பகுதி பத்து : பெருங்கொடை – 4
அஸ்தினபுரிக்கு கர்ணனுடன் கிளம்புவதை சுப்ரியை எண்ணிநோக்கியதே இல்லை என்பதனால் அவன் நாவிலிருந்து அச்சொல் எழுந்தபோதுகூட அவள் உள்ளம் அதை வாங்கிக்கொள்ளவில்லை. அன்றே அமைச்சரிடமிருந்து செய்தி வந்தபோதுதான் சித்தத்தில் அது உறைத்தது. அவள் நிலையழிந்து அகத்தளத்தில் சுற்றிவந்தாள். அணுக்கச்சேடி சபரியும் பிறரும் அவளுடைய பயணத்துக்கான ஒருக்கங்களை செய்துகொண்டிருந்தார்கள். அவள் அதெல்லாம் தனக்காக என்பதை மெல்ல மெல்லத்தான் உள்வாங்கினாள். சபரியிடம் “நான் சென்றுதான் ஆகவேண்டுமா என்று பிறிதொருமுறை அரசரிடம் கேட்டுவரச்சொல்” என்றாள். சபரி “தாங்கள் அறிவீர்கள் அரசி, பிறிதொரு சொல் என்பதே அரசரின் வழக்கமல்ல” என்றாள்.
அவள் சலிப்புடன் தன் கையிலிருந்த மேலாடையை மஞ்சத்தில் ஓங்கி வீசி “இதில் நான் எதற்காக?” என்றாள். “என் இடம் என்ன என்று அங்கே எவரும் அறியமாட்டார்கள். அஸ்தினபுரியின் அடிதாங்கும் நாடொன்றின் சூதர்குலத்தரசரின் துணைவி. அவ்வாறு தோற்றம்கொண்டு அவர்கள் முன் சென்று நிற்பதைவிட…” என்றபின் “நீ சென்று விருஷகேதுவிடம் சொல். அன்னைக்கு இப்பயணத்தில் விருப்பமில்லையென்று அவன் தந்தையிடம் சொல்லும்படி” என்றாள். “அதுவும் இங்கு இயல்வதல்ல, அரசி” என்று சபரி சொன்னாள். “மறுசொல் எழுவதை அரசர் விரும்புவதில்லை.”
அது உண்மையென்று அறிந்திருந்தமையால் அவள் கால் தளர்ந்து முழு எடையும் அழுந்த பீடத்தில் விழுந்து தலையை கையில் சாய்த்துக்கொண்டாள். சபரி அவள் மஞ்சத்திலிட்ட மேலாடையை எடுத்து கைகளால் நீவி இரு நுனியையும் பற்றி மெல்ல முறுக்கி சுருள் என்றாக்கி அதை வைக்கவேண்டிய பனையோலைப் பேழைக்குள் வைத்தாள். சுப்ரியை சீற்றத்துடன் தலைதூக்கி “அவ்வாறென்றால் நான் யார் இங்கு? கொட்டில் விலங்குகளுக்கும் எனக்கும் என்ன வேறுபாடு?” என்றாள். சபரி தாழ்ந்த குரலில் “மண்ணில் உயிர்கொண்டு வந்தவை அனைத்தும் பிறவிக்கடன்களை அவ்வுடலின் பகுதியென கொண்டுவருகின்றன என்பார்கள். விலங்குகள் தங்கள் கடனை அறியாது இயற்றுகின்றன. அறிந்து இயற்றுகிறார்கள் மானுடர்கள்” என்றாள்.
சலிப்புடன் தலையை அசைத்தபின் “இந்நகரிலிருந்து வெளியேற எனக்கு விருப்பமில்லை. இந்நகரிலேயேகூட என் அணுக்கரன்றி பிற எவர் விழிகளையும் சந்திக்க நான் விரும்பவில்லை. சந்திக்கும் விழிகளில்கூட கரந்திருப்பது என்னவென்று எனக்குத் தெரியும்” என்றபின் “இது நான் எனக்கென்று உருவாக்கிக்கொண்ட பொய்யுலகு” என்றாள். மஞ்சத்திலிருந்த அருமணிகள் பதித்த பூண்கள், பீதர்நாட்டுப் பட்டாடைகள், பொன்னூல் பின்னலிட்ட கலிங்கத்து மேலாடைகள், தந்தப் பேழைகள் ஆகியவற்றை கையால் அப்பால் தள்ளி “இதெல்லாம் என்ன? முடிகொண்டு அரியணை அமர்ந்த பேரரசியர் கொண்டுள்ள அனைத்தையும் இங்கு நானும் கொண்டுவந்து சேர்த்திருக்கிறேன்” என்றாள். உதட்டைச்சுழித்து “இங்கு எனக்கும் அரியணை ஒன்று உள்ளது. மணிமுடியும் சூட்டப்படுகிறது. ஆனால் கூத்தில் அரசியென மேடையேறும் விறலிக்கும் எனக்கும் வேறுபாடில்லையென்று உள்ளூர நன்கறிவேன்” என்றாள்.
