அருகமர்தல் -ஏ. வி. மணிகண்டன்
வணக்கம் திரு ஜெயமோகன்
இன்று உங்கள் தளத்தில் வந்த ‘அருகமர்தல் ஏ.வி.மணிகண்டன்’ பதிவை வாசித்தேன். இந்திய கலைகளை, குறிப்பாக ஓவியக்கலையை அணுகுவதற்க்கும் அறிவதற்க்கும் முக்கிய சிக்கலாக இருப்பது – நம்மிடம் கலைகள் மட்டுமே உள்ளன கலைஞர்களை பற்றி எதுவும் இல்லை. படைப்புகள் மட்டுமே எஞ்சியுள்ளன படைப்பாளிகளை பற்றி பெரிதாக எதுவும் நம்மிடம் எஞ்சியில்லை.
ஆனால் அங்கு அப்படியில்லை. ரினைசான்ஸின் முகமாக டா வின்சியும் மைகெலான்ஜிலோ வும் இருக்கிறார்கள் பரோக்கிற்கு பெர்னினி இருக்கிறார். அவர்களின் முுலமாகவே நாம் அந்த கலையயும் அறிகிறோம். பின்னால் வந்த இம்ப்ரஷனிஸத்திலும் அவ்வாறே மோனே(monet), மானே(manet), ரெனுவா(renoir). இவ்வாறான முகங்கள் நமக்கு இந்திய கலையில் கிடைப்பதில்லை.
ஒருவரிடத்தில் மைகெலான்ஜிலோ வின் ஓவியங்களை எந்த அறிமுகமும் இன்றி காட்டினால் அவர் அதை பொருட்படுத்தாமல் போகலாம். அதையே இதை மைகெலான்ஜிலோ ஒருநாளுக்கு 18 மணி நேரம் தலைகீழாக தொங்கி கொண்டே வரைந்தார் என கூறி காட்டினால் நிச்சயம் அவர் அதை பார்க்க வாய்ப்புண்டு.
படைப்பை படைப்பாளியின் மூலமாக அறிகையில் இலகுவாக அதனுள் செல்ல முடிகிறது. வான் கோ வின் வாழ்க்கையை அறிந்து பின்னர் அவரின் கலையை அறிந்தவர் பலர்(என்னையும் சேர்த்து). டா வின்சியும் மைகெலான்ஜிலோ வின் ஓவியங்களும் சிற்பங்களும் இன்றளவும் அறியப்படுவது அவைகளால் மட்டுமல்ல அவர்களின் ஆளுமையுடனும் வாழ்க்கையுடனும் சேர்த்துதான்.
பல நூற்றாண்டுகள் கழித்தும் இப்போதும் அவர்களை பற்றி நூல்கள் வந்துகொண்டே தான் உள்ளன.(walter isaacson’s leonardo da vinci- biography, published oct 2017). அவர்களின் வாழ்க்கையை பேசியே அவர்களின் படைப்புகளையும் பேசிக்கொண்டிருக்கிறோம். அவர்களின் வாழ்க்கையை ஆராய்ந்து அவர்களின் படைப்புகளை அர்த்த படுத்த முயலுகிறோம். சிக்மண்ட் ஃராய்ட் முதல் இன்று வரை டா வின்சிக்கு பலர் பல விளக்கங்களை கொடுத்து வருகின்றனர்.அது நாளையும் தொடரும் என்பதில் எனக்கு எவ்வித ஐயமும் இல்லை.
அவ்வாறன நூல்கள் இந்திய கலைஞர்களை பற்றி குறைவே. ஏன் ஒரு குறிப்பிட்ட படைப்பாளியின் படைப்புகளின்தொகுப்பும் மிக அரிதே. பி.என். கோஸ்வாமியின் nainsukh of guler மற்றம் manaku of guler இவ்வகையில் குறிப்பிட தக்க நூல்கள். குலேர் என்ற கிராமத்தில் 18 ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஓவிய சகோதரர்கள் இவர்கள். இவர்களின் ஓவியங்களை தொகுத்தும் பல இடங்களிருந்தும் சேகரித்த தகவல்களை கொண்டும் ஒரு வாழ்க்கைச்சித்திரத்தை அளிக்க சிறப்பான வகையில் முயன்றிருக்கிறார்.
