தேசியகீதமும் தமிழ்த்தாய் வாழ்த்தும்

san

அன்புள்ள ஜெ

தேசியக்கொடிக்கு வணக்கம் செய்வதைப்பற்றி உங்கள் கருத்தை வாசித்தேன். எளிமையாக உடனே எழும் அடுத்த கேள்வி, தமிழ்த்தாய் வாழ்த்துக்கு வணக்கம்செய்ய காஞ்சி சங்கராச்சாரியார் எழுந்திராதது பற்றி உங்கள் கருத்து என்ன? அதையும் இதையும் எப்படி வேறுபடுத்துகிறீர்கள்?

செல்வா நாகேந்திரன்

***

அன்புள்ள செல்வா,

எந்தவகையிலும் வேறுபடுத்தவில்லை. காஞ்சி சங்கராச்சாரியார் செய்திருப்பது பிழை. கண்டிக்கத்தக்கது.  இது ஓர் இந்துவாக என் கண்டனம்.

சங்கராச்சாரியார் ஒரு குறிப்பிட்ட சாதிசார்ந்த, புரோகித அமைப்பின் தலைவர். அந்த அமைப்பின் ஆசாரம் சார்ந்த நிலைபாடு அது என தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அந்த அமைப்பைச் சேர்ந்தவன் அல்ல நான். ஆகவே அவர் செய்வதில் எனக்குப் பொறுப்பு இல்லை. அப்படி வெவ்வேறு அமைப்புகளும் அவற்றுக்கான ஆசாரங்களும் இங்குள்ளன.

இதேபோல இஸ்லாமியர் தேசியகீதம், தமிழ்த்தாய் வாழ்த்து போன்றவற்றில் கலந்துகொள்ளக்கூடாது, விளக்கேற்றுதல் போன்ற சடங்குகளைச் செய்யக்கூடாது என்று ஒரு விலக்கு சென்ற இருபதாண்டுகளாக வஹாபியர்களால் முன்வைக்கப்பட்டு மெல்ல பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. வெளிப்படையாகவே தொலைக்காட்சியில் இதைப்பற்றிய பிரச்சாரம் நிகழ்வதை நீங்கள் காணலாம்.

இந்திய தேசியகீதத்தை பாடமுடியாது, அவ்வாறு பாடும்படிக் கட்டாயப்படுத்துவது தங்கள் மதவழிபாட்டுரிமையை மறுப்பது என கேரளத்தைச் சேர்ந்த தீவிர கிறிஸ்தவக் குழு ஒன்று நீதிமன்றத்தில் வழக்குதொடுத்தது. உயர்நீதிமன்றம் மதவழிபாட்டுரிமை என்பது அடிப்படையுரிமை என்பதனால் அது காக்கப்படவேண்டும் என்ற அடிப்படையில் அவர்கள் தேசியகீதம் பாடவேண்டியதில்லை என்று தீர்ப்பளித்தது, அந்தத் தீர்ப்பு நடைமுறைச்சட்டமாக [கேஸ்லா]  இன்றும் அமலில் உள்ளது. [Civil Appeal No. 870 of From the Judgment and order dated 7.12.1985 of the Kerala High Court in W.A . No. 483 of 1985.]

 இந்த அமைப்புகளின் ஆசாரவாத நிலைபாடுகள் அனைத்துமே பிழையானவை என்பதே என் எண்ணம். நவீனத்தேசியம், ஜனநாயகஅரசு,  தேசியக்கொடி, தேசியகீதம்,நீதிமன்றம் போன்ற அமைப்புக்க புதிய காலகட்ட உருவாக்கங்கள். இவை உருவாவதற்கு முன்னரே மதச்சம்பிரதாயங்கள் உருவாகி வந்து விட்டிருக்கின்றன. ஆகவே மதச் சம்பிரதாயங்கள் இவற்றை அனுமதிப்பதில்லை என்பதற்குப் பொருள் இல்லை.

எந்த மத அமைப்பும் அது உருவான காலம் முதல் அத்தனை ஆசாரங்களையும் அப்படியே கடைப்பிடிப்பதில்லை. காலம் மாறுந்தோறும் தன் ஆசாரங்களை மாற்றிக்கொள்ளாத எந்த மத அமைப்பும் உலகில் இல்லை. இவர்கள் நவீன ஊர்திகளில் ஏறத்தான் செய்கிறார்கள். குளிர்சாதன அறைகளில் தங்குகிறார்கள். நவீனக் குடிமைச்சமூகம் அளிக்கும் அனைத்து உரிமைகளையும் அனைத்து வசதிகளையும் பெற்றுக்கொள்கிறார்கள்

அத்துடன்  இவர்கள் விரும்பாவிட்டாலும் இந்திய நீதிமன்றங்களை மதித்தே ஆகவேண்டும். குற்றவியல் சட்டங்களுக்கு முழுமையாகக் கட்டுப்பட்டே ஆகவேண்டும். இல்லையேல் சிறைசெல்லவேண்டும். ஆகவே அவற்றுக்கேற்ப அனைத்து ஆசாரங்களையும் மாற்றிக்கொள்ள இவர்களுக்குத் தயக்கமில்லை. இந்தியாவிலேயே இந்திய குடிமைச்சட்டம் அனுமதிப்பதனால்தான் இவர்கள் இந்நிலைபாடு எடுக்கிறார்கள்.

