சுனில்கிருஷ்ணனின் அம்புப்படுக்கை- கிறிஸ்டி

sunee

அன்புள்ள ஜெ சார் அவர்களுக்கு,

 

 

நலமாக இருக்கிறீர்களா? பணி அலைச்சல் காரணமாக வாசிக்கவும் எழுதவும் சாெற்ப நேரங்களே கிடைக்கின்றன. ஞாயிறு விடுமுறையும்   வீட்டில் தங்காவண்ணம் கழிந்து காெண்டிருக்கிறது.    அப்படி இப்படி இழுத்துப் பிடித்து   சுநீல் கிருஷ்ணன் அவர்களின் “அம்புப்படுக்கை” சிறுகதைத் தொகுப்பு வாசித்தேன்.  அதைப் பற்றி நான் எண்ணியதைத் தாெகுத்து கீழ்க்கண்டவாறு எழுதியுள்ளேன். என் வாசிப்பு முறை சரியா தவறா இன்னும் நான் எதைக் கவனத்தில் காெள்ளவேண்டும் என அறிவுரை வழங்கிடுமாறு வேண்டுகிறேன்.

 

 

சுநீல் அவர்களின் படைப்பில் நான் கீழ்க்கண்ட குறிப்பிடத்தக்க அம்சங்களைக் கண்டேன். முதலாவது அவரின் இலக்கியத்தின்பால் உள்ள தீவிரம். இரண்டாவது நிதானமான சரளமான மொழிநடை. மூன்றாவது தத்துவத்தின்பால் அவருக்குள்ள ஈர்ப்பு. நான்காவது சொல்லவரும் கருத்துகளில் வேட்டைநாய்ப் பாய்ச்சல். ஐந்தாவதாக மன உணர்வுகளை நுட்பமாக சித்தரிக்கும் திறன்.

 

 

மேற்கூறிய அனைத்தையும் அவரின் கதைகளில் கண்டு மிக ரசித்து வாசித்தேன். ஒருவேளை அவர் ஒரு மருத்துவர் என்ற எண்ணம் என் ஆழ்மனதில் பதிந்திருந்தது என் வியப்புக்கு காரணமாக இருக்கலாம் என நினைக்கிறேன். முதலில் அவரை “காந்தி இன்று” இணையதள ஆசிரியராக அறிமுகப்படுத்திக் கொண்டேன். பிறகு அவர் ஒரு மருத்துவர் என அறிந்தேன். எனக்கு ஆயுர்வேதமாயிருந்தாலும் அலோபதியாயிருந்தாலும், மருத்துவர் என்றால் அவர் ஒரு மருத்துவர், அவ்வளவுதான். அவர்கள் இப்படி இணையதளத்தில் தீவிரமாக எழுதுவார்கள், இலக்கியவாதிகளாயிருப்பார்கள், கதைகள் எழுதி புத்தகங்கள் எல்லாம் வெளியிடுவார்கள் என்றெல்லாம் அறிந்திருக்கவில்லை.

சுநீல் கிருஷ்ணன் அவர்கள் எவ்வாறு ஒரு மருத்துவத் துறையில் இருந்துகொண்டு இத்தகைய தீவிர சிந்தனையாளராக இருக்கிறார், அதுவும் மிகவும் நிதானமாக சிந்திக்கக் கூடியவராக இருக்கிறார் என்பது மட்டுமே அவர் கதைகளை வாசிக்கையில் என் பெரும்பான்மையான எண்ணமாக இருந்தது.