கலையை கலைஞரிடமிருந்து பிரித்து தனியாக அணுகுவது என்னால் இயலாதது. கலைஞர்களை பற்றி தெரியாததால் அவர்களின் கலையை பற்றியும் மெல்ல மெல்ல மறந்து வருகிறோம் என எண்ணுகிறேண்.
முன்பு இந்திய சிற்ப கலை பற்றி கற்க சில நூல்களை பரிந்துரைத்திருந்தீர்கள். அதேபோல் ஓவிய கலை பற்றி நூல்கள் பரிந்துரைக்க வேண்டுகிறேன்.ஏனென்றால் தென் இந்தியாவை பொறுத்த வரையில் தஞ்சாவூர் முறையை தவிர வேறு ஓவிய முறைகளைப் பற்றி எந்த தகவல்களும் இன்று கிடைப்பதில்லை. பி.என். கோஸ்வாமி போன்றோரின் நூல்களும் பஹாரி, ராஜ்புத் என வட இந்திய ஓவிய முறைகளைப் பற்றியே பேசுகின்றன. உங்கள் தளத்தில் அவற்றை பற்றி கூறவதால் அது பலருக்கும் உதவியாக இருக்கும்.
பல நாட்களாக எண்ணி கொண்டிருந்ததை கேட்க இது சரியான சந்தர்ப்பம் என எண்ணுகிறேன். வெண்முரசில் வெளிவந்த ஓவியங்களை தனி ஒரு நூலாக வெளியிட்டால் அது என் போன்ற ஓவியத்தின் மேல் நாட்டமுள்ள வாசகர்களுக்கு விருந்தாகவும் மேலும் அது ஒரு தனி ஓவிய நூலாகவும் முழுமை பெறும் என எண்ணுகிறேன். TASCHENஎன்கிற பதிப்பகம் பல ஓவியர்கள், சிற்பிகள், கட்டடக்கலை வல்லநர்கள் ஆகியோரின் படைப்புகளை தொகுத்து அவர்களின் வாழ்க்கையைப் பற்றிய குறிப்புகளையும் சேர்த்து குறைந்த விலையில் வெளியிடுகின்றது. அது போல் தமிழிலும் பல நூல்கள் வர இது ஒரு தொடக்கத்தை ஏற்படுத்தும் என நம்புகிறேன்.
ஸ்ரீராம்
அன்புள்ள ஸ்ரீராம்,
பொதுவாக எந்த நுண்கலையிலும் தேர்ந்த கருத்துச் சொல்லும் இடம் எனக்கில்லை. நான் அவற்றுக்காக ஆண்டுகளைச் செலவழித்தவன் அல்ல. பொதுப்பார்வைக்கு அப்பால் சென்று அறிந்தவனும் அல்ல. எளியரசிகன். ஆகவே அவற்றைப்பற்றிச் சொல்ல என்னிடம் ஏதுமில்லை, கேட்டுக்கொள்ளத்தான் உள்ளது
இவற்றில் நான் கருத்துசொல்வது இரண்டு தளங்களில் நுண்கலைகள் இலக்கியத்தை, மொழியைச் சந்திக்கும் இடங்கள் குறித்து. நுண்கலைகளின் வரலாறு குறித்து. அவ்வரலாறு நம் பண்பாட்டுவரலாற்றின் ஒருபகுதி என்பதனால், அதுவும் இலக்கியத்துடனும் தத்துவத்துடனும் இணைந்து வளர்ந்தது என்பதனால்.
நம் ஓவியமரபை இரு காலகட்டங்களாகப் பிரிக்கலாம். தொல்மரபு, நவீன மரபு. தொல்மரபு ஆளுமைகளுக்கு இடமில்லாதது – அரிதாக ஹொய்ச்சாளக் கலைமரபில் சிற்பிகளின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. ஏனென்றால் அது தலைமுறைகள் தோறும் நீளும் கலைப்படைப்பியக்கம். பலர் ஒருமனதாகச் செய்வது. தனிக்கலைஞனின் கலைவெளிப்பாடு அல்ல. பெரும்பாலும் ஒரு இனக்குழுவின் [caste] அல்லது குடியின் [clan] அல்லது தொழிற்கூட்டின் [guild] சிருஷ்டி. ஆகவே அங்கே தனிக்கலைஞனைத் தேடவேண்டியதில்லை.
