இலக்கிய டயட் -பரிந்துரை

de

அன்புள்ள ஜெ..

பல இலக்கிய கூட்டங்கள நடத்தியுள்ள உங்களுக்கு ஒரு அனுபவம் ஏற்பட்டிருக்கும்  .. குறிப்பிட்ட சிலர் இப்படி சொல்வார்கள்  -கலந்து கொள்ள ரொம்ப ஆசை சார்.. இம்முறை வர முடியாமல் போய் விட்டது.. அடுத்த முறை கண்டிப்பாக வருவேன்..

இவர்கள் ஒருபோதும் கூட்டத்துக்கு வர மாட்டார்கள். ஆனால் இதே போல மெயில் அனுப்புவார்கள். சும்மா ஃபார்மலாக எழுதுகிறார்கள் என நினைப்போம்… தவறு.அவர்கள் கலந்து கொள்ள நிஜமாகவே விரும்புகிறார்கள்… என்றாவது ஒரு நாள் வீட்டில் வேலைகள் இல்லாதபோது ஞாயிற்று கிழமை பக்கத்து வீட்டில் எப்பவாவது நிகழ்ச்சிநடக்கும்… அதில் கலந்து கொள்ளலாம் என்பதே அவர்கள் எதிர்பார்ப்பு

இது நம் மனநிலை.. போராட்டத்துக்கு அழைத்தால் வரமாட்டார்கள்… போராட்டத்துக்க ஆதரவாக மெசேஜ் அனுப்பவும்.. ஒரு மணி நேரம் போனை அணைத்து வைக்கவும் என்றால் செய்வார்கள். எதுவும் எளிதாக நடக்க வேண்டும்

மீன் குழம்பு சாப்பிட்டால் கஷ்டப்பட்டு தியானம் செய்யும் அமைதி கிடைக்கும் என நினைக்கிறார்கள்.வெண்டைக்காய் சாப்பிட்டால் நல்ல மார்க் வாங்கலாம்… தயிர் சாப்பிட்டால் தூக்கம் வரும்…சிலமூலிகைகள் சாப்பிட்டால் பணக்காரன் ஆகலாம் என சாப்பாட்டின் மூலமாகவே அனைத்து தீர்வுகளையும் அடைய நினைத்தது ஓரளவு ஏற்கதக்கதுதான்.ஆனால் உடல் எடை குறைய என்ன சாப்பிடலாம் என கேட்க ஆரம்பித்ததுசற்றும் எதிர்பாரா திருப்பமாகும்

காலையில வெறும் ஒரு மணி நேரம்…ஒரே ஒருமணி நேரம – ஓடினால் நடந்தால் துள்ளோட்டம  ஓடினாலே போதும்.. உடம்பு கட்டுக்குள் இருக்கும்.ஆனால் இதை செய்ய விரும்பாமல் இருந்து விட்டு , மச்சான கறி சாப்பிட்டா எடை குறையுமாம்… வறுத்த முந்திரி சாப்பிட்டா ஸ்லிம் ஆகலாமாம்டா என சொன்னதைக் கேட்டு கரும்பு தின்ன கூலியா என நினைத்து பலர் பேலியோவில் இறங்கினர்.. இறங்கியபிறகு தாக்கு பிடிக்க முடியாமல் அதை கைவிட்டு முன்னினும் அதிக எடையை பலர் பெற்றதுதான் வரலாறு..அரிசி மீது திட்டமிட்ட தாக்குதல் நடத்துவதில் அரசியலோ அறியாமையோ இருப்பதாக நினைக்கிறேன்..

தினை ,குதிரைவாலி, வரகு, கைக்குத்தல் அரிசி ,செவ்வரிசி ,கருங்குருவை போன்றவற்றையும் நிறைய காய்கறிகளையும் சாப்பிட்டுவிட்டு வெகு அடிப்படையான உடற்பயிற்சிகள் செய்து வந்தால் எந்த ஷார்ட் கட்உம் தேவைப்படாது.. பால் கண்டிப்பாக குறைக்க வேண்டிய ஒன்று….இப்படி சிலர் சொல்வதை கேட்டிருக்கிறேன்….

