொல்கிறாய்?” என்று அவள் மீண்டும் கேட்டாள். அது மெல்லிய முனகல்போல் எழ காலில் நகத்தை ஒருக்கிக்கொண்டிருந்த அணிச்சேடி “அரசி…” என்றாள். “ஒன்றுமில்லை” என்று அவள் சொன்னாள்.
சூக்ஷ்மை “இங்குள்ள பெண்டிர் அனைவரும் தங்களை அணிசெய்து கொள்கிறார்கள். அஸ்தினபுரியில் நிகழவிருக்கும் இப்பெருவேள்வி ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பாரதவர்ஷத்தில் நடந்தது என்கிறார்கள்” என்றாள். “வேள்வியென்றால் அது வேள்விச்சாலையில் நிகழும் அனற்கொடை மட்டுமல்ல. பெருவேள்விகளின்போது வேதாங்கங்கள் உபவேதாங்கங்கள் அனைத்துமே பயிலப்படும். சொல்லொலி, செய்யுளமைவு, இலக்கணம், வானியல், சடங்கியல் என வேதக்கூறுகளைச் சேர்ந்த அறிஞர்களும் வருவார்கள். உடலியல், சிற்பவியல், வில்லியல், கலையியல் என்னும் நான்கு துணைவேதங்களையும் இங்கே முழுமையாக நிகழ்த்தவேண்டும் என்பது நெறி. துணைவேதக்கூறுகளில் ஒன்றுகூட விடப்படலாகாது. ஒவ்வொரு துறையிலிருந்தும் முதன்மையர் அனைவரும் நாளும் என நகர்நுழைந்துகொண்டிருக்கிறார்கள்.”
பேசியபடியே அவள் பூச்சுவிழுக்கை கலந்து முடித்து மரவுரியால் கைகளை துடைத்துக்கொண்டாள். “சில நாட்களுக்கு முன்பு இங்கு ஒவ்வொருவரும் குருதி பெருகும் பெரும்போர் ஒன்றுக்கான உளநிலையிலிருந்தனர். இன்று அனைவருமே போரை மறந்துவிட்டனர். இந்நகரின் நூறு மையங்களிலாவது இரவெல்லாம் கூத்தும் பாட்டும் ஆடலும் நிகழ்கின்றன. அனைத்து மன்றுகளிலும் புலவர் அமர்ந்து சொல்கூட்டுகிறார்கள். இல்லந்தோறும் சூதர்கள் வந்து பாட அமர்கிறார்கள். இன்று பாரதவர்ஷத்தின் கலை மையமென்றும் மெய்மை நிலை என்றும் அஸ்தினபுரி மாறிவிட்டிருக்கிறது” என்றாள் சூக்ஷ்மை. “அவைநிகழ்வுகள் முடிந்தபிறகு தாங்கள் பல்லக்கிலேறி இந்நகரத்தை ஒரு சுற்று சுற்றி வரலாம், அரசி. கலையென்றும் அறிவென்றும் மானுடன் அடைந்த அனைத்தையுமே ஓரிரவுக்குள் விழிகளாலும் செவிகளாலும் அறிந்து மீளலாம்.”
பேசியபடியே இருப்பது அவள் இயல்பென்று தோன்றியது. அவள் சொற்களை செவிகொள்ளாமலும் இருக்கமுடியவில்லை. உள்ளம் எதையும் குவிக்காமல் கலைந்து பரந்துகொண்டிருந்தமையால் அவள் பேச்சே அதன் எல்லைகளை அமைத்தது. சூக்ஷ்மை சந்தனவிழுக்கை தன் உடலில் வைத்தபோது மெல்லிய விதிர்ப்புடன் அவள் விழிதூக்கி அவளை பார்த்தாள். அப்போதுதான் அவள் இருபாலினத்தவள் என்று அவளுக்குத் தெரிந்தது. அதை அவள் உணர்ந்ததை உணர்ந்த சூக்ஷ்மை புன்னகைத்தாள்.
