பேலியோ -ஒரு கடிதம்

images (7)

பேலியோ

பேலியோ -ஓர் அனுபவக் கடிதம்

பேலியோ பற்றிய உங்களுடைய கட்டுரையை வாசித்தேன். அ.முத்துலிங்கம் அவர்கள் கூறியிருப்பது நானும் ஆமோதிக்கிறேன். நான் அன்றாடம் வாசிக்கும் தளங்களில் ஒன்று அவருடையதும். :-) குறுகிய காலத்துக்கு ஒரு உணவுமுறையைப் பின்பற்றுவதில் எந்தப் பயனும் இல்லை. உணவுமுறை மட்டுமல்ல; எந்தப் பழக்கமுமே. ஆனால் அதிக பருமனாக இருப்பவர்கள் குறிப்பிட்ட உணவுமுறையைப் பின்பற்றி குறைத்து விட்டு பிறகு கவனமாக பராமரிக்கலாம் என்கிற நியாயமான எண்ணமிருந்தால் செய்யலாம். நீங்கள் கூறியது போல உணவுப் பழக்கங்களை மெதுவாகத்தான் மாற்றிக்கொள்ள முடியும். இந்த ‘மெதுவாக’ என்பது பல தலைமுறைகளைத் தாண்டியும் போகலாம்.

 

என்னுடைய உணவுமுறை எளிது:

  1. நான் சர்க்கரையை அன்றாட உணவில் சிறிதும் சேர்த்துக் கொள்வதில்லை. ஆனால் பொங்கலன்று நான்தான் அதிகமாக சர்க்கரைப் பொங்கல் சாப்பிட்டேன். அந்த காலத்தில் விருந்து எப்போதாவதுதான் கிடைக்கும். ஆனால் இன்றைக்கு காசு கொடுத்தால் அன்றாடம் விருந்து கிடைக்கிறது. அதுவும் ஒரு உணவகத்தில் வேண்டியது கிடைக்காவிட்டால், அடுத்த உணவகத்துச் சென்று விடுகிறோம். அதுதான் பிரச்சினையே. எப்படிப்பார்த்தாலும் சர்க்கரையானது பற்கள், கல்லீரல், இதயம் என்று ஒட்டுமொத்த அமைப்புக்கே நல்லதில்லை. தவிர்த்து விடுவது நலம் என்பது என் கருத்து.

 

  1. அதிகம் எண்ணெய் சேர்த்துக்கொள்ளாமல் இருப்பது நலம். குறிப்பாக, மக்காச்சோள எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் போன்றவை. நாங்கள் தேங்காய் எண்ணெய்யும், எள் எண்ணெய்யும் உபயோகிக்கிறோம். ஒருவேளை அதிகம் ஒமேகா 6 எண்ணெய் சேர்த்துக்கொண்டால்ஒமேகா 3 மிகுந்த உணவுகளை சேர்த்துக்கொள்ளுதல் நலம் (=வால்நட்)

 

  1. பொதுவாக கீரை வகைகள், நார்ச்சத்து மிகுந்த உணவுகளை எடுத்துக்கொள்வேன். பழங்கள் சேர்த்துக்கொள்வதும் நம்மூரில் கொஞ்சம் குறைவாக இருக்கிறது.

 

  1. அரிசிச் சோறு எடுத்துக்கொள்வதில் தவறில்லை. ஆனால் வடித்து உண்ணலாம்.

 

  1. பசித்தால் மட்டும் புசிப்பதுநலம். இன்னும் கொஞ்சம் பசி இருக்கும் பொழுதே உண்பதை நிறுத்திவிடுவது அதைவிட நல்லது. வயிறு முட்ட உண்பதை நான் தவிர்த்து விடுகிறேன். எவ்வளவு கலோரி உணவு உண்கிறீர்களோ, அதைவிட அதிகமான அளவு கலோரியை எரிக்க வேண்டும் என்பது எளிய உடற்கட்டு விதி. கடும் உடற்பயிற்சி தேவையில்லை. காலையிலோ மாலையிலோ குறைந்த பட்சம் நடக்கவாவது செய்யலாமே. என்னுடைய இலக்கு – ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் மூன்று கிலோமீட்டர் நடை, அதிகபட்சம் ஆறு கிலோமீட்டர் நடை.

 

இவையனைத்துமே என் நண்பர்கள், உறவுகளிடம் நான் சமீபத்தில் என்னுடைய பழக்கத்தில் இருந்து பகிர்ந்தவை.

 

எப்படி இருந்தாலும், ஒரு குறிப்பிட்ட உணவுமுறையை எல்லோருக்கும் பொதுவானதாக ஆக்குவது எந்த விதத்தில் சரி என்று எனக்குத் தெரியவில்லை. ஆயுர்வேதத்தில் வாதம், பித்தம், கபம் என உடல்வகைக்கு ஏற்றாற் போல் உணவுமுறையையும், சிகிச்சையையும் பரிந்துரைப்பார்களே, அது போன்று மேனாட்டு மருத்துவத்தில் எதுவும் இல்லையே என்று எண்ணிக் கொண்டிருந்தேன். சமீபத்தில் “EAT RIGHT FOR YOUR TYPE” என்கிற புத்தகத்தைக் கண்டடைந்தேன். இந்தப் புத்தகத்தின் ஆசிரியர்  Dr.Peter J. D’Adamo -வின் தந்தை James D’Adamo, “மனிதர்கள் அவர்களுடைய இரத்த வகைக்கு ஏற்ற உணவுமுறையை பின்பற்றுவது” குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டிருந்திருக்கிறார். அவருடைய ஆராய்ச்சியின் அடிப்படையில் அவரது மகனால் எழுதப்பட்ட புத்தகம் இது.

