கலைகளின் மறுமலர்ச்சி
ஆசிரியருக்கு,
வணக்கம். நலமா? சீனிவாசன் நடராஜன் அவர்களது புத்தக வெளீட்டு விழாவில் நீங்கள் பேசிய உரையை பார்த்தேன். மிக சிறப்பான உரை.
உங்களது வருகையின் போது உங்களுடன் ஓவிய கண்காட்சிக்கு சென்ற நியாபகம் வந்தது. அருமையான தருணம். துரதிருஷ்டவசமாக மனைவி எனக்கு பிள்ளைகளை பார்த்துக் கொள்ளும் வேலையை கொடுத்து உங்களுடன் முழு நேரம் செலவிட முடியாமல் போனது. ஓவிய ரசிகையும், உங்கள் வாசகியுமான அவருக்கு மிக சிறப்பான வாய்ப்பு கிடைத்தது.
இந்திய மறுமலர்ச்சி குறித்த உங்கள் பார்வை மிக கவனிக்கதக்கது. உங்கள் எழுத்தில் படித்திருந்தாலும்,உங்கள் பேச்சினை கேட்டது மிக மகிழ்வாக இருந்தது.
உங்கள் கட்டுரையில் நீங்கள் ஆனந்த குமாரசாமி குறித்து பகிர்ந்து இருந்தீர்கள். நேரில் வந்த பொழுது சீனிவாசன் எழுதிய Temples of South India பரிந்துரைத்தீர்கள். மிக பெரிய திறப்பு.
அன்புடன்
நிர்மல்
அன்புள்ள நிர்மல்
உங்கள் கடிதம் அமெரிக்கா பற்றிய நினைவுகளை எழச்செய்கிறது. நாம் சென்ற பயணங்கள். ஒரு பயணம் காலம் செல்லச்செல்ல அழுத்தம்பெறுகிறது என நினைக்கிறேன்
ஜெ
அன்புள்ள ஜெ
இந்தியக்கலைகள் பற்றிய உங்கள் உரையில் ‘மறுமலர்ச்சியை இறக்குமதி செய்ய முடியாது’ என்ற வரியும் ‘உண்மையான மறுமலர்ச்சி நிகழாமல் நம் மரபு அப்படியே இருக்குமென்றால் உலகமயமாதல் சூழலில் அது பெரிய வாய்ப்புதானே?” என்ற வரியும் சிந்தனையைத் தூண்டின. இன்று உலகநாடுகளில் எவை உலகமயமாகாமல் எஞ்சியிருக்கின்றனவோ அவற்றின் கலாச்சாரங்களுக்கு சந்தையிலேயே பெரிய மதிப்பு உண்டு. அவை உலகக்கலாச்சாரத்திற்கு பெரிய பங்களிப்பை அளிக்கமுடியும்
ஆனால் ஓவியம் போன்ற கலைகள் இந்தியாவைப்பொறுத்தவரை சுற்றுலாக்கவர்ச்சிகள் மட்டும்தான். வெள்ளைக்காரர் வாங்கியாகவேண்டும். மெல்லமெல்ல கிளாஸிக்கல் கலைகளும் ஃபோக் கலைகளும் கூட அப்படி ஆகிக்கொண்டிருக்கின்றன. இப்படி ஐரோப்பாவை நோக்கிப்பேசுவதுவரை அவற்றில் உண்மையான மறுமலர்ச்சி நடக்கமுடியாது
சந்திரசேகர்
அன்புள்ள சந்திரசேகர்,
இது இந்திய ஆங்கில இலக்கியத்திற்கும் பொருந்துவதே. அவை இந்தியர்களை நோக்கிப் பேசுவதில்லை என்பதனாலேயே அவற்றுக்கு உண்மையின் ஆழம் அமைவது இல்லை
ஜெ
கலைகளின் மறுமலர்ச்சி -கடிதம்
கலை -கடிதம்