“எந்த ஊரைச் சேர்ந்தவள் நீ?” என்று சுப்ரியை கேட்டாள். “நான் கிருஷ்ணையின் கரையிலுள்ள விஜயபுரியை சார்ந்தவள். அடுமனைக் கலை பயில்வதற்காக காசிக்குச் சென்றேன். அணியறைக் கலை பயின்று அங்கிருந்து அஸ்தினபுரிக்கு வந்தேன். இங்கு வந்து ஓராண்டே ஆகிறது” என்று சூக்ஷ்மை சொன்னாள். சுப்ரியை புன்னகைத்து “நன்று” என்று கண்களை மூடிக்கொண்டாள். சூக்ஷ்மையின் கைகள் அவள் உடலில் மெழுக்குப்பூச்சுடன் வழுக்கி ஒழுகிச் சென்றுகொண்டிருந்தன. தன்னை வண்ணம் தொட்டு ஒரு திரையில் அவள் வரைந்துகொண்டிருப்பதாக சுப்ரியை உணர்ந்தாள்.
சூக்ஷ்மை “நேற்றுமுன்னாள் அஸ்தினபுரியின் தெருக்களினூடாக சென்றுகொண்டிருந்தேன். இங்குள்ள அத்தனை சொல்மன்றுகளிலும் கலையரங்குகளிலும் சென்று நோக்கிவிட வேண்டுமென்று என் உள்ளம் எழுகிறது. நான் அறியாத ஒன்று வேறெங்கோ நிகழ்ந்துகொண்டிருப்பதுபோல. இது இன்று பாரதவர்ஷத்தின் உள்ளம் என்றாகிவிட்டது. இப்பெரும்பரப்புக்குள் கடலென உளம் விரிந்த வியாசனே சிறு துளியென்று ஆவான் என்று அறிந்திருந்தாலும் என்னால் பதைத்து அலையாமல் இருக்க இயலவில்லை” என்றாள். “எத்தனை கவியரங்குகள்! எத்தனை பெருங்காவியங்கள்! சிறிய கவிதைகள், சொல்மடக்குகள் செவிப்படாமல் எங்கும் நின்றிருக்க முடியாது. தெருமுனைகளில் எல்லாம் கொந்தளித்து நுரை பெருகி ஓடும் சூதர்பாடல்கள். ஆனால் யானையின் விழியென, குன்றாது ததும்பாது நிற்கும் சிறுசுனைகள் என, ஒளிகொண்ட குறுங்கவிதைகள்தான் என் உள்ளத்தை பித்தேற வைக்கின்றன. அவை என்னுள் எழுந்து பேருருக்கொள்கின்றன.”
“கவிதைகளைக் கேட்கையில் மொழியிலன்றி பிறிதெங்கிலும் மானுடன் வெளிப்பட இயலாதென்று தோன்றுகிறது. அப்பால் சென்று ஒரு நடனத்தை பார்க்கையில் ஒன்று சொல்லி பிறிதொன்றை உய்த்துணர வைக்கும் மொழிதான் எத்தனை எளியது, நின்று நடித்து நுடங்கி அவைநிறையும் உடலுக்கு அப்பால் தெய்வங்கள் பேச மொழியேதுள்ளது என்று தோன்றுகிறது. ஒற்றைக்கம்பியில் உலவும் வில்லெழுப்பும் இசையைக் கேட்கையில் இப்புவியை இசையால் அல்லவா பிரம்மம் நிறைத்துள்ளது என உள்ளம் விம்முகிறது. பிற அனைத்தும் மீறலும் தெறிப்புகளுமாக தொடர்புறுத்துகையில் ஒன்றுதலும் இசைதலுமாக பொருள்கொண்டு நின்றிருப்பது இசைமட்டுமல்லவா என்று எண்ணம் மயங்குகிறது” என்றாள் சூக்ஷ்மை.
