பகுதி பத்து : பெருங்கொடை – 3
ஹிரண்யகர்ப்பம் என்னும் அதர்வவேதக் குழுவில் அவனை சேர்க்கலாம் என்று தந்தை முடிவெடுத்தபோது அன்னை அதற்கு ஒப்பமாட்டாள் என்னும் ஐயம் அவருக்கு இருந்தது. பல நாட்களாகவே அவரைத் தேடி அக்குருநிலையிலிருந்து வைதிகர்கள் வந்துகொண்டிருந்தனர். அவர்கள் அங்கிரீசரின் சொற்குலம். அதர்வம் அவர்களுக்கு பழிசேர்ப்பது. “மைந்தரை அதர்வத்திற்கு அனுப்புவது எத்தனை துயரளிப்பதென்று அறிவோம். ஆனால் அவன் அங்கிரீச குலத்தவன் என்பதே அவனுக்குக் காப்பென்றுணர்க! ஒரு பிழையும் நிகழாது இயற்றப்படும் அதர்வம் பிற மூன்று வேதங்களைவிட பெரும்பயன் அளிப்பது” என்றார் அவனை அழைக்கவந்த உக்ரர் என்னும் வைதிகர்.
அவர் அருகே இருந்த சுப்ரபர் “எவர் அறிவார்? அவனை ஒரு மாமுனிவனென தவத்தின் உச்சிமுனையில் அது அமர்த்தலாம். மண்ணிலுள்ள அனைத்துச் செல்வங்களையும் தெய்வங்கள் அள்ளி அவன் காலடியில் கொட்டலாம்” என்றார். அவன் தந்தை முகம்சுளிக்க அதை அக்கணமே உணர்ந்த உக்ரர் “அதர்வம் மீது நீங்கள் கொண்டிருக்கும் ஐயமும் விலக்கமும் பொருளற்றவை. இங்கு ரிக்கும் சாமமும் பயிர்கள். யஜுர் அதைச் சூழ்ந்த உயிர்வேலி. அதர்வமே முள்வேலி என்று உணர்க! அதர்வத்திற்கு நீங்கள் அளிக்கும் கொடை உங்கள் குருமரபு பேணி வளர்த்தவை அழியாதிருக்க செய்யப்படுவது என்று கொள்க!” என்றார்.
சுப்ரபர் “வேதம் ஓம்பி நீங்கள் இதுவரை அடைந்ததென்ன, அந்தணரே? ஒவ்வொரு மழைக்காலத்திற்கும் ஒரு மைந்தனை விண்ணுக்களித்து நீரூற்றி மீள்கிறீர்கள்” என்றார். சீற்றத்துடன் அவன் தந்தை “ஆம், வேதம் விதைத்து இரந்து வரும் செல்வத்தை எல்லாம் என்னிடம் இரந்து வருபவருக்கு அளிக்கிறேன். இறுதியாக கை நீட்டி மிருத்யூ வந்து நிற்கிறாள்” என்று சொன்னார். உக்ரர் அத்தருணத்தை பற்றிக்கொண்டு “ஒரு மைந்தனை அதர்வ வேதம் என்னும் அன்னைக்கு அளியுங்கள். இப்புவி உங்கள் பிற மைந்தரை கைநீட்டி ஏந்திக்கொள்வாள். இக்குடி தழைக்கும்” என்றார். தந்தை கசப்புடன் தலையசைத்தார்.
ஆனால் தந்தை ஒவ்வொருநாளும் உறுதி குலைந்து வருவதை அவன் கண்டான். முதல்முறை சுப்ரபரிடம் சுட்டுவிரல் காட்டி “இனி இப்பேச்சை என்னிடம் எடுக்க வேண்டியதில்லை. நான் உங்கள் இரை அல்ல. நன்று. கிளம்புக, அந்தணரே!” என்றார். மறுமுறை “இனி ஒரு சொல்லும் எழவேண்டியதில்லை” என்று தாழ்ந்த குரலில் சொல்லி கைகூப்பி எழுந்தகன்றவர் மீண்டும் அவர்கள் வந்தபோது சோர்ந்த குரலில் “எளியவனின் துயரை வைத்து ஆடவேண்டியதில்லை, அந்தணரே. என்னால் இயலாது” என்று தழுதழுத்த குரலில் கூறினார்.
அன்றுதான் அவன் இளையோன் ஜலஜன் விண்ஏகி பதினாறு நாட்கள் கடந்திருந்தன. பதினாறாவது அன்னமூட்டுக்கு பிடி அரிசி இன்றி பகலெல்லாம் இல்லங்கள்தோறும் சென்று இரந்து வெறும் கையுடன் மீண்டிருந்தார். அன்னை “அன்னமின்றி இறந்தவன். அன்னம் என கைச்சிமிழ் அளவாவது அளிக்காவிட்டால்…” என்றாள். மீண்டும் சென்று திரும்பிவரும் வழியில் காடோரம் கதிர்கொண்டு நின்றிருந்த புல்கதிரின் மணிகளை உருவி உள்ளங்கையில் குவித்து கொண்டுவந்து அன்னையிடம் கொடுத்தார். “அன்னம் அளிக்கவேண்டும் என்பதே நெறி. வேதம் தகைந்த அந்தணனுக்கு மைந்தன் எனப் பிறந்தாலும் அவனுக்கு இப்புவி அளிப்பது இத்தனை மணிகள்தான் என்றால் அவ்வாறே ஆகுக!” என்றார். அந்நெல்லை தன் உள்ளங்கையில் வாங்கி அதையே நோக்கிக்கொண்டிருந்தாள் அன்னை. இன்னொரு கையால் அதை கசக்கி உமி நீக்கி ஒரு சிறு கரண்டியில் நீரெடுத்து அதை ஊறவைத்து அனல்காட்டி வேகவைத்து மரச்செப்பில் அளித்தாள். சிறு குருவிக்கும் போதாத அந்த அன்னத்தை அன்று மூச்சுலகில் அமைந்து தன் இறுதி அன்னமென இளையோன் பெற்றுக்கொண்டான்.
