பகுத்தறிவும் டாக்கின்ஸும் – கடலூர் சீனு

evr

இனிய ஜெயம்

 

அன்று கடலூர் சந்திப்பில் நீஙகள் ,முற்போக்கா ,பிற்போக்கா என வினவிய இளைஞர் திராவிட கழகத்தை சேர்ந்தவர் என பின்னர் நண்பர்கள் வழியே அறிந்தேன் .   எனது இருபது வயதில் இதே கேள்வியுடன் நான் பெரியாரை அணுகினேன் .

 

பத்து அல்லது பதினோரு வயது , அப்பாவின் பின்னால் ஒளிந்தபடி அந்த கருப்பு உடை மனிதர்களின் ஆவேச கூச்சலை ,பயத்துடன் பார்த்துக் கொண்டிருந்தேன் . மௌனமாக நகர் வழியே கடந்து சென்று கொண்டிருந்தனர் நான்கு   திகம்பர துறவிகள் இப்போதே அவர்கள்  இந்த நகரை நீங்க வேண்டும் என வெறிக் கூச்சல் எழுப்பிக்கொண்டு இருந்தனர் கருப்பு உடையினர் . . கெடிலம் நதிக்கரை பாலத்தின் முடிவு . பின்னால் பெரியார் சிலை .

 

பின் ஏதோ ஒரு வயதில் அந்த சிலையின் கீழே பொறிக்கப்பட்டு இருந்த வாசகம் மிகுந்த சஞ்சலத்தை அளித்தது .  அந்த வாசகம்  ”இதோ இதே இடத்தில்தான் கடவுளை மறுத்துப் பேசிய பெரியார் மீது பாம்பு வீசப்பட்டது .செருப்புகள் வீசி அவமதிக்கப்பட்டார் .அதே இடத்தில் இதோ இன்று அவருக்கு சிலை எழுப்பப்படுகிறது ”.    இப்போது அவமதிப்பது அவர்கள் முறையா என்ன ?    அப்பா இறந்த  தத்தளிப்பு ,  இருக்கிறானா இல்லையா என்று தெரியாத கடவுள் மேல் கோபம் , யார் தான் இந்த பெரியார் ? அவர் தனது  பக்தர்களை கொண்டு செய்ய வந்தது இதுதானா ? இலக்கற்ற வெறுப்புக் கேள்விகள் .

 

அந்த சிலைக்கு பின் அப்போது பகுத்தறிவு நூலகம் ஒன்று இயங்கியது . [இப்போது அதை இடித்து விட்டார்கள் .பெரியார் மட்டும் அங்கேயே அப்படியே இருக்கிறார் ]   பதின் வயதின் இறுதியில் இருந்தேன் ,அந்த அளப்பரிய கட்டின்மை  ,  ஒரு வருடம் அந்த நூலகத்திலேயே தவம் கிடந்தது [அங்கே நான் ஒளிந்திருப்பதை எந்த கடன்காரனும் இறுதி வரை கண்டு பிடிக்க வில்லை ] பெரியார் கைப்பட எழுதியது என கண்ட அத்தனை நூல்களையும் வாசித்து முடித்தேன் .

 

பின்னர் நீண்ட நாள் கழித்து, தொடர் வாசிப்பின் வழியே,  அட இதன் பெயர் தீவிர  இலக்கியம், என அறிந்த பிறகு ,நான் எண்ணி எண்ணி வருந்தும் காலம் என்பது   அந்த ஓராண்டாகவே இருந்தது .அன்று  அந்த ஆற்றலின் வழி ,என் வாசிப்புத் தீக்கு எது இலக்கியமோ அதை ஆகுதி ஆக்கி இருந்தால் அன்று நான் அடைந்திருக்க கூடிய தன்னம்பிக்கையே வேறாக இருந்திருக்கும் .  மயிரை  சுட்டு கரியை அள்ள முயன்ற கதை என்றே அந்த ஓராண்டை  மனதில் எண்ணி இருந்தேன் .  ஆம் இறுதியாக இடிந்து சிதைந்த சிதிலங்களின் பெரும் பொதி ஒன்று பெரியார் சிந்தனைகள் என்ற பெயரில்  எனது மூளையை நிறைத்து நின்றது .