“ஒவ்வொரு கலையும் பேருருக்கொண்டு நானே பிரம்மம் என்கிறது. ஒன்று முழுமையென்றால் பிற அனைத்தும் இன்மை என்றே பொருளல்ல. ஒவ்வொன்றிலும் முழுமையென ஒன்று நிறையுமென்றால் அது என்ன?” என சூக்ஷ்மை தொடர்ந்தாள். “அரசி, நகருக்குள் விழிப்புற்ற உள்ளத்துடன் உலவுபவர் எவராயினும் பித்தெழாமல் மீள இயலாது. பித்துநிலையே பெருநிலை. நிகர்நிலை என்பது என்ன? ஏதோ ஒன்றைக்கொண்டு நாம் நம்மை நிலைகொள்ளச் செய்கிறோம் என்பதுதானே? அது இந்த அன்றாடத்தில் இருந்து நாம் எடுத்துக்கொள்வது அல்லவா? நாளென்றும் பொழுதென்றும் பொருளென்றும் நமைச் சூழ்ந்திருக்கும் இவற்றுடன் நம்முள் எழும் முடிவிலியை கட்டிப்போடுவதல்லவா அது? கிழித்து வீசி எழுந்தால், மீறி மீறிச் சென்றால், நம்முள் நிறையும் பெருவெளியே பித்து. ஒன்றுக்கு உளமளிக்காமல் அனைத்துக்கும் நம்மை விரிப்பது அது.”
இடைவெளியின்றி பேசியபடியே சென்றாள் சூக்ஷ்மை. அவள் உள்ளம் முழுக்க சொற்கள் என சுப்ரியை நினைத்தாள். அவள் விரல்கள் மெல்லிய விசிறல்களாக வளைந்து வளைந்தசைந்து சந்தனமஞ்சள் மெழுக்கை புரட்டின. அவள் உதவியாளர்கள் சுப்ரியையின் குழலை சிறுபிரிகளாகப் பிரித்து நறுமண எண்ணெய் பூசி சுழற்றிக் கட்டினர். எழுந்து நின்று ஆடியில் தன்னைப் பார்த்தபோது ஒரு வெண்கலச் சிலையென மாறியிருப்பதை சுப்ரியை கண்டாள். அவள் பின்எழுச்சியில் மெழுக்கு பூசியபடி “ஆடிநோக்கி நில்லுங்கள், அரசி. உடலை நோக்குவது பெண்டிருக்கு நன்று. உடல் வழியாகவே அவள் வெளிப்படமுடியும். எந்நிலையிலும் பெண் உடல் அழகானதே. அகவைக்கு ஓர் அழகு கொள்கிறது அது” என்றாள் சூக்ஷ்மை.
சுப்ரியை “இந்நகருக்குள் எவ்வளவு தொலைவு செல்ல முடியும்?” என்று கேட்டாள். அவ்வினாவிலிருந்த விந்தைத் தன்மையில் இரு அணிச்சேடியரும் விழிதூக்கினர். ஆனால் அதன் அனைத்து உட்பொருட்களையும் உடனடியாக புரிந்துகொண்ட சூக்ஷ்மை எழுந்து முகம் மலர்ந்து “வைரத்திற்குள் ஒளி எத்தனை தொலைவு செல்ல இயலும், அரசி?” என்றாள். முகம் மலர்ந்து அவளை நோக்கி “ஆம், மெய்” என்றாள் சுப்ரியை. “வேதம் என்றெழுந்தது உண்மையில் ஒற்றைச்சொல் மட்டுமே. அச்சொல்லுக்கும் முதல்முழுமை என நின்றிருக்கும் மெய்மைக்குமான அணுவிடைவெளியை பல்லாயிரத்தில் ஒன்றென ஆக்கிய சிற்றிடைவெளியை நிரப்பவே மேலும் மேலுமென வேதங்களை கண்டடைந்தனர் மானுடர்.”
