நீர்க்கோலம்

kura

 

 

’நீர்கோல வாழ்வை நச்சி நெடிதுநாள் வளர்த்துப் பின்னை போர்க்கோலஞ் செய்துவிட்டார்க்கு உயிர்கொடாது அங்கு போகேன்’ என்ற கம்பராமாயண வரியிலிருந்து இந்த நாவலுக்கான தலைப்பை அடைந்தேன். நீர்க்கோலம் என உருமாறிக்கொண்டே இருக்கும் மானுடர்களின் கதை இது. போர்க்கோலம் கொள்ளவிருப்பவர்கள் கொள்ளும் உருவமழிதல் விளையாட்டு.

ஒன்றுடன் ஒன்று பின்னிச்செல்லும் இரு கதைகளால் ஆனது இந்நாவல். ஒன்று பாண்டவர்களின் ஒளிவுவாழ்க்கை. இன்னொன்று நளதமயந்தி கதை. இரண்டு கதைகளையும் ஒன்றையொன்று நிரப்புவதாகப் பின்னிச்செல்லும் ஒற்றை ஒழுக்காக இந்நாவல் அமைந்துள்ளது. கதாபாத்திரங்களுக்கு இடையேயான ஒப்பீடுகள் , இடைவெட்டுகள் வழியாக உச்சங்களை அடைகிறது.

நளன் கதைக்கும் மகாபாரதத்தின் மையக்கதைக்கும் இடையே உள்ள ஒற்றுமை வியப்புக்குரியது, ஆனால் இதை எவரும் இதற்குமுன் இத்தனை விரிவாக ஒப்பிட்டதில்லை என நினைக்கிறேன். தமயந்தியின் ஆளுமை திரௌபதியின் ஆளுமைக்கு நிகரானது என்பது ஒன்று. இதிலும் சுயம்வரம், சூது, கானேகுதல், மீள்தல் என்றே கதை செல்கிறது. மகாபாரதக் கதைக்கும் முன்னரே சூதர்பாடலாக இருந்த கதை என நளதமயந்தி கதையை ஆய்வாளர் சிலர் குறிப்பிடுவதுண்டு.

அத்துடன் விராடநாடு இருகதைகளுக்கும் பொதுவான களம். நளன் நிஷாத மன்னன், உண்ணாயிவாரியரின் நளசரிதம் நளனை விராடன் என்றே குறிப்பிடுகிறது. [வீரவிராட என்னும் பதம் புகழ்பெற்றது]. வெவ்வேறு பிற்கால புராணங்களில் இருந்து நிஷாதர்களின் வரலாற்றின் சிலதரவுகளை எடுத்துக்கொண்டு புனைவாக விரிவாக்கி இச்சித்திரத்தை உருவாக்கியிருக்கிறேன். இருகதைகளும் ஒன்றையொன்று வெட்டிக்கொள்ளும் இடத்தில் உள்ளது இக்குறிப்பிட்ட நாவலின் மையத்தரிசனம் .

இதில் திரண்டுவரும் தமயந்தியின் ஆளுமை திரௌபதியைப் புரிந்துகொள்ள, அன்றைய அரசியரை மேலும் அணுகியறிய, உதவுவது என நினைக்கிறேன். அரசியரின் இடம் மெல்ல குறைந்து மகாபாரதத்தில் அவைச்சிறுமையுற்று திரௌபதி நிற்கையில் ஒரு யுகம் முடிவடைகிறது.

அத்துடன் இது உருமாற்றத்தின் கதை. ஒவ்வொருவரும் பிறிதொருவராகிறார்கள். ஊழால் உருமாற்றம் அடைகிறார்கள். ஆழ்மனத்தில், கனவில் உருமாற்றம் அடைகிறார்கள். ஒளிந்துகொள்ள மாற்றுருக் கொள்கிறார்கள். நிகழ்ந்தவை கதையெனச் சொல்லப்படும்போது மாற்றமடைகின்றன. உருமாற்றம் என்பதனூடாக உருவமென உடலைச் சூடி நின்றிருக்கும் ஒன்றைப்பற்றிய ஆய்வென இந்நாவல் விரிகிறது.

இந்நாவலை என் அணுக்க எழுத்தாளர் மறைந்த குர்ரதுலைன் ஹைதர் அவர்களின் நினைவுக்குச் சமர்ப்பிக்கிறேன். அவர் எழுதிய அக்னிநதி இளமையில் என் கனவுகளை மலரச்செய்த நாவல். அவர் கையால் சம்ஸ்கிருதி சம்மான் விருது பெறும் வாய்ப்பையும் நான் கோரிப்பெற்றேன்.

இந்நாவலை செம்மைசெய்து உதவிய ஸ்ரீனிவாசன் -சுதா தம்பதியினருக்கும், ஹரன் பிரசன்னாவுக்கும் மெய்ப்பு நோக்கிய ஜெயஸ்ரீ கோவிந்தராஜனுக்கும் நன்றி
ஜெயமோகன்

 

குர்அதுல் ஜன் ஹைதரின் ‘அக்னி நதி ‘

 

 

முந்தைய கட்டுரைவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–63
அடுத்த கட்டுரைபேலியோ -ஒரு கடிதம்