வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–54

பகுதி எட்டு : குருதிகொள் கரியோள் – 4

bl-e1513402911361சிற்றவைக்கூடத்தில் நின்ற வாயில்காவலனிடம் பலந்தரை அவளில் எப்போதும் எழும் எரிச்சல் கலந்த குரலில் “என் வரவை அறிவி” என்றாள். எப்போதும் ஆடையில் ஒரு பகுதி அவள் உடலில் இருந்து சரிந்து எரிச்சலை தான் வாங்கிக்கொள்ளும். அன்று அவளுடைய தலையாடை சரிந்தபடியே இருந்தது. “உச்!” என ஒலியெழுப்பி அவள் அதை இழுத்து அமைத்தாள். எரிச்சலுடன் அமைப்பதனாலேயே அது கொண்டைமேல் சரிவர அமையாமல் முன்னால் இழுபட்டது. அவள் கை தூக்கியபோது மீண்டும் சரிந்தது.

“பொறுத்தருள்க அரசி, உள்ளே அரசர் இளைய யாதவருடன் சொல்சூழ்ந்துகொண்டிருக்கிறார். இத்தருணத்தில் உள்ளே எவரையும் ஒப்புவதில்லை என்று எனக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது” என்றான். எரிச்சலை சினமாக்கிக்கொண்டு “மூடா, அது அரசகுடியினருக்கு அல்ல. நானும் சென்றமர வேண்டிய அவைதான் அது. நான் வந்திருப்பது அவர்களுக்கு இன்னும் தெரியாது. சென்று அறிவி” என்று பலந்தரை சுட்டுவிரல் அசைத்து அவனிடம் சொன்னாள். ஒருகணம் தயங்கிய காவலன் “அவ்வாறே” என்று கூறி உள்ளே சென்றான்.

கதவு திறந்து மூடப்படும் சிறுபொழுதில் உள்ளே நிகழ்ந்துகொண்டிருந்த உரத்த பூசலின் ஓசையை பலந்தரை கேட்டாள். அதில் ஓங்கி ஒலித்தது பீமனின் குரல். “குருதி!” என்று ஒரு சொல் கல் உடைக்கையில் சில் தெறித்ததுபோல வந்து செவிதொட்டது. அவள் உள்ளே நிகழ்வதென்ன என்று எண்ணியபின் குழலைச் சீரமைத்து காத்து நின்றாள்.

ஏவலன் வெளியே வர நெடும்பொழுதாகியது. அவள் மீண்டும் தன் தலையாடையை சீர்செய்து உடலை ஒசித்து இடையில் கையூன்றி நின்றாள். அரசியர் ஒருபோதும் ஒசிந்து நிற்கலாகாது என அவளுக்கு அரசியருக்குரிய அசைவுகளையும் முறைமைகளையும் பயிற்றுவித்த களரி ஆசிரியை காமிகை சொல்வதுண்டு. உடலில் ஒசிவு உள்ளம் தளர்ந்திருப்பதையோ ஆர்வமிழந்திருப்பதையோ இளிவரலையோ விழியறிதலாகவே வெளிக்காட்டுவது. மானுடரில் பெரும்பாலும் எவரும் நிமிர்ந்து நின்றிருப்பதில்லை. ஏனென்றால் தன்னில் நிறைந்தோ தான் எனச் செருக்கியோ தன்னுள் மகிழ்ந்தோ இருப்பவர்கள் மிகமிக அரிது. ஆகவே நிமிர்ந்த நிகர்கொண்ட உடலெழுகை பார்ப்பவரில் அச்சத்தையும் மதிப்பையும் விலக்கத்தையும் உருவாக்குகிறது. அதை பயின்று அடைவதே படைக்கலப்பயிற்சியில் முதன்மையானது. உடலை நேர்நிற்கப் பயிற்றினால் உள்ளமும் அதை நடிப்பதை உணரமுடியும்.

ஆனால் அவளுக்கு படைக்கலம் உடலுடன் இயையவில்லை. வாள் வீச்சு அவள் கையின் முழு விசையையும் எடுத்துக்கொண்டது. “வாள் சுழல்வதற்கு காற்றைக் கிழிக்கும் அளவுக்கு விசையை மட்டுமே கை அளிக்கவேண்டும். உள்ளம் வாளைத் தூக்கி சுழற்றுமென்றால் உடலுறுப்புகள் அனைத்தும் விரைவிலேயே சோர்வுறும். அரைநாழிகைகூட வாள் கையில் நிற்காது” என்று காமிகை சொன்னாள். அவள் எப்போதும் வாளை நிலத்திலூன்றி மூச்சிரைக்க நெஞ்சு அறைபட தலைகுனிந்து நின்றிருப்பாள். விற்பயிற்சியில் இலக்குகள் ஒவ்வொருமுறையும் குறி தவறின. தொடுக்கும்போது அணுக்கமென நேரில் தெரியும் இலக்கு விரல்விடுக்கும்போது எப்படி அகல்கிறது என அவளால் புரிந்துகொள்ள முடியவேயில்லை.