இலைகள் அனைத்தும் மழைத்துளி உதிர்த்துக்கொண்டிருக்க, மெய்ப்புகொண்டு சிலிர்த்துக்கொண்டிருந்த நதியின் கரையில், பெயர்ந்து பாதி மூழ்கிக்கிடந்த கல்படியில் அமர்ந்து தந்தை நீரள்ளி ஜலஜனுக்கு நீத்தார்கடன் முடித்தார். அவன் ஜலஜனை எண்ணியபடி நின்றிருந்தான். அவனுக்கு தவழும் அகவையே ஆகியிருந்தது. கைக்கு எட்டிய அனைத்தையும் எடுத்து வாயிலிட்டபடி அவன் இல்லமெங்கும் அலைந்து திரிந்தான். புவியில் அவன் கற்றுக்கொண்ட சொல் அன்னம் மட்டுமே. ‘ன்ன ன்ன’ என வாய்வழியச் சொன்னபடி அவன் நிலையற்றிருந்தான். எதையாவது கையிலெடுக்கையில் முன்வாயின் ஒற்றைப் பல் தெரிய “ன்ன!” என சிரித்து மகிழ்ந்தான்.
தலைக்குமேல் கைகூப்பி எழுந்து கரை நோக்கி வந்தபோது அவர் நெஞ்சில் நீர் வழிந்து கொண்டிருந்தது. விழிநீரே அவ்வண்ணம் பெருகிப் பொழிவதாக அவன் எண்ணினான். அவனிடம் ‘செல்வோம்’ என்று கைகாட்டி முன்னால் நடந்தார். பன்னிருஅடி முன்னால் வைத்தபின் எண்ணியிராக் கணத்தில் தலைக்குமேல் கைகூப்பி திரும்பி “எந்தையே, எளியோனை பொறுத்தருள்க!” என்று பெருங்குரலெடுத்து கூவினார். அவன் முன்னால் சென்று தந்தையின் ஆடையை பற்றிக்கொண்டான். கூப்பிய கையை நெஞ்சோடமைத்து தலைகுனிந்து தந்தை குமுறி அழுதார். தாடியின் நீர்த்துளிகள் நெஞ்சில் உதிர்ந்தன. “தந்தையே தந்தையே” என்று அவன் அவரை உலுக்கினான்.
அவர் தன்னை அடக்கி முகத்தை இருமுறை கையால் வழித்து நீரை உதறிய பின் “உம்” என்ற ஒலியெழுப்பி குடில் நோக்கி நடந்தார். குடிலுக்குள் அன்னை அடுமனையில் ஏதோ கிழங்கை சுட்டுக்கொண்டிருந்தாள். அவளைச் சூழ்ந்து எஞ்சிய மைந்தர்கள் அமர்ந்திருந்தனர். அவர்களின் விழிகள் அடுப்பில் வெந்துகொண்டிருந்த கசப்புக் கிழங்கிலேயே நிலைகொண்டிருந்தன. தந்தை “உம்” என முனகினார். அன்னை வறண்ட விழிகளை தூக்கி நோக்கிவிட்டு தலைதிருப்பிக்கொண்டாள்.
ஏழு நாள் கழித்து மீண்டும் அதர்வ வைதிகர் வந்தபோது தந்தை முறைமைச் சொல் உரைத்து வரவேற்கவில்லை. வேள்வி முடிந்த கொட்டகையில் மரத்தாலான மணை மீது கால் மடித்து தலைகுனிந்து அமர்ந்திருந்தார். அவர்கள் அவர் முன் அமர்ந்து முகமன் உரைத்தனர். “இது இறுதிச்சொல், அந்தணரே. இனியொருமுறை இவ்வண்ணம் கோரமாட்டோம். இக்கனி அதர்வத்திற்குரியது என்று எங்கள் நூல் உரைத்ததனால் வந்தோம். இதன்பொருட்டு எங்கள் ஆசிரியர் அங்கே காட்டு விளிம்பில் காத்திருக்கிறார். முடிவுச்சொல் தாங்கள் உரைக்கவேண்டும்” என்றார் உக்ரர்.