அங்கே அந்த கலைக்குழுவை ஒர் ‘ஆசிரியர்’ எனக் கொள்ளவேண்டியதுதான். அதன் வரலாற்றையும் பண்பாட்டுப்புலத்தையும் கொண்டு அக்கலைப்படைப்பைப் புரிந்துகொள்ள முயலவேண்டியதுதான்.
இந்திய ஓவியங்களையும் சிற்பங்களையும் ரசிப்பதிலுள்ள பெரிய இடர் என்பது உண்மையில் அக்கலைப்படைப்புகள் நின்றிருக்கும் படிமஅடித்தளம் நமக்கு பெரிதாகத் தெரியாது என்பதனால்தான். நம் சிற்பங்கள் இந்திய மெய்யியல், தத்துவப் பின்புலத்தில் அமைந்தவை. புராணமரபு, தாந்த்ரீக மரபு போன்ற மறைஞான மரபுகளுடன் தொடர்புள்ளவை. காளாமுகமரபின் படிமங்கள் உருவாகி வந்த பரிணாமப்போக்கையும், அம்மரபின் தத்துவத்தையும் அறியாமல் கரியுரித்தபெருமான் சிலையை நம்மால் அணுகமுடியாது.
அந்தப் பின்புலம் நம் கல்விமரபால் முழுமையாகவே தவிர்க்கப்பட்டுள்ளது. முயன்று கற்பவர்களுக்குக்கூட உதிரிநூல்கள் மட்டுமே கிடைக்கின்றன, ஆசிரிய மரபு இல்லை, கற்றுத்தரும் அமைப்புகளும் இல்லை. ஆகவேதான் அந்த மாபெரும் கலைப்புலம் மிகமிகக்குறைவாகவே ரசிக்கப்படுகிறது. பெரும்பாலும் ’பொம்மைபார்த்த’ல் ஆக ரசிக்கப்படுகிறது.
நவீன ஓவியங்களைப் பொறுத்தவரை இங்குள்ள இடர் முற்றிலும் வேறுபட்டது. அவை ஐரோப்பாவில் வேர் கொண்டவை. இங்கு வந்தமைந்தவை. அவற்றை ரசிக்க நாம் அவற்றின் வளர்ச்சிவரலாற்றை, தத்துவப் பண்பாட்டுப் பின்புலத்தை அறியவேண்டியிருக்கிறது. அதுவும் இங்கே முறையாகக் கற்பிக்கப்படுவதில்லை. இயல்பாக நாம் அவற்றுடன் ஈடுபடவும் முடிவதில்லை. உதாரணமாக பிகாஸோவின் குவார்னிகாவை ரசிக்க என்னென்ன வரலாற்று அறிதல்கள், மேலைத்தத்துவ அறிதல்கள், மேலைக் கலைக்கோட்பாட்டுப் புரிதல்கள் தேவை என்று பாருங்கள்.
பின்புலக் கல்வி இன்மையே இங்கே ஓவியம்போன்ற கலைகள் ரசிக்கப்படுவதற்குப் பெரிய தடை. உண்மையில் பல்லாயிரம்பேர் பேரார்வத்துடன் ரசிக்கும் சினிமாவுக்கும் இங்கே அதேபிரச்சினை உண்டு. சினிமாக்களை அவற்றின் அழகியல்மரபையோ வரலாற்றுப் பண்பாட்டுப் புலத்தையோ புரிந்துகொண்டு உள்வாங்கி எழுதப்படும் எழுத்துக்கள் இங்கே மிக அரிது.
மற்றபடி கலைஞர்களின் தனிவாழ்க்கையும் அடையாளமும் இங்கும் அவ்வப்போது பேசப்படுகிறது. தொன்மங்கள் கட்டமைக்கவும் படுகின்றன. அமிர்தா ஷெர்கில், பத்மினி போன்றவர்களைப் பற்றிய எழுத்துக்களை நினைவுகூர்கிறேன். ராமானுஜம் என்னும் ஓவியர் குறித்து ஐரோப்பிய பாணியில் ஒரு தொன்ம உருவாக்க முயற்சியை சி.மோகனின் ‘விந்தைக்கலைஞனின் உருவச்சித்திரம்’ நாவலிலும் காணலாம். அவை பெரிய அளவில் பயனளிக்கவில்லை என்பதே என் புரிதல்
ஜெ