“ஏனென்றால் உங்கள் உடலில் கோணலிருக்கிறது. உங்கள் அத்தனை உடலுறுப்புகளிலும் அக்கோணல் வெளிப்படும். இளவரசி, அதை உள்ளத்தை சீரமைப்பதனூடாகவே நேர்செய்ய இயலும்.” பின்னர் காமிகை அவள்மேல் ஆர்வமிழந்தாள். “தோள்களை இறுக்கமாக வைத்துக்கொள்ளுங்கள். முதுகை நிமிர்த்தி கண்முன் தெரியும் மானுடரல்லாத புள்ளி ஒன்றை நோக்கி விழிநிறுத்துங்கள். ஓரளவு கூர்மை உங்கள் அசைவுகளில் வெளிப்படும்… அது ஒன்றே நான் இனி சொல்லவேண்டியது” என்றாள். அவள் பெருமூச்சுடன் கால்மாற்றியபோது இடக்கை சரிய வளையல்கள் ஓசையிட்டன. தன்னுணர்வுகொண்டு உடல் நீட்டி நேர்முதுகுடன் நின்றாள். அதற்குள் தலையாடை பின்னால் இழுபட்டது. அதை இழுத்து போட்டுக்கொண்டபோது காவலன் வெளியே வந்து தலைவணங்கினான்.

“பொறுத்தருள்க அரசி, தங்களை தனியறையில் வந்து சந்திப்பதாக இளைய பாண்டவர் சொன்னார். உள்ளே நிகழ்ந்துகொண்டிருக்கும் அரசுசூழ்கை முடிந்ததும் அங்கு வருவதாகவும் அதுவரை ஆற்றியிருக்கும்படியும் கோரினார்” என்றான். பலந்தரை உரத்த குரலில் “அவரிடம் சொல்விளையாட நான் வரவில்லை. நான் இளைய யாதவரிடம் மட்டுமே பேச வந்தேன். உள்ளே சென்று காசிநாட்டு இளவரசி பலந்தரை அவரிடம் பேச விரும்புவதாக இளைய யாதவரிடம் கூறுக!” என்றாள். “அரசி…” என்று காவலன் சற்று தயங்க “சென்று கூறுக!” என்று உரத்த குரலில் கைதூக்கி அவள் ஆணையிட்டாள்.

அவன் சலிப்புடன் விழிதாழ்த்தி தலைவணங்கி கதவைத் திறந்து உள்ளே சென்றான். எழுந்த சினத்தை உடலெங்கும் பரவவிட்டு பற்களை இறுகக் கடித்து கண்மூடி ஒவ்வொரு கணமாக அவள் கடந்து சென்றாள். கதவு திறந்து மூடிய இடைவெளியில் மீண்டும் பீமனின் குரல் “பழி!” என துள்ளி விழுந்தது. அவள் காத்துநின்றபோது உள்ளே நிகழ்வதென்ன என உளமோட்டினாள். மீண்டும் நெடுநேரமாகியது. அவள் கால்மாற்றிக்கொண்டாள்.

கதவு திறக்கும் ஓசையில் சற்று திடுக்கிட்டாள். காவலன் “உள்ளே வருக, அரசி” என்றான். அவள் மீண்டும் தன் ஆடையைத் திருத்தி மேலாடையைச் சுழற்றி தோளிலிட்டபடி உள்ளே சென்றாள். அவன் முறைமைச்சொல் எதையோ விட்டுவிட்டான் என்னும் உணர்வு எழுந்ததுமே அவள் மீண்டும் கோத்துருவாக்கிய தன்னிலையை இழந்தாள். நடை நெளிய பற்களைக் கடித்தபடி நடந்து கூடத்திற்குள் சென்று நின்றாள்.

சொல்சூழ் அவையில் யுதிஷ்டிரர் மையமாக பீடத்தில் அமர்ந்திருக்க அவருக்குப் பின்னால் சிறுபீடங்களில் நகுலனும் சகதேவனும் அமர்ந்திருந்தனர். நேர் எதிரில் இளைய யாதவர் பிறிதொரு பீடத்தில் அமர்ந்திருந்தார். அவருக்குப் பின்னால் அர்ஜுனன் வேறெங்கோ நிலைத்த நோக்குடன் இருந்தான். சாளரத்தோரம் கைகளை மார்பில் கட்டியபடி பீமன் நின்றான். அவள் உள்ளே நுழைந்ததும் பீமனின் விழிகளைத்தான் சந்தித்தாள். நெஞ்சு திடுக்கிட விலக்கிக்கொண்டு யுதிஷ்டிரரை அணுகி தலைவணங்கினாள்.