சபரி ஒருபோதும் அவ்வுணர்வுகளுக்கெதிராக எதுவும் சொல்வதில்லை. சுப்ரியை “இறைஞ்சுகொடையெனப் பெற்ற நாட்டை ஆளும் ஓர் அரசன். ஷத்ரியன் என அவையிலும் சூதன் என தெருவிலும் சொல்லப்படுபவன். அவனுக்குத் துணைவியெனச்சென்று எங்கு நான் மதிப்பையும் முறைமையையும் பெற முடியும்?” என்றபின் எழுந்து அறைக்குள் நிலைகொள்ளாது உலவினாள். காற்றிலாடிய சாளரத் திரையை எரிச்சலுடன் பிடித்து தள்ளினாள். கையைத் தூக்கி வீசியபடி திரும்பி உரத்த குரலில் “என்னால் இயலாது. நான் அஸ்தினபுரிக்கு செல்லப்போவதில்லை. என் தலை கொய்யப்பட்டு இங்கு விழுந்தாலும் சரி, சென்று சொல்!” என்றாள்.
சபரி பேழையை மூடி அருகே வைத்தபடி வெறும் விழிகளால் நோக்கினாள். “என்னடி பார்க்கிறாய்? இது என் ஆணை! சென்று சொல் உன் அரசனிடம், நான் அஸ்தினபுரிக்கு வரப்போவதில்லை. என் தலைவெட்டி வீழ்த்தப்படட்டும், அன்றி கற்துறுங்கில் என்னை அடைக்க ஆணையிட்டுவிட்டு அவர் அச்சூதச் சிறுமகளுடன் செல்லட்டும். பொய்யுரு தாங்கி, நோக்குவோர் இளிவரல் கொள்ள அஸ்தினபுரியின் வாயிலில் சென்று நிற்க என் உள்ளம் ஒப்பாது. நான் பெருங்குடிக் கலிங்கனின் மகள். இங்குள்ள ஒவ்வொருவரும் அதை மறந்தாலும் நான் மறப்பதற்கில்லை. சென்று சொல்!” என்றாள். சபரி “அரசி…” என்று தொடங்க “சென்று சொல்! இது என் ஆணை! சென்று சொல்!” என்றாள். சபரி தலைவணங்கி வெளியேறினாள்.
சுப்ரியை மீண்டும் உடல் தளர்ந்து மஞ்சத்தின் விளிம்பில் அமர்ந்தாள். கால்களைத் தூக்கி சேக்கைமேல் வைத்து முழங்கால் மடிப்பில் முகத்தை வைத்துக்கொண்டாள். பின்னர் உள்ளிருந்து எழுந்த விசையால் உடல் உலுக்க கையால் தலையை ஓங்கி ஓங்கி அறைந்துகொண்டாள். சேக்கையில் குப்புற விழுந்து தலையணையில் முகம் புதைத்துக்கொண்டபோது உள்ளிருந்து வெம்மை வெளியேறுவதுபோல் அழுகை வந்தது. கண்ணீர் பெருகி தலையணையை நனைக்க நெஞ்சும் தோள்களும் உலுக்கிக்கொள்ள விம்மி அழுதாள். பின்னர் எழுந்தமர்ந்து முகம் துடைத்துக்கொண்டபோது நெடுந்தொலைவு வந்திருந்தாள்.
சபரியிடம் சொன்னவையெல்லாம் நினைவுக்கு வர எழுந்து கதவைத் திறந்து வெளியே வந்தாள். இடைநாழியில் கண்ணில்பட்ட சேடியிடம் “சபரி எங்கே? உடனே அவளை என்னை வந்து பார்க்கச் சொல்” என்றாள். படிகளில் சபரி மேலேறி வருவது தெரிந்தது. “என்னடி சொன்னாய்? இப்போது சென்று என்ன சொன்னாய்?” என்று அவள் கேட்டாள். “நான் இன்னும் செல்லவில்லை, அரசி. அதற்குள் தேர்ப்பாகன் என்னை பார்க்கவேண்டும் என்றான். தேரில் எவ்வளவு பொருட்கள் ஏற்றப்படுமென்றும் அரசியுடன் எத்தனை சேடியர் செல்வார்கள் என்றும் கேட்டான். அவனிடம் பேசிவிட்டு இதோ வருகிறேன். தாங்கள் விழைந்தால் அரசரை…” என்று அவள் சொல்ல “வேண்டாம்” என்று அவள் சொன்னாள்.