 

இதோ  இன்றும் கூட    எங்கேனும் சுற்றி நோட்டம் விட்டால் ,இவர் முக்கியமானவர் என சமூகம் நினைக்கும் ஆளுமைகளில் ஒருவர் ,பெரியார் ,அம்பேத்கர் போன்ற சிந்தனையாளர்கள்  எனும் சொல்லை உதிர்க்க காணலாம் .  சிந்தனைக்கு ஒரு முறைமை உண்டு . அதன்படி . அம்பேத்கர்தான் சிந்தனையாளர் ,பெரியார் சிந்தனையாளர் அல்ல  என நான் அறிய வர அன்று  மேலும் ஐந்து  ஆண்டுகள் தேவைப் பட்டது .  அன்றெல்லாம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலக வாசலில் எப்போதேனும் ,தத்துவக் கல்வி வகுப்பு நடக்கும் .  அதன் வாசலில் நின்றே , எண்ணங்களை சொல்வது வேறு ,கருத்துக்களை பேசுவது  வேறு , சிந்தனையை முன்வைப்பது வேறு எனும் பேதத்தை[ புகை மூட்டமாகவேனும்  ]அறிந்தேன் .

 

கடலூரில்  இன்று இதை விளக்கும் எந்த வகுப்பும் தி கா விலோ கம்யூனிஸ்ட் இலோ இல்லை . தமிழ் நிலம் முழுமையும் இதே நிலைதான் இரு கட்சிகளிலும் என நினைக்கிறேன் . இன்று அவர்களுக்கு ”உள்ளே வரும் ” தலைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதன்றி வேறு நோக்கம் ஏதும்  இல்லை . அப்படி உள்ளே வரும் இளம் தலைமுறையை  தக்க வைக்க அவர்களுக்கு என்ன கற்ப்பிக்கப்படுகிறதோ ,அதற்க்கு எதிரான சீண்டலாக உங்கள் தளத்தின் பதிவுகள் இருப்பதையே  அந்த கடலூர் இளைஞர் வழி  அறிய முடிகிறது .

 

இன்று தி க வில் இருக்கும் ஒரு இளைஞன் ,அந்த கழகம் சொல்லும் பகுத்தறிவை ,[பெரியார் பேசிய அசட்டு பகுத்தறிவை  சொல்ல வில்லை ] எது பகுத்தறிவு என வழங்கப் படுகிறதோ ,அதை அதன் நேர் பொருளில் வாசிக்க ,அந்த கழகத்துக்குள் இடம் இருக்கிறதா ?

daw

சில வருடங்கள் முன் , அரவிந்தன் நீலகண்டன் அவர்கள் எழுதிய ஆழி பெரிது நூலுக்கு நான் எழுதிய அறிமுக கட்டுரையில் , தமிழகத்தில் பகுத்தறிவு இன்றைய உலகின் சமகால அறிவு சூழலுடன் எந்த உரையாடலும் நிகழ்த்தாமல்  தேங்கி சீரழிந்து விட்டது என எழுதி இருந்தேன் . வாசித்து விட்டு கடலூரில் ஒரு [முன்னாள் தி க கட்சியை சேர்ந்த  பெரியவர் ] நண்பர் என்னை அணுகினார் . அந்த வரியை சுட்டிக்காட்டி ,நிச்சயமா தெரியுமா என்றார் .  தி க வேறு என்ன செஞ்சிரும்   என்றேன் அலட்சியமாக .

 

அவர் எனக்கொரு நூலை அளித்தார் . திராவிடர் கழக வெளியீடு .  கு வெ கி ஆசான்  என்ற பெரியார் சொற்ப்பொழிவாளர் மொழிபெயர்த்திருந்தார் . ரிச்சர்ட் டாக்கின்ஸின்  தி காட் டெல்யூஷன்  எனும் நூலின் தமிழ் மொழி பெயர்ப்பு . தலைப்பு  கடவுள் ஒரு பொய் நம்பிக்கை . என் முன்முடிவு மூடத்தனத்துக்கு சரியான செருப்படி . ஆம்  அந்த நூல் வெளிவந்து பத்து ஆண்டுகள் ஆகிறது . அது பதிப்பிக்கப்பட்ட வருடம் 2009 .

