ஒரு ‘செரெண்டிபிட்டி’அனுபவம் – மாதவன் இளங்கோ

Madhavan_Elango

அன்பு ஜெயமோகன்,

என் கடிதங்கள் உங்களை வந்தடைந்ததா என்று தெரியவில்லை. வழமைபோல் உங்கள் தளத்தில் பிரசுரித்து பதில் அளிப்பீர்கள் அல்லது கடிதமாவது வரும் என்று நினைத்தேன். இதுவரை கிட்டத்தட்ட என்னுடைய எல்லா கடிதங்களுக்கும் அத்தகைய சமிக்ஞை கிடைத்திருப்பதால் ஒரு சம்சயம்.

இந்த வாரம்  முழுவதுமே ஏதாவது ஒரு காரணத்துக்காக  சிரித்துக்கொண்டே இருக்கிறேன். நல்லதுதானே. இதுபோன்ற தருணங்கள் அரிதாகவே வாய்க்கிறது. ஒரு மூன்று காரணங்களை மட்டும் கூற விழைகிறேன்.

முதல் காரணம் – 

உங்களுடைய “கஞ்சிமலையாளம்” கட்டுரை. குறிப்பாக அருண்மொழி அவர்களின் “எந்து பட்டீ”. :-)) வீட்டில் நாங்கள் பார்க்கும் திரைப்படங்களில் பெரும்பாலானவை மலையாளப் படங்கள் என்பதால் என் மகன்கூட நாங்கள் பேசிக்கொண்டிருக்கும்போது என்னவென்று கேட்டுவிட்டு “what dog ah?”  சிரித்தான். கட்டுரையைப் படித்து விட்டு என் மனைவி ப்ரியா, “இவர் உணவைப் பற்றி எழுதியிருக்கும் விதம் என்னை இப்போதே இந்தியாவுக்குப் போகத் தூண்டுகிறது. நீ மட்டும் ஒரு வாரமாவது போயிட்டு வந்துட்ட” என்று சற்று கோபப்பட்டாள்.

ஆனாலும், “கஞ்சியை விரும்பும் தமிழரை நான் பார்த்ததே இல்லை” என்று கூறுவதெல்லாம் கொஞ்சம் அதிகம். இந்தியாவிலிருந்த போது ஒவ்வொரு வருடமும் நான் கேரளத்திலுள்ள காயங்குளம் செல்வது வழக்கம். அப்போதெல்லாம் பெரும்பாலும் நான் எடுத்துக்கொள்ளும் உணவு கஞ்சிதான். இதோ ஒரு மலையாளக் கஞ்சி விரும்பும் தமிழன் உங்களுக்காக.

இரண்டாவது – 

‘இ.பா’ அவர்களுடைய தளத்துக்கு நீங்கள் செல்வதுண்டா? என்னுடைய அன்றாட சடங்குகளில் இப்போது அதுவும் சேர்ந்திருக்கிறது. நேரம் கிடைக்கும் பொழுது “For this relief, much thanks” வாசித்துப் பார்க்க வேண்டுகிறேன்.

https://indiraparthasarathy.wordpress.com/for-this-relief-much-thanks/

…..ஒரு பெரிய வரைபடத்தில், மேலும் கீழும் ஏராளமான அம்புக் குறியீடுகள். குந்திக்கிட்டு > குந்திக்கிணு > உட்கார்ந்திகிட்டு >உட்கார்ந்து  ‘இரு’, ‘இருக்கை’  என்று சிவப்பு, பச்சை, நீலம் என்று பல நிறங்களில் எழுதப்பட்டிருந்தது. ஊதா நிறத்தில், ‘Vocalic ablaut’ ‘Apophony’ என்ற சொற்களும் இருந்தன. திண்டுக்கல் மக்கள் கொடுத்து வைத்தவர்கள் என்று எனக்குத் தோன்றிற்று. இப்படிப் புரியாத மொழியில் பத்தாயிரம் மைல்களுக்கு அப்பால் அவர்கள் பேசுவது விவாதிக்கப் படுவது பெரும் பேறல்லவா?..

‘ இந்த நூலைப் பற்றி சொன்னீர்களே, இதில் architectonics’ எப்படி?’

‘நீங்கள் சொன்னது இந்த நூலில் ஏராளமாக இருக்கிறது.’

‘ஓ! அப்படியா?’ ‘ என்று சொல்லிவிட்டு ஒரு வெற்றிப் பெருமித்த்துடன் அவையினரைச் சுற்றிப் பார்வையிட்ட்து ஜோல்னா பை.