சரி.. இதெல்லாம் இருக்கட்டும்… வெண்முரசு போன்ற மெகாநாவல்கள் தரும் அனுபவத்தை சில நிமிடங்களில் பெற ஏதாவது டயட் இருந்தால் பரிந்துரைக்கவும்

அன்புடன்
பிச்சைக்காரன்

***

அன்புள்ள பிச்சைக்காரன்,

நாங்கள் நடத்தும் நிகழ்வுகளுக்கு வெளிநாட்டிலிருப்பவர்கள் பெரும்பாலும் ‘வர ஆசை’ ‘பொறாமையாக இருக்கிறது’ என்றவகையில் எழுதுவார்கள். அவர்களில் பலர் இங்கே திரும்பி வந்தபின் ‘எங்கேங்க நேரம்’ என்பார்கள். பொதுவாக எங்கள் நிகழ்ச்சிகளில் சில கறாரான விதிகளைக் கொண்டுள்ளோம். ஒரு நிகழ்ச்சியில் பங்குபெறுவதாகச் சொல்லிவிட்டு முன்பின் தெரிவிக்காமலோ, போதிய காரணங்கள் இல்லாமலோ தவிர்ப்பவர்களை பிறகு எப்போதுமே சேர்த்துக்கொள்வதில்லை.

ஏனென்றால் அன்றாடவாழ்க்கையின் தீவிரமற்ற சூழலில் இருந்து ஒரு மாற்றாக தீவிரமான இலக்கியச் செயல்பாட்டுக்காகவே இக்கூட்டங்கள் ஒருங்கிணைக்கப்படுகின்றன. தீவிரமற்ற ஓரிருவர் ஒட்டுமொத்த சூழலையே தங்களை நோக்கி இழுத்துவிடுவார்கள். ‘உங்களுக்கு உண்மையான ஆர்வம் இல்லையேல் வரவேண்டாம்’ என்பதே எங்கள் நிலைபாடு.

*

பொதுவாக இந்த இயல்பு இங்கே உள்ளது. மிக ஆர்வமாக ‘இப்ப வேதாந்தம் சொல்லிக்குடுக்கிற நல்ல  குரு இருக்காங்களா?” என்பார்கள். நான் வியாசப்பிரசாத் போன்ற ஒரு மாபெரும் ஆசிரியரைப் பரிந்துரைத்தால் “ஊட்டியா? அங்க வரைக்கும் போகணுமா?” என்று பதில். அதாவது குரு கொல்லைப்பக்கம் இருக்கவேண்டும் இவர்களுக்கு

என் இணையதளத்தின் வாசகர்களில் ஒருசாரார் “ஏன் சார் நீளமான கட்டுரைகளா போடுறீங்க?” என்பார்கள்.  “குட்டையான கட்டுரைகளைப் போடும் இடத்திற்குச் சென்று வாசி. உன் தரம் அவ்வளவுதான். இந்தப்பக்கமாகவே வராதே’ என்பதே என் பதில். முன்பு ஒருவர் ஒவ்வொரு கட்டுரையின் முகப்பிலும் அதன் உள்ளடக்கத்தை பத்துவரியில் கொடுக்கலாமே, அதை மட்டும் நாங்கள் வாசிக்கமுடியும், எங்களுக்கு நேரமில்லை என எழுதியிருந்தார். நேரம் உள்ளவர்கள் வந்தால்போதும் என்பதே என் பதில்

வழக்கமான வைணவர்கள் சொல்லும் ‘ஞான மார்க்கம்’ இது.  ‘வேதாந்தத்தை முழுக்கத் தெரிந்துகொள்ள முடியாது, எனவே கீதையே போதும். கீதையை முழுக்கத் தெரிந்துகொள்ள முடியாது, ஆகவே சரமஸ்லோகமே போதும்’. அதேபோல வெண்முரசை நான்கே வரிகளில் தெரிந்துகொள்ள வழி உள்ளது. கொஞ்சம் செலவாகும்

ஜெ

முந்தைய கட்டுரைநீர்க்கோலம் -முன்பதிவு
அடுத்த கட்டுரைதாந்த்ரீக பௌத்தம் – கடலூர் சீனு