கலையில் மடிதல்

Kalamandalam-Geethanandan-

பெருமதிப்பிற்குரிய ஜெமோ.அவர்களுக்கு,

வணக்கம்.

நேற்று இரவுதான் முகநூலின் மூலம் இச்செய்தியை அறிந்தேன்.கடந்த 28.01.2018 ஞாயிற்றுக்கிழமை இரிஞ்சாலகுடா கோவிலில் தான்  நடத்திய  “ஓட்டன் துள்ளல்” நாட்டிய  நிகழ்ச்சியின்போது மேடையிலேயே மரணமடைந்தார் கலாமண்டலம் கீதானந்தன்.அதன் சிறிய வீடியோ பதிவையும் பார்க்க நேரிட்டது!.நாட்டியத்தின் போது  பின் பாட்டு பாடுகிறவரை(சரியாக குறிப்பிட்டிருக்கிறேனா ?) சம்பிரதாயமாக வணங்கும் போதே அந்த மேதை  உயிர் விட்டதை கண்டு கண்ணீர் விட்டேன்!.என்ன ஒரு கலைக்கான முழு அர்ப்பணிப்பு! என்ன ஒரு பாக்கியம்!!.

Kalamandalam Geethanandan passes away while dancing

அன்புடன்,

அ .சேஷகிரி.

கலாமண்டலம் கீதானந்தனை நான் அறிவேன். அவர் கேரள கலாமண்டலத்தில் ஓட்டன் துள்ளல் என்னும் கலைவடிவை கற்பிக்கும் ஆசிரியராகப் பணியாற்றியவர். ஏராளமான மாணவர்கள் கொண்டவர். சென்ற ஆண்டு அங்கே ஆசிரியப்பணியில் இருந்து ஓய்வுபெற்று ஓட்டன் துள்ளல் ஆடிவந்தார். சென்ற 2018 ஜனவரி 28 அன்று திரிச்சூர் மாவட்டம் இரிஞ்ஞ்சாலக்குடா அருகே உள்ள அவிட்டத்தூர் சிவாலயத்தில் நடந்த ஓட்டன் துள்ளல் ஆடலின் நடுவே மாரடைப்பு ஏற்பட்டு மேடையிலேயே உயிர்துறந்தார். இறக்கும்போது 59 வயது.

நீங்கள் சொல்வதுபோல அவர் பாடகரை வணங்கும்போது இறக்கவில்லை. அந்த ஓட்டன்துள்ளல் பாதியாகிவிட்டிருந்தது. நெஞ்சடைப்பு ஏற்பட்டு மயக்கம் வருவதை உணர்கிறார். உயிரிழக்கக்கூடும் என்று தோன்றியிருக்கலாம். ஆகவே பாதி ஆட்டத்தில் திரும்பி ஆட்டத்தை முடிக்கும் முகமாக பாடகரை வணங்கியபடி சரிந்து விழுந்துவிட்டார்.

அர்ப்பணிப்பு அந்தச் சிறிய செயலில்தான் வெளிப்படுகிறது. மேடையிலேயே விழுந்துவிடலாம். ஆனால் அந்த ஆட்டம் வடிவமுழுமை பெறவேண்டும் என அவர் நினைத்தார். கலைஞர்களுக்குரிய இயல்புகளில் ஒன்று தன் கலைவடிவின் ஒத்திசைவு, முழுமைக்கான அவர்களின் தீவிரம். அதை ஒருவகை வெறி என்றே சொல்லலாம்.

கலாமண்டலம் கீதானந்தனை நாம் முக அறிமுகம் கொண்டிருப்போம். பல திரைப்படங்களில் குணச்சித்திரவேடங்களில் நடித்திருக்கிறார்.2013ல் நான் எழுதிய மலையாளப்படமாகிய காஞ்சியில் சோதிடராக நடித்தபடி அறிமுகமானார். அப்படித்தான் எனக்கு அறிமுகம். செட்டில் வைத்து கொஞ்சம் உரையாடினோம். அமர்ந்தவாறே ஓரிரு பதங்கள் ஆடிக்காட்டிச் சிரிக்கவைத்தார்

vallathol
வள்ளத்தோள்

கலாமண்டலம் மகாகவி வள்ளத்தோள் நாராயணமேனன் அவர்களால் 1930ல்  மணக்குளம் முகுந்த ராஜாவின் உதவியுடன் உருவாக்கப்பட்ட கலைப்பள்ளி. இன்று ஒரு தனி பல்கலைகழகமாகவே செயல்படுகிறது.ஷொர்ணூர் அருகே உள்ளது. கலைகளில் ஆர்வம்கொண்டவர்கள் சென்று பார்வையிடலாம். கடும் உழைப்பால் அதை வள்ளத்தோள் உருவாக்கினார்.

