துளிச்சொட்டு சாஸ்தா -கடிதங்கள்

t5

ஆனைக்கல் துளிச்சொட்டு சாஸ்தா

அன்புள்ள ஜெயமோகன்,

சுவாமி சிவசித்தானந்தா கூடுதலாக ஒரு தகவலும் கூறியிருந்தார். ஆனைக்கல்லிருந்து எதிரே தெரியும் வேளிமலையின் உயர் சிகரத்தில் அன்றைய குதிரைகளின் நிஜ அளவுக்கு கல் குதிரைகள் பத்துப் பன்னிரண்டு,பாறைகளிலேயே உருவாக்கப்பட்டு நிற்கிறது. தாழ்வாரத்தில் தெரியும் பயோனியர் தோப்பு மற்றும் சற்று உயரங்களில் காணப்படும் தோப்புகள் வழி ஒரு தடவை அவர் கூட இரண்டு துறவிகளுடன் போய் பார்த்து வந்திருக்கிறார். ஆனைக்கல்லிலிருந்து ஐந்து மணி நேரம் எதிர் சிகரத்துக்கு.ஒரு நாள் ஆனைக்கல்லில் ராத்தங்கினால் ,அடுத்த நாள் இந்த ஏற்றம் சாத்தியம்.

ஆக, ஆனைக் கல்லில் இரண்டு ராத்தங்கல்.ஆனால், புழக்கமில்லாத தடம். சுவாமி முன் வைத்த காலை பின் வைக்க மாட்டார். கடின ஏற்றமும் அவருக்கு இலகுவாக வாய்க்கிறது. நாளை அவரிடம் கேட்கிறேன். இந்த ஏற்றம் சாத்தியப் பட்டால், வடக் கயிறுகளும் வேண்டி வரும். சிக்கலான பாறைகளில் சுவாமி முன்னேறி உதவக் கூடும்.

தற்போது அவர் மேலே தான் இருப்பார். கையில் அலை பேசி இருக்கும். முடிகின்ற விரைவில் கல்குதிரை ஏற்றம் நிகழட்டும்.

அன்புடன்

குமார் முல்லக்கல்

***

அன்புள்ள ஜெ

நான் இரண்டு மூன்றுமுறை பாறையடி வழியாகவும் தோட்டியோடு வழியாகவும் துளிச்சொட்டு கோயிலுக்குப்போக நண்பர்களுடன் முயன்றிருக்கிறேன். ஆனால் வழிகள் சீக்கிரமே முள் அடர்ந்துவிடுகின்றன. கடுமையான முள்ளும் அறுக்கும் புல்லும் உண்டு. பாம்புகளும் நிறைய உண்டு. ஆகவே போகமுடியவில்லை. நீங்கள் சென்றுவந்த பாதை இந்த ஓக்கி புயலுக்குப்பின்னாடி உருவான பாதையாக இருக்கலாம்

ஆனால் துளிச்சொட்டு கோயிலுக்கு அதிகம்பேர் சென்றுவந்தால் அது நல்லதா என்று தெரியவில்லை. அவ்வளவு கஷ்டப்பட்டு ஏறிச்செல்பவர்கள் யார் என்று பார்த்தால் பெரும்பாலும் இளைஞர்கள். அவர்களுக்கு குடி தவிர வேறு ஆர்வம் கிடையாது. குடிப்பதற்கான இடமாகத்தான் எல்லா இடங்களையும் ஆக்கி வைத்திருக்கிறார்கள். அவர்களுக்கு வழிகாட்டுவதுபோல ஆகிவிடக்கூடாது என நினைக்கிறேன்

ஜான் கிறிஸ்டோபர்

***

முந்தைய கட்டுரைவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–68
அடுத்த கட்டுரைகதாபிரசங்கம்