 

இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. பேலியோ போன்ற உணவுமுறைகளைப் பற்றியோ, இந்தப் புத்தகத்தைப் பற்றியோ விமர்சிக்கும் அளவுக்கு என்னுடைய circle of competence அவ்வளவு பெரியது இல்லை. மருத்துவனாக விரும்பியதால் நான் விரும்பி வாசிக்கும் மருத்துவ, ஊட்டச்சத்து சார்ந்த புத்தகங்களின் மூலம் கிடைத்த பொது அறிவின் மூலம் மட்டுமே கேள்வி எழுப்ப விழைகிறேன். புத்தகத்தை வாசிக்கும் பொழுது சற்று  அதிர்ச்சியாகவே இருந்தது.

 

என் மனைவி கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பித்தப்பை கற்கள் காரணமாக அவதிப்பட்டு வந்தார். கடந்த அக்படோபர் மாதம் பித்தப்பை அடைப்பு ஏற்பட்டு, மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு உடனே அறுவை செய்து பித்தப்பையை நீக்கி விட்டார்கள். கைவிரல் நகம் அளவு இருபது கற்கள். மிகுந்த அவதிக்குப் பிறகு இப்போது நலமாக இருக்கிறாள்.

அவளுடைய BLOOD TYPE A  குறித்து இந்தப் புத்தகத்தில் வாசிக்கும் போது அதிர்ச்சியாக இருந்தது – ” BLOOD TYPE A are the first vegetarians with sensitive digestive tract.” என்று குறிப்பிட்டிருந்தார். மேலும் என்ன மாதிரியான உணவுகளை சேர்த்துக்கொள்ள வேண்டும், எவற்றைத் தவிர்க்க வேண்டும், எடை குறைப்புக்கு என்ன மாதிரியான உணவுமுறையை மேற்கொள்ள வேண்டும், என்னென்ன உடற்பயிற்சிகள் மேற்கொள்ளவேண்டும் என்பது பற்றி விரிவாக எழுதியிருக்கிறார். என் மனைவி தவிர்க்க வேண்டிய உணவுகளை நீண்ட காலம் உட்கொண்டு வந்திருக்கிறாள். Sensible book in my opinion!

 

இந்தப் புத்தகத்தை வாசிக்கும் போது எனக்கு பேலியோ உணவுமுறை நினைவுக்கு வந்தது. நம் முன்னவர்களான கற்கால மனிதர்கள் உண்டதை உண்பதுதான் சரி என்று ஒருவர் கூறியதை ஒரு காணொளியில் காண நேர்ந்தது.  அப்படியெனில் இது BLOOD  TYPE O-விற்கு மட்டுமே பொருந்துமல்லவா? O வகையினர் (OLD)  ஐம்பதாயிரம் வருடங்களாக இருக்கிறார்கள். A  வகையினர் (AGRARIAN) வந்து கிட்டத்தட்ட முப்பதாயிரம் ஆண்டுகள் ஆகிறது. விவசாயம்தான் இவர்களின் அடையாளம். எனவேதான் இவர்கள் பெரும்பாலும் சைவ உணவை பின்பற்றுபவர்களாக இருந்துள்ளார்கள். B வகையினர் வந்து பத்தாயிரம் ஆண்டுகளும், AB வகையினர் வந்து இரண்டாயிரம் ஆண்டுகளும் ஆகிறது. எனவே ‘பேலியோலித்திக்’ உணவுமுறை என்பது O-வகையினருக்கானது என்று எனக்குத் தோன்றுகிறது.  மற்றவர்களுக்கு பொருந்துமா என்று தெரியவில்லை. அது தவறாகவும் இருக்கலாம். எனக்கு இருப்பவை கேள்விகள் மட்டுமே.

 

எப்படி இருப்பினும் உணவுமுறையை மாற்றம் செய்வதாயிருந்தால் மருத்துவர்களிடம் ஆலோசித்து விட்டு முடிவெடுப்பது நல்லது. இல்லாவிட்டால் இது எனக்கு வெறும் Social Proof fallacy-யாகத்தான் படுகிறது. பத்து பேர் வரிசையில் நிற்கிறார்கள். நானும் நிற்கிறேன். ஆனால் அவர்கள் எதற்கு நிற்கிறார்கள் என்பது தெரியாது என்கிற மனநிலை.

 

மாதவன் இளங்கோ

முந்தைய கட்டுரைநீர்க்கோலம்
அடுத்த கட்டுரைவாசிப்பும் சமநிலையும்