 

 

முதல்கதை வாசுதேவனிலேயே என்னால் அவர் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியவில்லை. அடுத்தடுத்து வந்த அத்தனைக் கதைகளுமே வேட்டைநாய்ப் பாய்ச்சல்தான். பேசும்பூனை, குருதிச்சோறு, கூண்டு தவிர மீதி அத்தனை கதைகளையும் புரிந்துகொள்ள மறுவாசிப்பு செய்ய வேண்டியிருந்தது. நான் அவரின் மொழிநடையைச் சொல்லவில்லை. அவரின் கருத்துப் பாய்ச்சலின் வேகத்தைச் சொல்கிறேன். முதல்வாசிப்பில் புரியாதவை, மறுவாசிப்பில் புரிய நேரும்போது, “ஒவ்வொரு வார்த்தையும் மிக முக்கியம்” என்பதை உணர்ந்தேன். அட! இதை முதலில் வாசிக்கும்போது கவனிக்கவில்லையே என என்னைக் குறைபட்டுக் கொண்டேன். நிதானமாக ஆழமாக மீண்டும் வாசிக்கும்போது, வாசுதேவனும், காளிங்க நர்த்தனமும், திமிங்கிலமும், ஆரோகணமும் மிகுந்த பரவசத்தையும் நிகர்வாழ்பனுபவத்தையும் தந்தன.

 

 

வாசுதேவனும் அம்புப்படுக்கையும் ஒரேவிதமான எண்ணத்தை எனக்குத் தோற்றுவித்தன. அதாவது சாகக்கிடக்கும் ஒருவன், பிழைப்பதும் சாவதும் அவனைச் சுற்றியிருக்கும் மனிதர்களின் கைகளில்தான் இருக்கிறது என. வாசுதேவன் கதைசொல்லியின் பிரயாசையால் கொஞ்சம் உணர்வு பெற்று வந்தான். ஆனால் வாசுவின் அக்காள் வந்ததும் சூழ்நிலையே தலைகீழாகிவிடுகிறது. அவன் கதறலைக்கூட  யாரும் காதில்வாங்காத வண்ணம் அவன்மேல் அக்கறை எடுத்துக் கொள்ளாமல் இருக்கிறார்கள். வாசுவின் பெற்றோரோ, தாம் உயிரோடு இருப்பதுவரை அவனுக்கு ஏதாவது செய்வது மட்டுமே தங்கள் கடமை எனவும் தங்கள் இருப்பு ஏதாவது செய்வது மட்டுமே கடைசிகாலத்தில் தமக்கு ஆறுதலையும் நிம்மதியையும் தரும் என நினைக்கிறார்கள். இறுதியில் நம்பிக்கையிழந்து அவனைக் கைவிடுகிறார்கள். போதாக்குறைக்கு அவர்களின் கடைசிகால ஆறுதலாக, ஏதாவது செய்யவேண்டும் என்ற எண்ணத்தை ஈடேற்றம் செய்துகொள்ள, அவர்களின் பேத்தி குழந்தை வடிவில் வந்துசேருகிறாள். இனி அவர்களுக்கு அவர்களின் இறுதிக்காலம் வரை ஏதாவது செய்துகொண்டிருக்க அந்த குழந்தை இருக்கிறது, இனி நான் தேவையில்லை என நினைத்து வாசுதேவன் உயிரை விட்டிருப்பானோ எனவும் நினைக்கத் தோன்றுகிறது.

 

 

ஒன்றைப் பெற்றுவிடும்போது மற்றொன்றின் இழப்பு எவ்வுயிருக்கும் பெரிதாகத் தோன்றுவதில்லை போலும். ஆகையால் ஓரிடத்தில் இழப்புமட்டுமே இருக்கும்பட்சத்தில் அது மிகுந்த துயரமளிப்பதாகத் தோன்றிவிடுகிறது.

 

 

அம்புப்படுக்கையில் ஆனாரூனா செட்டியார் படுத்த படுக்கையாகக் கிடக்கிறார். அங்கு அவரின் இழப்பை, சுற்றி நின்று கொண்டிருக்கும் உறவினர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படியே உயிர்பிழைத்திருக்க வேண்டும் என்ற இச்சை செட்டியாருக்கு இருக்க வாய்ப்பிருந்தாலும் மற்றவர்களின் சந்தோஷத்திற்காகவாவது நாம் செத்துவிடுவோம் என்ற ஞானத்தை அந்த இறுதிக் கணங்களில் செட்டியார் அடைந்தாரோ என்று எண்ணத் தோன்றுகிறது.