அவைக்குள் நுழைந்தபோது பாண்டவர்களின் முகங்கள் கலங்கியும் சிவந்தும் இருப்பதை, பீமன் நிலையழிந்தவனாக உடல் ததும்ப அசைந்துகொண்டிருப்பதை பலந்தரை கண்டாள். அதுவரை அங்கு பேசப்பட்டது குந்தியின் மாண்பை அவையில் துரியோதனன் இழிவுசெய்ததை பற்றித்தான் என்றும் அவர்களின் உளக்கொதிப்புகளை இளைய யாதவர் தன் சொல்சூழ்கையால் வென்றுவிட்டிருக்கிறார் என்றும் உணர்ந்தாள். அதற்கடுத்த சொல்லுக்குச் செல்ல அவர்கள் தவித்துக்கொண்டிருந்தனர் என்று தோன்றியது. அவள் இளைய யாதவரை வணங்கி “நான் தங்களிடம் சில வினாக்களை உசாவவே வந்தேன்” என்றாள்.

பீமன் உரத்த குரலில் “அதற்கான இடமல்ல இது. நாங்கள் முதன்மை அரசுநடவடிக்கைகள் சில குறித்து இங்கே சொல்சூழ்ந்துகொண்டிருக்கிறோம்” என்றான். “ஆம், அறிவேன். எதுவரைக்கும் உங்கள் சொல் செல்லும் என்றும் அறிவேன். அதைத்தான் இளைய யாதவரிடம் பேச வந்தேன்” என்றாள் பலந்தரை. அவ்வாறு தலை நிமிர்ந்து துடுக்காகப் பேசியது அவளுக்கே தன்னம்பிக்கையை அளிக்க “உங்கள் அவையில் இதுவரை பேசப்பட்டதென்ன என்றும் நான் அறிவேன். இப்போதல்ல, சென்ற பதினேழாண்டுகளாக” என்றாள். அந்த அவையில் திரௌபதி இல்லை என்பது அதன் பின்னரே அவள் உள்ளத்தில் உறைத்தது. அவளிடம் கூடிய அந்நிமிர்வு அதனால்தானா என ஆழத்திலொன்று வியப்பு கொண்டது.

“அவ்வாறு அறிந்திருப்பீர்களெனில், நன்று அரசி. தாங்கள் தங்கள் கொழுநர்மேல் எத்தனை பற்று கொண்டிருக்கிறீர்கள், எவ்வளவு அணுகியறிகிறீர்கள் என்பதையே அது காட்டுகிறது” என்று இளைய யாதவர் சொன்னார். “அமர்க, தாங்களும் இச்சொற்சூழ்கையில் கலந்துகொள்வது நன்றுதான்.” அந்த இன்சொல் அவளை உள்ளூர தளரவே செய்தது. மூச்சிரைக்க சுற்றும் பார்த்தாள். அங்கு பீடம் ஏதுமில்லை. நகுலன் எழுந்து விலகி அவளுக்கு பீடமளிக்க அதில் சென்று அமர்ந்துகொண்டாள். இளைய யாதவர் “அரசி, இங்கு என்ன நடந்துகொண்டிருக்கிறது என்றால்…” என்று தொடங்க “ஆம், நான் அறிவேன். இனி என்ன செய்வதாக இருக்கிறீர்கள் என்று மட்டுமே அறிய விழைகிறேன்” என்றாள்.

மீண்டும் சினமெரியத் தொடங்கியபோது அகத்தளர்வைக் கடந்து தன்னை கூர்த்துக்கொண்டாள். இளைய யாதவர் “தாங்கள் அறிந்திருப்பீர்கள் அரசி, அஸ்தினபுரி போர் அறிவிப்பு செய்துவிட்டது. பாண்டவர்கள் மீது மட்டுமல்ல பாரதவர்ஷத்தின் ஷத்ரியர்கள் அல்லாத பிற குடிகள் அனைத்திற்கு மீதும். இப்போது நம்மிடம் முதன்மை ஷத்ரிய அரசுகள் எதுவுமில்லை. ஆனால் ஷத்ரியர்களை நம் பக்கம் கொண்டுவர முடியாது என்றும் அதற்கு பொருளில்லை. நாம் இணையான படைக்கூட்டை அமைக்க முடியும். பெருவீரர்களால் அப்படை நடத்தப்படுமெனில் அது வெல்லும் திறன்கொண்டதே. ஆகவே அஞ்சி எதையும் முடிவெடுக்க வேண்டியதில்லை. நாம் இறுதி முடிவெடுப்பதற்குள் இன்னும் ஒருமுறை முயலலாம் என்றே எண்ணுகிறேன்” என்றார்.

“என்ன முயற்சி? நான் உண்மையில் அறிய வந்ததே அதைத்தான்” என்றாள் பலந்தரை. “போர் ஒழிய என்ன செய்யமுடியும் என்பதைக் குறித்து மட்டுமே நாங்களும் பேசிக்கொண்டிருக்கிறோம்” என்றார் இளைய யாதவர். பலந்தரை ஏளனச் சிரிப்புடன் “போர் அறிவிப்புக்குப் பின் போர் தவிர்த்தல் பற்றி பேசுகீறீர்கள், நன்று!” என்றாள். ஏளனம் ஓர் விழிச்சிற்பமாக நீடிக்க இதழ்களை சுழித்து வைத்திருப்பது உகந்த வழி என அவள் கற்றிருந்தாள். “நாளை போர்க்களத்திலும் நின்று அதைக் குறித்து பேசுவீர்கள் போலும். தலைகொய்யும் முன் அவர்கள் அதை செவிகொண்டால் நன்று. உயிருடன் ஒளிந்து காட்டுக்குள் ஓடி வாழமுடியும். அதற்குரிய பயிற்சியையும் எடுத்துவிட்டார்கள்” என்றாள்.