திரும்பி அறைநோக்கிச் சென்றபடி “என் அணிப்பேழைகள் அனைத்தும் தேரிலேற்றப்படவேண்டும். ஆடைப் பெட்டிகள் அனைத்தும் தேவை” என்றாள். “அனைத்தையும் ஒரு தேரில் ஏற்ற முடியாது, அரசி” என்றாள். “அப்படியென்றால் தனித்தேர் கேள். ஏன் அங்கநாட்டில் தேர்களுக்கா பஞ்சம்?” என்றாள். “தேர்கள் ஏராளமாகவே உள்ளன, அரசி” என்றாள் சபரி. அவள் நஞ்சு ஊறிய நகைப்புடன் “ஆம், இது சூதர்கள் நாடாயிற்றே. புரவிக்கும் தேருக்கும் என்ன குறைவு?” என்றபின் “என் ஆடைகளை எடுத்து வை. நான் நீராட வேண்டும்” என்றாள்.
நீராடி அணிபுனைந்து ஆடியில் நோக்கியபோது முதல்முறையாக மெல்லிய உவகை ஒன்று அவள் உள்ளத்தில் எழுந்தது. கடிமணம்புரிந்து சம்பாபுரிக்கு வந்த பின்னர் அவள் அக்கோட்டையை விட்டு வெளியே செல்வதே அரிதாக இருந்தது. ஆண்டுக்கு ஒருமுறை கோட்டைக்கு வெளியே தென்மேற்கு மூலையில் அமர்ந்த கொற்றவை ஆலயத்திற்கு பலிகொடை விழாவுக்காகவும் கங்கையில் நிகழும் புதுநீர்ப்பெருக்கு விழவை நோக்கவும் சென்றிருக்கிறாள். அவை அரசநிகழ்வுகள். ஒவ்வொரு கணமும் முறைமைகள், சடங்குகள், சந்திப்புகள், முகமன்கள். அவை ஒரே மேடையில் மீண்டும் மீண்டும் நடிப்பவை.
அஸ்தினபுரி எனில் அது கங்கையில் நான்கு நாட்கள் எதிரொழுக்கில் பயணம். இருபுறமும் சிறியவையும் பெரியவையுமாக ஏழு நகரங்கள் வந்து கடந்து செல்லும். நூற்றுக்கும் மேற்பட்ட கரையோரச் சிற்றூர்கள். எண்ணிமுடியாத படகுத்துறைகள். அஸ்தினபுரியைப் பற்றி அவள் இளஅகவையிலேயே நூல்களில் பயின்றிருந்தாள். ‘ஹஸ்தபாகு மாகாத்மியம்’ என்னும் நூல் அந்நகரின் உருவாக்கத்தையும், அதன் தெருக்களின் அமைப்பையும், அங்கிருக்கும் தெய்வங்களையும், அதன் படைவல்லமையையும், அங்கு கோலோச்சிய மன்னர்களின் பெருமையையும் சொல்வது.
உண்மையில் கலிங்க நகரங்கள் பல அஸ்தினபுரியைவிட மும்மடங்கு பெரியவை என்று அமைச்சர் அவளிடம் சொன்னார். “தாம்ரலிப்தியின் ஒரு பகுதிக்கு இணையாகாது அஸ்தினபுரியின் அளவு. நம் ராஜபுரியின் மாளிகைகளில் நூற்றிலொன்றுகூட அங்கில்லை. ஆயினும் அஸ்தினபுரி தொல்பெருமை மிக்கது. முனிவர்களாலும் புலவர்களாலும் சூதர்களாலும் பாடப்பட்டது.” அவள் “ஆனால் அதுவே பாரதவர்ஷத்தின் முதற்பெருநகர் என்கிறார்கள்” என்றாள். “அரசி, சொற்கள் விதைகளை நீர் என உண்மைகளை வளர்ந்தெழச் செய்கின்றன. இடையளவு உயரமுள்ள பாறை ஐந்து புலவர்களும் ஐம்பது சூதர்களும் நாதொடுத்தால் இமயமலையென்றே ஆகும்” என்றார் அமைச்சர்.
சம்பாபுரிக்கு வந்த பிறகு பலமுறை கர்ணன் அவளிடம் அஸ்தினபுரிக்கு செல்வதைப்பற்றி சொன்னான். ஒவ்வொருமுறையும் “முதன்மை அரசி என்று அன்றி என்னை எதிரேற்கும் எங்கும் என்னால் நுழைய முடியாது” என்று அவள் மறுத்தாள். “நீ அஸ்தினபுரியின் அரசரையும் அவர் துணைவியையும் புரிந்துகொள்ளாமல் பேசுகிறாய். அந்நகரின் அரசரும் அரசியும் உன்னை கோட்டைவாயிலில் வந்து வரவேற்க வேண்டுமெனில் அதை சொல். அஸ்தினபுரியின் பேரரசிக்குரிய அரியணையில் அமர விழைந்தால் அதை கூறு” என்று கர்ணன் சொன்னான். “இரந்துபெற நான் பிராமணி அல்ல, நடிப்பதற்கு விறலியும் அல்ல. நான் ஷத்ரியப் பெண்” என்று அவள் சொன்னாள்.