 

 

காளிங்க நர்த்தனத்தில் கதாசிரியர் சிறுவர் முதல் கிழவர் வரை வழுக்கும் பாம்புத்தலைமேல் நர்த்தனம்புரிய வைத்துவிட்டார். அந்தக் கற்பனை என்னை மிகவும் கவர்ந்தது. அதோடு, தலையில் ஏறி எத்தனை கும்மாளமிட்டாலும் அதைப் பொறுமையோடும் சகிப்புத்தன்மையோடும் தாங்கிக்கொள்வோர் கடவுள்நிலைக்கு உயர்த்தப்படுகிறார்கள், அதாவது கடவுள்போல கல்லாக்கப்படுகிறார்கள். நாம் இதை எப்படியும் வைத்துக்கொள்ளலாம். அதாவது தாங்கிக் கொள்பவனும் கடவுள், தலைமீது ஏறி மிதிப்பவனும் கடவுள். ஒரு வேதாந்தம் என்மனதினுள் நுழைந்து சிந்திக்கவைத்துக் கொண்டிருக்கிறது.

 

 

2016 சிறுகதை ஒரு வித்தியாசமான சிறுகதை வடிவத்தைக் கொண்டிருக்கிறது. ஆசிரியர் மிகுந்த சிரமமெடுத்து காலங்களை மனதில் நிறுத்தி இக்கதையை எழுதியுள்ளார். ஒரு படைப்பில் படைக்கப்பட்ட கதாபாத்திரத்துடன் வெளியுலக பத்திரிக்கையாளர் ஒருவரின் நேர்காணல் பேட்டி அது. இது நான் இதுவரை சிந்தித்துப் பார்த்திராதது. வாசகர் மிகுந்த கவனத்துடன் களத்தில் தம்மைப் பொருத்திக் கொண்டாலொழிய இச்சிறுகதையை புரிந்துகொள்ள இயலாது. இது மற்றுமொரு வெறுமையை உணரவைக்கக் கூடிய படைப்பு. துப்பாக்கியால் சுடப்பட்டு இன்னும் ஒருசில நிமிடங்களில் உயிரைவிட இருக்கிறோம் என்று அறிந்திருக்கும் ஒருவன், ஒரு நேர்காணல் நிகழ்வில், நிதானமாகவும் சமூகப் பொறுப்புடனும் பதில் கூறிக்கொண்டிருக்கிறான் என்ற சிந்தனையே வாசித்துமுடிக்கும்வரையிலும் கிளர்ச்சியை உருவாக்கிக் கொண்டிருந்தது. சமூகப் பொறுப்புணர்வுமிக்கவர்கள் எத்தனை ஆழமான அமைதி கொண்டிருக்கவேண்டும், சற்றும் பதட்டப்படக்கூடாது, எதையும்தாங்கும் இதயமும் தீர்க்கமான தொலைநோக்கு சிந்தனையும் கொண்டிருக்க வேண்டும் என 2016 சிறுகதை உணர்த்தியது.

 

 

பேசும்பூனையையும் திமிங்கிலத்தையும் நான் ஒரே கருத்தை சொல்லவருவதாக இணைத்துக்கொண்டேன். அதாவது, “அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு” என்று காலங்காலமாக நம் மூதாதையர்களால் சொல்லப்பட்டுவரும் மரபான பழமொழிதான்.