இளைய யாதவர் வாயெடுப்பதற்குள் பீமன் “உன்னுடைய நச்சுச் சொற்களை கேட்பதற்காக இங்கு நாங்கள் அமர்ந்திருக்கவில்லை. எழுந்து வெளியே போ!” என்றான். பலந்தரை அவனை நோக்கி திரும்பி “இந்த அவை அரசரால் நடத்தப்படுகிறது, இளைய யாதவரால் எதிர்கொள்ளப்படுகிறது என்று அறிந்தேன். அதை நம்பியே இங்கு வந்தேன். இதை எவர் நடத்துவதென்று தெளிவடைந்தால் மேலே பேச முடியும்” என்றாள். பீமன் “வெளியே போ! இல்லையேல் உன்னை வெளியேற்ற என்னால் இயலும். போ வெளியே!” என்று கையை ஓங்கியபடி அருகணைய யுதிஷ்டிரர் திரும்பி “இளையவனே, அமைக!” என்றார்.

பீமன் எழுந்த கை தணிய “இவள் யாரென்று உங்களுக்குத் தெரியும், மூத்தவரே. இவளும் இவள் அன்னையும் சிறுமதியர். பெரிதென்றும் சிறந்தது என்றும் எதுவும் அறியாது வளர்க்கப்பட்டவள் இவள்” என்றான். “இது உங்களுக்குள் பேசவேண்டியது, அவையில் எழவேண்டிய சொல் அல்ல” என்று சகதேவன் கடுங்குரலில் சொல்ல பீமன் தணிந்து விழிதாழ்த்தி கைகளை அசைத்து “அவ்வாறென்றால் நான் செல்கிறேன். இந்த அவையில் நான் கூற ஏதுமில்லை” என்றான். இளைய யாதவர் “பொறுத்திருங்கள், இளைய பாண்டவரே” என்று மெல்லிய குரலில் சொன்னதும் “ஆம்” என்று தலைவணங்கி பீமன் மீண்டும் சாளரத்தருகே சென்று கைகளை கட்டிக்கொண்டான். வெளியே நோக்கியபடி உடலின் ஒவ்வொரு தசையிலும் சினம் வெளிப்பட நின்றான்.

இளைய யாதவர் பலந்தரையிடம் “காசி நாட்டரசி, போர்அறிவிப்பு என்பது போருக்கான முதல் நடவடிக்கை என்பது மெய்தான். ஆனால் அதைத் தொடர்ந்து பிறிதொரு முதன்மைச் சடங்கு உள்ளது. வைதிகர் அவையைக்கூட்டி பெருவேள்வி ஒன்றை குறிப்பது. போர்வெற்றிக்கென தெய்வங்களை அவிகொடுத்து நிறைவடையச்செய்து உடன் கொள்வது. அதில் பங்கெடுக்கும் வேந்தர்களே படைக்கூட்டின் முதன்மைப் பொறுப்பை கொள்ள முடியும். அஸ்தினபுரியில் அத்தகைய வேள்வி ஒன்று இன்னும் ஏழு நாட்களில் நிகழவிருக்கிறது. அனைத்துக் குலங்களைச் சார்ந்த அந்தணர்களையும் அஸ்தினபுரியின் அமைச்சர்கள் அழைத்து வந்துகொண்டிருக்கிறார்கள். அங்கு நிகழவிருப்பது அதர்வ நெறிப்படி ஒரு மாபெரும் பூதவேள்வி” என்றார்.

“அந்த வேள்விச்சாலையின் அந்தணர் அவையில் இப்போரின் தேவையையும் நெறிகளையும் ஷத்ரியர்கள் முறைப்படி அவர்களுக்கு விளக்கவேண்டும். அந்தணர் அதை ஏற்று வாழ்த்துச்சொல் உரைக்கவேண்டும். அவர்களால் அதர்வ வேதம் ஓதப்பட்டு மகாபூத வேள்வி நிகழ்த்தப்பட வேண்டும். பிறகுதான் குலதெய்வங்களுக்கு குருதிப்பலி அளித்து, படைக்கலங்களுக்கு குருதிதொட்டு குறியிட்டு, போருக்கு கிளம்ப முடியும்” என்று இளைய யாதவர் சொன்னார். “இனி அந்தணர்களிடம் சென்று சொல்லாடவிருக்கிறீர்களா?” என்று பலந்தரை கேட்டாள். “அதைவிட அங்கு போர்முரசறையும் சூதர்களிடம் சென்று பேசலாம். அவர்கள் முழைக்கோலைச் சுழற்றி அடிக்காவிடில் முரசுகள் முழங்காது, படை எழுகையும் நிகழாது.”

