சட்டமும் சாமானியனும்

del

பெருமதிப்பிற்குரிய ஜெமோ. அவர்களுக்கு,

வணக்கம்.

ஏற்கனவே கூறியிருந்தீர்கள், நாளிதழ்களை வாசித்துக் கொந்தளிக்காதீர்கள் என்று!. என்ன செய்வது இப்படிப்பட்ட செய்திகளிலும் எனது பார்வையில்பட்டு,மனதை மிகுந்த வேதனைப்பட வைக்கிறது.நாம் நாகரீக உலகில் வசிக்கிறோமா அல்லது காட்டுமிராண்டி கூட்டங்களிடையே வாழ்கிறோமோ தெரியவில்லை.நாட்டின்  தலைநகரிலேயே தாய்,தந்தையின் கண் முன்னால் – வேறொரு பெண்ணை காதலித்த குற்றத்திற்காக – மகனை வெட்டி படுகாயப்படுத்திய  கொடியவர்களை தடுக்கமுடியாமலும், பின் உயிருக்கு போராடிய மகனை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல உதவிகேட்டும் பக்கத்தில் இருந்த எவரும் உதவிக்கு வராத நிலையில்,அரைமணி நேரம் கழித்து வந்த ஒரு ஆட்டோ ஓட்டுனரின் உதவியால் மருத்துமனைக்கு எடுத்தும் செல்லும் வழியில் அன்னையின் கரங்களிலேயே அந்த இளைஞன் மரித்துவிட்டான்.நமது குடிமக்களின் லட்சணம் இவ்வளவுதானா?

Delhi honour killing: ‘Nobody came for help, I carried my bleeding son on e-rickshaw,’ says mother

அன்புடன்,

அ .சேஷகிரி.

***

அன்புள்ள சேஷகிரி,

இந்தியாவின் சூழலில் இப்படி நாளிதழ் வாசித்துக் கொதித்துப்போவதுதான் நமக்கு முதன்மையான பொழுதுபோக்கு என நினைக்கிறேன்.

விரிவான சமூக ஆய்வுகளேதும் செய்யவேண்டிய தேவை இல்லை. நாம் பழைய சமூக அமைப்பில் சாதிகளாகத் திரண்டிருந்தோம். இன்றுகூட கும்பலாகத் தெருவிலிறங்குவது சாதிக்காகவே

ஆனால் நவீன வாழ்க்கையில் நகரங்களில் தனிமனிதர்களாகச் சிதறுண்டிருக்கிறோம். தனிமனிதன் சாமானியன். அவனுடைய மைய உணர்ச்சி பாதுகாப்பின்மைதான். ஆகவே மக்கள் அஞ்சியது இயல்பே.

அவர்களில் எவரேனும் அதில் ஈடுபட்டு அவர்களும் தாக்கப்பட்டால், காவலர்களால் சட்டத்தின் சிக்கல்களுக்குள் இழுக்கப்பட்டால் அவர்களின் வாழ்க்கை அழிந்துவிடும். பார்த்துக்கலாம் என்னும் துணிவுடன் இறங்குபவர்கள் பெரும்பாலும் இழப்பதற்கேதுமற்றவர்களும் சிறிய குழுக்களாகத் திரளும் ஆற்றல்கொண்டவர்களுமாகிய அடித்தள மக்களே.

மீண்டும் மீண்டும் நாம் அன்றாடவாழ்க்கையில் காண்பது ஒன்றுண்டு, இத்தகைய இடங்களில் உதவமுற்படுபவர்கள்தான் காவலர்களால் வேட்டையாடப்படுவார்கள். இரக்கமே இல்லாமல் அவர்களையே குற்றவாளிகளாகச் சித்தரித்துவிடுவதும் உண்டு. பல செய்திகளை என் வாசகர்கள் சொல்லி கண்ணீர்விட்டிருக்கிறார்கள்.

அதைவிட நீதிமன்றங்களின் சுரணையின்மை. ஒரு அப்பட்டமான கொலைவழக்கை ஆறுவருடம் எட்டுவருடம் இழுக்க அனுமதிக்கும் நீதிமன்றங்கள் இந்த அனைத்து சீரழிவுக்கும் முதன்மைப் பொறுப்பேற்கவேண்டும். நீதிமன்றத்தில் சாட்சிக்கும் குற்றவாளிக்கும் ஒரே வகையான நடத்தைதான் அளிக்கப்படும். சாட்சிகள் தண்டிக்கப்பட வாய்ப்பில்லை என்பது மட்டுமே வேறுபாடு. மற்றபடி ஆண்டுக்கணக்கில் நீதிமன்ற அலைச்சல். பொருளிழப்பு, தொழில் அழிவு, குடும்பச்சிக்கல்கள், வெளிநாடு செல்லக்கூட அனுமதிமறுப்பு என சாட்சிகள் அடையும் நீதிமன்ற வதைகளுக்கு இங்கே அளவே இல்லை.

அத்துடன் இத்தகைய குற்றச்செயல்களின் முதன்மை சாட்சிகளுக்கு எந்தவகையான சட்டப்பாதுகாப்பும் இல்லை. குற்றவாளிகள் மிகச்சிலநாட்களிலேயே ஜாமீனில் விடப்படுவார்கள். அதன்பின் பல ஆண்டுகள் வழக்கு நிகழும். அந்தக் கால அவகாசம் அவர்கள் சாட்சிகளை மிரட்டி சரிக்கட்டும்பொருட்டே நம் நீதிமன்றத்தால் அளிக்கப்படுகிறது என்பது பரவலாக பேசப்படுவது.

இங்கே நீதிமன்றமும் காவல்துறையும் பணம் செலவழிக்க முடியாதவர்களின் முதன்மை எதிரிகள். மக்கள் அஞ்சி ஒடுங்கி அவற்றின் கண்களுக்குச் சிக்காமல் வாழ்கிறார்கள்.

ஜெ

முந்தைய கட்டுரைவெள்ளிநிலம் -குழந்தை வாசிப்பு
அடுத்த கட்டுரைஆலுவா