அவன் விழிகளில் ஒருகணம் சீற்றம் எழுந்து பின் அணைந்து மெல்லிய நகைப்பு குடியேறியது. “நன்று. நீ மெய்யாகவே அரசியென்று உணர்கையில் உன்னை அழைத்துச் செல்கிறேன்” என்றான். அவள் அவன் சொன்னதை புரிந்துகொள்ளாமல் “நான் பிறந்ததில் இருந்து அரசிதான்” என்றாள். அவன் நகைத்தபடி எழுந்துகொண்டு “அரசியர் தாங்களே அரசியர், பிறரால் ஆக்கப்படுவதில்லை” என்றபின் மேலாடையை எடுத்தணிந்து வெளியே சென்றான். அவள் அவன் செல்வதை சினந்த விழிகளுடன் நோக்கி அமர்ந்திருந்தாள். அவன் தன்னை ஏளனம் செய்ததாக உணர்ந்தாள், எவ்வாறென்று புரியவில்லை.
சுப்ரியையின் கனவுகள் அனைத்தும் சம்பாபுரியிலிருந்து கிளம்பி அறியா நிலங்களுக்குச் செல்வது குறித்தவையாகவே இருந்தன. அந்நகரை அவள் அமர்ந்திருக்கும் ஒரு மரச்சில்லை என, அதை உதைத்து விசைகூட்டி சிறகு விரித்து வானிலெழப் போவதாக, எண்ணினாள். பயணச் செய்திகளையும் அயல்நிலங்களின் காட்சி விரிவுகளையும் சொல்லும் நூல்களை நூற்றுக்கணக்கில் தன் சுவடிஅறைக்குள் சேர்த்து வைத்திருந்தாள். பயணக் கதைகளைப் பாடும் சூதரையும் விறலியரையுமே அவள் விரும்பினாள். நூல்களை ஏடுசொல்லிகள் வாசிக்க விழிமூடி மயங்கியவள் என மஞ்சத்தில் கிடப்பாள். மூச்சில் மார்புகள் எழுந்தமையும். முகம் உணர்வுகள் எழுந்தமைய உவகையும் அச்சமும் வியப்பும் தனிமையும் கொண்டு மாறிக்கொண்டிருக்கும்.
அவர்களின் சொல்லினூடாகவே அவள் பெருமணல் எழுந்த சோனக நிலத்தை, வெண்பனி சூடிய கின்னர நாடுகளை, பசுமூங்கில் செறிந்த மணிபூரகத்திற்கும் அப்பால் உள்ள பீதர்நாடுகளை, தண்டகாரண்யத்தை, வேசர நாட்டை, அதைக் கடந்துசென்று அடையவேண்டிய திருவிடத்து மேட்டுநிலத்தை, அதை நனைத்து செல்லும் கிருஷ்ணையையும் கோதையையும் கண்விரித்து எனக் கண்டாள். ஒவ்வொரு நாட்டின் எல்லையையும், அங்குள்ள மலைகளின் பெயர்களையும் அவற்றைக் கோத்திருக்கும் நதிகளையும் துணையாறுகளின் பின்னலையும் அவற்றில் ஒளிரும் நகர்களையும் பரவிய ஊர்களையும் அவள் அறிந்திருந்தாள். மக்களின் குடிப்பிரிவுகளும், ஆடைகளும், அணிகளும், மொழிகளும் அவளுக்குத் தெரிந்தன.
“யானைத்தந்தப் பிடியிட்ட குத்துக்கத்திகளுக்கு வேசரத்தின் ஜெயத்துங்கநாடே முதன்மையானது” என்று அவள் அந்நாட்டில் இருந்து வந்த விறலியிடம் சொன்னாள். “ஆனால் அவர்கள் உருக்கி கூர்கொடுத்துப் பொருத்தும் இரும்புப் பட்டை விஜயபுரியின் ஆலைகளில் இருந்து வருகிறது.” விறலி அதை அறிந்திருக்கவில்லை. வியப்புடன் “ஆம், அரசி. இரும்பு ஆலைகளே ஜெயத்துங்கநாட்டில் இல்லை. நான் இதை எண்ணியதேயில்லை” என்றாள். உப்புப் பாறையை நீர் பீய்ச்சி கரைத்துச் செதுக்கி உருவாக்கப்பட்ட ஒளிர்வெண்சிலை ஒன்றைக் கண்டதுமே இது திரிகர்த்தத்தில் சம்பூர் என்னும் சிற்றூர் சிற்பிகளால் உருவாக்கப்பட்டது என்றாள். மூங்கில்மணிகளை உருட்டிக்கடைந்து செய்யப்படும் மாலைகளை ஒரு வணிகன் காட்டியதுமே அவை மணிபூரகத்திற்கு அப்பால் உள்ள நாகநாட்டின் கைத்திறன் வெளிப்பாடு என்று அவள் சொன்னாள். வியந்து நின்றிருந்த வணிகரிடம் “ஒவ்வொரு நிலமும் தனக்கென ஒரு கைத்திறனை கொண்டுள்ளது. அது அம்மக்களுக்கு அந்நிலம் அளிக்கும் பரிசு” என்று அஷ்டதரங்கிணியின் வரியைச் சொல்லி புன்னகைத்தாள்.