புன்னகைத்து “சினத்தில் சரியாக இளிவரல் சொல்லெடுக்கப் பயின்றுள்ளீர்கள், அரசி” என்று இளைய யாதவர் சொன்னார். “தேவையென்றால் போர்முரசு கொட்டும் சூதரிடமும் பேசமுடியும். பெரும்போர்கள் மிகச் சிறிய தொடக்கங்களை கொண்டுள்ளன. சிறிய தடைகளே அவற்றை நிறுத்தவும் கூடும். மலையிறங்கி வரும் பெரும்பாறைகள் சிறுகல்லால் தடுக்கப்பட்டு ஆயிரமாண்டுகாலம் சரிவில் நின்றிருப்பதை நீங்கள் கண்டிருப்பீர்கள்” என்றார். பலந்தரை “அணிச்சொல்லாட நான் இங்கு வரவில்லை. இங்கு என்ன முடிவெடுக்கப்பட்டுள்ளது?” என்றாள். “இரந்துண்ணும் அந்தணரிடம் சென்று கையேந்தும் முடிவு அல்ல என்று நம்புகிறேன்.”

“எடுக்கப்பட்டுள்ள முடிவு என ஏதுமில்லை. என் கருத்து ஒன்றை முன்வைத்தேன், பேசத்தொடங்கினோம்” என்றார் இளைய யாதவர். “அந்தணர் அவைக்கு சாந்தீபனியின் தத்துவ ஆசிரியராக நான் செல்லவிருக்கிறேன். அங்கிருக்கும் அந்தண முதல்வர்களை வேதச்சொல் உசாவ அழைப்பேன். அவர்கள் இப்போருக்கு அளிக்கும் ஒப்புதல் பிழையானதென்றும், அது வேதம் காப்பதற்கல்ல, காலப்போக்கில் வேதத்தை அழிப்பதற்கு மட்டுமே உதவும் என்றும் சொல்லப்போகிறேன். அவர்கள் ஒப்புவார்கள். குறைந்தது, வேதம் காப்பதற்காக எழுந்தது அப்படை என்னும் அவர்களின் அறிவிப்பையாவது உடைத்துவிட்டு மீள்வேன்” என்றார்.

பலந்தரை “இந்தத் தத்துவ பூசல்களால் என்ன பயன்? இந்த நிலத்தில் மண் விளைவதைவிட நா விளைகிறது” என்றாள். பீமன் மீண்டும் பொறுமையில்லாத உடலசைவை எழுப்ப ஓரநோட்டத்தால் அதை அடக்கி புன்னகை மாறாமல் இளைய யாதவர் சொன்னார் “அரசி, வேதம் காக்க எழுந்தது அப்படை என்னும் எண்ணம் உடைந்தால் எஞ்சியுள்ள ஷத்ரியர்களென தங்களை எண்ணி மயங்கும் சிறுகுடி அரசர்களை நம் பக்கம் இழுப்பது எளிதாகும். போர் எழுகையில் படை முதன்மைகொள்வதன் அடிப்படையிலேயே போர் முடிந்தபின் நிலம் பங்கிடப்படும். ஆகவே எப்பொழுது அவர்கள் படைநிரையை அறிவிக்கிறார்களோ அப்பொழுதே அங்குள்ள ஷத்ரியர்களிடம் பூசலும் தொடங்கும். அவ்வாறு ஊடி விலகுபவர்கள் சிலரை இப்பக்கம் நாம் இழுக்க முடியும். எவ்வகையிலாயினும் இந்த அந்தணர் அவையில் என் குரல் ஒலித்தாக வேண்டும்.”

பலந்தரை மேலே சொல் எழாக் குழப்பத்துடன் யுதிஷ்டிரரையும் சகதேவனையும் பார்த்தாள். “தாங்கள் வந்ததும் நன்றே, அரசி. நாங்கள் பேசிப் பேசி முட்டிக்குழம்பிக்கொண்டிருந்தோம். தங்களிடம் பேசும் பொருட்டு எளிமையாக்கி சுருக்கியபோது எங்களுக்கே தெளிவு வந்தது” என்று இளைய யாதவர் சொன்னார். யுதிஷ்டிரர் மெல்ல அசைந்து அமர்ந்து “யாதவனே, பலமுறை பல வைதிக அவைகளில் வேதமும் வேதாந்தமும் முட்டிக்கொண்டிருக்கின்றன. இத்தருணம் வரை இரு தரப்பிலிருந்தும் சற்றும் நிலை தாழ்ந்த சொல் எழவில்லை. இத்தருணத்தில் என்ன நிகழக்கூடும்?” என்றார்.