“குலத்திற்கொரு வேதம். நிலத்திற்கு நூறு வேதங்கள். வேதம் பெய்து பெய்து அவ்வெளியை நிரப்பிக்கொண்டே இருக்கின்றனர். அரசி, நால்வேதங்களும் சென்றடையாத இடைவெளியை துணைவேதங்கள், வேதக்கூறுகள் கொண்டு நிரப்பினர். ஒருபோதும் நிரம்பாதது அது. எண்ணிய அக்கணமே மானுடரை கொந்தளித்து எழச்செய்வது. ஒருகணமும் ஓயாது விசைகொள்ள வைக்கிறது” என்றாள் சூக்ஷ்மை. கனவில் பேசுபவள்போல அவள் சொற்கள் எழுந்தன. அவளை சுப்ரியை ஆடியில் நோக்கிக்கொண்டிருந்தாள். தன் உடலும் அவள் உடலும் இணைந்து ஓருடலாகத் தெரிவதாக உணர்ந்தாள்.
“நான் உன்னுடன் வருகிறேன்” என்று சுப்ரியை சொன்னாள். “என்னுடனா? எனது வழிகள் வேறு. இவ்வரண்மனையில் எங்களைப்போன்றோர் பலர் உள்ளனர். நாங்கள் ஆண்களின் நெறிகளை பேணவேண்டியதில்லை. பெண்டிரல்ல என்று எக்கணமும் கூறிவிடவும் முடியும். எனவே எங்களுக்கு வாயில் திறவாத எவ்விடமும் இங்கில்லை.” சுப்ரியை அவள் கைமேல் தன் கையை வைத்து “உன்னுடன் அன்றி பிற எவருடனும் சென்று இந்நகரை நான் நோக்க இயலாது. இதன் வெற்று முறைமைகளுக்குமேல் வெறும் தக்கையென மிதந்து செல்ல எனக்கு உளமில்லை” என்றாள்.
“அதற்கு அரண்மனை நெறிகள் ஒப்புவதில்லை, அரசி” என்றாள் சூக்ஷ்மை. “நான் நெறிகளில் நின்றிருக்க விழையவில்லை” என்றாள் சுப்ரியை. சூக்ஷ்மை கிளுகிளுத்துச் சிரித்து “கன்றுக்குத் தறியும் கன்னியருக்கு நெறியும் என்று ஒரு சொல் உண்டு. உங்கள் சொல் அது, எங்கள் சொல் அல்ல” என்றாள். பின்னர் “இந்நகரை நீங்கள் பார்த்தாக வேண்டுமென்று ஏன் தோன்றுகிறது என்று நான் வியந்துகொண்டேன். நேற்று நீங்கள் இவ்வரண்மனையின் வாயிலில் இந்நகரின் பட்டத்தரசியால் வரவேற்கப்பட்டீர்கள். இதன் பேரரசியின் அகத்தளத்திற்கு அணிச்சேடியர் தாலமேந்தி முன்செல்ல மங்கலச்சீர்வரிசை தொடர அழைத்துச் செல்லப்பட்டீர்கள். இளமகளென அவர் மடியில் அமர்ந்தீர்கள். நான் சேடியர் குழாமிலிருந்து நோக்கிக்கொண்டிருந்தேன். ஒருகணமும் நீங்கள் அச்சடங்குகளுக்கு உளம் கொடுக்கவில்லை. உங்கள் நோக்கு உள்நோக்கி மடிந்திருந்தது. அப்போது தோன்றியது, நீங்கள் பார்க்க விரும்பியது இந்நகரின் மக்களையோ மாளிகையையோ அன்றாடமென அவர்கள் புழங்கும் ஆயிரம் சடங்குகளையோ அல்ல என்று” என்றாள்.
“இந்நகரில் இப்போது குடியேறியிருக்கும் பெரும் கனவை மட்டுமே நீங்கள் அறிய வேண்டும். அரசி, அனல்கொண்டு பழுத்த இரும்பு காரிரும்பிலிருந்து ஒளியால், நெகிழ்வால், வெம்மையால் வேறுபடுகிறது. அது உருமாற விழைகிறது. ஏனெனில் கலத்தில் நீர் என அதில் அனல் நிறைந்துள்ளது. இந்நகரில் குடியேறிய அனலை வந்து நோக்குக! அஸ்தினபுரி நோக்கி விண்ணிலிருக்கும் அனைத்து தெய்வங்களும் இறங்கிவருகின்றன என்கிறார்கள் சூதர்கள். ஒவ்வொரு கலைக்கும் அதற்குரிய தெய்வங்கள் உண்டு. ஒவ்வொரு சொல்லுக்கும் தனியாக தேவர்கள் உண்டு. ஒருவர் மிச்சமின்றி இங்கு கூடிவிடுவார்கள்.”