தன் சேடியருடன் எப்பொழுதும் தொலைநிலங்களைக் குறித்தே பேசிக்கொண்டிருந்தாள். ஒவ்வொருமுறையும் தொலைபயணம் செய்யும் விறலியரை அழைத்து வருகையில் சபரி “அரசி, தாங்கள் அறியாத எதையும் அவர்கள் சொல்லப்போவதில்லை. பதினாறு ஆண்டுகளாக ஒவ்வொரு நாளும் இங்கிருந்து நீங்கள் பாரதவர்ஷத்தை சொற்களால் அறிந்துகொண்டிருக்கிறீர்கள்” என்றாள். “ஆம், ஆனால் சொற்களால் மட்டுமே. கால்களால் அறிபவர்களுக்கு எப்போதும் ஏதோ ஒன்று புதிதாக சொல்வதற்கு இருக்கும்” என்றாள். “இவ்விறலியைப் பார்! இவள் மாளவத்திலிருந்து வருபவள். மாளவத்தைப் பற்றி மட்டும் எழுபத்திரண்டு நூல்கள் என் சுவடியறையில் உள்ளன. நூறுக்குமேல் விறலியரும் பாணரும் இங்கு வந்து அந்நாட்டைப் பற்றி பாடியிருக்கிறார்கள். எவரும் சொல்லாத ஒன்றை இவள் சொல்வாள் என்பதில் ஐயமில்லை. அது என்னவென்று நோக்கு.”
மாளவத்தைப் பாடிய விறலி அதன் குறுங்காடு பரவிய மலைச்சரிவுகளை, செறிந்த கருமை இறுகியதெனத் திரண்ட பாறைகளை, அவற்றில் உருவான இயற்கையான குகைகளை, அங்கு உறுமும் வெண்பல் அனல்விழிச் சிறுத்தைகளைப் பற்றி சொல்லிச் சென்றாள். ஒரு சொல் எழுந்து சுப்ரியையை முகம் மலரச் செய்தது. ஒற்றைக் கருகமணி காதில் அணிந்த பெண்கள்! சுப்ரியை கைகாட்டி “கருகமணியை காதணியாக அணிகிறார்களா அங்கு?” என்றாள். விறலி “ஆம் அரசி, மாளவத்தில் உள்மலைச் சரிவுகளில் கருகமணியையே காதில் அணிகிறார்கள்” என்றாள். சுப்ரியை “கருகமணியை தாலியாக அணிவர் வேசரநாட்டவர். அவர்கள் கருகமணி என்பவை கல்மணிகள்” என்றாள்.
விறலி “அரசி, அங்கே கருகமணிகள் சிறிய மலர்ச்செடி ஒன்றில் விளையும் விதைகள். அவை பெருங்கற்களால் அறைபட்டாலொழிய உடையாத அளவுக்கு கடினமானவை. எண்ணையில் அவற்றை ஊறவைத்து நிழலில் நெடுநாள் உலர்த்தி மேலும் ஒளியூட்டுகிறார்கள். சுழற்சகடம் நடுவே நிறுத்தப்பட்ட இரும்பு ஊசியில் அதை வைத்து சகடத்தை விரையச் சுழற்றி சிறுதுளையிடுகிறார்கள். பொற்கம்பியாலோ வெள்ளிச்சரடாலோ கட்டி அதை காதில் அணிகிறார்கள்” என்றாள். சுப்ரியை முகம் மலர்ந்து “அத்தகைய காதணிகள் இரண்டு எனக்கு வேண்டும்” என்றபின் திரும்பி சபரியிடம் “இதுநாள்வரை இச்செய்தியை நீ கேள்விப்பட்டிருக்கிறாயா?” என்றாள். சபரி “இல்லை” என்று சொன்னாள். “கேட்கும் நிலம் நாம் அறிந்த நிலத்திலிருந்து நீண்டோ நேர்மாற்று கொண்டோ எழுவது. நேரிலறியும் நிலம் நாம் அறிந்த அனைத்தையும் முற்றாகத் தவிர்த்து உருக்கொள்வது” என்ற சுப்ரியை “நம் ஒற்றர்களிடம் சொல். அக்காதணிகள் இரண்டு இங்கு வந்தாகவேண்டும்” என்றாள். “ஆணை, அரசி!” என்றாள் சபரி.