 

நானறிந்து தமிழில், குறிப்பாக தீவிர இலக்கிய ஆளுமை என  உலாவும் பல ,கவிதா இனிக்கள் ,பெண்ணியர்கள் , ஆணியர்கள் , சாதி  முதல் ஜட்டி வரை அத்தனையையும் மறுப்பாளர்களில் பலர் பெரியாரிஸ்டுகள்  [என்றே எண்ணி இருந்தேன் ].  அவர்கள்  எவரது பதிவிலும் இருந்து கடந்த பத்து வருடங்களில் , இந்த கடவுள் ஒரு பொய் நம்பிக்கை நூல் குறித்து ஒரே ஒரு நல்ல கட்டுரை ஒன்றை எடுத்து விட முடியாது .

 

தி க வில் இருக்கும் ,தேடல் கொண்ட ,இன்றைய இளம் மனங்கள் தவற விடக்கூடாத நூல்  இந்த நூல் . டார்வினிய பரிணாம அறிவியல் பின்புலத்தில் ,அனைத்தையும் அணுகும் ”நாத்திகர் ”  டாக்கின்சுக்கு கிறிஸ்துவம் முன்வைக்கும் கடவுளும் ,இறை இயலும் ,கருத்து முதல் வாதமும்தான் இந்த நூலில் அவரது இலக்காக இருக்கிறது . ஆனாலும்   பகுத்தறிவு என்பது  அதன் நேர் பொருளில் என்ன ? என்பதையும்   அது  ,ஒன்றினை  அணுகி , அதை  பகுத்தும் ,தொகுத்தும் , ஆராய்ந்து   ஒரு பொது உண்மைக்கு வரும்  வகைமையை ,இந்த நூல் வழியே ஒருவர் கற்கலாம் .  குறிப்பாக  முழுமைப்பார்வையின் இருண்ட பகுதி என்றொரு இயல் . [அப்சலுய்ட் ]  முழுமைப்பார்வை  எனும் நோக்கை, தனது பரிணாமவியல் அறிவு கொண்டு   டாக்கின்ஸ் எவ்வாறு எதிர்கொண்டு , வகுத்து வைக்கிறார் எனும் பகுதி .

 

டாக்கின்ஸ் இந்தியாவில் முழுமைப்பார்வை என்பதை தனது தத்துவமாகக் கொண்ட  [வினோபாவேவின் சீடர்] சதீஷ் குமார்   அவர்களுடன் நிகழ்த்திய விவாதம் முக்கியமானது . பகுத்தறிவு  தான் விவாதிக்கும் ஒன்றினை எவ்வாறு வகுத்து வைத்து ,அதை அலகு ,அலகாக  அணுகி  அறிதலின் பரப்புக்கு கொண்டு வரும் என்பதை காண, கற்க  நல்லதொரு வகுப்பு அது .

 

// மரத்தின் வேர் எதைப்பற்றி நிற்கிறது? இந்த மண்ணை. அதன் வழி இந்த முழு பூமியை. அதன் வழி இந்த மொத்த பிரும்மாண்ட பிரபஞ்சத்தை. நல்ல இலக்கியமும் மரத்தின் வேர்ப்பற்று போல ஒரு குட்டி “பிரபஞ்ச தரிசனம்” தான்.//

 

காடு நாவல் குறித்து நான் உங்களுக்கு எழுதிய கடிதத்தின் இறுதி வரிகள் இவை . இதைத்தான் முதன்மை உதாரணமாக கொண்டு சதீஷ் குமார் ,டாகின்சுடன் உரையாடுகிறார் .

 

டாகின்ஸ் ஒவ்வொன்றையும் திட்டவட்டமாக அதன் பொருளை அறிந்து அதை வரையறை செய்த பின்பே ,தனது கேள்வியை ,முன்வைக்கிறார் . அந்த கேள்வி எதுவும் எதிராளியை மடக்கும் உத்தேசமோ , புறக்கணித்து செல்ல வழி,தேடும் உத்தேசமோ கொண்டது அல்ல . பரஸ்பரம்  அறிவியல்அறிவும் ,தத்துவமும் .ஒன்றுடன் ஒன்று விவாதித்து ஒரு முழுமைப் பார்வையை  நோக்கி செல்வதை காணலாம் .