நெடுநேரம் தலைகுனிந்து அமர்ந்திருந்த தந்தை பெருமூச்சுடன் கலைந்து விழிதூக்கி “நான் அவன் அன்னையிடம் ஒரு சொல் கேட்கிறேன்” என்றார். “ஆம், கேட்டு உரையுங்கள்” என்று உக்ரர் சொன்னார். தந்தை எழுந்து அவனிடம் ‘வருக!’ என்று கைகாட்டிவிட்டு குடிலுக்குள் சென்றார். அவர் வருகையைக் கேட்டு அன்னை எழுந்து தலைகுனிந்து நின்றாள். அவர் “ஏன் வந்திருக்கிறேன் என்று அறிவாய். இதுவே தெய்வங்களும் மூதாதையரும் வகுத்த வழி என்றிருக்கலாம்” என்றார். அவள் ஒன்றும் சொல்லவில்லை. “நதிபெருகி நிலம் நீர்மூடிக் கிடக்கிறது. மீண்டெழ பல மாதங்களாகும் என்கிறார்கள். இம்மைந்தரைக் காக்க நம்மால் இயலாது போகலாம்” என்றார். அவள் அதற்கும் எதிர்வினை காட்டவில்லை.
அவர் தனக்கே என “ஒவ்வொரு ஆண்டும் இவன் பெறும் செல்வத்தை வணிகர்களினூடாக இங்கு நம்மிடம் சேர்ப்பார்கள் என்கிறார்கள். இன்று அதர்வர்களுக்கு கிடைக்கும் செல்வம் எவருக்கும் வருவதில்லை. நாமும் நம் குடியும் மீள்வோம். இங்கு நம் முன்னோர் நெறிப்படி ஒரு வேதசாலை அமைக்க முடியும். நம் மைந்தரை மகாவைதிகர்களாக ஆக்கமுடியும். யாரறிவார், அவர்கள் ஒருநாள் அரசர்களின் அவைகளில் தலைமை வைதிகர்களாக அமர்ந்திருக்கவும் கூடும்” என்றார். அன்னை அங்கிருப்பதாகவே தெரியவில்லை.
தந்தை மெல்ல உடல்திருப்பினார். அவ்வசைவில் அவள் விழித்துக்கொண்டு அவனை நோக்கி அருகே வா என்று கைகாட்டினாள். அவன் அருகே சென்றதும் “நீ என்ன நினைக்கிறாய்?” என்றாள். “அன்னையே, என் வழி அது என்றே எண்ணுகின்றேன். என் பொறுப்பு அது” என்றான். “இத்தனை நாள் பிந்தாமலிருந்தால் என் இளையோர் நால்வரேனும் எஞ்சியிருப்பார்கள் என்றே வருந்துகிறேன்.” அவள் அவன் தலைமேல் கைவைத்து “சென்று வருக! நலம் திகழ்க!” என்று வாழ்த்தினாள். அன்னையின் கால்தொட்டு வணங்கி விடைகொண்டான்.
வெளியே செல்கையில் தந்தையிடம் “நீங்கள் எவ்வகையிலும் துயருறக்கூடாது தந்தையே, என் கடன் இது என்று உணர்கிறேன். என் சிறப்பும் அங்குதான் அமையும். என் பொருட்டு எண்ணி சோர்வுற வேண்டியதில்லை. என் இளையோர் வேதச் சிறப்பும் வாழ்க்கையில் வெற்றியும் இறுதி நிறைவும் பெறவேண்டும். அதர்வ அன்னை துணையிருக்கட்டும்” என்றான். தந்தை “அதர்வ வேதத்திற்கு தன்னைக் கொடுப்பதென்பதற்கு மெய்யாக என்ன பொருள் என அறிவாயா?” என்றார். “ஆம்” என்றான். “அது திரும்பிவர முடியாத திசை” என்றார் தந்தை. “ஆம், முன்னரே அதை உசாவி அறிந்தேன்” என்று அவன் சொன்னான். பெருமூச்சுடன் “நன்று!” என்ற தந்தை வெளியே சென்று அங்கு நின்றிருந்த உக்ரரிடமும் சுப்ரபரிடமும் “இவனை அளிக்கிறேன். அன்னை வாழ்த்துரைத்துவிட்டாள்” என்றார். “அதர்வம் பெருங்கருணை கொண்டது அந்தணரே, பெருஞ்சினம் அதன் மறுபக்கம் மட்டுமே” என்றார் உக்ரர். “உங்கள் இல்லம் செல்வத்தால் நிறையும்” என்றார் சுப்ரபர்.
“இளையோர் உன்னிடம் விடைபெற்றுக்கொள்ளட்டும், மைந்தா” என்றார் தந்தை. அவனுடைய ஏழு இளையோரும் கமுகுப்பாளைகளை ஆடையாக அணிந்து சணலால் ஆன முப்புரி நூலுடன் குடிலுக்கு வெளியே ஒருவரோடொருவர் உடல் ஒட்டி விழிகள் ஏந்தி நின்றிருந்தனர். அவன் அருகே சென்று “இளையோரே, உங்கள் ஒவ்வொருவரையும் அறிவும் செல்வமும் புகழும் தொடர்ந்து வரட்டும். உங்களை அணுகும் ஒவ்வொரு அந்தணனும் உங்களுக்கு வேதத்தை அளிக்கட்டும். ஒவ்வொரு முனிவரும் ஞானத்தை அளிக்கட்டும். ஒவ்வொரு அரசரும் பொன்னை அளிக்கட்டும். நான் உங்கள் அனைவருக்கும் அன்னமென்றானேன். அன்னமே முதல் மெய்மை என்றுணர்க!” என்றான்.