“ஆம் அரசே, ஆனால் இதுவரை நிகழ்ந்த அனைத்துச் சொல்லாடல்களும் முடிவை முன் கண்டவை அல்ல. அவை அறிவுக் கருத்தாடல்களில் இரு தரப்பினரும் தங்கள் மிகச் சிறந்த நோக்குகளை அங்கே முன்வைக்கவே முயன்றிருப்பார்கள். அங்கே மெய்யைவிட தங்கள் கூர்மதி வெல்லவேண்டும் என்றே அனைவரும் எண்ணுவார்கள். எங்கேனும் சென்றடைந்தே ஆகவேண்டும் என்னும் தேவை அவர்களுக்கு இருக்கவில்லை. இப்போது அது இருக்கிறது. குருதி விடாய் கொண்ட பெருந்தெய்வமென ஆயிரம் கைகள் விரித்து அமர்ந்திருக்கும் போர்த்தெய்வத்தின் முன்னர் அமர்ந்து இச்சொல்சூழ்கை நிகழவிருக்கிறது. அந்தணரும் வைதிகமுனிவரும் அறிந்த ஒன்றுண்டு. வேதம் காப்பதற்கே ஆனாலும் போர் என்பது வேதநெறி விளங்கும் குலங்களையும் முற்றழிப்பதேயாகும். போர் கடந்து சென்ற நிலத்தில் குலநெறிகள் அழியும். குலநெறி என்னும் பீடத்தின் மேல்தான் வேத நெறிஅமர்ந்திருக்கிறது.”

“அந்தணர்போல போரை அஞ்சுபவர் பிறரில்லை. ஏனெனில் இந்தப் பெருமரத்தின் மலர்களில் தேனை மட்டும் உண்பவர்கள் அவர்கள்” என்றார் இளைய யாதவர். “அவையில் எழவிருக்கும் போரின் பேரழிவை முதலில் சொல்லி விரித்தபின் வேத வேதாந்தங்களுக்கு இடையேயான மெய்யான முரண்பாடென்ன என்பதை உணர்த்துவேன். பரம்பொருளுக்கும் பருப்பொருளுக்குமான முரண்பாடு அது. இரண்டும் ஒன்றே எனினும் இரண்டும் ஒன்றாகத் தெரியாது எனும் இடர். மாயையில் இரண்டென்றும் மெய்மையில் ஒன்றென்றுமான விளையாட்டு. அவர்களில் மிகச் சிலரேனும் அதை நோக்கிவர இயலுமென்றால்கூட நாம் வென்றவர்களாவோம்.”

“நடைமுறையில் இந்தப் போருக்கு உடனடியாக அவர்கள் ஒப்புதல் கொடுக்காமல் இருந்தாலும்கூட நமக்கு வெற்றியே. உண்மையைக் கூறினால் ஓராண்டுகாலம் இப்போர் ஒத்திப்போடப்படுமென்றாலும்கூட நாம் வெற்றி நோக்கி செல்பவர்களாவோம்” என்றார் இளைய யாதவர். “ஏன்?” என்று ஐயத்துடன் யுதிஷ்டிரர் கேட்டார். “அரசே, அப்படைக்கூட்டு மிகப் பெரியது. மிகப் பெரியவை எவையும் அவற்றின் பேரளவினாலேயே வடிவ இறுக்கத்தை தக்கவைக்கும் ஆற்றல் கொண்டவையாக இருக்க வாய்ப்பில்லை. ஓராண்டு நீடிக்குமென்றால் அவர்களுக்குள் பூசல்கள் எழும். பலர் பிரிந்து அகல்வார்கள். ஆற்றல்கொண்ட பெரிய நாடொன்று பிரிந்து சென்றால் போதும், அதுவே தொடக்கமாகும். பிரிந்து செல்ல இயலும் என்பதும் பிரிந்து சென்றால் என்ன கிடைக்குமென்பதும் ஒருமுறை அவர்களுக்கு காட்டப்பட்டால் பின்னால் கணிகரே ஆனாலும் அப்பிளவை தடுக்க இயலாது” என்றார் இளைய யாதவர்.

“இன்று அப்படைக்கூட்டு ஒற்றை உடலென உறுதியுடன் எழுந்து நிற்கிறது. அவ்வுறுதி அளிக்கும் தன்னம்பிக்கையால்தான் அவர்களின் அறிவிப்பில் அத்தனை ஆணவமும் பெருவிழைவும் உள்ளது. அந்தப் படைக்கூட்டு உடையத்தொடங்கினாலே அவர்களின் உளம் பதறிவிடும். கையிலிருக்கும் பொழுது கரைந்துகொண்டிருக்கிறது என்று அவர்கள் அறியத் தொடங்கினால் மேலுமொரு சொல்சூழ்கைக்காக நாம் அவர்களுடன் அமர முடியும்” என்று இளைய யாதவர் சொன்னார். பலந்தரை அவர் சொல்லவருவதென்ன என்பதை முற்றிலுமாக புரிந்துகொள்ளாமல் முகங்களை மாறி மாறி பார்த்தாள். பாண்டவர்களின் உடலமைவுகளிலேயே நம்பிக்கையின்மை வெளிப்படுவதை அவளால் உணரமுடிந்தது. பெருமூச்சுவிட்டபோது தன் உடலும் சோர்வைக் காட்டுமுகமாக தொய்ந்திருப்பதை உணர்ந்தாள்.