ஒவ்வொரு நாள் காலையிலும் முன்னிரவில் கேட்டு நிறுத்திய பயணநூலில் இருந்து தொடர்ந்தெழுந்த கனவு ஒன்றை நினைவுகூர்ந்தபடி சுப்ரியை விழித்துக்கொண்டாள். கனவுகளில் எழும் நிலங்கள் ஒவ்வொரு கணமும் சித்தத்தை வியந்து விரியச் செய்பவையாக இருந்தன. அவை எங்குள்ளன தனக்குள் என வியந்துகொள்வாள். சென்ற பிறவிகளில் வாழ்ந்த நிலங்களா? அறியாத எவரேனும் தன்னுள் புகுந்து அவர்களின் காட்சிகளை நிறைக்கிறார்களா? ஒற்றை ஓநாய் கால்தடம் நூல்தையல் வரி என ஓடிச்சென்று பிணைத்த செவ்வலை ஏடுகளால் ஆன பாலை மணல்வெளி. இமயமலைச்சரிவு மீது மெல்ல நகர்ந்து செல்லும் மலைமுகில் நிழல். குளிர்நீர் கோதையின் மீது அசைவற்று நின்றிருக்கும் முதலைவடிவப் படகுகள். ஏடுகளை அடுக்கி வான் வரை நிறுத்தியது போன்று அங்குள்ள கற்தட்டு மலைகள். காலையில் அந்நிலக்காட்சியை நினைவுகூர்ந்தபடி உடலும் உள்ளமும் ஓய்ந்து படுத்திருப்பாள். சிலநாள் உள்ளம் உவகையில் இனித்துக்கொண்டிருக்கும். சிலநாட்கள் அது உருத்திரளா ஏக்கம்கொண்டு விழிநீர் கசியச்செய்யும்.
தன் கனவுகளில் அவள் எப்பொழுதும் அரசியென்றே வெளிக்கிளம்பினாள். ஆயிரம் அகம்படியர் முன்னும் பின்னும் சூழ்ந்து வர, படைக்கலன்களும் கவசங்களும் தலைப்பாகைகளும் ஒளிவிடும் வீரர்கள் நிரைவகுக்க, குறடொலிகளும் சகட ஒலிகளும் சூழ்ந்தெழ, பறைகொட்டியும் கொம்பூதியும் சூதர் முன் செல்ல, மங்கலமகளிர் அமர்ந்த தேர்கள் தொடர, பட்டுக்கொடி நெளியும் பொற்குவைத் தேரில் செம்பட்டுச் சேக்கையில் சாய்ந்தமர்ந்து இருபுறமும் முகம் மலர்ந்து வாழ்த்தும் பெருந்திரளை நோக்கியபடி அவள் விரிந்து சென்ற சாலைகளில் சென்றாள்.
அவளை பெருங்கோட்டை வாயில்களில் முடிசூடி குடைகவித்து அரசியருடன் நின்றிருந்த பேரரசர்கள் அருகணைந்து தலைதாழ்த்தி முகமனுரைத்து வாழ்த்தி வணங்கினர். அவள் தேரிறங்கி மண் நின்றபோது அரிமலர் மழையென அவள்மேல் பொழிந்தனர். அவளை அரசரும் அமைச்சரும் சூழ அழைத்துச் சென்று அவைமேடைகளில் இடப்பட்ட பீடங்களில் அமர்த்தினர். அந்தணரும் அமைச்சரும் அவையோரும் எழுந்து தலைதாழ்த்தி அவளை வாழ்த்தி குரலெழுப்பினர். அவள் வருகையைப் புகழ்ந்து புலவர் பாடினர். அவள் செல்லும் தெருக்களில் பாணரும் அவளை ஏத்தி நின்றனர்.
மேலும் மேலுமென பெருகிச் செல்லும் அக்கனவு எங்கோ ஒரு புள்ளியில் சலிக்கையில் புரண்டு படுத்து தன்னந்தனி விறலியென மரவுரி ஆடை அணிந்து தோளிலொரு மூட்டையும் கையிலொரு கழியுமாக தனித்த பாதைகளில் அவள் நடந்து சென்றாள். அயல்வணிகர் குழுக்களுடன் இணைந்துகொண்டாள். இசைச்சூதர்களுடன் ஒருகுலமென்றாகி அலைந்தாள். தனித்த விடுதிகளிலும் பெருமரத்தடிகளிலும் உறங்கினாள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடத்தில் உணவுண்டாள். ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு பெயரிட்டாள். ஒவ்வொரு முறையும் வெவ்வேறு மொழிகளில் பேசினாள்.