இளையோரில் மூத்தவனாகிய குசுமன் கண்ணீர் வழிய விழிகளை அழுத்தியபடி தலைவணங்கி நின்றான். தந்தை “இளையோரே, உங்கள் மூத்தவன் காலடியைத் தொட்டு வணங்கி நற்சொல் பெறுக!” என்றார். அவர்களில் இளையோனாகிய சுகுமாரன் அவன் கால்தொட்டு வணங்கினான். அவன் தலைமேல் கைவைத்து அவன் வாழ்த்தினான். ஒவ்வொருவராக வணங்கி வாழ்த்துபெற்றதும் அவன் வீட்டிலிருந்து வெளியிலிறங்கி ஏழு அடி வைத்து திரும்பிநோக்கி தலைக்குமேல் கைகூப்பி கும்பிட்டான். முன்னரே சென்று வழியில் காத்து நின்றிருந்த வைதிகர்கள் அவனை அருகணையச் சொல்லி கைகாட்டினர். அவர்களுடன் அவன் சென்று கலந்து திரும்பி நோக்காமல் இல்லம்விட்டு நீங்கினான்.
முறைமைகளின்படி அவன் தந்தை வாழையிலை விரித்து அருகம்புல் சூடிய எள்ளன்னம் வைத்து மலர்படைத்து நீரூற்றி அவனுக்கு இறுதிக்கடன் முடித்து அவ்விலையுடன் அன்னத்தை இடம் வீசி இல்லக்கதவைப் பூட்டி அக்குடியிலிருந்து அவனை இறந்தவனாக ஆக்குவாரென்று அவன் அறிந்திருந்தான். அந்நிலமும் இல்லமும் அக்குடியும் அன்னையும் தந்தையும் இளையோரும் இனி ஒருபோதும் தனக்கில்லையென்று எண்ணியபோது உளம் கொந்தளித்தெழுந்து உடலை அதிர வைத்தது. பின் அனைத்து உள்ளுறுப்புகளில் இருந்தும் குருதி சொட்டி வழிந்து வெறுமைகொள்ள முன்பொருபோதும் அவனறியாத விடுதலை உணர்வொன்றையும் அடைந்தான்.
ஹிரண்யகர்ப்பத்தின் முதன்மை ஆசிரியர் அமூர்த்தர் அவனுக்கு அதர்வத்தில் உறையும் இமாதேவியை விருப்பத் தெய்வமாக அளித்து அவளுக்குரிய நுண்சொல்லை அளித்தார். அவனுக்கு கையில் புல்லாழி கட்டி முதல் வேதச் சொல்லெடுத்து அளித்து “அதர்வம் முற்றிலும் பிறிதொன்று. இது மண்ணிலுள்ள அனைத்து விலங்குகளிலும் அருவியிலும் அலைகளிலும் ஒலிக்கும் நாதத்தை தன் ஓசையெனக் கொண்டது. இது உன் நாவில் எழ வேண்டுமென்றால் ஒவ்வொரு சொல்லாக பிற வேதங்களை நீ மறந்தாக வேண்டும். அவற்றை மறப்பதற்கு எளிய வழி இதை கருத்தூன்றி கற்பதே ஆகும். தானென்றாகி பிறிதொன்றிலாது நின்றிருப்பவையே தெய்வங்கள். அதர்வை அன்னை உன்னை ஆட்கொள்க!” என்றார்.
“நாகத்தின் நச்சுப்பல் என இது அந்தணரில் அமர்ந்திருக்க வேண்டும். அவனை அப்பல் ஒருபோதும் தீண்டிவிடக்கூடாது” என்றார் அமூர்த்தர். “ஆம்” என்று சொல்லி அவன் தலைவணங்கினான். வேதம் பயின்றபடியே அக்குழுவுடன் அவன் கிழக்கே காமரூபம் முதல் தெற்கே வேசரத்தின் எல்லைவரை பயணம் செய்தான். ஏழு மகாபூதவேள்விகளை அக்குழு இயற்றியது. பொன்னில் அவன் பெற்ற பங்கு வணிகர்களினூடாக தந்தைக்கு சென்று சேர்ந்தது. அங்கே அவர் பதினெட்டு துணைக்குடில்களும் நடுவே இரண்டடுக்கு மையக்கட்டடமும் கொண்ட குருநிலை ஒன்றை அமைத்திருப்பதாகவும் நூற்றெட்டு மாணவர்களுக்கு ஆசிரியர் என அமர்ந்திருப்பதாகவும் அவன் அறிந்தான்.
அஸ்தினபுரியின் பெருவேள்வி நிகழவிருப்பதை அவன் ஆசிரியர் அமூர்த்தர் சொல்லி அறிந்தான். பொன் பெருகும் வாய்ப்பு அது என்று அவர் எண்ணினார். “நாம் வேதம் விதைத்து பொன்னை அறுவடை செய்பவர்கள். இது நூறுமேனி பெருகும் வயல்” என்று அவர் அவனிடம் சொன்னார். பெருவேள்விகளின் பொருட்டு அவந்தியினூடாக விதர்ப்பம் வந்து மாளவத்தை அடைந்து பாலையினூடாக பயணம் செய்து அவர்கள் கூர்ஜரத்தை வந்தடைந்திருந்தனர். “கிளம்புக அந்தணர்களே, பிறிதொருமுறை இது எப்போது நிகழுமென நாம் அறியோம். இம்முறை தெய்வங்கள் நமக்கு வாய்ப்பளித்துள்ளன” என்றார் ஆசிரியர்.