நீண்ட நாட்களுக்குப் பிறகு நான் உரக்கச் சிரித்துக்கொண்டே வாசித்த கட்டுரை. அதிலும் இறுதியில் முத்தாய்ப்பாக அவர் ஷேக்ஸ்பியரின் வரியைக் கையாண்ட விதம் இருக்கிறதே.. இ.பா rocks! நமக்கும் பள்ளிகளில் ஆங்கில இலக்கியத்தை இப்படி சொல்லிக் கொடுத்திருக்கலாமே என்று தோன்றியது. இதைப் படித்த பிறகு இந்த வரி யாருக்காவது மறக்குமா?

இதே தளத்தில் அவர் எழுதியுள்ள இன்னொரு கட்டுரை எனக்கு விஷ்ணுபுரத்தில் ஒரு காட்சியை நினைவுபடுத்தியதால் இப்போது விஷ்ணுபுரத்தை எடுத்து அந்தப் பகுதிகளை மீண்டும் மறுவாசிப்பு செய்துகொண்டிருக்கிறேன்.

மூன்றாவது – 

பிரசல்சு நகரில் இந்த வாரம்  ஒரு பன்னாட்டுக் கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்தோம். பல நாடுகளிலிருந்து பேச்சாளர்கள் பரிந்துரைக்கப்பட்டு, அதிலிருந்து மொத்தம் எட்டு பேச்சாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர். பார்வையாளர்களும்கூட பல நாடுகளிலிருந்து வந்திருந்தார்கள். உலகம் முழுவதும் நேரடி ஒளிபரப்பு வேறு. கருத்தரங்குக்குச் சிறப்புப் பேச்சாளராக வந்திருந்த ஒரு பிரெஞ்சுப் பெண்மணி எங்களைக் கதிகலங்க வைத்துவிட்டார். அவருக்குப் பேசுவதற்குக் கொடுக்கப்பட்டிருந்த தலைப்பு “அலுவலகங்களை புதுமையாக வடிவமைத்து நவீனப்படுத்துவதின் மூலம் படைப்பாற்றலை மேம்படுத்துவது எப்படி?” என்பது. அவருடைய மேடைப் பிரவேசமே சற்று வித்தியாசமாக இருந்தது. ஒரு கருப்பு நீள் அங்கி அணிந்துக்கொண்டு, கையில் ஒரு ரோபோவோடு மேடையேறிய அந்தப் பெண்மணி, பிரான்சு நாட்டின் கட்டிடக்கலையைப் பற்றி பேச ஆரம்பித்தார். நெப்போலியனின் அரண்மனையில் மிகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட அவரது அலுவலகங்கள், பதினான்காம் லூயி கட்டிய வெர்சாய் அரண்மனை (Chateau de Versailles), ஃபான்டன்ப்லோ அரண்மனை என்று வரலாற்றிலிருந்து தன்னுடைய பேச்சை அவர்  தொடங்கியது மிகவும் சுவாரசியமாக இருந்தது.