அவை கனவுகள் என்று அறிந்திருந்தாலும் என்றோ ஒருநாள் கிளம்பி சம்பாபுரியின் எல்லைகளைக் கடந்து தான் சென்றுவிடுவோம் என்று மெய்யாகவே அவள் நம்பினாள். சபரியிடம் அதைச் சொல்லும்போது கூடவே முனிந்து “ஆம், நீ உள்ளூர நகைப்பதை நான் அறிவேன். இத்தனை நாள் அஞ்சியஞ்சி இச்சிறைக்குள் வாழ்ந்தவள் சிறகுகளை இழந்திருப்பேன் என்று எண்ணுகிறாய். எவரும் அவ்வாறே எண்ணுவர். ஆனால் ஒரு நாளும் நான் கனவுகளை ஒழிந்ததில்லை. இதுவே என் இடமென்று அமைந்ததுமில்லை. எனவே நான் எழுவேன். என்றேனும் ஒருநாள் எங்கிருக்கிறாள் இவள் என்று நீங்கள் அனைவரும் எண்ணும்படி முற்றிலும் தொலைந்து போவேன். ஒவ்வொரு நாளும் புதுப்பிறவி எடுத்தபடி பாரதவர்ஷத்தின் இப்பெருநிலங்களில் வாழ்ந்துகொண்டிருப்பேன்” என்றாள்.
சம்பாபுரியிலிருந்து கிளம்பியதுமே அவள் மெல்ல உருமாறலானாள். படகுத்துறை வரை தேரில் செல்லும்போது நிலைகொள்ளாமல் எழுந்து தேர்த்தூணைப் பற்றியபடி காற்றில் நெளிந்தாடிய திரைச்சீலைகளினூடாக நகரை நோக்கிக்கொண்டிருந்தாள். சபரி “அமர்க, அரசி!” என்று சொன்னபோது எரிச்சலுடன் திரும்பிநோக்கி “இது ஒன்றும் அரச ஊர்வலமல்ல” என்றாள். “ஆம்” என்று சபரி சொன்னாள். “ஆனால் படகுத்துறைக்கான வழி சற்று சரிவானது. அமராவிடில் நிலைகுலைய நேரும்.” அவள் கைவீசி அதை புறக்கணித்தாள். சம்பாபுரியின் ஒவ்வொரு மாளிகையாக விழிதொட்டு நோக்கிக்கொண்டே சென்றாள். தன் உள்ளம் சிறுமிபோல் கிளர்ச்சி கொண்டிருப்பதை, கூவி நகைத்தபடி கைகொட்டித் துள்ள வேண்டுமென்று தோன்றுவதை, அவளே விந்தையாக உணர்ந்தாள்.
அந்த உளமாற்றத்தை சபரி அறிந்துவிடக்கூடாதென்பதற்காக எரிச்சலை வரவழைத்தபடி “இந்நகர் எப்போதுதான் துயிலெழும்?” என்றாள். “இது கோடைகாலம், அரசி. அந்தியில் தொடங்கும் சந்தைகளும் கேளிக்கைகளும் நள்ளிரவு வரை நீள்கின்றன. எனவே புலரியில் விழித்திருப்பவர் சிலரே” என்றாள். “நெடுங்காலமாக இப்படியே சோம்பி அமர்ந்துவிட்டால்…” என்றபின் சலிப்பு மிகையாக வெளிப்பட உதட்டைச் சுழித்து “சரிதான், உழைத்துப் பொருளீட்டி என்ன பயன்? தேனீ சேர்ப்பதை கரடி அருந்துகிறது” என்றாள். சபரி அத்தகைய சொல்வெளிப்பாடுகளுக்கு வெறும்விழி காட்டப் பயின்றிருந்தாள்.
மீண்டும் மாளிகையைப் பார்த்தபோது விந்தையான எண்ணம் ஒன்று வந்தது. இந்நகரிலிருந்து எப்போதைக்குமென கிளம்பிச்செல்கிறோம் என்று. மறுமுறை இங்கு வரவே போவதில்லை என்றால் இந்தக் காட்சிகள் அனைத்திற்கும் எத்தனை மதிப்பு உருவாகிவிடும்! குடைக்காளான் வண்ணத்தில் சுதைக்கூரை கவிழ்த்த இந்த மாளிகை இனி ஒருபோதும் என் விழிகள் முன் தோன்றப்போவதில்லை. பீதர்நாட்டு வெண்ணிற ஓடுகள் வேய்ந்த இந்த மாளிகை, சிவந்த களிமண் ஓடுகள் கவிழ்த்த அந்த இரண்டடுக்கு மாளிகை, நடுவே செல்லும் அச்சிறு சந்து, அதற்கப்பால் தெரியும் ஏழன்னையரின் ஆலயத்தின் கோபுரமுகடு.