புருஷமேத வேள்வி என்றால் என்ன என்று அவனுக்கு தெரிந்திருக்கவில்லை. அஸ்வமேதம், அஜமேதம், கோமேதம் போல அதுவும் ஒரு தொன்மையான அதர்வ வேள்வி என்று மட்டுமே அறிந்திருந்தான். அஸ்தினபுரியை அவர்கள் சென்றடைந்தபோது வரவேற்க கோட்டைமுகப்பிலேயே சகுனியின் தலைமையில் மூன்று சிற்றரசர்கள் காத்து நின்றிருந்தனர். “வருக அந்தணர்களே, இன்று பாரதவர்ஷத்தில் இவ்வேள்வியை தொல்முறைப்படி செய்துமுடிக்க தங்களால் இயலும் என அறிந்தேன். உங்கள் வேள்வியால் அஸ்தினபுரி வெற்றியும் புகழும் கொள்க! இதன் கொடிவழிகள் சிறப்புறுக!” என சகுனி வாழ்த்தினார்.
அவருடன் தேரில் சென்றிறங்கியபோது அரண்மனை முகப்பில் கணிகர் வந்திருந்தார். “அனைத்தும் முறைப்படி நிகழட்டும். ஒன்றும் இங்கு குறைவுபடாது” என்றார். அமூர்த்தர் “மகாபூத வேள்விகள் பல உள்ளன. அஜமேதமும் கோமேதமும்கூட அவ்வப்போது நிகழ்த்தப்படுகின்றன. அவையும் நிறைந்த பயனுள்ளவையே” என்றார். கணிகர் “புருஷமேதத்தின் பொருட்டே நீங்கள் வந்துள்ளீர்கள். அவையில் எடுக்கப்பட்ட முடிவு இது” என்றார். “ஆம், ஆனால் அனைத்து விளைவுகளையும் அறிந்தே இறுதிநிலை எடுக்கவேண்டும். அரசரிடம் நாங்களே அதை விளக்கிச் சொல்கிறோம்” என்றார்.
துரியோதனன் வீற்றிருந்த பேரவையில் அமூர்த்தர் எழுந்து வணங்கி புருஷமேத வேள்வியை விரித்துரைத்தார். “அரசே, ஒரு பிழையும் இன்றி இயற்றப்படவேண்டியது இது. வேதம் ஒரு சொல்கூட பிழைபடலாகாது. அவி ஒரு துளி குறையலாகாது. கொடை ஒரு முறைகூட மறுக்கப்படக்கூடாது. இவ்வேள்வி ஒரு சொல்லாலும் எதிர்க்கப்படக்கூடாது” என்றார். “தொடங்கியபின் குறைவுறும் புருஷமேத வேள்வி குலம் முற்றழிக்கும் என உணர்க! அவியென்றளிக்கும் ஆத்மாவை தெய்வங்கள் ஏற்றுக்கொள்கையில் நாம் வேண்டியதை அடைகிறோம். அவியை எவ்வகையிலேனும் தெய்வங்கள் மறுக்குமென்றால் நாம் அந்தணனை கொலைசெய்த பெரும்பழியை அடைவோம். தெய்வங்களும் தப்பமுடியாதது அது என்று தெளிக!”
அவையினர் நடுக்குற்றவர்கள் என அமர்ந்திருந்தனர். துரியோதனன் அவர் சொல்லி முடித்ததும் எழுந்து “சொல்லி மாற்றும் வழக்கம் எனக்கில்லை அந்தணரே, புருஷமேதம் நிகழ்க!” என்றான். அவன் ஒருகணமும் எண்ணாது உரைத்தது அமூர்த்தரை சற்று சீற்றம் கொள்ளச் செய்தது. “புருஷமேதம் போன்ற கொடுவேள்விகளின் இடர் என்னவென்றால் நாம் முற்றும் தகைந்தவர்களாக இருந்தாலும் நமைச் சூழ்ந்தவர், நம் எதிரிகள், நாமறியாதபடி நம்முடன் ஊழால் பிணைக்கப்பட்டோர் எவர் செய்த பிழைக்கும் நாம் பொறுப்பேற்க வேண்டியிருக்கும். நம் கொடிவழியினரும் குடியினரும் பழிகொள்ள வேண்டியிருக்கும்” என்றார். “மறுசொல் இல்லை, வேள்வி நிகழ்க!” என்று துரியோதனன் சொன்னான். அவர் அவன் விழிகளை நோக்கியதும் சொல்நின்று “அவ்வாறே ஆகுக!” என்றார்.
அவையில் இறுதிமுடிவு எடுக்கப்பட்டபின் மூத்த வைதிகர்கள் அனைவரும் முகமாற்றம் அடைந்திருப்பதை திரும்பிச்செல்லும்போதுதான் அவிரதன் உணர்ந்தான். வழக்கமாக அவை கலைந்து செல்லும்போது ஒருவருக்கொருவர் அவை நிகழ்வுகளைப் பேசி தாங்கள் புரிந்துகொண்டதைக் கூறி அதனூடாக புரிந்துகொள்ளாததைப் பற்றி உசாவி அறிந்துகொள்வது அவர்களின் முறை. தங்களுக்கு ஏதாவது ஒன்று புரியவில்லை என்பதை வெளிப்படுத்துவது பொதுவாக அந்தணரின் இயல்பல்ல என்பதை அவன் அறிந்திருந்தான். ஒரு கருத்தைச் சொல்லி எதிர்தரப்பு அதற்கு அளிக்கும் மறுமொழியினூடாக தன் புரிதல் இடைவெளிகளை நிரப்பிக்கொள்வார்கள். தங்களிடம் சொல்லும் எதையும் முன்னரே அறிந்திருப்பதாகவோ அல்லது ஏற்றுக்கொள்ள மறுப்பதாகவோ கூறுவார்கள். ஆகவே வைதிகர்களுக்கான குடில்கள் அமைந்திருக்கும் வழியெங்கும் பறவைக்கூட்டம்போல ஓசை எழுப்பியபடியே செல்வது அவர்களின் வழக்கம்.
