அஞ்சலி , செழியன் [கனடா]
அன்பின் ஜெ!
தளத்தில் செழியன் அவர்களுக்கு தாங்கள் எழுதிய அஞ்சலியைக் கண்ட பின் இணையத்திலிருந்து அவரது ‘’ஒரு மனிதனின் நாட்குறிப்பிலிருந்து’’ நூலை தரவிரக்கம் செய்து வாசித்தேன். படைக்கலனை மட்டுமே நம்பியவர்கள் மிகத் திட்டமிட்டு எழுதிய ‘’வரலாறு’’ காலத்தின் தவிர்க்க இயலாத நிகழ்வுகளால் ஓர் அவலமாக எஞ்சி நிற்கிறது. நீதிக்காக அகம் எழுந்த ஒரு கலைஞனின் போராளியின் பதிவுகள் கலைக்குரிய அழிவற்ற தன்மையுடன் வரலாற்றின் முன் நிற்கிறது. சகோதர இயக்கத்தால் வேட்டையாடப்பட்டு மனிதர்களால் புரிந்து கொள்ள முடியாத ஊழின் கரங்களால் மரணத்திலிருந்து தப்பி தாயகத்தை விட்டு வெளியேற நேர்ந்த காலகட்டத்தை செழியன் எழுத்துக்களில் கண்டபோது மனித மனத்தின் குரூரத்தையும் மனித மனத்தின் கருணையையும் மாறி மாறிக் காண முடிந்தது. மனிதனைப் பற்றி அவனது விருப்பங்களைப் பற்றி அவன் நிகழ்த்தும் வன்முறைகளைப் பற்றி இறுதிச்சொல் எதையும் சொல்லி விட முடியுமா என்ன? மா நிஷாத என்ற முதற்சொல் முடிவில்லாமல் பெருகிக் கொண்டேயிருக்கிறது.
ஆக்கபூர்வமான அரசியலில் நம்பிக்கை இல்லாதவர்கள் இலங்கைத் தமிழர்களுக்கு ஏற்படுத்தியிருக்கும் இடர் வரலாற்றால் மன்னிக்கப்படாது.
அன்புடன்,
பிரபு மயிலாடுதுறை
அன்புள்ள ஜெ
செழியனின் மறைவு குறித்த செய்தியை ஒட்டி அவருடைய கவிதைகளையும் செல்வத்தின் எழுதித்தீராத பக்கங்களையும் ஒரே சமயம் வாசித்தேன். மாறி மாறி இரண்டு உலகங்களில் சஞ்சரித்துக்கொண்டே இருந்தேன். துயரம் தனிமை என்று உழல்கிறது செழியனின் கவிதை. சிரித்துக்கொண்டே கடந்து செல்கிறது செல்வத்தின் மனம்.
சிரித்து கடக்க தெரியாததனால்தான் செழியன் உருகி உருகி இறந்தார் என நினைக்கிறேன். ஒட்டுமொத்த போராட்டமும் சிரித்துக்கடக்கவேண்டிய ஒரு அர்த்தமற்ற பெருந்துயராக ஆகிவிட்டது. இவ்வளவு அழிவுக்குப்பின்னாலும் சம்பந்தமே இல்லாமல் அதை தூக்கிச் சுழற்றி இன்னமும் காழ்ப்பரசியல் பேசி அடையாளம் தேடுபவர்களையும் சிரித்துக்கொண்டே நினைத்துக்கொண்டேன்
ராம்சந்தர்