இளைய யாதவர் அவள் முகத்தைப் பார்த்து “அரசி, எனக்கு மூன்று முகங்கள் என்று தாங்கள் அறிந்திருப்பீர்கள். யாதவ குடிப்பிறந்தவன் என்ற வகையில் என் அத்தையின் மைந்தருக்காக முதலில் சொல்லுடன் சென்றேன். படைமுகம் நின்றவன், நாடாண்டவன் என்னும் முறையில் ஷத்ரிய அவையில் சென்று சொல்சூழ்ந்து மீண்டுள்ளேன். இன்று சாந்தீபனி குருநிலையில் வேதம் முற்றோதிய முதலாசிரியன் என்ற முறையில் செல்ல எண்ணுகிறேன். இதுவே என் முதன்மை முகம். என் முழு ஆற்றலும் இதிலேயே. இது வெல்லும்” என்றார்.

யுதிஷ்டிரர் பெருமூச்சுடன் “வென்றாகவேண்டும், நமக்கு வேறு வழியில்லை” என்றார். சகதேவன் “இளைய யாதவரே, நீங்கள் படைக்கூட்டு குறித்து சொன்னீர்கள். ஷத்ரியர்கள் மாறாப் பொதுநெறி கொண்டவர்கள். ஏதேனும் பொதுநெறி கொண்டவர்கள் மட்டுமே அந்நெறிகளின் வழியாக இணைக்கப்பட்டு ஒன்றாக சேர இயலும். பாரதவர்ஷத்தில் எவ்வரசர்களேனும் படைக்கூட்டு கொள்ள முடியும் என்றால் அது ஷத்ரியர்களே. ஷத்ரியர்கள் எவர் என்பதில் மட்டுமே அவர்களிடம் பூசல் உள்ளது. ஷத்ரிய அறம் என்ன என்பதில் எப்போதும் அவர்கள் மாற்றுச்சொல் கொண்டதில்லை” என்றான்.

“ஆனால் நம் தரப்பில் இருப்பவர்கள் அப்படியல்ல” என்று சகதேவன் தொடர்ந்தான். “சென்ற சில நாட்களாகவே நம்முடன் சேர்ந்துள்ள நிஷாதர்களையும் கிராதர்களையும் அசுரர்களையும் அரக்கர்களையும் சந்தித்து வருகிறேன். நெறியென்பது என்ன என்பதிலேயே ஒவ்வொருவரும் கொண்டுள்ள பார்வை முற்றிலும் வேறாக உள்ளது. வென்றபின் எதிரியை வணங்கி தன் படை வரவின் இழப்புகளையும் செலவுகளையும் எடுத்துரைத்து அவன் அளிக்கும் கொடையை பெற்றுக்கொண்டு குடி திரும்ப வேண்டுமென்று அசுரர் குடித்தலைவர் காகர் என்னிடம் நேற்று சொன்னார். வென்ற எதிரியின் குலத்தை முற்றழித்து அவன் குருதியை மண்டைகளில் ஏந்திக் குடித்து களியாடவேண்டும் என்றும் அக்குலத்தில் ஒரு துளியேனும் எஞ்சாமல் இருக்கும்பொருட்டு அவ்வூரையும் மண்ணையும் தீ வைத்துவிட்டு மூன்று ஆண்டுகாலம் அந்நிலப்பகுதியில் பிறிதொரு மானுடர் செல்லாமல் காவலமைத்து ஊர்திரும்பவேண்டுமென்றும் அதற்கு முந்தைய நாள் அரக்கர் குலத்தலைவர் வக்ரசீர்ஷர் என்னிடம் சொன்னார். இவர்கள் அனைவரையும் சேர்த்து நாம் அமைத்திருக்கும் இந்தப் படை அப்படை சிதறுவதற்கு முன்னரே சிதறிவிடும் என நான் அஞ்சுகிறேன்.”

“ஒரு பெரும் வேறுபாட்டை உளம் கொள்ளவேண்டும், இளையோனே” என்றார் இளைய யாதவர். “ஷத்ரியர்கள் தங்கள் விழைவின் பொருட்டு கூடியிருக்கிறார்கள். ஒவ்வொரு கணமும் இருமடங்கென வளர்வது அது. நாமோ தற்காத்துக்கொள்ளும் பொருட்டு இங்கு கூடியிருக்கிறோம். ஒவ்வொரு நாளும் சுருங்கி வரும் நம்பிக்கை இது. நம்மை ஒருங்கிணைத்து நிறுத்தும் ஆற்றல் இதற்குண்டு” என்றார். சகதேவன் “எப்படியாயினும் படைக்கூட்டுகள் நெடுநாள் நீடிக்க இயலாது” என்றான். “அணுகிவரும் போர்க்களத்தை கற்பனையில் கண்டு அவை அமைக்கப்படுகின்றன. அப்போர்க்களம் அகன்று செல்லும் என எண்ணம் எழுந்தாலே அவை ஆற்றல் இழக்கத்தொடங்கிவிடும்” என்றான்.