அன்று எவரும் எதுவும் பேசாமல் நடப்பதைக் கண்டு அவன் சற்று நடைதளர்ந்து பின்னடைந்து இருபுறமும் மாளிகைகளையும் வணிகர்களையும் பெண்களையும் நோக்கியபடி வந்துகொண்டிருந்த சற்று மூத்த வைதிகனாகிய பௌர்வனிடம் “என்ன ஆயிற்று? ஏன் எவரும் சொல்லாடவில்லை?” என்றான். பௌர்வன் கலிங்கத்தில் அவர்களுடன் சேர்ந்துகொண்டவன். அக்குழுவில் வாய்மொழியில் அவனுடையதே அவிரதனுக்கு அணுக்கமானதாக இருந்தது. பௌர்வன் “புருஷமேதம் மெய்யாகவே நிகழக்கூடும் என்று எவரும் எதிர்பார்க்கவில்லை” என்றான். “ஏன்?” என்று அவன் கேட்டான். “ஆயிரம் ஆண்டுகளில் மூன்று முறையே அது நிகழ்ந்துள்ளது. பிராமணங்களில் அதற்கான குறிப்புகளும் பெரிதாக இல்லை. மெய்யுரைப்பதென்றால் இன்றுள்ள எவரும் எதையும் அறிந்தது இல்லை” என்றான்.
“அவ்வளவு அரிதா என்ன?” என்று அவன் கேட்டான். “ஏன், வைதிகனை வேள்வித்தீயில் அவியாக்குவதை இதற்குமுன் பலமுறை நீ அறிந்திருக்கிறாயா?” என்றான். “வைதிகனையா?” என்று கேட்டு அவன் பின்னால் நின்றுவிட்டான். இரண்டடி வைத்து முன்னால் சென்ற பௌர்வன் திரும்பிப்பார்த்து “நிற்காதே” என்றான். அவன் ஓடி அருகணைந்து “என்ன சொன்னீர்கள்? வைதிகனையா?” என்றான். “ஆம்” என்றான் பௌர்வன். “அதர்வம் ஓதி தகைந்த வைதிகனையேதான்.” “ஏன்?” என்றான் அவிரதன். “எதன் பொருட்டு அஸ்வம் அவியாக்கப்படுகிறது? ஆவும் ஆடும் அவி என்றாகிறது? எரிகொடை அளிக்கும் உயிர்கள் தூயவையாக இருக்கவேண்டும். தேவர்களுக்கு உகந்தவையாக இருக்கவேண்டும்.” அவிரதன் “ஆம்” என்றான்.
“புனிதமானவற்றில் புனிதமானது அந்தணன் உடல்தான். வேதத்தால் தூய்மை செய்யப்பட்டது அது” என்றான் பௌர்வன். அவன் தன் நெஞ்ச ஓசையைக் கேட்டு பின்னர் இருமுறை எச்சில் விழுங்கி வறண்ட தொண்டையை ஈரப்படுத்தியபின் “எவரை அவியிடப்போகிறார்கள்?” என்றான். “அதை அந்தணர்கள் தங்களுக்குள் கூடி முடிவெடுப்பார்கள். அதற்கென்று தொன்மையான வழிமுறைகள் உள்ளன” என்றான் பௌர்வன். அவன் நெஞ்சுத்துடிப்பை கேட்டபடி உடன்நடந்தான். அதற்குள் நகரெங்கும் அவர்கள் ஏன் வந்திருக்கிறார்கள் என்னும் செய்தி சென்று சேர்ந்துவிட்டிருந்தது. விழிகள் அவர்களைத் தொட்டதும் எரிதொட்ட சிற்றுயிர்கள் என திகைத்து சிதறின.
மீண்டும் சொல்லெடுக்க அவனுக்கு பொழுதாகியது. அவர்கள் அஸ்தினபுரியின் வடக்கெல்லையைக் கடந்து புராணகங்கைக்குள் சென்றனர். “அவ்வாறு முடிவெடுக்கப்பட்டவன் அதை ஏற்றாக வேண்டும் இல்லையா?” என்றான் அவிரதன். “இல்லை, அவன் மறுக்கலாம். ஆனால் அந்தணர் மறுப்பதில்லை. ஏனென்றால் அந்தணன் என்பவன் எந்நிலையிலும் தன் நலனையோ மகிழ்வையோ இருப்பையோ ஒரு பொருட்டென கொள்ளலாகாது. தங்கள் மூதாதையர் பொருட்டோ தெய்வங்கள் பொருட்டோ குடி பொருட்டோ கொடிவழிகளின் பொருட்டோ நெறிகளின் பிறழ்வு நிகழ்த்தக்கூடாது” என்றான் பௌர்வன்.
