கஞ்சிமலையாளம்
சார் வணக்கம்
ரொம்பநாளாயிருச்சு சார் இப்படி வாசிச்சு சிரிச்சு. வெண்முரசும் போர் முரசு கொட்டிட்டு இருக்கறதாலயும், கல்லூரியிலும் தரச்சான்றிதழ் பணிகளில் மூழ்கி இருப்பதாலும் சிரிக்கவே மறந்து போயிருந்தேன். கஞ்சி மலையாளம் படிச்சுத்தான் வெகுநாட்களுக்கு அப்புறம் சிரித்தேன்,
10 ஆம் வகுப்பு தேர்வுக்கு மும்முரமாக படிப்பதுபோல பாவனை செய்துகொண்டிருந்த தருணையும் வரச்சொல்லி வாசித்துக்காட்டி இரண்டு பேருமாக சிரித்தோம். அதிலும் ’எந்து பட்டீ’ மற்றும் ’பறவை இல்லை’’ எப்போ நினச்சாலும் சிரிச்சுருவொம் இனி
கஞ்சி எங்களுக்கு காய்ச்சல் வந்தால் மட்டுமே குடிக்கும் உணவென்பதால் கஞ்சியைப்பார்த்தாலே காய்ச்சல் வந்தது போல பிரமை வருகிறது
ஆனால் இத்தன விதிகளுடன் கஞ்சி குடித்தல் இருப்பது இப்போதுதான் தெரிந்துகொண்டேன்
நீங்கள் விவரித்திருக்கும் தொடுகறிகளுக்காகவே கஞ்சியை நாங்களும் சாப்பிட துவங்கலாம் போல இருக்கு சார் எத்தனை வகைகள் , எத்தனை விதிகள்/?
ஆம் நாங்கள் சமையலில் over cooking செய்பவர்கள் தான். கசப்பு சுவைக்காக சேர்த்துக்கொள்ளும் பாவக்காயின் கசப்பை போக்குவது எப்படி என்று அவள் விகடனில், மங்கையர் மலரில் எல்லாம் டிப்ஸ் எழுதிக்கொண்டொ வாசித்துக்கொண்டோ இருப்போம். அதே போல சுவையூட்டிகளும் மிக அதிகமாகவே சேர்க்கிறோம், நீங்கள் சொல்லியிருக்கும் உண்மைகள் எல்லாம் கசக்கிறது
நான் திருவனந்தபுரம் கேரளா பல்கலைக்கழகத்தில் 1 மாத பயிற்சிக்கு சென்றிருக்கையில் அங்கு ஒரு மிக கண்டிப்பும் கெடுபிடியும் நிறைந்த கன்னிகாஸ்த்ரீ மடமொன்றில் தங்கி இருந்து தினம் பல்கலை சென்று வந்தேன், 30 நாட்களில் 25 நாட்கள் காலை கஞ்சிதான் கொடுத்தார்கள் முதல் இரண்டு நாட்கள் கண்ணீருடன் கொஞ்சமாக சாப்பிட்டேன் பின்னர் சுவை பழகி மரவள்ளிக்கிழங்கு கறியோ அல்லது பயறு சுண்டலோ தொட்டுக்கொண்டு எல்லோரையும் போல சாப்பிடத் துவங்கி பயிற்சி முடிந்து வருகையில் கஞ்சிக்கு ரெசிபி கூட கேட்டுக்கொண்டு வந்தென் ஆனால் இங்கு வந்து நான் செய்தது மகா கேவலமாக இருந்தது. எங்களுக்கு விதித்திருப்பது, இத்தனை தொடுகறிகளுடன் திருச்சூர் பூரத்தின் கொம்பன் யானையைபோல இருக்கும் கஞ்சியல்ல, இட்லியும் தேங்காய்ச்சட்னியும்தான் ஜென்ம ஜென்மமாய்
அப்புறம் அந்த கொண்டாட்டம் , கேராளாவைச் சேர்ந்த என் மாணவன் மனைவியுடன் விருந்துக்கு வந்திருக்கும் போதுதான் இந்த வார்த்தையை முதலில் கேட்டேன், மேடம் அம்மா செஞ்ச கொண்டாட்டம் என்று ஒரு பை நிறைய வத்தல் கொடுத்தான் நல்ல பெயர் ,கொண்டாட்டமாய் அதை சாப்பிட்டோம்.
மனோன்மனீயம் சுந்தரம்பிள்ளை குடித்த கஞ்சிக்கு தொடுகறிகளை அகம்படி என்றிருப்பது இன்னும் சிறப்பு
இந்த ஞாயிறு எங்கள் வீட்டிலும் கஞ்சியும் கொண்டாட்டமும்தான் சார்
லோகமாதேவி
அன்புள்ள லோகமாதேவி
அந்தக்காலத்தில் கேரளத்தில் காய்கறிகள் தமிழ்நாட்டிலிருந்து வரும். கோடைகாலத்தில் சிலகாய்கறிகள் விளையும். ஆகவே காய்கறிகளை உலரச்செய்து சேமித்துக்கொள்வார்கள். சுவையாக அந்த தேவை உருமாறியிருக்கிறது
ஜெ,
ஒரு சூழலில் அங்கே கிடைக்கும் பொருட்களைக்கொண்டு உணவை தயாரிக்கிறார்கள். அங்குள்ள காலநிலைக்கும் அந்த உணவு கொஞ்சம் கொஞ்சமாக பொருந்தி வருகிறது. பொதுவாக அவர்களுக்கு பொருந்திவராத உணவு தவிர்க்கப்படுகிறது. இவ்வாறு அந்தந்த இடங்களுக்கான உணவே நல்லது. ஆனால் இன்று கொஞ்சம் கொஞ்சமாக உலகெங்கும் ஒரே உணவு ருசி உருவாக்கப்படுகிறது. உணவுத்தயாரிப்புத் தொழிலுக்கு இது நல்லது. ஆனால் உடல்நலத்துக்குக் கேடு. காலப்போக்கில் உலகில் ஒரே சுவையே மிஞ்சும் என நினைக்கிறேன்.
அதோடு அதிகம்சமைக்காத உணவுமேல் நாம் சுவையை உருவாக்கிக்கொள்ள வேண்டியிருக்கிறது,
ஜெயராமன்
அன்புள்ள ஜெயராமன்
ஆம், நீங்கள் சொல்வது உண்மை. கேரளத்தில் அக்காலத்தில் சேற்றில் உயரமாக வளரும் வகையிலான நெற்பயிர்கள்தான். கதிர்பெரிதாகவும் தாள் கரும்பும்போல அவ்வளவு உயரமாகவும் இருக்கும். அரிசி புளியங்கொட்டை. அந்த கஞ்சிச்சுவை அதிலிருந்து வந்திருக்கலாம்
ஜெ