நவீனஅரசு சார்ந்த கொடியேற்றுதல், தேசியகீதத்தை மதித்தல் போன்ற ஆசாரங்கள் சென்ற நூறாண்டுகளாக உருவாகி வந்தவை. இவை தொன்மையான ஆசாரங்களை எவ்வகையிலும் மறுப்பவை  அல்ல. இவை ஒரு நவீன அரசுக்கு, நவீன சமூகத்திற்கு அதன் குடிமக்களாக நாம் ஆற்றவேண்டிய கடப்பாடுகள். தேசியகீதம் பாடமுடியாது என வாதிடும் ஜெகோவா சாட்சிகளுக்கு அந்த உரிமையை அளிப்பதே அந்தப் பாடல்தான். அவர்கள் அதனிடம்தான் நீதி கேட்டார்கள், ஜெகோவாவிடம் அல்ல.

இவற்றைச் செய்யும்போது இவர்கள் இந்த நாட்டின் அரசியலமைப்பை, அது முன்வைக்கும் விழுமியங்களை ஏற்கிறார்கள் என்று பொருள். அது  அளிக்கும் உரிமைகளை, அனுபவிப்பவர்களுக்கு அந்த அரசியலமைப்பை மதிக்கும் பொறுப்பும் உண்டு.

ஆகவே, இன்றைய நவீன குடிமைச்சமூகம் சார்ந்த குறியீட்டுச் செயல்பாடுகளான தேசியக்கொடி, தேசியப்பாடல், தமிழ்வாழ்த்து போன்றவற்றுக்கு உரிய மதிப்பை அளிப்பதும், அதை தங்கள் மத ஆசாரங்களுடன் குழப்பிக்கொள்ளாதிருப்பதுமே அறிவுடையோர் செயலாகும்.

தமிழ்த்தாய் வாழ்த்து, தேசியகீதம், தேசியக்கொடி போன்றவை சரியானவைதானா, அவற்றுடன் கொள்கை மாறுபாடு உண்டா என்னும் கேள்வியே இங்கு எழவில்லை. ஏனென்றால் அவை அக்குடிமைச்சமூகத்தின் பெரும்பான்மையினர் ஏற்றுக்கொண்ட அரசால் உருவாக்கப்படுபவை, ஆகவே அனைத்துக்குடிகளையும் கட்டுப்படுத்துபவை.  ஜனநாயக முறைப்படி அதிகாரத்தை வென்று அதையெல்லாம் மாற்றியமைக்கும் உரிமை அக்குடிமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் மீறும் உரிமை தார்மீகமாக இல்லை.

அந்தச்சடங்கில் தியானம் செய்துகொண்டிருந்தோம் என்பதெல்லாம் சரியான வாதம் ஆகாது. ஒரு சடங்கு அது எப்படி வகுக்கப்பட்டிருக்கிறதோ அப்படித்தான் செய்யப்படவேண்டும். எழுந்து நிற்கும் சடங்குகள் உண்டு. வணங்கும் சடங்குகள் உண்டு. அச்சடங்கு நிகழும் இடத்திற்குச் செல்வது அதைச்செய்கிறோம் என்னும் ஏற்பின்பொருட்டே. அவ்வாறு  அல்ல என்றால் அந்நிகழ்வுகளை முற்றாகத் துறக்கவேண்டும்.

சங்கரமடம் போன்ற இத்தகைய மத,சாதி அமைப்புக்கள் தங்கள் ஆசாரங்களையும். நிலைபாடுகளையும் நிலைநிறுத்திக் கொள்ளும்பொருட்டு உருவாக்கப்பட்டவை. ஆகவே அவை எல்லா தளத்திலும் மாறாமலிருக்கவே முழுமூச்சுடன் முயலும். ஒவ்வொருமுறையும் சமூகம் அளிக்கும் சாதகமான அழுத்தமே எது மாற்றப்படவேண்டியது, எது நீட்டிக்கப்படவேண்டியது என இவற்றுக்குச் சொல்லிக்கொண்டிருக்கிறது. நேற்று தீண்டாமையை, ஆலயநுழைவை இவர்கள் எதிர்த்தார்கள் என்பது வரலாறு. இன்று குடிமைச்சமூகத்தை எதிர்க்கிறார்கள்.

இந்த மூர்க்கம் வழியாக இவர்கள் தேக்கநிலையையே வெளிப்படுத்துகிறார்கள். பிறவற்றில் காலம் இவர்களை மாற்றியதுபோல இதிலும் மாற்றுமென எதிர்பார்க்கலாம். இதையே இஸ்லாமிய, கிறித்தவ ஆசாரவாதிகளுக்கும் சொல்லவேண்டியிருக்கிறது

ஆனால் இந்த விதிகள் அனைத்தையும் நான் காசியின் நாகா சாமியார்களுக்கு ரத்துசெய்வேன். ஆடையின்றித்திரியும் சமணத் துறவிகளுக்கு இந்நெறிகள் பொருந்தாது என்பேன். இந்தியாவின் ஆன்மிகநகர்களிலெல்லாம் அலையும்  ஆன்மசாதகர்களுக்கும் பலவகையான ஹிப்பிகளுக்கும் இவை பொருந்தாது என்பேன். அவர்கள் அப்படி அனைத்து அதிகாரங்களுக்கும் அப்பால் வாழ்வதற்கு இடமளித்தாகவேண்டிய பூமி இது என்றே வாதிடுவேன். ஆகவேதான் இது எனக்கு ஞானபூமி.

ஏனென்றால் அவர்கள் அனைத்து அதிகாரங்களுக்கும் வெளியே இருக்கிறார்கள். அவர்களை அரசு கைதுசெய்தால் சிறையில் இருப்பார்களே ஒழிய அந்த அரசிடம் சென்று ஜனநாயக உரிமையைக் கோரி நிற்கமாட்டார்கள். அவர்கள் எந்த குடிமையமைப்புக்கும் கட்டுப்பட்டவர்கள் அல்ல. அது வேறு ஒரு பெருநிலை.

ஜெ

முந்தைய கட்டுரைபுர்க்காவும் சவூதி அரேபியாவும்
அடுத்த கட்டுரைவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–63