“வைதிகர் அவையில் தாங்கள் வேதாந்தநெறியைக் கூறி அவர்களை வென்றீர்கள் என்றால்…” என்று யுதிஷ்டிரர் தொடங்க இளைய யாதவர் கையசைத்து “பொறுங்கள். நீங்களும்கூட நான் சொல்வதென்ன என்பதை புரிந்துகொள்ளவில்லை. வேதநெறிக்கு எதிரானதல்ல வேதாந்தநெறி. வேதநெறி இறுகி விளைந்த முத்து அது. வேத அன்னை ஈன்றெடுத்த மைந்தன். வேதவிறகிலெழுந்த கனல். இதுவே அது என அவர்கள் புரிந்துகொள்ளும் ஒரு கணம். அதுவே நான் உன்னுவது. அதன் பின் வேதாந்தத்திற்கு எதிரான போர் என்பது வேதத்திற்கு எதிரான போர் என்பதை அவர்களுக்கு புரியவைத்துவிட முடியும் என்னால்” என்றார்.

“ஆனால் அவர்கள் வேதத்தால் வாழ்பவர்கள்” என்று பீமன் திரும்பாமலேயே சொன்னான். “வேதாந்தத்தை ஏற்று அவர்களுக்கு என்ன கிடைக்கப்போகிறது? வேதம் ஓதி அனலோம்பி எழும் வேள்விகளில் கொடைபெற்று செழிக்கும் குலம் அந்தணர். வேதாந்திகளாகிய நீங்கள் எரியோம்புவதில்லை. கொடைபெற்று செழிப்பதுமில்லை. அது நான் என அமர்ந்திருக்கிறீர்கள். நெய்க்கரண்டியையும் தர்ப்பையையும் கைவிட்டு தாங்களும் அவ்வாறே அமர்வதற்கு அந்தணர் எப்படி ஒப்புவார்கள்?”

இளைய யாதவர் “ஆம் பாண்டவரே, தாங்கள் சொல்வது மெய். ஆனால் விண்ணில் செல்லும் பறவைக்கூட்டங்களை பாருங்கள்.  ஒற்றை உடலென அவை மிதந்து செல்கின்றனவென்றாலும் முன்செல்லும் ஒரு பறவையின் சிறகசைவே அவற்றை திசை மேற்கொள்ளச் செய்கிறது என்பதை காண்பீர்கள். வைதிகர் இந்நாடெங்கும் பெருகியிருக்கும் பரப்பென்றாலும் அதன் மையமென அமைந்த பெருவைதிகர்கள் சிலரே. அவர்களையே வேதமுனிவர்கள் என்கிறோம். நான் பேசவிருப்பது அவர்களிடமே” என்றார்.

“அவர்கள் வேதம் முற்றோதியிருப்பார்கள் என்பதனாலேயே தங்களை அறியாமலேயே வேதமுனையை வந்தடைந்திருக்கவும் செய்வார்கள். முரண் கொள்ளாமல் வேதம் கற்கவும் ஆழம் கலங்காமல் அதை முடிக்கவும் எவராலும் இயலாது. நிகர் நிலத்திற்கு வந்த பெருநதியென எட்டு திசைக்கும் ததும்பி விரியும் பெருக்கே வேதம். அதில் இல்லாத மெய்யுசாவல்களோ சொல்மோதல்களோ இல்லை. பெருமைக்கு நிகராக சிறுமையும் கொண்டது. ஒளிக்கு நிகராக இருளும் செறிந்தது. பாற்கடல் கடைதலே வேதம் கற்றல் என்று வகுத்தனர் முன்னோர். அதிலிருந்து திரண்டு வரும் அமுதென்ன என்னும் வினா அவர்களுக்குள்ளும் இருக்கும். வண்ணங்கள் கலந்து வெண்மை எழுவதுபோல, திசைகள் சுழன்றால் மையம் சுழிப்பதுபோல ஒன்று அதற்குள் உறைந்திருக்க வேண்டுமென்று அவர்களும் அறிந்திருப்பார்கள். அதை அவர்களிடம் கூறுவோம்.”

பலந்தரை முற்றிலும் அச்சொற்களிலிருந்து உளம் விலகிவிட்டிருந்தாள். அவள் கொண்டுவந்திருந்த சினம் முற்றாக கரைய தன் கால்களால் தரையில் விரிக்கப்பட்டிருந்த மரவுரிக் கம்பளத்தை நிமிண்டியபடி தலைசரித்து விழிசாய்த்து அமர்ந்திருந்தாள். எப்போது நிகழ்காலத்திலிருந்து விடுபட்டாலும் அவள் உள்ளம் காசிநாட்டுக்கு சென்றுவிடுவது வழக்கம். அவள் கங்கைக்கரை குறுங்காட்டில் கரையோரமாக நின்ற மரமொன்றின் வேர்ப்புடைப்பில் அமர்ந்து அலைகளை நோக்கிக்கொண்டிருந்தாள். தலையாடை முற்றிலுமாகச் சரிந்து அவள் சுருள்குழல்கற்றைகள் தெரிவதையும் அவற்றிலொன்று முகத்தின்மேல் விழுந்து காற்றிலாடி அவளை இளஞ்சிறுமியெனக் காட்டுவதையும் அவள் அறிந்திருக்கவில்லை.

முந்தைய கட்டுரைதிருத்தர்
அடுத்த கட்டுரைவெள்ளிநிலம் -குழந்தை வாசிப்பு