அன்று கதகளி,சாக்கியார் கூத்து, ஓட்டன்துள்ளல், பஞ்சவாத்தியம், செண்டை, மோகினியாட்டம் போன்ற கலைவடிவங்கள் ஆலயங்களையும் அரண்மனைகளையும் நம்பி இருந்துவந்தன. ஜனநாயக யுகம் வருவதையும் விளைவாக அக்கலைகளுக்கான அடித்தளம் இல்லாமலாகிவிடும் என்பதையும் உணர்ந்த வள்ளத்தோள் கலாமண்டலத்தை அக்கலைகளுக்கான பயிற்சி மையமாக உருவாக்கினார். அதற்கான ரசிகர்களையும் உருவாக்கமுடிந்தது.

அக்கலைகளை உலகமெங்கும் கொண்டுசெல்வதன் வழியாக அதன் கலைஞர்களுக்கு சமூகத்தில் மதிப்புமிக்க வாழ்க்கையையும் அவர் உருவாக்கி அளித்தார். கேரளத்தின் பெரும்பாலான முக்கியமான கலைஞர்கள் கலாமண்டலம் என்னும் முன்னொட்டுடன் இருப்பார்கள்

ஓட்டன் என்றால் ஒரு துணைச்சாதி. இன்று அச்சாதி தனியாக இல்லை. தூதுசெல்வதற்குரிய சாதி அது. ஓட்டன் துள்ளல் ஒரு தனிநபர் நடிப்புக் கலை. அதன் மையச்சுவை என்பது நையாண்டிதான். புராணக்கதைகளை ஒருவகை எளிமையான நையாண்டியுடன் சொல்லும் ’துள்ளல்கதைகள்’ புகழ்பெற்றவை. இது நாட்டார்கலையம்சம் ஓங்கிய ஒருவகை ‘மக்கள்கலை’ பெரும்பாலும் ஆலயத்திற்குவெளியே ஆடப்படுவது

kala
கேரள கலாமண்டலம் கூத்தரங்கு

ஒவ்வொரு கலைவடிவிலும் ஒரு முதன்மைக் கவிஞர் இருப்பார். கதகளிக்கு உண்ணாயிவாரியார் [அடுத்தபடியாக இரயும்மன் தம்பி] உண்ணாயிவாரியரின் நளசரிதம் ஆட்டக்கதை ஒரு முதன்மையான காவியநாடகம். ஓட்டன்துள்ளலுக்கு குஞ்சன் நம்பியார் முதற்பெரும் கவிஞர். நம்மூர் காளமேகம் போல சகட்டுமேனிக்குக் கிண்டலடித்தவர் குஞ்சன் நம்பியார்

1705 முதல் 1770 வரை வாழ்ந்த குஞ்சன்நம்பியார் பாலக்காடு அருகே உள்ள லக்கிடி என்னும் ஊரில் கிள்ளிக்குறிச்சி மங்கலம் என்னும் குடியில் பிறந்தவர். செம்பகச்சேரி அரசரின் அணுக்கராக நெடுங்காலம் அம்பலப்புழை ஊரில் வாழ்ந்தார். 1746ல் திருவிதாங்கூரின் அரசர் மார்த்தாண்டவர்மா செம்பகச்சேரி நாட்டை கைப்பற்றி தன் நாட்டுடன் இணைத்துக்கொண்டார். நம்பியார் திருவனந்தபுரம் வந்து அரண்மனை வித்வானாக ஆனார். ஆனால் திருவனந்தபுரத்தில் அவர் மதிப்பைப் பெறவில்லை. அரண்மனைக்கோமாளியாகவே வாழ்ந்தார். அதை நொந்துபாடியுமிருக்கிறார்.

1770ல் அங்கிருந்து அம்பலப்புழாவுக்கு வந்தார். அங்கே வெறிநாய்க்கடியால் இறந்தார். கிட்டத்தட்ட முப்பது துள்ளல்கதைகளை அவர் எழுதியிருக்கிறார். அவையனைத்துமே இன்றும் அரங்கில் புகழுடன் உள்ளன.

கலாமண்டலம் கீதானந்தனின் மறைவு துயர்மிக்கத்து. மலையாளிகளுக்கு அறுபதையொட்டிய வயதுகள் இக்கட்டானவை. பெரும்பாலானவர்கள் அப்போது நெஞ்சடைப்பால் இறக்கிறார்கள். லோகியும் அவர் நண்பர்கள் அனைவரும் அப்படித்தான்.

ஆனால் அந்த மரணம் ஒரு குறியீடு போல் தெரிகிறது. அது ஒருவகை மனஎழுச்சியை உருவாக்குகிறது

ஜெ

முந்தைய கட்டுரைஅகாலக்காலம் கடிதங்கள்
அடுத்த கட்டுரைவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–58