“எரியில் எழும் பொறியே அந்தணர் என்கின்றன தொல்நூல்கள். வேதமே எரி” என்றான் பௌர்வன் மீண்டும். “ஆம்” என்று அவன் தலையசைத்தான். அதன்பின் குடில் வரைக்கும் அவனால் சொல்லாட முடியவில்லை. உள்ளத்தில் ஒருங்கிணைந்த சொற்களும் எழவில்லை. வெளிக்காட்சிகள் சென்று முட்டி முட்டி சித்தம் திரும்பி வந்தது. ஒழுங்கின்மை கொண்டு அகம் பரந்தமையால் அனைத்து அடுக்குகளும் கலைய ஒருகணத்தில் அனைத்தும் பொய் என்றும் வெறும் சொல்லென்றும் தோன்றியது. எரியில் அந்தணரை அவியாக்குவதா? அப்படியொன்று நிகழுமா என்ன? அதை பிற அந்தணரும் குடிகளும் எப்படி ஏற்பார்கள்? அது இயல்வதா என்ன?
எத்தனை சித்தம் குவித்து எண்ணம் செலுத்தினாலும் அவனால் அக்காட்சியை உளம்கொள்ள இயலவில்லை. ஓர் அந்தணன் இறங்கி எரிபுகும் அளவுக்கு பெரிய வேள்விக்குளம் அமைக்கப்படுமா? முதிய அந்தணர்கள் எவரையேனும் எரியூட்டுவார்கள் போலும் என்று எண்ணினான். அவன் அகக்கண் முன் அக்குருநிலையின் சில முகங்கள் மின்னிச் செல்ல உடல் விதிர்த்தது. மறுகணம் ஓர் எண்ணம் எழுந்தது. மீளமீளச் சுழன்றாலும்கூட தான் அவ்வண்ணம் எரிபுகக்கூடும் என்ற ஐயமே ஏன் எழவில்லை? அவன் எரியிறங்குவதுபோல கற்பனை செய்தான். அம்முயற்சியையே உளம்கொள்ள முடியவில்லை.
தன் குடிலில் அந்திச் சடங்குகளுக்குப்பின் தர்ப்பைப் பாய்மேல் முருக்கு மரக்கட்டை தலையணையில் சாய்ந்து கண்களை மூடியபோது பௌர்வன் சொன்ன சொற்கள் அனைத்தும் மீண்டும் நிகழ்வனபோல் நினைவில் எழுந்தன. அப்போது அறியாத பௌர்வனின் முகஉணர்வுகள் அண்மையிலெனத் தெரிந்தன. அவன் கிளர்ந்திருக்கிறான் என்று தோன்றியது. அச்சமல்லவா வேண்டியது? கிளர்ந்திருக்கிறான் என்றால் அவன் அதை அஞ்சவில்லையா? அவனும் தான் எரிபுகப்போவதில்லை என்று உறுதிகொண்டிருக்கிறான்போலும். அவ்வண்ணமென்றால் நானும் அக்கிளர்ச்சியைத்தான் அளைந்துகொண்டிருக்கிறேனா?
மெல்ல புரண்டு கைநீட்டி அருகே படுத்திருந்த பௌர்வனைத் தொட்டு “மூத்தவரே” என்றான். அவன் “சொல்” என்றான். அவனும் துயிலாதிருப்பதை எப்படி உணர்ந்தோமென வியந்தபடி “தாங்கள் அஞ்சவில்லையா?” என்றான். “ஏன்?” என்று அவன் கேட்டான். “எரிபுக நேருமென்றால்?” பௌர்வன் “புகவேண்டியதுதான். போர் எழுமென்றால் படைவீரர்கள் நிரை நிரையாகச் சென்று மடிவார்கள். எரியூட்டலில் குடிகள் அழியும். பின்னர் பஞ்சத்தில் குலங்களும் அழியும். ஓர் அந்தணன் இறப்பதிலென்ன?” என்றான். அவிரதன் “ஆனால்…” என்றபின் “ஆம், உண்மை” என்றான்.
“நாம் அமைத்த அஸ்வமேதத்தின் பொருட்டும் கோமேதத்தின் பொருட்டும் பல்லாயிரம் படைவீரர்கள் இதுவரை போர்களில் மடிந்திருக்கிறார்கள். அவர்களின் குருதியைத்தான் ராஜசூயத்தில் பொன் என பெற்றுக்கொண்டிருக்கிறோம். ஒரு பலியினூடாக நாம் அதற்கு நிகர் செய்வோமென்று இருக்கட்டுமே” என்றான் பௌர்வன். “ஆம்” என்றான் அவிரதன். ஆனால் நீங்கள் உங்கள் இறப்பென அதை இன்னமும் எண்ணவில்லை பௌர்வரே என உள்ளூர சொல்லிக்கொண்டான். இருவரும் சொல்லின்றி குடில் கூரையில் அசைந்த கங்கை நீர் ஒளியை பார்த்துக்கொண்டிருந்தனர்.
