அன்புள்ள ஜெ
ஆர்கைவ் தளம் (www.archive.org) TRAI உத்தரவின் படி பல இடங்களில் முடக்கப்பட்டிருக்கிறது. சென்ற ஆண்டு முடக்கப்பட்டு இணைய செயல்பாட்டாளர்களின் முயற்சியால் தடை நீக்கப்பட்டது. இப்போது மீண்டும் ரகசியமாக தடை செய்திருக்கிறார்கள்.
இது மிகவும் அபாயகரமானது. ஒரு ஜனநாயக அரசுக்கு இதைச் செய்ய, அதுவும் திருட்டுத்தனமாக செய்ய எந்த அனுமதியும் இல்லை. தீவிரவாதம் பொதுநலன் என்று எந்த காரணம் சொன்னாலும் இது ஒரு பிற்போக்குதனமே. சீனா வடகொரியா போன்ற சர்வாதிகார நாட்டுக்கும் நமக்கும் வித்தியாசம் இல்லையா என்ன?
வாசகர்களுக்கு தெரிந்திருக்கலாம்- ஆர்கைவ் தளம் ஒரு பெரும்பொக்கிஷம். பல அரிய ஆவணங்களும் அச்சில் இல்லாத நூல்களும் கொண்டது. இதில் ஏதாவது பிரச்சனையான ஆவணங்கள் இருந்தாலும் அதை தனியாக தீர்க்கவேண்டுமே தவிர இப்படி மொத்தமாக சென்சார் செய்வது அட்டூழியம். இந்திய அரசு இன்னும் ஜமீந்தார்கள் கையிலிருந்தும் பொலிட்பீரோக்கள் கையிலும் தான் இன்னும் இருக்கிறது போல நடந்துகொள்கிறது.
இந்த இணைய யுகத்தில் தகவல் உரிமை என்பதே பெரிய உரிமை. பகிர்தலும் கூட்டுச்செயல்பாடும் மக்கள் இயக்கங்கள். அதற்கு எதிரான இந்திய அரசின் அடக்குமுறை கண்டிக்கப்படவேண்டும். உங்கள் குரலை பதிவு செய்யவேண்டுகிறேன்.
நன்றி
மது