திடீரென்று அவருக்கு என்ன ஆயிற்றோ தெரியவில்லை. அவரது பேச்சில் சற்று உக்கிரம் கூடியது. தலைப்புக்குத் தொடர்பே இல்லாமல் குடியேற்றவாசிகளைப் பற்றிப் பேச ஆரம்பித்தார். அங்கிருந்து கால்பந்தாட்டக்காரர் ஸீனடீன் ஸிடானுக்குத் தாவினார். ஐரோப்பிய நாட்டு அரசாங்கங்களைச் சாடினார். பிறகு சற்றே அமைதியடைந்தவராய் சிறிது நேரம் நவீன அலுவலகங்களைப் பற்றிய காணொளி ஒன்றைக் காட்டி விளக்கினார். திடீரென்று மேடையில் முட்டிப் போட்டுக்கொண்டு அமர்ந்தவர் எங்கள் எல்லோரையும் எழுந்து நிற்கச் சொன்னார். அங்கிருந்தபடியே எங்கள் முன் விழுந்து வணங்கினார். பெல்ஜியத்திலிருப்பவர்கள் எல்லாம் மேதைகள் என்றார். Audacity, Serendipity, இன்ன பிற பதங்களை ஒரு இருபது முறையாவது சொல்லியிருப்பார். எல்லோரும் மிரண்டுபோய் அமர்ந்திருந்தோம். இதையெல்லாம் விளையாட்டுக்குச் செய்கிறாரா? சிரிக்கலாமா, கூடாதா? எப்போது சிரிக்கவேண்டும். எப்போது அமைதியாக இருக்க வேண்டும் என்று எனக்கு ஒன்றும் புரியவில்லை. அவருக்குக் கொடுக்கப்பட்டிருந்த நேரம் முடிந்திருந்தது. ஆனால், அவர் அதைக் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. முன் வரிசையில் அமர்ந்திருந்த நபர்களில் நான்கு பேரை மட்டும் மேடைக்கு வரச் சொன்னார். ஒரு பாடலைப் போட்டு நடனம் ஆட ஆரம்பித்தவர், அவர்களையும் தன்னுடன் சேர்ந்து ஆடச் சொன்னார். பாடல் என்ன தெரியுமா? பிரிட்னி ஸ்பியர்ஸின் “you better work bitch”. பாடலின் கூடவே சேர்ந்து உரக்கப் பாடினார் (பேசினார்!). இப்படித்தான் நீங்கள் வேலை பார்க்கவேண்டும் என்று உரக்கக் கத்தி அறிவுறுத்தினார். பிறகு உணர்ச்சி மிகுந்த ஜெர்மானிய பாடல் ஒன்றைப் போட்டு அதை மொழிபெயர்ப்பு செய்தபடியே பாடிக்கொண்டு மெதுவாக ஆடினார். உண்மையிலேயே அந்தப் பாடல் நன்றாகத்தான் இருந்தது. ;-) பின்பு அரங்கத்தை மெதுவாக வலம் வந்தார். என்னருகே வந்தபோது எனக்குக் கொஞ்சம் நடுக்கமாக இருந்தது. மீண்டும் மேடைக்குச் சென்று அங்கு நடனமாடிக் கொண்டிருந்தவர்களிலேயே இளையவனும் அழகனுமான பிரேசில் நாட்டு ஆர்த்தூருடைய மேற்சட்டையைக் கழற்றச் சொல்லிவிட்டு, அவனுடன் சேர்ந்து டாங்கோ நடனம் (!!) போன்று எதையோ ஆட ஆரம்பித்தார். ஜெர்மானியப் பாடல் முடிந்தவுடன் அதற்கு கொஞ்சமும் தொடர்பில்லாத ஷகிராவின் பாடல் ஒன்று தொடங்கியது. பேச்சாளர் (??) எங்கள் எல்லோரையும் எழுந்து ஆடச் சொல்லி ஆணையிட்டார்.

நான் அரங்கத்தைச் சுற்றி ஒரு நோட்டம் விட்டேன். ஒரு சிலர் ஷகிராவின் குரலில் மெய்மறந்து பரவசத்துடன் நடனமாடி க்கொண்டிருந்தனர். வேறு சிலர் நளினமாக  இடுப்பை ஆட்டியபடி பரதநாட்டியம் போன்று எதையோ செய்துகொண்டிருந்தார்கள். இன்னும் சிலர் கடுகடுப்புடன் அமர்ந்திருந்தார்கள். அதிலும் மூன்றாம் வரிசையில்  கைகளை இறுகக் கட்டிக்கொண்டு, கால் மேல் கால் போட்டபடி உட்கார்ந்திருந்த மனிதர் ஒருவரின் சிவந்த முகத்தைப் பார்ப்பதற்கே பயமாக இருந்தது. இதில் கொடுமையான விஷயம் என்னவென்றால், பேச்சாளர்கள் பேசப் பேச அவர்களுடைய பேச்சின் சாரத்தை ஓவியமாக வரைவதற்காக கேலிச்சித்திர ஓவியர் ஒருவரை ஏற்பாடு செய்திருந்தோம். அவர் என்னுடைய நண்பரின் மனைவி. அரங்கத்தின் இடது ஓரத்தில் வைக்கப்பட்டிருந்த வெள்ளைப்பலகையின் முன் அந்தப் பெண் என்ன வரைவதென்றே தெரியாமல் விக்கித்து நின்றுகொண்டிருப்பதைப் பார்ப்பதற்கே பரிதாபகரமாக இருந்தது.