அவள் விழிகளை சந்தித்து “தெய்வங்களெனும்போது மண்ணுக்கு அடியில் இருண்ட பேராழங்களிலிருந்து எழும் தெய்வங்களையும்தான் சொல்கிறேன். தெய்வங்களில் இருளென, ஒளியென வேறுபாடு இல்லை. முடிவின்மையே அவற்றின் இயல்பு. அங்கு இரண்டின்மையே உள்ளது” என்றாள். சுப்ரியை பெருமூச்சுவிட்டாள். மரவுரியால் கைகளை துடைத்துக்கொண்டு “மெழுக்கு முடிந்துவிட்டது, அரசி” என்றாள். அவள் கைவிரல்கள் விலகியதும்தான் அவை தன்னுடன் பேசிக்கொண்டிருந்ததாக உளமுணர்ந்தாள். அந்த விரல்களை மட்டும் தனியாக நோக்கினால் அவை ஒரு நடனமென தோன்றக்கூடும். பொருள்கொண்ட அடவுகளாக.
அணிச்சேடி “அரசி, வெந்நீர்த் தொட்டி ஒருங்கிவிட்டது” என்றாள். “வருக!” என்று சூக்ஷ்மை அவள் கையைப்பற்றி அழைத்துச் சென்றாள். இளவெந்நீர் நிரம்பிய தொட்டிக்குள் மெல்ல இறங்கி அவள் அமர்ந்தாள். அவள் உடலை நறுமண நீரால் அணிச்சேடியர் கழுவத் தொடங்கினர். அவள் குழலுக்குள் கைவிரல்களை செலுத்தி வருடி நீட்டியபடி சூக்ஷ்மை சொன்னாள் “அறிவதனைத்தும் தன்னையறிதலே என்று ஒரு சொல்லுண்டு. அறிந்திருப்பீர்கள்.” ஆம் என்று சுப்ரியை தலையசைத்தாள்.
“அறிவின்மை என்பது தன்னை அறியாதிருத்தலே.” அவள் குழலை சுருட்டி அதன் மீது மெழுக்கு நீக்கும் இலைக்குழம்பை பூசியபடி “தன்னை அறியத் தொடங்கும் முதற்கணம் தான் எனும் ஆணவம் அழியத் தொடங்குகிறது. தானென்று இறுக்கி எழுப்பி நிறுத்தியிருப்பது பொய்யே என்றும் அவை ஒன்று பிறிதைக் குறிக்கும் வீண்சொற்களின் வெறும் குவையே என்றும் உணர்வதிலிருந்து அனைத்தும் தொடங்குகிறது. ஒவ்வொன்றையும் தொட்டு திறந்து செல்லும் ஒரு பயணம். அரசி, தங்கள் ஆணவம் அழிந்திருப்பதையே நான் கண்டேன். அது எப்போது தொடங்கியது?” என்றாள்.
சுப்ரியை விழி மூடி அமர்ந்திருந்தாள். பின்பு “எவற்றுக்கும் திரும்பிச் செல்லப்போவதில்லை என்று தோன்றியபோது” என்றாள். சூக்ஷ்மை புன்னகைத்து “நன்று” என்றாள். நீர் ஓசையிட்டது. “உங்கள் உடன்பிறந்தவரை சந்தித்தீர்களா, அரசி?” என்றாள். “முறைமைச்சொல் உரைத்தேன். சொல்லாடவில்லை” என்றாள் சுப்ரியை. “சந்தியுங்கள். ஒருவேளை அதன்பொருட்டே நீங்கள் இங்கு வந்தீர்கள் போலும்” என்றாள் சூக்ஷ்மை.