 

 

பேசும்பூனையில், நவநாகரீகத்தை அதிகப்படியாக நுகர்வதால் ஒரு பெண்மணி அடையும் நூதன சிக்கல்கள், அது எந்தளவுக்கு அவளின் குடும்ப வாழ்வில் பிரச்சனையை ஏற்படுத்துகிறது, அவள் அந்த நவீன நாகரிகத்தை நோக்கி ஏன் சென்றாள், செல்வதற்கான சூழ்நிலையை ஏற்படுத்துவதில் அப்பெண்ணின் கணவனின் பங்கென்ன, உயிரையே கோரும் அப்பிரச்சனையிலிருந்து அவள் எவ்வாறு மீண்டாள் என மிக சுவாரஸ்யமாக கதையைக் கொண்டு செல்கிறார் ஆசிரியர். கணவன் கணேசனின் மனதையும் மனைவி தேன்மொழியின் மனவுணர்வுகளையும் வாசிக்கையில் இன்றைய திருமணமான இளைஞர்களின் இளம்பெண்களின் மனதை, உணர்வுகளை அப்படியே படம்பிடித்துக் காண்பிப்பதுபோல் இருந்தது. மெல்லிய பதற்றம் இழையோடியபடியே வாசித்து முடித்தேன். இறுதியில் ஆசிரியர், “ஓ நெஞ்சே நெஞ்சே” பாடலைப் பாடிய குரல், ஸ்வர்ணலதாவினுடையதாக இருந்தது என்று முடித்திருந்தால் அந்த பதற்றம் அடங்கியிருக்கும். ஆனால் பூனையின் குரல்! என்று முடித்துவிட்டதால் பேசும்பூனை பாகம் இரண்டு என பதற்றம் அதிகரித்ததுதான் நிகழ்ந்தது. ஏனெனில் இச்சிறுகதை பேசும் தளம் அப்படிப்பட்டது, எக்காலத்திலும் இதற்கு முடிவேயில்லை, பதற்றத்துடன் நிதானத்துடன் அணுகவேண்டிய பிரச்சினையது.

 

 

இன்னுமாய் பேசும்பூனையிலும் கூண்டு சிறுகதையிலும் நான் ரசித்த ஒரு அம்சம் என்னவெனில், “ஒரு விஷயத்தை/கருத்தை/ பொருளை எவ்வாறு விரும்பத்தக்கதாகவும் அதே விஷயத்தை/ கருத்தை/பொருளை எவ்வாறு விரும்பத்தகாததாகவும் ஆக்குவது” என்பது. பேசும்பூனையில் “கம்ப்யூட்டர் பூனை”யும், கூண்டுவில் “மந்திரக்கூண்டு”ம் பேசுபடுபொருளாக இருக்கின்றன. பூனையும் கூண்டுவும், கதாமாந்தர்களாலும் சரி வாசகர்களாலும் சரி,  ஆரம்பத்தில் விரும்பப்படுகின்றன, போகப்போக வெறுக்கப்படுகின்றன. விருப்பு வெறுப்பு என இருவகை எல்லைகளுக்கும் ஆசிரியர் வாசகர்களை தன் தங்குதடையற்ற மொழிப்பிரவாகத்தால் இழுத்துச் சென்றுவிடுகிறார். இரண்டு சிறுகதைகளும் சிரிக்கவும் வைக்கின்றன, சிந்திக்கவும் வைக்கின்றன. சில இடங்களில், அட! என வியக்க வைக்கின்றன. பேசும்பூனையும் கூண்டும் இன்றைய சாமானிய மக்களுக்கும் அதிகாரம் படைத்த அரசுகளுக்கும் நல்ல அறிவுரைகள்.

 

 

தொகுப்பின் இறுதியான சிறுகதை ஆரோகணத்தில் நான் மிகவும் மனவேதனைக்குள்ளானேன். பலசமயங்களில் நான் அடையும் குழப்பங்கள், சோர்வுகள் ஆரோகணத்தில் பேசப்பட்டன, விவாதிக்கப்பட்டன, சிந்திக்கப்பட்டன. எனக்காக ஆசிரியர் சிந்தித்தாரோ காந்திமகான் சிந்தித்தாரோ.. எத்தனை தியாக உள்ளங்கள் என்னைப் போன்ற எளிய மனிதருக்காக சிந்தித்துள்ளன, செயல்பட்டுள்ளன, உயிரைவிட்டுள்ளன என நினைக்கையில் என்னையுமறியாமல் கண்ணீர் வழிந்தது. எத்தனை சோதனைகள் இடர்ப்பாடுகள் வந்தாலும், “எனக்கு இன்பம் தரும் சொர்க்கம் வேண்டாம், மனிதநேயம் எஞ்சியிருக்கும் நரகமே வேண்டும்” என ஒரு மனித உள்ளம் சொல்லுமேயெனில் அந்த உள்ளத்திற்குதான் எத்தனை அசாத்திய நம்பிக்கை, துணிச்சல்!