மூன்றாம்நாள் காலையில் முதலொளி எழுந்த பின்னர் அமூர்த்தரின் ஆணைப்படி அங்கு வந்திருந்த அதர்வ வைதிகர் அனைவரும் கங்கைக்கரையின் மணல்மேட்டில் கூடினர். ஒவ்வொரு மணற்பருவும் தெரியும்படி விழிநோக்கு தெளிமைகொள்ளும் இளவெயில் வெண்மணல்மேல் பரவியிருந்தது. அப்பால் கங்கை நீலநீர்ப்பெருக்காக வளைந்து சென்றுகொண்டிருந்தது. மூத்தோர் வழிகாட்ட அதர்வம் நிறைவுற்ற வேதிகர் நூற்றெண்மரும் ஒன்றன்பின் ஒன்றென அமைந்த வளையங்களாக முழங்கால் மடித்து முன்னிருப்பவரின் முதுகை முட்டும்படி நெருங்கி அமர்ந்தனர். “இடைவெளி விழலாகாது, மணல் தெரியலாகாது” என உக்ரர் சொன்னார்.
அனைவரும் அமர்ந்ததும் முன்னிருந்து பின்னும் திரும்பவுமென எண்ணி அறுதிசெய்தபின் “அமைக!” என அவர் ஆணையிட அத்திரள் ஓசையற்று நோக்கி அமர்ந்திருந்தது. உக்ரரும் அமர்ந்துகொள்ள வளையங்களின் நடுவே அமைந்த சிறுவட்டத்தில் அமூர்த்தர் நின்றார். அவர் அருகே பெரிய கூடையில் அரிசிப் பொரி வைக்கப்பட்டிருந்தது. “அதர்வ அன்னை நம்மிலொருவரை தேர்ந்தெடுக்கட்டும். நம் அனைவர் பொருட்டும் அவர் அன்னைக்கு அன்னமாகட்டும். தேவர்கள் அவிகொண்டு நிறைக! நம்மைப் புரப்போர்க்கு வெற்றியும் புகழும் விளைக! ஆம், அவ்வாறே ஆகுக!” என்று அமூர்த்தர் சொன்னார். கூடியிருந்தவர்கள் அனைவரும் தங்கள் கைகளில் வெண்ணிற ஆடைகளை விரித்து நீட்டியபடி விழிகளை மூடி வேதமோதத் தொடங்கினர்.
வேதமெழுந்த நாவுடன் அமூர்த்தர் பொன்னாலான ஒரு பொரிவடிவ மணியை எடுத்து அக்கூடையின் உள்ளே இட்டார். பின்னர் அதை இன்னொரு கூடைக்குள் கொட்டி மீண்டும் முதற்கூடைக்குள் கொட்டினார். ஏழுமுறை அதைக் குலுக்கி ஆற்றியபின் தன் கையில் எடுத்துக்கொண்டு நிமிர்ந்தார். வேதக்குரல் எழுப்பியபடி அந்தப் பொரிக் கூடையை தூக்கிச் சுழற்றி அவர்கள் மேல் வீசினார். மழையென பெய்த பொரிப்பருக்கள் அவர்களின் தலைமேலும் தோள்மேலும் ஏந்திய துணியிலும் தொடையிடுக்கிலுமாக விழுந்தன. “ஆம், அவ்வாறே ஆகுக!” என்றபடி அமூர்த்தர் கைகூப்பினார்.
அவர்கள் ஒவ்வொருவரையாக நோக்கியபடி உக்ரர் சுற்றிவந்தார். அந்தப் பொன்மணி எவர்மேல் விழுந்திருக்கிறதோ அவரே புருஷமேதத்திற்கான பலிபுருஷன் என அவிரதன் அறிந்திருந்தான். தன் மடியிலிருந்த பொரியைத்தான் அவன் முதலில் பார்த்தான். அதில் பொன்மணி இல்லை என்று தெரிந்ததும் நெஞ்சின் ஓசை மெல்ல அடங்க வியர்த்த உடல்மேல் குளிர்காற்றென ஓர் ஆறுதல் உருவானது. பெருமூச்சுடன் தோள்தொய்ந்து மெல்ல உள்ளமும் ஓய்ந்தான். அதன் பின்னர்தான் அது யார் என ஆவலெழுந்தது. அங்கிருந்த அனைவர் முகமும் அவன் அறிந்திருந்ததுதான். ஒவ்வொரு முகமாக தொட்டுத்தொட்டுச் சென்றுகொண்டிருந்தது அவன் சித்தம்.
ஓசை மாறுபாடு ஒன்றை அவன் செவி உணர்ந்தது. மெல்லிய சொல் ஒன்று எவரிடமோ எழுந்தது. மூச்சொலிகள். அமூர்த்தர் அவனை நோக்கிக்கொண்டிருந்தார். அவன் அவ்விழிகளை நோக்கியபின் மெல்லிய உளக்குலைவுடன் விழிவிலக்க தன்னருகே உக்ரர் நின்றிருப்பதை உணர்ந்தான். நிமிர்ந்து அவர் விழிகளை நோக்கியபோதே அவனுக்கு புரிந்துவிட்டது. நெஞ்சு குமுறி எழுந்து அறைபட செவிகளில் அவ்வோசை மட்டுமே எழுந்தது. கண்களின் நரம்புகளில் செவிமடல்களில் வெம்மைகொண்ட குருதியை உணர்ந்தான். உக்ரர் “உத்தமரே, உங்கள் மீது” என்றார். குனிந்து அவன் குடுமியிலிருந்து அந்தப் பொன்மணியை எடுத்து அவனிடம் காட்டினார்.