 

 

மரம் எனும் ஒன்றினை  ஒரு அலகாக எடுத்துக்கொண்டு டாக்கின்ஸ் தனது கேள்வியை வடிமைக்க துவங்க ,  சதிஷ் குமார்  இந்த அலகு  என்பது முழுமையின் ஒரு பகுதியே என்று துவங்குகிறார் .  அறிவியல் பொருள் என திட்டவட்டமாக ஒன்றை புறவயமாக வகுத்து வைக்க ,  புறத்தில் இருக்கும் ஆப்ஜெக்ட் என்பது ,அகத்தில் இருக்கும் சப்ஜக்ட் உடன் பிணைந்த ஒன்று .இரண்டும் ஒரு நாணயத்தின் இரு பகுதிகள் என்கிறார் சதிஷ் .  அங்கே துவங்கி வளரும் விவாதம் , எந்த பொருள் முதல் வாதியும் எதிர்தரப்பை   தள்ளி விடும் கருத்து முதல் வாதம் எனும் தளத்துக்குள் சதீஷ் அவர்களை தள்ளுவதில்  உச்சம் பெறுகிறது .

 

இங்கேதான் சதீஷ் ”நான் அறிந்த வகையில் ” என விவாதத்தை அகவயமான ஒன்றுக்குள் நகர்த்துகிறார் .அந்த இடத்தை டாக்கின்ஸ் கசசிதமாக பிடித்துக் கொள்ள ,சதீஷ் அவர்களோ அதை அனாயாசமாக எதிர்கொள்கிறார் . இப்படி  ”  டார்வினுக்கு முன்னால் பரிணாமவியல் என்னவாக இருந்திருக்கும் ?  நான் அறிந்த வரையில் என்னும் கருதுகோளாகத்தானே ? இப்போது இந்த முழுமை நோக்கு  அங்கே நிற்கிறது ,இதற்கான டார்வின் இனி வருவார் ”  சிரிப்புடன் நிறைகிறது விவாதம் .

 

தமிழ் நிலத்தில் பெரியார் எனும் ஆளுமை இப்போதும் இளம் மனங்களை கவரும் வகைமையில்தான் இருக்கிறார் . எனில் தமிழ் நிலத்தில் பெரியாரால் நிகழ்ந்த நேர்மறை அம்சங்கள் ,எதிர்மறை அம்சங்கள் தாண்டி , ஒரு பகுத்தறிவு வாதியாக சிந்தனையாளர்க்காக அவரது இடம் என்ன என வகுத்து வைத்துக் கொள்வதே ,இந்த புலத்தில் நுழையும் இளம் மனம் செய்ய வேண்டிய முதல் வேலை . பெரியார் முன்வைத்த பகுத்தறிவு இதுதானா  ?  பெரியார்  எனும் சிந்தனையாளர் முன் வைத்த சிந்தனைகள் இது போன்றதொரு முறைமையில் ஏன் இல்லை ?  என்பதை எல்லாம் டாக்கின்ஸின் இந்த நூலை முன் வைத்து ,பெரியாரின் ”பகுத்தறிவை ”  ”சிந்தனைகளை ”ஒப்பு நோக்கி அறிய , திராவிடர் கழகமே கொண்டு வந்திருக்கும் ,முக்கியமான அறிவார்ந்த நூல் ,இந்த கடவுள் ஒரு பொய் நம்பிக்கை நூல் .

 

சதிஷ் குமார் அவர்கள் ஆளுமை  குறித்து எஸ் ராமகிருஷ்ணன்  எழுதிய கட்டுரையின் சுட்டி இது

 

http://www.sramakrishnan.com/?p=374

 

சதிஷ் குமார் அவர்களுடன் டாக்கின்ஸ் நிகழ்த்திய விவாதத்தின் காணொளி இது .

 

https://www.youtube.com/watch?v=19Sqt-zqmrk

 

கடலூர் சீனு

முந்தைய கட்டுரைகலை -கடிதம்
அடுத்த கட்டுரைஅனோஜன் பாலகிருஷ்ணன் குறித்து