இவற்றை நான் இனி பார்க்கவே போவதில்லை என கற்பனை செய்தாள். மறுமுறை நோக்கவே வாய்ப்பில்லாதவையே பேரழகு கொண்டவை எனும் சொல் நினைவிலெழுந்தது. ஏதோ பயண நூலொன்றில் நெடுங்காலம் முன் அதை படித்திருந்தாள். நெஞ்சில் பதிந்து பல முறை அவளே மீளமீள சொல்லிக்கொண்டிருந்தாள். தொலைநிலங்கள் பேரழகு கொள்வது அதனால்தான். அலைந்து அல்லலுற்று அங்கு சென்றுசேர்ந்து நோக்குகையில்கூட அவ்வழகு முழுமை கொள்வதில்லை. எவ்வண்ணமோ மீண்டு இச்சிறுவாழ்வில் பிறிதொருமுறை அங்கு செல்ல இயலாதென்று நன்குணர்ந்து நினைவில் மீட்டெடுக்கையில் நெஞ்சை நிறைக்கும் பெருந்துயரொன்றையும் அவை சேர்த்துக்கொள்கின்றன. துயர் களிப்பென்றும் ஆகும் தருணம் அது.
இச்சிறுவாழ்வு எனும் சொல்! இது சிறிதே என்னும் ஏக்கம். இதை இவ்வளவு நிறைத்திருக்கிறேன் எனும் பெருமிதம். நில்லாதலையும் துலாமுள்ளே உவகை என்பது. நிலைகொள்கையில் துயரோ மகிழ்வோ இல்லை. ஆம், மகிழ்வென்பது அலைபாய்தல், குமிழி, கொப்பளிப்பு, கொந்தளிப்பு. மீண்டும் சம்பாபுரிக்கு வரவேகூடாது. கங்கைப் பெருக்கில் பாய்ந்துவிட வேண்டும். குளிர்ந்த ஆழத்தில் மூழ்கி மறைந்தால் அத்தருணத்தில் இந்நகர் இதன் ஒவ்வொரு கணுவிலும் தெய்வப் பேரழகுடன் என் சித்தத்தில் உறையும் போலும்.
படகுத்துறைச் சரிவில் கிளைவிரித்துப் படர்ந்துநின்ற ஆலமரத்திடம் இனி நான் வரப்போவதில்லை என்று சொல்லவேண்டுமென்று தோன்றியது. இனி கற்பலகைகள் பதித்த இச்சாலை எனக்கில்லை. மீனெண்ணெய் விளக்குகளைச் சூடி நிற்கும் கற்தூண்களிலும், வளைந்து சரிந்து இறங்கிச் செல்லும் இதன் இருபுறமும் நிரைவகுத்திருக்கும் சுங்கமாளிகைகளிலும், அப்பால் மரக்கலங்கள் ஆடி நிற்கும் துறைமுகப்பிலும், அங்குள்ள காவல்மாடங்களிலும் நான் இனி விழிபதிக்கப் போவதில்லை. ஒவ்வொரு காட்சியிலும் முழுச் சித்தத்தையும் விழியென்றாக்கி பதித்தாள். துளித்துளியென நோக்கிச் சென்றாள்.
இரவெல்லாம் இறக்கி அடுக்கப்பட்ட பொதிகளை ஏற்றிய சகடங்களை உடற்தசைகளை நாணென இறுக்கி, புட்டங்கள் புடைக்க கால்களை உந்தி, தலைதாழ்த்தி இழுத்துச்சென்ற காளைகள். அச்சு இறுகிச்சுழன்று எழுப்பும் உரசலோசையுடன் இணைந்த சகடப்பட்டை ஒளிநெளிவு. ஆற்றுப்பரப்பிலிருந்து எழுந்த காற்றில் துடிக்கும் வண்ணக்கொடிகள். வணிகர்களின் மேலாடைகள் எழுந்து பறந்தன. வண்ணத் தலைப்பாகைகள் காலையொளியில் தெளிந்து மின்னின. இதோ மெல்ல திரும்புகிறது ஒரு தேரின் குடமுகடு. மின்னி அணைகிறது ஒரு கவசத்தின் மார்புவளைவு. சுடரேற்றிக் கொண்டிருக்கின்றன வேல்முனைகள். அருகணையும் வீரனொருவனின் வாளுறையின் ஒளி அலைவுறுகிறது. நீர்ப்பரப்பில் பல்லாயிரம் கோடி வெள்ளி ஒளிச்சிமிட்டல்கள். சுமை நீங்கும்தோறும் மேலெழுந்து நீர்த்தடம் காட்டும் படகுப் பள்ளைகள்.
“ஆம், கிளம்பிவிட்டேன்” என்று ஒரு சொல் எவரோ சொல்லி செவியேற்றதுபோல் நெஞ்சிலெழுந்தது. அதன் பின்னரே அவ்வுணர்வை உள்ளம் அடைந்தது. துறைமேடை அலையிலாடி அணுகுவதுபோலத் தெரிந்தது. “ஆம், இதோ கிளம்பிவிட்டேன்” என மீண்டும் சொன்னாள். கால் தளர்ந்தவளாக தேரின் பீடத்தில் அமர்ந்துகொண்டாள்.