 

 

கோட்சேவால் சுடப்பட்டு இறந்த காந்தி அவர்கள் முடிவில்லா பனிவெளியில் நடந்துகொண்டேயிருப்பதை, பிரச்சனைகள் சூழப்பட்ட வாழ்க்கைவெளியாகவும், அவருக்கு வழித்துணையாக கூடவே செல்லும் நாய் ஒன்றை,  நம் அருகிலேயே இருந்துகொண்டிருக்கும் மரணம் என்பதாகவும் இறுதியில் ஆழமாக உணரவைத்துவிடுகிறார் ஆசிரியர். அவ்வாறு கூறுகையில், காந்தி அவர்கள் பார்வையில், எவ்வாறு வாழ்க்கைப் பிரச்சனைகளை எதிர்கொள்வது; குடும்பவாழ்க்கையைப் பற்றிய அவரது சிந்தனைகள்; கூடவே வரும் நாயைப் பற்றி காந்தி நினைப்பவை, ஆகியவை இலட்சிய வாழ்க்கை பற்றிய ஒவ்வொருவரின் சிந்தனையிலும் தாக்கத்தை ஏற்படுத்துபவை. இறுதியில், கூடவே வந்த நாய், தன்னை காலனாக காந்தியிடம் அறிமுகம் செய்துகொண்டு, காந்தியவர்கள் பட்ட கஷ்டங்களுக்கெல்லாம் சொர்க்கம் காத்துக்கொண்டிருக்கிறது என்று பாராட்டுகையில், அந்த பாராட்டுதலை பேராளுமைகள் எவ்வாறு அணுகுகிறார்கள் என்பதை விவரிப்பதன்மூலம்  சாமானியர்களுக்கும் மகான்களுக்குமான பெரிய வேறுபாட்டை முகத்திலறைவதுபோல் உணரவைக்கும் இடத்தில் ஆசிரியர் தன் எழுத்தை வெற்றிபெற வைத்துவிடுகிறார்.

 

 

“அம்புப்படுக்கை” சிறுகதைத்தொகுப்பைப் பற்றி  மிகச் சுருக்கமாக சொல்லவேண்டுமெனில் நான் கீழ்வருமாறு கூறிக்கொள்வேன்.அதாவது, கூண்டு, பேசும்பூனை, குருதிச்சோறு இவை புராணமும் மரபும் பொதிந்த இலக்கிய சிறு(றார்)  கதைகள். காளிங்கநர்த்தனம், 2016 இவை தத்துவ சிறுகதைகள். வாசுதேவன், அம்புப்படுக்கை, திமிங்கிலம் இவை வாழ்வியல் விடுதலை சிறுகதைகள். ஆரோகணம் மனித மாண்பை உணர்த்தும் அற்புதப் புனைவு.

 

 

எழுத்தாளர் சுநீல் கிருஷ்ணன் அவர்கள் தன் நுணுக்கமான சித்தரிப்புத் திறனாலும் சிறந்த மொழிநடையாலும் மனித உணர்வுகளை தன் எழுத்தில் கொண்டுவந்து வாசிப்பவரையும் அந்தந்த உணர்வுகளை அடைய வைத்துவிடுகிறார் என்று உறுதியாகச் சொல்லலாம். இந்நூல் ஏற்படுத்திய உணர்வுகளை தங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

 

அன்புடன்,

கிறிஸ்டி.

 

முந்தைய கட்டுரைஜானிஸ் பரியத் – கோவை விவாதம்
அடுத்த கட்டுரைவீடு