எனக்கென்னவோ வித்தியாசமாக இருக்கட்டும் என்பதற்காகவே கருத்தரங்கக் குழு உறுப்பினர் ஒருவர் இந்தப் பேச்சாளரைப் பரிந்துரைத்தாரோ என்கிற சந்தேகம் எழுந்தது. இருந்தாலும் அவருக்கு தைரியம் அதிகம்தான். அவர் இந்நேரம் கழிப்பறையை நோக்கி ஓடியிருந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. ஆனால், யோசித்துப் பார்த்தால் இதுவும் நன்றாகத்தானே இருக்கிறது. ஒரு சீரியஸான பேச்சை எதிர்பார்த்து வந்திருக்கும் நமக்கு பிரிட்னி ஸ்பியர்ஸின் பாட்டுக்கு நடனமாடும் வாய்ப்பு மீண்டும் ஒருமுறை வாய்க்கப் போவதில்லை. உண்மையில் இதைத்தான் படைப்பாற்றல் பெருக்குவதற்கான வழிமுறை என்கிறாரா அந்தப் பெண்மணி? அதிலும் சற்று உண்மை இருக்கவேதானே செய்கிறது. அருகிலிருந்த என் நெருங்கிய நண்பன் கூனிடம் (Koen), “இங்கு நடந்துகொண்டிருப்பது ஏதாவது புரிகிறதா உனக்கு?” என்றேன். என்னை முறைத்துப் பார்த்து, “டாட் ஃபெர்டோமெ” என்றான். அதை நான் மொழியாக்கம் செய்யப் போவதில்லை. அவனுக்கு இதெல்லாம் பிடிக்காது. இத்தனைக்கும் அவன் ஒரு பிளெமிங்கோ கிட்டாரிஸ்ட். ஆனாலும் பாருங்கள், அவனுடைய முகம்தான் கோபத்தைக் காட்டியதே தவிர, இடை என்னவோ ஷகிராவின் “Hips don’t lie” பாடலுக்கு லேசாக அசைந்து கொண்டிருந்ததைக் காண முடிந்தது.

“உங்களுக்கு கொடுக்கப்பட்ட நேரம் முடிந்துவிட்டது” என்று மூன்று முறை அட்டையை காண்பித்தாகிவிட்டது. ஒரு வழியாக இரக்கப்பட்டு பாடலை நிறுத்திய அந்தப் பெண்மணி, ” நேரமாகிவிட்டது. நன்றி நண்பர்களே. மன்னித்து விடுங்கள். நேற்று இரவு சற்று அதிகமாகக் குடித்துவிட்டேன். இன்னும் போதை தீரவில்லை.” என்றார். அப்போது கூனைத் திரும்பிப் பார்க்க எனக்கு தைரியம் வரவில்லை. அநேகமாக அவனுடைய குதிரைவால் கொண்டை தானாகவே அவிழ்ந்து விறைத்து வான்பார்த்து நின்றுகொண்டிருக்கக்கூடும் என்கிற எண்ணம் தோன்றியபோது எனக்குச் சிரிப்பு வந்தது. அடக்கிக்கொண்டேன்.

எல்லோரும் அரங்கத்தை விட்டு வெளியேறும்போது ஒரே சலசலப்பு. என்னுடைய தோழி ஒருவர், “மாதவன், serendipity என்றால் என்ன?” என்றார். அவனவன் கதிகலங்கிப் போயிருக்கும் நேரத்திலும் அவருக்கு இருந்த அந்த அறிவுப் பசி எனக்கு வியப்பளித்தது. “என்னைப் பொருத்தவரைக்கும் இந்த செஷனே serendipity-க்கு ஒரு நல்ல உதாரணம். ஆனால், கூன் இதை ஒத்துக்கொள்ள மாட்டான். எதற்கும் அவனிடமும் ஒருமுறை கேட்டுப் பாருங்கள்” என்றேன்.

இப்படிச் சொல்லிய பிறகு ஒருவித deja vu உணர்வு ஏற்பட்டது. மாலை வீட்டுக்கு வந்தவுடன் சுஜாதாவின் புத்தகம் ஒன்றைத் தேடிப் பார்த்தேன். நான் தேடியது கிடைத்துவிட்டது. சுஜாதா ஒரு வாசகரின் கேள்வி ஒன்றுக்கு இவ்வாறு பதிலளித்திருக்கிறார்.

கேள்வி:

சார், சென்ற மாதம் ஆங்கிலப் புத்தகங்கள் படிப்பது எப்படி என்று கேட்டதற்கு முதலில் டிக்ஷனரி வாங்குங்கள் என்று சொல்லியிருந்தீர்கள். வாங்கிவிட்டேன். அடுத்து எங்கிருந்து தொடங்குவது?

பதில்:

நல்லது. டிக்ஷனரியை எடுத்து அதில் Serendipity என்பதற்கு அர்த்தம் பாருங்கள்.

இந்தக் கூர்மையைத்தான் நாம் சுஜாதாவோடு கொஞ்சம் தொலைத்துவிட்டோம் என்று நான் கூறினால் மறுப்பீர்களா?

அன்புடன்,

மாதவன் இளங்கோ

முந்தைய கட்டுரைகடிதங்கள்
அடுத்த கட்டுரைக்ரியாவின் மொழிக்கொள்கை,இலக்கண ஆதிக்கம்